மணி மதியம் ஒன்றரையைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. எப்போதும் ஒருமணிக்கெல்லாம் மதிய உணவுக்கு வீட்டிற்குச் செல்பவர் இன்று ஒன்றரை ஆகியும் சென்றாரில்லை. வலுவான தேக்கு மரத்தாலான தனது நாற்காலியில் சாய்ந்து கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தார். ஊரின் பிரதான சாலையில் அமைந்திருக்கும் அந்த ராஜமாணிக்கம் லாரிபுக்கிங் ஆபீஸ் அமைதியால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அமைதி அவரிடம் இருந்து அறைக்குத் தொற்றிக் கொண்டதா? இல்லை அறையிடம் இருந்து அவருக்கு வந்தததா என என்னும் அளவிற்கான நிசப்தத்தில் ஒற்றைக் குரலாய் உரையாடிக் கொண்டிருந்தது அந்தக் கடிகாரம்.
புகைந்து முடித்திருந்த அந்த சிகெரெட்டின் பிணத்தை அனிச்சையாய் உதிர்த்து விட்டது அவர் விரல்கள். பலிபீடத்தில் கிடந்த ஏழெட்டுத் துண்டுகளோடுத் தானும் சென்று சேர்ந்து கொண்டது அது.
“ண்ணே, இன்னும் சாப்பிட போலியா ? டீ எட்டுவரட்டா ?”
கூரான வாள் கொண்டு அமைதியைக் கிழித்தெடுத்தது குமரனின் அந்தக் குரல். கனவில் இருந்து மீண்டவராய் உயிர்த்தெழுந்தார் ராஜமாணிக்கம்.
குமரன் அவருக்கு மட்டுமில்லை அங்கிருக்கும் அனைத்து கடைகளுக்கும் பரிட்சயமான ஒரு ஆள். அந்த சாலையின் திருப்பத்தில் அமைந்திருக்கும் ஜெகன் டீ ஸ்டால் ‘கடைப்பையன்’. காலையில் அங்கிருக்கும் கடைகளுக்கு டீ கொடுப்பது, பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் குடித்து முடித்த கண்ணாடி கிளாஸை எடுத்து வந்து கழுவி வைப்பது, பின்னர் மாலையில் ஒருமுறை போய் வருவது இடையில் எங்கேனும் “குமரா… ” என குரல் கேட்டால் ஓடிச் சென்று ஆடர் எடுப்பது என்பதே அவனது தினசரியாக விதிக்கப்பட்டிருந்தது. அன்று கடையிலேயே வேலை அதிகம் என்பதால் கண்ணாடி கிளாஸ்களை எடுத்து வர நேரம் வாய்க்கவில்லை. முதலாளியின் திருவாய்ச் சொற்களுக்குப் பின்னர் இப்போது தான் சேகரித்துச் செல்ல வந்திருந்தான். வந்தவன் ராஜமாணிக்கத்தின் இருப்பு கண்டு இயல்பாய்க் கேட்ட கேள்விகள் தான் அவை.
நினைவில் இருந்து மீண்டு வந்த ராஜமாணிக்கம் குரலெடுக்கத் தோன்றாமல், தலையசைப்பிலும் கையசைப்பிலும் அவனை அனுப்பி வைத்தார். ‘இவன் கூட இப்பல்லாம் சத்தமா நம்மட்ட பேச ஆரம்பிச்சுட்டான்.’ அனைத்திலும் தன்னுடைய பிடி தளர்ந்து போவதாய் உணர்ந்த ராஜமாணிக்கம், நேரமானதை உணர்ந்து சாவியை எடுத்து ஆபீஸ் கதவை பூட்டலானார். எந்த வித இறுக்கமும் இன்றி அவர் கை வெறுமனே அச்சாவியை பிடித்திருந்தது அவ்வளவே.
தனது பழைய RX-100 வண்டியை எடுத்துக் கிளப்பினார். சாலையில் எப்போதும் போல வாகனங்கள் அவரை முந்திக் கொண்டும், ஹாரன் அடித்துக் கொண்டும் சென்றன. அவர் வார்த்தைகளில் சொல்வதானால் சற்றும் மதியாமல் அவரைக் கடந்து சென்று ஹாரன் அடித்து ஏளனம் செய்தன. அவர் தான் இயல்பில இல்லை அதனால் அவர் உலகும் எதிரொலித்தது.
வீட்டிற்கு வந்த ராஜமாணிக்கம் தனது வண்டியை நிறுத்தி கதவைத் திறந்து உள்ளே சென்றார். ‘எப்போதும் போல’ அவர் மனைவி ஓடி வந்து கதவைத் திறந்துவிட்டார். திறந்து விட்ட வேகத்தில் அடுப்பங்கரை நோக்கியோடிய அவரது மனைவி எஞ்சிய தனக்கென சுட வைத்துக் கொண்டிருந்த டீ யை நிறுத்திக் குழம்பையும், பொரியலையும் சுட வைக்கத்துவங்கினார்.
