
தூரப் பார்வைக்கு அமைதியாக விரிந்து கிடப்பது போலிருந்தது கடல். ஆனால் அவர்கள் அமர்ந்திருந்த அந்தப் பாறையின் மீது அது தன்னைப் புரட்டி அடித்து அடித்துக் குமுறிக் கொண்டிருந்தது. அவை ஒவ்வொன்றும் ஒரு புலம்பலாகத் தாமஸின் காதில் விழுந்து கொண்டிருந்தது. கண் எட்டும் தொலைவில் அமர்ந்திருந்த கேத்தரீன் தனது கால்களைக் கட்டிக் கொண்டு கடலை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு பெரிய ஆளுமை அவள். அதிகாரம் மிக்க அரசுப் பணியில் இருப்பவள். ஆனால் மிகச் சாதாரணமாக எந்தச் செருக்குமில்லாமல் அமர்ந்திருந்தாள். சூரியன் கீழிறங்கி வருவதும் அது கடலை இளஞ்சிவப்புக் குளமாக மாற்றி விட்டதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தாமஸ் அவளைப் பார்க்கும் போதெல்லாம் கடலின் ஓசை ஓலமாகக் கேட்பது போலிருந்தது. ‘என் பொருட்டு அவளுக்குத் தான் எவ்வளவு துயரம். பள்ளிப் பருவத்தில் பிரிந்தோமே அப்படியே இருந்திருக்கக் கூடாதா நான் ஏன் உன் வாழ்வில் வந்தேன் கேத்தி? நான் மட்டும் அப்போது கொடைக்கானல் வராமல் இருந்திருந்தால் நீ இந்த நேரம் உன் அன்னையின் ஆசைப்படி எங்கோ தேவனின் மடியில் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருந்திருப்பாய். இல்லை இல்லை தோழி நீ வல்லூறுகள் ஒரு சிலர் இருக்கும் அங்கே போய் எப்படியிருந்திருப்பாய்? அவர்களை எல்லாம் ஏன் நினைக்க வேண்டும் அதை விடவும் கொடூரத்தையல்லவா நான் உனக்குச் செய்து விட்டேன்.’ அலையொன்று விவேகனந்தர் பாறையை வேகமாக அறைந்து அவன் நினைத்ததை ஆமோதித்தது. அலைகளைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்த கேத்தரின்
“இந்த அலைகள் ஏன் இவ்வளவு ஆரவாரமாக இருக்குன்னு தெரியுமாத் தாமா?”
ஒருகணம் திடுக்கிட்டுத் திரும்பிய தாமஸ் மௌனமாகத் தலையாட்டினான். அவன் நினைவுகள் ஓயாமல் தொடர்ந்தது. ‘நான் என்னை மறக்க எனக்கு நடந்ததை மறக்கப் பெரும் முயற்சி செய்கிறேன் சகியே. ஆனால் என்னால் இயல்பை மாற்றிக் கொள்ள முடியவில்லை. எனக்குப் புனிதம் போதித்த புனிதத் தந்தையர் எல்லோருக்கும் அதே புனிதத்தை ஏன் போதிக்கவில்லை? இதோ இந்த அலைகள் போல அல்லாடும் வாழ்க்கை நம் இருவர்க்கும் விதித்தது எதனால் தோழி. நான் உன்னை உன் வாழ்க்கைக்கு ஒப்புக் கொடுக்கட்டும் என்று ஓடினேனே எங்கேங்கோ தேடி என்னை மீண்டும் உன்னோடு சேர்த்துக் கொண்டாய். திபேத்தின் எல்லையில் அவ்வளவு குளிரில் அத்தனை மலைகளைத் தாண்டி எப்படி என்னிடம் வந்து சேர்ந்தாய்ப் பெண்ணே. உன் அன்பின் முன்னே அந்தக் குளிர் மலையின் மிக உயர்ந்தச் சிகரத்தை விட உயர்ந்து நின்றாய். அதனாலே எதுவும் பேசாமல் உன் பின்னால் வந்தேன் இங்கே சேர்ந்தேன். நீ என்னைத் தேடித் திறிந்தக் கதை ரீட்டா அம்மா சொல்வாள் அப்போதெல்லாம் என்னை நான் சபித்துக் கொள்வேன். ஆனால் தோழி உன்னை விட்டுப் போனது உனக்காகத் தான் என்பது இன்றுவரை உனக்குப் புரியவே இல்லையே. இதோ சுடரும் இந்தச் சூரியன் எழுந்து வரத்துடியும் அந்தப் பௌர்ணமி நிலா, அடித்துப் புரண்டழும் அலைகள் எல்லாமே அறியும் என் மனம். நீ மறுபடி ஏன் என்னைச் சுமக்கிறாய்த் தோழி. நானொரு பாவ மூட்டை.’ மேற்கில் மறையும் சூரியனும் கிழக்கில் எழும் நிலாவும் கடலின் நிறத்தை தாமஸின் மன நிலையைப் போலவே குழப்பியடித்தன.
