“நம் சுற்றுலாக் குழுவின் ஆட்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள் தானே. அக்கம் பக்கம் திரும்பிச் சரி பார்த்துக் கொண்டு யாராவது இல்லையெனில் சொல்லுங்கள். சரி. இப்போது நாம் இந்தச் சுற்றுலாவின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம்”, என்றார் எங்கள் சுற்றுலாக் குழுவின் தலைவியும் வழிகாட்டியுமான அந்த ‘இத்தாலிய’ மங்கை மரியானா. நான் ஏற்கனவே அவர் பேச்சு குறித்து அவதானித்து வைத்திருந்தது மீண்டும் என் நினைவிற்கு வந்தது.
அவர் பேசும் பொழுது எல்லா இத்தாலியர்களைப் போன்றே மொழியைத் தன் அழகிய வல்லினத் தேரில் ஏற்றி உழுது கொண்டே செல்கிறார். அது அவர்கள் மொழியின் உச்சரிப்பு இயல்பு என நினைக்கிறேன். அவர் பேச்சில் இருக்கும் வலுவும் ஆக்கிரமிப்பும் ஒரு இயல்பான அழகியலைக் கொண்டுள்ளது. ரோஜாப்பூ முட்செடியில் தானே வளர்கிறது. மேலும் அவர் ‘வேட்டிகன்’ நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர் வேறு. தான் முனைவர் பட்டம் படிக்கும் ஒரு சரித்திர மாணவி என்றும், இது தன் பகுதி நேர வேலை என்றும் மரியானா முன்பே சொல்லியிருக்கிறார்.
அவர் ஆராய்ச்சியின் தலைப்பு – ‘ரஃபேலின் கட்டிடக்கலை வரைபடங்கள்: வேட்டிகன் நகரத்தின் நிகழ்த்தப்படாத திட்டங்கள் – வேட்டிகன் நகரத்தின், நகர்ப்புற வடிவமைப்பில் ரஃபேலின் உபயோகப்படுத்தப்படாத கட்டிடக்கலை ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள் கொண்டு, அவை சாத்தியப்படுத்தப்பட்டிருந்தால் அதன் தாக்கம் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்த ஒரு விரிவான பகுப்பாய்வு. அந்த வரைபடங்களை அப்படியே முப்பரிமாணத்தில் உயிருள்ள அசையும் கணினி ஓவியங்களாக்கி அவற்றை சான்றுகாளாகப் பயன்படுத்துகிறாராம்.
“‘செயின்ட் பீட்டர்ஸ் பேசிலிக்கா’ செல்ல இந்தக் கட்டிடத்தை விட்டு வெளியேறி அடுத்த கட்டடத்திற்குச் செல்ல வேண்டும். வெளியே போகும் போது புகை பிடிக்கவோ வேறு எதையாவது வேடிக்கை பார்க்கவோ தூண்டப்பட்டு விலகிச் சென்று தொலைந்து விடாதீர்கள்”.
அந்த அறையின் வாயிலின் அருகிலிருந்த ஒரு பெயர்ப் பலகையில் ‘உஸ்கிட்டா’ என்று எழுதியிருந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று மரியானாவை கேட்டபோது, தேஜஸ்வினி முந்திக் கொண்டு பதில் சொன்னார், “ஃபெரெஞ்சில் ‘சார்ட்டி’ என்பதற்கு என்ன அர்த்தமோ அதே தான். இதற்கு வெளியேற்றம் – ‘எக்ஸிட்’ – வெளியேறும் வாயில் என்று பொருள்.”
எங்கள் கூட்டத்தில் உள்ளவர்களை ஒவ்வொருவராக மீண்டும் ஒரு முறை வேகமாகக் கவனித்தேன். தொலைந்து போனால் தேட வசதியாக எளிதில் நினைவில் வரக் கூடிய சில முகங்களை மீண்டும் மூளையில் பதித்துக் கொண்டேன். அந்தப் பட்டியலில் தேஜஸ்வினியின் முகம் மீண்டும் முதலிடம் பிடித்தது. எங்கள் குழுவிலேயே புத்திசாலி என நாங்கள் எல்லோரும் ஒரு மனதாகத் தீர்மானித்து வைத்திருந்த பெண் தான் தேஜஸ்வினி. மிக இயல்பாக தேஜஸ்வினியும் நானும் அந்தக் குழுவிற்குள்ளேயே தானே அமைந்து உருவான ஒரு தற்காலிக ஜோடியாகி அருகருகே பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். தேஜஸ்வினி, மரியானாவுக்கே சரித்திர வகுப்பு எடுத்து விடக் கூடியவர்.
அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியேறிய நொடி வெய்யில் எங்கள் தலையில் தரையிறங்கியது. படியிறங்கியபோது தேஜஸ்வினி என்னைப் பார்த்து “எனக்குத் தாகமாக இருக்கிறது அந்தச் சுனைக்குப் போய் நீர் பிடித்து அருந்திவிட்டு வரலாமா”, எனக் கேட்டார்.
நான் மரியானாவை பார்த்தேன். அதைக் கவனித்த அவர் “சீக்கிரம் ஆகட்டும்”, என்றார்.
