13 March 2025
Saravanavbhavan KS 25

(1)

வனால் முடியவில்லை என்றதும் அந்த கோபத்தை அவள் மேல் காட்டினான். அமைதியான ஆனால் இரக்கமில்லாத அடைத்த குரலில் பேசினான். அதீதமான கோபத்தில் வந்த வெறுப்பை வார்த்தைகளாக கொட்டித் தீர்த்தும் அவன் ஆறவில்லை. முன்பெல்லாம் யார் திட்டினாலும் அந்த வார்த்தைகள் செத்துக் கிடந்த சடலத்தில் எறியும் கற்களாக பயனற்று போகும். ஊனுடம்பு சற்று உணர்வுகளை கடத்தத் தொடங்கியதே அவனால் தானே. அதனால் தானோ சொற்கற்கள் அவளை உறுத்துகின்றன? எதிர்பார்க்காத வசைகள்.

இது கோடைகாலம். இருந்தும் இன்று மாலை ஆறு மணியில் இருந்து கிட்டத்தட்ட அரைமணித்தியாலம் சோவென்ற மழை. மனிதர்கள் போல இப்பவெல்லாம் அடிக்கடி காலநிலையும் மாறுகிறது. சாதாரணமாக சிரித்துக் கொண்டு வருபவர்களிடம் பேச்சுக் கொடுத்தாலோ ஏதாவது கேட்டாலோ வெடுக்கென்று மாறும் முகங்களை பலமுறை பார்த்தவள். தோற்றத்தை வைத்து வந்த அருவருப்பா அல்லது தொழிலா என்று எதையும் சரிவர கணிக்க முடிவதில்லை.

நல்லவேளையாக கொஞ்சம் முன்னதாகவே வேலைக்கு வந்துவிட்டாள். சிவப்பு நிறத்தில் குதி உயர்ந்த காலணி மேல் சட்டையும் பொருத்தமாக சிவப்பு நிறத்தில் இறுக்கமாகவே அணிந்திருந்தாள். கருநீல நிறத்தில் குட்டைப்பாவாடை இடுப்பில் இருந்து ஆறங்குலம் மட்டுமே கீழாக அதன் நீளம். கேலாங்கில் அவள் வேலை செய்யும் ஹப்பி ஹவர் உடற்பிடிப்பு நிலையத்தில் வெளியே வழக்கமான பரபரப்பு. உள்ளே சென்று கதவைச் சாத்தியதும் பரபரப்பு ஓய்ந்தது. நன்கு குளிரூட்டப்பட்ட வரவேற்புக் கூடம். மெல்லிய இசையுடன் காற்றில் நறுமணமும் தவழ்ந்து வந்து அவளைத் தழுவின. நச நசவென்ற வியர்வை நாற்றம் எழவில்லை என்பதை தனது முகத்தை அக்குள் அருகில் குனிந்து மற்றவர்களுக்குத் தெரியாமல் முகர்ந்து பார்த்தாள்.

அவளின் முதலாளி வயதான சீனர். அவள் உள்நுழையும் போது வெள்ளைக்கார வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து சேவைக்குரிய பணத்தை வாங்குவதில் மும்முரமாக இருந்தார். உயரமான வெள்ளைக்கார வாடிக்கையாளருக்கு மீதி பணத்தை வாங்குவதைவிட கண்களை சுழற்றி ஓரக்கண்ணால் வேறு வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் இரண்டு பெண்களையும் பார்த்து அசடு வழிவதே பிரதானமாக இருந்தது. அவர்களும் அவரை பார்த்ததும் பல்லெல்லாம் தெரிய சிரிப்பதும் தங்களுக்குள் குசு குசுவென்று பேசுவதுமாக இருந்தனர். அடிக்கடி உதட்டைப் பிதுக்கி பூசியிருந்த உதட்டுச் சாயத்தை அழுந்தி சமநிலைப்படுத்திக் கொண்டிருந்தனர்.

அவளையும் விழுங்கி விடுவது போல ஏற இறங்கப் பார்த்தார். நாகரீகமாக பட்டும் படாமல் மெல்லிய சிரிப்பை உதிர்த்தாள்.

வழக்கமாக யாராவது முன்பதிவு செய்திருந்தால் முதலாளி அவளை நேரடியாக “அந்த அறைக்குப் போ” என்று அறையின் இலக்கத்தை சொல்லுவார். ஆனால் அதுவரை யாரும் அவளை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. அங்கே வருபவர்களுக்கு அழகான இளம் பெண்கள் தான் முதல் தெரிவு. அவளுக்கு முப்பத்திநான்கு வயசு. முகத்தில் விழுந்த சுருக்கங்களை பூச்சுக்கள் பூசி மறைத்தாலும் கைகளில் குறிப்பாக விரல்களின் தளர்வு நிரந்தரமாக தொந்தரவு செய்கிறது.

