16 September 2024

து தாங்க நம்ம மஞ்சூர் மலை கிராமம் …இங்கே பூர்வீகமா வாழ்ற மக்கள் மட்டும் தாங்க இருப்பாங்க … இது தவிர,

பக்கதுல ஒரு மருந்து கம்பெனி இருக்குங்க , அங்க வாரத்துக்கு ஒரு தடவ கண்டெய்னர்  லாரி வருங்க.  அப்புறம் இங்கே ஒரே டீ கடை, நம்ப ஆத்தா டீ கடை தாங்க.

ஆத்தா டீ கடையை பகலில் ஆட்கள் இல்லாமல் பார்க்கவே முடியாது. ஏழு மணிக்கு ஆரம்பிச்சா சாயங்காலம் ஆறு மணி வரை ஆட்கள் நடமாட்டம் இருக்கும். நாள் முழுக்க பொழுது போகாமல் இங்கே வருபவர்கள் தான் அதிகம்.

அதுவும் அட்ஜெஸ்ட் மெண்ட் உள்ள கடை…. டவுன்ல இருந்து தினமும் தினமும் மூனா நம்பர் பஸ் வரும், ஒரு நாள் விட்டு இங்கே இரவு தங்கீடுவாங்க …. டிரைவர் , கண்டக்டருக்கு இரவு உணவு ஆத்தா கடையில் தான் , உணவு மட்டுமா ? கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட தரமான கள்ளும் சேர்ந்து கிடைக்கும்.

இது தாங்க நம்ம ஆத்தா கடை  அட்ஜெஸ்ட் மெண்ட் ?

தினமும் நாலு தடவை வரும்  அந்த மூனா நம்பர் பஸ் தவிர வாரம் ஒருமுறை வரும் அந்த  கண்டெய்னர் லாரியும் இந்த ஊருக்கு ஸ்பெசல்…!

விறகு பொறுக்க, தேன் எடுக்க தினமும் ஆளுங்க மலைக்கு மேல நடந்து போவங்க ….மேல பெரிய டேம் இருக்குதுங்க …ஜீப் தெனமும் அதிகாரிகளை ஏத்திட்டு போகுங்க , அதுல கொஞ்சம் ஆளுங்கல ஏத்திக்குவாங்க , வரும் போது சரியான நேரத்தில் திரும்ப வராது அதனால திரும்ப வரும்போது நடந்து தாங்க வரணும்.

நம்ம டீ கடை ஆத்தாவுக்கு வயசு அறுபதுக்கு மேலங்க …இவங்க வெறும் ஆத்தா மட்டும் இல்லீங்க …சரியான மங்காத்தா ஆமாங்க…. ஊருக்குள்ள நெறயபேர் இப்படித்தாங்க கூப்பிடுவாங்க .

இனி நம்ம ஆத்த டீ கடைக்கு போகலாங்க..

த்தா டீ தண்ணிக்கு அடுப்பை மூட்டி விட்டு வெல்லத்தை இடித்துக் கொண்டிருந்தார். இங்கே பால் இல்லாத டீ தான் பிரபலம். அதில கொஞ்சம் வெல்லம் சேர்த்து குடிச்சா …. குளிருக்கு அப்படி இதமா இருக்குங்க , ஒரு சிலர் ஏதாவது நொருங்கு தீணி வாங்கிக் கொள்வதும் உண்டு.

டீ குடிச்சா, டம்ளரை கட்டாயம் கழுவி வெச்சுட்டு தான் போகணும். இங்க உள்ளவன் , இல்லாதவன் என்கிற பேதமெல்லாம் இல்லீங்க.

இங்கே டீ கடை னு தான் பேரு, பஸ்சில் ஏற்றி விடப்படும் விறகும் , புளி மூட்டையும் இங்க இருந்து தான் ஏற்றுமதி ஆகும்.

இங்கே உள்ள மக்கள் காய்கறிகளை விளைவித்தாலும் அவர்கள் தேவைக்கு போக மிகச் சிறிய அளவில் தான் விற்பனைக்கு கொடுப்பார்கள். அதுவும் விறகோடு, காரமடை ஹோட்டலுக்கு கொடுத்து அனுப்பப்படும்.

மழை அதிகமாக கொட்டும் காலகட்டத்தில் ஆத்தா மக்காச்சோளம் அவித்து வைப்பார்.. வாரத்திற்கு இரண்டு தடவை காரப் பொரி ஆத்தாவின் ஸ்பெசல். ஊரில் இருக்கும் சிறுசுகள் கூட முன் பதிவு செய்வார்கள். ஆத்தாவின் கை பக்குவம் அப்படி ….தேங்கா எண்ணெய் , கொஞ்சம் காய்ந்த வற்றல் மிளகாய் , கூடவே ஒரு கை நாட்டுப் பூண்டு தட்டிப் போட்டதும் வரும் மணம் இருக்கிறதே …. அடடா !! ஊருக்குள் மூக்கே இல்லாதவனுக்கும் புதுசா மூக்கு முளைச்சிடும்.

