3 December 2024
neella story

காமினி சேகர எனும் றெதி நெந்தாவுக்கும் சுசந்தவிற்கும் இடையிலான அறிமுகம் அவனது இளம்பராயத்தியே நடந்த ஒன்றுஊத்தை உடுப்புக்களை வெளுக்கும் ஹேன சாதியைச் சேர்ந்த சில்வா யஹனிய மாமா காலமானதிலிருந்து றெதி நெந்தாவே சுசந்தவின் தாத்தாவின் துணிகளை வெளுக்கும் சலவைக்காரியானாள்.

றெதி நெந்தா ஒரு கள்ளச் சிறுக்கி என்றும், அந்த ஊரில் உள்ள பல ஆண்கள் அவளது வீட்டிற்கு அடிக்கடி கள்ளத்தனமாக டூ விடுவாதாகவும் சுசந்த சிறுபிள்ளையாக இருக்கும் போதே கேள்விப்பட்டிருக்கிறான். அவள் ஊருக்கு வரும் போது கூட வயிற்றில் பிள்ளையோடு தெத்தித் தெத்தி வந்ததாகவும், ஊருக்கு வந்த பின்னாலும் கூட வயிற்றை நிரப்பிக் கொண்டு அலைந்ததாகவும், பலர் கூறினாலும் அம்மா, இதைக்குறித்தெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. றெதி நெந்தா வரும் போதெல்லாம் இரண்டு தேங்காயும், அரிசியுமாக கைநிறைய அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.றெதி நெந்தா பற்றி ஊருக்குள் அடிபடும் கதைகள் எல்லாமே முன்னுக்குப் பின் முரணாகவே இருந்தது.

றெதி நெந்தா சிங்களத்தி இல்லை என்றும் யாழ்ப்பாணப்பக்கம் ஏதோ ஒரு தீவில் பிறந்து வளர்ந்தவள் என்றும், பலர் சொன்னாலும் அவள் பேசுகிற சிங்களம் அச்சொட்டாக இயல்பாக ஊர்ச் சிங்களம் கதைக்கும் சாயலிலே இருக்கும். அவள் யாழ்ப்பாணக்காரி என்றால் யாரும் அவ்வளவு எளிதில் நம்பிவிடமாட்டார்கள். அதற்கும் மேலாக திசர அய்யா றெதி நெந்தாவைப் பற்றி சொல்லிய கதைதான் அவளைப் பரிதாபமாக காட்டியது.

தொண்ணூறாம் ஆண்டில் யாழ்ப்பாணக்கோட்டையை இயக்கம் செல்லடித்துக் கைப்பற்ற, கோட்டைக்குள்ள நிறைய ஆமிகள் அடைபட்டுக் கிடந்தார்கள். அந்தச் சண்டையில் இயக்கம் இரண்டு உலங்கு வானூர்திகளையும் சுட்டு வீழ்த்த, ஊறாத்துறைப் பக்கம் இருந்து ராணுவம் ஆட்லறிகளை அடிக்க ஆரம்பித்தது. பதிலுக்கு கடலுக்குள் இருந்து புலிகளும் செல்லடிக்கவே அது ஒரு பெரும் சண்டையாய் போனது. ஊறாத்துறையில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஆமியை சமாளிக்க வன்னியிலிருந்து புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக கிளம்ப, அதற்கிடையிலேயே ஆமி ஊறாத்துறையில் வெறியாட்டம் நிகழ்த்தியிருந்தது. எஞ்சியிருந்த சொச்சம் புலிகளும் விடாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்க ஊறாத்துறை எங்கும் கந்தகமணமும், புகைமண்டலமாகவும் இருந்தது. இந்தச் சண்டையில் புலிகள் அடிச்ச கும்பன் வெடியில் தான்……..