“நிலவும் சூரியனும் ஒன்றாகக் கடலருகே அமர்ந்திருக்கிறது பார்த்தா யார்க்கு தான் கொண்டாடத் தோணாது தாமா?”
தாமஸின் எதுவும் சொல்லவில்லை. இவ்வளவு நடந்த பின்னரும் கேத்திரினால் எல்லாவற்றையும் எப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடிகிறது என்று நினைத்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்பு கூடப் பைத்தியம் போல நடந்தேன். அதையும் சாதரணமா எடுத்துக்கிட்டா. அந்த அளவுக்கு மதிக்கத் தகுந்தவன் நானா என்று யோசித்தான் தாமஸ் ‘நான் சிறுவனாக இருந்திருக்கலாம் கேத்தி, உன் குழந்தைப் போல என்னைப் பார்த்துக் கொள்கிறாய். உன் அன்னை டெய்ஸி டீச்சரின் வார்ப்பு நீ அப்படியே அன்பாலானவள். என்னைப் போலச் சுயநலமியில்லை. அம்மாவும் அப்பாவும் பிரிந்த பின்னர் எனக்குக் கிடைத்த அன்புக்கு டெய்ஸி என்றே பெயரிடப்பட்டிருந்தது. அப்பாவுக்கு நான் அம்மாவின் பிள்ளை சைத்தான் அம்சம். வீடு நகரம் போலிருந்தது. வீட்டின் கதகதப்பில்லா என்னைக் காலம் என்னவெல்லாம் செய்து விட்டது. ரீட்டா அம்மா வீடு வந்து சேர்ந்த பின்னும் வீட்டின் மீதிருந்த பயம் குறையவில்லை. எனக்கு எதுவுமே மாறவில்லை. நீயும் டெய்ஸி டீச்சரும் மட்டுமே உலகம். உன் அம்மா தானே என்னைக் கொடைக்கானல் நரகத்திலிருந்து சென்னை நகர்க்கு இடம்பெயர்த்தியது. ஆனால் அதே டெய்ஸி அம்மா தானே உன்னையும் என்னைக்கும் இப்படி ஒரு சிறையில் மீளத்துயரில் மாட்டிவிட்டது. நீ பரிசுத்தமானவள் நான் நம்பினேன். ஆனா ஏதோ உன்னிடம் எந்தப் பாவமும் நெருக்க முடியாது. கிருஸ்மஸ் விழாவுக்கு நாடகம் ஒன்றை இயக்கும் பொருப்பிலிருந்தாய். அப்பாவின் மரணம் என்னைக் கொடைக்கானலுக்கு வரவைத்திருந்தது. உன் அழகிலோ ஆளுமையிலோ மயங்கியவன் உன்னைக் கேவலப்படுத்தினான். நீயும் என்னைப் போலவே காயப்பட்டாய் சகியே ஆண்டவன் பணியில் இருந்தவர்களுக்குள்ளும் சைத்தான் தாண்டவமாடுவது கொடூரம். ஆனால் எல்லோரும் அப்படியில்லை கேத்தி’ தாமஸின் கண்களில் நீர் வழிந்தது. கேத்தரீனுக்குத் தெரியாமல் அதைத் துடைத்துக் கொண்டான்.
“நீ ஏன் எதுவும் பேசமா இருக்கத் தாமஸ்?”
“…”
“ஶ்ரீ பாத மண்டபத்தில் நடந்ததை அங்கேயே விட்டுட்டு, அது சுவர்களால் அடைப்பட்ட இடம் நாம திறந்த கடல் கிட்ட வந்துட்டோம். எல்லாத்தையும் மறந்திடு”
“…”
“இந்தக் கடல் அமைதி பௌர்ணமி சூரியன் இதைப் பார்க்கும் போது நான் எல்லேமே மறந்துட்டேன். நான் எங்கோ மிதந்துகிட்டு இருக்கேன் தாமா. நீ மட்டும் ஏன் சோகத்தில் முக்கி எடுத்தவன் போலவெ இருக்க”
“கேத்தி நீ உண்மையாவே சந்தோஷமா இருக்கியா?”
