27 December 2024
Waris Daiaries - Saritha

மிக மகிழ்ச்சியான தினம் என்று நீங்கள் எந்த நாளைக் கூறுவீர்கள்? பிறந்த நாள், திருமண நாள், முதல் குழந்தை பிறந்த தினம் இப்படி ஏதாவது ஒன்றை நாம் கூறலாம். ஆனால் தன்னுடைய அறுவை சிகிச்சைக்குப் பிறகு நிம்மதியாகச் சிறுநீர் கழித்த நாள் தான் வாரிஸ் மிக மகிழ்ச்சியான நாள் என்று கூறுகிறார். சராசரியாக ஒருவர் சிறுநீர் கழிக்க இரண்டு நிமிடங்கள் ஆகுமென்றால் வாரிஸ் போன்ற விருத்தசேதனம் செய்யப்பட பெண்களுக்குப் பத்து நிமிடங்களுக்கு மேலும் ஆகும்.

விருத்தசேதனமா அப்படி என்றால் என்ன? அதற்கும், சிறுநீர் கழிக்க அதிக நேரம் ஆவதற்கும் காரணம் என்ன?அதைத் தெரிந்து கொள்ள வாரிஸ் டைரியின் டைரிப் பக்கங்களைப் புரட்ட வேண்டும். பேதம் இல்லாமல் எல்லாக் கண்டங்களிலும், எல்லாத் தேசங்களிலும், எல்லா மாநிலங்களிலும் பெண்களின் நிலை பாடுடையதாகவே இருக்கின்றது. மதங்களின் கரங்களிலும் சடங்குகளைக் கைமாற்றும் நீட்சியாலும் பெண்களைத் தங்கள் உடமையாகக் கருதும் ஆண்களின் ஆதிக்கம், பெண் கைவிட்டுப் போய்விடக் கூடாது எனும் சொந்தம் கொள்ளும் மனோபாவத்தால் சுமத்தும் அத்தனை விதிகளையும் கடவுளுக்காகவும் தங்களின் சந்ததிகளுக்காகவும் சிலுவை சுமப்பவர்களாக ஏற்றுக் கொள்கிறார்கள். எங்கோ யாரோ ஒரு சில பெண்கள் வெகுண்டெழுந்து, அதிலிருந்து மீற முயலும் போது அவர்களை நோக்கி எல்லாத் திசைகளிலிருந்தும் வீசப்படும் நவரசக் கயிறுகள் பெண்ணுடலையும் எண்ணங்களையும் தளைகளாய் பிணைத்துக் கொள்கின்றன. அப்படி ஒரு தளையிலிருந்து துண்டித்துக் கொண்டவர் வாரிஸ் டைரி என்று பாலைவனப் பூ எனும் இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர் எஸ். அர்ஷியா அவர்கள் கூறியிருப்பது நிதர்சனம் என்பது வாசித்து முடித்த பின் தான் உணர முடிகிறது.

1965 ஆம் ஆண்டு சோமாலியாவிலுள்ள ஒரு பாலைவனக் கிராமத்தில் பிறந்தவர் வாரிஸ் டைரி. வாரிஸ் டைரி என்பதற்குப் பாலைவனப் பூ என்று பொருள். தனக்கான சின்னஞ்சிறு உலகத்தில் ஆடு மேய்ப்பது, வீட்டைப் பராமரிப்பது, உணவு தயாரிப்பது என்ற கடினமான வேலைகளுக்கு இடையில் மகிழ்வோடு பெரிய இறக்கைகளோடு சிறகடித்துப் பறந்து கொண்டு தான் இருந்தார் வாரிஸ். ஒரு சிறு பிளேடால் தனக்கு வரும் கொடூரத்தை அவள் அறிந்திருக்கவில்லை.

ஏதுமறியாத ஐந்து வயதில் அந்தக் குழந்தைக்கு நடந்த கொடூரம் வாசிக்கும் போது உறிஞ்ச உறிஞ்ச வந்து கொண்டிருந்த ரத்தத் துளிகளை உறிஞ்ச முடியாமல் மணல்கள் கூட தோற்றுப் போனபோது நான் எப்படிக் கடந்து செல்வேன். வாசிக்கும்போது என் மீது தெளித்த ரத்தத் துளிகளை எப்படித் துடைத்து எரிந்துவிட்டு நகர முடியும்.