எப்போதும் தான் வந்ததும் fan ஐ போட்டுவிட்டு, டி.வி சுவிட்ச்சையும் போட்டு ரிமோட்டை எடுத்துக் கையில் கொடுக்கும் மனைவி இன்று நேரே உள்ளே ஓடியது அவருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.
“அந்த fan ஆஹ் போட்டு விடு …”
“வர்றேங்க ..”
சில நேரம் சொல்லி வைத்தார் போல சில விசயங்கள் ஒன்றாய் அமைவது உண்டு. கேஸ் லைட்டர் அதன் பங்குக்குப் பிரச்சனை பண்ணத் துவங்கியது. அதோடு போராடிக் கொண்டிருக்கும் போதே பொறுமையிழந்து குரலெடுத்தார்
“இப்ப fan ஆஹ் போடு னு சொன்னேன் உன்கிட்ட”
“இந்தா வர்றேங்க .. சுட வைச்சிட்டா சீக்கிரம் ஆயிடுமே னு தான் …”
“நாள் பூரா வீட்டுல நோட்டிட்டு இருந்தியா .. இப்ப வந்ததும் செய்றதுக்கு ..”
கோவத்தில் எட்டி உதைக்கப்பட்ட மேசை அத்தரையைக் கீறிக்கொண்டுத் தூரச் சென்றது. அடுத்த 5 நிமிடித்தில் அந்த மேசை திருத்தி வைக்கப்படும். அந்தக் கீறல் ??
தவிர்க்க இயலாத வகையில் மனசாட்சியை அசைத்துப் பிரசன்னமாகும் கேள்விக்கள் நம்மை எரிச்சல் அடைய வைக்கும்; இயலாமையில் ஈட்டியை எரிந்து சோதித்துப் பார்க்கும்; நம் மனதின் வக்கிரமான பக்கங்களை புரட்டிப் பார்க்கும். மறுதலையாக எந்த வித கனமுமற்ற இயல்பான இதயங்களின் அப்பாவித்தனமான கேள்விகள் நம்மையும் மறந்து சிரிக்க வைக்கும்; சிலிர்க்க வைக்கும்; நெஞ்சத்தை வருடிச் செல்லும்.
அப்படித்தான் அன்றும் ஆகிப்போனது, வெகுநேரமாக அலுவலகக் கணினியுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு possesive ஆகிப்போன அந்த செல்போன் சத்தமாக கூவி அழைத்தது. கண்களைத் திறந்து சிரித்தவாறே “அம்மா” எனக் காட்டியது பக்கத்தில் ஒரு ஆட்டீனுடன்.
போனை எடுத்தவாறே, working area விட்டு வெளியே வந்து கண்ணாடித்தடுப்பின் அருகே நின்று வேடிக்கை பார்த்தவாறே பேசிக் கொண்டிருந்தான்.
“ம்ம் அக்கா போன் போட்டாளா ? ”
“அவ போட்டா. நேத்து. அப்பறம் பிள்ளைகள்ட்ட குடுத்தா. எல்லார்ட்டயும் பேசியாச்சு.”
“நல்லது. சாப்டீங்களா? என்ன சாப்பாடு இன்னைக்கி ?”
……….
……..
……..
வழக்கமான விசாரணைகளுக்குப் பின்னர் எங்கெங்கேயோ சுற்றிய பேச்சு அரசியலுக்கு வந்து சேர்ந்தது.
“ச்சரியாப்போச்சு போங்க, அதான் மோடி ஏதேதோ திட்டத்துல காசு தர்றார் னு சொல்றாய்ங்க. எதுவும் வரலையா நமக்கு ? ”
“அதெப்படி நமக்கு வரும். ”
“ஏன்? நமக்கு ஏன் வராது ?”
“ஏலேய் டேய். அது இந்தியாவுக்குள்ள அவர் சொன்னது. நம்ம தமிழ்நாடு தானடா..”
“.. :-/ ”
“நமக்கு எப்படி வரும்.”
“எம்மோவ். மோவ் ஏன்மா அக்கப்போரு பண்றீங்க ..”
அடக்க மாட்டாமல் சிரித்தே விட்டான். “இந்தியாவுல தான்மா தமிழ் நாடும் இருக்கு.”
