21 December 2024
primiya12

சிறு கருங்கல் குன்றென இறுகிக் கிடந்த மூட்டத்தின் எல்லா பக்கங்களிலும்,அங்கங்கு போடப்பட்டிருந்த பொத்தல்களிலிருந்து அரூபமாக எழுந்த புகை ஆகாயத்தை நோக்கி விரைவதை விழி தட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் லிங்கு. மூட்டம் கொளுத்தப்பட்டு இன்றோடு மூன்றாவதுநாள் ஆகிறது. உள்ளே அடுக்கப்பட்டிருக்கும் கருவேலங்கட்டைகள் வெந்து கரி விளைவதற்கு, இன்னமும் நான்கு நாள்கள் அல்லும் பகலும் அவனது குடும்பமே விழித்திருக்க வேண்டும்.குடும்பம் என்றால் அவனும், அவனது அப்பா பொன்பாண்டியும் தான்.

அம்மா!

“அவ மட்டும் இருந்திருந்தா நா இப்டி கரித்தூரா போயிருப்பனா”, திடீரென சுரந்த கழிவிரக்கத்தில், லிங்குவின் கண்கள் கலங்கின.தன்னில் உழன்று கொண்டிருந்தவனுக்கு புகையின் காட்டத்தில் தொண்டை கமறியது. கரி மூட்டக்குவியலிலிருந்து புகை வெளியேறும் பொத்தல்களை அவதானித்தான். புகையில் வெண்மையின் அடர்த்தி அதிகரித்திருந்ததைக் கண்டவுடன்,தேள் கொட்டியவனைப் போல, தண்ணீர்க் குடத்தைத் தூக்கிக்கொண்டு மூட்டத்தின் மீது சாத்தி வைக்கப்பட்டிருந்த ஏணிக் கட்டையில் பாய்ந்து ஏறினான் லிங்கு. இவ்வளவு புகை வந்தால் உள்ளே நெருப்பு பற்றிக் கொண்டு விடும். அடுக்கப்பட்டிருக்கும் கட்டைகள் கரியாக விளைவதற்குப் பதிலாக, எரிந்து சாம்பலாகி விடும்.

மூட்டக்குன்றின் உச்சிக்கு சென்றவன் கையோடு கொண்டுவந்த பிளாஸ்டிக் குடத்திலிருந்த தண்ணீரை தெளித்த போது மூட்டம் இஸ் என்ற சப்தத்துடன் ஒரு பாம்பைப் போல சீறியது. உதவி கேட்டு கூப்பாடு போட்டாலும் ஒரு ஆள்கூட வராத அத்துவானத்து மத்தியானத்தில், அவனும் மூட்டமும் மட்டுமே எஞ்சியிருந்த அந்த தனிமையின் செவிப்பறையில் அறைந்த அந்த சத்தத்துக்கு, அவனது பிடறி மயிர் சிலிர்த்தது.

அவனுக்கு மீண்டும் அம்மாவின் நினைவு வந்தது. இதே போன்று தண்ணீர் தெளித்து மூட்டத்தின் நெருப்பை அடக்கச் சென்றவள், உள்ளே கனிந்து விளைந்திருந்த நெருப்பின் மீது தவறுதலாக முகம் குப்புற விழுந்து விடவே மார்பு வரை வெந்துபோயிற்று. கவனிப்பாரற்று கிடந்தவளை வீட்டிற்கு தூக்கி வந்த பிறகிலிருந்து,அவளின் ஆவியடங்கும் வரையிலுமான அந்தமூன்று வாதையின் நாள்களில் இப்படித்தான் அவள் ஒரு பாம்பைப் போல நடுவீட்டில் சீறிக்கொண்டு கிடந்தாள்.

அரைகுறையாய் வெந்த பருத்த தூர்க்கரியைப் போல, முண்டும் முடிச்சுமாய் இருந்த அந்த முகத்தில் தனது பிரியத்திற்குரிய அம்மாவை தேடிக் கொண்டே இருந்தான் லிங்கு. “உங்கப்பந்தான் தள்ளிவுட்டான் லிங்கு…”,திணறித் திணறி தனது கடைசி வார்த்தைகளை அவனுக்கு மட்டுமாய் கேட்கும்படி பேசி முடித்தவுடன் அதற்காகவே காத்திருந்தது போல அம்மா அப்போதே செத்துப்போனாள்.

