25 December 2024
ramya9

   ண்ணப்பாரு மணியா! என்ர கரிச்சாங்குருவிக்கு, பச்சப்புள்ளயாட்ருக்கு

   கரிச்சாங்குருவி எனப்பட்ட அந்தக் காராம்பசு, திம்பன் கையால் வாஞ்சையாய் தடவிய இடத்தை சிலிர்த்துக்கொண்டது. நான் அதன் கண்களை கவனித்தேன். கருந்திராட்சையை வெயில்நோக்கிப் பிடித்ததுபோலொரு நிறத்தில் பளபளத்தன அவை. 

  நீ எந்த மிருகத்துக்காச்சு மனுசனாட்டமே வெள்ளவிழியுங் கருவிழியுமா கண்ணு பாத்ருக்கறயா மணியா? எனக்குத்தெரிஞ்சு மாட்டுக்கண்ணு மட்டுந்தா அப்டி!   கண்ணுலயே அழகு மாட்டுக்கண்ணுதாம்டா, அதும் என்ர கரிச்சானுக்கு ஒடம்பெல்லாம் கருப்பு, மடிக்காம்பு வரைக்கும் கருப்பு, கண்ணோரம் பாரு, அழுத்தமா மை போட்டாமாறி ஒரு அழகுக்கருப்பு பெருமிதமாய்க்கூறிய திம்பனிடம், 

  அதான் கன்டுக்குட்டிலருந்து  பார்த்துட்டு இருக்கறமே… நெதத்துக்கும் இதையே சொல்லு என்றேன். 

   திம்பன் அப்படித்தான், தினம் ஒருமுறையாவது மாட்டுபுராணம் பாடாமல் இருக்கமாட்டான். எங்கள் ஊர் ஒரு மலை கிராமமாக இருந்தாலும், ஒட்டுமொத்த கிராமத்திலேயே இரண்டே இரண்டு காராம்பசுதான் இருக்கிறது. அதிலொன்று இந்தக் கரிச்சான். சோளத்தட்டையை மென்றுகொண்டிருந்த கரிச்சானிடம், 

  நல்லா வாய் நெம்ப தின்னுடி குருவி! 

  என்ற திம்பனின் சொற்கள் புரிந்தாற்போல் நிமிர்ந்து நாவால் தன் நாசியின்மேல் ஒரு துழாவு துழாவியது. கரிச்சானின்  நாக்கும்கூட கரிநாக்கு. 

  அட்டக்கருப்பி என்றேன் நான். கரிச்சான் அதை ரசித்ததுபோல தலையை ஒரு சிறு உலுக்கு உலுக்கிவிட்டு, 

  ம்ம்மா…. என்றது. 

  குட்டி நெனப்பு வந்தருச்சாடி ஒனக்கு, இரு…! கன்னியம்மாவுக்கு ஊத்தறதுக்குப் பாலெடுத்துட்டு கன்டுக்குட்டிய விடறேன் என்றபடி தண்ணீர்த்தொட்டி நோக்கி நடந்தான் திம்பன். பாலுக்கான போசியை அலசியெடுத்துக்கொண்டு, இன்னொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் மொண்டுகொண்டான். தொட்டிநீரில் மாலைவெயில் நெளிநெளியாய் அலைந்தது. 

     ஆடிவெள்ளியின் சாயங்காலந்தோறும் எங்கள் கன்னியம்மாவுக்கு அபிஷேகம் செய்வது காராம்பசுவின் பால் ஊற்றித்தான். புலிக்குத்தி கன்னியம்மா என்பது ஒரு நடுகல். கையில் வேல்கம்போடு நிற்கும் ஒரு பெண்ணின் செதுக்கு உருவம் நடுகல்லில் இருக்கும்.   ஊரில் எந்தெந்த பெண்கள் தீட்டாகியிருக்கிறார்களோ அவர்கள்தான் போய் காலைதோறும் புலிக்குத்தி கன்னியம்மா நடுகல்லை, மஞ்சள்நீர் ஊற்றி கழுவிவிட்டு நெய்தீபம் ஏற்றி வருவார்கள். தங்கள் குருதிவாடைக்கு புலி தொடராமல் இருக்க கன்னியம்மாவை காவலுக்கு அழைப்பதாய் எங்கள் நம்பிக்கை. புலி நடமாடும் ஊரில் இப்படி ஏதாவது செய்துதான் வாழ்வை நம்பிக்கையோடு இறுகப்பற்றிக்கொள்கிறோம் நாங்கள்.

