24 November 2024
kummara nandhan

ந்த சம்பவத்திற்குப் பின் எங்கள் உறவுகள் பாதிக்கப்பட்டுவிட்டன. ஒரு பாவனை வந்துவிட்டது. இன்று அவன் வந்தபோது நான் எதுவும் நடந்துவிடவில்லை என்பது போல, இயல்பாக வா என்றேன். அவன் புன்னகைத்தான். “உடம்பு இப்ப பரவாயில்லையா?” என்றான். முன்பு இந்தக் கேள்வியில் இருக்கும் அக்கறையும் கவலையும் காணாமல் போயிருந்தது.  ‘நான் உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன் என்று தெரிந்தும் நீ வந்து எப்படி இருக்கிறாய் என கேட்கவில்லையே? என நீ சொல்லிவிடக் கூடாதில்லையா? அதற்காகத்தான் கேட்கிறேன்என்பது போன்றதொரு தொனி. அதைக் கண்டு விரக்தியில் என் மனம் கூம்புவதை நான் கவனித்து, அதை சமாளிக்கும் விதமாக புன்னகைத்தேன். அப்படியான சமாளிப்பையும் மீறி, அது ஒரு கைத்த புன்னகையாய் இருந்துவிட்டதே என்ற கவலை வேறு என்னை சூழ்ந்து கொண்டது. எதையும் காட்டிக் கொள்ளாமல்இப்ப பரவால்லஎன்றேன்

கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. எனக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவன் எழுந்து போய்விட்டால் பரவாயில்லை என்றிருந்தது. முன்பெல்லாம் அவன் எப்போது வருவான் என்று இருக்கும். அவன் இருந்தால் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் தோன்றும். கிளம்புவதற்கு அவனுக்கும் மனசு வராது. அவனை அனுப்பி வைக்க எனக்கும் மனசு வராது.. 

சம்பிரதாயமாக ஏதோ பேச்சைத் துவங்கினான். நானும் அதற்கு ஈடாக சம்பிரதாயமான பேச்சைத் தொடர்ந்தேன். அதிலிருந்த பாவனைகள், கொஞ்ச நேரத்திலேயே எங்களுக்கு சலித்துப் போய்விட்டது. சட்டென மௌனமாகிவிட்டான். ‘‘என்னை நீ நம்பவில்லையா?’’ என்பதைப் போலப் பார்த்தான். நான் நம்பவில்லை என்பதாக உறுதியாக அவனைப் பார்த்தேன். ‘’நீ என்னை இப்படி நினைப்பன்னு நான் நினைச்சிப் பார்க்கவே இல்லஎன்பதுபோன்ற வெறுமையும் ஏமாற்றமும் அவன் கண்களில் பிரதிபலித்தன’. நான் அதைக்கண்டு ஏமாந்துவிட மாட்டேன். ஆனாலும் உன்னை நான் மதிக்கிறேன் என்பதாக என் பார்வை இருந்தது. அவன், ‘உடம்ப பாத்துக்க’’ என்றுவிட்டு கிளம்பிவிட்டான். இப்படி ஒரு சின்ன மனக் கசப்பு. முன்பெல்லாம் கூட வந்திருக்கிறது. அப்போதெல்லாம் அது ஒரு நாள் தான் இருக்கும். மறுநாள் ஒருவரை ஒருவர் பார்த்தபின் அந்த மனநிலை அப்படியே காணாமல் போய் பழைய மனநிலைக்கு இயல்பாக திரும்பி விடுவோம். இப்போது இருவராலுமே அப்படி திரும்ப முடியவில்லை. எப்படி முடியும்? பண விஷயம் அல்லவா? அதுவும் இரண்டு லட்ச ரூபாய்..

நாங்கள் இருவரும் சேர்ந்து பள்ளிக் கூடம் போய் வந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. எங்கள் கும்மாளம் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. கொஞ்சம் அதில் லயித்திருந்தேன். பின் அதிலும் ஒரு சலிப்பு உண்டானது. எழுந்து மணி பார்த்ததும், வேலைக்கு நேரம் ஆகிவிட்டதே என்று மனதிலும் உடலிலும் ஒரு பரபரப்பு எழுந்தது. இப்போது வீட்டில் தானே இருக்கிறோம் என்று பிறகுதான் நினைவுக்கு வந்தது. காலையில் தான் வேலைக்கு கிளம்புவேன். இது மதிய நேரம் என்றபோதும், கடிகாரத்தைப் பார்க்கும்போது, நேரம் ஆகிவிட்டது என்றொரு பதட்டம் காரணம் இல்லாவிட்டாலும் கூட அனிச்சையாய் தொற்றிக் கொள்கிறது