ஆத்தா கடை ஒன்னும் ரொம்ப பெருசு இல்லீங்க. ஒரு பக்கம் புளிய மரம் , மறு பக்கம் வேப்ப மரம் இதற்கு நடுவில் ஏறும் ஒற்றையடி மேடு, நடுவுல நம்ம பாரதிராஜா படத்தில வர்ற மாதிரி , நாலு பென்ச்சு போட அளவான முன் வாசல்… மேல கூரை போட்டு இருந்தது. பின் வாசல்ல  சமையல் கட்டு…..அது மட்டும் இல்ல அது ஆத்தவோட பெட் ரூமும் கூட …. ஒரு கயத்து கட்டில் ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டு இருக்கும்.

த்தா  இந்த ஊருக்கு வந்து நாற்பது வருசம் ஆச்சு .. யாருக்கும் இவர பத்தி முழுசா தெரியாது. ஊருக்குள்ள அரசல் புரசலா ஒரு பேச்சு இருக்கு. ….நம்ம ஆத்த புருசன கொன்னுட்டு இங்க வந்ததா சொல்லுவாங்க.

அதற்கு காரணம் அவங்க இந்த ஊருக்குள்ள வரும் போதே ஆண்கள் போடும் காலர் வைத்த சட்டையும் , ரத்தக் கறை படிந்த சீலையுமாக வந்தவர். நல்ல கறுப்பு நிறம். இடுப்புக்கு கீழே தவழும் கூந்தல். நல்ல செழுமையான தேகம்….ஆண்களுக்கு இணையான உயரம். பார்த்ததும் எங்கேயோ பார்த்த உணர்வை கொடுக்கும் முகம்.

பாவம், எத்தனை நாட்களாக பட்டினியாக இருந்தார் என்று தெரியவில்லை. ஊருக்குள் இருக்கும் குகை கோயிலில் இருக்கும் சாமி சிலைக்கு பின்னால் மயங்கி கிடந்தார்.

அந்த கோயிலுக்கு பூசாரி என்று யாரும் இல்லை. வருடத்திற்கு ஒரு நாள் கூடும் திருவிழா மட்டும் தான் அம்மன் கோயிலில் ஆட்கள் நிறைந்து கிடப்பாரகள்.  அன்று யாரோ சாமிக்கு வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தோடு வந்திருந்தார்.

வந்தவர்கள் நம்ம ஆத்தாவை பார்த்து பயந்து போனார்கள்…. மூச்சு வருவதைப் பார்த்து முகத்தில்  தண்ணி தெளித்து காப்பாத்தி ஊருக்குள்ள தகவல் கொடுத்தாங்க.

ஊர் தலைவர் வந்தாரு , ஏதேதோ கேட்டுப் பாத்தாரு ….ம்ஹூம் ஆத்தா வாயத் தொறக்கல …. வயசுப் புள்ளய வெளிய தொரத்த இங்க யாருக்கும் மனசு வர்ல… கொஞ்ச நாள் தலைவர் ஊருக்குள்ள ஒரு குடிசை வீட்ல  தங்க வெச்சிருந்தாரு … ஆனா நம்ம ஆத்தாவின் நடவடிக்கைகள் அருகில் இருப்பவர்களை பயப்பட செய்தது.

ஆத்தா இரவில் தனியே வெளியே செல்வதும், நனைந்த உடையோடு வருவதும்,   குளிர் தாங்காமல்  கோயிலில் சாமிக்கு படைத்த சுருட்டை எடுத்து புகைகக்க ஆரம்பித்தார். இதெல்லாம் தலைவருக்கு பயத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது….இருந்தாலும் தலைவர் , ஆத்தா மேல் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருப்பதாக நம்பினார். காரணம் அவர் வந்த பின்பு ஊருக்குள் படித்த இளைஞர்களுக்கு வெளியூர் வேலை கிடைத்தது. இரண்டொருவர் போலீஸ் வேலைக்கு செலக்ட் ஆகி இருந்தார்கள்.

ஊருக்குள் வாழாவெட்டியாக இருந்த பெண்கள் , ஆத்தா கிட்ட திருநீறு வாங்கினதுக்கு அப்புறம் வாழ்க்கையே மாறிப் போனது. புருஷன் தானாவே வந்து கூட்டிட்டுப் போனான்.