நாங்கள் வேகமாக முன்னகர்ந்தோம். தேஜஸ்வினி சுனை என்று சொன்னது அங்கிருந்த ஒரு குடி நீரூற்றினை. இரண்டு அடுக்குகளில் நீர்த் தொட்டிகள் இருக்க, முதல் அடுக்கிலிருந்த நீர்த் தொட்டியின் விளிம்பிலிருந்த குழாய்களிலிருந்தும், முதல் அடுக்கு நீர்த் தொட்டியின் மேல் இருந்த சிறு தூணின் குழாயில் இருந்தும் நீர் ஊற்றிக் கொண்டே இருந்தது. நாங்கள் அதில் எங்கள் பாட்டில்களை நிறைத்து அந்த பாட்டில் நீரைத் தூக்கிப் பிடித்துக் குடித்து முடித்ததும், அந்த நீரூற்றின் இடப்புறம் இருந்தச் சுவரின் மேல் நிறுவப்பட்டிருந்த அந்தச் சிலையையும் அதன் அடியில் எழுதப்பட்ட பெயரையும் படித்துப் பார்த்து தேஜஸ்வினி, “யார் இந்த ‘செயின்ட் க்ரெகரி’ என்ற ஒளிகாட்டி” என வினவினார்.
“என்னைக் கேட்டால்”, என்றேன் நான். மரியானாவை கண்களால் தேடினோம். அவர் எங்கள் அருகில் தான் இருந்தார். குழாயில் வழிந்த குடிநீரை அப்படியே தன் வலது கையில் அள்ளி அள்ளிப் பருகியபடியே சொன்னார் “அவர் தான் ‘ஆர்மீனியாவில்’ கிருத்துவத்தை வளர்த்தெடுத்தவர். கிளம்பலாமா”.
அந்தப் பளிங்குச் சிலையின் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் தேஜஸ்வினி. செயின்ட் க்ரெகரியின் வலக் கையில் வெண்கலச் சிலுவையும் இடக் கையில் புனித பைபிளும் இருந்ததைக் கவனித்தேன். அந்தச் சிலை இருபது அடி உயரமாவது இருக்கும்.
மரியானா தேஜஸ்வினியை மீண்டும் பார்த்து “கிளம்பலாம்”, என்றார்.
நாங்கள் நடந்து சென்று செயின்ட் பீட்டர்ஸ் பேசிலிக்காவிற்குள் நுழையும் முன் அந்தத் தங்க நிறக் கதவைக் கண்டோம்.
“அது தான் புனிதக் கதவு. அதில் பொறிக்கப்பட்டுள்ள சின்னஞ்சிறு சிற்பங்கள் எல்லாம் தங்கம் அல்ல, வெண்கலம். இதில் கிருத்துவ மதம் சார்ந்து மொத்தம் பதினாறு காட்சிகள் பதிக்கப்பட்டுள்ளன. எப்போதுமே மூடி இருக்கும் இந்தக் கதவு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் திறக்கப்படும். இந்தக் கதவின் மறு பக்க வாயில் ‘சிமெண்ட்’ சுவரால் மூடப்பட்டிருக்கும். இது திறக்கப்பட வேண்டிய நாளில் போப் ஆண்டவர் ஒரு சுத்தியலால் மூன்று முறை சிமெண்ட் சுவரைத் தட்டுவார். பின்னர் சுவர் உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு போப் ஆண்டவர் முதலில் அதன் வழி வருவார். அதன் பின்னரே யாத்திரிகர்கள் இந்தக் கதவின் வழி நுழைவர்”, என மரியானா முடித்ததுமே நான், “அட இது கிட்டத்தட்ட இந்து மதத்தின் பெருமாள் கோயில் பரமபத வாசல் போலவே தான். ஆனால் அது வருடம் ஒரு முறை திறக்கப்படும்”, என்றேன்.
“அப்படியா”, என ஆச்சரியத்துடன் கேட்டார் மரியானா.
செயின்ட் பீட்டர்ஸ் பேசிலிக்காவிற்குள் நுழைந்ததுமே உள்ளே நீந்திக் கொண்டிருந்த மனித கூட்டத்தைப் பார்த்து ஸ்தம்பித்துப் போனேன். அந்தக் கூட்டத்தில் தொலையாமல் மீண்டால் அதுவே ஒரு வெற்றி தான். மரியானா எங்கள் குழுவைப் பார்த்துச் சொன்னார் “கூட்டம் மிக அதிகமாகி விட்டது. என்னைக் கவனமாகப் பின் தொடருங்கள். இந்த பேசிலிக்காவை சுற்றிய பிறகு நாம் பிரியப் போகிறோம். உங்கள் ஒலிக் கருவிகளை என்னிடம் வெளியேறும் வாயிலில் மறக்காமல் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். வெளியேறியதும் இந்த செயின்ட் பீட்டர்ஸ் பேசிலிக்காவின் உப்பரிகையில் ஏறி இந்நகரின் முழு அகலப் பரப்புக் காட்சியைக் காணத் தவறாதீர்கள்”.
நான் தேஜஸ்வினியைப் பார்த்து “இன்னும் கொஞ்சம் நேரத்தில் நாம் பிரியப் போகிறோம் என்று மரியானா சொன்னதும் தான் இது பிரிவு என்னும் சொல்லுக்குத் தகுதியான ஒரு நல்ல சந்திப்பாக இதுவரை திகழ்ந்திருக்கிறது என்பதையே நான் உணர்கிறேன். உங்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்களேன்”, என்றேன்.
“நான் ஒரு திரைப்பட இயக்குநர். ஆனால் நான் எடுப்பது சுதந்திரச் ‘சினிமா’. ஒரு தனியார் நிறுவனம் தங்களைக் கலைப் புரவலர்களாகவும் நிறுவிக் கொள்ள எனக்கு உணவு, தங்குமிடம் மற்றும் ஊக்கத் தொகை கொடுத்து ஒரு வருடம் ‘ஏம்ஸ்டர்டேமில்’ தங்கி விருப்பப்பட்ட படம் எடுக்க அழைத்ததால் ‘ஈரோப்’ வந்தேன். இந்த வார இறுதி ஓய்வு கிடைத்ததால் ரோம் வந்தேன். மேற்கு வங்காளத்தில் பிறந்து வளர்ந்தேன். நீங்கள்?”.