அவள் சிதைக்கு விறகடுக்கிய பிறகு பொன் பாண்டியை கடைசி கொள்ளி வைக்க கூப்பிட சென்ற லிங்கு,முற்றிலும் எரிந்து சாம்பலாகிக் கிடந்த மூட்டத்தின் கூளத்தினுள், தனது அம்மாவின் மஞ்சள்கயிறு பொசுங்கி ,அறுந்து விழுந்து விட்ட தாலிச் சரட்டினை தேடிக் கொண்டு கிடந்த தகப்பனைக் கண்டான்.அன்று முதல் லிங்குவின் கண்களுக்கு பொன்பாண்டி வேறு ஆளாகத் தெரிகிறான்.

நிறைபோதையிலிருந்த பொன்பாண்டியை கைத்தாங்கலாக அழைத்து வந்து பிணத்துக்கு கொள்ளியிடச் செய்தனர்.அப்போதும் அவன் தன்னுணர்வில் இல்லை. சிதையை நோக்கி,” வேலங்காட்டு மாரியாத்தா! கரி ஒண்ணொண்ணும் வைரமா விளையணும். என் கடனெல்லாம் தீரணும்”, என்று தலைக்கு மேலே கையெடுத்து கும்பிட்டுக் கொண்டிருந்தான்.

அம்மாவின் மறைவுக்கு பிறகு,லிங்கு பள்ளி செல்லுவது படிப்படியாகக் குறைந்து பிறகு நின்றே போயிற்று.வீட்டில் ராசாத்தியைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டான் பொன் பாண்டி.அவள் சீமைக் கருவேலமரம் போன்று அந்த வீட்டின் சாற்றினை உரிஞ்சி வளர்ந்தாள்.அவளது வயிறு வளர வளர,லிங்குவின் வயிற்றின் தீயும் வளர்ந்தது.

மண்வெட்டியை மாற்றிப் பிடித்து தன் பலம்கொண்ட மட்டும் கரிமூட்டத்தை அடித்து இறக்கினான் லிங்கு. உள்ளே பருத்த கட்டைகளையும், தரத்துக் குச்சிகளையும் ஒன்றன் மீது ஒன்றாக காற்றுப் புகாத வண்ணம் அடுக்கி, அதன் மீது வைக்கோல் பரப்பி அதனைச் சுற்றி சேறு குழைத்துப் பூசி அவனும் பொன்பாண்டியுமாக, அடுக்கியபோது இரண்டு ஆள் உயரம் இருந்திருக்கும் அந்த மூட்டத்திற்கு. அசப்பில் ஒரு யானை படுத்திருந்தது போல தோற்றம் காட்டி மிரட்டிக் கொண்டிருந்தது. மூன்று நாள்களில் உள்ளே தனல் கனன்று கனன்று தின்றதில், பாதி கருவேலம் கட்டைகள் எரிந்து விடவே மூட்டம் ஒரு ஆள் உயரத்திற்குக் குறைந்திருந்தது.

ரப்பர் செருப்புகளை தாண்டி உள்ளே கனன்று கொண்டிருந்த தணலின் வெக்கை காலைச்சுட்டது. லிங்குவின் உடல் முழுதும் வியர்வை துளிர்த்து சொட்டியது. எதைப் பற்றியும் யோசியாதவனாக,லிங்கு மண்வெட்டியால் மூட்டத்தை அடித்து அடித்து இறுக்கினான். இப்படி அடித்து இறக்கினால் தான் மூட்டம் கெட்டிப் படும். அல்லது கூடு பாய்ந்து, கால் வைக்கும் ஆளை உள்ளே இழுத்துவிடும். பின்பு, விளைவதெல்லாம் உதவாக்கரியாகி விடும்.

அவன் மூட்டத்தை விட்டு கீழிறங்கியபோது அவனது பள்ளியில் மதிய உணவிற்கான மணி ஒலிப்பது சன்னமாக காதில் விழுந்தது. இன்றைக்கு வெள்ளிக் கிழமை… நாலாவது பாடவேளை விமலா டீச்சர் வந்திருப்பாள். “லிங்க குமரன் வரல்லையா?”, என்று அவனது நண்பர்களை எல்லாம் துளைத்திருப்பாள். அவர்களது பதில் என்னவாயிருந்திருக்கும்…

‘அவனுக்கு உடம்பு சரியில்ல டீச்சர்!’ நண்பன் சபரிராஜன் கண்டிப்பாக இப்படித்தான் சொல்லியிருப்பான்.