        

        கையில் எடுத்த பாத்திரத்து நீரால் கரிச்சானின் மடிநோக்கி விசுக் விசுக்கென நீரடித்துக் கழுவினான் திம்பன். விளக்கெண்ணெயை விரல்களில் தடவிக்கொண்டு சரட் சரட்டென குத்துக்கால் நடுவில் இடுக்கிய போசியில் பால் பீய்ச்சினான். முதல் நாலு இழுப்புக்கு உலோகத்தில் பால் விழும் ஒலியும், அடுத்த நாலு இழுப்புக்கு பால்மேல் பால் விழும் ஒலியும், மற்ற இழுப்புக்கெல்லாம் நுரைமேல் பால் விழும் ஒலியும் என இது ஒருவகை எனக்குப்பிடித்த ஜலதரங்கம். 

  மாட்டுல பால் பீய்ச்ச இப்பவும் உனக்கு வருமா மணியா அல்லது டவுன் வேலைக்குப்போனதுல அதெயெல்லாம் மறந்துப்போட்டியா? என்ற திம்பனிடம், 

  வரும்னுதான் நெனக்கேம்டா திம்பா என்றேன். 

  டவுனுப்பக்கம் போய்ட்டு வாரவுயல்லாம் அந்த ச்செல்போனுல கட்டவிரல போட்டு இழு இழுனு இழுக்கதான் பழகிட்டு வர்றானுக, அந்த ச்செல்போனுக்கு மட்டும் மடிக்காம்பு இருந்துச்சோனு வெய்யி, நெதம் பத்து படி பாலு கறக்கும், இதுக இழுக்கற இழுப்புக்கு சிரிக்காமல் திம்பன் சொன்னதைக்கேட்டு, வாய்கொள்ளாதசிரிப்புடன், 

  அட லொள்ளுபிடிச்சவனே! என்றேன் நான். திம்பன் கரிச்சானிடம், 

  கேட்டுக்கோடி குருவி! லொள்ளுபிடிச்சவங்கறான் என்றான். திம்பன் சொல்லாடலுக்கு ஒருமுறை கண்ணிமைத்தது கரிச்சான். நீளநீளமான இமைமுடிகளின் பிம்பம் அதன் கண்ணுக்குள் வீழ்ந்திருந்தது, கரையோர தென்னைமர பிம்பங்கள் வீழ்ந்த ஓர் ஆழமான ஏரியைப் பார்ப்பதுபோலொரு பிரமையைத் தந்தது அந்தக்கண்கள் எனக்கு. 

  ஏன்ரா மணியா! நீ படிச்சவன்தான? நீயாச்சு அந்த ஃபாரஸ்ட்காரனுகளுக்கு எடுத்துச் சொல்லலாமில்ல? அவனுக இம்ச தாங்கல திம்பன் எதைப்பற்றி பேசுகிறான் எனப்புரிந்தது எனக்கு, அவன் மட்டுமல்ல, ஊரெல்லாம் இருநாட்களாய் இதே பேச்சுதான்

  அந்தக் கொரங்கு விசயத்தயாடா சொல்ற திம்பா?

  அக்காங்க்டா! தவ்விக்கிட்டுத்திரிஞ்சு கரண்ட்டு கம்பியில அடிபட்டு செத்துப்போச்சு, அதுக்குமாடா தண்டம் கட்ட சொல்லுவாய்ங்க ஆதங்கப்பட்ட திம்பனின் அசைவில், கரிச்சான் சற்று மருண்டது, 

   ஆவ்.. ஆவ்… எனக் கரிச்சானை சமாதானப்படுத்திய திம்பனிடம், 

  ஆங் அதென்ன அது, கொரங்கு செத்துப்போச்சுன்னா ஃபாரஸ்ட்காரய்ங்களுக்குத்தா முதல்ல தகவல் சொல்லிருக்கோனும், அவம் நெலத்துல விழுந்தாங்காட்டி, அவனைச் சொல்லிருவானுகளோனு பதறிப்போய் பொதச்சுட்டான் அந்த ஆகாவழி சொக்கன், அதான் பெரச்சன என்றேன். 