நான் என்னைப் பற்றிச் சொன்னேன்.
மரியானா, “அதோ அது என்ன எனத் தெரிகிறதா”, எனக் கேட்டார்.
அவர் காட்டிய திசையில் அந்தப் புனிதக் கதவின் மறுபக்கம் இருந்தது. அந்தச் சுவரின் மேல் ஒரு வெண்கலச் சிலுவை பதிக்கப்பட்டிருந்தது.
“செயின்ட் பீட்டரின் சமாதி இந்த தேவாலயத்தின் அடியில் இருக்கிறது. செயின்ட் பீட்டர், ஏசுவின் பன்னிரண்டு பிரதான சீடர்களுள் ஒருவர். இங்கே தான் அவர் விருப்பப்படியே அவர் தலைகீழாகச் சிலுவையில் அறையப்பட்டார். இதற்கு வெளியில் இருப்பது தான் செயின்ட் பீட்டரின் சதுக்கம். அங்கே தான் போப் ஆண்டவரின் தரிசனத்திற்கு ஏறக்குறைய எண்பதாயிரம் மக்கள் கூடுவார்கள். இந்த தேவாலயத்தின் வடிவமைப்பை முறையே ‘ப்ரமான்ட்டே’, ‘ரஃபேயல்’ மற்றும் ‘மிக்கலேஞ்சலோ’ ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஒவ்வொருவரின் இறப்புக்குப் பின்னாலும் அடுத்தவருக்குக் கைமாற்றிச் செய்தனர். இந்தக் கட்டிடத்தின் பெரும்பகுதி மிக்கலேஞ்சலோ வடிவமைத்தது தான். அவர் தான் இந்த தேவாலயத்தின் நடுக்கூடத்தை நீளமாக அமைத்தார்.”
அந்த மாபெரும் தேவாலயம் இத்தாலிய மறுமலர்ச்சிக் காலக் கட்டிடக் கலைப் பொறியியலின் உச்சம் எனத் தோன்றியது. அதன் நீளமும், அகலமும், உயரமும் பிரமிக்க வைத்தன. என் இரு சிறு கண்களுக்குள் அந்தப் பெரிய தேவாலயத்தை அடைக்கப் பார்த்தேன்.
“இந்த தேவாலயத்திற்குள் ஓரே சமயத்தில் ஏறக்குறைய அறுபதாயிரம் பேர் இருக்க முடியும். இங்கே உள்ள ஓவியங்கள் எல்லாம் சுவரில் வரையப்பட்டவை அல்ல அனைத்துமே ‘மொசைக்’ எனும் அலங்காரக் கலையால் உருவாக்கப்பட்டவை. வாருங்கள்.. இங்கே இருக்கும் அற்புதங்களின் அற்புதமான மிக்கலேஞ்சலோவின் ‘பியட்டா’ என்ற சிற்பத்தைத் தரிசிக்கலாம். பியட்டா என்றால் இரக்கம் என்று அர்த்தம்”
அந்த பியட்டா சிற்பத்தைக் கண்டவுடனேயே நான் உறைந்து போனேன். தெய்வீக அழகு என்றால் இது தான் போல.
“இந்தப் புகழ்பெற்ற கலை வேலைப்பாடு சிலுவையில் அறையப்பட்டதற்குப் பிறகான இயேசுவின் உடலை அவரது தாயான ‘மரியா’ தன் மடியில் ஏந்தியிருப்பதைச் சித்தரிக்கிறது. இது பாரம்பரிய அழகு என்பதற்கு மறுமலர்ச்சிக் காலம் கொண்டிருந்த கலைக் கோட்பாடுகளை இயற்கையியல் கொண்டிருந்த கோட்பாட்டுடன் இணைத்துச் சமன் செய்திருக்கிறது. மிக்கலேஞ்சலோ கையொப்பமிட்ட அவரின் ஒரே படைப்பு இது தான்.
இதை மிக்கலேஞ்சலோ தன் இருபத்து நான்கு வயதில் படைத்தார். இதை முடிக்க அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆயின. இந்தச் சிற்பம் ஒற்றைப் பளிங்குக் கல்லால் வடிவமைக்கப்பட்டது. சில விமர்சகர்கள் ‘மேரியை’ மிக்கலேஞ்சலோ மிகவும் இளமையாகப் படைத்துவிட்டார் எனக் குறை சொன்ன போது அவர் ‘கன்னிமேரி அப்படித் தான் இருப்பார்’ என்றாராம்.
இந்தச் சிற்பத்தை 1972ஆம் ஆண்டு மனநிலை சிதைந்தவன் ஒருவன், சுத்தியல் கொண்டு உடைக்கப் பார்த்து மேரியின் மூக்கு, கன்னம், இடது கை மற்றும் இடது கண்ணைச் சிதைத்தான். அதன் பிறகு இந்தச் சிற்பத்தைப் புனரமைப்பு செய்யும் போது தான் இதில் மிக்கலேஞ்சலோ ரெண்டு கையொப்பங்களை இட்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தனர். மேரியின் ஆடை மடிப்பு போல தன் பெயரின் முதல் எழுத்தை ‘எம்’ என்று செதுக்கி அந்த ஆடை படிப்புகளில் ஒளித்து வைத்திருந்தார் அவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டபோது கலையுலகமே வியந்தது. அதற்குப் பின்னர் தான் இந்த சிற்பத்தை இப்போதிருக்கும் குண்டு துளைக்காத கண்ணாடியால் மறைத்தார்கள்”.