“Of Course. அதெலென்ன சந்தேகம் உனக்கு இன்னிக்கி நமக்குப் பத்தாவது அனிவெர்சரி. பத்து வருட டுகெதர்னஸ் பத்து வருஷம் கழிச்சும் நாம் ஒன்னா இருக்கோமே”
பத்தாவது திருமணநாள். இது நம் வாழ்க்கையில் எந்தப் புதுமையைக் கொண்டு வரப்போகுது. திருமணமான முதல் வாரத்திலேயே உன்னை விட்டு ஓடிவிட்டேனே கேத்தி. அதன் பிறகு நாடோடியாக நான் சென்ற எல்லா இடத்தையும் நீ பின் தொடர்ந்திருக்கிறாய். கூடவே நம் ரீட்டா அம்மாவையும் டெய்ஸி அம்மாவையும் சமாளித்திருக்கிறாய். படித்து ஐ ஏ எஸ் அதிகாரிகாகவும் மாறியிருக்கிறாய். உன்னைப் பழித்த ஊருக்கு நல்ல உபகாரம் செய்திருக்கிறாய். அதோ தொலைவின் செஞ்சிவப்பாய்த் தெரியும் அந்தக் கடலில் நெளிவுகளைப் போலச் செந்நிற ஆடையணிந்தத் துறவிகள் நடுவே நானுமிருந்த ஒரு புகைப்படம் அதைப் பிடித்துக் கொண்டு திபேத் வரை வந்து என்னை உடன் அழைத்து வந்து சில மாத காலமே ஆனது. இதை எப்படி அன்பே பத்து வருட உடனிருத்தல் என்று உன்னால் சொல்ல முடிகிறது. நீ என்னுடன் இருந்தது பத்துவருடம் தான். ஆம் நீ பிறந்ததிருந்து என்னுடன் இருந்தவள் தானே. வீடு தான் வேறு ஆனால் ஒன்றாகவே இருந்தோம். உனக்குப் பத்து வயது. நீ ஆறாவது படித்தாய் அப்போது நான் எட்டாம் வகுப்பு என் மேல் விழுந்த பாவக் கணக்குக்கு அப்பா கொடுத்த சவுக்கடியில் காய்ச்சல் கண்டு இறங்க இருந்தவனை டெய்ஸி அம்மா தானே சென்னைக்குக் கொண்டு சென்று காப்பாற்றினார். அங்கேயே படிக்க ஏற்பாடும் செய்தார். அங்கிருந்து வேலை வெளிநாடு என்ற கனவோடு மாநிலம் கடந்து போய்விட்டேன். உழ்வினை சகியே அந்தச் சம்பவம் நடந்த போது நானும் கொடைக்கானலில் இருந்தது. விதி எப்படி முடிச்சிட்டுவிட்டது. நமக்கு நடந்தது திருமணமே இல்லை. இதற்குப் பத்தாம் வருடக் கொண்டாட்டம் ஒரு கேடு என்று தாமஸ் நினைத்த நேரம் கடலின் செந்தழல் முற்றிலும் நீங்கிப் பௌர்ணமி நிலவொளியில் பாற்கடலாகத் தழும்பிக் கொண்டிருந்தது. சூரிய ஒளி விட்டு நீங்க மனமில்லாமல் பௌர்ணமி நிலவை வெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
கொடைகானலுக்குக் கேத்ரீனிடம் வாக்கு அளித்தது போல வந்து சேர்ந்த பின்னர் அவனுள் பழையபடி அவளோடும் குடும்பத்தோடும் ஒட்ட முடியவில்லை. ஏன் வந்தேன் என்று நினைத்தவனை அவனாகத் தேறட்டும் என்று கேத்தரினும் ரீட்டாவும் விட்டிருந்தார்கள். அவனை ஏதாவது செய் என்று உந்தித் தள்ளிக் கொண்டேயிருந்த போது முன்னர் வேலைப் பார்த்த நிறுவனத்தின் உதிரி பாகங்களைச் செய்யும் தொழில்சாலையொன்றை சிறிய அளவில் தொடங்கினான். அதில் ஒரு இயந்திரம் போலவே இருந்தவன், அவனை மாற்ற வேண்டிக் கேத்ரீன் தான் நடத்திக் கொண்டிருந்த பயிற்சிப் பள்ளியை வார இறுதியில் மட்டுமில்லாது தினமும் மாலையில் நடக்கும் வண்ணம் பெரிதாக்கினாள். வாரநாட்களில் அவளால் பயிற்சித் தர