மதுவும் வினித்தும் இரண்டு நாட்களாக அடுத்த வாரம் செல்லவிருக்கும் சுற்றுலா பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். முதல் முறையாக பாலைவனத்தைப் பார்க்கும் ஆர்வம். பாலைவனம் பற்றி பல்வேறு காணொளிகளைப் பார்த்தார்கள். புத்தகங்களில் பாலைவனம் பற்றி படித்தார்கள். சுற்றுலா செல்லும் நாள் வந்தது. மது வினீத் அம்மா அப்பா நால்வரும் மகிழ்வோடு கிளம்பினார்கள். முதல் முறையாக விமான பயணம் ஜன்னலோர இருக்கையில் மேகங்களின் உள்ளே புகுந்த போது வானத்தை எட்டி விட்டோம் என்று மகிழ்ச்சியடைந்தார்கள். எல்லாம் புதிதாக இருந்தது.
பஹ்ரைன் நாட்டில் ஒரு வாரம் எங்கெங்கோ புதிய இடங்கள் புதிய மனிதர்கள், புதிய மொழி எல்லாமே புதிதாக இருந்தது. அவர்கள் எல்லாவற்றையும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்த்துக் கொண்டே வந்தார்கள். சுற்றி முடித்து கடைசி நாள் ‘ட்ரீ ஆப் லைப்’ என்ற இடத்திற்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த இடத்தில் இருக்கும் மரத்தைப் பற்றி ஆசிரியர் பள்ளியில் கூறியது நினைவுக்கு வந்தது. மன்னா என்ற நகரிலிருந்து வெகு தூரம் பயணம் என்பதால் ஒட்டகங்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
முதல் முறையாக ஒட்டகத்தைப் பார்த்த மதுவும் வினித்தும் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தார்கள். ஒட்டகம் மீது ஏறும்போது “ஒட்டகம் பாவம் வினித். அதுக்கு வலிக்கும் தானே?” என்று கேட்டாள் மது.
“அதெல்லாம் வலிக்காது மது. அதுக்கு பழகி இருக்கும்”
“எப்படி அப்படி சொல்றே.? இவ்வளவு பேர் ஏறனா; அதுக்கு வலிக்கும் தானே?” என்றாள் மது.
“நாம முதல் முதலா பள்ளிக்கூடம் போகும்போது அழுதுட்டு தானே போனோம். அப்புறம் அழுகை நிறுத்திட்டோம். பேக் தூக்கிட்டு போறதுக்கு கஷ்டமா தான இருந்துச்சு. அப்புறம் பழகிடுச்சு இல்ல. அந்த மாதிரிதான்.” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.
“ஆனாலும் பாவம் டா” என்று கூறிவிட்டு மேலே ஏறி அமர்ந்தவுடன், ஒட்டகத்தைத் தடவித் தடவி ‘வலிக்குதா’ என்று கேட்டுக் கொண்டே வந்தாள் மது. அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது.
‘ட்ரீ ஆப் லைப்’ என்ற இடத்திலிருந்த அந்த ஒற்றை மரத்திற்காகத்தான் அவ்வளவு தூரம் பயணம். மிகப்பெரிய மரமாக அது இருந்தது. அதன் அருகில் சென்று நின்று இந்த மரத்திற்கு தானே நானூறு வயது என்று தன் அம்மாவிடம் கேட்டாள் மது.
“ஆமாம் மது. இதே போன்ற மரம் நம்ம ஊர்ல தஞ்சாவூர் கோவிலில் இருக்குன்னு நான் படிச்சேன்” என்று கூறிவிட்டு மரத்தைச் சுற்றிப் பார்த்தார்கள். மெதுவாக மரத்தின் மீது கையை வைத்து நீவி விட்டு பிறகு மரத்தைக் கட்டி அணைத்தாள் மது.
“அம்மா இதுக்கு தண்ணி எங்க இருந்து கிடைக்கும்?” என்று கேட்டாள் மது.
“அதுதான் ஆச்சரியமாகவும் புரியாத புதிராகவும் இருக்கு. 50 அடிக்குக் கீழே வேர்கள் சென்று தண்ணீர் எடுக்குதுன்னு சொல்றாங்க. காற்றோட ஈரப்பதை எடுத்துக்குதுன்னும் சொல்றாங்க. இங்க இருக்கிற மணலை உடைத்து அதற்குள் இருக்கிற தண்ணி எடுத்துக்குதுன்னு சொல்றாங்க. ஆனா எது உண்மைன்னு தெரியல” என்றார் அம்மா.