நான் என் ‘கேனன் பவர்ஷாட் எஸ்.எக்ஸ்.720.ஹெச்.எஸ். கேமிராவில்’ ஒளிப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.
“சரி நகரலாம்” என்ற மரியானாவின் குரல் சற்று தொலைவில் ஒலித்தது.
அந்தச் சிற்பத்தின் தத்ரூப உணர்வு வெளிப்பாடும் உடல்களின் தோல் மற்றும் ஆடைச் சுருக்கங்களும் மடிப்புகளும் செதுக்கப்பட்ட விதம் செம்மையாக இருந்தது.
அந்த அதி-துயரக் காட்சி என்னுள் ஒரு கவிதையாக ஆக்கிரமித்தது.
பிரிவின் நொடியில் இரக்கத்தின் மடியில்
என் இரக்கத்தின் மடியில்
ஒரு உதிர்க்கப்பட்ட இலையாக
உன் இழப்பின் மௌனம்
நம்பிக்கையின் இறுதி யாத்திரையில்
உலகக் கண்ணீரின் எடைக்கு எடை
உன் அன்பே அமர்ந்திருக்கிறது
இயற்கையின் துலாபாரப் பிணைப்பில்
பிரிவு நேரப் பிரார்த்தனையின் பலன்
உடற் பிரதியின் உயிர் சுடரின்
ஒளி-இருள் மாயச் சித்திரத்தினுள் அடக்கம்
ஞானம் என்பது இறப்பா பிறப்பா எனும் கேள்விக்கு
உன் மரணமே பதில் உன் மறுபிறப்பே பதில்
நற்குணத்தின் கடின வழி உன் எளிய விருப்பம்
பொற்காலத்தின் தற்காலக் கோலம்
உன் தூய்மையின் பிரகாசம் கண் மீறும் காட்சி என
எளிமையின் சாட்சி கண்டு ஒரு கொடியாகிப் படர்கிறது
ரத்த நரம்புகளின் பாதைகள் எங்கும்
எல்லைகளற்ற பொறுமையின் சிகரத்தில்
நீ தான் எப்போதும் நிற்கிறாய்
மிக உயரத்தில்
அடிபணிதலின் அர்ப்பணிப்பை
பொறுமையின் அருமையைக்
கல்வியாக்கித் தந்தாய்
உன் தொண்டு கண்டு தானே
இழப்பின் ஆனந்தத்தை அறிந்தோம்
தருதலின் பேரானந்தம் என்பதை
ஒரு குணமாக உருமாற்றிக் காட்டினாயே
பாவமன்னிப்பு எனும் உன் நன்கொடை தானே
உன் செய்திகளின் செய்தி
உன்னை ஏந்திக் கொள்ளும் பேறு
மீண்டும் என் மடிக்கு
இப்பொழுது எனக்குக் கிடைக்கப் பெறுகிறதே
அதை நினைத்து
இப்போதே உன் இரண்டாம் பிறப்பிற்கு
என்னைச் சமர்ப்பிக்கிறேன்
மீண்டும் என்னையே தேர்ந்தெடு
இதுவே என் ஒரே பிரார்த்தனை
‘ஆண்டெனா இண்டர்நேஷனல்’ என்ற பல்லூடக வழிகாட்டி நிறுவனத்தின் அந்த நீல நிற ஒலி வாங்கி தலையணி கேட்பொறிக் கருவியில் எந்தக் குரலும் கேட்கவில்லை என்று உணர்ந்த போது தான் நான் மரியானாவை தேடத் தொடங்கினேன். அந்தக் கூட்டத்தில், மரியானா, அவரின் உயர்த்தப்பட்ட ஆனால் விரிக்கப்படமல் இருந்த அந்தப் பூப்போட்ட குடை, தேஜஸ்வினி மற்றும் என் குழுவிலிருந்த ஒருவரையும் என்னால் கண்டு கொள்ள முடியவில்லை.
ஏதோ ஒரு இடம் நோக்கி நகர்ந்தால் என் ஒலிக் கருவியில் இரைச்சலுடன் மரியானாவின் குரல் ஹீனமாக ஒலித்தது. நான் சற்று பதற்றத்துடன் அவரை அந்த இடம் நோக்கிப் போய்த் தேடினேன். இல்லை. இப்போது அந்த இரைச்சலும் நின்று விட்டது. மீண்டும் ஒரு முறை ரோமில் தொலைந்து விட்டேன்.
அந்த தேவாலயத்தின் மிச்ச அழகுகளையும் ஒரு முறை சுற்றி வந்து ரசித்தேன். ஒவ்வொரு சதுர அடியிலும் கலையின் எழுச்சி. எத்தனை சிற்பங்கள் எத்தனை ஓவியங்கள் எத்தனை வண்ணங்கள். என்ன ஒரு கட்டிடம் என்ன ஒரு கலை என்ன ஒரு தகிப்பு என்ன ஒரு ஜொலிப்பு. அபாரம். சுவர்களில் கணிசமான இடைவெளிகளில் கிருத்துவ மதத் தலைவர்களின், துறவிகளின் ஆளுயரச் சிலைகள். ஒவ்வொருவர் பற்றியும் சொல்லிக் கேட்க மரியானா தான் இல்லை. தேஜஸ்வினியும் கூட இல்லை.
‘ஆல்டர்’ எனச் சொல்லப்படும் வழிபாட்டு இடத்திலிருந்த ‘பெர்னினி’ என்ற இத்தாலியச் சிற்பி மற்றும் கட்டிடக்கலை நிபுணர் வடிவமைத்த நான்கு நெளிந்த பளிங்குத் தூண்கள் கண்களைக் கவர்ந்தது. அதை அமைத்தது பெர்னினி என வேறு ஒரு சுற்றுலாக் குழுவின் வழிகாட்டி சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டுத் தான் எனக்கும் தெரிந்தது.
