ஒரு மகோன்னதமான சித்திரத்திலிருந்து கடந்த காலத்தின் வாழ்வை சிலாகித்துக் கொண்டிருக்கும் மனிதத் திரளுக்குள் எத்தகைய அவலங்களுக்கு நடுவிலும் எவ்வளவுதான் சீரும் சிறப்புமாக வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தாலும் வரையப்பட்ட சித்திரம் என்னவோ அகதிகள் என்றால் ஒரு முகச்சுழிப்போடு கடந்து செல்லும்படியானதாக இருக்கிறது. பெரும்பாலும் தமிழகத்தில் இந்த அகதிகள் முகாம்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, சுடுகாட்டில், பராமரிப்பற்ற கோழிப் பண்ணையில், குடோன்களில் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டொரு முகாம்களே நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் அல்லது முகாம்களுக்கு அருகாக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டிருக்கும்.
எப்பப் பார்த்தாலும் இந்த நெடுஞ்சாலை ஆபத்தானதாகவே இருக்கிறது. அருகில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமில் வாராவாரம் கண்ணீர் அஞ்சலிப் பதாகைகள் படபடத்துக் கொண்டிருக்கும். அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சொல்லவே வேண்டியதில்லை. ஒரு ஞாயிறுதானும் நல்ல ஞாயிறாக நிறையாதா என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கவே செய்கிறது. கடந்த ஞாயிறன்று சுப்பரின்ர மோன் சின்னானதும், அந்தோனின்ர கடைசி மோன் ராபர்டினதும் உருக்குலைந்த உடல்களை அப்பளமாய் நொறுங்கிக் கிடந்த உயர்ரக மோட்டார் சைக்கிளோடு அள்ளிச் சென்றது பற்றியே முகாமில் கதை. அடுத்த விபத்து நேரும்வரை தொடரும் உரையாடல். அதிவேகம், மதுபோதை என்பவை காரணம் என காவல்துறையும், நாளேடுகளும் செய்திகளாக கடந்துவிடுகின்றன. முகாமுக்கு அருகாமையில் இருக்கும் காலனியிலும் கண்ணீர் அஞ்சலிப் பதாகைகள் முளைவிடத் துவங்கின. புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையால் இந்த நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகரித்திருக்கிறது என மதுக்கடையை மூடச்சொல்லி போராட்டங்களும் சம்பிரதாயமாக நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
வாழ்க்கையில் துயரங்கள் வந்து போவது சகஜமானதே. ஆனால் இந்த முகாம்களுக்குள் துயரமே வாழ்க்கையாகி நகர்கிறது. நேற்றுக்கூட குடி நோயால் இறந்தவனின் இறுதிக் கிரியைகள் நடந்துகொண்டிருந்தது. இப்படி இளசுகளை இந்த அகதிகள் முகாம் இழந்து வருவது அவலத்திலும் பேரவலம்.
கதை சொல்லி தூங்க வைத்த ஆச்சிக் கிழவி விடிகாலையிலேயே போட்ட கூப்பாட்டுச் சத்தத்தில் எல்லோரும் விழித்துக் கொண்டனர். யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும் வேட்கையில் பலாலியால் செல்லடித்தபடி அச்சுவேலிக்குள் நுழைய சில நாட்களாக ராணுவம் முயற்சித்துக் கொண்டிருந்ததில் உறக்கத்தை இழந்த சனங்கள் ஆவரங்கால் பள்ளிக்கூடத்திலும் வயல்கரைப் பிள்ளையார் கோயில் மடத்திலும் இரு நாட்களாக கொஞ்சம் நிம்மதியாக உறங்கி வந்தனர். இனி எப்போதும் இந்த ஆலயத்துக்கு வரப்போவதில்லை என உறுதிபூண்டவளை போர்ச்சூழலும், பாசமும் நெட்டித் தள்ளவே செய்தது. தன் சேலை முடிப்பில் எப்போதும் பேரனை முடிஞ்சு வைத்து நித்திரை கொள்ளும் தவம் ஆச்சி தன் பேரனைக் காணாமல்தான் அப்படிக் கூப்பாடு போட்டு ஒப்பாரி பாடத் துவங்கி விட்டாள்.
நேற்று இரவு பொடியள் படம் போட்டதில் தவம் ஆட்சியின் பேரன் சுகனும் இன்னும் இரண்டொரு சிறுவர்களும் காணாமல் போயிருந்தது அடுத்தடுத்துக் கேட்ட கூப்பாட்டில் தெரியவும் தங்கள் தங்கள் பிள்ளைகளை பருந்துகளிடமிருந்து காக்கும் தாய்க் கோழிகள் இறுக்கமாய் அணைத்துக் கொண்டனர்.
கூட்டமான இடங்களில் படம் ஓட்டி சின்னப் பொடியன்களை இயக்கத்திற்கு சேர்ப்பது அதிகரித்து வந்த நேரம் அது. தெரு நாடகங்கள் போட்டும் சின்னப்பொடியன் பொட்டையளின்ர மனசுக்குள் தேசப்பற்று ஊட்டப்பட்டு இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதும் என சமீப காலமாக அதிகரித்து வரும் நிகழ்வாகிவிட்டதை நினைத்து பதற்றத்துடன்தான் ஆச்சி இருந்தாள். விடுதலை எனும் வேள்வித் தீயில் தங்களை ஆகுதியாக்கத் தயங்காதவர்களா இருந்தார்கள் இளையவர்களும்.