எதிர் பார்த்தது போல அவனிடம் இருந்து குறுஞ்செய்தி புலனத்தில் வந்ததை கைபேசியின் அதிர்வு காட்டியது.
“எனது வாடிக்கையாளர் ஒருவர் இன்னும் அரைமணித்தியாலத்தில் வருவார்” என்று முதலாளிக்கு கிட்ட போய் காதருகில் சொன்னாள்.

“அறை இலக்கம் ஐந்து சும்மா தான் இருக்கிறது. நீ போய் காத்திரு. அவன் வந்ததும் அனுப்புகிறேன்” சுருக்கங்கள் ஆக்கிரமித்திருந்த தாடி மீசை மளிக்கப்பட்ட முகத்தில் ஏளனப் புன்னகையை உதிர்த்தார். எப்போதும் தன்னைப்பார்த்து ஏளனம் செய்யும் முதலாளியை பொருட்படுத்தாமல் மேசையில் அவர் வைத்த ஆணுறை பாக்கெட்டை எடுத்தவள் விறு விரென்று அறையை நோக்கி நடந்தாள். மனதில் எழுந்த துள்ளல் நடையில் பிரதிபலித்தது.

ஐந்தாம் இலக்க சிறிய அறை அவளுக்கு பரிச்சயமானது. மெல்லிய மென்மஞ்சள் நிற அடர் ஒளியை ஒற்றை மின்குமிழ் கசியவிட்டிருந்தது. ரோஸாவின் சுகந்தத்தை வெண் புகையாக உமிழும் குடுவை அடிக்கடி “ஸ் ஸ்” என்ற ஒலியுடன் உமிழ்ந்தது . இரண்டுக்கு இரண்டு அடி சதுர முகம்பார்க்கும் கண்ணாடி சுவரில் தொங்க அதனுடன் ஒட்டி ஒரு சிறிய மேசை. அதில் ஓரமாக எண்ணெய் குப்பி அதனுள் மென் பச்சை நிறத்தில் உடற்பிடிப்புக்கு விசேடமாக தயாரித்த மூலிகை எண்ணெய். அறையின் நடுவில் ஒடுக்கமான கட்டில் வெள்ளை நிறத்தில் இரண்டு துவாய்கள் சீராக மடித்து அடுக்கியிருந்தது. அவள் தனது கைப்பையை மேசையில் வைத்துவிட்டு தன்னை இரண்டு பக்கப்பாட்டிலும் பின்பக்கத்தையும் கண்ணாடியில் பார்த்து சரிசெய்தாள்.

முதலாளியுடன் அவன் பேசுவது மெலிதாக கேட்கிறது.

கிட்டத்தட்ட மயக்கம் போட்டு விழுபவன் போல கண்கள் செருக மதுவாடை நாசியை துளைக்க அறைக்குள் நுழைந்தான். மது வாடை மட்டும் இல்லை. மதுவும் சீக்ரெட்டும் கலந்த கெட்ட வாடை குப்பென்று அடித்ததால் முகத்தை திருப்பிக்கொண்டாள். நிலை தடுமாறிய நடையில் வந்தவன் வழமை போல பொறுமையாக பேசுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. வந்ததும் வராததுமாக வேகமாக அவளின் உடைகளை களைந்து எறிந்தான்.

ஆக்ரோசமாக இருந்தவனின் செயலை அவள் தடுக்கவில்லை. எதுவும் பேசும் எண்ணம் அவனுக்கு இல்லை என்பதை உணர முடிந்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவளை தழுவினான். உணர்வுகளைத் தொலைத்து மரம் போல நின்றாள். அந்தத் தொடுகையால் குறுகுறுப்போ கிளர்ச்சியோ இம்மியளவும் ஏற்படவில்லை. தன்னுடலையும் நிர்வாணமாக்கி அவள் மேல் படர்ந்தவன் சில நிமிடங்களில் உணர்ச்சி மழுங்கியவனாக எழுந்தான். அவளின் மேனி கவர்ச்சியற்ற ஒன்றுக்கும் உதவாத ஜடப்பொருளாக தெரிந்தது. வறண்டு போன அவனின் முகம் அவளைப் பயமுறுத்தியது. இன்றுதான் இந்தக் குளிரூட்டப்பட்ட அறை நடுக்கத்தைத் தருகிறது. மனதுக்கும் உடலுக்கும் தொடர்பில்லாது ஒன்றை ஒன்று வெறுத்து ஒதுங்கி நிற்கும் நிலை. மண்ணைப் பற்றி நிற்காத வேர் தறிகெட்டு வளருவது போல வெறுப்பு மனதை கிழிக்கத் தொடங்கியது. அது கொடும் வார்த்தைகளாக அவளை அறைந்தது.