அந்த ஒலிக் கருவியை யாரிடம் கொடுப்பது எனத் தெரியவில்லை. அங்கே இருந்த சில காவலர்களிடம் விசாரித்தபோது தாங்கள் அதைப் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் சுற்றுலா வழிகாட்டியைக் கண்டுபிடித்து அதை ஒப்படைக்குமாறும் தெரிவித்தார்கள். அவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தால் நான் ஏன் இவர்களிடம் வருகிறேன். மரியானவின் முகமும் தேஜஸ்வினியின் முகமும் மனதில் தோன்றி மறைந்தன.
கிளம்பி வெளியே வந்தேன். என் சிறு அதிர்ஷ்டம் எங்கள் குழுவிலிருந்த ஒரு ‘ஃப்ரெஞ்சு’ ஜோடி வெளியே நின்றிருந்தார்கள். அவர்களிடம் போய் “ஹலோ. மரியானா எங்கே. நான் இடையில் தொலைந்து போய்விட்டேன்”, என்றேன்.
அந்த ஆண் விழிக்க, அந்தப் பெண் என்னை அடையாளம் கண்டு “அட நீங்களா. சுற்றுலா முடிந்து மரியானா அப்போதே கிளம்பி விட்டாரே. கிளம்பும் முன் அவர் உங்களைத் தேடினார்”, என்றார்.
சற்று வருத்தத்துடன் “என்னுடன் ஒரு இந்தியப் பெண் வந்தாரே அவர்”.
“அவரும் கிளம்பிவிட்டார் ஆனால் கிளம்பும் முன் அவரும் உங்களைத் தேடினார். நீங்கள் தான் தொலைந்து போய்விட்டீர்களே”
“ஹ்ம். இந்த ஒலிக்கருவியை யாரிடம் கொடுப்பது எனத் தெரியவில்லை …”
“‘வாவ்’. வந்த இடத்தில் ஒரு நினைவுப் பொருள் கிடைத்திருக்கிறதே உங்களுக்கு அதுவும் இலவசமாக. நீங்கள் ரொம்ப ‘லக்கி’”, என அந்தப் பெண் சிரித்தார்.
“அட, இதை இப்படிக் கூட எடுத்துக் கொள்ளலாமா. நன்றி. போய் வருகிறேன்”.
செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் வெய்யில் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அங்கே வரிசையாக நிறைய இருக்கைகள் போடப்பட்டிருந்தன. நாளை ஞாயிற்றுக் கிழமை நிகழப் போகும் போப் ஆண்டவரின் தரிசனம் காண வரும் கூட்டத்திற்காக என நினைத்துக் கொண்டேன்.
விலகி இந்தப் பக்கம் வந்தால் அங்கே நீலம், சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களால் ஆன அகலமான கோடுகள் கொண்ட விநோதமாகத் தெரியும் ஆடை அணிந்த இரண்டு ‘ஸ்விஸ்’ காவலாளிகள் இருந்தார்கள். தலையில் ஒரு கறுப்பு நிற நமது ஊர் ‘என்.சி.சி. ஸ்டைல்’ தொப்பி. எல்லோரும் அவர்களை ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் என் பங்குக்கு இரண்டு ஒளிப்படங்களை என் ‘மோட்டோரோலா ஜி 4 ப்ளஸ்’ செல்பேசியில் எடுத்தேன். இவர்கள் போப் ஆண்டவர் மற்றும் இந்த தேவாலயத்தின் பாதுகாவலர்கள் எனப் பிறகு அறிந்து கொண்டேன். இங்கே இவர்கள் தான் ராணுவம். உலகின் மிகச் சிறிய ராணுவம்.
சரி, செயின்ட் பீட்டர்ஸ் பேசிலிக்காவின் உப்பரிகைக்குச் செல்லலாம் என்று போனால் அங்கே மிக நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்தார்கள். மணி பார்த்தால் மதியம் ஒன்றரை. எனக்குப் பசிக்க ஆரம்பித்தது. ‘பாட்டிலில்’ இருந்த நீரை வயிற்றுக்குள் இறக்கினேன். வயிறு தன் அனத்தலை சற்று நிறுத்தியது.
அடுத்து என் ரோமாபுரி ரயில் ஸ்நேகிதர் ‘ப்ரகாஷ் மெத்லாவைத்’ தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நினைப்பே என்னைக் கலவரப்படுத்தியது. என் செல்பேசியை எடுத்து ‘பேட்டரி’ சக்தியைப் பாதுகாக்க இட்டிருந்த விமான மார்க்கத்தை நீக்கி அவர் எண்ணை அழுத்திய போது தான் என்னிடம் இருந்தது ‘ஃப்ரெஞ்சு’ தொலைபேசிச் சேவை எண் மட்டுமே அது இத்தாலியில் வேலை செய்யாது என்பதை உணர்ந்தேன். அங்கே எங்கேயும் ‘வைஃபை’ எனும் அருகலை எதுவும் கிடைக்கவில்லை.
அவரை எந்த இடத்தில் பிரிந்தோமோ அங்கேயே சென்று பார்க்கலாம் என்றால் அங்கே எப்படிப் போவது எனத் தெரியவில்லை. யாரைக் கேட்டாலும் அது தூரம் என்றோ தங்களுக்குத் தெரியாது என்றோ சொன்னார்கள். சிலருக்கு என் கேள்வியே புரியவில்லை. சிலரின் பதில் எனக்குப் புரியவில்லை.