தேசியம் எனும் ஒற்றை வேட்கையில் வயது பாகுபாடின்றி நடு கற்கள் நட முடியாத படிக்கு எங்கும் மரணத்தின் ஓலங்கள் கேட்கும் பூமியாகியது அழகிய இச்சிறுதீவு. என்ன செய்வது பூக்கள் மலர்வதும் உதிர்வதும் தினங்களின் நிகழ்வாதல் போல் போர்நிலத்தில் மனிதர் வாழ்வும்.
நீல வானில் வெண்பஞ்சு மேகங்கள் சிதறிப் பறக்க, நிலம் வெட்கை ஏறி புழுதி கிளப்ப, செல்லடியால் சிதறிக் கிடக்கும் மனித சதைகளோ எனத் திடுக்குறச் செய்யும்படியாக நாகலிங்க பூக்கள் வாடி உதிர்ந்த தெரு வழியே தவம் ஆச்சி தன் பேரனைத் தேடி ஒவ்வொரு கேம்ப்பாக விசாரித்துக் கொண்டிருந்தாள். அங்கே கேட்டுப் பாருங்க ஆச்சி… இங்கே கேட்டுப் பாருங்க ஆச்சி… அது மாதிரி யாரையும் கூட்டி வரவில்லை அம்மா என ஒவ்வொரு பொறுப்பாளர்களும் வெறும் கையைக் காட்டினார்களே தவிர பேரனைக் கண்ணில் காட்டவில்லை. ஆச்சியும் ஒவ்வொரு பொழுதையும் உண்ணாமல் உறங்காமல் பேரனைக் கண்டடையும் ஒற்றை குறிக்கோளில் தூசனங்களால் பொடியன்களை சபித்துக் கொண்டிருந்தாள்.
மகள் ராணி பிறந்த போது இதே பிள்ளையார் கோயில் தேரோட்டத்தின் சாதிக் கலவரத்தில் கணவனைப் பறிகொடுத்தவள் தவம் ஆச்சி. சாதியும் மதமும் கடவுள் சவாரி செய்யும் இரட்டைக் குதிரைகள் என்பாள். அங்கே கடவுளுக்குப் பதில் இந்த கஜவர்களின் எண்ணங்களே பீடம் ஏறி இருப்பதாக ஒவ்வொரு கதைக்கு இடையிலும் சொல்ல கேட்டதுண்டு. சாதி வெறியையும் தேசிய வெறியையும் ஆச்சி தராசில் சம அளவில் நிறுத்தியிருப்பதாகவே உணர்த்தும் அவள் பேச்சுக்கள். அவர்களின் சில நல்லவைகளும் ஆச்சியின் முன்னால் அல்லவைகளாகவே போயின.
கடந்தாண்டு எல்லையில் காவலுக்கு நின்ற தன் மகனை இழந்த பிறகு மருமகளோடும் பள்ளியில் படிக்கும் பேரனோடும் வாழ்வை நகர்த்தப்பட்ட பாடுகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல தன் பேரனே பெரும் பற்றுக் கோலாக ஆச்சி நினைத்திருந்த வேளையில் இப்படி இடி இறங்குமாப்போல் நிகழ்ந்திருந்தாலும், ஆச்சியின் நடையில் தளர்வில்லை. இருட்டுவதற்குள் எப்படியும் பேரனை கண்டுவிட வேண்டும் என்ற உந்துதல் ஆச்சியை இயக்கிக் கொண்டிருந்தது.
தமிழகத்தில் அகதி முகாம் ஒன்றில் அடைக்கலமான தவம் ஆச்சி குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதியை இழந்து கொண்டிருந்தது. வீடு வளவு வயல் காணியென எல்லாவற்றையும் பெரிதாகவே பார்த்துப் பழகிய ஆச்சிக்கு புறாக்கூடு போன்ற வீடும் குதிரை லாயத்தைப் போன்ற தொடர் வீடமைப்பும் மனதளவில் தொந்தரவு செய்திருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் தன் பேரனை காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்ட நாட்களை நினைத்து சகித்துக் கொண்டவள் நாளடைவில் இந்த வாழ்விற்கு பழகியும் விட்டாள்.