“நீ என்ன செய்கிறாய்? என்னை அணைக்காமல் மல்லாக்க கிடந்து காசு மட்டும் வாங்கும் முடிவில் இருக்கிறாய் போல” என்று வன்மையாக கடிந்து கொண்டான்.

முதன் முறையாக அந்த மாதிரி வெறுப்பு வார்த்தைகளை கொட்டினான். எதிர்த்து பேசுவது பயன் தராதது மட்டுமில்லை வெட்கக்கேடு. வேறு வழி தெரியாமல் மவுனமாக இருந்தாள். உள்ளே உடைந்து கொண்டிருந்தாள். தன்னால் முடியாததையும் ஏற்றுக்கொள்ளாமல் என் மேல் அந்த பழியை போடுவதை என்னென்று சொல்வது. இந்த நிலையில் அவனுடன் பேசிப் பயனில்லை. ஆற அமர பேசலாம். போதையில் நிலையிழந்தவன் பேசியதை தாங்கிக்கொள்ள முடிவெடுத்து அவன் முகத்தை பார்க்கப் பிடிக்காமல் திரும்பிச் சுவரைப் பார்த்தாள். கண்ணாடியில் கலைந்த தலைமுடிகள் முகத்தை பாதி மறைத்திருந்தன. அதில் வருத்தமும் ஏமாற்றமும் சேர்ந்திருந்தன.

அவளை பார்க்காமல் திரும்பி நின்று சில நிமிடங்கள் சுயமைதுனம் செய்ய முயன்றான். மனமொன்றிக்காமல் உணர்வெழிச்சியின்றிச் சோர்ந்தவன் குளியலறைக்கு போய் சுத்தம் செய்யாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி கிடந்த ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு வெடுக்கென்று வெளியேறினான். “படார்” என்று கதவை சாத்திய சத்தம் அவளுக்கு முகத்தில் அறைந்தது போல இருந்தது.

இப்போதெல்லாம் போதையில் வருவதால் தான் என்ன பேசுகிறேன் என்ற தெளிவு இல்லாத வேற்றுலக சஞ்சாரியாக இருப்பான். இருக்கிறான். இதுவரையும் அவன்மீது பரிதாபப்பட்டுக்கொண்டே இருந்தாள். சற்று அதிகமாகவே தன்னிலை மறந்து குரல் தளம்ப பேசிய வார்த்தைகளை தனது வாழ்நாளில் ஒரு போதும் மறக்கமாட்டாள். பட்டென்று இடியோடு பெய்யும் மழைபோல ஆண்களுக்கு என்றால் நாங்கள் பெண்கள் கிழமைக்கணக்கில் பெய்யும் மாரி மழை. அதை உணராத ஆண் தன்னை அதீதமாக நினைக்கிறான். தான் பலசாலி என்று மார் தட்டுகிறான். உண்மைதானே? ஆண்வர்க்கம் பலம் கொண்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் உணர்வெழிச்சியில் பெண்ணின் ஐந்து வீதம்கூட ஆணிடம் இல்லை. அதை ஏற்றுக்கொள்ளாத ஆண்கள் தானே சமூகத்தில் அதிகம் என்று தன்னிலையை நியாயப்படுத்துவதைத் தவிர அவளுக்கு வேறு மார்க்கம் இல்லாமல் போய்விட்டது. தத்தளிப்புக்குள் வீழ்ந்து நொறுங்காமல் தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.

 

(2)

றைத்தோழி றோஸ் அறக்கப்பறக்க குளித்து முடித்து தன்னை அலங்கரிப்பதில் மும்முரமாக இருந்தாள். தூக்கம் வராமல் உழன்றுகொண்டிருக்கும் அவளைப்பார்த்து சிரித்தாள்.

“என்ன உடல் அலுப்பு எழுந்திருக்க முடியவில்லையா?” றோஸ் சொன்னதை காதில் வாங்காமல் கிடந்தாள். அவள் பிரயோகித்திருந்த மல்லிகை வாசனைத்திரவியத்தின் சுகந்தம் அறை முழுதும் நிறைந்து கிடந்தது. சிறிது நேரம் மூக்கைத்துளைத்த நறுமணம் இப்போது அவளுக்கு எந்த உணர்வையும் ஏற்படுத்தாமல் மங்கிவிட்டது. இந்தக் கீழ்மையான வாழ்க்கையிலும் தன்னைச்சுற்றி எப்போதும் நறுமணம் நிரம்பியிருப்பதை எண்ணும்போது அருவருப்பாக இருந்தது.

