23 November 2024
saivaishnaviks2

ந்த இருளுக்கெனப் பூத்த வாசனையற்ற வெண்மலர் போலிருந்தது நிலா. எத்தனை லட்சம் ஆண்டுகளாக வெறிக்க வெறிக்க எத்தனை கோடி கண்கள் கொண்டுப் பார்த்தாலும் மனிதன் காலடி நிலைக்காதவரை நிலவில் கரையில்லை. தேய்ந்து வளர்தலிலும் , வளர்ந்து தேய்தலிலும் நிலவும் பெண் மனமும் ஒன்றென்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நிலைத்த கண்களால் நிலவையே நீண்ட நேரமாக வெறித்துக்கொண்டிருந்தாள் சுமதி. நிலவும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது என்று நினைத்தாள். இரவின் ஒற்றைக்கண் இந்த நிலா. பிடித்தப் பாடலொன்றைத் தனக்குள் முணுமுணுத்தாள். காற்று சில்லென்று வீசியது. சுமதிக்கு சுகமாய் தூக்கம் வந்தது. அப்படியே படுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் செய்துவிட முடியாது. ராமகிருஷ்ணன் அருகில் அமர்ந்து சாராயம் குடித்துக்கொண்டிருந்தான். அவனுக்குத் தேவையான மீன் வறுவலை வீட்டிலிருந்து இன்றும் கொண்டு வந்திருந்தாள் சுமதி. சாராயக் குப்பியை வாயில் கவிழ்த்து ‘மடக்.. மடக்..’ என்று குடித்துவிட்டு சிறுதுண்டு மீனை முள் நீக்கி வாயில் வைத்து சப்புக்கொட்டித் தின்றான். சுர்..ரென்றிருந்த காரச்சுவைக்கும் சாராய நெடிக்கும் ஒவ்வொரு முறையும் ,

” ஸ்ஸ்ஸ்…” என்று இழுத்தான்.

சுமதிக்கு அவன் இருக்கும் பக்கம் திரும்பவே அருவருப்பாய் இருந்தது. அவனுக்குப் புறமுதுகு காட்டி அமர்ந்திருந்தாள்.

“இந்தா குடிக்கிறியா சும்தி”

என்று குப்பியை சுமதியின் முகத்தருகே நீட்டிச் சிரித்தான் ராமகிருஷ்ணன். அவனைப் புறக்கணிக்கும் ஒரு பார்வையை வீசிவிட்டு மீண்டும் தன்னிலைக்கே திரும்பிக்கொண்டாள் சுமதி.

“ஆனா சும்தி.. உன் ருசி இந்த ஊர்ல எவளுக்கும் வராது” சொல்லிவிட்டு மீனை ஒரு துண்டம் பிட்டு வாயில் வைத்தான். அவன் ருசி என்று தன்னைத்தான் சொல்கிறான் என்பது அவளுக்கும் உரைக்காமல் இல்லை.

நிலவை மறைத்துக்கொண்டு சிறு மேகம் ஒன்று திரண்டு நின்றது. திடீரெனக் காற்று உடலைச் சுடுவதைப் போலிருந்தது. பின்னங் கழுத்தில் மட்டுமே சுடும் அந்த வெம்மையை அவள் மிக நெருக்கமாக உணர்ந்தாள் .ராமகிருஷ்ணன் அவளுக்கு வெகு அருகாமையில் முதுகை உரசிக்கொண்டு அமர்ந்திருந்தான். புஸ்.. புஸ்..என்று அவன் சுவாசம் சுமதியின் மேல் பட்டு அந்த இடமெங்கும் வெப்பம் தெறித்தது.

“இப்போதே உறங்கிவிடு” என்று சுமதிக்கு அவள் உடல் கட்டளையிட்டது. நாள் முழுவதும் உழைத்ததில் கணுக்காலில் நன்றாக வலித்தது. கைகளிலும் கூட வலி சற்றுக் கூடியிருந்தது. இடுப்பை இப்படியே கழட்டி வைத்துவிட்டால் பரவாயில்லை என்று அவளுக்குத் தோன்றியது. இதில் எதுவுமே இப்போதைக்குச் சாத்தியம் இல்லை. ராமகிருஷ்ணன் சாமியாடிவிட்டுத்தான் தனக்கு வழிவிடுவான். இது நான்கு வருடத் தொடர்கதை. சுவாரசியமற்ற, முடிவில்லாத, சலிப்பூட்டும் கதை . இதன் ஒவ்வொரு புள்ளியிலும் அவளுக்குப் பரிச்சயம் உண்டு.

