அவனின் உறக்கத்தை இந்தக் காரிருள் தொந்தரவு செய்வதாக உணர்கிறான்.
அது அவனை விழுங்குகிறது. சுனாமிப் பேரலை போல, உருவத்தை முழுதாகப் பார்க்க முடியாத கரிய அரக்கன் போல, தனது கொடும் கைகளால் வாரிச் சுருட்டி விழுங்குகிறது.
இருளின் சுமை தலைக்குள் இறங்கி விட்டது. தாங்க முடியாத பாரம். தலையணை மீது பாரத்தைக் கடத்த முடியவில்லை. படுக்கையில் பாம்புபோல நெளிந்து கொண்டிருந்தான்.
மீண்டும் ஒருநாள் புலரும் போது எழுந்திருக்க முடியுமா? இந்தக் கேள்வி திரும்பத் திரும்ப மூளையின் அடியாழத்தில் முகிழ்ந்த அசரீரியாக எச்சரிக்கை செய்கிறது.
அவளோ அசைவற்று நிம்மதியாக உறங்குகிறாள். இன்றிரவும் ஒன்றாகச் சாப்பிடவில்லை. இனியொரு இரவு அப்படி அமைவது சாத்தியமுமில்லை. நிச்சயமாக அவள் எழ மாட்டாள். நீண்ட உறக்கம் அவளுக்குப் பிடித்தது. அதை இழக்க விரும்பமாட்டாள். அவளைப் போலவே அவனும். ஒருவர் மற்றவரை மறக்கவேண்டும் என்று முடிவெடுக்க எத்தனை நாட்கள் ஆகிவிட்டது? நேற்றுதான். “பிரிய வேண்டும். எங்களுக்குள் விரிசல் வருவதற்கு உனது விட்டுக் கொடுப்பின்மையும் மேலாதிக்க எண்ணமும் தானே காரணம்” என்று அவள் கலங்கியபோது அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“வெளிப் பூச்சுக்கு என்ன காரணத்தையும் வைத்திருக்கலாம். நீ தான் காரணம். உன் நெருக்கம் தான் காரணம். என்னை விலகாமல் இருக்கும் ஒவ்வொரு கணமும் எனக்குத் தொந்தரவையும் எரிச்சலையும் தருகிறது. நான் என்னைப் பார்க்க முடியாமல் தவித்தேன். நான் நானாக இல்லாமல் எல்லாம் உனக்காக என்று வரும்போது தனித்துவத்தை இழந்து பொருமுகிறேன். உனது நெருக்கம் கொடிய விஷமாக என்னுள் பரவிவிட்டது” தனது இயலாமையை உள்ளுக்குள்ளே போட்டுப் புதைத்துக்கொண்டான்.
அவளை விட்டுவிடு என்று குழந்தை போல அனுங்கி அரற்றி ஆழ்மனம் சோர்ந்து போனது. சிலமாதங்களாகவே அந்த அனுங்கல் சிறுகச் சிறுக வளர்ந்து பேரிரைச்சலாக அவனைச் செவிடனாக்கியது.
ஒரே நாளில் மூன்று வருடக் காதல் அதனால் வந்த காமம் எல்லாமே ஒற்றைக் காரணத்தைக் காட்டி மறக்க வேண்டி வந்தது. அவன் எதிர்பார்த்த பிரிவை அவள் தந்தாள். அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அவனைக் கூரான கத்தியால் வெட்டியது போல சற்றும் எதிர்பார்க்காததைத் தந்துவிட்டாள். நெஞ்சு இறுகி வலித்தது. யாருமற்ற பாலைவனத்தில் நடப்பது போன்ற உணர்வு. கால்கள் புதைக்கிறதா? இல்லை பாரமாகிறதா? என்று தெரியாமல் சிரமப்பட்டு வலித்து வலித்து நடக்க முயலும் பரதேசியாகத் தன்னை உருவகிக்கிறான். ஆடைகளைத் தொலைத்து நிர்வாணமாக நிற்கும் சிறுமையை எண்ணிப் பிதற்றுகிறான்.