வகுப்புத் தலைவன் மயில் ராகவனுக்கு பொய் சொல்லவராது. எனவே, ‘அவங்கப்பாரு கூட மூடம் போட போயிட்டான் டீச்சர்!’ என்று அவன் டீச்சரிடம் உண்மையை சொல்லியிருக்கக்கூடும்.

“அவன்லாம் இனி படிக்க வரமாட்டான் டீச்சர்” என்று சொல்லுகிற போது மாரியின் குரலில் சந்தோஷம் இருந்திருக்கலாம்.வருகிற முழுப் பரீட்சையில் அவனுக்கு முதல் ரேங்க் கிற்கான போட்டியாள் குறைந்து விட்டதல்லவா?

பதில் என்னவாயிருந்தாலும் விமலா டீச்சர் அவனுக்காக வருந்துவாள் என்று அவனுக்குத் தெரியும்.

“லிங்குவ எப்டியாச்சும் பள்ளிக்கூடத்துக்கு வரச் சொல்லுங்கடா”, என்று அவனது நண்பர்களை நச்சரித்திருப்பாள்.

“என்னைய அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போறியா சபரி”, என்று அவனது நண்பனைக் கேட்டிருப்பாள். என்னவானாலும் இந்த மூட்டக்காட்டிற்கு மட்டும் விமலா டீச்சர் வந்துவிடவே கூடாது என்று நினைத்துக் கொண்டான் லிங்கு.

குனிந்து, தான் அணிந்திருந்த சட்டையை ஒருதரம் பார்த்துக் கொண்டான். அதுவே அவனது பள்ளியின் சீருடை.  இரைதேட காகங்கள் பறந்து போனபிறகு அவற்றின் கூட்டை நோட்டம் விடுவது லிங்குவுக்கு மிகப் பிடித்தம். அப்போதுதான் மயிர் முளைக்கத் தொடங்கியிருக்கும் அந்த சின்னஞ்சிறிய உயிர்களை அவற்றுக்கு வலித்துவிடாமல் தொட்டுத்தொட்டு பார்ப்பது அவனுக்கு சுவாரஸ்யமான விளையாட்டு. நான்கு நாள்களாக தொடர்ந்து அணிந்து கொண்டிருக்கும் அந்த சட்டையையும் அப்படித்தான் அவன் தொட்டுத்தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பள்ளிக்கும் அவனுக்குமான ஒரே உறவு இப்போது இந்த சட்டை மட்டும்தான். அங்கங்கு கரி அப்பி நிறம் மங்கத்தொடங்கியிருந்தாலும் அதன் புதுக்கருக்கு இன்னும் மாறாதிருந்தது.அந்த சட்டையை அவனுக்கு விமலாடீச்சர் தான் வாங்கிக் கொடுத்தாள்.

போன வாரத்தில் ஒருநாள் வகுப்பில் உலகவரைபடத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்க ஆள் தேவைப்பட்ட போது முன் பெஞ்சில் இருந்தும், தனது கக்கத்துக் கிழிசலுக்கு பயந்து, முன்னே போகாமல் இருந்து விட்டான் லிங்கு. “இங்க வாடே லிங்கு. இந்த மேப்பை ஒரு கை பிடியேன்”, என்று அவள் கெஞ்சலாக கேட்டபிறகும்  இறுகி அமர்ந்திருந்த லிங்குவை நெறித்த புருவங்களோடு பார்த்துக் கொண்டிருந்தாள் விமலா டீச்சர்.

அடுத்த நாள் அவனது பெஞ்சில் கூடலிங்கம் துணிக்கடையின் பை இருந்தது. “சட்ட கிழிஞ்சிருக்குன்னு வாய்ல சொல்ல வேண்டியது தான.. பெரிய சண்டியர் மயிரு”, செல்லமாக காதைப் பிடித்து முறுக்கிய போது கண்ணீர் வந்து விட்டது அவனுக்கு.