  ம்க்கும்… முடிஞ்சவரைக்கும் பணம் தேத்தப் பாக்கறானுவடா மணியா! மிடியலனா செயில்ல தள்ளுறானுவோ… என்ற திம்பன் என் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டேபோனான், பேசட்டும்… அவன் இப்படி அதிகம் பேசுவதே என்னிடமும் கரிச்சானிடமும் மட்டும்தான்என எண்ணியபடி கவனித்துக்கொண்டிருந்தேன்

  போனவாரம் நம்ம கொக்கிரான் மவனோட உடும்புக்கத தெரியுமல்லோ? கொக்கிரான் பூமி வேலியோரமா, உடும்பு ஒண்ணு செத்துக்கிடந்துருக்கு… நல்ல இத்தச்சோடு இருந்துருக்கு, அதான் உடும்புக்கறி ஒடம்பத்தேத்துமுன்னு எந்த பாவிப்பலுவளோ கதகட்டிருக்கறானுங்களே… அதுங்கறிக்கு டவுனுல ஒரே கெராக்கி வேற… செவத்த அது  பல்லி வகையறா, கருமம் பல்லியப்போய் திம்பாய்ங்களா? கறிவெட்டி டவுன்ல கொண்டு வித்துப்போடலாமுன்னு உடும்பத்தூக்கி சாக்குப்பையில போட்டுக்கிட்டு இவம்பாட்டுக்கு தத்தாபித்தானு நடந்து வந்திருக்கான்,ரேஞ்சர் கண்ணுல வசமா மாட்டிக்கிட்டான், ஆயின்ரூவா தண்டங்கட்டு, இல்லையானா கேஸ் போட்ருவேம்ன்டான்.. கொள்ளேல போற ஆபிஸருங்க, அந்த ஆயின்ரூவாக்கே நல்ல ஃபாரின் சரக்க வாங்கி, அந்த உடும்பயே எண்ணெய்ல மொளாத்தூளு உப்பு போட்டு வாட்டி அவனுங்களே தின்ருக்கானுய்ங்க என்ற திம்பனிடம், 

  ஆனா இந்தக்கட்டுப்பாடெல்லாம் இல்லைன்னா நம்மாளுகளும் எல்லாத்தையும் வேட்டையாடி வித்துப்போடுவானுக என்றேன் நான். 

  அதுஞ்சரி… ஃபாரஸ்ட்காரனுகளும் பாவம்தா… வூட்ட நாட்டயெல்லாம் உட்டுப்போட்டு இங்க கெடக்கானுங்க, அவிங்க பொழப்பு… உசுர மசுரா மதிக்கற பொழப்பு, மிருகங்கதான் அவிங்களுக்கு பயப்படாது, மனுசனுகளயாச்சு இப்டி எதயாச்சும் செஞ்சு பயமுறுத்தி கட்டுப்பாட்டுல வைக்கனும்ல அவிங்களுக்கும்… ஏன்னா மிருகம் அடிச்சு ஒரு மனுசம் செத்தா அது நம்ம கவனக்குறைவுனுவாய்ங்க,  அதே மனுசனடிச்சு மிருகஞ்செத்தா அது கேஸு… பின்ன அவங்கதான வெசாரண கிசாசரணனு லோல் படோனும், அவிய்ங்களுக்கும் குடும்பம் இருக்குதல்லோ, என்னயமாறி கீது தனிக்கட்டைனா பரவால்ல தனக்குள்ளேயே உளறுவது போலொரு தொனியில் சொன்னான் திம்பன். 

  அட நீ என்ரா தனிக்கட்ட…? பிரசவத்துல வூட்டம்மா செத்துப்போச்சுனு நீ வீம்பா மறுகல்யாணம் பண்ணிக்கல, தெய்வீகக்காதலாமாம் வூட்டம்மா மேல… ரெண்டு பொம்பளபுள்ளைகள வளத்து கட்டிக்குடுத்த குடும்பஸ்தன்டா நீயி, இப்ப உம் சொல்லு உன்னக்கட்டிக்கிட ஆளு கொண்டாரேன்

  என்ற என்னைப்பார்த்து சிரித்தபடியே கொஞ்சம்கூட கை ஊன்றாமல் எழுந்த திம்பனின் ஆரோக்கியம் எனக்குச் சற்று பொறாமை தந்தது. எனக்கெல்லாம் இப்போது தரையில் அமர்ந்தெழவே முடிவதில்லை, வாழ்க்கைமுறை மாற்றம் என் எலும்பின் பலத்தை குறைத்திருக்கிறது. 