அகதி வாழ்விற்கு பழகிப்போன பெரும்பாலான இந்த மனிதர்களுக்கு இங்கே அழைக்கப்படும் அறமற்ற வார்த்தைகளின் மீது அதிருப்தியே மிகுந்திருக்கிறது. தமிழ் அகராதியில் இவைகள் அவமானகரமான சொற்களாகவே மிஞ்சி இருக்கிறது. கள்ளத் தோணி என்றும் அகதி நாய்கள் என்றும் அதிகாரிகள் விழித்த போதெல்லாம் தவம் ஆச்சி மனதளவில் நொறுங்கிப் போயிருந்தாள். ஒட்டுமொத்த முகாம்களிலும் தவம் ஆச்சி போல் இந்தக் கொடிய சொற்களால் நொறுங்கிப் போயிருக்கும் சனங்கள் நிறையவே உள்ளனர். கள்ளத் தோணிகள் என்ற அவலச் சொற்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தன் மருமகளோடு நூறுநாள் வேலை திட்டத்தில் இணைந்து தன் பேரனைப் படிக்க வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு அரசின் உதவிப் பணங்களையும் சேமித்து பெரிய படிப்பு படிக்க அனுப்பியவனோ சில நாட்களில் குடிக்கு அடிமையாகி விட்டான். மாநகரத்தின் கலாச்சாரத் தாக்கம் முகாம் மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. உடன்படிக்கும் தீய நட்பு அவனை சீரழிவுக்கு இட்டுச் சென்றது. இந்த குடியால் முகாம்களுக்குள் நோய் தாக்கத்தாலும் விபத்தாலும் இறப்பது நாளாந்தம் தொடர்கதையாகிறது.
நாளை தணிக்கை நடைபெறும் அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் இப்படிக்கு ஆர்.ஐ என முகாம் அறிவிப்புப் பலகையில் மாதத்திற்கு இருமுறை எழுதப்படும். சில மாதங்களில் முக்கிய தலைவர்கள் யாரேனும் பக்கத்து மாவட்டத்திற்கு வருகை புரிந்தாலும் தணிக்கை நடைபெறும். அதிகாரிகள் மாறுதல் பெற்று புது அதிகாரி வந்தாலும் தணிக்கை நடைபெறும். இந்த தணிக்கை எனும் கொடும் தண்டனை அதிகாரிகள் அகதிகள் மீது காட்டும் ஏகபோகம், வசவுச் சொற்கள், தண்டம் பிடித்தல் என அன்றைய பொழுது கொடிய ராட்சசக் கூடாரமாகவே இருக்கும்.
தணிக்கை அறிவிப்பு இல்லாத நாளொன்றின் காலையில் காவல்துறையினரின் வருகையில் முகாம் பரபரப்பாகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமாக கதைக்கத் துவங்கினர். கரிப்பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருந்த ஆச்சியின் வீட்டின் முன்னால் கூட்டம் கூடிவிட்டது. சூரியனைப் பற்றிக் கொண்ட கிரகணத்தைப் போல் பகல் இருட்டிக் கொண்டிருந்தது.
பாடையில் இருந்து உதிர்ந்த பூக்கள் கூட்டி ஒதுக்கப்பட்ட குப்பையை கோழிகள் கிளறிக் கொண்டிருந்தன. சாம்பல் காடாத்தக் கிளம்பிய ஆண்கள் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். நீர் வற்றிப்போன அடிகுழாயில் சத்தம் அதிகமாய் இருந்தது. வரிசையாக குடங்களை நிரப்பும் முனைப்பில் ஒவ்வொருவராக கைமாற்றிக் கொண்டிருந்த பெண்கள் ஒரு கணம் ஓய்வாய் நின்று கொண்டனர். சுடலைக் குருவியொன்று கத்திக் கொண்டு பறந்தது. பக்கத்து வீட்டில் குடியால் இறந்து போனவனின் சாவு வீட்டு பந்தல் இன்னும் அவிழ்க்கப்படாமல் இருந்தது.
சாராய நாற்றம் அடங்கி குருதி வீச்சம் உறைந்து கிடந்த சாலை விபத்து ஒன்றின் கதையை அதிகாரி ஒருவர் தவம் ஆட்சியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். வாடி உதிர்ந்த நாகலிங்கப் பூக்கள் சாலையில் சிதறிக்கிடக்கும் காட்சி மண்டையைப் பிளந்துகொண்டிருந்தது.
விடுதலையின் பேரொளி மீது காரிருள் மூடியதைப் போல் ஆச்சி சூனிய வெளியை வெறித்துக் கொண்டிருந்தாள். சுத்தி இருந்தவர்களின் ஒப்பாரிச் சத்தத்தில் முகாம் மீண்டும் ஒரு சாவின் கூடாரமாகியது. கண்ணீரஞ்சலிப் போஸ்டரை ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் ஆளுக்கொரு மிடறு சாராயத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தனர்.
எழுதியவர்
-
இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்திலுள்ள அச்சுவேலி வடக்கில் பிறந்த ஞானசூரி முதுகலை அறிவியல் நுண்ணுயிரியல் துறை படித்தவர். 1995இல் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கும், 1996இல் வன்னியை விட்டு தமிழ்நாட்டுக்கும் புலம்பெயர்ந்தவர். தற்போது திருச்சிராப்பள்ளியிலுள்ள தனியார் ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் துறையில் தொழில்நுட்புனராகப் பணியாற்றுகிறார்
இவரது முதல் கவிதைத் தொகுப்பு : அலைகளின் மீதலைதல் (2008) , இரண்டாம் கவிதைத் தொகுப்பு : நாடிலி (2021)
இதுவரை.
- சிறுகதை11 November 2024நாகலிங்கப் பூ