அதுவும் காலம் காலமாகக் கோடிக்கணக்கான பெண்களுக்கு நடந்தது என்பதைக் கடக்க ஒரு யுகம் போதாது. ஆப்பிரிக்க உள்ளிட்ட 28 நாடுகளில் ஒவ்வொரு ஐந்து வயது நிரம்பிய குழந்தைக்கும் நடைபெறும் விருத்தசேதனம் தான் அன்று வாரிஸூக்கும் நடக்கப்போகிறது என்பதை ஏற்கனவே அறிந்திருந்தாள். ஆனால் அதிலிருந்து தப்ப முடியாது என்பதை அறிந்து அம்மாவோடு கிளம்புகிறாள்.

Waris Dirie

அந்த வெட்ட வெளி மணல் பரப்பில் மருத்துவச்சி துருவேறிய பிளேடைக் கையில் எடுத்து ஏற்கனவே இருந்த ரத்தத் துளிக் கறைகளைத் தன்னுடைய எச்சிலைத் துப்பித் தான் அணிந்திருந்த உடையால் துடைக்கிறாள். வாரிஸின் பிறப்புறுப்பின் மேல் பகுதி (அதுதான் உடம்பில் புணர்ச்சி மிகுந்த பகுதி) வெட்டி எடுக்கப்படுகிறது. ரத்தம் பொங்கி எழுந்து வலியின் உச்சத்தில் கொதித்தது. அதோடு முடிந்தது என்று பெரும் கத்தலோடு ஆரம்பித்து விசும்பலோடு ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள் வாரிஸ். அடுத்த தொடர்ந்தது அதைவிடக் கொடூரம். வேல மரத்திலிருந்து ஒடித்து வைக்கப்பட்டிருந்த முள் குவியலிலிருந்து மாற்றி மாற்றி எடுத்து அந்த வெட்டி எடுக்கப்பட்ட இடத்தில் துவாரங்கள் போடப்படுகின்றன. வலுவான வெள்ளை நூல்களைக் கொண்டு அந்தத் துவாரங்கள் சாக்கு மூட்டை இறுக்கித் தைப்பது போல் தைக்கப்படுகிறது. சிறு துவாரம் மட்டும் விடப்படுகிறது. என்ன என்பதை உணர அந்தச் சின்ன சிறுமிக்கு எத்தனை நாட்கள் ஆயிருக்கும் அல்லது எத்தனை வருடங்கள் ஆயிருக்கும்?

மதத்தின் பெயரால் ஆப்பிரிக்கப் பெண்களின் கன்னித்தன்மையைக் காப்பதற்காக இந்தக் கொடூரச் செயல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டு வருவதை வாசிக்க வாசிக்கத் தூக்கிலிடப்பட்ட உணர்ச்சிகளை உணர்வுகளையும் அந்தப் பெண்ணின் வேதனையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இது ஒரு புறம்.

விருத்தசேதனம் நடத்தப்படும் போது ஏற்படும் ரத்தப்போக்கு நோய்த் தொற்று காரணமாக நான்கில் இரண்டு குழந்தைகளின் மரணம் மறுபுறம். சரி இதன் மூலம் அவர்களின் கன்னித்தன்மை எப்படிக் காப்பாற்றப்படுகிறது? இந்தத் தையல் எப்போது பிரிக்கப்படும் என்ற கேள்விகளுக்கான பதிலைச் சுமந்து கொண்டு இருந்த இந்தப் புத்தகத்தின் கனம் தான் எவ்வளவோ?