அந்தக் கடை என் கண்ணில் பட்டது. இத்தாலிய ‘சிம்’ அட்டைகள் விற்கும் கடை போல முகப்பிலேயே ஒரு தோற்றம் தெரிந்தது. உள்ளே போய் விசாரித்தால் அந்த ‘சிம்’-மின் பெயர் ‘டிம்’. இத்தாலியின் பிரபல நிறுவனம் எனத் தெரிந்தது. ஆனால் ஒரு சிம் அட்டையின் விலையின் குறைந்த பட்சமே முப்பத்து ஐந்து ‘ஈரோக்கள்’. ம்ஹூம் தேவையே இல்லை. கடையை விட்டு வெளியே வந்தேன்.
அப்போது தான் எனக்கு அந்த செல்லாத யோசனை உதித்தது. யாரிடமாவது அவர்கள் செல்பேசியைக் கேட்டு வாங்கி அதில் ப்ரகாஷை தொடர்பு கொள்ள முயன்றால் என்ன என்று. அந்தக் கடைக்குள் மீண்டும் சென்று ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு செய்து கொள்ளலாமா எனக் கேட்டேன். “அதிகபட்ச உதவியாக முப்பது ஈரோக்களுக்கு அந்த டிம் சிம் தர முடியும் அவ்வளவு தான்” என்றார் அங்கிருந்தவர்.
சரி சுற்றுலா வந்தவர்களிடம் முயல்வோம் என்று முடிவு செய்து யாரைத் தேர்ந்தெடுத்துக் கேட்கலாம் என நோட்டம் விட்ட போது ஒரு குடும்பம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசியபடி இருந்தது என் காதிலும் கண்ணிலும் பட அவர்களிடம் சென்று அந்த ஆணிடம் “தொந்தரவிற்கு மன்னிக்கவும். என் நண்பர் ஒருவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். என் செல்பேசி வேலை செய்யவில்லை. உங்கள் செல்பேசியை உபயோகித்துக் கொள்ள முடியுமா நான்”, என்றேன்.
அவர் என்னைச் சந்தேகமாகப் பார்த்து “மன்னிக்கவும். முடியாது” என்றார். அந்த விளையாட்டை இன்னும் சில பேரிடம் – ஒரு தனித்த ஆண், ஒரு தனித்த பெண், இரு ஆண்கள், இரு பெண்கள், ஒரு ஆண் ஒரு பெண் ஜோடி – என முயன்று தோற்றேன். இப்படி ஒரு உதவியை யாராவது என்னிடம் கேட்டால் என் செல்பேசியை நம்பிக் கொடுப்பேனா என யோசித்து அந்த முயற்சியைக் கைவிட்டேன்.
ரயிலோ பேருந்தோ பிடித்து கொலோசியம் செல்லலாம். ப்ரகாஷை சாயங்காலம் சந்தித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து ‘வியா டெல்லா கொன்ஸில்லியாட்ஸோனே’ சாலையில் நடக்கத் தொடங்கினேன்.
அந்தச் சாலை செயின்ட் பீட்டர் சதுக்கத்தையும் ‘சேன்ட் ஏஞ்சலோ’ கோட்டையையும் இணைப்பது. சேன்ட் ஏஞ்சலோ கோட்டை காண வேண்டிய ஒரு அழகிய இடம். தவிர ‘டைபர்’ ஆற்றின் மேற்குக் கரையும் அங்கே தான் இருக்கிறது. ஆனால் நேரம் கருதி பயணத் திட்டத்தில் ஏற்கனவே இவற்றைத் தவிர்த்திருந்ததால் சும்மா வெளியிலிருந்து எட்டிப் பார்த்து ஒரு ஒளிப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன்.
இரண்டு இளம்பெண்கள் ஏதோ ஒரு சீருடையில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் விசாரித்த போது ‘ரயில் நிலையம் சற்று தூரம் என்றும் ஆனால் பேருந்து நிலையம் அதோ அங்கே இருக்கிறது பாருங்கள்’ என்றார்கள் தங்கள் இத்தாலிய ஆங்கிலத்தில்.
அந்தப் பேருந்து நிறுத்தத்தை நெருங்க நெருங்க எனக்குப் பரிச்சயமான யாரோ அங்கே நின்றிருப்பது தெரிந்தது. தேஜஸ்வினி … ஆம் …. அவரே தான். அவரும் என்னைப் பார்த்து விட்டுப் புன்னகைத்துக் கையசைத்தார். தன் தோழியுடன் அவர் நின்றிருந்தார். அவர் தோழியை அப்போது தான் நான் கவனித்தேன். புகையிலையை மட்டும் எடுத்து ஒரு காகிதத்தில் இட்டு முனையைத் தன் நாவால் நனைத்து ஒட்டி அதைப் பற்ற வைத்துக் கொண்டார்.
“எங்கே சென்றீர்கள்”, என்றார் தேஜஸ்வினி. என் சிறுகதையைச் சொன்னேன்.
“இந்தாங்க என் செல்பேசியிலிருந்து உங்கள் நண்பருக்கு அழைத்துப் பாருங்கள்”. முயன்றால் அந்த அழைப்பு செல்லவில்லை.
“ஆஹ். மன்னிக்கவும் என்னிடம் இருப்பதும் இத்தாலிய சிம் அட்டை இல்லை. சரி இப்பொழுது எங்கே செல்வதாக என்ன செய்வதாக உத்தேசம்”, என்ற அவரின் கேள்விக்கு பதில் சொல்லும் முன் அவர் தோழி அவசரமாகத் தன் சிகரெட்டைத் தரையில் இட்டுத் தன் காலால் கசக்கி “ஹேய் தேஜூ பேருந்து வந்துவிட்டது”, என்றார்.