  இந்தாடா மணியா!  நல்லா மம்மானியமா ஊத்தட்டும் கன்னியம்மாவுக்கு, கொண்டு அக்கட்டாலே இருக்கற பொம்பளைக கையில கொடுத்துப்போடு 

பால் நிரம்பிய தூக்குப்போசியை என்னிடம் தந்தனுப்பியவன், 

  கரட்டுக்காட்டுக்கு ராக்காவல் போறேம்டா! ஒனக்குத் தோதுப்படுமா? என்றான்.  

  கொடுத்துட்டு வெரசா வரேம்டா திம்பா! வுட்டுப்போட்டு போய்டாத என்றேன். திம்பன் கன்றை அவிழ்க்கச் சென்றான். கன்று அவனை அருகில் பார்த்ததும் கால் ஓரிடத்தில் நிற்காமல் இங்குமங்குமாக முடிச்சிலிருந்து விடுபடும் ஆர்வத்தில் வாலைத் தூக்கிக்கொண்டு பரபரத்தது. அதை அவிழ்த்தவாறே, சரியான பஞ்ச காக்கா! வயிறு முட்ட குடிச்சாலும் பேப்பறப்பு பறக்குது, பத்து நா பட்டினியாட்டம் என்றான். கன்று ஓடிச்சென்று கரிச்சானின் மடிமுட்டியது. 

     என் மகள்தான் அன்று பாலூற்றும் சடங்கு செய்யப்போகிறவள், அதன்பொருட்டே காராம்பசுவின் பாலை வாங்க வந்தேன். கரிச்சான் கறவையாகிய பிறகிருந்தே பூசைக்கு கரிச்சானின் பால்தான், ஒரு ஆடிக்குக்கூட அது கறவை வற்றிக் கண்டதில்லை நான். கையிலிருந்த தூக்குப்போசி என் நடையால் அலுங்கித் ததும்பி ஓரத்தில் கோடுபோட்டு சொட்டுச்சொட்டாய் வழிந்ததால் அதை நெஞ்சோடு சேர்த்து ஏந்திக்கொண்டேன். கரிச்சானின் மடிச்சூடும், திம்பனின் விளக்கெண்ணெய் மணமும் அந்த தூக்குப்போசியை உயிரோட்டமுள்ள ஒரு பொருள்போல் ஆக்கியிருந்தது. நடுகல் அருகில் காத்திருந்த என் மனைவியிடம் அதைக் கொடுத்தபிறகும், சிசுவைக் கையேந்திய ஒரு தூளித்துணியின் சூட்டைப்போல் இன்னும் வெதுவெதுப்பாய் இருந்தது தூக்குப்போசி ஏந்தியிருந்த என் உள்ளங்கை.  

திம்பனும் நானும் கரட்டுக்காட்டுக்காவல் போயிருந்தோம், அவனது தோட்டத்தில் சின்ன காட்டுச்சாளைவீடு உண்டு, வாழை பயிரிட்டிருந்தான்,  சாளைவீட்டுக்குள் படுத்துக்கொண்டோம். ஊர் வந்தால் திம்பனுடன்தான் நாள் முச்சூடும் இருப்பேன், அவனுடன் இருப்பதற்காகவே ஊர் வருவதும் உண்டு

  ஏன்ரா மணியா! ஆடி நோம்பி வரைக்கும் இருப்பயா? அல்ல அப்டியே கெளம்பறமாறியா? என்றவனிடம், 

  இருந்தா நீ கெடாவெட்டுக்கு வருவன்னா சொல்லு… நா இருக்கறேன் என்றேன். 