எப்போதும் ஊருக்குள் வளைய வரும் யானை கூட்டம் கூட அதிகமாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஆத்தா கொடுத்த வாழைப்பழத்தை வாங்கிக் கொண்டு அமைதியாக சென்றது.  ஊருக்குள் யாருக்கும் பேய் பிடிக்கவில்லை. யாரும் இரவில் வெளியில் வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஆத்தவை தவிர வேறு எந்த உருவமும் கண்களுக்கு படவில்லை. இப்படி ஆத்தா வந்த பிறகு நிறைய மாறிப் போனதாக தலைவர் நினைக்க ஆரம்பித்தார்.

அவருக்கு ஊருக்கு முன்னாலேயே இந்த மேட்டில்  ஒரு குடிசை போட்டுக் கொடுத்து சாப்பிட போதுமான அளவு அரிசி, காய்கறிகளை ஒவ்வொரு வாரமும் கொடுத்தனுப்பினார்.

ஆத்தாவுக்கு வசதியாக போனது. அவரை தாண்டி ஒரு பய ஊருக்குள் போக முடியாது. தோளில் துணி மூட்டையை சுமந்தபடி இங்கே சிங்கப்பூர் சிலை விற்க வந்தவர்கள் , பயந்து ஓடிப் போனார்கள்.

காதல் கீதல்னு ஒரு பய சுத்த முடியாது… ஆத்தா  சாமி ஆடி வீட்ல விசயத்த போட்டு உடைச்சிடும்…. இப்படி தான் ஒரு முறை , ஊரில் அடங்காத சில இள வட்டங்களுக்கு ஆத்தா படம் காட்டி விட்டார்.

அவங்க அப்படி ஒன்னும் பெரிய தப்பு செய்யலீங்க …. காரமடை வரைக்கும் வந்து கொட்டகைல  நைட் ஷோ படம் பாத்துட்டு வந்தாங்க.

ஆத்தா , அப்படி வந்தவங்கள மிரட்டி விடிய விடிய கதை பேசியபடி இருப்பார். அவருடைய சுருட்டில் இருந்து வரும் நெருப்பு , கருகிய வாடை இளவட்டங்களை  கதி கலங்கச் செய்தது. அதற்கு பயந்தே யாரும் இரவில் சினிமாவிற்கு மட்டும் அல்ல , அவசரம்  பயணத்தை கூட தவிர்த்தார்கள்.

ஆத்தா குடிசையை தாண்டி மக்கள்  ஊருக்குள் வரவே முடியும். நாட்கள் செல்லச் செல்ல இரவில் ஆத்தாவை பார்க்க பயந்து குடிகாரர்கள் கூட வெளியில் வருவதே இல்லை.

ஊர் தலைவருக்கு இது பிடித்துப் போனது. ஆத்தாவை காவல் தெய்வமாகவே பார்க்க ஆரம்பித்தார். அடுத்ததாக வந்த திருவிழாவில் ஆத்தாவுக்கு நல்ல மரியாதை கொடுத்து ஊர் மக்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார்கள்…. மக்களும் ஆத்தாவை பார்த்து கும்பிடு போட ஆரம்பித்தார்கள்.

அதுமட்டுமல்ல அன்று முதல் ஆத்தாவுக்கு சாராயமும் , சுருட்டும் தட்சணையாக கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆத்தாவுக்கு சாராயமும் பழகிப் போனது.

யாரிடமும் பேசாத ஆத்தா தவறு செய்பவர்களை பார்த்தால் மட்டும் கோபம்படுவதும், மற்ற நேரங்களில் குடிசைக்குள் முடங்கிக் கிடப்பதும் பழக்கமாகிப் போனது. ஊருக்குள் ஆத்தாவை, வயதில் சின்னவரானாலும் மரியாதையாக நடத்த ஆரம்பித்தார்கள்.

ப்படி ஆத்தா ஊருக்குள் வந்த கதையே மிகவும் சுவாரஸ்யமானது. இப்போது ஆத்தாவுக்கு வயதாகிவிட்டது…. கூடவே வெற்றிலை பழக்கமும் தொற்றிக் கொண்டது. ஒரு காலத்தில் ஆத்தா ஏதாவது பேசாதா என்று காத்திருந்த மக்களுக்கு இன்று ஆத்தா வாயை திறந்தால் கெட்ட வார்த்தைகள் வரிசை கட்டி நிற்கிறது. அதனால் யாரும் தேவையில்லாமல் பேச்சுக் கொடுப்பதில்லை.

ஆரம்பத்தில் ஆத்தா டீ கடையில், பெரிதாக வியாபார நோக்கம் இல்லை. அந்த ஊரில் டீ கடையே இல்லாத நேரத்தில் தலைவர் ஆத்தாவுக்கு ஏதாவது பொழுது போக வேண்டும் என்று வைத்துக் கொடுத்த கடை.