அவளுக்கும் றோஸ்க்கும் கிட்டததட்ட ஒரே வயது தான் இருக்கும். இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது போல முகப்பூச்சு பூசாமலே றோஸின் முகத்தில் சுருக்கம் இன்றி வளுவளுப்பாக இருப்பதாக உணர்கிறாள். அது உண்மையும் கூட. கன்னத்தின் ஓரம் சில முடிகள் நரைத்தும் இருந்தது. இறுக்கமான நாவல் நிறத்தில் வெண்ணிற கோடுகள் போட்ட மிடி மேலதிக சதைகள் இல்லாத இடுப்பை பற்றியிருக்க நிமிர்ந்து நின்று நளினமாக அவளையே பார்த்த றோஸ் “உனக்கும் அவனுக்கும் ஏதும் சண்டையா?” என்று கேட்டாள்.

நண்பியைப் பற்றி ஓரளவு ஊகித்திருந்ததால் தயக்கமில்லாமல் வந்தது அவளின் கேள்வி. கடந்த நாட்களில் வரிக்கு வரி அவனைப்பற்றி சொல்லியிருந்ததை எப்படி றோஸ் மறப்பாள்? நீ ஒரு அதிஷ்டாக்காரி என்று றோஸ் பொறாமைப்பட்டதும் உண்டு.

ஒருமுறை தேதி தள்ளிப்போனதும் கலங்கி நின்றவளுக்கு றோஸ் செய்த உதவியை இன்னும் மறக்கவில்லை.

“ஏன் பாதுகாப்பில்லாமல் இருக்கிறாய்? எவனும் எங்களை தாங்குவான் என்று நம்பி ஏமாந்திடாத” என்று றோஸ் கேட்ட போதுதான் அவனைப்பற்றி முதன் முதலில் விலாவாரியாக சொன்னாள். அன்றைக்கே சுதாரித்திருக்கவேண்டும். மனம் குரங்கு மாதிரி எது நல்லது என்று மூளைக்கு தெரிந்தும் அதை உதாசீனப்படுத்தும். முரண் பிடிக்கும் மீண்டும் மீண்டும் செய்யத்தூண்டும். உடலுக்கு தீங்கு அருவருப்பான சுவை என்று தெரிந்தும் மதுவை நாடும் குடிகாரன். நோய் வரும் என்று தெரிந்தும் விலைமாதுவை நாடும் சாமானியன். வருமானம் போதாமை இருந்தும் கடன்படும் குடும்பத்தன். இப்படி உதாரணங்கள் எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.

“காதலையும் தொழிலையும் போட்டு குழப்பிக்கொள்ளாதே” என்று அடிக்கடி றோஸ் சொல்லுவாள். சளைக்காமல் இன்றைக்கும் மறுபடியும் நினைவுபடுத்தினாள்.

ஏதோ சொல்ல நினைத்து சலித்துக்கொண்டவள் வெறுப்பாக புன்னகையை உதிர்ந்தவாறு கண்களை கசக்கிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள். “அப்படி ஒன்றும் இல்லை. சற்று உடம்பலுப்பு அவ்வளவுதான்” எப்படியோ தெரியத்தான் போகிறது இப்போது விலாவாரியாக விளங்கப்படுத்துவதை தவிர்த்தாள்.

விடிய விடிய வேலை பார்க்கும் இருவருக்கும் இந்த வலி பொதுவானது என்றாலும் றோஸ்க்கு அவளின் சோர்வு சந்தேகத்தை கொடுத்திருக்கலாம். சாப்பிடும் போதும் உறங்க முன்னும் அவனைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறாள். இன்று காலையில் வரும் போதே பேயறைந்தவள் போல தலையை தொங்கவிட்டுக்கொண்டு வந்தவள் தன்னுடன் முகம்கொடுத்து பேசவில்லை என்பதால் றோஸ் சந்தேகப்பட்டதில் நியாயம் இல்லாமல் இல்லை.

