எதற்கும் இருக்கட்டுமென்று
எடுத்து வைத்திருந்த
அன்பொன்று
இப்போதெல்லாம்
அடிக்கடி கண்ணில் படுகிறது.
இதுவரையில்
அதன் அன்றாடங்களைப்
பொருட்படுத்தியதே இல்லை.
அதுவோ
அளவு மாறாத புன்னகையுடன்
வைத்த இடத்தில் வைத்தபடி
அப்படியே இருக்கிறது.
அவ்வப்போது அதன் இருப்பை
உறுதிசெய்துகொள்வதும்
எப்படியோ பழகியிருக்கிறது.
எப்போதாவது
சோர்வில் கனிந்த சொல்லொன்றை
அல்லது
களைத்த சிரிப்பொன்றை
அதற்கு அருளுகிறேன்.
கனத்த மனத்துடன் சாய்ந்தால்
தாங்குமா என்று தெரியவில்லை.
பாரந்தாங்கும் பரிசோதனையை
அதன் மீது ஏவிப் பார்க்கவும்
அச்சமாக இருக்கிறது.
நேற்று
வேறோர் அன்பிலிருந்து
குலைந்து பெருகிய சாயம்
தன்னை அண்டாதவாறு
வெகு கவனமாக விலகி மீண்டது.
சுருக்கென்று தைத்த
மனமுள் விலக்கி
இன்னும் மலர்ந்து சிரித்துவைத்தேன்.
ஆமாம்,
எதற்கும் இருக்கட்டும்.