இப்படிச் சொல்லும் போதுகெரி பள்ளாஎன்று சொன்ன திசர அய்யா முகத்தை அப்படியே இறுக்கமாக வைத்துக் கொண்டான். கொட்டிகொட்டிஎன்று இரண்டு முறை முணுமுணுத்தவன் திடீரென்று கதையை நிறுத்திவிட்டு வேறு எங்கோ பார்க்கத் தொடங்கினான். வானத்தில் பறக்கும் காகங்களை பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த திசர அய்யாவை சுசந்த வெறித்துப் பார்த்துக்கொண்டேயிருந்தான். எந்த நேரமும்  திசர அய்யா கதையை தொடங்கலாம் என்று காத்திருந்தவனுக்கு, உடனே அவன் மீதிக்கதையையும் சொல்லத் தொடங்கியது சந்தோஷமாயிருந்தது. ஊறாத்துறையில் அடிபட்ட ராணுவத்தில் றெதி நெந்தாவின் மகனும் குண்டடிபட்டு இறந்து போனான் என்பது தான் திசர அய்யாவின் கதையின் முடிவாக இருந்தது. அதற்குப் பிறகு றெதிநெந்தாவின் கணவனும் இறந்துவிட அவள் இந்த ஊருக்கு வந்துவிட்டாள் என்றும் அவளுக்கு யாருமேயில்லை. அவள் ஒரு அநாதை என்றும் திசர அய்யா கூறினான். ஆனால் அவள் கர்ப்பிணியாக, நைந்து போன ஆடைகளுடன் தெத்தித் தெத்தி வந்தததைக் குறித்து திசர அய்யாவிற்கு தெரியவேயில்லை.

றெதி நெந்தா தொடர்பான  எல்லாக் கதைகளுமே கட்டுக் கதைகளாகத்தான் இருந்தது. அவளை சிலர் தமிழச்சி என்றும் சொந்த ஊரில் நிரம்பக் கடன் வாங்கிவிட்டு அதைக் கொடுக்க முடியாமல் காலிப்பக்கம் ஓடி வந்துவிட்டாள் என்றும் கூடப் பேசினார்கள். எதுவாக இருப்பினும் வெள்ளந்தியாகச் சிரிக்கும் றெதி நெந்தாவின் முகத்தில் கள்ளத்தனம் இருந்ததேயில்லை. நெடுக்கு முகமும், ஒட்டிவைத்த ஸ்டிக்கர் பொட்டும், சாயம் போன பழைய புடைவையும், சின்னச் சின்ன மணிகளுடன் கூடிய ஒரு மாலையும், சுருக்குப் பையுமாக றெதி நெந்தா ஊரில் அலைந்து கொண்டிருந்தாள்.

சுசந்தவை விட சுசந்தவின் அக்கா திலினியையே றெதி நெந்தாவிற்கு ரொம்ப பிடிக்கும். அவன் அப்படித்தான் நினைத்திருத்தான். ஏனென்றால் றெதி நெந்தா அழுக்குத் துணிகளை எடுக்க வரும் போதெல்லாம் நெல்லிக்காய், கச்சான் உருண்டை, பயற்றம் போளை, பொரி என ஏதாவது ஒன்றை புடைவைத் தலைப்பில் முடிந்து வைத்துக் கொண்டே வருவாள். திலினிக்குத்தான் மொத்தமாக எல்லாவற்றையும் கொடுப்பாள். திலினி அம்மாவிற்குத் தெரியாமல் அதை ஒளித்துக் கொண்டு சாப்பிடும் போதெல்லாம் சுசந்தவிற்கும் ஆசையாக இருக்கும். ஒரு நாள் அம்மாவிடம் திலினி தினமும் றெதி நெந்தாவிடம் நெல்லிக்காய்களை வாங்கிச் சாப்பிடுகிறாள் என்று சுசந்த சொன்ன போதும் அம்மா அவளை எதுவும் சொல்லவில்லை. ஆனால் பயந்து போன திலினி அக்கா அன்றிலிருந்து சுசந்தவிற்கும் கச்சான் உருண்டைகளை தர ஆரம்பித்தாள். றெதி நெந்தா வரும் போதெல்லாம் ஏதாவது ஒன்றைக் கொண்டுவருவதும், திலினியிடம் பங்கு கேட்டு சண்டை பிடிப்பதும் சுசந்தவிற்கு வாடிக்கையாகிப் போனது. ஒரு நாள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது தாத்தா வந்துவிட்டார். நெல்லிக்காய் தொடர்பில் விசாரித்தவர். ரதல சாதி ஹேன இடம் கைநீட்டுகிறதா என்று அக்காவின் பிடரியில் இரண்டு அடிவிழுந்தது. அன்றிலிருந்து அக்கா றெதி நெந்தாவிடம் எதுவும் வாங்குவதேயில்லை. அவள் கச்சான் உருண்டைகளை கொண்டு வந்து திலினியை தேடும் போதெல்லாம், அம்மாஏதாவது காரணங்களை சொல்லிக்கொண்டேயிருந்தார்.