வயிறு பேயாய் பசித்தது லிங்குவுக்கு.இந்நேரம் சத்துணவு போட்டிருப்பார்கள். மயில் ராகவன் மட்டை ஊறுகாய் கொண்டு வந்திருப்பான். காய்ந்த வாயில் ஊறுகாயின் நினைப்பில் எச்சில் ஊற்றெடுத்தது. பள்ளிக்கு சென்றிருந்தால், அரைவயிறாவது நிறைந்திருக்கும். இந்நேரத்தில்,அப்பா எங்கே குடித்துவிட்டு விழுந்து கிடக்கிறதோ… மூட்டத்தை அத்துவானத்தில் விட்டுவிட்டு அவனால் பாதியில் வீட்டுக்கு போகவும் முடியாது. போனாலும், அவனது சித்தி ராசாத்தி எல்லாவற்றையும் கழுவிக் கவிழ்த்தியிருப்பாள்.

“வெளிலே சாப்பிட்டுட்டு வருவன்னு நெனச்சிட்டன் ராசாவே! எல்லாத்தையும் ஒழிச்சிப்போட்டு இப்பத்தான் கட்டைய சாய்ச்சேன். நாளாவ நாளாவ உங்கட தம்பிப்பாப்பா கூட மல்லுக் கட்ட முடியல ராசாவே!”, என்று தனது நிறைமாத வயிற்றை தடவுவாள் ராசாத்தி.

திடீரென்று சாம்பார் வாசனை வருகிறது போல பிரம்மை. சைக்கிள் பெல் சத்தம் வேறு. அவனது நண்பன் சபரிராஜ் தான்…

“லே நாயே! ஏம்ல பள்ளிக்கூடத்துக்கு வரல்ல”

அவனிடம் பதிலில்லை.

“இனிமே பள்ளிக்கூடத்துக்கு வரமாட்டியா லிங்கு?”

“இந்த மூட்டம் முடிய இன்னும் நாலு நாள் ஆயிரும்ல. அடுத்த காட்டையும் பாட்டத்துக்கு எடுத்துருக்கு அப்பா. ஒத்தைல அதால சமாளிக்க முடியாது சபரி.”

“உங்க சித்திக்காரி என்ன பண்ணுதாளாம்”

லிங்கு தலைகவிழ்ந்தான். பின் தொடுவானத்தை வெறித்தான். நீரின்றி பாளம் பாளமாக வெடித்துப் பிளந்திருக்கிறது நிலம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருவேலங்காட்டைத் தவிர எதுவும் இல்லை. கருவேலம், பொட்டு நிழலை பூமிக்கு தராது. ஒரு ஆயாசத்துக்கு கூட இவற்றின் அடியில் தலைசாய்க்க முடியாது. வெக்கை இருமடங்காக தலையில் இறங்கும். காக்கை குருவி கூட கூடு கட்ட அண்டாது.ஊரில் மழை கண்டு மாதங்கள் இருக்கும். ஆனாலும், கொஞ்சம் கூட பசுமை மாறாமல் தன்னை வைத்திருக்கும் இந்த கருவேல மரங்களை இன்று எவ்வளவு வெறுக்கிறானோ, முன்பு அவற்றை அவ்வளவு பிடிக்கும் அவனுக்கு.

விடுமுறை நாள்களிலும் பள்ளி விட்ட பிறகும் கருவேலங்காட்டில் தான் கூத்தாடுவார்கள் லிங்குவும் அவனது தோழர்களும். அடர்ந்து வளர்ந்து கிடக்கும் கருவேல மரத்தின் தோகையை வளைத்துப் பின்னி, அவர்களுக்கு ஒரு ஜாகையை அமைத்துக் கொள்ளுவார்கள். வானில் நட்சத்திரங்கள் புலப்படுகிற வரையில் அங்கேயே கிடையாய்க் கிடப்பார்கள். பிறகு கூட்டத்தில் ஏதாவது ஒருவன், பூவரச மரத்தில் தூக்குப் போட்டு ஜோடியாக செத்த காதலர்களின் கதையை ஆரம்பிப்பான். பூவரச மரக்கிளைகளில் காற்றிலாடும் எருக்கொடிகளின் மூட்டைகளை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். பயம் ஒரு பாம்பைப் போல ஊர்ந்து வரும். எங்காவது புதரில் அரவம் கேட்டாலும் அலறிக்கொண்டே வீட்டை நோக்கி ஓட்டம் எடுப்பார்கள்.