அவனால் தான் நான் இப்படி சுகமிழந்து கட்டிலோடு கிடக்கிறேன். கவலை விஷம் போல மனதில் ஏறிவிட்டது. இதுதான் என்று தெரிந்தாலும் உதறித் தள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப நான் அந்தக் கவலையிலேயே விழுகிறேன். என் கண்கள் கலங்குகின்றன

மீரா உள்ளே வந்தாள். என் கண்களைப் பார்த்து சலித்துக் கொண்டாள். “ஏன் நீங்க புரிஞ்சிக்க மாட்டீங்கறீங்கப்பா. கவலப்பட்டு கவலப்பட்டு உங்க உடம்பைத்தான் கெடுத்துக்கறீங்க. அது உங்களுக்குத் தெரியலையா?” என்றாள்.

தெரியாம என்னம்மா?” என்றேன்.   

எனக்கு மேலும் படுக்கையிலேயே விழுந்து கிடக்கப் பிடிக்கவில்லை. எழுந்து செருப்பைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினேன். “உடம்ப இப்படி வெச்சிகிட்டு வெளிய போகாமத்தான் இருந்தா என்ன? எங்கியாவது விழுந்து வச்சா யாரு பாக்கறது”. மீரா உள்ளே சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்

நான் காதில் கேட்காத மாதிரி வெளியே இறங்கினேன். பளீரென்ற வெய்யில் மேலே பட்டதும் நின்றுகொண்டிருந்த உலகம் மெல்ல எழுந்து என்னைச் சுற்றி நகர ஆரம்பித்துவிட்டதைப் போல, இருந்தது. அதைக் கண்டு கலவரப்படாமல் நிதானமாக நடக்க ஆரம்பித்தேன். எங்கே போவதற்காக கிளம்பினேன் என்பதை நான் மறந்துவிட்டேன். அதை நினைவு படுத்த யோசித்துக் கொண்டே நடந்தேன். அந்த நினைவு இரண்டு நிமிட கால இடைவெளி தூரத்தில் இவ்வளவு அருகில் இருந்த்தை நான் தவறவிட்டுவிட்டேன். இதுபோல் இன்னும் எத்தனை எத்தனை நினைவுகளை நான் தவறவிட்டுவிட்டேன். என் மறதி என் நினைவுகளை விழுங்கிக் கொண்டு வருகிறது. என் நினைவுகள் தான் நான் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் இந்த மறதி கொஞ்சம் கொஞ்சமாக என்னையே விழுங்கிக் கொண்டு வருகிறது.

தெரு முக்கில் இருந்த பேக்கரி அருகே நின்று கொண்டேன். டீ சாப்பிடலாம் எனத் தோன்றியது. ஏற்கனவே தலைச்சுற்றலாய் இருக்கும்போது டீ சாப்பிடலாமா? எனத் தயக்கமாய் இருந்தது என்றாலும் மாஸ்டரிடம் ஒரு டீ சொல்லிவிட்டு, உள்ளே போய் உட்கார்ந்தேன். நான் அமர்ந்திருந்த டேபிளில், எதிரில் உட்கார்ந்திருந்த இளைஞனை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. சில விநாடி யோசனைக்குப் பின் பளிச்சென ஞாபகம் வந்தது. வெங்கடாஜலத்தில் மகன் அருண்தான் அவன். நல்ல பையன். வெங்கடாஜலம் என் கூட படித்தவன். அவனும் நல்ல பையன் தான். நல்ல பையன் என்கிற நினைவே கசப்பாய் இருந்தது. உலகத்தில் நல்ல, பொல்லாத என்று எதுவும் இல்லை. இந்த எண்ணம் வந்ததும் அவன் மேல் எழுந்த வாஞ்சை மட்டுப்பட்டது. ஆனால் திரும்ப அவன் முகத்தைப் பார்த்தபோது, திரும்பவும் அந்த வாஞ்சை உணர்வு எழுந்தது. நான் மெல்ல அருண் என்றேன். அவன் சட்டென தலையைத் தூக்கிப் பார்த்துப் புன்னகைத்தான். நான் மிகவும் மென்மையாக்கிக் கொண்ட குரலில்அப்பா எப்படி இருக்கார்?” என்றேன். அவனுக்கு அது கேட்கவில்லை போலநல்லா இருக்கீங்களா அங்கிள்?” என்றான்