சுசந்த வீட்டில் திலினி அக்கா பெரிய பிள்ளை ஆகிய சடங்குதான் விமர்சையாக நடந்தது. அதுக்கு முதல் அவன் அப்படியொரு சடங்கை பார்த்ததேயில்லை. கண்டி பெரஹரா போல பெரிய எடுப்புடன் திலினி அக்கா பெயரி மனுசி ஆனது கொண்டாடப்பட்டது. எல்லா வேலைகளையும் றெதி நெந்தாவே செய்தாள். அம்மா கூட றெதி நெந்தாவின் ஏவல்களுக்குக்கு கட்டுப்படும் பணியாள் போல அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்ததை சுசந்த பார்த்துக் கொண்டிருந்தான். அக்காவை அழகாக புடவை உடுத்தி அலங்கரித்திருந்தார்கள். அன்று றெதி நெந்தாவிற்கு ரொம்ப வேலைகள் இருந்தன அக்காவின் படுக்கை அறையை சுத்தம் செய்தாள். அக்காவின் படுக்கை விரிப்புக்களையெல்லாம் அள்ளி பெரிய மாராப்பு மூட்டையாக கட்டிக்கொண்டாள். அக்காவின் தலையில் நீர் தெளித்தாள், மஞ்சள் அரைத்துக் கொடுத்தாள் இப்படி பல வேலைகளை மாடு போல் செய்து கொண்டிருந்தாள்.

அலங்கரிக்கப்பட்ட திலினி மிகவும் அழகாகவேயிருந்தாள். முன்பெல்லாம் குட்டைப் பாவாடை சட்டையுடன் கொய்யா மரத்தில் ஏறிக் கொண்டு அணிலோடு விளையாடித்திரியும் திலினி அன்று ரொம்ப அமைதியாகவும், ஏதோ வெட்டகம் வந்தவள் போலவும் இருந்தது சுசந்தவிற்கு ஆச்சரியத்தையே வரவழைத்தது. திலினி ஒரு இடமென்று இருக்கமாட்டாள். ரேசின் சைக்கிள் ஓட்டுவாள், கொய்யா மரம், மாமரம் ஏறித்திரிவாள். றெதி நெந்தா உடுப்பு வெளுக்கும் நீர்த் தொட்டிக்குள் தலைகீழாகக் குதிப்பாள், இப்படி தாத்தா இல்லாத நேரங்களிலெல்லாம் திலினியின் ராஜ்ஜியம் தான். அவ்வப்போது திலினியை ஆண்கோணி என்றும் றெதி நெந்தா சொல்லியிருக்கிறாள். அப்படி என்றால் என்னவென்று சுசந்தவிற்கு இன்றும் தெரியவேயில்லை. ஒரு நாள் றெதி நெந்தாவிடமே கேட்டான்…  அதற்கு அவளோ அது எங்களுடைய ஊரில் ஆண்பிள்ளை போன்று குதித்துக் கொண்டிருக்கும் பெட்டைகளுக்கு சொல்லவது உனக்குப் புரியாது என்றபடி அவனது தலையை நீவிவிட்டாள். சுசந்தவிற்கு ஒரு தோடம்பழ முட்டாசும் கிடைத்தது.

