15 January 2025
rajeshv9

த்வைதாவை அழைத்துக்கொண்டு தன் காரில் ஏறி அந்த வனப்பகுதியிலிருந்து நகரம் நோக்கிச் செல்லும் சாலையில் வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள் அம்மா. தன்னுடன் பணிபுரியும் கெளசல்யா சொல்லியதால் தான் இந்த வனப்பகுதியிலிருக்கும் வைத்தியரை சந்திக்க வந்திருந்தாள். அவள் சொன்னதைப் போலவே எல்லாமே விசித்திரமானதாக இருந்தன. மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே தனித்திருந்தது வைத்தியரின் வீடு. வனத்தின் சாலை முடியுமிடத்தில் காரை நிறுத்திவிட்டு இரண்டு கிலோமீட்டர் ஒத்தையடி பாதையில் நடந்த பின்பே அந்த வீடு தென்பட்டது. அந்த வீட்டை நோக்கி நடக்கும் போது காட்டுப்பூச்சிகளின் சத்தமும், பட்சிகளின் சத்தமும் அதிகமாக கேட்டபடியே இருந்தது. வீட்டை நெருங்க நெருங்க அவைகளின் சத்தம் குறைந்து வீட்டை அடைந்தவுடன் அந்தப் பெரும்காடே மெளனித்தது போலிருந்தது. வைத்தியரிடம் வேலை பார்க்கும் சொர்ணம் அந்தக் காட்டைப் பற்றியும் வைத்தியரைப் பற்றியும் சொல்லிக்கொண்டே அவர்களை அழைத்துச் சென்றாள்

வீட்டை அடைந்தவுடன் முன்வாசற் கதவை திறந்து அவர்கள் இருவரையும் அங்கே கிடந்த பிரம்பு நாற்காலிகளில் உட்காரச் சொன்னாள் சொர்ணம். வீட்டினுள் சென்றவள் பக்கவாட்டிலிருக்கும் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக்கொண்டாள். சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவள் அத்வைதாவின் அம்மாவையும் அவளையும் அறைக்குள் அழைத்துச் சென்றாள். வெளிச்சம் மங்கிய அந்த அறையில் ஒரு கட்டில் இருந்தது. கல்லால் செய்யப்பட்டிருந்த அந்தக் கட்டிலின் அருகே அமர்ந்திருந்தார் வைத்தியர். அவரது கண்களை கறுப்பு நிற துணியால் கட்டியிருந்தார். அவரது நரைத்த முடியும் நீண்ட வெண்தாடியும் பார்ப்பதற்கு முனிவரைப் போன்ற தோற்றமளித்தன.

சொர்ணம் சைகை செய்ததும் அந்தக் கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டாள் சிறுமி. வைத்தியர் அவளது இடது கையை எடுத்து நாடி பிடித்துப் பார்த்தார். அப்போது அவரது வாய் ஏதோ முணுமுணுப்பது போலிருந்தது. அத்வைதாவுக்கு பயம் கவ்விக்கொண்டது. அவளது அம்மாவை கலவர முகத்துடன் பார்த்தபடியே படுத்திருந்தாள். ஒன்றும் பயப்படாதே நானிருக்கிறேன் என சைகை செய்தாள் அம்மா. நாடிப் பிடித்து பார்த்தவர் சிறுமியின் கையை அந்தக் கல் படுக்கையில் வைத்துவிட்டு அருகிலிருந்த சிறிய மேசையிலிருந்து தூரிகை ஒன்றை எடுத்து கிண்ணத்தில் ஊற்றி வைக்கைப்பட்டிருந்த வண்ணக்கலவையை தொட்டு அவளது மணிக்கட்டில் அந்த சித்திரத்தை வரைய ஆரம்பித்தார். குளிர்மை நிரம்பிய அந்தத் தூரிகையின் முதல் தொடுகை அவளது உடலை சிலிர்க்க வைத்தது. சித்திரம் வரைந்து முடித்த பின்அதனை வெண்நிற துணியால் மறைத்துக் கட்டிவிட்டு கண்களை மூடியபடி தியானத்தில் அமர்ந்தார் வைத்தியர். சொர்ணம் அத்வைதாவையும் அம்மாவையும் ஒத்தையடிப்பாதை வழியே கார் நிற்கும் இடம் வரை வந்து விடும்போது “நாளை அதிகாலை வரை கட்டை அவிழ்க்கக்கூடாது” எனச் சொல்லிவிட்டு போய்விட்டாள்