கட்சியின் இடைநிலை ஊழியன் என்பதால் ராமகிருஷ்ணனுக்கு ஊரில் மிகுந்த செல்வாக்கு இருந்தது. கரண்ட் எடுக்க , கல்லூரியில் சீட் வாங்க , தெருவில் குடிநீர் குழாய் அமைத்துத்தர, கட்டபஞ்சாயத்து செய்ய என்று அவனின் தேவை ஊர் மக்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. அவன் வீட்டில் கரை வேட்டிக்கூட்டமொன்று எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கும்.

பகலெல்லாம் அவன் வீட்டில் மாடாய் உழைத்தாலும் ராமகிருஷ்ணன் சுமதியை கடைக்கண்ணால் கூடப் பார்க்க மாட்டான். அதற்கு ருக்குவும் ஒரு காரணம். சொல்லப்போனால் ராமகிருஷ்ணன் வீட்டில் மட்டுமில்லை, அவனது அரசியல் செயல்பாடுகளிலும்கூட ருக்குவிற்கு பெரும் பங்கு இருந்தது. எம்எல்ஏ சிவசங்கருக்கும் ருக்குவிற்கும் நீண்ட நாள் தொடர்பு என்று ஊரில் பேசிக்கொண்டனர். இது ராமகிருஷ்ணனுக்குத் தெரிந்தும் தெரியாமலேயே போனது.

முனியனை தன் செல்வாக்கைப் பயன்படுத்தி விரைவில் மீட்டுத் தருவதாக சுமதிக்கு வாக்களித்திருந்தான் ராமகிருஷ்ணன். இரட்டைக் கொலை வழக்கில் கைதான முனியன் ராமகிருஷ்ணனின் இடக்கை, வலக்கை எல்லாமே. அடிதடியிலிருந்து சாராய விற்பனை வரை முனியனின் மூச்சின்றி ராமகிருஷ்ணனின் வாழ்வில் எதுவும் நகராது. அப்படித்தான் முனியன் நம்பினான். காட்டு வேலைக்குச் சென்றவளைக் கூட்டிக்கொண்டு போய் ருக்கு அம்மாளின் உதவிக்கு வைத்துக்கொள்ளச் சொன்னவனும் அவன்தான். ருக்கு மகிழ்ச்சியாக இருக்கும் போது சுமதிக்கு கொஞ்சம் கூலி கொடுப்பாள். அது எப்போதாவது தான் வாய்க்கும். அதை முனியனுக்குத் தெரியாமல் அட்டாளியில் ஒளித்துவைப்பாள் சுமதி. பின்னொரு நாள் அது அங்கிருந்து தானாகப் புறப்பட்டு சாராயக் கடைக்கோ சரோஜா வீட்டுக்கோ போய்ச்சேரும்.

முனியன் உயிர் வருத்தி உழைத்தாலும் எவ்வளவு காசு வாங்குகிறான் எவ்வளவு செலவு செய்கிறான் எதுவும் யாரிடமும் சொல்லமாட்டான். சுமதி கேட்டால் அவளை வாயிலேயே மிதிப்பான். வெளுத்துப்போன கரை வேட்டியைச் சலவைக்குப் போட்டு நீவி வைக்க வேண்டும். வீட்டிற்கு வரும் நாட்களில் அதை உடுத்திக்கொண்டு டிப்-டாப்பாக கிளம்பிச் செல்வான். இரண்டு நாட்கள் கழித்து அரக்கு நிறத்தில் ஒன்றை உடுத்திக்கொண்டு தள்ளாடி , தடுமாறி ரத்தக் காயங்களுடன் வீட்டிற்கு வருவான். அந்த வேளைகளில் அவன் இடுப்பு வேட்டி இருப்பில் இருக்காது.

சுமதி முனியனை பற்றி நினைக்கும் போதெல்லாம் அவன் இதுவரை எத்தனை முறை சாராய நெடி இல்லாமல் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்று விரல் விட்டு எண்ணிப் பார்ப்பாள். இரண்டு விரல்கள் மட்டுமே நிமிர்ந்து நிற்கும். அந்த இரண்டு நாட்களில் ஒன்று திருமணமான அன்று இரவு புதுச் சேலையை வாங்கிக்கொண்டு மல்லிகைப் பூவை கையில் சுற்றிக்கொண்டு வந்தான். அன்றிரவு அமோகமாக இருந்தது. இரண்டாவது ராமகிருஷ்ணனை ஒருநாள் இரவு தன் வீட்டிற்கு அழைத்துவந்தான் முனியன். சுமதியை மீன் வறுக்கச்சொல்லி விட்டு பாலுவை அழைத்துக்கொண்டு வெளியில் எங்கோ சென்றுவிட்டான்.