“மோடி எதுக்கு இந்தியாவுக்கு தான ? ”
“ம்மா. மோடி இந்தியாவுக்கு தான். ஆனா தமிழ் நாடும் இந்தியாவுல தான இருக்கு. அப்ப நமக்கும் அவர் தான? ”
“…”
“ம்மா. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா னு சொல்றோம் ல அது மாதிரி நிறைய மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து தான் இந்தியா.”
“ம்ம் அதத்தான் நானும் சொன்னேன். உடனே வந்துட்டான். ச்சரி போ போய் சாப்பிடு போ”
சிரித்தவாறே போனை அனைத்துவிட்டு வேடிக்கை பார்க்கலானான். இயல்பில் அவனுக்கு மிகவும் பிடித்த ரெண்டு விஷயம் ஒன்று அவன் அம்மா மாரியம்மாளிடம் பேச்சுக் கொடுத்து அவளைப் பேசவைத்துக் கேட்பது. இரண்டாவது மழை. அவன் அம்மா பேசி முடித்து வேலையைப் பார்க்கச் சென்றார். மழை உரையாடத் துவங்கியது.
ஒன்றும் இல்லாத நிலையில் தன் இல்வாழ்கையைத் துவங்கி, புழுதியிலும் வியர்வையிலும் உழன்று, கஷ்டங்களையும் அவனமானங்களையுமே நிறையவும் சந்தித்து; பெரும் பொருளாதார சிக்கலில் சிக்குண்டு கிடந்த குடும்பத்தை மீட்க கணவனோடு கை கோர்த்துப் போராடி எழுந்தது; எத்தனை வறுமையிலும் பிள்ளைகளைப் படிக்க வைத்து ஆளாக்கி, இன்று அத்தனை பேரையும் சமூகத்தில் மதிக்கத்தக்க இடத்தில் அமர வைத்து, அதையே பார்த்து ரசித்து அவர்களையே தன் உலகாய் அமைத்துக் கொண்டவள் அவள். சென்ற தலைமுறைப் பெற்றோர்களில் பெரும்பாலானோரின் கதைச்சுருக்கம் இப்படியாகத்தான் இருக்கும். தான் சிக்கிக் கொண்ட சூழலில் இருந்து உந்தித் தள்ளி வெளி தள்ளும் முயற்சியே அவர்கள் வாழ்க்கைப் பக்கங்களை நிரப்பியிருக்கிறது.
ஆனாலும், இக்காரணங்கள் யாவும் அர்த்தமற்றவையே. அவனுக்கு அவளைப் பிடித்துப் போக அவை எதுவுமே தேவையாக இல்லை. அவள் அவன் அம்மா.
வழக்கம் போலத் தன் வீட்டின் முன்னே தனது ஈஸி சேரில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் ராஜமாணிக்கம். ராஜமாணிக்கம் நல்ல உயரம். எவரும் எளிதில் அணுக முடியாத ஒரு கடுமை அவரது முகத்தில் எப்போதும் இருக்கும். யாருக்கும் அஞ்சாத செருக்கும், கர்வமும் நிறைந்த நடையாகவே அவர் நடை இருக்கும். ராஜமாணிக்கம் கருப்பு தான். கருப்பு என்றால் சாதாரண கருப்பு இல்லை அட்டைக் கருப்பு. ஆனாலும், இதுவரை யாருக்கும் அது ஒரு பொருட்டாகவே இல்லை. அவரது கருப்பு அவமானத்துக்கு என்றில்லை கேலிக்கோ கிண்டலுக்கோ கூட ஆளானதில்லை. கருப்பிலும் வர்க்கங்கள் இருக்கத்தான் செய்கிறது.
பெரிதாக எந்தவித வளர்ச்சியும் இல்லாதிருந்த காலத்தில் எம்.ஜி.ஆர் நகரில் கட்டப்பட்ட முதல் காரை வீடு ராஜமாணிக்கத்தின் வீடு தான். அந்தக் காலத்தில் அவர் வீட்டுக் கரையில் நின்று பார்த்தோமேயானால் ஒட்டு மொத்த எம்.ஜி.ஆர் நகரும் அதைக் கடந்து நீடு செல்லும் சாலையும், அச்சாலையின் மற்றோர் மூலையில் இருக்கும் ஆறுமுகம் தீப்பட்டி ஆலையும் கூடத் தெரியும். அந்தப்பகுதியிலேயே வசதி படைத்தவர் என்பதால், பெரும்பாலும் அனைத்துக் கூட்டு முடிவுகளும் அவரிடம் வந்த பிறகே நடைமுறையாகும். அந்தப் பகுதிக்கான குடிநீர் குழாயும் முதலில் அவரது வீட்டில் மட்டுமே அமைக்கப்பட்டது.