தோடம்பழ முட்டாசு அன்று இலங்கையில் பலத்த பிரபலம். எல்லோராலும் சீனியுடன் தேநீர் குடிப்பதென்பது பெரும் மலை. விவசாயக் குடிகளாக அறியப்படும் கொய்கம சாதியில் பாதிப் பேரே சீனியை உள்ளங்கையில் இட்டு நக்கி நக்கித் தேநீர் குடித்த காலம். பாவம், றெதி நெந்தா எங்கு போவாள், அரை சதத்திற்கு இரண்டு தோடம்பழ முட்டாசுகளை வாங்கி அதனைக் கடித்துக் கொண்டேதான் அவள் தேநீர் குடிப்பது வழக்கம். றெதி நெந்தா பெரிதாக சாப்பிடவே மாட்டாள், ஆனால் எப்போதும் களைப்புத் தெரியாமல் இருக்க இஞ்சி போட்ட தேநீரைக் குடித்துக் கொண்டேயிருப்பது அவளுக்குப் பழகியிருந்தது. அப்படித்தான் அவளின் முடிப்பில் எந்த நேரமும் தோடம்பழ முட்டாசுகள் இருந்து கொண்டேயிருக்கும். அதற்காக சுசந்த அவளிடம் ஏதாவதொரு கேள்வியை கேட்டுக் கொண்டேயிருப்பான்.

அன்று அக்காவை முதலில் றெதி நெந்தாவின் கால்களிலே விழ வைத்து ஆசிர்வாதம் பெறச் செய்தார்கள். அக்கா பெரிதாக நகைகளை போடுவதில்லை. அவளிடம் நல்ல உடுப்புக்களும் இருந்ததேயில்லை. அவள் தங்கமாலை கேட்டு அடம்பிடிக்கும் போதெல்லாம் அம்மா, அவளிடம் பெரிய மனுசி ஆனதும் போட்டுக் கொள்ளலாம் என்று தட்டிக் கழித்துக் கொண்டே வந்தார்அதற்கான காரணம் சுசந்தவிற்கு புரியவேயில்லைஅன்று றெதி நெந்தாவின் கால்களில் அவள் விழுந்து எழும்பியதும் அக்கா அன்றுவரை போட்டிருந்த குட்டித் தோடுகள் இரண்டையும் அம்மா அவளிற்கே கொடுத்தார். அது மட்டுமல்லாமல் அக்கா படுத்திருந்த பாய், விரிப்புகள், தலையணை, பழைய உடுப்புக்கள் என எல்லாவற்றையுமே அம்மா றெதி நெந்தாவிற்கே கொடுத்தாள். ஒரு வட்டில் நிறைய சோறும் வைத்து அவளுக்கு கொடுக்கப்பட்டது. தாத்தா பெரிய பச்சை நிற பணத்தாள் ஒன்றினையும் கொடுத்தார். தாத்தாவைக் கும்பிட்டுக் கொண்டே  அதனையும் அவள் வாங்கிக் கொண்டாள். ஏன் றெதி நெந்தாவிற்கு எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்கிறார்கள் என்று சுசந்தவிற்கு புரியவேயில்லை.

மீண்டும்  றெதி நெந்தாவிடம்ஏன் அப்பா உனக்குப் பெரிய காசும், அம்மா உனக்குப் பொருட்களெல்லாம் தந்தார்கள் என்று கேட்ட போது றெதி நெந்தாபுட்டுக்களிஎன்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டுக் கடந்து போனாள். அவனுக்கு அவளிடம் இருந்து வழக்கமாகக் கிடைக்கும் தின்பண்டங்களில் எந்தவொன்றும் அன்று கிடைக்கவேயில்லை.