தேஜஸ்வினி உடனே “இந்தப் பேருந்திலேயே ஏறுங்கள். எங்களுடனேயே வாருங்கள். வழியில் பேசிக் கொள்ளலாம். எங்காவது மதிய உணவு ஒன்றாக அருந்தலாம். அப்புறம் இருவரும் ஒன்றாக இணைந்து மீதமுள்ள ரோமாபுரியைச் சுற்றிப் பார்க்கத் திட்டம் போடலாம்”, என்றார்.
பேருந்துக்குள் செல்லும் சிறு வரிசையில் அவர் பின்னால் நானும் சந்தோஷமாக நின்று கொண்டேன். அவர் தோழியும் அவரும் பயணச் சீட்டை எடுத்துக் கையில் வைத்துக் கொண்ட போது தான் எனக்கு உரைத்தது நான் பயணச் சீட்டு எடுக்கவில்லை. பேருந்து ஓட்டுநரிடம் கேட்ட போது எதிரில் கைகாட்டி “அந்தத் தானியங்கி பயணச் சீட்டு எந்திரத்திடம் இருந்து பெற்று வாருங்கள். ஒரு நிமிடம் தான் காத்திருப்பேன்” என்றார்.
“நான் இருக்கையைப் பிடிக்கிறேன். சீக்கிரம் போய் பயணச் சீட்டு பெற்று வாருங்கள்”, என்று தேஜஸ்வினி உள்ளே நகர்ந்தார். நான் அந்த எந்திரத்திடம் ஓடினேன். பதற்றத்தில் அந்த எந்திரத்திடம் தவறாகவே உரையாடிக் கொண்டிருந்தேன் போல. மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆகியிருந்தது. திரும்பி அந்தப் பேருந்து ஓட்டுநரைப் பார்த்தேன். அப்போது தேஜஸ்வினி என்னைப் பதற்றத்துடன் பார்த்து ‘என்ன ஆயிற்று’ என்பது போலத் தன் வலது கையை விரித்துக் கேட்டார்.
ஓட்டுநர் சட்டென்று பேருந்தைக் கிளப்பியபடியே, ‘அடுத்த பேருந்தில் வா’ எனச் சைகையில் தன் வலது கையை ஒரு சக்கரச் சுற்று சுற்றிவிட்டுக் கிளம்பிப் போவதையும் தேஜஸ்வினி அவரிடம் சென்று வாக்குவாதம் செய்வதையும் நான் பார்த்தபடியே நின்ற போது அந்த எந்திரம் என்னிடம் பயணச் சீட்டைத் தந்தது. சீட்டை எடுத்துக் கொண்டு மீண்டும் அந்தப் பேருந்தைப் பார்த்தான். அந்தத் தொலைவிலும் தேஜஸ்வினியின் பார்வையை என்னால் உணர முடிந்தது.
பக்கத்தில் நின்றிருந்த ஒரு வயதான பெண்மணியிடம் ‘அந்தப் பேருந்து எங்கே போகிறது’ எனக் கேட்ட போது அவர் ‘எனக்குத் தெரியாது’ எனத் தான் பதில் சொன்னார். எனக்கு ஏனோ எல்லாமே ஏதோ ஒரு திட்டத்தின் படி சரியாக நடப்பதாகத் தான் அப்போதும் தோன்றியது.
ஆனாலும், அந்தப் பிரிவும் அது தந்த சுய-இரக்கமும் கொண்டு என்ன செய்வது என யோசித்தேன். அடுத்த பேருந்து வரும் வரை என் மனம் அந்த நிகழ்வை, இப்படியெல்லாம் நடந்திருந்தால் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என, மாற்று யதார்த்தங்களைக் கொண்டு கற்பனை செய்ய ஆரம்பித்தது.
ஒரு இணை காலவரிசையின் மீ-எதார்த்தத் துணைக் கதையில், நான் தேஜஸ்வினியின் வேறொரு பதிப்பைச் சந்திக்கிறேன். இதில், அந்த தேவாலயம் முடிக்கப்படாத கலைப்படைப்புகளால் நிரப்பப்பட்டுள்ளது. அது எங்களின் முழுமையற்ற பயணத்தைக் குறிப்பதாக இருக்கிறது. இந்த மாற்றுக் காலவரிசையில் நான் தேஜஸ்வினியுடன் கொள்ளும் ஒவ்வொரு உரையாடல் தொடர்பும் என் தற்போதைய யதார்த்தத்தை எப்படிப் பாதிக்கப் போகிறதோ என அப்போது எனக்குள் ஒரு பதற்றமும் அதே சமயம் ஒரு இனம் புரியாத சந்தோஷமும் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் இந்த முறை, நான் மரியானாவை பிரிகிறேனே தவிர தேஜஸ்வினியுடன் தொடர்ந்து அதே பேருந்திலும் பிறகு ரோம் நகரத்தைச் சுற்றியும் பயணிக்கிறேன். தேஜஸ்வினியின் அந்தப் பயணத் துணை, எனக்கு அளப்பறியாத ஆனந்த அனுபவங்களைத் தருகிறது.
மற்றொரு மாற்று யதார்த்தத்தில், மரியானா, எனக்கு மட்டும் ஒரு இரகசிய வழிகாட்டியாக முக்கியமான தருணங்களில் தோன்றி, மர்மமான முறைகளில், நாங்கள் காணும் அந்தக் கலைப் படைப்புகளில் ஒளிந்திருக்கும் குறியீடுகளில் தென்படும், கலை மற்றும் ஆண் பெண் இணை தொடர்பு பற்றிய சில இரகசியங்களைச் சொல்கிறார். இறுதியில் மரியானா நானாக உருமாறுகிறார். அவர் என் பெண் வடிவம் போலத் தோன்றி மறைகிறார்.
