17 September 2024

சில நேரங்களில் நம்மிடம் ஓர் ஆத்மா இருக்கிறது.

நிரந்தரமாக ஒருவரிடமும்

அது இருப்பதில்லை..

 

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு வருடமும்

அது இல்லாமலே கடந்து போகலாம்.

 

சில நேரங்களில் குழந்தைப் பருவ பயம்

மற்றும் பேரானந்தத்தில் மட்டும்

அது சில காலம் தங்கலாம்.

சில சமயங்களில் முதுமையின் மலைப்பிலும்.

 

சாமானை நகர்த்துவது போல

அல்லது சுமையைத் தூக்குவது போல

அல்லது செருப்புக் கடியுடன் பல மைல் போவது போல

கடுமையான வேலைகளின் போது

அது அபூர்வமாகக் கைகொடுக்கும்.

 

இறைச்சி வெட்ட நேரும்போது

அல்லது விண்ணப்பங்கள் நிரப்பப்படும் போது

அது வழக்கமாக வெளிவரும்.

 

ஆயிரம் உரையாடலில்,

ஒன்றில் அது பங்கேற்கிறது

அதிலும் கூட,

அது மௌனத்தையே தேர்வு செய்யும்.

 

நம் உடல் வலியிலிருந்து ரணத்திற்கு மாறும் போது

வேலைநேரம் இதுவல்ல என அது நழுவுகிறது.

  .

அதற்கு விருப்பு வெறுப்புகள் உண்டு.

கூட்டங்களில் நாமிருப்பதை அது விரும்புவதில்லை,

நம்பகமற்ற நிலையில் அனுகூலமடைய நாம் செய்யும் செயல்கள்

அதை நலிவடையச் செய்கிறது

 

மகிழ்ச்சியும் துக்கமும்

அதற்கு இரண்டு வேறுபட்ட உணர்வுகளில்லை.

அந்த இரண்டும் இணையும் போதுதான்

அது நம்மை அணுகுகிறது.

 

நமக்கு எது பற்றியும் உறுதியில்லாத போதும்

எல்லாவற்றின் மீதும் ஆர்வம் காட்டும் போதும்

நாம் அதை நம்பலாம்.

 

பருப்பொருட்களுக்கிடையேயெனில்

யாரும் கவனிக்காத போதும் தொடர்ந்து வேலை செய்கிற

பெண்டுலங்களுடன் இருக்கிற கடிகாரங்கள்,

மற்றும் கண்ணாடிகளுக்கு அது சாதகமாக இருக்கிறது.

 

அது எங்கிருந்து வருகிறது அல்லது

அதன் புறப்பாடு எப்போதென்று அது சொல்வதில்லை,

அவ்வாறான கேள்விகளை அது எதிர்பார்க்கிறதெனினும்.

 

நமக்கு அது தேவைப்படுகிறது.

ஆனால் ஏதோ சில காரணத்துக்காக

வெளிப்படையாக அதற்கும்

நாம் தேவைப்படுகிறோம்.


விஸ்லவா  சிம்போர்ஸ்கா

தமிழில்: தி. இரா.மீனா

விஸ்லவா  சிம்போர்ஸ்கா:

கவிஞர்,கட்டுரையாளர்,மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முகம் கொண்டபோலந்து கவிஞரான விஸ்லவா  சிம்போர்ஸ்கா 1996 ல் நோபல் பரிசுபெற்றவர்.  நகைச்சுவை,முரண்பாடு,தத்துவம் உள்ளார்ந்த கவிதைகள்இவருடையவை. துல்லியமாக மனித வாழ்வையும் ,இயற்கையையும் கவிதைகள்  சித்தரிப்பதாக நோபல் குழு இவரை அடையாளப்படுத்தி உள்ளது.கவிதை பற்றி பதினைந்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள்

எழுதியிருக்கிறார். People on a Bridge , View with a Grain of Sand: Selected Poems , Miracle Fair, Monologue of a Dog  ஆகியவை அவருடைய கவிதைத் தொகுப்புகளில் சிலவாகும்.

மொழிபெயர்ப்பாளர்கள் : [ ஆங்கிலம் ]

  • Clare Cavanagh அமெரிக்க விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். சமகால போலந்து கவிதையுலகின் சிறந்த மொழிபெயர்ப்பாளர்.செஸ்லா மிலஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார்.
  • Stanislaw Baranczak விமர்சகர், ஆராய்ச்சியாளர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர். ஸேக்ஸ்பியரின் நாடகங்கள், எமிலி டிக்கன்சன், ஜான் கீட்ஸ் ராபர்ட் பிராஸ்ட் ஆகியோரின் கவிதைகளை போலந்து மொழியில் மொழிபெயர்த்தவர்.  PEN Translation Prize விருதை கிளாரேவுடன் இணைந்து பெற்றவர்.

எழுதியவர்

தி.இரா.மீனா
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x