காரைவீடு, குடிநீர் குழாய் என்று மட்டும் இல்லை, வளர்ச்சியின் அத்தனை அங்கங்களையும் முதலில் அடைந்தவர்கள் ராஜமாணிக்கத்தின் வீட்டார் தான். முதன் முதலாக அந்தப்பகுதியில் மோட்டார் வண்டி வாங்கியது, கலர் டிவி வாங்கியது, ஏ.சி வாங்கியது ஆங்கிலம் படித்தது, வெளிநாடு சென்றது என அனைத்தும் அவர்கள் வீட்டாராகத்தான் இருந்தார்கள். அவர் வீட்டில் வாங்கிய கிரைண்டரும் கூட ரொம்ப காலமாகப் பேசப்பட்டது. அப்பகுதி மக்களில் சிலர் அவரது மனைவியிடம் பேசுவது போலச் சென்று அந்த கிரைண்டரை எட்டிப் பார்த்து வருவது உண்டு. அன்று அந்த மக்களின் மதிப்பிற்குரிய பெரும் மனிதனாகத் திகழ்ந்தார் ராஜமாணிக்கம். அவரது பெயரும் கூட ஒருவகையில் காரணப்பெயராக இருந்தது.
இன்று எதுவும் அப்படி இல்லை. இந்த 30 வருட காலத்தில் நிலைமை முற்று முழுதாக மாறிவிட்டது. அப்பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டார்கள். பெரிய பெரிய வேலைகளுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். அவர்கள் திரும்பவும் வந்து பெரிய வீடுகளும் வண்டிகளுமாக அந்த எம்.ஜி.ஆர் நகரை அலங்கரிங்கத் துவங்கிவிட்டார்கள். ஒரு சில வீடுகளில் கார்களும் வரத்துவங்கிற்று. இவை அனைத்துமே படிப்படியாக ராஜமாணிக்கத்தை அழுத்தத் துவங்கியது. முன்னர் அவர் வீட்டில் வெகுநேரம் இருப்பது இல்லை. நிறையவும் வெளிவேலையாகத்தான் இருப்பார். அப்போது அவரைக் காண காத்துக் கொண்டும், “அண்ணாச்சி எப்ப வருவாங்கக்கா” என அவர் மனைவியுடன் கேட்டுக் கொண்டும் செல்வதற்கு ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இன்றும் அவர் வெளிவேலையாகத்தான் இருக்கிறார், அரிதாகத்தான் வீட்டிற்கு வருகிறார், ஆனால் அவருக்காகவோ, அவரது தயவுக்காகவோ யாரும் காத்துக் கொண்டு இருப்பதில்லை.
தனது பிடி தளர்வதைத் தாங்க முடியாத ராஜமாணிக்கம், சில சமயம் தன் இயலாமையை மறைக்கும் பொருட்டும், தனது அதிகாரத்தை நிறுவும் பொருட்டும் பொதுவில் குரலெடுத்துக் கத்துவது உண்டு. குப்பை சேகரிக்கும் துப்புரவு பணியாளர்கள், கூலி வேலை செய்யும் குடும்பத்தார், ஆதரவற்று வாடி நிற்போர் போன்ற தன்னை எதிர்க்கத் திராணியற்ற எளிய மக்களை இலக்காகக் கொண்டு கத்துவார். சில சமயம் அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைத் திட்டியும் தனது அகம்பாவத்துக்குத் தீனி போட்டுக் கொள்வதுண்டு. அவையெல்லாம் பழைய அதிகாரத்தைத் தருவதில்லை என்றாலும் ஒரு வகையில் அவரை ஆற்றுப்படுத்தியது. நிதர்சனத்தை ஏற்க மறுக்கும் மனது “இல்லை. இது இப்படியாக இல்லை” எனத் தன்னை ஏமாற்றிக் கொள்ளக் காற்றில் எழுதிக் கொள்ளும் உடன்படிக்கைகள் தாம் அவை.
25 வருடங்கள் முன்பு-ராஜமாணிக்கம் காரணப்பெயராக இருந்த காலம், இதே இடத்தில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு நிற்பார்கள். நகராட்சி சார்பில் குழாய் பதிக்கத் துவங்கியவர்கள் இந்தப் பகுதிக்கான குழாயை இவரது வீட்டின் வெளியில் தான் பதித்திருந்தார்கள். ஒட்டு மொத்த சனமும் அங்கே தான் முட்டிக்கு கொண்டும் மோதிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும். அதே பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கத்தின் தங்கைக்கும் அவள் குடும்பத்துக்கும் அதில் சிறப்பு அதிகாரம் உண்டு. அவர்கள் நினைத்த நேரம் பிடித்துக் கொள்ளலாம் அவர்களுக்கு போகத்தான் மற்றவர்களுக்கு. எப்போதும் போல அன்று அவர் தங்கையும் அவர் குடும்பமும் பிடித்து முடிக்கும் வரை காத்திருந்து பின் வரிசையாகப் பிடிக்கத் துவங்கினர். அவர்கள் குடங்களும் பணிகளும் மோதி எழுப்பிய சத்தமே ஒருவகை இரைச்சலை உருவாக்கியது. அது இயல்பிலேயே அந்த இடத்தைச் சண்டை நடப்பதாகக் காட்டும்.