சுசந்த கொஞ்சம் வளர்ந்தவுடன் பெரிய பாடசாலையில் சேர்ப்பதற்காக சுசந்தவின் தாத்தா அவனை கண்டியிலிருக்கும் அவனது அம்மாவின் தங்கையிடம் அனுப்பி வைத்தார். மாதரா அவனை நன்கு கவனித்துக் கொண்டாள். மாதராவை அவன் குடம்மா என்றே அழைப்பான். குடம்மா நல்ல அழகு, சுசந்தவின் சின்ன வயதில் இருந்தே குடம்மா ஊருக்கு வரும் போதெல்லாம்  பெரும்பாலும் புஞ்சி பாலப்பாவுடனே வருவார். லொகு பாலப்பா பெரும்பாலும் கண்டியிலே தங்கிவிடுவார். குடம்மாவிற்கு இரண்டு கணவர்கள் லொகு பாலப்பாவும், புஞ்சி பாலப்பாவும் அண்ணன் தம்பிகள் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து குடம்மாவை திருமணம் செய்திருந்தார்கள்லொகு பாலப்பாவிற்கும் புஞ்சி பாலப்பாவிற்கும் இடையில் சொத்தில் பிரச்சினை வந்ததால் அவர்களின் மூத்தா, குடம்மாவிற்கு இருவரையும் திருமணம் செய்துவிட்டு ஒரே வீட்டில் வசிக்கச் சொன்னார். இந்தத் திருமணம் போல சுசந்தவின் குடும்பத்துக்குள் மூன்று நான்கு பேர் திருமணம் செய்திருக்கின்றனர். ‘(பு) கன்ன (பு)கேமுறையில் திருமணம் செய்த பிறகு பாலப்பாக்கள் இருவருமே ஒன்றாகி விட்டார்கள் என்பது சுசந்தவிற்கு தெரிந்தே இருந்தது.

குடம்மாவின் அரவணைப்பிலே சுசந்த வளரத் தொடங்கினான். பாடசாலை விடுமுறை விடும் போதெல்லாம் அம்மாவையும், தாத்தாவையும் பார்க்க ஊருக்கு வரும் சுசந்த றெதி நெந்தாவிற்கும் ஏதாவதொன்றை வாங்கி வர மறப்பதில்லை. ஒரு முறை டேலியா பூச்செடியொன்றை கொண்டு வந்திருந்தான். கதரகம தெய்யோ வேல், புத்தர் சிலை, கருப்பட்டி, தொதல், தின்பண்டம் என அவளிற்கு ஏதாவதொன்றை வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தான். றெதி நெந்தாவும் அவற்றையெல்லாம் மிகுந்த ஆசையோடு பெற்றுக் கொண்டாள். எல்லோரும் அவளைப் பார்த்து சாதாரணமாக சிரித்தாலும் கூட, சுசந்தவும், சுசந்தவின் அம்மாவும் அவள் மீது அளவு கடந்த அன்பையே வைத்திருந்தனர். றெதி நெந்தா எப்போதும்  ‘முருகா முருகா என்று சொல்லிக் கொண்டேயிருப்பாள். சுசந்தவிற்கு அது கதரகம தெய்யோ என்று தெரியும். அதனாலேயே அவளுக்கு கதரகம தெய்யோ வேலையும், புத்தர் சிலையையும் சுசந்த வாங்கி வந்தான். தினமும் ரஜவிகாரை செல்லும் றெதி நெந்தா அதன் வாசலில் சாஷ்டாங்கமாக அமர்ந்து புத்தபகவானை வழிபடுவதையும் முருகா முருகா என திருப்பித் திருப்பி கதரகம தெய்யோவை அழைப்பதையும் வழக்கமாகவே கொண்டிருந்தாள். அப்படி வணங்கும் போதெல்லாம் அவள் மனம் திருப்தி அடைவதாகவும், சமாதானம் ஆவதாகவும் அவள் சுசந்தவிடம் சொல்லியிருக்கிறாள்.