திருமணத்தின் போது கணவனால் அந்தத் தையல் பிரிக்கப்படும் அதுவரை. மற்றவர்கள் சிறுநீர் கழிக்க இரண்டு நிமிடங்கள்.தையல் போடப்பட்ட பெண்கள் சிறுநீர் கழிக்கப் பத்து நிமிடத்திற்கு மேல்.அதுவும் மாதவிடாய்க் காலம் என்றால் இன்னும் சொல்லவே தேவையில்லை. இதை வாசிக்கும் போது எத்தனை ஆண்களுக்கு இதைப் பற்றித் தெரியும் என்பது எனக்குத் தெரியாது. மாதவிடாய்க் கால அவஸ்தைகள் புரிந்து கொண்ட ஆண்கள் எத்தனை பேர் என்பதும் தெரியாது. (ஆனால் தாய்மார்கள் தங்களுடைய ஆண் குழந்தைகளுக்கு இது பற்றி உணர வைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்) ஆனால் ஒவ்வொரு பெண்ணும் வாசிக்கும் போது கனத்த இதயத்தோடுதான் கடந்து செல்ல முடியும்.

அடப்பாவிகளா! நீங்கள் எல்லாம் என்ன மனிதர்கள்! இப்படியுமா கொடுமை நிகழ்த்துவீர்கள்! சிறு பச்சிளம் குழந்தையின் மீது கொடூரத்தை அரங்கேற்று இருக்கிறீர்களே! தையல் மூலமாகக் கற்பு பாதுகாக்கப்படுகிறதா? திருமணத்திற்கு முன்பு வரை எந்த ஆணுடனும் உடல் ரீதியான உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகச் செய்யப்படும் நிகழ்வு.

சரி இப்படிச் செய்வதன் மூலம் திருமணத்திற்குப் பின்பு கூட வாழ்க்கை முழுவதும் அந்தப் பெண்ணிற்கு தாம்பத்திய இன்பம் கிடைக்காது என்பதை அறிந்து தான் இந்தக் கொடூரத்தை நிகழ்த்தினார்களா? சாகும் வரை எந்தவித இன்பமும் கிடைக்காமல் அது என்னவென்றே அறியாமல் மாண்டு போகிறார்கள் இந்தப் பெண்கள்.

இந்த வழக்கம் மிக எளிதாக ஆண்களால் நடத்தப்படுகின்றது. அவர்கள் தான் இந்தக் கோரிக்கையை வலுவாக ஆதரிக்கிறார்கள். அவர்களின் அறியாமை சுயநலம் ஆகியவை அவர்களை ஆட்டிப்படைக்கின்றது. பெண்களின் பாலின விருப்பத்திற்கு தாங்கள்தான் உரிமையாளர்கள் என்பதை அவர்கள் எப்போதுமே நிலைநிறுத்த விரும்புகிறார்கள். தங்கள் மனைவிகளுக்கு விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆண்கள் விரும்புகிறார்கள். வற்புறுத்துகிறார்கள். தாய்மார்களும் தங்கள் மகள் மீது இந்தக் கொடுமையைத் திணிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களும் அந்தக் கொடுமையை அனுபவித்து வந்தவர்கள் தானே.

இப்படி விருத்த சேதனம் செய்து கொள்ளாத பெண் மோசமானவள். மாசு உடையவள். காம வேட்கை கொண்டு திரிபவள். திருமணம் செய்து கொள்ளத் தகுதியற்றவள். லாயக்கு இல்லாதவள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுகிறார்கள்.