மாரியம்மாள் வேலையும் பார்த்தது வீட்டையும் பார்த்து, குழந்தைகளையும் கிளப்பி பள்ளிக்கு அனுப்ப வேண்டியவள் என்பதாலும், இயல்பாகவே அனைவரிடமும் வஞ்சம் இன்றி பழகக் கூடியவள் என்பதாலும் அப்பகுதி பெண்கள் மத்தியில் அவள் மேல் நல்ல எண்ணம் உண்டு. அவசர அவசரமாக வந்து குடத்தை வரிசையில் வைத்து, தனக்கு அடுத்ததாக இருக்கும் லட்சுமியிடம் சொல்லிவிட்டு குழந்தைகளைக் கிளப்பவும் சமையல் செய்யவும் ஓடினாள்.
அவள் திரும்பி வருவதற்குள்ளாகவே அங்கு வந்து சேர்ந்திருந்த ராஜமாணிக்கத்தின் தங்கை குடும்பம் தனது அதிகாரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.
“என்ன ம்ம்ம் பிடிச்சிட்டீங்களா …. பிடிச்சிட்டா கிளம்புங்க … என்ன நின்னுட்டே இருக்கீங்க…
இந்தா அமலம் எத்தனை குடம் தான் பிடிப்ப நாலு தான்.. அடுத்த ஆளுக்கு வேணாமா…
.. என்ன லட்சுமியக்கா யார் குடம் இது? ஆள் இல்லாம குடம் மட்டும் கடக்கு… ”
யார் சொல்வதையும் கொஞ்சமும் கேட்காமல் அந்தக்குடத்தை எடுத்து வெளிய ஓரமாய் வைத்துக் கறார் பேர்வழியாய் தனது வேலையைத் தொடர்ந்தாள். பிள்ளைகளைக் கிளப்பி, அவர்களுக்கும் தனக்குமாய் சாப்பாடு கட்டிக் கொண்டிருந்த மாரியம்மாள் தண்ணீர் நியாபகம் வரவே குழாயடி நோக்கி விரைந்தாள்.
ராஜமாணிக்கம் வீட்டில் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குடத்தை எடுத்துப் தண்ணீர் பிடிக்கப் போன மாரியம்மாளிடம் ராஜமாணிக்கத்தின் தங்கை கடுமையாக நடக்கவே விவாதமாகத் துவங்கியது.
“யக்கா இங்க தான வச்சுட்டு போனேன்.. சொல்லிட்டு தானே போனேன். கேட்டுப் பாருங்க வேணும்னா.”
மாரியம்மாளின் வார்த்தைகள் அவளுக்கு மேலும் எரிச்சலூட்டியது. வாக்குவாதம் முற்றியது. இடையே வந்த ராஜமாணிக்கம் தனது பங்குக்கும் சில வார்த்தைகள் சொல்லவே. அதுவரை தான் நிகழ்த்திய அத்தனைக்கும் இன்னும் வலுவான அங்கீகாரம் கிடைத்தது போல குரலெடுத்துக் கத்திக் குடத்தை வீசியெறிந்தாள் ராஜமாணிக்கத்தின் தங்கை.
“வேண்டாம் உள்ள வாங்க” என்பதான பாவனையில் உள்ளிருந்து பார்த்த ராஜமாணிக்கத்தின் மனைவி, அவரது பார்வையின் நெடி தாங்காது வீட்டிற்குள் சென்றார். அத்தனைக்கும் சாட்சியாய் கண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தது அந்தக் குழாய்.
இது போலான சம்பவங்கள் எதையும் ராஜமாணிக்கம் நினைக்க விரும்பவில்லை. ஆனாலும் அந்நினைவுகள் அவரை ஆட்கொண்டு மேலும் மேலும் அரித்துக் கொண்டே தான் இருந்தன. அதிலிருந்து விடுபட நினைத்தவராய் சட்டென எழுந்து புக்கிங் ஆஃபீஸுக்கு கிளம்பினார். வண்டி ஆபீஸ் கட்டிடம் நோக்கி விரைந்தது. உயர்ந்த வீடுகளின் மத்தியிலான அந்த பயணம் அவரை மேலும் எரிச்சலூட்டியது.