இப்படி காலங்கள் உருளும் போதுதான். திலினியின் காதல் விவகாரம் சுசந்தவின் வீட்டில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. திலினி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது சுசந்தவின் ஊரைச் சேர்ந்த மயந்தவும் அங்கு படித்துக் கொண்டிருந்தான். மயந்தவும்திலினியும் காதலிப்பதை லொகு பாலப்பாவே தாத்தாவிடம் சொல்லியிருக்க வேண்டும். திலினியின் காதல் விவகாரம் தெரிந்ததில் இருந்து தாத்தா முகமே சரியில்லாமல் ரதல சாதிவஹல சாதியோடு திருமணம் பேசுவதா என வெடித்துக் கொண்டிருந்தார். ரதல சாதியினரும், வஹல சாதியினரும் கொய்கம சாதியினர் தான் என்ற போதிலும் அவர்களின் பணிகள் வேறாக இருந்தது. ரதல சாதியினர் அரச பிரதானிகளாகவும் வஹல சாதியினர் ரதல சாதியினரின் பணியாட்களாகவும் இருந்தனர். ஒரே சாதியாக இருந்த போதிலும் தான் கொய்கமரதல என்பதில் சுசந்தவின் தாத்தாவிற்கு பெருமையும் திமிரும் இருந்து கொண்டேயிருந்தது. சுசந்தவின் தாத்தா மட்டுமன்றி அந்த ஊரின் ரதல சாதியினர் பெரும்பாலோனோருக்கு தாங்கள் ஆட்சி அதிகாரத்தையே தீர்மானித்த சக்திகள் என்றும், இன்றும் தங்களுக்கு அவ் அதிகாரமும், பலமும் இருப்பதான நம்பிக்கையும் அவர்களிடத்தில் இருந்து கொண்டேயிருந்தது. ரதல சாதியினரிடம் தனக்கு கௌரவக் குறைச்சல் ஏற்படும் என்ற போதிலும் மயந்தவும் கொய்கம சாதி என்ற பூசலும், அந்த ஊரின் முதல் பொறியியலாளர் என்பதையும் காரணம் காட்டி திலினியின் மாமாவே அந்தத் திருமணப் பேச்சு வார்த்தையை தொடர்ந்து ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்.

திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது. அதிலும் றெதி நெந்தாவே அறக்கப் பறக்க வேலை செய்து கொண்டிருந்தாள். மயந்தவினதும், திலினியினதும் பெருவிரல்களை கட்டிய பின்னர் திலினியின் மாமா அதில் நீருற்றினார் வடிகின்ற நீரை றெதி நெந்தா ஒரு தட்டில் தாங்கியபடி ஆனந்தக் கண்ணீர் விடும் போது திலினியும் அழுதபடி றெதி நெந்தாவை தடவி விட்டாள். தாய்மாமனால் மங்கள நீருற்றப்பட்ட சடங்கின் போதும் றெதி நெந்தாவிற்கு சில ஆயிரங்கள் கிடைத்தன. அவளும் அதனை அன்போடு ஏற்றுக் கொண்டாள். அன்று திருமணத்தில் பாடப்பட்ட மங்கலப்பாடல்ஜெயமங்கள சூத்ர இனிமையாகவும் இருந்தது.