முடியாது என்று சொல்லி அவனை அதில் ஈடுபடுத்தினாள். ரீட்டாவும் தன் பங்குக்கு நர்சரி தோட்டத்தை இன்னும் விரிவாக்கி மேலும் அரிய பூக்களைப் பதியனிட அவனை வேண்டினாள். அதையும் தாமஸ் செய்தான். பூமி போல ஓயாது சுற்றிக் கொண்டிருந்தான். மெல்ல மெல்ல இயல்புக்குத் திரும்பியவன் பெரும்பாலும் அலுவல் பொருட்டு ஊர் ஊராகக் கேத்ரின் போகும் போது சில நாட்கள் வண்டியோட்டிக் கொண்டு வருவான். அது மட்டுமே இருவரும் சேர்ந்திருக்கும் மகிழ்வானத் தருணங்களாக மாறிப் போனது. சூழல் நன்றாக மாறுவதைப் பார்த்த ரீட்டா பத்தாவது திருமண நாளை கொண்டாட வேண்டுமென்று சொன்னப் போது கேத்ரினுக்கும் சரி அது தாமஸுக்கு ஒரு மாறுதலையும் ஆசுவாத்தையும் கொடுக்குமென்று நினைத்தாள். பத்தாவது திருமண நாள் என்பதை முதலில் கொண்டாட்டமாக நினைக்காமல் ஏதோ புதிய ஒன்றைத் தொடங்கும் நாள் போலவே தாமஸ் நினைத்து அதை எதிர்பார்த்துக் காத்திருந்தான். கொடைகானலின் குளிராடையோடு எல்லாப் பழைய நினைவுகளையும் கட்டி வைத்துவிட்டுக் கன்னியாக்குமரி வருகிறோம் என்று அவன் நினைத்ததற்கு மாறாக எல்லாம் தலைகீழானது இங்கே.
“கேத்தி நீ எவ்வளவு பெரிய ஆளுமை ஆனா”
“தாமா இந்த அழகான சூழலை ரசி. மத்தத பிறகு பேசுவோம்”
சூழலை ரசிப்பதா எனக்குள் நான் எவ்வாறு உடைந்துப் பொடிப்பொடியாகப் போயிருக்கிறேன் இப்போது என்று தெரியுமா இதுவரை உணர்ந்தது எதுவுமே பெரிய துன்பமில்லை என்பது போலொரு என்று எண்ணம் என்னுள் உலழ்கிறது. இதற்கு முன்னர் எப்போதும் எந்த அலைகள் போர்முழக்கம் போலத் தவறு செய்தவனை எதிர் நிறுத்திக் கேள்விக் கேட்பது போல உணர்ந்திருக்கிறாயாக் கேத்தரின். இங்கே கிளம்பி வர வேண்டிப் பயிற்சி மாணவர்கள், உனது வாகன ஓட்டி, ரீட்டா ஏன் நமது நர்சரித் தோட்டத்து நன்மலர்கள் எல்லாமே எந்த அளவு நேர்மறை அலைகளைப் பரப்பியதோ அந்த அளவுக்கு இப்போது எதிர்மறை அதிர்வுகளை இந்தக் கடலும் அலைகளும் மேவி கொள்கின்றன. ஶ்ரீ பாத மண்டபத்தில் நிகழ்ந்தது உனக்குத் தெரியாததா? அதில் எது என்னை என்ன செய்துவிடும் என்பது போல இல்லை ஒன்றுமில்லை என்பது போல இருக்க உன்னால் எப்படி இருக்க முடிகிறது. மணநாள் இன்று காலையில் எழுந்த உடன் நினைத்தேன் உன்னை எப்போதையும் இன்று மகிழ்ச்சியாகப் பார்க்க வேண்டும் என்று, உனக்கு இன்று அணியக் கொடுத்த ஆடையை நெய்யும் இடத்திற்கே சென்று வாங்கி வந்தேன் என்பதைக் கேட்டு மகிழ்ந்தாயே, நம் நர்சரியில் இல்லாத மலர்களாகத் தேடி எடுத்துப் பூங்கொத்தைக் கொடுத்தேனே காலை உணவு அதை நானே தயாரித்தேனே ஒவ்வொன்றுக்கும் மகிழ்ந்தாய் அதைப் பார்த்த எல்லாக் கணமும் நானும் மகிழ்ந்தேனே. அதோடு நின்றிருக்கலாம் என்று நினைக்க நினைக்க அவனுள்ளே கொடைக்கானலில் இருந்து இந்தக் கணம் வரை நிகழ்ந்தது எல்லாம் மனம் முன்னே மீண்டுமொரு விரிந்தது.