‘தொலைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதும்’ போன்ற கதை ஒன்றில், பிரிந்து போன தேஜஸ்வினியைத் தேடி அலையும் எனக்கு, என் சுற்றுலாக் குழுவிலிருந்த அந்த மற்ற சக பயணிகளைச் சந்திக்க நேர்கிறது. அவர்களே முன்வந்து தங்களை விரிவாக அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்கள் தாங்கள் இழந்த, தவறவிட்ட நட்புகள் குறித்து உரையாடுகிறார்கள். அவையெல்லாம் என் கடந்த காலத்தின் தீராத பிரச்சனைகளை நினைவுபடுத்துவதாக உள்ளன.
‘கலையின் எதிரொலிகள்’ போல மைக்கேலேஞ்சலோவின் கலைப்படைப்புகளின் உருவங்கள் உயிர்பெற்று என்னுடன் மட்டும் பேசத் தொடங்குகின்றன. அந்த உரையாடல்கள் எல்லாம் கடந்த காலத்தில் இப்படி நிகழ்ந்த கைகூடாத நட்புகள் குறித்த சரித்திரப் புள்ளி விவரங்களாக இருக்கின்றன. மேலும் அவை, இழப்பு, துக்கம் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை சார்ந்து ‘பியட்டா’ சிற்பம் எப்படி என் சொந்த வாழ்வின் போராட்டங்களின் பல்வேறு உருவகங்களாக மாறி வெளிப்படுகின்றது என்பதை உணர்த்துகின்றன.
மறைந்து தோன்றும் நாடகம் ஒன்றில், தேஜஸ்வினியும், மரியானாவும் என் மீதிச் சுற்றுலா முழுக்க பல்வேறு ரூபங்களில் மீண்டும் மீண்டும் தோன்றுகிறார்கள். அவர்களின் அந்த ஒவ்வொரு ரூபமும் வெளிப்படுத்துவது, ஒரு உறவில், அது நட்போ, காதலோ, என் பல்வேறு கனவுகள் மற்றும் கற்பனைகள் சார்ந்த நாடுதல்களைத் தான்.
நித்திய அறையின் முடிவிலியில் சிக்கிக் கொள்ளும் கால வளையத்துள் கனத்து மிதக்கும் நினைவுகளின் புயல் சுழல் தாக்கும் கவிதை போன்ற ஒரு கதையில். அந்த ‘செயின்ட் பீட்டர்ஸ் பேசிலிக்கா’ சுற்றுலாப் பகுதி நிகழ்வு திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த சுற்றுலா நிகழ்வின் இறுதிக்கட்டம் நெருங்கும் போது நான் மரியானாவையோ தேஜஸ்வனியையோ சில அங்குலங்கள் மேலும் நெருங்குவது போல் ஏதோ ஒரு சிறு மாற்றம் கொண்ட புதிய செயல் ஒன்றும் நிகழ்கிறது. இது என் வாழ்வின் முக்கியமான உணர்ச்சித் தடைகளைத் தாண்ட முயற்சிக்கும் என் நிலையைப் பிரதிபலிக்கும் உவமையாகிறது.
பயணக் களைப்பு மற்றும் பசியின் சோர்வு ஆகியவை சேர்ந்து கொண்டு என் திடீர் ஸ்நேகிதிகளின் நட்பும் பிரிவும் சார்ந்து எனக்குள்ளேயே மாயக் கற்பனை நாடகங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன. ஆனால் இந்தப் பகற் கனவுகள் தான் என்னை அந்தப் பயணத் துணைகளின் இழப்பின் தொலைதலிலிருந்து மீட்டு, அந்த ‘பியட்டா’ சிற்பத்தின் இரக்கத்துடன் என்னை மடியில் ஏந்திக் கொண்டன போலத் தோன்றியது. தொலைதல் என்பது புனைவில் ஒரு பின் நவீன மாய யதார்த்தத்தின் தொடக்கப் புள்ளியாகவும் இருக்கலாம். ஆனால் நான் வாழும் இந்தத் தட்டையான உலகில் இந்த உண்மையும் அப்பட்டமும் மட்டுமே சாத்தியம் போல. ஒரு வேளை அந்த பிரிவின் நொடியில் என்னை நானே என் இரக்கத்தின் மடியில் ஏந்திக் கொண்டேனோ!
“மேலும் எந்தக் கதையும் பூரணமான கதை அல்ல”.
– அசோகமித்திரன்
எழுதியவர்
- கோவையில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர் பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி 'மைனஸ் ஒன்', உயிர்மை வெளியீடாக டிசம்பர் 2019இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி ‘நான் அல்லது நான்’, அமேசான் கிண்டில் மின்னூலாக டிசம்பர் 2012இல் வெளியானது. ‘கலக லகரி: பெருந்தேவியின் எதிர்-கவிதைகளை முன்வைத்துச் சில எதிர்வினைகள்' எனும் ரசனை நூல் அமேசான் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 2020இல் வெளியானது. இவரின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு 'பாழ் வட்டம்', காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக டிசம்பர் 2021இல் வெளியானது.
இதுவரை.
- சிறுகதை29 July 2024பிரிவின் நொடியில் இரக்கத்தின் மடியில்
- சிறுகதை18 January 2024சில ரோமானியக் கடவுளர்களும் நானும்
- கதைகள் சிறப்பிதழ் 2023 - II3 September 2023ஒரு ‘இத்தாலி’-ய இரவு: ஒரு கதையற்ற கதை எனும் ஒரு எதிர்-கதை
- ஹைக்கூ19 October 2021சாவின் தேஜா வூ