அடுத்த நாளே பிரச்சினை தொடங்கியது. முதலிரவில் திலினி அக்காவின் கன்னித்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டதை சுசந்த உணர்ந்து கொண்டான். சுசந்தவின் குடும்பத்தார் மயந்தவின் வீட்டிற்கு வரும் போது றபான் மேளம் இசைக்கப்படாமலேயே இருந்தது. மயந்தவிற்கு, திலினியை சிறுவயதிலிருந்தே தெரியும். அவள் கன்னித்தன்மையுடையவள் என்றாலும் கூட மயந்தவின் தாயும் சகோதரிகளும் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். அம்மா இடி விழுந்தாற் போல இருந்தார். குட அம்மா தான் திலினியை இரண்டாம் இரவிற்கு அனுப்பத் தயாராக இருந்தாள். மயந்தவின் வீட்டில் எல்லோரும் முகங்களை திருப்பிக் கொண்டிந்தனர். சுசந்தவின் தாத்தாவை முகம் பார்த்துக் கூட அழைக்காததால் அவர் வெளியிலேயே இருந்து விட்டார்இதற்கும் மேலாக மாப்பிள்ளை வீட்டார் சிலர் கொண்டைகளற்ற பலகாரத்தை திலினியின் மாமாவிற்கு கொடுத்து உங்கள் பெண் கன்னித்தன்மை அற்றவள் எனக் குறிப்பால் உணர்த்தியபடி இருந்தனர்திலினிக்கு இந்தப் பிரபஞ்சமே வெடித்துவிடும் போல இருந்தது. றெதி நெந்தாவிடமே திலினியின் கன்னித்தன்மைக்கான சாட்சியம் கேட்கப்பட்டபோது அவள் உடைந்தே போனாள். தான் தாய்க்கு சமமாக இருந்து வளர்த்த பிள்ளை திலினியின் முதலிரவு முடிந்த பின்னர் படுக்கையை விலத்தி விலத்தி ஆராய்ந்தாள். திலினியின் யோணியில் இருந்து ஒரு பொட்டு ரத்தம் கூட வடிந்திருக்கவில்லை என்பதை அந்தப் படுக்கை விரிப்பு ஆதாரமாக்கியது.

என்ன எழவெடுத்த நம்பிக்கைகளோகொப்புகளில் குரங்கு போலத் தாவித் திரிந்த திலினியின் கன்னித்திரை கிழியாமல் இருப்பது தான் அதிசயம். ஆனால் இந்த குற்றம் கண்டறியும் சம்பிராதாயங்களில் திலினி அகப்பட்டுப் போனதை நினைக்க றெதி நெந்தா தன்னையே நொந்து கொண்டாள். அவளோ இரண்டாம் இரவைக் கடக்க இருக்கும் திலினியை நினைத்து மனம் வெம்பிக் கொண்டே இருந்தாள். சுசந்த இதனை நன்கு அறிந்து கொண்டான்.

சுசந்தவை வேகவேகமாக அழைத்தாள் றெதிநெந்தா. வீட்டின் பின்புறமாக திடீரென அவனுடன் வெளியேறிப்போனாள்.

பெண்கள் பாவப்பட்ட ஜென்மங்கள், பருத்த முலைகளும், யோனிகளும் மட்டுமே பெண்ணென்று நினைத்தே இந்த ஆண்களின் உலகம் உழன்று கொண்டிருக்கிறது. ஆக்கிப் போடவும், அவர்களின் உள்ளாடைகளை துவைத்துப் போடவும், தேவையேற்படும் போதெல்லாம் சதையை தின்றுவிட்டு எலும்பையும் குதறும் நாய்களாகவுமே ஆண்கள் இருக்கிறார்கள். ஒரு சொட்டு ரத்தம் ஒரு பெண்ணின் வாழ்க்கையையே நிச்சயித்துவிடுகிறது. ஆண்கள் வர்க்கமே மூர்க்கமானது. சூதுவாது தெரியாத தன் பிள்ளையை, ஒரு ஒழுக்கமான குமரை வேசையாடித் திரிந்தவள் போல எண்ணுகிறார்கள். எல்லா ஆண்களுமே இப்படித்தான் என்றால் அதற்கு பெண்களும் தானே துணை நிற்கிறார்கள். இப்படி தான் கடந்து வந்த ஆண்களையெல்லாம் நினைத்தபடி ஒங்களித்துக் காறி உமிழ்ந்தாள் றெதி நெந்தா. றெதி நெந்தாவின் நடையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்றில் ஆடும் ஈர்க்கில் துண்டு போல அவள் பின்னாலே சுசந்த நடந்து போனான்.