வஞ்சிரத்தைப் பொன்னிறமாக வறுத்துக்கொண்டு வந்தவளை அருகில் அமரச்சொல்லி கையைப் பிடித்தான் ராமகிருஷ்ணன். அவள் பதறி விலகினாள். அவள் கையில் கத்தையாகப் பணக்கட்டைத் திணித்தான். சுமதி அதை வாங்க மறுத்தாள். அதை அவளருகில் வைத்துவிட்டு மீனைச் சுவைத்தான். சுமதிக்கு முனியனோடு சென்ற பாலுவின் நினைவு வந்ததால் பணத்தை எடுத்துக்கொண்டு கதவைத் தாழிட்டு வந்தாள். ராமகிருஷ்ணனின் மீது ஜவ்வாது வாசனை கடுமையாக வீசியது. சுமதி மூக்கைப் பொத்திக்கொண்டாள்.

இப்போதெல்லாம் ராமகிருஷ்ணன் ஜவ்வாது உபயோகிப்பதில்லை. ஒருநாள் சுமதி அவன் அறையைச் சுத்தம் செய்யும்போது ,

“சுமதி அந்த ஜவ்வாதை தூக்கி குப்பைல கிடாசடி. ஊர்ல இருக்க முண்டச்சிங்க மேலெல்லாம் ஜவ்வாது வாசனை வீசுது” என்று ருக்கு அம்மாள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

சுமதிக்கு இடுப்புக்கு அருகாமையில் சுளீரென்று வலித்தது. முதலில் சுள்ளெறும்பென்று நினைத்தாள். சாராயத்தின் போதைச்சாயல் விரல்களிலும் கூடத் தள்ளாட்டம் தெரிந்தது. அது வலிந்து மேலெழும்பி முன்னேறியது. எல்லைகளை ஆக்கிரமித்துக் கலைந்து தகர்த்தெறிய முற்பட்டது. சுமதி முந்தியை இறுக்கி முன்னிடுப்பில் செருகிக்கொண்டாள். அதற்கு அவள் இப்போது தயாராக இல்லை என்று அர்த்தம்.

ராமகிருஷ்ணன் கட்டுக்கடங்காத போதையில் இருந்தான். இதற்கு மேலும் அவன் ஆட்டம் காணாமல் ஓயமாட்டான். பறையடிக்க அடிக்க வேகங்கொண்டு ஆடும் காட்டேறியைப் போல அவன் இதயம் ஆவேசமாகத் துடித்தது. சுமதியின் உடலைத் தின்றுவிடும் பரவசம் அவனிடமிருந்தது. சுமதி கண்களை மூடிக்கொண்டு கமலஹாசன் பாடலொன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

அந்தக் கரும்பு வயல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது. வீட்டில் பாலு இருக்கிறான். முன்பு மாதிரி இல்லை . அவனுக்கும் இப்போது மீசை முளைக்கத் தொடங்கிவிட்டது. குரலெல்லாம் மாறிவிட்டது. ஆடை மாற்ற, குளிக்க என்று அவன் தனிமையைத் தேடுகிறான். இனி அங்கு வேண்டாம் என்று சுமதி சொல்லி வருடமாகிவிட்டது. அன்றிலிருந்து எல்லாம் இந்த கரும்புக்காடுதான்.

அருகில் சுடுகாடு இருப்பதால் இரவு நேரங்களில் அங்கு அரவம் இருக்காது. மனித வாசமற்றிருப்பதால் அந்தப் பகுதியில் அமைதியும் சுகந்தமும் நிறைந்திருந்தது. வயலில் முற்றிய கரும்புகள் ராட்சத மயில்கள் ஒன்றாகத் தோகை விரித்து ஆடுவதைப் போலக் காற்றில் மிதந்தன . குற்றம் செய்வதற்கென்றே அதன் எல்லையை விரித்துப் பரந்திருந்தது அவ்விடம்.

பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்டு இறந்துகிடந்த இரண்டு ஆண் சடலங்களை இந்தக் காடுகளின் வெவ்வேறு பகுதிகளிலிருந்துதான் போலீஸார் கண்டறிந்தார்கள். மூக்கைத் தனியே பெயர்த்து வெறியுடன் நுகர்ந்துச்செல்லும் இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் வகை மோப்ப நாய்கள் ஊரின் தெருவெங்கும் சுற்றி வந்தபோது மக்கள் பயந்து தங்கள் வீடுகளுக்குள் பதுங்கிக்கொண்டனர்.

தீவிரமாகத் துப்புத்துலக்கியதில் முனியன்தான் அந்த இரண்டு கொலைகளையும் செய்தான் என்று நிரூபணம் ஆனது. ராமகிருஷ்ணனின் செல்வாக்கால் இரட்டை ஆயுள் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆனால் யாரும் முனியனை பெயிலில் எடுக்காமல் பார்த்துக்கொண்டான் ராமகிருஷ்ணன். கோடை மழை பெய்திருந்த அந்த நாளில் கரும்பு வயலின் வெளியெங்கும் அரிவாளோடு துரத்தியோடிய முனியனின் காலடித்தடங்களின் மீது ராமகிருஷ்ணனின் தோல் செருப்பின் சுவடுகளும் அழுந்தப்பதிந்திருந்ததை அந்தக் கரும்புக்காடும் அறியும்.

புல் தரையில் மஞ்சச் சாரை நெளிவதைப் போலத் தளர்ந்த உடலோடு புரண்டுகொண்டிருந்தான் ராமகிருஷ்ணன். சுமதியின் வனப்பில் ஒரு பகுதியைக் கூட அவன் தளர்ந்த உடலால் அடக்கி ஆள இயலவில்லை. அவன் அவள் உடலோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான். சுமதி சலனமற்று அசைந்துக்கொடுத்தாள். அவளுடலில் இருக்கும் மொத்த மச்சங்களின் இருப்பிடத்தைக் கேட்டால் ராமகிருஷ்ணன் தான் சரியாகச் சொல்வான். வயதேற உடனேறும் அத்தனை அழகையும் அவன் மட்டுமே கட்டியாண்டான். சுமதிக்கு இதில் விருப்போ வெறுப்போ கிடையாது. அவளுக்குச் சட்டியில் செத்துக்கிடக்கும் மீனும் அவளருகில் அம்மணமாகக் கிடக்கும் ஆணும் ஒன்றுதான்.

பாலு பன்னிரண்டாம் வகுப்பு வந்துவிட்டான். அடுத்து அவனைக் கல்லூரியில் சேர்க்க வேண்டும். அவனை எப்படியாவது ஜில்லா கலெக்டர் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று சுமதி ஆங்காரமாயிருந்தாள். சுழலும் வண்ண விளக்கைத் தலையில் கட்டி அலறிக்கொண்டு வரும் வெள்ளை வாகனத்தில் தன் மகன் போலீசார் பாதுகாப்பில் ஊருக்குள் வந்திறங்க வேண்டும். வேட்டியை அவிழ்த்து அரைக்கால் சட்டையோடு விலங்கு மாட்டி வீதிவீதியாக ராமகிருஷ்ணனை இழுத்துச்செல்ல வேண்டும். பின்னால் அந்த ருக்கு அம்மாள் அழுதுகொண்டே ஓடிவர வேண்டும். அதைப்பார்த்து வாய்விட்டுச் சிரித்துவிட்டு அப்படியே செத்துப்போக வேண்டும். இதுதான் அவளது நீண்ட காலக் கனவு, லட்சியம் ,வேண்டுதல் எல்லாம்.

ராமகிருஷ்ணனின் அழைப்பை சுமதி எப்போதுமே நிராகரித்ததில்லை. முனியன் கைதான பின்பும் ராமகிருஷ்ணன் அழைக்கும் போதெல்லாம் மறுக்காமல் கரும்புக் காட்டிற்கு வந்து சேர்வாள். அந்த நாட்களாக இருந்தால் சாராயம் குடிக்கும் மட்டும் இருந்துவிட்டுச் செல்வாள். ஒவ்வொரு முறை முறிந்த பிறகும் புதிதாகத் துளிர்க்கும் இலைகளைப் போல அவள் தன் மகனுக்காய் வெட்டுப்படாமல் வேரூன்றி நிலத்தில் நின்றிருந்தாள். ஒருவகையில் இதுவும் ஒரு தவம் தான்.