வாரிஸ் வளர்ந்த அந்த நாடோடிக் கலாச்சாரத்தில் திருமணம் ஆகாத பெண் என்ற சொல்லுக்கு இடமே இல்லை. ஆனால் தாய்மார்கள் தங்கள் மகள்களுக்குச் சிறப்பான வாழ்க்கைச் சாத்தியங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்படியான ஒன்றிற்குச் சம்மதிக்கிறார்கள்.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் போது எங்களுடைய ஊரிலிருந்து நாங்கள் ஈரோட்டிற்கு குடி பெயர்ந்து வந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த பெண்மணி கூறியது அப்போது எனக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது‌. (20 வருடங்களுக்கு முன்பு) அவர் மராட்டியப் பெண்மணி. அவர்களுடைய திருமணம் முடிந்து முதலிரவு முடித்தவுடன் முதலிரவன்று இரவில் பயன்படுத்திய வெள்ளை நிற விரிப்பு அடுத்த நாள் காலை வீட்டின் வெளியில் கட்டித் தொங்க விடப்பட வேண்டும். அந்த வெள்ளை நிற விரிப்பில் ரத்தக்கரை பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பெண் கன்னித்திரை கிழியாத கட்டுடையவள். கன்னித்திரை முதலிரவில் கிழிக்கப்பட்டது என்பதற்கான அத்தாட்சியும் அந்த ரத்தக்கரை என்று கூறினார்கள். எனக்கு இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று கேட்டேன். இன்றும் நடந்து கொண்டிருக்கிறது எனக்கும் நடந்தது என்றார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கிண்டர்கார்டன் பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு குழந்தைகளுக்குக் கதைகள் கூறி முடித்து நிகழ்வெல்லாம் முடிந்த பிறகு, ஆசிரியர்களுடன் உரையாடல் நடந்து கொண்டிருக்கும் பொழுது வெள்ளை விரிப்பு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து; 20 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு பெண்மணி கூறினார் என்று கூறினேன். அந்தக் கூட்டத்தில் இருந்த ஓர் ஆசிரியை நானும் அதே சமூகத்தைச் சேர்ந்தவள் தான், என்னுடைய திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இன்றும் அப்படித்தான் நடக்கிறது என்றார். கடினமான வேலைகள் செய்யும்போது கன்னித்திரை கிழிந்து விடும் சில நேரம் சைக்கிள் ஓட்டும் போது கூட கிழிந்து விடும் எப்படி இதை ஓர் அளவுகோலாக வைத்து நினைத்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது.

வாரிஸ் டைரி இன் டைரிக்குள் வருவோம்.

இத்தனை வலிகளையும் வேதனைகளையும் கடந்து வந்த வாரிஸூக்கு அப்போது 13 வயது. ஐந்து ஒட்டகத்திற்காக 60 வயது கிழவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வாரிஸூன் அப்பா முடிவு செய்கிறார். அம்மாவின் உதவியோடு அங்கிருந்து தப்பித்துச் செல்கிறார் வாரிஸ்.
பல மையில் தூரம் நடந்து வந்த களைப்பில் மரத்தடியில் பெரும் மூச்சுவிட்டு கண்களை மூடி அமர்ந்திருக்கிறாள் வாரிஸ். கண்களைத் திறந்த போது எதிரே சிங்கம். வாரிஸ் ஓடவும் இல்லை. ஒழியவும் இல்லை. அதற்குத் தெம்பும் இல்லை. அப்படியே அமர்ந்திருக்கிறாள். இந்த எலும்பு போர்த்திய தோல் உடல் மூலம் தாம் பசியாற முடியாது என்றோ அல்லது எத்தனை கஷ்டத்தை அனுபவித்து இருப்பாள் நாமும் வேறு அவளை அடித்துக் கிழித்துத் துன்புறுத்த வேண்டுமா என்று கூட அவள் மீது பரிதாபப்பட்டு அங்கிருந்து சிங்கம் நகர்ந்திருக்கலாம். நகர்ந்துவிட்டது.

அடுத்த சவாலாகத் துரத்தியது மனிதன், சிங்கத்திடம் இருந்து தப்பியவள் மனிதனிடம் அகப்படாமல் தப்பிக்க ஒரு உயிரை எடுத்து விட்டுச் செல்கிறாள். சுமார் 300க்கும் மேற்பட்ட மைல்களை நீரும் உணவும் இன்றி நடந்தே கடந்து; தன்னுடைய அக்கா வீட்டிற்கு வந்து சேர்கிறாள். அதன் பிறகு சித்தி வீடு, அங்கிருந்து லண்டனில் வீட்டு வேலைக்காக மற்றொரு சித்தியின் வீடு. அங்குப் படிக்க ஆசைப்படுகிறாள். அங்கு இருக்கும் சித்தியின் மகள் வாசிக்கும் புத்தகத்திலிருந்து கதைகளைக் கேட்கிறாள். பகுதி நேரமாக ஆங்கிலம் படிக்கச்செல்கிறாள். அதற்கும் எதிர்ப்பு. இந்த நிலையில் தான் சித்தப்பாவின் வேலை மீண்டும் சோமாலியாவுக்கு மாற்றப்படுகிறது. தன்னுடைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டது என்று பொய் சொல்லி லண்டனிலேயே தங்கி விடுகிறாள் வாரிஸ்.