மாலை அவர்கள் வந்து சேர்ந்த போது கடற்கரையில் கூட்டம் அலை மோதியது. விவேகனந்தர்ப் பாறைக்குச் செல்ல படகுகொன்றில் அவர்களை ஏறி விவேகனந்த பாறையை அடைந்தனர். தியான மண்டபத்துக்கு எதிரே கோவில் போலிருந்த மண்டபத்திலும் கூட்டம் கூடியிருந்தது. அங்கே வடகிழக்கு மூலையில் வயதான பெண்மணி அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றி அமர்ந்து கொள்ள நான்கு பேருக்கு இடமிருந்தது. அவளிடம் எல்லோரும் ஏதோ குறிப்புகளைக் கேட்டுக் கேட்டு நகர்ந்து கொண்டிருந்தார்கள். வெளியே இருந்த கூட்டத்துக்குக் கொஞ்சம் குறைவாக இருந்த அந்தக் கூட்டம் ஒரு வரிசையில் நின்று அந்தப் பெண்மணியிடம் சென்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு பின்னர் உள்ளே தாயார் பாதத்தைச் சென்று பார்வையிட்டு வந்தார்கள். மூலையில் அமர்ந்த அந்தப் பெண்மணியின் தலை சிடுக்குப் பிடித்துப் பரந்து சுருண்டிருந்தது. பலநாட்களாக ஒரே உடையை அணிந்திருந்தது போலிருந்தது. அது கடல் நீரில் ஊறிய துணியை நன்றாக உலர்த்தாத போது எழும் மெல்லிய வாடை அந்த இடத்தில் பரவியிருந்தது. அதை மீறிய தெய்வீக மணம் ஏதோ அந்த மண்டபம் முழுவதும் கமழ்ந்தது. தாயார் பாதத்தைச் சுற்றி மிக மெல்லிய பல்வேறு மலர்களால் ஆன மாலையிலிருந்து எழும் நறுமணத்தோடு அந்தச் சுகந்த மணம் கலந்து வீசியது.
கூட்டத்திலிருந்தவர்கள் அந்தப் பெண்மணியைப் பற்றிய தகவலை யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார். “அம்மா ஓவ்வொரு பௌர்ணமிக்கு மட்டும் இந்த இடத்துக்கு வருவாங்க. மத்த நாள் எல்லாம் எங்க இருக்காங்கன்னு தெரியாது. மத்த நாள் என்ன பௌர்ணமி அன்னிக்கி அந்த அம்மா இந்த ஶ்ரீ பாத மண்டபத்துக்கு எப்படி வந்து போறாங்கன்னு கூட யாருக்கும் தெரியாது. படகுல வர்ரதில்லை. எல்லோரும் போன அப்பறம் கூடக் கொஞ்ச நேரம் இந்தம்மா தவம் பண்ணிகிட்டு இருக்கும். செக்யூரிட்டி வந்து திட்டும் போது தான் எந்திருக்கும். அப்பறம் அப்படியே நடந்து இந்த மண்டபத்துக்குப் பின்னாடிப் போய் மறைஞ்சிடுமாம். பலமுறை செக்யூரிட்டி இது பின்னாடி போனா கூடக் கண்கட்டு வித்தையாட்டாம் நொடியில் காணாம போயிடுமாம். ரொம்ப அருள் நிறைஞ்ச அம்மன் அந்தக் கன்னியாகுமரி அம்மன் தான் இந்த அம்மான்னு பரவலாக எல்லோரும் நம்பறாங்க” என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னும் பலரும் அந்த அம்மாவைப் பற்றிப் பல அதிசயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