   சங்கடமாய் சிரித்தான், 

  நமக்கு முடியாதுடா சாமி! அந்த உசுரு துள்ளத்துடிக்க சாவுறத பாக்க தெம்பு கெடயாது நமக்கு

அவனது அந்த பதில் எனக்குப் புதிதில்லை, 

  அப்ப நமக்கு அஞ்சு வயசு இருக்குமாடா… நீ ஆசயா வளத்த கெடாக்குட்டிய பலி போட்டுட்டாங்கனு அங்கனக்குள்ளயே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி… சிறுவயதின் நினைவுக்குள் இருவரும் ஒருமுறை சென்றுவந்தோம். 

  ஆமாடா மணியா… பொறகால நாங் கறிச்சோறு சாப்புடறதே வுட்டுப்போட்டேன் என்றவனை ஆதரவாய் பார்த்த நான், 

   வேண்ணா பலி குடுக்கறத தடைபோட சொல்லி மனு போட்ருவமா மணியா… கன்னியம்மா பட்டினியா கெடக்கட்டும் என்றேன். பதறிக்கொண்டு திம்பன், 

   அக்காங்க்… அது எப்டி? பலி கொடுக்கக்கூடாதுனு தடை போடவெல்லாம் மலெ கிராமத்துல எப்புட்றா முடியும்? உங்க டவுனுல ஆட்ட மாட்ட கோழியலாம் உரிச்சு தொங்கவுட்டு விக்கறானுங்களே… அதப்போல மலெ கிராமத்துல விக்க முடியுமா? உரிச்சு தொங்கவிட்டா புலியும் சிறுத்தையும் ரத்தவாடைக்கு வந்து நம்மய உரிச்சிடும். அதான்  எல்லக்காளியையோ கன்னியம்மாளையோ சாக்கா வச்சிக்கிட்டு கொம்பு ஊதி உடுக்கடிச்சு தார தப்பட்ட மொழங்க அத்தனபேரும் கூட்டமாச்சேந்து ஒரே இடத்துல ஆட்ட வெட்டி சோறாக்குறாங்க… அது ஒரு விருந்து, அம்புட்டுத்தான்… மனுசர்மக்க சந்தோசமா இருக்கட்டும்டா… நமக்கு பிடிக்கலனா நம்ம ஒரு ஓரமா ஒதுங்கிக் கெடப்போம் என்றான். 

      வீரனின் நினைவு வந்தது எனக்கு, வீரன் தோட்டத்து சாளைவீட்டிற்கென திம்பன் வளர்க்கும் நாய். 

   வீரன அவுத்து வுட்ருக்கறயா மணியா காவலுக்கு?

   அக்காங்டா… இல்லாங்காட்டி காட்டுப்பன்னி மண்ண ஒழப்பி வாழக்குருத்தயெல்லாம் சோலிய முடிச்சு வுட்ருக்கும்… நம்ம வீரன்  கொரைக்குற கொரைப்புல வெறுத்துப்போயே பன்னி ஓடிரும்.  நெறய சமயத்துல வீரனும் ஏமார்ந்துடுவான், பன்னி ஒழப்புனதுபோக மிச்சந்தான் நமக்கு… என்றவனிடம், 

   கரெண்ட்டு வேலி வைக்கலாமுல்ல…? எனக்கேட்டேன், விருப்பமின்மை தெளிவாய்த் தெரிகிற கண்களுடன், 

   பாக்கலாம்டா…! என்றவன் சிறிது மௌனத்தின்பின் ஒன்னு சொன்னானுவோடா பக்கத்துக் காட்டுல… தலைல முடி வெட்டுவாங்கல்லோ? அந்த வெட்டுன முடிய எடுத்தாந்து குச்சிக்கெழங்கு, வாழை இதெல்லாம் போட்ட காட்டுல அங்கங்க பொதச்சு வெக்கானுவோ… காட்டுப்பன்னிக்கு மோப்பசக்திதான முக்கியமான விசியம்… அதுங் கொம்பவிட்டு மண்ண ஒழட்டுறப்ப முடி போய் நாசியில ஏறிக்குமாம்… பாவம்டா மணியா அதுலாம்… என்றான். 

   திம்பனால் எப்படி அத்தனை ஜீவனுக்கும் இரக்கம்கொள்ள முடிகிறதென இத்தனை வருடம் பழகியும் வியப்பு உண்டு எனக்கு. வாழையைக் கிழங்குவண்டு தாக்குவதாய்க் கூறினானே என டவுனில் இருந்து பூச்சிக்கொல்லி வாங்கிவந்து கொடுத்தேன் போனவருடம், அதையே இன்னும் பிரிக்காமல் வீட்டில் வைத்திருக்கிறான். 