தன் வீட்டை அடைந்தவுடன் காரிலிருந்து இறங்கி கேட்டைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் ஓடிய அத்வைதா உறைந்து நின்றுவிட்டாள். அங்கே இரு மாதங்களுக்கு முன்பு தொலைந்து போன அவர்களது நாய்க்குட்டி ஜானி நின்றிருந்தது. அத்வைதாவைக் கண்டவுடன் ஓடிவந்து அவளது காலை நக்கியபடி குரைத்தது. அத்வைதா அந்த வெண்நிற நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு முத்திட்டு சிரித்தாள். அவளது முகம் ஓர் மலரைப் போல மலர்ந்திருந்தது

அத்வைதாவின் அருகில் ஜானி நிற்பதும் அவளது முகத்தில் மலர்ந்த சிரிப்பையும் கண்ட அம்மாவுக்கு வியப்பில் புருவம் உயர்ந்தது. ஜானி தொலைந்து போன நாளிலிருந்தே அத்வைதாவிடம் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. எதையோ இழந்தவள் போல இருந்தவளை எவ்வளவு முயன்றும் இயல்பு நிலைக்கு கொண்டுவர இயலவில்லை. மருத்துவர்கள் பலரிடம் காண்பித்தும் சரி செய்ய முடியாமல் தவித்தபோதுதான் இந்த வைத்தியர் பற்றி கேள்விப்பட்டு அத்வைதாவை அழைத்துச் சென்றிருந்தாள். அவருக்கு மனதால் நன்றி சொல்லியபடியே ஓடிச்சென்று அத்வைதாவைக் கட்டிக்கொண்டு அழுதாள் அம்மா. அந்த ஆனந்தக் கண்ணீர் அதுவரை கனத்த அவளது மனதை இலகுவாக்கியது.  மறுநாள் காலை எழுந்தவுடன் அத்வைதாவின் கையில் கட்டியிருக்கும் துணியை அவிழ்த்துப் பார்த்தாள் அம்மா. அங்கே சிறுமியொருத்தியின் மடியில் நாய்க்குட்டி படுத்திருக்கும் சித்திரம் இருந்தது. ஆச்சர்யத்தில் உயர்ந்தன அம்மாவின் புருவங்கள்.


பெங்களூரிலிருந்து இருபது நிமிட பயணத் தொலைவிலிருக்கும் வனத்தில்தான் வைத்தியரின் வீடிருந்தது. அவரைச் சந்திக்க விரும்பும் நபர்கள் சொர்ணத்தின் அலைபேசி எண்ணிற்கு அழைத்து முன்பதிவு செய்துவிட்டே சந்திக்கச் செல்வார்கள். எவ்வித நோயையும் குணப்படுத்திவிடுவார் எனும் நம்பிக்கை எல்லோரிடம் பரவலாக இருந்தது. நோயைக் குணப்படுத்துவதோடு நின்றுவிடாமல் அவர் வரைகின்ற ஓவியம் ஏதோவொன்றின் குறியீடாக இருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தையும் அவர் மீது அதிக நம்பிக்கை வருவதற்கான காரணமாகவும் அமைந்தது. மனதிற்குள் கிடக்கும் குறைகளை நாடியின் மூலமாக தெரிந்து கொள்வது சித்தர்களின் மருத்துவமுறை என்றாலும் அதை ஓர் ஓவியத்தின் மூலம் நிவாரணமாகத் தருவது சிலருக்கு நம்பும்படியாக இல்லை. அப்படி பகடியாக பொய்யான குறைகளுடன் பரிசோதனை செய்ய வரும் இளசுகளை நாடிப்பிடித்தவுடன் கண்களைக் கட்டியிருக்கும் துணியை அவிழ்த்து கண்கள் சிவக்க வெறித்துப்பார்ப்பார். அந்த பார்வையின் சூடு தாங்கமுடியாமல் தலைதெறிக்க ஓடுவார்கள்.