ஆபீஸ் வாசலில் அவருக்காகவே காத்திருந்தார், அவர் நண்பர் மன்னார். மன்னாரும் மாணிக்கமும் கிட்டத்தட்ட சிநேகிதர்கள் போலத்தான். மன்னாரும் அதே எம்.ஜி.ஆர் நகர் தான். மன்னாரின் இருப்பு என்பது எப்போதும் ராஜமாணிக்கத்துக்குப் பிடித்தமான ஒன்று. முதலாளியைக் குறித்த அதிருப்தியைப் பகிர்ந்துகொள்ளும் தொழிலாளர்கள் மத்தியில் “முதலாளி நல்லவர்பா இதுக்கெல்லாம் அவர் என்ன செய்வார் பாவம். நாமதான் இன்னும் கடுமையா வேலை செய்யனும்” எனப் பேசும் ஆட்களை போலத்தான் மன்னாரும்.
அதற்காகவே அவர் இருப்பும் விசுவாசமும் ராஜமாணிக்கத்துக்குப் பிடித்துப் போனது.
சாவியை வாங்கி, ஆபீசைத் திறந்து fan போட்டுவிட்டு மன்னார், குமரனை அழைத்தார் …
“குமரா ரெண்டு டீ .. ”
ராஜமாணிக்கம் தன் தேக்கு நாற்காலியில் சாய்ந்து உக்கார்ந்தார். ‘ச்ச இந்த நாற்காலி இன்னும் கொஞ்சம் சாயக்கூடாதா’ அப்போது தான் ஓர் உண்மை உரைத்தது இறுகிப்போன திடமான கட்டை ஒருபோதும் வளைந்து கொடுக்காது. மீறி வளைப்பின் உடைந்து போகும் என …
டீ வந்து சேரவே, அதை வாங்கிக்கொண்டு வந்து மேசையில் வைத்து எதிர்த்து அமர்ந்தார் மன்னார்.
“என்ன அண்ணாச்சி. கொஞ்ச நாளா முகமே சரி இல்லை. எதுவும் பிரச்சனையா ? ” எனக் கேட்டவாரே தனது டீயை எடுத்துக் குடிக்கலானார்.
இவரிடம் சொல்லலாமா வேண்டாமா என மனப்போர் நடத்திக்கொண்டிருந்த மாணிக்கம் மேசையிலிருந்த தனது டீ கிளாஸை பார்க்கிறார். இருப்பு கொள்ளாது நிரம்பிய அதன் வெப்பம் ஆவியாய் மேலெழும்பி வந்தது.
கணினியில் இருக்கும் நேரம் என்றில்லை, மற்ற சாதாரண நேரத்திலும் இந்த செல்போன் விடுவதில்லை, அது வெறுமனே தனது இருப்பைக் காட்டவேணும் அவ்வப்போது சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கும். சில சமயம் நல்லதாய் தோன்றும் அதன் possessiveness சில சமயம் வெறுப்பை உண்டாக்கும். ஆனால் இப்போது அது அம்மாதிரியான விருப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. இம்முறை அது “அம்மா” எனக் காட்டிப் புன்னகைத்தது பக்கத்தில் அதே ஆட்டீனுடன்.
தனது வீட்டில் இருக்கும் நாய்க்குட்டியை தெருவின் முக்கு வரை வாக்கிங் அழைத்துச் செல்வதும் அது தனது உபாதைகளை முடித்த பின்னர் வீட்டிற்கு கொண்டு வந்து விடுவதும் மாரியம்மாள் அன்றாடம் செய்வது தான். காலை, மாலை இரவு என மூன்று நேரமும் அதை அழைத்துச் செல்ல வேண்டும். நேரம் தவறினாலோ, அழைத்துச் செல்ல மறந்தாலோ அது வீட்டில் எந்த ஒரு இடத்தையும் தனது கழிவறையாக்கிக் கொள்ளும் ஆபத்து உண்டு.
பெண் நாய்கள் தான் பெண்பாலும் எல்லை அமைத்து ஆட்சி செலுத்தும். தனது எல்லைகளில் மூத்திரம் பேய்ந்து பேணிப் பாதுகாக்கும். மற்ற பெண் நாய்கள் அந்த வாசத்தை வைத்து அந்த பகுதிக்குள் வரக்கூடாது. மீறும் பட்சம் பஞ்சாயத்துதான் ‘கடிதடி’ தான். மாரியம்மாள் அதை வாக்கிங் அழைத்துச் செல்லும் போதெல்லாம் சுற்றிலும் மோர்ந்து பார்த்து உறுதி செய்து கவனமாய் தனது எல்லைகளை குறித்து விட்டு, அங்கு ஓரத்தில் இருக்கும் மரத்தில் மலம் கழித்துவிட்டுச் செல்லும். பின்னர் அதைத் தான் கையோடு கொண்டு வந்த நியூஸ் பேப்பரில் அள்ளி குப்பையிலோ, அப்பாலுள்ள புதரிலோ போட்டு விடுவார் மாரியம்மாள்.