   நீ இப்டி எல்லா உசிருக்கும் பாவப்பட்டுட்டே இரு! என்று நான்

  சொல்லிக்கொண்டிருந்தபோதே வீரனின் சத்தம் சற்று வித்தியாசமாய் கேட்டதை உணர்ந்தேன்

   வீரன் ஒருமார கத்துதல்ல திம்பா? பன்னி வந்தருக்குமாட்ருக்குதுடோய் என்றேன். 

   பயந்து கத்துது… உஷ்ஷ்ஷ்… என்றபடி கண்களை உருட்டிக்கொண்டே உற்றுக் கவனித்தான் திம்பன்

   குரங்கு சத்தமும் கேட்குதுரா, கவனி! கவனி…! குரங்கு கலையுதுன்னா… ஏதோ பெரிசு வந்திருக்குடா மணியா

   பெரிசுன்னா…? சட்டென உணர்ந்ததிர்ந்து, புலியா…? என்றேன். பதில் சொல்லாமல் பரபரவென இயங்கி டார்ச் எடுத்துக்கொண்டு, சுவரில் கிடந்த பறையை எடுத்துத் இடது தோளில் மாட்டியவாறே,

  எண்ணெய்ச்சட்டியில தீவட்டி ஊறிக்ட்ருக்கு எடு மணியா… என்றான், சட்டைப்பையைத் தடவி தீப்பெட்டியின் இருப்பை உறுதிசெய்கிறானெனப் புரிந்தது எனக்கு. ஒரு ஓரத்தில் பழைய பெயிண்ட் டப்பாவிற்குள் தலைகவிழ்ந்து கிடந்த தீவட்டியை எடுத்துக்கொண்டேன், மண்ணெண்ணெய் மணந்தது. தாழ்ப்பாளைத் திறந்தால், கதவை ஒட்டியபடி வீரன் வாலை பின்னங்கால்களோடு ஒட்டிவைத்துக்கொண்டு பம்மி நின்றிருந்தது. ஏதோ ரகசியம் முனகுவதுபோன்ற கீச்சுக்குரலுடன் திம்பனின் கால்களுக்குள் நுழைந்து அவனை இடறச்செய்தது. டார்ச் அடித்து ஒளியைச்சுழற்றினான். மிகக் கவனமுடன் சில அடிகள்தான் நடந்திருப்போம், கையால் இடைமறித்து திம்பன் என்னை நிறுத்தினான். அவன் காட்டிய இடத்தில் மணற்திட்டில் கால்தடம் தெரிந்தது… புலியின் கால்தடம்

வயிற்றுக்குள் அமிலம் சுரந்தது எனக்கு. 

அதே இடத்தில் நின்றபடி ஒளியைமட்டும் கால்தடம் வழியே தொடரவிட்டான் திம்பன். அங்கிருந்த மூங்கில் புதருக்குள் சென்றிருந்தது கால்தடம். திரும்பி, வீட்டு வாசலுக்கு மிக அருகில் ஓடிவந்தோம்… நீ ரேஞ்சருக்கு ஃபோனப்போடு மணியா என்றபடி தீப்பந்தத்தைப் பற்றவைத்தான், பறையெடுத்து அடிக்க ஆரம்பித்தான். நான் அலைபேசியை எடுத்து ரேஞ்சருக்கு தகவல் சொல்லி வைத்தேன். திம்பன் பறையோசையின் சொற்கட்டு ஊருக்குள் பல காதுகளை எட்டியிருக்கும் போலிருக்கிறது, அதே போன்ற சொற்கட்டுடன் அங்கங்கு பறையோசை கேட்கத்தொடங்கியது. ஊரே சத்தமும் கூச்சலும் பறையோசையுமாய் மாறியது.  

 கம்மிய குரலுடன் திம்பன்,

 வூட்டுக்குப் போலாமா மணியா, வர்றயா? ஒனக்கு பயமாருந்தா வேணா இந்த சாளைவூட்டுக்குள்ரயே பூட்டிட்டு உள்ர இரு, நா வூட்டுக்குப்போனும் 

  ஏம்டா இப்டின்ர?