கீழாயி கிழவிக்கு நடை நின்றுபோய் வெகுகாலமாக நார்க்கட்டிலில் கிடந்தாள். எப்போதோ செய்த புண்ணியம் தனக்கு நல்ல மருமகள் கிடைத்ததாக ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தவள் கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு திரும்பும்போது மழைத்தரையில் வழுக்கி கீழே விழுந்துவிட்டாள். பின்னந்தலை முழுக்க இரத்தத்தோடு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டாள். இனி நடக்க இயலாதவாறு குறுக்கெலும்பு முறிந்து போனதுடன் அடிக்கடி நினைவும் பிறழ, வாழ்க்கை நடைபிணமாக நகர்ந்தது. மலேசியாவில் இருக்கும் மகனுக்கு தகவல் சொல்ல அடுத்த விமானத்திலேயே வந்து அழுது புரண்டு அரற்றிக்கொண்டு திரும்பவும் பிழைப்பை பார்க்க கிளம்பிவிட்டான். 

கற்பகத்துக்கு வேலை இரண்டு மடங்காகிவிட்டது. இரண்டு வருடங்களாக எந்த நல்லதுகெட்டதுக்கும் கூட போக முடியாமல் மாமியார் கட்டிலையே சுற்றிச்சுற்றி வந்தாள். கிழவியை பார்க்கும் சாக்கில் வரும் கிழவிகளுக்கு தேயிலை போட்டுக்கொடுத்தாள்.சமயத்தில் மதியவேளை பார்க்க வருபவர்களுக்கு சோறும் ஆக்க வேண்டும். மலேசியாவில் சம்பாதித்து அனுப்பும் பணம் முழுக்க மருத்துவத்திற்கும் வருபவர்களை கவனிப்பதற்குமே சரியாக இருந்தது. உடல் ஒத்துழைக்காமல் வலிகள் பெருகத்தொடங்கின. தனது பிள்ளைகளைக்கூட கவனிக்க இயலாமல் எரிச்சலாகி கோபத்தை வெளிப்படுத்த தொடங்கினாள். 

கற்பகத்தின் பொறுமை கடந்து போயிருந்தது. கீழாயியின் நார்க்கட்டிலை சுற்றி முடை நாற்றமடித்தது. தற்போது யாரும் கீழாயியை பார்க்க வருவதில்லை. மூன்று வருடங்களுக்கு பிறகு மலேசியாவிலிருந்து வந்த செல்வம் நண்பர்கள் மூலமாக சித்திர வைத்தியரை குறித்து கேள்விபட்டிருந்தான். கற்பகத்தையும் கீழாயியையும் ஒன்றாக அழைத்துச்செல்ல சொர்ணத்திடம் பேசிவிட்டு அம்பாஸிடரில் புறப்பட்டான். பின்சீட்டில் கீழாயியை படுக்கவைத்து முன்சீட்டில் கற்பகத்தை அமர வைத்தான். தானே வண்டியை ஓட்டிக்கொண்டு விடியலில் புறப்பட்டவன் மதியத்திற்கு முன்னமே வைத்திய சாலையை அடைந்தான்.