தோழி கிளம்பிப் போனபின் கட்டிலில் நிமிர்ந்து அமர்ந்தாள். தலையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல வலித்தது. வலதுகையால் நெற்றியை அழுந்தி பிடித்தாள். ஒரு பனடோல் போட்டால் தான் இந்த வலி அடங்கும் என்று உள்மனம் சொல்லியது. அதுமட்டுமில்லை உடம்பின் எல்லா பாகங்களும் பச்சை இறைச்சியாக வலித்தது. இடுப்புக்கு மேல் பாகத்தை இடது வலதாக திருப்பி தசைகளின் இறுக்கத்தை இலகுவாக்க முனைந்தாள். மனம் மட்டும் அவனை சுற்றி வளைய வந்து கொண்டிருந்தது. எதையும் வலுக்கட்டாயமாக மறக்க நினைத்தால் அதன் தாக்கம் அதிகமாகுமே தவிர குறைவதில்லை. லிவிங் டு கெதரின் ஒரு பெண்ணுடன் ஆறுமாதம் இருந்தேன் என்று அவன் சொன்னதை மறக்க முடியாமல் துன்பப்பட்டதை கூட இப்போதும் நினைக்கிறாள். என்ன தலைக்கனம் இருந்தால் என்னுடன் இருக்கும் போதே அப்படி நடந்து கொண்டான். அதைச் சொல்லித் தனது வெளிப்படைத்தன்மையை காட்டினான். அன்றைக்குத்தான் முதன் முதலாக அவனுடன் சண்டைபோட்டாள். உண்மையில் அவளுக்கு அந்த உரிமை இல்லைதான். ஆனால் சொல்லப்படாத வெளிப்படையில்லாத உறவும் நெருக்கமும் இருந்தது.

அவனுடன் நிகழ்ந்த அறிமுகம் அதனூடு தொடர்ந்த உறவை விருப்பமில்லாமல் இன்றும் மீட்கிறாள்.

“பிறப்பு வேலைக்கும் சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்கு பாலம் அமைத்து விட்டிருந்தபோது அன்பு, பரிவு, கவனிப்பு என்று அகத்தின் உணர்ச்சிகளுக்கு புது அர்த்தம் கொடுத்தவனை எதேச்சையாக சந்தித்தேன். ஷாப்பிங் மால் நிறைந்து வழிந்த ஞாயிறு. இரண்டு செட் ஆடைகள் வாங்கிய நான் வெளியில் காற்றோட்டமாக புகைப்பிடிக்கும் மூலையில் சீக்ரெட் ஒன்றை பற்றவைத்தேன். பங்களாதேச தொழிலாளர்களில் சற்று உயரமாக வெளிறின சருமத்துடன் தரமான டீசேர்ட் ஜீன்ஸ் அணிந்தவன் என்னை நெருங்கினான். பெருவிரலை சுட்டுவிரலுடம் தட்டி லைட்டர் இருக்கிறதா என்று சைகையாலே கேட்டான். எடுத்துக் கொடுத்தேன். நல்ல ஆங்கிலம் பேசினான். ஓரளவு வருமானம் வரும் மேற்பார்வையாளர் தொழில் என்றும் கூறி என்னை விசாரித்தான்.

நான் சொன்னதால் வேலைசெய்யும் உடற்பிடிப்பு நிலயத்துக்கு வந்தான்.