அப்போது  ஊர் மக்கள் தொகை அதிகபட்சமாக நூறு பேர் இருந்தால் ஆச்சரியம் தான்.  அதில் ஒரு இருபது பேர் டீ குடிக்க வருவார்கள். அதில் ஒரு பத்து பேர் பணம் கொடுப்பார்கள். அதை ஆத்தா ஊர் தலைவரிடமே கொடுத்து விடுவார். இதே பழக்கம் இன்று ஆயிரம் பேர் கொண்ட சிறிய கிராமமாக மாறிய போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆத்தா வெல்லத்தை இடித்துக் கொண்டே ஒரு கையால் நெருப்பை உள்ளே தள்ளி விட்டார். ஆத்தா படு வேகமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நாளை  கண்டெய்னர் லாரி வரும் நாள். பிறகு என்ன ஆத்தா கடை பிஸியாகி விடும். டிரைவருக்கு இரவு சாப்பாடு நம்ப ஆத்தா கடையில தான்.

ஆத்தா நாட்டுக்கோழிக்கு சொல்லி வைத்திருந்தார். உதவிக்கு எப்போதும் வரும் ஒற்றைக் கண்ணணை வேறு இன்னும் காணல. ஆத்தாவுக்கு ஒற்றைக் கண்ணன் வலது கை மாதிரி… ஊருக்குள் ஒதுக்கி வைக்கப்பட்டவன். கொஞ்சம் ஞாபக மறதிக்காரன்…. ஆனால் நல்லவனுக்கு நல்லவன்.

ஆத்தாவின் ஒரே கைத்தடி,  கொஞ்சம் வாய் அதிகம் பேசுவான்.

ஆத்தா பாவம் பார்த்து சேர்த்துக் கொண்டார். அவரிடம் ஒற்றைக் கண்ணன் வேலை எதுவும் பலிக்காது. அவனை விட ஆத்தா பேசக் கூடியவர் என்பதால் அடங்கி வேலை பார்த்தான்.

ஆத்தா கடையில் எப்பவும்  பாய்லரில் தண்ணீர் கொதித்துக் கொண்டே இருக்கும். ஆத்தா கடையை விட்டு இறங்கி யாரும் அதிகமாக பார்க்கவே முடியாது. மற்றவர்களை பயம் காட்டி விட்டு யாரும் வெளியே வராத நேரத்தில் தான் ஆத்தா ஊருக்குள் வளைய வருவது வழக்கம்.

இந்த ஊரில் ஒரு ஒற்றுமை உண்டு. இங்கே இருந்து வெளியே சென்று பிழைப்பு நடத்தி வரும் ஆட்கள் ஊர் முன்னேற்றத்திற்கு என்று ஏதாவது ஒரு தொகை தலைவருக்கு அனுப்பி  வைப்பது வழக்கம். இதெல்லாம் அரசு சட்டம் இல்லீங்க அந்த மக்கள் ஆண்டாண்டு காலமாக தங்களின் தேவைகளை இப்படித்தான் சரி செய்து கொண்டிருந்தார்கள். மழை காலத்தில இங்க இருக்க மக்கள் வெளியே எங்கயும் போக முடியாது. அவ்வளவு குளிர் , உடலில் ஏதாவது பிரச்சனை என்றால் பெரும்பாலும் நாட்டு வைத்தியமே சரி செய்து விடும் …..அதைத் தாண்டி பெரியாஸ்பத்திரிக்கு போக வேண்டி இருந்தா அதற்கும் இந்த ஊர் பணம் தான் செலவிற்கு எடுத்துக் கொள்ளபடும் ….இதை ஊர் தலைவர் மட்டுமே தன் பொறுப்பில் வைத்திருந்தார். அவர் இறந்த பிறகு அவருடைய மகன் துருவன் பார்த்துக் கொண்டார்.

ஊரில் வேறு டீ கடைக்கு வேலையே இல்லை. இங்கே பெரும்பாலும் வீட்டில் டீ தண்ணியை காய்ச்சி குடிப்பவர்களே அதிகம். ஆத்தாவோடு பேச்சுக் கொடுக்கவே நிறைய பெரிசுகள் டீ கடைக்கு வந்தார்கள். ஆத்தா கடையில் சுடச்சுட வீசும் அடுப்பு வாடைக்கு பலர் அடிமையாகிக் கிடந்தார்கள். காலையில் கண்களை எரிக்கும் புகை , பலரின் விடியலை சுபமாக்கியது. இங்கே இருக்கும் ரேடியோவில் எப்போதும் கர கர சத்தம் தான் , பெரும்பாலும் எம்ஜிஆர் பாடலை தேடித் தேடி கேட்பார்.