நான் நல்லா இருக்கேன் என்ற அர்த்தத்தில் புன்னகைத்துக் கொண்டேஅப்பா எப்படி இருக்கார்?” என்றேன் மீண்டும். அவன் புன்னகை இப்போது வேறு மாதிரி இருந்தது. என் அருகே குனிந்து, “அப்பா இறந்து இரண்டு வருஷம் ஆச்சு அங்கிள். அதுக்குப் பின்னாடி நாம நாலு தடவை சந்திச்சிட்டோம். ஒவ்வொரு தடவையும் நீங்க இதைக் கேட்டீங்க. நானும் ஒவ்வொரு தடவையும் இதையே சொல்லிட்டேன்என்றான்

என் முகம் இருண்டுவிட்டது எனக்கே தெரிந்தது. சாரிப்பா என முணுமுணுத்தேன். “இப்பல்லாம் ரொம்ப ஞாபக மறதியாகிப் போச்சுஎன்றேன்

ஒகே அங்கிள்என்றுவிட்டு எழுந்து வெளியேறிவிட்டான்.  

 அவமானமாய் இருந்தது. அதற்கு மேல் அங்கே உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை. எழுந்து வெளியே வந்தேன். எங்கே போவது என யோசித்தேன். லைப்ரரிக்கு போகலாம் என நினைத்துதான் வந்தேன். என்பது இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. சந்தோஷமாய் இருந்தது. நான் மறதிக்கு எதிராக லட்சத்தில் அல்லது கோடியில் ஒரு சதவீதம் ஜெயித்துவிட்டேன். என்னுடைய மகிழ்ச்சியைப் பார்த்து மறதி நோய் சிரிப்பது மாதிரி இருந்தது. அதோடு சேர்ந்து நானும் சிரித்துக் கொண்டேன்.  வீட்டுக்கே போகலாம் எனத் தோன்றியது

எனக்கு மறதி நோய் வந்துவிட்டதா என்ன? ஆனால் சின்ன வயதில் நடந்ததெல்லாம் இன்னும் பசுமையாக ஞாபகத்தில் இருக்கிறதே

மிட்டாய் வாங்க காசு கொடுத்தால் தான் பள்ளிக் கூடம் போவேன் என அடம்பிடித்து, அப்பாவிடம் அடி வாங்கி அழுதுகொண்டே பள்ளிக் கூடம் போனது. ஊர் திருவிழாவில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடியது, ராமுவின் தோட்டத்தில் நெல்லிக்காய் இலந்தைப் பழம், நாவல்பழம் பொறுக்கித் தின்றது. நுணா காயில் தேர் செய்து விளையாடியது. பிரபாகரனும் நானும் பேசிக் கொண்டே பள்ளிக் கூடம் போனது எல்லாம் தான் நினைவில் இருக்கிறதே? மறதி நோய் என்றால் இதெல்லாம் மறந்திருக்க வேண்டாமா?  

பிரபாகரனுடம் பள்ளிக் கூடம் போனது நினைவிருக்கும்போது, அவன் திருப்பிக் கொடுத்துவிட்டதாக சொல்லும் இரண்டு லட்சம் ரூபாய் மட்டும் நினைவிருக்காதா

இந்த மறதி விஷயங்களை தேர்ந்தெடுத்து மறக்கிறதா? என்னென்ன விஷயங்களை எப்படி எப்படி தேர்ந்தெடுக்கிறது? அவற்றை ஏன் தேர்ந்தெடுக்கிறது? எது தேர்ந்தெடுக்கிறது?

வீட்டுக்கு வந்துவிட்டேன். களைத்துப் போயிருந்தேன் படுத்துக் கொண்டால் பரவாயில்லை போல இருந்தது. கட்டிலில் படுத்துக் கொண்டேன். உள்ளே வரும்போதே என்னுடைய களைப்பை மீரா கண்டுபிடித்துவிட்டாள் போல, “அப்படி ஏன் வெளிய போகனும்?” என, கோபமாய் சத்தமாய்க் கேட்டாள். என் நினைவுகள் வேறெங்கோ நழுவிச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் போய்விட்டாள். தூண்டிவிடப்பட்ட சிறு வயது நினைவுகள் துல்லியமாகத் தெளிவடைய ஆரம்பித்தன. அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மனதில் வேகமாய் காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தன. நான் அதில் மூழ்கி மறைந்து போய்விட்டேன். ஒரு மணி நேரத்துக்கு மேலாக அதில் கிடந்துவிட்டு, குளத்தில் இருந்து வெளியே வருவதைப் போல எழுந்து மெல்ல வெளியே வந்து விழித்துப் பார்த்தேன்