முன்பெல்லாம் வாரத்தில் ஒரு மணித்தியாலம் என்றாலும் ஒரு கட்டத்துக்குப் பிறகு அடிக்கடி வரத் தொடங்கிவிட்டான். அவன்தான் என் எண்ணங்களில் நிறைந்திருந்தான் என்றால் அது மிகையில்லை. சில மாதங்களிலே அவனை பிடித்து விட்டது. ஆண்களில் எல்லோரும் வசீகரம் இல்லைதான். உருவம் பேச்சு நடந்து கொள்ளும் முறை பணம் என்பவை கவரும் தன்மை உள்ளவை என்று பொது அறிவுக்கு தெரியும். அவனிடம் இந்த நான்கும் அளவுடன் இருந்தாலும் பார்வையும் பேச்சில் இருந்த நளினமும் கூட என்னை கவர்ந்திருக்கலாம். எனக்கு மற்றவர்களிடம் கிடைக்காத எதிர்பார்க்காத மரியாதையை அவன் தந்தான் என்று நினைத்தேன். அதை மனப்பூர்வமாக உணர்ந்தேன். எதுவாக இருக்கும் என்பதில் தெளிவு கிடைக்கவில்லை. நான் விரும்புவதை வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலை. என் தொழில் அருவருப்பை தரலாம் என்ற பயத்தில் பின்வாங்கினேன். அவனுக்கும் என்மேல் காதல் இருக்குமா? அல்லது உடல் சுகம் மட்டும் தான் நோக்கமும் தேவையுமா? பலவாறு சிந்திக்க தோன்றினாலும் தொழிலையும் வாழ்க்கையையும் போட்டு குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. அவன் மற்றவர்கள் மாதிரி இல்லை. என்னுடன் இருக்கும் ஒரு மணி நேரத்தில் எனது தனிப்பட்ட வாழ்க்கையை கரிசனையுடன் காது கொடுத்து கேட்கும் பண்பு மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும். தன்னைப்பற்றியும் நிறைய சொல்லுவான். அதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்ற ஆராய்ச்சிகளை புறந்தள்ளினேன். சந்தேகம் சந்தோஷத்துக்கு எதிரி என்ற தெளிவு இருந்தது. பெயர், தொழில், குடும்பம் போன்ற அடிப்படை விடயங்களை சொல்லி அறிமுகமானவன். “பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் இருந்து எழுபது கிலோமீட்டர் தூரத்தில் எனது கிராமம் இருக்கிறது. விவசாயம் எனது குடும்பத்தொழில். படிப்பு சரியாக வரவில்லை. இடையிலே நிறுத்தி தொழில் கல்விக்கூடத்தில் படித்து சான்றிதழில் இந்தநாட்டில் வேலை கிடைத்தது. திருமணம் செய்துகொள்ளுமாறு வீட்டில் தொந்தரவு செய்தார்கள். சகோதரிகள் இருவருக்கும் திருமணம் முடித்து வைத்து பிறகு பார்க்கலாம் என்று பிற்போட்டுவிட்டேன்” என்றான். சிலதடவை எனது மடியில் கிடந்து தனக்கு பாடசாலையில் ஏற்பட்ட காதல் பிறகு இருபத்தைந்து வயதில் வேலைக்கு போகும் தருணம் முகிழ்ந்த காதல் என்று அடுக்குவான். அவை தோல்வியடைந்ததை சொல்லி விம்மலுடன் தலையை உயர்த்தி என் கழுத்தை வளைத்து தன்னை நோக்கி இழுத்து முத்தமிடுவான். சிறு வயது வறுமையும் எனக்கு அனுதாபத்தை கூட்டியது. பல இரவுகள் அவனுக்காக பரிதாபப்பட்டு இறைவனை பிரார்த்தித்தேன்.” தனக்குத்தானே பைத்தியம் போல அரற்றிக் கொண்டிருந்தாள்.

இருந்தாலும் அதிகம் உரிமை எடுக்க முடியாத நிலை.

இது தொழில் என்பதை விட உள்ளமும் உடலும் இயைந்து பரிமாறும் சேவை. ஆண் தேவையை தீர்க்க விரும்புகிறான். வருமானத்துக்கு பெண் சேவையை வழங்குகிறாள். இங்கே நியாயம் என்பது பெறும் பணத்துக்கு செய்யும் வேலையில் பிழையில்லாமல் இருக்கும் மட்டும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

இந்த அதிருப்திகரமான நிலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு மனதால் முயன்றாள்.

உண்மையில் இனிமையாகவும் சுலபமாகவும் வாழவே விரும்பினாள். அது சாத்தியப்படாமல் போகவே சமூகத்தால் இருட்டில் ஏற்றுக் கொள்ளும் இந்த தொழிலை வேறு வழியின்றி தெரிந்தாள். தாய்தான் முன்மாதிரியாக இருந்தார். வேறு தொழில் முனைப்புகள் சரிவராது என்று தெரிந்ததும் தாயிலாந்தில் இருந்து சிங்கப்பூருக்கு முகவர் மூலம் வந்தாள்.

 

(3)

வள் வேலை செய்யும் இடத்துக்கு போவதற்கு நான்கு பேருந்து தரிப்பிடங்கள் கடக்க வேண்டும். தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாள். பின்னேர வெயில் முகத்துக்கு அடித்ததால் பக்கவாட்டில் திரும்பி வரும் வாகனங்களை பார்த்தாள். மாலையில் நகரத்தை நோக்கி போகும் பேருந்து என்பதால் கூட்டம் குறைவாக இருக்கும். அதனால் அதிக நேர இடைவெளியில் தான் வரும். எதிர் திசையில் வாகனங்கள் நிறைந்திருந்தன. ஒன்றை ஒன்று முந்தும் அவசரத்தில் முண்டியடிக்கும் குழப்பமான எண்ணங்கள் போல அவை நகர்ந்தன. சில விட்டுவிட்டு ஹார்ன் ஒலியை எழுப்பியது வெறுப்பில் அவன் உமிழ்ந்த வார்த்தைகள் போல இருந்தது. அவளுடன் இன்னும் சில முதியவர்களும் காத்திருந்தனர். சலனமில்லா முகங்கள். சாந்தமாக பாதையை பார்த்துக் கொண்டிருந்தன. சற்று நேரம் அவர்களையே உற்றுப் பார்த்தாள். குழப்பங்களின் முடிவு சாந்தமும் அமைதியும் என்று அவளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