அவளுக்குப் பிடித்த மாடல் தொழிலுக்குள் நுழைகிறாள். அதற்குள் நுழைவதற்கு அவள் நடத்திய போராட்டம் என்பது மிக மிகக் கொடுமையானது. ஆனாலும் எல்லாவற்றையும் கடந்து ஒரு மிகச்சிறந்த மாடலாக ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி ஆக உரு மாறுகிறாள் நட்புகளின் உதவியோடு.

இப்படியான பயணத்தில் சிறுநீர் கழிக்கச் செல்லும் பெண்கள் மிக விரைவாக வந்து விட்டார்கள் தனக்கு மட்டும் எப்படி இவ்வளவு நேரம் என்று எண்ணுகிறார். அப்பொழுதுதான் தெரிகிறது எல்லாப் பெண்களுக்கும் அப்படி நடப்பதில்லை. இவர்களுடைய இந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குத்தான் இப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை. அதை ஒரு மருத்துவரிடம் சென்று சரி செய்கிறார்.

காலம் காலமாக இப்படியான கொடுமைகளைத் தங்கள் அனுபவித்து வந்திருக்கிறோம் என்பதை அப்பொழுதுதான் உணர ஆரம்பித்தார் வாரிஸ். இனி ஒருபோதும் ஒரு குழந்தையும் இதனால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு பேட்டியில் இது பற்றி முழுமையாகக் கூறுகிறார். அது மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. 1999இல் தான் அந்தப் பேட்டியின் வழியாகத் தன்னுடைய வலியையும் வேதனையும் உலகிற்கு அறிவிக்கிறார். பள்ளிக்கூடங்களில் சமூக நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் இதைப் பற்றி உரையாடுகிறார்.

இதன் விளைவாக அவருக்கு இது சார்ந்து ஏராளமான கடிதங்கள் வருகிறன. தொடர்ந்து இவர் நடத்திய இந்த முன்னெடுப்புக்கெல்லாம் பெண் உறுப்பு சிதைப்பு சட்டவிரோதமானது என்ற விதிகளை இயற்ற வைத்தது.

4000 ஆண்டுக்கால ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தில் பெண்களின் பிறப்பு உறுப்பு சிதைப்பு ஓர் அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. குர்ஆன் தான் இப்படிச் செய்யச் சொல்கிறது என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் உள்ள அத்தனை முஸ்லிம் நாடுகளிலுமே இந்த வழக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற போதும் அது இப்போது பிரச்சனை இல்லை. ஆனால் குர்ஆனோ அல்லது பைபிளோ அல்லது வேறு எந்தக் கடவுளோ பெண்களுக்கு உறுப்பு சிதைப்பு செய்து விட வேண்டும் என்று எங்கும் குறிப்பிடவில்லை என்று தன்னுடைய டைரியில் ஆணித்தரமாகக் கூறுகிறார் வாரீஸ்.இதற்கான பவுண்டேஷன் ஒன்றை ஆரம்பிக்கிறார்.

இந்தப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை வாரிஸூக்கு சிறப்பு நல்லெண்ணத் தூதுவர் பொறுப்பை வழங்குகிறது. ஐந்தாண்டு காலம் திறம்பட அந்தப் பொறுப்பைச் செய்தார் வாரிஸ்.

உலகின் பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் வாரிஸின் பவுண்டேஷன் இன்றும் இயங்குகிறது. இதன் மூலம் பெண் உறுப்பு சிதைப்பதைத் தடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பற்றிய விழிப்புணர்வும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சிகிச்சை அவர்களுக்கான கல்வி இப்படி இந்த பவுண்டேஷன் தொடர்ந்து இயங்கி வருகிறது.

ஆண் பெண் சமத்துவம், பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் ஆரோக்கியம், மனித உரிமைகள் இவற்றிற்காகப் போராடும் வாரிஸ் இன்று தனது நான்கு குழந்தைகளோடு போலந்து நாட்டில் வசித்து வருகிறார்.

காலம் காலமாகப் பின்பற்றப்படும் மத நம்பிக்கையைத் தகர்த்தெறிவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. இந்தக் கொடுமைக்குப் பெண்களும் காரணம் அல்ல.