வைத்தியர் கீழாயியை முதலில் உள்ளே தூக்கி வரச்சொல்லி கல்படுக்கையில் படுக்கவைத்து கையை நீட்டச்சொல்லி நாடியை பிடித்தபடி சிறிது நேரம் முணுமுணுத்தவர் கண்களைக்கட்டிக்கொண்டு தூரிகையால் வரைந்தபின் ஒரு வெள்ளைத்துணியால் ஓவியத்தை மறைத்து கட்டிவிட்டு செல்வத்தை அழைத்து மறுநாள் சூரிய உதயத்தின்போது கீழாயியை குளிக்கச்செய்து பச்சை புடவை கட்டச்செய்து அலங்காரமாக படுக்கவைத்த பிறகே இந்த ஓவியத்தை அனைவரும் பார்க்கவேண்டுமென கூறினார். 

ஊரை நோக்கி காரை ஓட்டியவனுக்கு அம்மையின் கையிலுள்ள ஓவியத்தை காணும் ஆர்வமும் குழப்பமும் அதிகமாக இருந்தது. வைத்தியர் உறுதியாக சொன்னதால் மீறினால் ஏதாவது குளறுபடியாகிவிடுமோவன அஞ்சி விடியலுக்கு காத்திருக்க தொடங்கினான். 

சூரிய உதயத்திற்கு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. கற்பகம் இருட்டோடு இருட்டாக கீழாயியை குளிப்பாட்டி பச்சை நிற பட்டுப்புடவையை உடுத்தி விட்டிருந்தாள். அக்கம்பக்கத்து பெருசுகளும் விஷயம் பரவி தூக்க கலக்கத்துடன் வந்துவிட்டிருந்தனர். கற்பகம் அனைவருக்கும் கடுங்காப்பியை குடிக்க கொடுத்தாள். சூரியன் மெதுவாக வெளிவரத்தொடங்கியவுடன் செல்வம் ஆர்வத்துடன் கீழாயியின் கையை தன் மடியில் எடுத்து வைத்து வெள்ளைத்துணியை பிரிக்கத்தொடங்கினான். 

கையில் கிளியுடன் புன்னகைத்திருந்த மதுரை மீனாட்சியின் சித்திரத்தை பார்த்தவுடன் செல்வத்திற்கு உடல் சிலிர்த்தது. கற்பகம் கண்களில் நீர் பொங்க “யத்தே யத்தே நீயெனக்கு சாமியத்தே” என்று பிதற்றினாள். சுற்றியிருந்த எல்லோருக்குமே பக்திப்பரவசமாக இருந்தது. கீழாயிக்கு எதுவும் புரியவில்லை. கண்களை சுழற்றி அனைவரையும் பார்த்துக்கொண்டே செல்வத்தின் நெற்றியை தன்பக்கமாக இழுத்து முத்தமிட்டாள்.  செல்வத்தின் வீடு ஒரு சிறிய கோயிலைப்போல் மாறியது. அன்றிலிருந்து பதினேழாவது நாள் கீழாயியின் உயிர் பிரிந்தது.


கோயமுத்தூரிலிருக்கும் அந்த புகழ்பெற்ற கல்லூரியின் நுழைவு வாயிலுக்குள் காலடி எடுத்து வைத்தபோது வெண்மதிக்கு உடல் புல்லரித்தது போலிருந்தது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் அந்தக் கல்லூரியின் பெருமைகளை பக்கத்துவீட்டு கலையரசி அக்கா சொல்லக் கேட்டிருந்தாள். அன்று முதலே படித்தால் அந்தக் கல்லூரியில்தான் இன்சினியரிங் படிக்க வேண்டும் என்று மனதிற்குள் விதையொன்றை விதைத்துக்கொண்டாள். அது இன்று விருட்சமாகியிருக்கிறது. நுழைவுவாயிலிலிருந்து வகுப்பறை வரையிலான தொலைவை அடர்ந்த மரங்களின் நிழல்கள் ஆக்கிரமித்திருந்தன. இவ்வளவு மரங்களா என்று வியந்தபடியே வகுப்பறை வந்தவளின் கண்களின் முதல் ஆளாய் தென்பட்டவன் மகேந்திரன். அவளது கண்களை பார்த்துவிட்டு வகுப்பறைக்குள் நுழைந்தவனை பின் தொடர்ந்தாள்.  