மின்னல் போல ஓடி புதர்களில் மறையும் கருவாலிகளைப் பிடிக்க கண்ணி வைத்து மணிக்கணக்கில் புதர் மறைவில் பம்மிக் கிடப்பார்கள். கண்ணிகளில் மாட்டிக் கொள்கிற கருவாலி குஞ்சுகளை அங்கேயே முள் கூட்டி தீ வளர்த்து சுட்டு தின்பார்கள். சபரி ஒடக்கானைப் போல சரசரவென்று பனையேறுவதில் வல்லாள கண்டன். மாலை நேரத்தில் பனையின் மீது ஏறினானென்றால்,சுண்ணாம்பு பூசி கட்டி வைத்திருக்கும் கலயங்களின் கழுத்து வரையிலும், பனம்பாளைகள் சலிக்காது சுரந்திருக்கும் பதநீரை சொட்டு சிந்தாது கீழே இறக்கி விடுவான். நண்பர்கள் அனைவரும் வயிறு முட்டக் குடித்துவிட்டு பாட்டக்காரன் வருவதற்குள் தடத்தையும் அழித்து இடத்தை காலிசெய்து விடுவார்கள்.  அப்போதெல்லாம் காடு லிங்குவுக்கு சலித்ததேயில்லை…

அம்மா இறந்த பிறகுதான் முதல்முறையாக முள் வெட்ட வந்தான் லிங்கு. மூட்டம் போட கட்டை தரிக்க ஒரு ஆள் கூலி மிச்சமென்று லிங்குவை பழக்கினான் பொன்பாண்டி. பிஞ்சுக் கையில் முதல் நாளே முள் கீறி விட்டது. மூன்று விரலால் அள்ளித் தின்கிற போது முதன்முதலாய் தாயை நினைத்து அழுதான் லிங்கு.

“சாப்பிட்டியாலே!”

சைக்கிளில் இருந்து இறங்கினான் சபரி. சைக்கிள் கேரியரில் கட்டி வைத்திருந்த நெகிழிப் பொட்டலத்தில் ஒன்றை பிரித்து அவனிடம் நீட்டினான்.

“ஸ்கூல்ல கொள்ள பயலுவ ஆப்சென்ட்டு போட்டானுவ. எல்லாம் ஒன்ன மாறி ஒடங்காட்டுக்கு மோடம் போட போயிருப்பானுவ. சோறும், முட்டையும் ஏகத்துக்கு மீந்து போச்சு. வூட்டுல அம்மா வெள்ளனே வேலைக்கு போயிட்டு. தாத்தா கஞ்சிக்கி விதியத்து கெடக்கும்.  அதான் சோத்த கொண்டு போயி குடுக்க போறேன். நீயும் தின்னுடே! நா வாரேன்.. சோத்த குடுத்துட்டு திரும்பயும் ஸ்கூல் போகனும். மொத பிரீடு நம்ம விமலா டீச்சர்டே…”,

சபரி சந்தோஷமாக சைக்கிள் மிதித்துச் சென்றான்.

லிங்குவுக்கு பொறாமையாக இருந்தது. சோற்றை தின்று விட்டு மூட்டத்தின் மீது கண்ணானான்.

பொழுது மசங்கிய பிறகு தள்ளாடியபடி பொன்பாண்டி வந்தான்.

“யாருல அவ…”

“யாரு…”

“அந்த சிலுவ போட்ட டீச்சர்.”

“மத்தியானம் உன்ன தேடிக்கிட்டு ஊட்டுக்கு வந்திருந்தா. நல்ல சித்தா, ஒசரமா, வெடவெடன்னு..”

“விமலா டீச்சரா?நம்ப வூட்டுக்கு வந்துதா..நீ என்னப்பா சொன்ன?”

“உன்னைய அது ஊட்டுக்கு கூட்டிகிட்டு போயி படிக்க வைக்குதாம். புள்ள மாறி பாத்துக்குமாம்,படிக்க அனுப்பனுமாம்.எனக்கு பாடம் எடுக்குது.”

லிங்குவுக்கு கண் கலங்க ஆரம்பித்தது.