வாழ்க்கை மதிப்பு மிக்கது என்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள். வலிந்து திணித்த இருளிலும் ஒளியிலும் தம்மை தொலைத்துக் கொண்டிருப்பவர்கள். உண்மையை உரைக்காமல் யதார்த்தத்தைப் பேசாமல் வேஷம் போடும் பொய்யர்கள் என்று திடமாக நம்பினான். மிருகங்கள் பறவைகள் போல ஒரே கோட்டில் வாழ அவனால் முடியவில்லை. துவண்டுவிடுகிறான்.
ஒருபொழுது பிரகாசமும் அவனைத் தொந்தரவு செய்தது. அம்மாவும் இரண்டு தங்கைகளும் அன்பாக இருந்தார்கள். அப்பாவின் கண்டிப்பு அவனுக்கு எரிச்சலைத் தந்த காலம். அம்மா ஆசையாக உணவு சமைத்துப் பரிமாறுவார். பட்டாம் பூச்சிகள் போலப் பறந்து திரிந்த தங்கைகள் நகைச்சுவை என்ற பெயரில் சீண்டி அவன் மீது பிரியத்தைப் பொழிந்தார்கள்.
மீசை அரும்பும் போது, வீட்டுச் சாப்பாடு கசந்த போது, நகைச்சுவை தொந்தரவான போது, பாசமும் அன்பும் அழுந்தத் தொடங்கியது. இந்த இருட்டு போல அது பிரகாசம். கண்ணைக் கூசச் செய்யும் பிரகாசம். மனம் அதை வெறுக்கத் தொடங்கியபோது நல்ல வேளையாக அப்போது பல்கலைக்கழகத்தில் இருந்தான். வெளிச்சம் சற்றுக் குறைந்து இருட்டும் சரிக்குச் சரியாகக் கலக்கத் தொடங்கியது. இருட்டு நீண்ட கரும் கூந்தலைப் போல நினைத்திருந்தான். பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த பெண்களில் அவள் தனித்துத் தெரிந்தாள். அவளுக்கும் நீண்ட கரும் கூந்தல். மத்தியில் சரியாக வகிடு பிரிக்கப்பட்டு நேர்த்தியாகத் தடையில்லாமல் வழுக்கி விழும் அருவி போல இருக்கும். அளவான உயரம். சிவலை. அவன் கற்பனை செய்து கொண்டிருந்த உருவம் போல உள்ளத்தில் நிறைந்தாள்.
அவன் எதிர்பார்த்தது அவ்வளவு சுலபமாக நடந்துவிடவில்லை. நினைத்தது நடக்காததால் வரும் குரோதம் அவனையும் விட்டுவைக்கவில்லை. தன்பக்க நியாயம் மட்டும் குறுகலான மனதை விழுங்கத்தொடங்கியது. அவள் தனது வாயைக் கோணலாக்கிக் காதலை மறுத்த போதுதான் உறைத்தது. அந்தக் கணத்தில் என்றுமில்லாதவாறு அந்த முகம் கசந்தது. அதுவரை பார்த்த பெண்களிலேயே மிகவும் அருவருப்பான வதனத்தைக் கண்டான். முன்னர் ரசித்த அவள் கன்னத்து மரு கவரவில்லை. அது தான் கற்பனை செய்து கொண்ட உருவமில்லை. அவளைக் கண்டதுமுதல் கற்பனை தானாக வளர்ந்துவிட்டது என்ற உண்மையை அப்பொழுதுதான் உணர்ந்தான்.
வெளிச்சத்தில் கலந்த கறுப்பின் கூறு. காதலை மறுதலித்துத் துயரத்தைக் கொடுத்தது. துயரத்தில் பங்குபற்றி ஆசுவாசப்படுத்தும் நண்பர்கள் இருந்ததால் இருட்டுத் தூரிகை மெதுவாக மறைந்து அஸ்தமித்து விட்டது.