மரத்தைக் கட்டி அணைத்துக் கொண்டிருந்தபோது மரத்தின் உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது. அதை உற்றுக் கவனித்த மது, ‘363 பேரை கொன்னுட்டாங்க’ என்று மதுவின் காதில் ஒலித்தது.
“363 பேரா? எப்படி? யார்? கொன்னுடாங்க?” என்று மரத்தைப் பார்த்து அதிர்ச்சியாகக் கேட்டாள் மது.
‘ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி ராஜஸ்தான்ல ஜோத்பூர் என்ற ஒரு ஊர்ல பயங்கர வறட்சி. மக்கள் பஞ்சத்தில் இருந்தாங்க. தண்ணீர் இல்லாம எல்லா மரங்களும் வறண்டு போச்சு. விவசாயமும் இல்லை. ஆனா எங்க இனத்தைச் சேர்ந்த மரங்கள் மட்டும் வறண்டு போகவே இல்லை. அங்கு இருந்த மக்களுக்கு நாங்க தான் உணவு கொடுத்தோம். கால்நடைகளுக்கு உணவு கொடுத்தோம். எட்டு வருஷம் வறட்சியும் எங்களால் தான் சமாளிச்சாங்க. அங்க இருந்த மக்களும் அந்த நாட்டு மன்னரும் எங்களை நாடு முழுவதும் நட்டு வச்சாங்க. எங்களைக் கடவுளா கொண்டாடுனாங்க’என்று மரம் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, காற்று பலமாக அடிக்க ஆரம்பித்தது.
அவர்களை அழைத்து வந்தவர்கள் “அம்மா இனி காற்று அதிகமாகிவிடும் கிளம்பி விடலாம்” என்று கூறினார்.
அவர்களோடு வந்த மற்றவர்களும் மெதுவாக ஒட்டகத்தில் ஏற ஆரம்பித்தார்கள். மதுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அம்மா இன்னும் கொஞ்ச நேரம் என்று கேட்டாள். இதற்கு மேல் இருந்தால் காற்று பலமாக அடிக்கும் செல்ல முடியாது என்று ஒட்டகத்தை ஓட்டி வந்தவர்கள் கூறினார்கள். அனைவரும் ஒட்டகத்தின் மீது ஏற ஆரம்பித்தார்கள்.
மரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள் மது.
அங்கிருந்த எல்லா ஒட்டகங்களும் வந்தவர்களை ஏற்றுக் கொண்டு கிளம்பினார்கள். இவர்களை ஏற்றிக் கொண்டு வந்த இரண்டு ஒட்டகத்தை ஓட்டி வந்தவர்களில் ஒருவர் வயதானவர். அவருக்கு மதுவைப் பார்த்தவுடன் தன்னுடைய பேத்தியின் ஞாபகம் வந்தது. பஹ்ரைன் மொழியில் ‘இரு சற்று நேரம் கழித்துக் கிளம்பலாம்’ என்று கூறினார்.
மதுவின் பெற்றோர் அவர் என்ன சொல்கிறார் என்று தெரியாமல் விழிக்கும் ஜாடையில் சற்று நேரம் கழித்துக் கிளம்பலாம் என்பதைக் கூறினார் பெரியவர்.
மதுவின் அம்மாவும் அப்பாவும் வினித்தும் மெதுவாக மரத்தைச் சுற்றி வரக் கிளம்பினார்கள். மது மீண்டும் மரத்தில் காதை வைத்தாள். “அடடா எப்படியோ சமாளித்து விட்டாய்” என்றது மரம்.
“ஆமாம் கதையைப் பாதியில் விட்டுச் சென்றால், அய்யயோ என்னால் முடியாதுப்பா” என்றாள் மது.
“ஏய் நான் சொல்வது கதை இல்லை உண்மை” என்றது மரம்.
“அட உண்மைதான். ஆனால் கதை போல இருக்கிறது. கேட்கக் கேட்க சுவாரசியமாகக் கதைபோல் இருக்கிறது “என்றாள் மது.
“எனக்குக் கூட கதை கேட்பது என்றால் ரொம்பப் பிரியம். ஓமன் காஜாரி அருமையாகக் கதை சொல்லும். நான் அந்தக் கதையை விரும்பிக் கேட்பேன்” என்றது மரம்.
“என்னது ஓமன் கெஜாரியா? கதை கூறுமா? அது எங்க இருக்கு?”