அவள் கண்களில் தூக்கக் கலக்கம் இருந்தது. நேற்றைய சம்பவத்தை நினைத்து பகலில் தூக்கம் சரியாக வராததன் விளைவு. கோபத்தில் அவன் பேசிய வார்த்தைகள் ஈட்டி மாதிரி குத்திக் கொண்டிருந்தது. குற்றம் இழைக்காமல் வசை வாங்குவது தண்டனை அல்ல. அது அவமரியாதை செய்யும் செயல். தன்மானத்தை களங்கப்படுத்தும் கேவலமான கீழ்த்தரமான மனிதன் செய்யும் செயல். செய்யும் தொழிலுக்குக்காக தன்மானத்தை இழக்க விரும்பவில்லை.

இப்படி திரும்ப திரும்ப எண்ணங்கள் விடாது கரையை மொத்தும் கடலலை போல மனதை தொந்தரவு செய்தது. பகல் முழுதும் தூங்காமல் உழன்றதால் சோர்வு வாட்டியது. மாலை உணவை முடித்து சரியாக எட்டுமணிக்கு வேலைக்கு போகவேண்டும். அவன் ஒன்பது அல்லது பத்து மணிக்கு தான் வழமையாக வருவான். நேரில் முகம் கொடுத்துப் பேசப் பயமாகவும் அதேவேளை வெறுப்பாகவும் இருப்பதை உணர்கிறாள். இனி அவனை பார்க்கும் சந்தர்ப்பத்தை தவிர்க்க என்ன செய்யலாம்? முதலாளிக்கு விஷயத்தை சொல்லி வேலை மாறலாம். அவன் தன்னை தெரிவு செய்தால் லீவு அல்லது வேறு வாடிக்கையாளர் புக் பண்ணி விட்டார் என்று தவிர்க்க சொல்லலாம். ஆனால் அவன் விடாப்பிடியாக அவள் தான் வேண்டும் என்று கேட்டால் முதலாளி வருமானத்தை இழக்க விரும்பமாட்டார். எனது சொல்லுக்கு மதிப்பிராது. ஜடம் போலத்தான் அவனை எதிர்கொள்ளவேண்டும். வார்த்தைகள் பரிமாறாத சூழல் சூனியமாக இருக்கும். கட்டற்ற அமைதியை அவன் விரும்பவில்லையென்றால் தன்னால் எதுவும் செய்யமுடியாத கையறுநிலைக்கு தள்ளப்படுவேன் என்று கலங்கினாள். குழப்பங்கள் நிறைந்த முடிவு தெரியாத நிலையை அண்மைக்காலத்தில் சந்திக்கவில்லை. பேருந்தும் வஞ்சகம் செய்யிகிற மாதிரி பிந்துகிறது. மனது ஒரு நிலையில் இல்லாத போது தான் எல்லாம் உடனே நடக்கவேண்டும் என்ற அந்தரம் வருகிறது.

வேலைசெய்யும் கட்டடத்துக்குள் நுழையும் போது முதலாளியும் அவளுடன் வேலைசெய்யும் அபி என்ற தாய்லாந்து பெண்ணும் வரவேற்பறையில் மங்கிய சிவப்பு வெளிச்சத்தில் இருந்தார்கள்.

இருவரும் சொல்லி வைத்தது போல அவளைப் பார்த்து சற்று ஏளனமாக சிரித்தனர். இந்த ஏளனம் சற்று பழக்கப்பட்டதாக இருந்தாலும் இன்று அதிகமாகவே உணர்கிறாள். வரவேற்பறையில் இரண்டு கறுப்பு நிற சோபாக்கள் இருந்தன. ஒவ்வொன்றும் மூவர் அமரக்கூடியவை. இரவு முழுதும் வண்ணங்கள் கலந்த மாய உலகம். அதில் பல முகங்களில் குணங்களில் மனிதர்களைக் காணலாம். புது உலகத்தை தேடி நிஜ உலகத்தை விட்டு சற்று ஒதுங்கும் மனிதர்கள். அவர்கள் பயத்தில் வாழ்பவர்கள். விளிம்புநிலை மனிதர்கள் போல உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் என்பதால் பயப்படுகிறார்கள். ஆம் அதுவும் அவர்களின் உரிமை என்பதை நிஜ உலகம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

“உனது ஆண் நண்பன் இன்றைக்கு சீக்கிரமாக வந்திட்டான்” அபிக்கு வழமைக்கு மாறாக மகிழ்ச்சியான விடயம் என்பது கேட்ட தொனியில் தெரிந்தது.