தாமஸ் அவர் சொல்லிக் கொண்டிருந்த அம்மிணியைப் பார்த்தான் அவனுக்கு அவரை எங்கோ பார்த்தது போலவே இருந்தது. அந்தப் பெண்மணிக் கண்களை மூடியிருந்தாள். கண்களைத் திறந்த போது அவளாகத் தாமஸை பக்கம் திரும்பி அருகே அழைத்தாள் கேத்தரீனும் அருகில் சென்றாள் பிறருக்கு ஏதோ குறிப்புகள் சொல்லும் அந்த அம்மாவின் கண்கள் கேத்தரீனைப் பார்த்ததும் எதுவும் சொல்லாமல் தலையில் கை வைத்து ஆசி புரிந்தாள். அவள் கண்களின் கருணை கூடியது. தாமஸைப் பார்த்துத் தனது இடது கையை ஒருதிசை நோக்கி இதோ உன் கூட இருக்காளே. இவ இங்கே ஒத்த பாதத்துல நின்னு தனுமால்யனுக்காகத் தவமிருக்காளே மூக்குத்திக் கன்னி, கன்னியாகுமரி. அந்தத் தவம் இவள் கண்ணுல தெரியுது. அவ கடல் கிட்ட தான் இருக்கா. ஆனா அலைகள் அவள் பாதம் வரை வந்து சேரல. அதான் பாரு இந்தக் கடல் கொதிக்கிது. அவ கன்னிமைய தாங்க முடியாம கடல் அலை அலையா அலறி துடிக்கிது. போ சீக்கிரம் இங்கிருந்து போயிடு. அம்மனோட சாபத்துக்கு ஆளாயிடாத. இந்தப் பூமிக்கு அந்த ஒரு கன்னி போதும். எந்திரி ஓடு என்று தாமஸை விரட்டினாள். அதுவரை இருந்த மனக்குதூகலம் எங்கோ ஓடிவிட்டது போலிருந்தது. அந்த அம்மா சொன்னது புரிந்தும் புரியாதது போலிருந்தது. மேலும் அந்த அம்மா சொன்னாள். “தீ எரிய ஆரம்பிக்கும் போது தண்ணி ஊத்தி அணைச்சிட்டா அது எரியாது. கட்டைய தண்ணில ஊறப் போட்டதுக்கு அப்புறம் எப்பவும் அதை எரியூட்ட முடியாது. அது எரியாது ஆனா அதே கனல் உள்ளே கருமை பூண்டு இருண்டு இறுகிப் போயிடும். அதுக்குள் எரிய துடிக்கிற தீ என்னெல்லாம் பண்ணும்ன்னு எனக்குத் தெரியும் தாமஸ். கிறுக்குப் பிடிச்ச தீ அது எரியாம உங்க அம்மாவ எரிச்சிடுச்சி. அதே தான் உனக்கு நடந்திருக்கு. சரி ஆயிடு சரி ஆயிடும். நீயே தீயே எரி எரி எல்லாம் எரி பண்ண பாவத்த எல்லாம் பஸ்பமாக்கு. சரியாடும்”
தாமஸுக்கு அங்கே உடனடியாக ஓடிவிட வேண்டுமென்று தோன்றியது. அவனால் கொஞ்சமும் தாங்க முடியவில்லை. இந்த நிலைக்கொள்ள நிலைத் தானே என்னை எங்கெங்கோ விரட்டியது. என்னை ஏன் பின் தொடர்ந்து வந்து இங்கே கூட்டிக் கொண்டு வந்தாய் கேத்தி? நானொரு சபிக்கப்பட்டவன். என்னால் யாருக்கும் எந்த நன்மையுமே இல்லையே. இந்த அம்மா சொல்வது போல நான் மாபெரும் பாவி. உன்னைத் தவிக்கவிட்டேன். இப்போதும் அப்படியே தான் இருக்கிறேன். எப்படி மாற்றுவது. அப்படியே ஓடிச் சென்று இந்தக் கடலில் குதித்தால் என்ன? அதுவும் தவறு என்றல்லவா எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. குற்ற உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட இந்த மதத்தில் ஏன் பிறந்தேன் என் அன்னைக்கு ஏன் பிறந்தேன். என் அன்னை என்னை விட்டுச் சென்றதும் நான் ஏன் இன்னும் மீதியிருந்தேன். எங்கே சென்றாலும் எவ்வளவு தூரம் ஓடினாலும் என்னிடமிருந்து எங்கேயும் ஓடவோ ஒளியவோ முடியவில்லையே என்று நினைத்தான் தாமஸ் அவன் எந்தத் தருணத்தில் அவன் சுயக் கட்டுப்பாடு இழந்து “அய்யோ என்ன செய்வேன்” என்று வாய்விட்டு ஓலம் எழுப்பினான் என்று அவனுக்கே புரியவில்லை. கூட்டமாக இருந்தவர்கள் எல்லாம் அவன் நிலைக் கண்டு ஒதுங்கி அவனுக்கும் கேத்ரீனுக்கும் வழி விட்டனர். அவனை அந்தக் கல்லில் ஓரம் கொண்டு வந்து அமர்த்தினாள் கேத்ரீன். யாரோ தண்ணீர்க் கொடுக்க அதை அவனுக்குப் புகட்டினாள்.