குடம்மாவும் புஞ்சி பாலப்பாவும் திலினியை வெள்ளைப் புடைவையால் சுற்றி ஆடம்பரமற்ற அழகுடன் மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துவர மயந்தவின் அம்மாவோ திலினியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இன்றும் கன்னித்தன்மை உறுதிப்படுத்தப்படாவிட்டால் திலினியை விவாகரத்துச் செய்துவிடுவதே சரி என்ற கட்டத்திற்கு மயந்தவின் அம்மாவும் அவனது சகோதரிகளும் வந்து விட்டனர்.

வெளியேறிப் போன றெதி நெந்தா திடீரென அங்கு வந்து யாருக்கும் தெரியாமல் திலினியை அன்போடு அழைத்து தலையைத் தடவி விட்டு கைக்குள் ஏதோ சிறு குப்பியொன்றை வலுக்கட்டாயமாக திணித்து விட்டாள். தனக்கு நேர்ந்த அவலங்களெல்லாம் றெதி நெந்தாவின் கண்களுக்குள் காட்சி விம்பங்களானது. தனது மகள் திலினியாவது நன்றாக வாழவேண்டும் என்றே அவள் அப்படிச் செய்தாள். அவள் செய்ததில் தவறொன்றுமில்லை. இந்த ஆண்களின் உலகில் நைந்து போன றெதி நெந்தாவின் மனம் அன்றும் இன்னொரு பெண்ணுக்காகவும் அழுது கொண்டிருக்கவில்லை. துணிந்திருந்தது.

அடுத்த நாள் றெதி நெந்தா சாட்சியாக மயந்தவின் அம்மாவும், அவன் சகோதரிகளும் வெள்ளை விரிப்பை பார்த்த போது அதில் மெலிதாக ரத்தப் பசை ஒட்டியிருக்கக் கண்டு றெதி நெந்தாவை சரியா சரியா என்று கேட்டு சந்தோஷ மழையில் நனைய டபடப.. டபஎன்று றபான் மேளம் அடிக்கப்பட்டு பட்டாசுகளும் கொளுத்தப்பட்டதுசுசந்தவின் தத்தாவுக்கும், லொகு பாலப்பாவுக்கும்உங்கள் மகள் கன்னித்தன்மையோட இருக்கிறாள் எனும் செய்தி அனுப்பப்பட்டதுயாருக்கும் தெரியாமல் திலினி றெதி நெந்தாவை கட்டிப் பிடித்து கதறி அழுதாள். சுசந்த அம்மாவிடமும், குடம்மாவிடம் மட்டும் நடந்தவற்றை விளக்க அவர்களும் றெதி நெந்தாவை கண்ணீர் மல்க கட்டுப்பிடித்துக் கதறி அழுதார்கள். றெதி நெந்தா நினைத்தபடியே எல்லாம் நடந்திருந்தது.

றெதி நெந்தா நேற்றிரவு கொன்று போட்ட சேவல் மட்டும் ரத்தமின்றி உறைந்து கிடந்தது.


 

எழுதியவர்

நீலாவணை இந்திரா
இயற்பெயர் பாக்கியராசா மிதுர்ஷன். நீலாவணை இந்திரா எனும் புனைபெயருடன் படைப்புகளை எழுதிவருகிறார். கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு மாணவர்
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
சுகன்யா ஞானசூரி

றெதி நெந்தா ஒரு விசித்திரமான பெண்.

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x