இது பற்றி ஆண்களிடம் புரிதலை ஏற்படுத்த வேண்டும். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று வாரிஸ்டைரி குறிப்பிட்டிருக்கிறார்.

அவர்களுக்கு நான் புரிதலை ஏற்படுத்தி விட்டேன் அப்போது நீங்கள் என்ற கேள்வியை நம் முன் வைக்கும் பொழுது நான் ஒவ்வொரு முறையும் கல்லூரி மாணவர்களோடும் பெண்களோடும் பொதுவெளியில் எங்கெல்லாம் உரையாட வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம், இது போன்ற கேள்வியைத் தான் அவர்கள் முன்வைப்பேன். ஆண் குழந்தைகளுக்குப் புரிதலை ஏற்படுத்துங்கள். பெண் குழந்தைகள் பெண்கள் படும் வலியையும் வேதனையும் தயவு செய்து கூறுங்கள் என்று கூறுவேன்.

’கேள்விப்பட்டாயா சோமாலியாவுல இப்ப எல்லாம் பெண் உறுப்பு சிதைப்பு நடக்கலையாமே?’ என்று மட்டுமல்ல உலகத்தில் எங்குமே பெண் உறுப்பு சிதைப்பு நடக்கவில்லை என்பது என் காதுகளில் விழும் நாள் தான் எனக்குச் சந்தோஷமான நாள் என்கிறார். ஆம் ஒவ்வொரு பெண்ணுக்குமான சந்தோஷமான நாள் அதுவாகத் தான் இருக்க வேண்டும் என்று நானும் உறுதியோடு கூறுகிறேன். அது கண்டிப்பாக நடக்கும்.

வாரிஸ் டைரி மற்றும் காத்லின் மில்லரால் எழுதப்பட்ட இந்த நூலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து அளித்திருக்கிறார் எஸ்.அர்ஷியா. வாரிஸ் டிரியின் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு “டெசர்ட் ஃப்ளவர்” (பாலைவனப்பூ”) எனும் பெயரில் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக ஷெர்ரி ஹார்மன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிஸ் டைரி! முள் கிழித்து பாலைவனப் புழுதியில் நடந்த கருமை படிந்த கால்களே, உலகின் பேரழகான கால்கள்! கோடிக்கணக்கான பெண்கள் அனுபவித்து வந்த கொடுமையை உலகிற்குக் கூறி; அதற்கு எதிர்ப்புக் குரலை உலகின் முன், பதிவு செய்த நீயே பேரழகி!


பாலைவனப் பூ

Author: வாரிஸ் டைரி, காத்லின் மில்லர்

Translator: எஸ். அர்ஷியா

Publisher: எதிர் வெளியீடு

No. of pages: 368

Price: ₹450

Buy Now : ethirveliyeedu.com/products/பாலைவனப்-பூ?


 

எழுதியவர்

சரிதா ஜோ
சரிதா ஜோ
ஈரோடு மாவட்டத்தை சார்ந்த சரிதாஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலைப் பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கருப்பு பட்டை பெற்றவர்.

கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் தன் பயணத்தை தொடங்கிய இவர், சிறார் இலக்கிய எழுத்தாளராக இதுவரை எழுதியுள்ள நூல்கள்

சிறார் சிறுகதை தொகுப்புகள் :
நீல மரமும் தங்க இறக்கைகளும்,
கனவுக்குள் ஒரு கண்ணாம்மூச்சி,
கிளியோடு பறந்த ரோகிணி,
யார் தாத்தா நீங்க?,
சின்ன வாத்தியார்.

சிறார் நாவல்கள் :
மந்திரக் கிலுகிலுப்பை,
நிழலைத் திருடிய பூதம்,
பேயாவது பிசாசாவது,
கடலுக்கடியில் மர்மம்,
சரசுவதிக்கு என்ன ஆச்சு?,
வண்ணங்களின் அதிசயம் (வெளியீடு : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ).
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Karan karki
Karan karki
1 month ago

மிக அவசியமான ஒரு நூலைப் பற்றி பேசி இருக்கிறீர்கள்…
வாழ்த்துக்கள் 🍁

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x