“தாமஸ் உனக்கு என்ன ஆச்சு”
“கேத்தி உனக்கு நான்…?”
“என்னுடைய எந்தத் துயரத்திலும் உடனிருப்பவன்”
“அது போதுமா அந்த அம்மா சொன்னது கேட்ட இல்ல.”
“கன்னியாக்குமரி நினைச்சிருந்த இந்தா இருக்கத் தனுமால்யனை அடைய முடியாத என்ன?”
“என்ன சொல்ற நீ”
“கன்னிக்கு வைராக்கியம். தாயார் பாதம் தவமிருந்தால மட்டும் வழிபாடுக்கு உரியது இல்ல”
“…”
“அவளோட வைராக்கியம். தோழனே எங்கே நின்றாலும் எந்த மாயையில் மயங்கி நின்னுட்டாலும் நான் உனக்காக நின்ற இடத்திலேயே நிற்பவள் என்று சொல்வதால”
“என்ன கேத்தி சொல்லற உலகோட அடிநாதம் உயிரினத்தின் தொடர்ச்சி சிவனும் சக்தியும் சேர்ந்திருக்கிறது தானே.”
“அவங்க சேர்ந்து தானே இருக்காங்க ஒரு தொலைவில் இருந்து ஒருவரை ஒருவர் ரசிச்சிக்கிறதும் உடனிருத்தல் உயிர்த்திருத்தலின் ஆதாரமில்லையா?”
“சரி தான் ஆனா”
“ நீ கொஞ்ச நேரம் அமைதியா இந்தக் கடலையும் சூரியன் சந்திரன் இரண்டையும் பாரு. மனசு அமைதியாடும். நான் கொஞ்சம் தள்ளிப் போய் உட்காந்துகறேன். கூட இருந்தா புலம்பிக்கிட்டே இருப்ப. கொஞ்சம் நீ செட்டில் ஆனதும் சொல்லு கிளம்பலாம்”
“என்னால அமைதியா இருக்க முடியல இந்தக் கடல் அலைகள் அதன் சத்தம் என்னைக் கொல்லுது”
கேத்திரின் அதைக் காதில் வாங்காதவள் போல எழுந்துச் சென்று அவன் பார்க்கும் தொலைவில் அமர்ந்துக் கொண்டாள். கூட்டமெல்லாம் குறைந்திருந்தது. கண் காணும் தொலைவில் அமர்ந்தாள் கேத்தரீன். தனது கால்களைக் கட்டிக் கொண்டு கடலை ஆழமாகப் பார்க்கத் தொடங்கினாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த தாமஸ் அவள் வாழ்வில் நிகழ்ந்தது எல்லாம் மனதுள் புரண்டுப் புரண்டு எழுந்தது. நெடுநேரம் பழைய நினைவுகளை நினைத்து அவன் மனம் முழுவதும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. எவ்வளவு இனிமையை இதுவரை அனுபவித்ததில்லையே என்று நினைத்தது எல்லாமே நொடி நேரத்தில் மாறிவிட்டதே. இங்கே வரும் வரை கூட இப்போது மண்டையைக் கடையும் எந்தச் சிக்கலும் இல்லாது இருந்தான். ஏதோ பித்துப் பிடித்தவன் போல, உலகமே தன்னை மட்டுமே உற்றுப் பார்ப்பது போல உடல் குறுகி அமர்ந்து விட்டான். இன்னும் எவ்வளவு நேரம் நினைத்தழுத்தாலும் பழையதை மாற்ற முடியாதே. சடை முடியோடு தீராதத் தாய்மையோடு இருந்தாளே தாயார் பாத மண்டபத்தில் பார்த்தப் பெண்மணி அவள் சொன்னது போல எல்லாவற்றையும் எரியாத் தீக் கொண்டு பஸ்பமாக்கி விடுவேண்டும். “நீயே தீயே எரி எரி எல்லாம் எரி பஸ்பமாக்கு. சரியாடும்” என்று வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினான்.