“சரி. அதற்கு நான் என்ன செய்வது?” எதிர்பார்க்காத பதில். இருவருக்கும் தெரியும் அவளை தவிர இதுவரை காலமும் எந்த பெண்ணையும் அவன் தெரிவு செய்ததில்லை. அவ்வளவு அன்னியோனியம்.

“இன்னொரு விஷயம் இருக்கு அதைக் கேட்டால் நீ அதிர்ச்சி அடைவாய்” முதலாளி பீடிகை போட்டார்.
“நான் அதிர்ச்சியடைந்து என்ன ஆகப் போகிறது. சொல்லுங்கள்” வெறுப்பு மண்டிய பதிலை உதிர்த்தாள்.

“உனக்கும் அவனுக்கும் சண்டைதானே?”

“சிறிய வாக்குவாதம்” சுரத்தே இல்லாமல் சொன்னாள்.

“அப்படி இருக்க வாய்ப்பில்லையே. ஏனென்றால் அவனின் நடத்தையில் வித்தியாசம் தெரிகிறது”

“இப்போது நான் என்ன செய்வது?”

முதலாளி சற்று தயங்கியபடி “இன்னொரு பெண்ணை தெரிவு செய்து உள்ளே அழைத்துச் சென்றுள்ளான்” என்றார்.

அவள் முகம் மலர்ந்தது. இருந்தும் பிரயத்தனப்பட்டு அதை மறைத்தாள். மனத்தின் குடைச்சல் சற்று தணிந்து லேசாவதை உணர்கிறாள். துயரம் நிறைந்த முன்னைய நாள் சம்பவத்திற்கு கிடைத்த ஆறுதல். கவலை தீர்ந்தாலும் மகிழ்ச்சி அடைய எந்த காரணமும் இருக்கவில்லை. தன்னை வெறுப்பேற்ற செய்திருந்தாலும் தொல்லை நீங்கியது போதும் என்றே நினைத்தாள். அதீத பற்றை விலக்குவதும் கூட ஆறுதலாக இருக்கலாம். கோபத்தில் கூட புதுசுகம் தேடி பழிவாங்குவது இதுவரை அவன் மேல் இருந்த நன்மதிப்பை அடியோடு அழித்தது. போதையில் தப்பு செய்தவன் கூட அது தெளியும் போது மன்னிப்பான் என்ற எடுகோள் பொய்த்துப்போனதாக நம்பினாள்.

அபி இன்னும் அவளின் சாந்தமான ஆனால் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிக் கிடந்த முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன ஒரு மாதிரி முகத்தை வைத்திருக்கிறாய்? உனது துக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்று இரக்கப்பட்டாள். அது இரக்கமா? அல்லது இகழ்ச்சியா? என்ற ஆராய்ச்சியில் இறங்கவில்லை. அலட்சியமான தோரணையுடன் அவளை பார்த்தாள். அதை அவள் பொருட்படுத்தவில்லை என்பதே உண்மை.

நிஜ உலகிற்கு வந்தவள் சோபாவில் பொத்தென்று விழுந்தாள். எதிர்பார்க்காமல் நேற்று வந்த மழை இன்றைக்கு வரவில்லை. ஜன்னலில் விலகிய திரை தெளிந்த வானத்தை காட்டிநின்றது. தெளிந்த ஓடையில் மிதக்கும் இலைகள் போல சில பறவைகள் சுதந்திரமாக நீல வெளியில் பறந்தன. கைப்பையை திறந்து முகப்பவுடரை எடுத்தவள் உள்ளே இரண்டு சிக்கன் பேகர் இருந்ததை பார்த்தாள். இப்போதுதான் ஞாபகம் வந்தது. திரும்பி “என்னிடம் இன்னொரு பேகர் இருக்கு. நீ சாப்பிடுகிறாயா?” என்று அபியை கேட்டாள்.

“தாராளமாக” என்று சிரித்தாள் அபி.


 

எழுதியவர்

ஆதவன் சரவணபவன்
இலங்கை - யாழ்பாணத்தில் பிறந்த ஆதவன் சரவணபவன் தற்போது பொறியியலாளராக சிங்கப்பூரில் வசிக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக சிறுகதைகள் எழுதி வரும் இவரின் கதைகள் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் பத்திரிகைகள், இணைய இதழ்கள் மற்றும் அச்சு இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் சிங்கப்பூர் முத்தமிழ் விழா 2023 & 2024ல் பரிசில்களை வென்றுள்ளன. இலங்கை மகிழ் பதிப்பக வெளியீடாக முதல் சிறுகதைத் தொகுப்பு "குல்லமடை" செப்டம்பர் 2024ல் வெளியானது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x