அசைதலறியா கல்யானைகள்
1)
அந்த தொன்மக் கோயிலின் முன் மண்டபத்தில்
வழக்கமாய் கண்ணில் படும் கல்யானை
இன்றைக்கென்னவோ பிளிறியது
மண்ணிறைத்தது, மூங்கில் முறித்தது
அதிர அதிர ஓடித் திரும்பியது
சோழனை ஏற்றிக் கொண்டது
நான் எப்போதும் போல
இதற்கும் பார்வையாளனாக இருக்கிறேன்.
2)
ஒரு தொடர்மழையில்
கற்றளியின் திருச்சுற்றின் போது
வட மூலை கல்யானையை வியந்தவனுக்கு
அன்றைக்கு அத்தனை பெரிதாய்ப்படவில்லை
திரிலோக சுந்தரி.
3)
கொட்டாரத்தில் அசைந்த யானையை
கண்ணகலாமல் பார்த்துக் கொண்டிருந்தது
அசைதலறியா கல்யானை.
4)
நீங்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை
அங்குசம் படாத, அவ்வப்போது அசையாத
அடிக்கடி பிளிறாத
பின்னங்கால் தூக்காத கல்யானை
என்னிடம் அந்த சிற்பியை சபித்ததை
இருத்தலின் அடையாளங்கள்
1)
ஒரு வீட்டின் அடையாளத்தைச் சொல்வது
எப்படி எளிதாக இருக்கிறது உங்களுக்கு?
கதவு இலக்கத்தைச் சொல்பவர்களுக்கு
ஒரு மரித்த மரம் தெரிவதில்லை
கண்ணாடிச் சில்லுகள் பதித்த சுவரை
அடையாளம் சொல்பவர்கள்
அதில் முளைத்த குறுஞ்செடி கண்டதில்லை.
யானை நிற வர்ணமடித்த வீடென்பவர்கள்,
அதிலொரு ஒரு கருப்பு வண்ணத்துப்பூச்சியின்
நெடு நேர காத்திருப்பை கவனிப்பதில்லை.
இப்படித் தான் இருக்கிறோம்
இரு வேறு உலகங்களில் இரு வேறு மனிதர்களாக !
2)
ஆடுகள் போகும் வழியில்
எப்போதும் நானமரும்
ஒரு சிறு பாறை அத்தனை பிடிக்குமெனக்கு.
ஆட்டிடையன் சிடுமூஞ்சி என்றாலும்
ஆடுகளோடு பேசுவதை,
சிரிப்பதை தடுத்தவனில்லை.
பட்டிக்குள் அடையும் முன்
பெருத்த துயரோடு திரும்பிப் பார்க்கும்
ஆடுகளுக்கு
என் அடையாளம்
ஒரு சிறுபாறையிலமரும் கிறுக்கன்
என்பதாகத் தானிருக்கும்.
3)
அடர்பழுப்பு ப்ளாஸ்டிக் சேரில்
தொடங்கி இருக்கிறது என் ஓய்வுகால இருத்தல்கள்
வாகாய் இருக்கும் வலப்புற ஜன்னல் போதும்.
முற்றத்தில் கிளையொடிந்த மரம் போதும்.
எப்போதோ வந்தமரும் அந்தப் பறவையும்
இப்போதைக்குப் போதும்.
எதிர் வீட்டு சிவராமன் அரட்டைக்குப் போதும்.
இருக்கவே இருக்கிறார்கள்
நகுலனும் பிச்சமூர்த்தியும் தேவதேவனும்.
பிற்பாடு பார்ப்போம்
குவளை நிறையத் தண்ணீரில் பசி போகுமா என்பதை !
பூனை என்பது மிருகமல்ல
1)
எல்லோருக்கும் வாய்த்துவிடாது
காலடியில் பரிச்சயமற்ற பூனை
தன் கால் மடக்கி, உடல் குறுக்கி
கண் முடி அமரும் சில நிமிடத் தருணம்.
இன்னொரு சந்தர்ப்பத்தில்
இருவரும் நலம் விசாரித்துக் கொள்ளலாம்
என்பது போல இருந்தெனக்கு
அது திரும்பிப் பார்த்து அகன்ற போது !
2)
ஒன்றுமில்லாவிட்டாலும்
ஒரு பூனையாவது வளர்த்திருக்கலாம்.
காலருகில் இருக்கும் நேரத்தில்
கவிதையைக் கேட்டிருக்கும்
பிடிக்கா விட்டாலும் கூட. !
3)
நேற்றைய இரவிலிருந்தேக் காணோம்
பகல் முச்சூடும் கண்ணில் படவில்லை.
பால் நிறைந்த கிண்ணத்தில்
இரண்டொரு பூச்சிகள்.
வழக்கமாய் உறங்கும் சாக்குப் பை மேல்
பறந்திறங்கிய தாள்.
எப்படி உறங்க முடிகிறது
ரங்கநாதனால் வளர்ப்புப் பூனை
தொலைந்த அடுத்த நாள் இரவில் ?
4)
கதவிடுக்கில் நுழைந்து
நடு அறை சுவரொட்டி
வால் நிமிர்த்தி அலட்சியமாய்ப் பார்த்து
என்னை மதிக்காமல் கடந்து போகும்
சாம்பல் நிறப் பூனைக்கு எப்படிச் சொல்வது
நானும் சபாபதியும்
பால்ய கால நண்பர்களென்பதை.
எழுதியவர்
இதுவரை.
- கவிதை18 October 2021மதுசூதன் கவிதைகள்
- குறுங்கதை20 July 2021கைபேசி அழைப்பு