எப்போதாவது வரும் அரப்புக்காரி இன்று வந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு….,

“ஆத்தா ….டீ தண்ணி கொடு …!”

“என்னடி….ரொம்ப நாளா ஆளக் காணல ..? “

“ஆத்தா ….மறந்துட்டியா , எம் புள்ளைக்கு பிரசவ நேரம்.”

“என்ன பிள்ள பொறந்திருக்கு ?!”

வர்க்கியை கடித்துக் கொண்டே ஒருவர் பெரியவர் கேட்க…,

“இல்ல தாத்தா … பிள்ள செத்தே பொறந்தது …”

அங்கே இருந்தவர்கள் அவளிடம் துக்கம் விசாரிக்க, ஆத்தா முகம் சுண்டிப் போனது. கையில் இருந்த டீ கிளாசை அவளிடம் நீட்டியபடி,

“இந்தா புள்ள, இத குடி ! மகள நல்லா பாத்துக்க …..சின்ன புள்ளைய கட்டிக் கொடுகாதேன்னு சொன்னே கேட்டியா ….?” என்றபடி இடுப்பில் சுருட்டி வைக்கப்பட்ட நூறு ரூபா தாளை அவளிடம் நீட்டினார்.

“வேண்டா ஆத்தா …..”

“அட புடி புள்ள …..”

அவள் கண்ணை கசக்கிக் கொண்டே வாங்கி நெஞ்சுக்குள் திணித்தாள். அவள் உடல் முழுவதும் அரப்பு பொடியின் தூசி , மூக்கிக் ஏறும் பச்சை வாசம்…..அரப்புக்காரி மூட்டையை தலையில் வைத்துக் கொண்டு ஊருக்குள் சென்றாள்.

“அரப்பு , அரப்பு …..”

ஆத்தா மனம் முழுவதும் கணமாகிப் போனது. சட்டை காலரில் கண்களை துடைத்து விட்டு அடுப்பில் இருக்கும் தீயை கொஞ்சம் சரி செய்தார். சட்டியில் சோறு வெந்து கொண்டிருந்தது. நெருப்பில் இரண்டு பச்சை மிளகாயையும் , அப்பளத்தையும் சுட்டு எடுத்தார். மனதில் ஏதோ பழைய நினைவுகள் வந்தது போல …அடுப்பில் இருந்த சூடு கையில் பட்டது.

ஆத்தா அந்த இடத்தை எச்சிலால் துடைத்து விட்டு, பழைய இருப்பு பெட்டியில் இருந்து மடிப்பு களையாத, சட்டையும் ,புடவையுமாக இருந்தது.   புடவையைில் இரண்டை எடுத்து வெளியில் வைத்தார்.

“டேய்….”

“சொல்லு ஆத்தா ….”

“அரப்புக்காரி ….பஸ்ஸூக்கு வருவா !! வந்தா சத்தம் குடு …”

“சரி,ஆத்தா …”

ஆத்தா எந்த சூழ்நிலையில் ஜாக்கெட்டுக்கு பதிலாக சட்டை போட ஆரம்பித்தார் என்று தெரியவில்லை ஆனால் இந்த ஊரில் அதுவே அவருடைய அடையாளமாயிற்று…. மக்கள் அன்பளிப்பாக சட்டையும் , புடவையும் கொடுத்தார்கள்.  ஆத்தா எப்போதும் அவர்களின் அன்பளிப்பிற்கு மறுப்பு சொன்னதில்லை. அப்படி கொடுக்கப்பட்ட புடவைதான் அது.  மதியம் ஊருக்குள் வரும் மூனா நம்பர் பஸ் வந்து சென்று விட்டது. ஆனால் அரப்புக்காரி ஊருக்குள் வியாபாரத்தை முடித்து விட்டு வந்தபாடில்லை. ஆத்தா அவளை எட்டி பார்த்தபடி இருந்தார்.

சிறிது நேரத்தில் அரப்புக்காரி ஊருக்குள் வியாபாரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் கடை வாசலில் வந்து உட்கார்ந்தாள்… ஆத்தா வெளியே எட்டிப் பார்த்து விட்டு,

“என்ன புள்ள பஸ்ஸ விட்டுடியே…..?”

“ஆமா ஆத்தா …… நம்ம மிலிட்டரி கிட்ட பேசிகிட்டு இருந்தேன் ….பஸ்ஸு வந்தத கவனிக்கல”

மிலிட்டரி என்றதும் ஆத்தா மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. அவருடைய முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அரப்புக்காரி கவனிக்க தவறவில்லை.

“ஏனாத்தா …..உனக்கு கல்லு மனசு ….!”

ஆத்தாவுக்கு புரிந்து விட்டது, மிலிட்டரி தன் மனதை திறந்து யாருக்கும் தெரியாத கதையை சொல்லி இருக்கிறார் என்று.