மகேந்திரனின் துடுக்கான பேச்சுயும் முன்நெற்றியில் விழுகின்ற முடியை இடக்கையால் அவன் ஒதுக்கிவிடும் அழகும் அவளுக்குப் பிடித்துப்போனது. மகேந்திரனிடம் இவள் தான் முதலில் தன் காதலைச் சொன்னாள். முதலில் இது ஏதோ விளையாட்டு என்று கிண்டலடித்துவிட்டு நகன்றவன் அவள் அசைவின்றி சிலைபோல நின்றிருப்பதைக் கண்டதும் அவளிடம் வந்து 

“உண்மையாதான் சொல்றியா மதி?”  என்றான். அவள் பதிலேதும் சொல்லாமல் கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துவிட்டு வேகமாக திரும்பி நடந்தாள். மகேந்திரனும் வெண்மதியும் காதலிக்க ஆரம்பித்த செய்தி கல்லூரி முழுவதும் பரவியது. 

“ஒருதலை ராகம் படத்துல வர்ற கதாநாயகி மாதிரிதான் பொண்ணுங்க எல்லாம் இருக்காங்க. மனசுக்குள்ள காதல சுமந்துகிட்டு வெளியில காமிச்சுக்காம. ஆனா வெண்மதி பட்டுன்னு உன்கிட்ட சொல்லிட்டா. ஆச்சர்யமாதான் இருக்கு மாப்ள” மகேந்திரனின் நண்பன் ஜெபஸ் அடிக்கடி இதைச் சொல்லும்போதெல்லாம், 

“வெண்மதி மாதிரி தைரியமான பொண்ணு நம்ம காலேஜுலயே இல்லடா. ஆனா அவங்க குடும்பத்த நெனச்சாதான்…”  வெண்மதி கோயமுத்தூரின் பிரபல ஓட்டல் உரிமையாளரின் ஒரே மகள். பணத்திற்கு குறைவில்லை. பணத்தைவிடவும் அதிகமாக அவளது அப்பாவிடம் சாதிவெறி குடியிருந்ததுதான் மகேந்திரனின் கலக்கத்திற்கு காரணமாக இருந்தது. 

“அதெல்லாம் நாங்க இருக்கோம் பார்த்துக்கலாம் மாப்ள, பாரதிராஜாவோட புதுப்படம் நிழல்கள் நேத்து ரிலீஸ் ஆகியிருக்கு, வா மேட்னி ஷோ போவோம்” மகேந்திரனை இழுத்துக்கொண்டு தியேட்டருக்குப் போனான் ஜெபஸ்.

சூலூரில் திரைப்படங்களுக்கு கட்டவுட் வரையும் அவளது முறைப்பையன் பைரவனுக்குதான் முதலில் வெண்மதியின் காதல் விஷயம் தெரிந்தது. அவன்தான் வெண்மதியையும் மகேந்திரனையும் தியேட்டரில் ஒன்றாக பார்த்து கொதிப்படைந்து அவளது அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னான்.அவளது காதல் தெரிந்தவுடன் இனி கல்லூரிக்குப் போகக்கூடாது என வீட்டுக்காவலில் வைத்தனர். மகேந்திரன் எவ்வளவு முயன்றும் வெண்மதியைப் பார்க்க முடியவில்லை.