“அதுகிட்ட நீ என்னப்பா சொன்ன…”

“யார் புள்ள யாரு ஊட்டுல வளர்றது?”

“நீ என்னப்பா சொன்ன…”

“அதுக்கு வவுத்துல ஒரு புழு பூச்சி இல்லையாம்லடே ,ராசாத்தி சொன்னுச்சு. அதான், எம்புள்ளைய எதுக்கு டீச்சர் கூப்புடுதீய? உங்களுக்கு புள்ள தான வேணும். நான் வேணும்னா ஊட்டுப்பக்கம் வந்துட்டு போறேன்னேன்.அழுதுட்டே போயிருச்சு!”

அசிங்கமாக சிரித்த பொன்பாண்டியைப் பார்க்கவே அருவருப்பாயிருந்தது லிங்குவுக்கு. மூட்டத்தின் மீதேறி ஆவேசத்துடன் தண்ணீரைத் தெளிக்க ஆரம்பித்தான். உள்ளிருந்து அம்மாவின் மூச்சின் சீறல் கேட்டது.

லிங்கு வானில் ஒன்றிரண்டாக தலைகாட்ட துவங்கியிருந்த விண்மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“லிங்கு… இந்தாடே! உனக்கு ஒரு சர்பிரைஸ்”

“என்ன டீச்சர் இது”

“நீ ரொம்ப நாளா கேட்டல்லடே.. டிக்சனரி!”

“எனக்கே எனக்கேவா டீச்சர்?”

“ஆமா…நா இந்த பள்ளிக்கூடத்த விட்டு போனாலும் நீ இத பத்திரமா வெச்சுக்கணும்.”

“நீங்க போயிருவீங்களா டீச்சர்.”

“நானும் என் ஊரப்பாக்க போகணும்லடே…”

“நீங்க போகக் கூடாது டீச்சர்!”

“சரிடா போவல… தெனைக்கும் டிக்சனரிய தொறந்து ஒரு வார்த்தைய எடுத்து படிக்கணும் கேட்டியா.”

“சரி டீச்சர்!” லிங்கு தனது கால்சட்டைப் பையிலிருந்து அந்த கையடக்க அகராதியை எடுத்தான். அரிக்கேன் விளக்கைத் தூண்டியவன், அகராதியை நடுவாந்தரமாக பிரித்ததும் கண்ணில் பட்ட முதல் வார்த்தையை எழுத்துக் கூட்டி வாசித்தான்.

Revenge- பழிக்குப் பழி; பழிவாங்குதல்.

குடிபோதையில் மல்லாந்து கிடந்த பொன்பாண்டியின் அருகில் வந்தான் லிங்கு. காலியாகி விட்டிருந்த நீர் தெளிக்கும் பிளாஸ்டிக் குடத்தை தகப்பனின் கையெட்டும் தூரத்தில் கீழே வைத்தான். அதனுள், அரிக்கேன் விளக்கினைப் பற்ற வைப்பதற்காக வாங்கி வைத்திருந்த ஒரு போத்தல் சீமெண்ணையை ஊற்ற ஆரம்பித்தான்.


 

எழுதியவர்

ப்ரிம்யா கிராஸ்வின்
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தை சார்ந்தவர் ப்ரிம்யா கிராஸ்வின். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். இவரின் கவிதைகள், சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி இருக்கிறது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “தப்பரும்பு” வாசகசாலை பதிப்பகத்தின் வெளியீடாக 2022-ஆம் ஆண்டு வெளியானது.
Subscribe
Notify of
guest

3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
osai chella
osai chella
3 months ago

அருமை

இனியன்
இனியன்
3 months ago

யதார்த்தமான வாழ்வியலை கண் முன்னே காட்டிக்கொண்டு நகரும் கதை மாந்தருள்களால் தான் நிறைந்துள்ளது யதார்த்த உலகும். எல்லா நேரங்களிலும் மன்னித்தலென்பது பழி வாங்கலாகாது.. பழி வாங்கல் என்பது கூட சில நேரங்களில் சில பாவ‌மன்னிப்பாகவே..

நல்ல கதை..

Gowtham Arul
Gowtham Arul
3 months ago

அருமையான கதை தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி

You cannot copy content of this page
3
0
Would love your thoughts, please comment.x
()
x