அவ்வாறுதான் அன்றும் நடந்தது. ஆனால் ஏற்கனவே, தனது பிடி தளர்வதை உணர்ந்த மாணிக்கத்தின் மனது, வழக்கம் போலத் தனது அதிகாரத்தை நிறுவ, வக்கிரம் காட்ட இலக்கு தேடித் திரிந்தது. வெறும் தண்ணீருக்காகத் தன் வீட்டில் பணிந்து நின்றிருந்த மாரியம்மாள்- தான் குரலெடுக்க அடங்கிய மாரியம்மாள்- தான் பார்க்கவே பெரிய வீடு கட்டிக் கொண்டு வாழ்வதும், செல்லப்பிராணியாக இந்த நாயை வளர்த்து வாக்கிங் வருவதும், அதைத்தான் பார்க்க நேர்வதுமே அவரது வக்கிரங்களை கீறிக் கிளறியது.
“ந்தா, ம்மா என்ன உன் இஸ்ட்டத்துக்கு நாய கூட்டிட்டு வர்றதா? அங்குட்டு உங்க வீட்டுக்கிட்ட வச்சுக்கணும். அங்கெல்லாம் இல்லாத இடம் இங்க தான் இருக்கா உங்களுக்கு”
“…”
சாதாரண உறுமலாய்த் துவங்கிய அவர் பேச்சு சத்தமான கர்ஜனையாக முடிந்தது. தனது குரல் எத்தனை தூரம் கேட்குமோ அத்தனை தூரம் தனது அதிகாரம் நிறுவப்படும் என்பதாக நினைத்தது அவர் மனம். அதன் விளைவு அப்போதே தெரிந்தது, அத்தனை பெரும்பாலானோர் வெளியே வந்து பார்க்காத் துவங்கினர். அந்தப் பார்வைகள் அனைத்தையும் அவர் வக்கிரம், தனக்குத் தீனியாக்கிகக் கொண்டது. அவர் மேலும் தொடர்ந்தார்.
“இனிமேல்லாம் இந்தப் பக்கம் கூட்டிட்டு வரக்கூடாது சொல்லிட்டேன். என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? அதுபாட்டுக்கு வீட்டு முன்னாடி பேண்டுட்டு போவுது? ஒழுங்கா வேற எங்கயாவது கூட்டிட்டு போங்க பாத்துக்கங்க.. இந்த பக்கம்லாம் வரக்கூடாது.”
“ஏன்ணாச்சி, நீங்களே சொல்லுங்க, எங்க எந்த நாய் இருந்தாலும் அதுக்கு நாங்க தான் பொறுப்பா?. சங்கிலி வச்சு கூட்டிட்டு வந்து கூட்டிட்டு போறேன் எனக்குத் தெரியாதா அதை எங்க விடணும் எங்க விடக்கூடாதுன்னு? தெருநாய் வந்து போறதுக்கெல்லாம் நான் எப்படி பொறுப்பாக முடியும்? என் நாய் தான் இருந்ததுன்னு எதை வச்சு சொல்றீங்க பாத்தீங்களா??”
சற்றும் எதிர்பாராது வாயடைத்துப் போனார். ராஜமாணிக்கம் இதை துளியும் எதிர்பார்க்கவில்லை. தானே மேடை கட்டி, தானே கூட்டம் கூட்டி, தானே அசிங்கப்படுவது என்பது எத்தனை முட்டாள்த்தனமான காரியம்…
“என்ன கத்துறீங்க. நாயை விட்டுட்டு பேச்சும் பேசுறீங்க? ம்ம்.. உங்க நாய் இல்ல, அந்த நாய் இல்ல ன்னு சொல்லிட்டு இருக்கீங்க. எந்த நாயா இருந்தாலும் நீங்க தான் அள்ளணும். ஒழுங்கா அள்ளிட்டு போங்க பாத்துக்கங்க”
“முடியாது. நீங்க என்ன முடியுமோ செஞ்சுக்கங்க…
நானும் சொல்லிட்டே இருக்கேன் எங்க நாய் இல்லன்னு. எதுவா இருந்தாலும் நான் தான் அள்ளணுமாக்கும்? நல்லா இருக்குல்ல நியாயம்..? நான் இனி அப்படித்தான் வருவேன் என்ன முடியுமோ செஞ்சிக்கங்க….”