கண் திறந்தவுடன், என் உடலே எனக்கு அந்நியம் போல ஒரு கணம் தோன்றியது. கட்டிலில் அயர்ந்து போய் படுத்துக் கொண்டிருக்கும் என் உடலைப் பார்த்து எனக்கே பரிதாபமாய் இருந்தது. நானா இப்படி ஆகிவிட்டேன். ஒருநாளில் எவ்வளவு வேலை செய்திருப்பேன். காலை ஐந்து மணிக்கு எழுந்தால் இரவு பனிரெண்டு மணி வரைக்கும் வேலை, வேலை, வேலை ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை. அப்படி வேலை செய்து சேர்த்து வைத்திருந்த ரூபாயில் இருந்துதான் இரண்டு லட்ச ரூபாயை பிரபாகரன் கேட்டதும் எடுத்துக் கொடுத்தேன்

அவனாகவே தந்துவிடுவான் என நானும் பொறுமையாக இருந்தேன். பிறகு வாய்விட்டு கேட்க ஆரம்பித்ததும் தந்துவிடுகிறேன். தந்துவிடுகிறேன் என்றே சொல்லிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் சலித்துப் போய் கொடுக்கும்போது கொடுக்கட்டும் என நான் கேட்பதை விட்டுவிட்டேன். அப்போது கூட அவன் மீது எனக்கு எந்த கசப்பும் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பின், போன மாதம் பணத்தைக் கேட்டபோது, ‘உன் பெண் கல்யாணத்தின் போது திருப்பிக் கொடுத்துவிட்டேனேஎன்று மனதார சொல்லிவிட்டானே? அவன் அப்படி சொன்னது இதுவரை என் மனதில் ஆயிரம் தடவை ஒலித்திருக்கும் இருந்தும் இப்போது மீண்டும் கண் கலங்கியது. மனசு விட்டுப் போனது

எவ்வளவோ பேர் எவ்வளவோ பணம் ஏமாறுகிறார்கள். ஆனால் அதுவும் இதுவும் ஒன்றா? பிரபாகரனும் நானும் விவரம் தெரிந்த நாளில் இருந்து நண்பர்கள். அப்படிப் பட்டவன் இப்படிச் செய்ததுதான் பெரும் வலியாய் இருக்கிறது.

என்னை ஏமாற்ற வேண்டும் என ஒருவனுக்குக் கனவில் கூட தோன்றுமா? என் மறதி நோயை எவ்வளவு சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டான். மனிதர்கள் எல்லா விஷயத்திலும் எவ்வளவோ முட்டாள்தனமாய் இருந்தாலும் இந்த பண விஷயத்தில் அதை ஏமாற்றும் விதத்தில் மட்டும் எப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான தனித்துவமான புத்திசாலிகளாக இருக்கிறார்கள்? பால்ய கால நண்பன் என்பதை நினைத்துக் பார்க்காமல், அவன் புத்திசாலித்தனத்தை என்னிடமே காட்ட வேண்டுமா

நான் தூங்கிவிட்டேனா? என மீரா வந்து எட்டிப் பார்த்தபோது, நான் விழித்துக் கொண்டுவிட்டேன். எதை எதையோ நினைத்துக் கொண்டு அப்படியே கண் அயர்ந்துவிட்டேன் போல

தூங்கி எழுந்தவுடனே அவன் ஞாபகம்தான் வருகிறது. அவன் ஏமாற்றியதுதான் மனதைக் குத்திக் கிழிக்கிறது. பணம் தானே போனால் யோகிறது. அதில்லாமல் வாழ முடியாதா? என்று சொல்லியும் பாழாய்ப் போன இந்த மனதைத் தேற்ற முடியவில்லை

ஒருவேளை உண்மையிலேயே அவன் பணத்தைக் கொடுத்திருப்பானோ? உண்மையிலேயே நான் மறந்துவிட்டேனோ? அவன் சொன்னது மாதிரி மீரா கல்யாணத்தின் போது, இரண்டு லட்சரூபாய் பற்றாக்குறை வந்தது உண்மைதானே? அப்போது அவனை கேட்டிருக்கக் கூடும். பணம் பற்றிய இவ்வளவு உணர்விருக்கும் தன்னால் அந்த சமயத்தில் கேட்காமல் இருந்திருக்க முடியாது? கேட்டது உண்மையானால் அப்படி கேட்டதே எனக்கு நினைவில் இல்லையே? ஒருவேளை நான் கேட்கவே இல்லையோ? கேட்காமல் இருந்தால் அவனுக்கு எப்படித் தெரியும்? தெரிந்துகொண்டே கொடுக்காமல் இருந்திருப்பானா? அல்லது அவன் சொல்வது மாதிரி அவன் கொடுத்ததைத்தான் நான் மறந்துவிட்டேனா? என்னதான் நோயாய் இருந்தாலும் இரண்டு லட்ச ரூபாய் வாங்கியதை எப்படி மறந்திருக்க முடியும்?