ஆத்தா பதில் குரல் கொடுக்கும் நிலையில் இல்லை.

”ஆத்தா ….நீ எதுக்கு தனியா நிக்கிற ? அப்பவே, அந்த ஆள கட்டிகிட்டு சுகமா இருந்திருக்கலாமில்ல.”

ஆத்தா உள்ளே இருந்த பையை எடுத்துக் கொண்டு வந்து அவள் கையில் திணித்தார்.

“புள்ள !! வாய மூடிகிட்டு உன்னோட வேலய பாரு….அந்த ஆளு என்ன பெரிய எம்ஜிஆரா ..?”

“ஏன் ? உனக்கு எம்ஜிஆரு தான் வேணுமா ?”

“ஆமாடி, என்னை என்னான்னு  நெனச்ச ?”

அரப்புக்காரி, இதை காரணமா வெச்சு, வாயை கிளர ஆரம்பித்தாள்.

“ம்……நீயே சொல்லு, தெரிஞ்சுகிறேன் !”

ஆத்தா சுதாரித்துக் கொண்டு….

“அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது, அடுத்த வண்டி வர சாயங்காலம் ஆகும்…எதுக்கும் ரோட்டில இறங்கி நில்லு, இப்ப  கம்பெனி ஜீப் வரும் ஏறிக்க ….”

“ஆத்தா என்ன தொரத்தாத ….நீ ஏன் கல்யாணம் கட்டிக்கல ….?”

ஆத்தா அவளை திட்டி , மேலே டேமில் இருந்து வந்த ஜீப்பில் ஏற்றி விட்டு விட்டு..

“புள்ள ….உன்ன பெத்த ஆத்தா வயசு எனக்கு , என்னை பத்தி தெரிஞ்சு கிட்டு என்ன செய்யப் போற ….போ , போயி மகள நல்லா பாத்துக்க..”

“ஆத்தா ….. எம் மோல கோபமா ? தப்பா ஏதாவது கேட்டேனா …!”

அரப்புக்காரி குழைந்து போனாள்.

“இல்ல புள்ள நீ கெளம்பு ….”

ஜீப் கிளம்பி சென்றது. ஆத்தவுக்கு மிலிட்டரியை முதன் முதலில் பார்த்து ஞாபகத்துக்கு வந்தது. அப்போது ஆத்தாவுக்கு முப்பது வயசு இருக்கும் , ஊருக்குள் சாமியாடியாக வளைய வந்த நேரம். சின்ன வயதில் மிலிட்டரியில் சேர்ந்தவர் நம்ம தருமன் , பெத்தவங்க பாதியில பரலோகம் போய் சேர்ந்துட்டாங்க …தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி மாமியார் வீட்டில் இருந்தது. தனக்கு யாரும் இல்லேன்னு நெனச்ச மிலிட்டரி , ஆத்தாவைப் பார்த்ததும் காதல் வயப்பட்டார்.

ப்போது இருந்த ஊர் தலைவர் வழியாக எவ்வளவோ முயற்சி செய்தும் , ஆத்தா மனம் இறங்கவே இல்லை. ஒருவழியாக தானே நேரிடையாக அவளிடம் கேட்பது என்கிற முடிவிற்கு வந்தார்.

ஆத்தா விடியும் முன்பே யார் கண்ணிலும் படாமல் மலை அடிவாரத்தில் இருக்கும் ஓடையில் குளிப்பது வழக்கம் , அப்படி ஒரு நாள் அவரை வழி மறித்து..,

“என்ன புள்ள , என்னை கட்டிக்கிறியா ? உன்ன ராணி கணக்கா வெச்சுகுவேன்.” என்றார்.

ஆத்தா எதுவும் சொல்லாமல், அவரை கடந்து செல்ல ….

மிலிட்டரி உணர்ச்சி வசப்பட்டு கையை பிடித்து அவளை நிறுத்த.,

ஆத்தா கையில் கிடைத்த ஒரு கல்லை , அவர் தலையில் போட்டு விட்டு ஓடி வந்தார்.  காயம் ஆறியதும் மீண்டும் மிலிட்டரி அவளைத் தொடர ஆரம்பித்தார். ஆத்தா ஒரு கட்டத்தில் அவரை தவிர்க்க முடியாமல் சட்டைக்குள் மறைந்திருந்த தன்  தாலி சங்கிலியை காட்டினார் .

மிலிட்டரி அதிர்ச்சியில் உறைந்து போனார்.

“அதெல்லாம் மறந்துடு புள்ள, உனக்கு வாழ்க்கை இருக்கு ….. என்னை கல்யாணம் கட்டிக்க புள்ள …..!”