தாமஸுக்கு உடலுக்குள் ஏதோ ஒன்று பட்டென்று அறுந்தது. உடல் வேகமாக நடுங்கத் தொடங்கியது. ஆனாலும் அந்தப் பாறை வெடித்து அவனை விழுங்கிச் செரித்தால் என்ன என்று நினைத்தான். ஏங்கி அழுகை வரவது போலிருந்தது. ஆனால் அடக்கிக் கொண்டான். நீண்ட நேரம் அவன் அமைதியின்றித் தவித்ததைப் பார்த்த போது கேத்ரீனுக்குப் பதற்றமாக ஆனாலும் அவள் அருகில் வரவில்லை. அவன் உடைந்து மறுபடி ஒன்று சேர்வது நல்லது என்று நினைத்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தாமஸ் மனம் நிலையில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. பிறந்ததிலிருந்து பட்ட ஒவ்வொரு வலியும் மறுபடி அவன் முன்னே உருபெற்று வந்து ஒவ்வொன்று கோர தாண்டவம் ஆடுவது போல நினைத்தான். கண்களில் கண்ணீரை அதற்கு மேலும் தடுக்க முடியவில்லை. மீளாத்துயரத்தில் இருப்பவன் போல இருந்தவன் அழுகை ஒருவழியாக ஓய்ந்த பின்னர்ப் புதிதாகப் பிறந்தது போல இருந்தது. கண் முன்னாடி தகதகக்கும் பொன்னொளி வீசும் கடலும் அதில் உலவும் கோடானகோடி உயிர்களும் மயக்கும் பௌர்ணமி. அருகே அன்பானவள் சூரிய ஒளியாய் பிரகாசித்தாள். மனம் மெல்ல அமைதியானது. ஆமாம் கேத்தி சொல்வது போல இவ்வளவு அழகான சூழல், அவளருகே சென்று அமர்ந்தான்.
“அந்த அம்மா சொன்னது போல நீ தீயா சுடர வேண்டியவ. நான் உன்னிடம் வந்து சேராமல் இருந்திருக்கனும்.”
“நான் இப்போதும் சுடர்ந்துகிட்டு தான் இருக்கேன் தாமோ. என்னைக் காயப்படுத்தினவங்களுக்குப் பதிலடியா சுடர்ந்துகிட்டு தான் இருக்கேன். நீ தான் எனக்கு நல்லது பண்றேன்னு நினைச்சிட்டு எங்கோ போயிட்ட. ஆனா எனக்கு நடந்து எதுவுமே கெடுதல் இல்லைன்னு உனக்கும் புரியனும்ன்னு தான் உன்னைத் தேடிக் கண்டுபிடிச்சேன்.”
“அதுக்கு நீ… இப்படியே… ?” தடுமாறினான் தாமஸ்,
“தாமஸ் மறுபடியும் ஆரம்பிக்காத”
“இல்லை என்னாலே உனக்கு எந்த நிம்மதியும் தரமுடியலையே”
“ஏன் இவ்வளவு அலங்கார வார்த்தை? நிம்மதி ஆறுதல் திருப்தி இதெல்லாம் உடல் சேர்ந்தா தானே? சூரியனும் சந்திரனும் அமிழ்ந்தெழ கடலடி போதாதா அப்ப கடல் எவ்வளவு அழகாது பாரு”
“அது தான் நானும் சொல்றேன் இந்தக் கடல் போல உன் வாழ்க்கை ஆக வேண்டாமா கேத்தி.”
“ஆகும் காத்திருத்தோம்.” என்று தாமஸ் அவள் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டான். நிலவின் பொலிவேறுவதைக் கடல் அடியில் அமிழ்ந்தச் சூரியன் பார்த்துப் பூரித்தது.
எழுதியவர்

-
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதிதொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் இயங்கி வரும் லாவண்யா சுந்தரராஜன் ‘சிற்றில்’ என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார்.
நீர்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை,அறிதலின் தீ, மண்டோவின் காதலி ஆகிய கவிதைத் தொகுப்புகளையும்,
“புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை”, "முரட்டுப் பச்சை", "நீல மிடறு", "அதே ஆற்றில்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் “காயாம்பூ” நாவலையும் இதுவரை எழுதியுள்ளார்.
இதுவரை.
கதைகள் சிறப்பிதழ் 202523 January 2025உடனிருத்தல்
கதைகள் சிறப்பிதழ் 2023 - II3 September 2023தாமதம்
சிறுகதை24 April 2023சிவப்பு