உடல் கொதியாய் கொதித்தடங்கியது அவனுக்கு. ராமகிருஷ்ணன் முன்பு போல அல்ல. அவன் தன்னிச்சையின் பேராசைக்காக நீண்ட நேரம் போராட வேண்டியிருந்தது. மனித உடல் ஐம்பதிலிருந்து அறுபதை நோக்கிய பாதையிலேயே மரணத்திற்கான மேடுகளில் நிறுத்தி நிதானித்து நடக்க வேண்டியிருக்கும் போல.

விலகியிருந்த கரும்பச்சை சேலை காற்றில் அசைந்து நடனமாடியது. அத்தனை கரும்புகளின் நிழலையும் விழுங்கிக்கொண்டு நிலவின் ஒளியையும் ஏந்தி நின்றது நிலம். அவள் உடலைக் கிடத்திவிட்டு எண்ணங்களை வானத்தின் உயரத்தில் பறக்க விட்டிருந்தாள். நூலறுந்த காற்றாடியைப் போல அது தறிகெட்டு அலைந்தது. காலங்களுக்குள் முன்னும் பின்னும் முடிச்சிட்டு நிகழை மறைத்துப் பறந்தது. காற்றில் அறுபடும் குமிழ்களாகப் பெண்ணின் விதி நிர்ப்பந்தித்து துயரங்களைப் பரிசளித்த நாட்கள் ஒவ்வொன்றாய் உடைவதை அவள் வேடிக்கை மட்டுமே பார்த்தாள். வாழ்க்கை வாழவேண்டி மனிதனை நிர்ப்பந்திக்கும் போது அது தான் போகும் பாதையை தானேதான் தெரிவு செய்வேன் என்று பொம்மையோடு விளையாடும் குழந்தைபோல அடம்பிடிக்கிறது. சிலருக்கு அந்த விளையாட்டு மகிழ்வாய் அமையும் போது சிலருக்கு அது விஷப்பாம்புகளோடு விளையாடும் விபரீத விளையாட்டாய் அமைந்துவிடுகிறது. எதையோ செய்யப்போய் அது எதுவாகவே மாறுவதெல்லாம் எல்லா மனிதருக்கும் நடக்குமா? சுமதி எழுப்பிய கேள்வி ஒரு குறியீடாக மாறி வானில் மேகமாக நின்றிருந்தது.

பனைமரங்கள் நிறைந்திருந்த நெற்குத்தி குன்றின் அடிவாரத்தில் நாளெல்லாம் விளையாடி மகிழ்ந்துவிட்டு தேவை நிறைவேறியதும் ஆடைகளைக் கிணற்றில் வீசிவிட்டுச் சென்ற குமரன் நினைவுக்கு வந்தான். காதலிக்கும் வயதில்லை. எதுதான் காதலுக்கான வயது என்று கேட்டால் யாரும் சரியான விடை சொல்லமாட்டார்கள். எது காதல்? என்று கேட்டால் காமத்தைக் கைகாட்டுபவர்கள்தான் இங்கு அதிகம். சுமதிக்கும் கூட இதெல்லாம் தெரிந்திருக்கவில்லை. குமரன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். இவள் அவனது வயலில் வேலைப் பார்த்தாள். காதலிப்பதாகக் கூறினான். அந்தஸ்து, கௌரவத்தின் அடையாளம் எதுவுமே அப்போது அவன் முகத்தில் கலையாடவில்லை. அதில் அரும்பிய மீசையைப் போலவே சுமதியின் மீதான அவனது காதலும் இருந்ததாக நினைத்தாள். நன்றாய் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினான். பேசிவிட்டு வருவோம் என்று அடிவாரம் வரை அழைத்தான். விவரம் புரியாமல் இல்லை. வயது அது வேண்டும் என்றது. விளைவுகளைப் பார்த்துக்கொள்ளலாம் என்றது. அன்றைய நாட்களுக்குக் குமரன் குடியிருக்காத அந்த ஆதிக்கக் குன்றுகளே சாட்சி. அவன் வீசிவிட்டுச் சென்றது அவளது ஆடைகளை மட்டுமன்று. ஆண்கள் மீதான அவளது மொத்த நம்பிக்கையையும் தான்.