மழை ஓய்ந்திருந்த நாளொன்றின் அதிகாலை நான்கு மணிக்கு மகேந்திரனின் வீட்டுக்கதவை தட்டினாள் வெண்மதி. இருவரும் அன்றே கோவையை விட்டுக் கிளம்பி மைசூரிலிருக்கும் மகேந்திரனின் நண்பன் வீட்டிற்குச் சென்றனர். அடுத்த நாளே இருவருக்கும் எளிய முறையில் கோவிலில் திருமணம் நடந்தது. அங்கே வாடகைக்கு சிறியதொரு வீட்டைப் பிடித்துக் கொடுத்தான் நண்பன். சில வாரங்களில் மகேந்திரனுக்கு வேலையும் கிடைத்தது. வெண்மதி மகிழ்ச்சியில் திளைத்தாள்.


கோயமுத்தூரைப் புரட்டிப் போட்டார் வெண்மதியின் அப்பா. அவருக்குத் துணையாக நின்றான் அவளது முறைப்பையன் பைரவன். இருவரும் எவ்வளவு முயன்றும் வெண்மதியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஜெபஸை நார் நாராக கிழித்துப்போட்டும் அவன் வாயைத் திறக்கவில்லை. எனக்குத் தெரியாது என்பது மட்டுமே அவனது பதிலாக இருந்தது. 

எட்டு மாதத் தேடலுக்குப் பின் பைரவனுக்கு வெண்மதியின் இருப்பிடம் தெரியவந்தது. வெண்மதியின் அப்பாவிடம் சொன்னபோது “கீழ்சாதி நாயிகூட சேர்ந்துட்டா. இனி அவ இருந்தாலும் ஒண்ணுதான் செத்தாலும் ஒண்ணுதான், ஓடுகாலி நாயப்பத்தி இனி யாரும் இந்தவீட்ல பேச்சை எடுக்கக்கூடாது…நீ போய் உன் பொழைப்பை ஒழுங்கா பார்த்து முன்னேறுற வழிய பாரு” என்று கட்டளை இட்டவர் அதன் பின் வெண்மதி பற்றி எதுவும் பேசவில்லை.

வெண்மதியே தன் மனைவி என்று பல வருடங்களாக மனதிற்குள் நினைத்துக்கொண்டிருந்த பைரவனால் அப்படி விட்டுவிடமுடியவில்லை.  

தனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது அவளைத் துண்டுதுண்டாக வெட்ட வேண்டும் என்று மனதிற்குள் கருவிக்கொண்டு மைசூருக்கு ரயில் ஏறினான்.


வைத்தியரின் வீட்டிற்கு வயதான பெண்மணி ஒருவரைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். மார்பக புற்றுநோயால் அவள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோயின் தீவிரத்தன்மை குறையவில்லை எனவும் உடன் வந்த யுவதி சொல்லிக்கொண்டிருந்தாள். அந்தப் பெண் புடவை முந்தானையால் முக்காடு போட்டு பெஞ்சில் அமர்ந்திருந்தாள். மிகுந்த அயர்ச்சியில் இருப்பது போலிருந்தது அவளது தோற்றம்.

 

சொர்ணம் அனைத்தையும் கேட்டுவிட்டு வைத்தியரின் அறைக்குள் அந்தப் பெண்மணியை கூட்டிச் சென்றாள். அவள் அறைக்குள் நுழைந்த கணத்தில்

தியானத்தில் அமர்ந்திருந்த வைத்தியரின் உடலில் மெல்லியதொரு அசைவு தெரிந்தது. கண்களில் கட்டியிருந்த கறுப்புத் துணியின் கீழ் அவரது கண்கள் அசைந்தது போலிருந்தது. 

சொர்ணம் அந்தப் பெண்ணை கல்படுக்கை மீது படுக்க வைத்துவிட்டு வெளியேறினாள். வைத்தியர் அவள் போனதும் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து நாடி பார்க்க ஆரம்பித்தார்.  அந்தத் தொடுதல் அவளது மனதின் ஆழத்தில் புதைந்து கிடத்த வலியை கிளறிவிட்டது.