வெளியே வந்தபோது மனசு இலேசாக இருந்தது.
இவள் இங்கே சிங்கப்பூரில் சிநேகிதியாக அறிமுகமானாள். காதலியாக இணைந்து வாழும் நிகழ்காலம் பிடித்திருந்தது. பிரகாசமான சிங்கப்பூர் வாழ்க்கை. அவனின் பார்வையில் அவள் அழகி. துரு துருவென்ற பேச்சு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. அவளின் அருகில் அணைப்பில் வருடலில் புது உற்சாகம் பீறிட்டு வரும் போது இன்னும் பிரகாசமான வெளிச்சத்தை மனது உணர்ந்தது.
ஒரு வருடத்தின் பின் ஒரே வீட்டில் வாழ வந்தார்கள். திருமணம் செய்துகொள்ளாத வாழ்க்கை சுதந்திரமாக இருந்தது. கட்டுப்பாடுகள் சட்டதிட்டங்கள் என்ற கட்டுகள் இல்லை. வானம் போல விரிந்த பெரு வெளியில் இருவரும் தூக்கி வீசப்பட்டிருப்பதாக உணர்ந்தார்கள். ஒருவரை ஒருவர் தாங்கினார்கள். சேர்ந்து உண்டார்கள். அவளின் ரசனையில் தான் வீட்டின் அலங்காரம் மாறியது. செடிகளை வாங்கினாள். வாசலில் அடுக்கினாள். சுவரின் வண்ணங்களைத் தெரிவு செய்யும் போது அவனுக்கு விருப்பமில்லாத மெல்லிய பிங்க் நிறத்தைத் தெரிந்தாள். அப்போது நேரடியாகத் தனது விருப்பத்தைச் சொன்னான். மழுப்பலாகச் சிரித்தாள். இருந்தும் மாற்றவில்லை. முதல் கருப்பு வண்ணத்தை அவனும் தனக்குப் பூசிக்கொண்டான். கருமையின் செழுமை கூடிக்கொண்டேயிருந்தது. அவனின் கையை மீறி வளர்ந்தது. வளர்ந்து வளர்ந்து பெரிய ஆலமரமாக ஆயிரம் கைகள் கொண்ட விகாரமாகச் சிரித்தது. அதனை அடித்து நொறுக்கவேண்டும் என்ற எத்தனம் எழுந்தாலும் பலமிழந்தவனாக நின்றான்.
“எனது நண்பன். என்னைப் புரிந்து கொண்டவன் உன்னைவிடவும் பிரியமானவன். அவனை நான் மணம் முடிக்கப் போகிறேன். இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைக் கெட்ட கனவாக மறந்து விடுவேன். உனக்கு அது எப்படியிருந்ததோ தெரியவில்லை. நீயும் மறந்து விடு” என்று நேற்று வேலை முடித்து வந்ததும் வராததுமாகக் கூரிய ஈட்டியை அவன் மேல் வீசியெறிந்துவிட்டு அமைதியாகத் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது உடைமைகள் இரண்டு பெட்டிகளில் கட்டிவைத்திருந்தாள்.
அவளருகில் சென்று வலது கையைப் பற்றினான்.
“எமக்கான பிரகாசமான எதிர்காலம் இருக்கும் போது ஏன் இந்த முடிவு? இத்தனை நாள் வாழ்க்கையில் குறைவின்றி இருந்ததை நீ ஏற்றுக் கொள்கிறாயா?” மனதாரப் பொய் சொல்லத்தான் நினைத்தான். ஆனால் அவளின் முடிவைக் கேட்டதில் இருந்து பொய் தன்னளவில் சிதையத் தொடங்கியது. உள்ளே சிதறிக்கொண்டிருந்தான்.