திருமணம் எனும் பெயரில் அக்கினி சாட்சியாகக் கழுத்தில் ஒன்றைக் கட்டிவிட்டு முனியன் செய்தவைகளை எந்தக் கணக்கில் எழுதுவது ? வீட்டில் பேருக்கும் கௌரவத்திற்கும் ஊரறிய ஒருத்தியை மனைவியென வைத்துக்கொண்டு ஊரில் உள்ள பெண்களை எல்லாம் எச்சிலாக்கும் இந்த ராமகிருஷ்ணனைப் போல இன்னும் எத்தனை பேர்? அவளது நினைவின் சுழிகளில் விரைத்த மீசையுடன் பாலுவும் கூட வந்துபோனான். சுமதிக்கு வியர்த்தது. உடலெங்கும் பிசுபிசுப்பு வழிந்து பரவியது. கொத்துக் கொத்தாக ரத்தம் குடிக்கும் அட்டைகள் தொடையிலிருந்து ஊர்ந்து உறுப்புகளைக் குதறுவதைப் போல எண்ணினாள். அவளுக்கு அருவருப்பு அடிவயிற்றிலிருந்து குமட்டிக்கொண்டு வந்தது.

ராமகிருஷ்ணனின் ஆட்டம் ஓய்ந்திருக்கக்கூடும். அவன் எழுந்துகொண்டான். அவனுக்கு எழுந்துகொள்ள உதவி தேவைப்பட்டது. சுமதியின் தொடைகளில் கைகளை விரித்து அழுத்தி எழுந்தான். தொப்பை பிதுங்கிக்கொண்டு கொட்டிவிடும் போலிருந்தது. சுமதி கால்களைச் சுருக்கிக் கொண்டாள். அவளுக்கு இடுப்பின் பிற்பாதி உடலிலிருந்து எப்போதோ கழன்று விட்டிருந்தது. நன்றாகத் தொடையில் வலித்தது. “ஸ்ஸ்ஸ் ஆஆஆ..” என்று தனக்கு மட்டுமே கேட்குமாறு கத்தினாள். இருப்பைக் காட்டிக்கொள்ள எப்போதாவது வலிக்க வேண்டுமே.

ராமகிருஷ்ணனின் காலடி ஓசை கேட்டது. அவனது தோல் செருப்புகள் சருகுகளோடு யுத்தம் செய்தன. வேட்டியைச் சுற்றிக்கொண்டே அவன் தள்ளாடி நடந்தது அந்த இருளிலும் நன்றாகக் காட்டிக்கொடுத்தது நிலவு. சுமதிக்கு எழுந்துகொள்ளத் தோன்றவில்லை. வானம் அவளைப் போலவே நீலச் சேலையைப் பரப்பிக்கொண்டு யாருக்கோ உடல் காட்டிப் படுத்திருந்ததைப் போலிருந்தது. இப்போது அதன் முகமாக நிலவு இவளைப் பார்த்துச் சிரித்தது. அவள் கைகளால் பக்கவாட்டில் துழாவினாள். பண நோட்டுகள் சில அவளருகில் சிதறிக்கிடந்தன. அவற்றைத் துழாவிப் பொறுக்கி ஒவ்வொன்றாக எடுத்து கைகளில் வைத்து அடுக்கினாள். மொத்தமாகச் சுருட்டி ஜாக்கெட்டினுள் வைத்துவிட்டு அப்படியே கண்களை மூடி உறங்கிப்போனாள். சில்லென்று காற்று வீசியது.


AI-generated art is used in this Story.

எழுதியவர்

சாய் வைஷ்ணவி
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிறந்த சாய்வைஷ்ணவி திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உயிர்தொழில் நுட்பவியலில் பட்டப்படிப்பு முடித்தவர். திருச்சி, சென்னை, பெங்களூரு பெருநகரங்களின் மேநாட்டு நிறுவனங்களில் மெடிக்கல் கோடிங் துறையில் பணிபுரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக முழுநேர குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின், புத்தகங்கள் படித்தும் அதற்கு விமர்சனங்கள் எழுதி முகநூலில் பதிவிட்டும் வருகிறார்.

பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “ (கடல் பதிப்பகம் வெளியீடு)

தமிழ்நாடு கலை இலக்கிய முற்போக்கு மேடை விருது மற்றும் புன்னகை இலக்கிய அமைப்பின் “புன்னகை விருது” உள்ளிட்ட விருதுகளை “வலசை போகும் விமானங்கள்” கவிதைத் தொகுப்பிற்காக பெற்றுள்ளார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x