ஓமன் நாட்டில் இருக்கிற எங்க இனத்தைச் சேர்ந்த மரம் தான் ஓமன் கெஜாரி. அது ரொம்ப வயசானது என்னை மாதிரியே. நாங்க ரெண்டு பேரும் அந்தக் காலத்துல நடந்த விஷயங்களைப் பேசிக்குவோம். அது எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். பழைய நினைவுகளில் இருக்கின்ற சுகம் வேற எதிலுமே இருக்காது. நாங்க ரெண்டு பேரும் பேசுவதை மற்ற எல்லா மரங்களும் கேட்கும்”
“ஆச்சரியமாக இருக்கிறது. அங்கிருந்து கதை கூறினால் உங்களுக்கு எப்படிக் கேட்கும்?”
”நாங்கள் எங்கெங்கோ கண்ணுக்குத் தெரியாத வெகு தூரத்திலிருந்தாலும்; நாங்கள் பேசிக்கொள்வோம், சண்டையிட்டுக் கொள்வோம், கதை கூறிக் கொள்வோம். அவர்கள் இருக்கும் இடத்தில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். நீ கிளம்பிய பின்பு கூட நான் உன்னைப் பற்றி என்னுடைய நண்பர்களுக்குக் கூறுவேன். காற்றின் வழியாக” என்றது மரம்.
“நான் கூட நிழலைத் திருடிய பூதம் என்ற புத்தகத்தில் இது பற்றி வாசித்திருக்கிறேன். மரங்கள் காற்றின் வழியாக உரையாடிக் கொள்ளும் என்பதை. நான் கதை என்று அல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். சரி சரி கதைக்கு வா அடுத்து என்ன ஆச்சு?” என்று கேட்டாள் மது.
“அதற்குப் பின்னால் வந்த மன்னர், அவர்களுடைய தேவைகளுக்காக எங்கள் இனத்தை வெட்ட ஆரம்பித்தார். அங்கு இருந்த மக்கள் ஏராளமானோர் தடுத்தார்கள்”
“அச்சச்சோ! அப்புறம் என்ன ஆச்சு?”
“முதலில் அமிர்தம் என்ற பெண் மரத்தை வெட்ட விடாமல் மரத்தைக் கட்டிப்பிடித்து நின்று விட்டார். அதன் பிறகு ஒவ்வொருவரும் மரத்தை வெட்ட விடாமல் மரத்தின் முன்னாள் வந்து நின்றார்கள்”
“வந்தவங்க வெட்டாம போய்ட்டாங்க தானே?” என்று ஆர்வமாகக் கேட்டாள் மது.
“அப்படி அவங்க செய்திருந்தா பரவாயில்லையே. ஆனா மரத்தை வெட்டக்கூடாதுன்னு தடுத்தவர்களையும் மரத்தோடு சேர்த்து வெட்டிட்டாங்க”என்று மரம் சோகமாக.
எதுவும் பேசாமல் மரத்தை மீறி அப்படியே நின்று கொண்டிருந்தாள் மது.
“மொத்தமாக 363 பேரு செத்து போயிட்டாங்க”
“அச்சோ எனக்கு கேக்கக் கேக்க அழுகையா வருது”
“மறுபடியும் சில நாட்களிலேயே அந்த மன்னர் அங்கிருந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்டு , அவங்க ஞாபகார்த்தமா 363 மரங்களை நட்டு வைத்தார்” என்று கூறியது மரம்”
“மது என்ன பண்ணிட்டு இருக்கே நீ. யார் கிட்ட பேசிட்டு இருக்கே நீ. இப்ப போகலாமா? என்று அம்மா மதுவின் தலையை நீவியபடி கேட்டார்.
“இந்த மரத்துகிட்ட தான் பேசிட்டு இருக்கேன். அது தன்னோட கதையைச் சொல்லுச்சுமா” என்றாள் மது.
“எங்க போனாலும் உனக்கு எல்லார்கிட்டயும் கதை கேட்டுக் கேட்டு மரத்திடமும் கதை கேட்கிறேன் என்று சொல்றியா? சரி சரி, உன்னோட குறும்புத்தனத்துக்கு அளவே இல்லாத போச்சு. இப்பவாவது கிளம்பலாமா?” என்று அம்மா கேட்டவுடன் “ஒரு நிமிஷம்மா” என்று கூறிய மது. தன்னுடைய சிறிய கைப்பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அதிலிருந்த தண்ணீரை எடுத்து மரத்தின் மீது ஊற்றினாள் மது.
சிலிர்த்துப் போனது மரம். ”உங்களுடைய ஊர் எது?”
“இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கிறோம்” என்றாள் மது.
“தஞ்சாவூர்!. ஒரு நிமிடம்” என்று கூறிவிட்டு சற்று நேரத்தில், “மது உங்கள் ஊரில் கூட என்னுடைய இனத்தைச் சார்ந்தவர் கோயிலுக்குள் ஒருவர் இருக்கிறார். நீ என்னோடு உரையாற்ற விரும்பினால் அவரிடம் சொல். அவர் என்னிடம் சொல்வார்” என்று கூறியது மரம். மகிழ்வோடு மரத்திற்கு முத்தமிட்டு அங்கிருந்து கிளம்பினாள் மது.
சுற்றுலா முடித்து ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.
வந்து சேர்ந்த அடுத்த நாளே கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று மது அடம்பிடித்தாள் “வழக்கமாகக் கோவிலுக்கு வரச் சொன்னால் வரமாட்டாய். இன்று எதற்கு அடம் பிடிக்கிறாய்?” என்று தாத்தா கேட்டார்.
“வாங்கன்னா வாங்க தாத்தா! அங்கே எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் தாத்தா” என்று தாத்தாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றாள்.
கோயிலுக்குள் சென்று சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். ஒரு ஓரத்தில் ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது. பஹ்ரைனில் பார்த்த அதே மரம். ஓடிச் சென்று மரத்திடம் “பஹ்ரைனில் லைஃப் ஆஃப் ஃட்ரீ மரத்திடம் எப்படி இருக்கிறாய் என்று மது கேட்கிறாள் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?”என்று கேட்டுவிட்டு மரத்தில் காதை வைத்தாள் மது.
சற்று நேரத்தில்..
“நீ ஊற்றி வந்த தண்ணீரின் ஈரமும் நீ கொடுத்த முத்தத்தின் வீரமும் இன்னும் காயாமல் இருக்கிறதாம்” என்று கூறியது மரம்.
“உங்க பேரு என்ன?” என்று கேட்டாள் மது.
“என்னுடைய பெயர் தஞ்சாவூர் கெஜ்ரி” என்றது மரம்.
” அவங்க தான் கெஜ்ரி. நீங்க வன்னி மரம். இனி நீங்களும் எனக்கு நண்பன் தான்” என்று கெஜ்ரியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு ”லவ் யூ கெஜ்ரி. இல்லை.. இல்லை.. லவ் யூ வன்னி” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுது, “மது வா சாமி கும்பிட்டு வீட்டுக்குக் கிளம்பலாம்” என்று தாத்தா கூறினார்.
“இதோ வரேன் தாத்தா” என்று கூறிவிட்டு வன்னிமரத்தைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு தாத்தாவின் கைகளைப் பற்றி குதித்துக் கொண்டே ஓடினாள் மது.
எழுதியவர்
-
ஈரோடு மாவட்டத்தை சார்ந்த சரிதாஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலைப் பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கருப்பு பட்டை பெற்றவர்.
கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் தன் பயணத்தை தொடங்கிய இவர், சிறார் இலக்கிய எழுத்தாளராக இதுவரை எழுதியுள்ள நூல்கள்
சிறார் சிறுகதை தொகுப்புகள் :
நீல மரமும் தங்க இறக்கைகளும்,
கனவுக்குள் ஒரு கண்ணாம்மூச்சி,
கிளியோடு பறந்த ரோகிணி,
யார் தாத்தா நீங்க?,
சின்ன வாத்தியார்.
சிறார் நாவல்கள் :
மந்திரக் கிலுகிலுப்பை,
நிழலைத் திருடிய பூதம்,
பேயாவது பிசாசாவது,
கடலுக்கடியில் மர்மம்,
சரசுவதிக்கு என்ன ஆச்சு?,
வண்ணங்களின் அதிசயம் (வெளியீடு : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ).
இதுவரை.
- கட்டுரைகள்11 November 2024எதிர்ப்புக் குரலின் பேரழகி – வாரிஸ் டைரி
- சிறார் இலக்கியம்18 January 2024கதை சொல்லும் மரம்
- சிறார் இலக்கியம்9 June 2023தங்க முக்கோணம்
- சிறார் இலக்கியம்23 April 2023காட்டுக்குள் மர்ம விலங்கு
இதுபற்றிய குறிப்பொன்றை சமீபத்தில்தான் படித்தேன். நீங்கள் கதையாகவே எழுதிவிட்டீர்கள். வாழ்த்துகள்!
நன்றிங்க தோழர்