  இல்ல மணியா! இந்த மூங்கில் பொதருக்குள்ர புலி போன தடமிருக்கு! இந்தப்பொதரு ஊருக்குள்ர போவ சுருக்குவழி, அப்டிப்போனா மொதோ வூடு நம்முதுதா… ஊர்க்காரனுவ பறையடிக்க ஆரம்பிச்சிட்டானுவோ, இனி புலி ஊருக்குள்ர எறங்காது, ஏதோ நம்மால முடிஞ்சவரைக்கும் ஊர்க்காரய்ங்கள புலிகிட்ருந்து காப்பாத்திட்டோம்… ஆனா இங்க நம்ம இருக்கோம்னு அது புரிஞ்சிக்கிட்டு, இனி இவத்தாலயும் வராது, அப்டினா அது பொதருக்குள்ரயே இருக்கும் அல்லது நம்ம வூட்டுப்பக்கம்…

   ம்மா… பசுவின் அலறல் பெரிதாய்க்கேட்டது

   ஐயோ… என்ர கரிச்சாங்குருவியேய்…

 அலறினான் திம்பன். புதர்வழியை எங்கள் பயம் மூடியிருந்ததால், பதறியடித்துக்கொண்டு தீவெட்டியெல்லாம் தெறித்துவிழ சுற்றுவழியிலேயே வீட்டுக்கு ஓடினோம், போவதற்குள் கழுத்து உடைபட்டு கீழே வீழ்ந்து துடித்துக்கொண்டிருந்தது கரிச்சான். நின்று நிதானமாய் சுவைத்துக்கொண்டிருந்தது புலி. திம்பன் கைகளால் வாயை இறுகமூடி கேவிக்கொண்டிருந்தான். இனி கரிச்சானை மீட்கமுடியாது, ஆனால் புலியைத் தொந்தரவு செய்தால் அது எங்கள்மேல் பாய்கிற அபாயம் உண்டென்று உணர்ந்திருந்ததால் அங்கேயே மரத்தின் மறைவில் நின்றுகொண்டிருந்தோம். கவ்விய துண்டத்தை தொண்டைக்குள் அனுப்ப புலி மேல்நோக்கி ஒரு முறை தலையை முன்பின் அசைத்தது. வாயின் குருதியை நாவால் சுழற்றுவது இரவுவெளிச்சத்துக்குப் பழகியிருந்த எங்கள் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது. சிறிது எங்கள் புறமாக தலைதிருப்பிப் பார்த்தது. அதன் கண்கள் நெருப்புத்துண்டங்கள் போல் தெரிந்தது. இரண்டு மூன்றடி எங்கள் திசைநோக்கி வந்தது. எனக்குள் இதயம் துடிக்கும்வேகத்தை என்னாலேயே உணரமுடிந்தது. பிறகென்ன நினைத்ததோ திரும்பிச்சென்று கரிச்சானை இழுத்துக்கொண்டு புதருக்கு ஏறியது. அதற்குள் ஊருக்குள்ளிருந்து தீவட்டியும் பறையுமாய் மக்களும் நெருங்க, வனக்காவலர்களும் வந்து சேர்ந்திருந்தனர். திம்பன் அலறியபடி, துண்டாய்க்கிடந்த கரிச்சானின் தலைநோக்கி ஓடினான், அவன் பின்னேயே நானும்.

   எங்கன்னியம்மாத்தாயே… ஒங்கண்ணவிஞ்சு போச்சா… பாலாத்தந்தாளே என்ர குருவியுனக்கு, அவளக்காக்க வக்கில்லயா ஒனக்கு…

   மணியா… மணியா…! கண்ணப்பாரு மணியா… என்ர கரிச்சானுக்கு… ஐயோ என்னையே பாக்குது அது, ஏன்ரா திம்பா வுட்டுப்போட்டு போனே… அதும் கட்டிப்போட்டு போனியேனு என்னக்கேக்குது மணியா அதுங்கண்ணு…