பேசியவாறே நகர்ந்து சென்றாள் மாரியம்மாள். அத்தனை கண்களும் பார்த்து நிற்க. தனது அகங்காரம், ஆதிக்கம், அதிகாரம் யாவும் ஒரு பெண்ணால் உடைத்து எறியப்பட்டது பொறுக்காது; சுவற்றில் எறிந்த பந்தாய் வீட்டிற்குள் சென்றார்.
“நான் கூட அவர பெரிய ஆள்ன்னு தான்டா நினைச்சிட்டு இருந்தேன். நீயெல்லாம் சொல்லும் போது கூட அவர் அந்த நேரத்துக்கு அப்படி இருந்திருக்கார். ஆனாலும் பெரிய மனுஷன் தானன்னு நினைச்சுப்பேன் இத்தனை நாளும்.. கடைசியா அன்னிக்கு எந்த நாய் இருந்தாலும் நீங்க தான் அள்ளணும் னு சொன்னதும் எனக்கு கோவம் வந்துருச்சு.”
“ஹ்ம்ம் சரிதான். சரியா கேட்டுருக்கீங்க. பரவாயில்லையேம்மா… ஜம்முனு ஒரு கேள்வியை கேட்டு மூஞ்சிய உடச்சு விட்டீங்க அந்த ஆளுக்கு?”
“ஹா ஹா அன்னைக்கே உன்கிட்ட சொல்லணும் நினைச்சேன். ஆனா நானே அதுல இருந்து வெளியில வராம இருந்தேனா..? அதான் சொல்லலை. அப்பறம் ‘அப்பாட்ட சொன்னேன். அவங்க பரவாயில்லையே.. சரியா பேசிட்டியே ஒரு இடத்துல, நிஜமா நீயா பேசின? எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு போ.. ரொம்ப சரியா சொல்லிருக்க’ ன்னு சொன்னாரு. அப்பறம் தான் இன்னைக்கி உன்கிட்ட சொல்லணும் இருந்துச்சு சொல்லிட்டேன்.”
“செம மா. அப்பாவே சொல்லியாச்சா… அப்ப சரிதான் போங்க. இனியும் பயந்திட்டுலாம் இருக்காதீங்கமா, சும்மா நம்மளை அழுத்தினா நாம அடங்கணுமா… கேட்டு விட்ருங்க ..”
“ஹ்ம்ம் சரி. இதான் சொல்லணும் நினைச்சேன். சொல்லிட்டேன். வேலை கடக்கு.. வைக்கிறேன்”
உண்மையிலேயே உள்ளூர பெருமை தான். ராஜமாணிக்கத்தின் பேச்சு தந்த எரிச்சலைக் கடந்து அதற்கு அம்மா குடுத்த பதில் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவளுக்கும் தான் சரியாக பொதுவெளியில் பேசிவிட்டதில் மிகவும் பெருமிதம்தான். தனக்கென அடையாளமும் அங்கீகாரமும் சமூகத்தில் தானும் ஒரு இடத்தில் ப்ரசன்னமாவதும் அவளைக் கிளர்த்தி விடத்தான் செய்தது. அவன் வழக்கம் போல மழையை ரசித்துக் கொண்டிருந்தான்.
டீ மொத்தமும் ஆறிப்போய் விட்டிருந்தது. இப்போது அதில் ஆவியில்லை.
“இப்ப நாம என்ன சொன்னா, யாரு கேக்குறா மன்னாரு?
நல்லதுக்கு ஒரு வார்த்தை சொல்ல முடியுதா இப்பல்லாம்…. ஒரு வார்த்தை கேட்டதுக்கே எதித்து கத்திருச்சு அவம்பொண்டாட்டி. அதுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் பாரேன். ”
“…..”
“ஊரையே கூட்டிக் கத்திருச்சுடா…”
சொல்லிவிட்டு மீண்டும் தனது நாற்காலியில் சாய்ந்தார். அந்த அறை முழுவதும் அமைதியும் அழுத்தமும் ஆட்கொண்டது.
கடிகாரம் தனது உரையாடலைத் தொடர்ந்தது …
– தேவா
எழுதியவர்
- தமிழகத்திலுள்ள செங்கல்பட்டு நகரத்தில் வசிக்கும் தேவா ஒரு இடதுசாரி சிந்தனையாளர். தழல் அமைப்பைச் சேர்நதவர். மக்கள் நலன், அதற்கான வழி எனுமிடத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வியலை மார்க்சியத்தின் வழி நின்று பேசுபவராக திகழ்கிறார்.
இதுவரை.
- கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023புதிய யதார்த்தம்
- சிறுகதை31 January 2022கோடை மழை
- சிறுகதை14 July 2021காலத்தின் குரல் !