“வேண்டாம்… எனக்கு குடும்ப வாழ்க்கையே வேண்டாம்…. என்னை விட்றுங்க.”

ஆத்தா கண்களில் நீர் வழிய அந்த இடத்தை விட்டு சென்றார். அதற்கு பிறகு மிலிட்டரி ஆத்தாவிடம் கல்யாணம் பத்தி எதுவும் பேசினது இல்ல , அவரும் வேற கல்யாணம் கட்டிக்கல.

ஆனா ஆத்தாவுக்கு மிலிட்டரி மேல ஒரு மரியாத எப்பவும் இருந்தது.அதற்குப் பிறகு, ஊர்  தலைவரும்  உயிரோட இருந்தவரைக்கும் ஆத்தா கிட்ட இதபத்தி பேசவே இல்லை.

ஆனால் இத்தன நாளைக்கு பின்னால இந்த மிலிட்டரி , அரப்புக்காரி கிட்ட தன் மனக்குறையச் சொல்லி ஆத்தி கிட்டார். பாவம் இப்ப கொஞ்ச காலமா அவருக்கு உடம்பு சரியில்ல… அப்ப கூட ஆத்தா அவர போய் பாக்கவே இல்ல.

னா இன்னிக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது. தன்னை யார் என்றே தெரியாத நிலையில் அவர் காட்டிய அன்பு காலம் கடந்தும் மனதை என்னவோ செய்தது.

மாலை நேரம் நெருங்க நெருங்க கடையில் இருந்த ஆட்கள் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தார்கள். இங்கே இரவு என்பது ஆறு மணியில் இருந்து ஆரம்பம் ஆகி விடும்….வீட்டில் இருக்கும் அடுப்பு எந்த நேரமும் வெந்நீரை சுமந்தபடி இருக்கும்.. இங்கே எல்லாமே வெந்நீரில் தான்…… அவ்வளவு குளிர்.

எப்படியோ ஊர் அடங்கிப் போனது. ஆத்தா மறுநாள் காலையில் தேவைப்படும் விறகை எடுத்து ஒழுங்கு படுத்திக் கொண்டு இருந்தார். ஒற்றைக் கண்ணன் வாசலை கூட்டி பெருக்கிக் கொண்டு இருந்தான்.

“ஆத்தா….”

“என்னடா …”

“நான் வாரட்டா …..பனி எறங்குது… குளிர் தாங்கல …”

“அட இரு பயபுள்ள ….”

ஆத்தா தினமும் கொடுக்கும் பத்து ரூபாய் கூலியும் , மறு கையில் ஒரு துணி மூட்டையில் புடவையையும் எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்.

“இந்தா….. பொண்டாட்டிக்கு கொண்டுக் கொடு ”

“எதுக்கு இவ்வளவு பொடவ …. ரெண்டு போதும்…”

“பரவாயில்லடா …. எனக்கு எதுக்கு இவ்ளோ புடவ ….கொண்டு போ…”

“ஆத்தா…..”

“போடா …. பனி கொட்டுது, சீக்கிரம் வீட்டுக்கு போ… காலைல சீக்கிரமா வா !! தூங்கிடாத..! ”

“சரி ஆத்தா.. ”

றுநாள் காலையில் ஊருக்குள் வரும் மொத வண்டியை பிடிக்க மக்கள் அவசரமாக பஸ் ஸ்டாண்டை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

எப்போதும் அதி காலையிலேயே ஆத்தா கடையில் இருந்து வரும் புகை வாசம் அன்று தாமதமானது.

அன்று பஸ்ஸூம் தாமதமாக வந்தது…அதனால்  டிரைவர் ஆத்தா கடையில் இறங்கி டீ தண்ணி குடிக்க நேரமில்லை. கடையை கடக்கும் போது ஒரு ஹாரன் அடித்து தனது அன்பை வெளிப்படுத்தி விட்டுச் சென்றார்.

எப்போதும் ஆத்தா கடையில் டீ குடிக்க வரும் பெரிசுகள் கடைக்கு வந்து சேர்ந்தார்கள், கடை எப்போதும் பூட்டி பார்த்ததே இல்லை. ஆனால் இன்று கடை பூட்டி இருந்தது.

அவசரமாக, அவசரமாக ஒற்றைக் கண்ணன் ஓடி வந்தார்.

ஆத்தா இன்னும் கடையை திறக்காததால் அவசரமாக கதவைத் தட்ட ஆரம்பித்தான்.

“ஆத்தா..! கொஞ்சம் லேட் ஆயிருச்சு. கடையில கூட்டம் சேர்திடுச்சு பாரு, சீக்கிரம் கதவ தொற.. ” பதில் இல்லை.