தூரிகை ஒன்றை கருமை நிற கலவையை தொட்டு அவள் மீது அந்த சித்திரத்தை வரைய ஆரம்பித்தார்.  அப்போது அவரது கரம் மெல்லியதாக நடுங்குவதை உணர்ந்தவர் சிறியதொரு இடைவெளிக்குப் பின் மீண்டும் வரைதலைத் தொடர்ந்தார். அந்தப் பெண்ணின் உதடுகள் துடித்தன. வரைந்து முடித்ததும் மார்பை சுற்றிலும் வெண்ணிற துணியால் கச்சை கட்டிவிட சொர்ணத்திடம் சொன்னார். அவர் சொன்னது போலவே வெள்ளைத் துணியால் சித்திரத்தை மறைத்துக் கட்டினாள் சொர்ணம்.

 

“பார்த்து கூட்டிட்டு போம்மா…நாளைக்கு விடியக்காலைல கட்டை அவுத்துப் பாருங்க”  உடன் வந்த யுவதி சரியென்று தலையாட்டினாள். அவர்கள் சென்றதும் வைத்தியரின் அறைக்குள் நுழைந்த சொர்ணம் விக்கித்து நின்றாள். வைத்தியர் தரையில் விழுந்து கிடந்தார்.  ஓடிச்சென்று அவரை உலுக்கினாள் சொர்ணம். 


வீட்டிற்கு வந்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை. அவளுக்கு தன் மார்பில் கட்டியிருக்கும் துணியை உடனே அவிழ்த்து எறிய வேண்டும் போலத் தோன்றியது. பிடித்ததொரு வாழ்வை அமைத்துக்கொள்ள மகேந்திரனுடன் மைசூர் வந்து இறங்கிய அந்நாளை நினைத்துப் பார்த்தாள் வெண்மதி.  ரயிலை விட்டு இறங்கியதும் முகத்தில் அறைந்த குளிர்காற்று தன் வாழ்வையே சூன்யமாக்க வரும் பயங்கரத்தின் அறிகுறியாக இருந்திருக்குமோ என்று நினைத்தபடி அமர்ந்திருந்தாள். மைசூரின் முதல் சில மாதங்கள் மகேந்திரனுடன் அவள் கழித்த பவித்திர நிமிடங்கள் ஒவ்வொன்றாக மனதின் ஆழத்திலிருந்து மேலெழும்பி வந்தன. பின்னிரவில் விரல்கோர்த்தபடி ஒன்றாக இரவுச்சாலையில் சுற்றித்திரிந்ததும்,  அவனுக்காக விதவிதமாக சமைத்துக் கொடுத்ததும், அவனுடன் ஒன்றாக கலந்து  முத்தங்களில் திளைத்ததும் அவளது நினைவிலாடின. 

எதிர்பாராத நாளொன்றில் அவள் முன் வந்து நின்ற பைரவனால் தன் வாழ்வு குலைந்து போனதே அந்த நாள் ஏன் வந்திருக்க வேண்டும்? அன்று வழக்கம் போல மகேந்திரன் வேலைக்கு கிளம்பிய கொஞ்ச நேரத்தில் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தவளுக்கு பைரவனைக் கண்டதும் பயத்தில் வார்த்தைகள் வெளிவரவில்லை. அவளது கழுத்தில் கிடந்த மஞ்சள்க் கயிற்றைக் கண்டதும் அவனது கண்கள் வேட்டை மிருகத்தின் கண்களைப் போல கோபத்தில் ஒளிர்ந்தன. அவளது புடைத்த வயிற்றைக் கண்டதும் அந்த வேட்டை மிருகமொரு ஓநாயின் உருவம் கொண்டது.