    என்னால் திம்பனைத் தேற்றவே முடியவில்லை, ஊரில் யாராலும் முடியவில்லை. வனக்காவலர்கள் புதருக்குள்ளிருந்து புலி போய்விட்டதை உறுதிசெய்தபின் ஊர் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலைந்தது. பசியில் கத்திக்கொண்டே நின்ற கன்றுக்குட்டியை சொக்கனிடம் ஒப்படைத்தேன். கரிச்சானின் தலையையும், அதன் இரத்தத்தையும், இழுத்துச்செல்லப்பட்ட இரத்தக்கோட்டையும் பார்த்தபடி, உடம்பில் கடைசிச்சொட்டு உயிர்மட்டும் இருப்பவனைப்போல்  உறைந்து படியில் அமர்ந்து இருந்த திம்பன் திடீரென எழுந்தான். வீட்டுக்குள் வேகமாய் சென்றவனை நான் பின்தொடர்ந்தேன், கையில் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்திருந்தான் அதற்குள். 

  டேய்… என்ரா செய்ற?

  நாஞ்சாகப்போறன்னு நெனச்சுட்டியா மணியா! இல்ல இது அந்த கொலகாரப்பாவிக்கு

  திம்பா…  

  எப்டியும் பொதருக்குள்ர இருக்கற என்ர கரிச்சானுடம்ப தின்ன விடியிறதுக்குள்ர மறுபசியெடுத்து வரும் அந்த சிறுக்கிபுள்ள… இந்த மருந்தக்கொண்டு என்ர கரிச்சான வெசமாக்கப்போறேன்

   வேணாம்டா திம்பா! இது சட்டவிரோதம்… செயில்ல போட்ருவானுகோ

   அவன் கேட்கும்நிலையில் இல்லை, அவனைத் தடுக்கும் ஆற்றலும் எனக்கில்லை. விறுவிறுவெனப்போகிற அவனது முதுகைப் பார்த்தபடி நின்றேன், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன்படி தேசிய வனவிலங்கான புலியைக் கொன்ற குற்றத்திற்காக… என்று ஏதோ ஒரு உணர்வு மரத்த குரல் தீர்ப்பு வாசிப்பதைப்போல் எனக்குள் கேட்டது. திரும்பி கரிச்சானின் தலையைப்பார்த்தேன், அதன் கண்கள் திம்பனையே பார்த்தபடியே இருந்தன.


 

எழுதியவர்

ரம்யா அருண் ராயன்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரம்யா அருண் ராயன் இயற்பியல் முதுகலை பட்டதாரி. ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பான ”செருந்தி”- ஐ வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Subscribe
Notify of
guest

5 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
P. Dhandapani
P. Dhandapani
11 months ago

Superb Ramya Rayen.Has brought everything about hilly village life into mind.But unable to accept Karichans death.

Sangeetha Enian
Sangeetha Enian
11 months ago

அருமையான கதை.கதையோட்டத்தில் கரிச்சானை நேசிக்க வைத்து பின் அதன் இறப்பையும் காட்டி ,எந்த விதியுமில்லை இந்த வாழ்வுக்கு என சொல்கிறார்போல உள்ளது. குரங்கு, உடும்பு சாகலாம் மாடு மட்டும் நமக்கு மாந்தராகிப் போனது எழுத்தின் வெற்றி.

Chella Vidya
Chella Vidya
11 months ago

மிக அருமையான கதை. பால் பீய்ச்சும் தருணம் எழும் ஒலியைக் கவித்துவமாகக் காட்சிப்படுத்திய விதம் நனிச் சிறப்பு! கண் முன்னே விரிந்த அக்காட்சியையும்
சப்த உணர்வையும் மீண்டும் உணர வேண்டி நான் வீட்டில் வாங்கிய ஒரு லிட்டர் எண்ணெய் பாக்கெட்டின் நுனியை மிகச் சிறிதாகக் கத்தரித்து அதை எண்ணெய்த் தூக்கில் சிறிது சிறிதாக பீய்ச்சி நிரப்பி அந்த மகோன்னத அனுபவத்தை அடைந்து பெற பெற்றவளானேன்.

Abdul Azeez Wahithi
Abdul Azeez Wahithi
5 months ago
Reply to  Chella Vidya

அட! நம்மால முடிஞ்சது பால் பாக்கெட் லதான். ஆனாலும் தங்கள் ரசனை அழகு.

You cannot copy content of this page
5
0
Would love your thoughts, please comment.x
()
x