சில நிமிடம் கழித்து மீண்டும் தட்ட ஆரம்பித்தான். ஆத்தா கதவை திறக்கவே இல்லை. கடையில் கூட்டம் கூட ஆரம்பித்தது. பெண்கள் கூட்டம் கூடிப் போனது.

ஊர் தலைவருக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஊரே திரண்டு விட்டது.  கிராமத்தில் இருந்து வெளியே செல்ல இருந்தவர்கள் யாரும் வெளியே  அன்று செல்லவில்லை.

சிறிது நேரத்தில் தலைவர் முன்னிலையில் கதவு உடைக்கப்பட்டது. கயத்து கட்டிலில் ஆத்தா இறந்து கிடந்தார். ஊரே அழுதது. அன்று யார் வீட்டிலும் உலை கொதிக்கவில்லை. ஆத்தாவின் உறவு என்று யாரும் இல்லாத நிலையில் தலைவரே இறுதிச் சடங்குகளை செய்தார்.

கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியது. ஆத்தாவின் கடையில் வீசும் புகைவாடை இல்லாமல் கிராமத்தில் இருள் தட்டிப் போனது. ஆத்தாவை பார்க்க மிலிட்டரி வரவே இல்லை. அவரால் தனியாக நடந்து வரும் அளவிற்கு உடலில் வலுவில்லை …அவரை அங்கே அழைத்து வர யாருக்கும் தோன்றவில்லை, ஆனால் அவர் மனம் முழுவதும் ஆத்தா உடலை சுற்றி வந்தது.

ஆத்தாவை அருகில் இருந்த எரி மேட்டிற்கு கொண்டு சென்றார்கள்….அங்கே இருந்த வெட்டியான் ஆத்தா கழுத்தில் இருந்த தாலி கொடியை கழற்றி தலைவர் கையில் கொடுத்தான். அங்கே இருந்தவர்களுக்கு ஆத்தா கழுத்தில் தாலி இருந்ததே இப்போது தான் தெரிந்தது.

ஆத்தா  எம்ஜிஆர் ரசிகை போல , தோளில் அவருடைய பெயரை பச்சை குத்தி இருந்தார். ஒருவேளை ஆத்தா எம்ஜிஆர் மாதிரி ஒரு கணவனை எதிர்பார்த்து ஏமாந்தவளாக கூட இருக்கலாம். எப்படியோ ஆத்தாவின் சகாப்தம் அன்றோடு முடிந்தது.

ன்று மாலை ஊருக்குள் வந்த அந்த கண்டெய்னர் லாரி ஆத்தா இல்லாமல் அனாதையாக நின்றது. அன்று இரவு தங்கும் மூனா நம்பர் பஸ் வெறிச்சோடி கிடந்தது. டிரைவர் , கண்டக்டருக்கு இரவு சாப்பாடு கொடுக்க ஆள் இல்லை.

இரண்டு வண்டி டிரைவர்களும் ஆத்தா இல்லாமல் கலங்கிப் போனார்கள் ….மனதில் ஏதோ ஒரு மூலை வெற்றிடமாக இருந்தது…..நேரம் செல்லச் செல்ல குளிர் விட்ட ஆரம்பித்தது…வயிற்றில் இருந்த பசி ஆத்தாவை திரும்ப திரும்ப நினைக்க வைத்தது.

அடுத்த சில நாட்களுக்கு ஊருக்குள் வந்தவர்கள் ஆத்தா இல்லாமல் வாடிப் போனார்கள்… அழுது புலம்பினார்கள். ஊர் தலைவர் அந்த இடத்தை ஒற்றைக் கண்ணனுக்கே கொடுத்து விட்டார். ஆனால் அவன் போடும் டீ யை சுவைக்க வரும் ஆட்கள் குறைந்து போனார்கள்.

அடுத்த சில வாரங்களில் மிலிட்டரியும் இறந்து போனார். அவர் உறவுகள் வந்தார்கள்….. அழுது புலம்பி அவரை அடக்கம் செய்தார்கள். அவருடைய கையில் ”மங்காத்தா” என்று பச்சை குத்தி இருந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒரு வேளை அந்த அரப்புக்காரி இப்போது இங்கே இருந்திருந்தால் . அது நம்ம ஆத்தா தான் என்று கண்டுபிடித்து இருப்பாள்.

ஆத்தா இல்லாமல் அந்த டீ கடை ஜீவன் இல்லாத கடையாக நடந்து கொண்டிருந்தது. ஒற்றைக் கண்ணனுக்கு மட்டும் அவ்வப்போது ஆத்தா புகைக்கும் சுருட்டு வாடை வீசும்….. கலங்கிப் போவான். அவரை கும்பிட்டபடி அடுப்பில் தீயை மூட்டுவான்.


 

எழுதியவர்

தரஹி கண்ணன்
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x