அவள் இனி தனக்கில்லை எனும் எண்ணமும் அன்று மைசூரில் இறங்கியவுடன் குடித்திருந்த பிராந்தியும் அவனது கோபத்தை அதிகப்படுத்தியதில் அவளைப் பிடித்து வேகமாக தள்ளிவிட்டான். நிலைதடுமாறி விழுந்தவள் தலையில் அடிபட்டு மயக்கமாகிய பின்பும் அவனது கோபம் அடங்கவில்லை. மயங்கிச் சரிந்த வெண்மதியின் உடலை ருசி கண்ட பின்பும் ஆத்திரம் தாளாதவன் அவளது இடமார்பில் ப்ளேடால் கீறியபோது வலியால் துடித்து அரற்றிய அவளது முகத்தையே வெறித்தபடி சிறிது நேரம் நின்றிருந்தான். 

“பாட்டி”

சத்தம் கேட்டு நினைவிலிருந்து மீண்ட வெண்மதியின் அருகே வந்தமர்ந்தாள் அவளது பேத்தி ஷர்மிலி. 

“ம்”

“நல்லா ரெஸ்ட் எடுங்க…காலைல கட்டை அவிழ்க்கலாம்”

“இப்பவே அவிழ்த்துவிடு ஷர்மி, எனக்கு இந்தக் கட்டு பிடிக்கல”

“தாத்தா இருந்திருந்தா சொன்ன பேச்சைக் கேட்டிருப்பீங்கல்ல பாட்டி?”

மகேந்திரன் மறைந்த பின், இந்த இரண்டு வருடங்களில் முதுமையும் நோய்மையும் அதிகமாகிவிட்டதைப் போல உணர்ந்தாள்.

ஷர்மிலி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் வெண்மதி கேட்கவில்லை. சரி நடப்பது நடக்கும் என்று நினைத்தபடியே மார்பை மறைத்துக் கட்டியிருக்கும் கட்டை அவிழ்த்தாள் ஷர்மிலி.

“என்ன வரஞ்சிருக்கு ஷர்மி” கண்கள் மூடியபடியே கேட்டாள் வெண்மதி.

சித்திரத்தை உற்றுப் பார்த்த ஷர்மிலி அங்கே வரையப்பட்டிருந்த சித்திரத்தைப் பற்றி சொல்லச் சொல்ல மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தாள் வெண்மதி.

அங்கே வெண்மதியின் இளமைக்கால சித்திரம் வரையப்பட்டிருந்தது.  அதன் முன் மண்டியிட்டு கைகள் கூப்பி நிற்கும் ஓர் இளைஞனின் சித்திரமும் இருந்தது. 

அன்றிரவு நிம்மதியானதொரு உறக்கத்தில் ஆழ்ந்தவளின் உடலிலிருந்து நோய்மை வெளியேறிச் சென்றது.

றந்து கிடந்த சித்திர வைத்தியரின் கைகள் கூப்பிய நிலையில் இருந்ததன் காரணம் புரியாமல் குழம்பி நின்றாள் சொர்ணம்.


 

எழுதியவர்

ராஜேஷ் வைரபாண்டியன்
ராஜேஷ் வைரபாண்டியன்
ராஜேஷ் வைரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியை சேர்ந்தவர். நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சிறார் நாவல், ஒரு நாவல் எழுயிருக்கிறார்.
இவரது வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான சுஜாதா விருதும், பிரமிள் விருதும் பெற்றது. ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். 361 டிகிரி, உதிரிகள் என இரு சிற்றிதழ்களின் ஆசிரியர்.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
d rajasekaran
d rajasekaran
11 months ago

I recently read your story, and I wanted to take a moment to express my appreciation for your work. Your story was truly heart-melting, and it touched me deeply. The way you crafted the characters and the plot was masterful, and I found myself completely immersed in the world you created.

It was a beautiful moment that really resonated with me, and I wanted to thank you for creating such a powerful and moving piece of literature.

I look forward to reading more of your work in the future. If you ever have the time, I would love to discuss your writing process and learn more about how you create such wonderful stories.

Thank you again for sharing your talent with the world.

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x