“இல்லை. நீ என்னைப் புரிந்து கொள்ள மாட்டாய். எனது ஆசைகளை எதிர்க்கத் தொடங்கிய நாளே நான் முடிவு செய்து விட்டேன்” என்றாள் முகத்தை மற்றப் பக்கம் திருப்பிக்கொண்டே வேண்டா வெறுப்பாக.
“இரண்டு வருடத்துக்கு முன்னம்?”
“ஆம் அன்றே எனக்கான வாழ்வை நான் தேடத் தொடங்கி அவனை அடைந்தேன்” அப்போது அவளின் கண்களில் இருந்த படபடப்பும் துள்ளலும் அருவருப்பாக இருந்தது. மட்டரகமான ஒரு சிரிப்புச் சிரித்தாள். தன்னை விழுங்கிய இருள் இன்னும் வீறுகொண்டு வளர்வதாக எண்ணினான். மூசி பலியெடுக்கும் வேட்கையில் ஆரவாரம் செய்வது போல அவளின் வார்த்தைகள் இருந்தன.
“ஆக இத்தனை நாட்கள் வெளிவேஷம் போட்டு என்னுடன் வாழ்ந்திருக்கிறாய்?”
“அப்படிச் சொல்லமுடியாது. நீ திரும்பி வரலாம் என்ற ஆசையிருந்தது”
“துரோகம்” இறுக்கமான அடங்கிய தொனியில் அவனின் வார்த்தைகள் பிசிறில்லாமல் அவளைத் தாக்கியது. அவனைப் பற்றியிருந்த இருட்டின் அடர்த்தி கூடிக்கொண்டே மேலும் மேலும் அழுந்தியது. வெடவெடத்துப் போன முகம் இருண்டுவிட்டது.
அவள் கழுத்தைப் பற்றிப்பிடித்தான்.
கரும் மேகம் அவனைக் கபளீகரம் செய்தது. பளிச்சிடும் மின்னலாக அதன் கோரப் பற்கள் அடிக்கடி வெளிப்பட்டன.
அவளது நெருக்கமும் அருகாமையும் தந்த இருட்டு அதுவாகவே விலகும் போது ஏன் இந்தப் பதட்டம் அவனை ஆட் கொள்கிறது?
பின்நிலவு மெதுவாக மேலெழுந்து வருகிறது. விலகாத இறுக்கப் பற்றிக் கொண்ட அடர்ந்த இருளின் மேல் மிதக்கத் தொடங்கும் போது தன்னை மறந்து உறங்கச் செல்கிறது. இந்த நிசப்தத்திலும் அவனுக்கு உறக்கம் வரவில்லை. நாளை அவன் எழுந்திருக்க முடியாத ஆழ்ந்த நித்திரைக்குப் போக முயற்சிக்கிறான்.
அவள் நிம்மதியாக உறங்குகிறாள். இடதுகையை வயிற்றின் மேல் படர விட்டிருந்தாள். மறுபடியும் உற்றுப் பார்த்தான். வயிறு சற்று மிதப்பாக உப்பியிருந்தது. அந்த மெல்லிய சலனம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. உண்மையில் இப்போது தான் உலகமே இருண்டுகொண்டு வருகிறது. தீராத கொடும் இருட்டாக.
எழுதியவர்
- இலங்கை - யாழ்பாணத்தில் பிறந்த ஆதவன் சரவணபவன் தற்போது பொறியியலாளராக சிங்கப்பூரில் வசிக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக சிறுகதைகள் எழுதி வரும் இவரின் கதைகள் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் பத்திரிகைகள், இணைய இதழ்கள் மற்றும் அச்சு இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் சிங்கப்பூர் முத்தமிழ் விழா 2023 & 2024ல் பரிசில்களை வென்றுள்ளன. இலங்கை மகிழ் பதிப்பக வெளியீடாக முதல் சிறுகதைத் தொகுப்பு "குல்லமடை" செப்டம்பர் 2024ல் வெளியானது.
இதுவரை.
- சிறுகதை11 November 2024நிலவு உறங்குகிறது.