அந்த சமயத்தில், பின் எப்படி பணப்பிரச்னையை சமாளித்தேன்? யாரிடம் வாங்கினேன். எப்படி எனக்கந்த பணம் கிடைத்தது. அதுவும் நினைவில் இல்லை. அவன் கொடுக்கவில்லை என்றால் வேறு யாரிடமாவது கடன் வாங்கினேனா? நினைக்கையிலேயே திக்கென்றது. அப்படி வாங்கியிருந்தால் எப்போது வேண்டுமானாலும் யாராவது வந்து நீ என்னிடம் இரண்டு லட்ச ரூபாய் வாங்கியிருக்கிறாய் எனக் கேட்பார்களோ

ஆனால் அப்படி இருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு பணத்தைக் கொடுத்துவிட்டு இவ்வளவு நாளாக வாய் பேசாமல் யாரும் இருக்கப் போவதில்லை. ஒருவேளை பிரபாகர் சொன்னது உண்மைதானோ? அவன் பணத்தை திருப்பிக் கொடுத்திருக்கக் கூடுமோ

இதையேதான் புத்தம் புதிதாய் நினைப்பதைப் போலத் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றையும கண்டுபிடிக்கவும் முடியவில்லை. விட்டுத் தொலைக்கவும் முடியவில்லை. நெஞ்சுவலி வந்ததுதான் மிச்சம். ஒருநாள் இல்லை ஒருநாள் இதையே தீவிரமாக சிந்தித்துக் கொண்டு மன வேதனை தாளாமல் இதயம் வெடித்து செத்து மடியப் போகிறேன்

வாங்கியது மறந்துவிட்டது என்றே வைத்துக் கொண்டாலும், கொடுத்தது மட்டும் ஏன் நினைவில் இருந்து தொலைய வேண்டும். அதுவும் மறந்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. நிம்மதியாக இருக்கலாம். இப்போது மட்டும் என்ன நிம்மதிக்கு குறைச்சல்? அந்தப் பணத்தை வாங்கித்தான் சோறு தின்னப் போகிறேனா ஒன்றும் இல்லைநாளைக்கே எனக்கு ஏதாவது ஒன்று என்றால், அந்தப் பணம் வந்து என்னைக் காப்பாற்றிவிடுமா? இப்படியெல்லாம் நான் உண்மையிலேயே நினைத்துக் கொண்டதாக நினைத்தபோது, மனசுக்கு தெம்பு வந்ததைப் போல இருந்தது. சில வினாடிகளுக்குப் பின், என்ன இருந்தாலும் அவன் அப்படிச் செய்திருக்கக் கூடாது என மனதுக்குள் இருந்து குரல் எழவும். இதயத்தை அப்படியே கிழித்து எறிந்துவிடலாம் போல இருந்தது. என்ன மனசு இது

என்னைக் குறித்து வெட்கமாய் இருந்தது. ஆமாம் அவன் ஏமாற்றிவிட்டான்தான். அது அப்படித்தான் நடக்கும். இந்த உலகம் அப்படித்தான். இனி நான் அவனிடம் பணம் கேட்கப் போவதில்லை. அந்தப் பணம் திருடு போய்விட்டதாய் நினைத்துக் கொள்கிறேன்

உடல் நிலை கொஞ்சம் தேறிவிட்டது. வேலைக்குப் போகலாம் என பிரயத்தனப்படுகிறேன். ஆனால் கடுமையாக வேலை செய்தால் உடல்நலம் திரும்ப பாதிக்கப்பட்டுவிடுமோ என அச்சமாக இருக்கிறது. அந்த அச்சம் தான் என் உயிரைப் பறிப்பதற்கான ஆயுதம் என்பதைப் புரிந்து கொள்கிறேன். நான் அதற்குப் பலியாக மாட்டேன் என எனக்குள் சூழுறைத்துக் கொள்கிறேன்

என்னிடம் இருப்பவை நோய்கள் அல்ல. வெறும் மனப்பீதிகளே உண்மையில் நான் ஒன்றும் அவ்வளவு வயதானவன் அல்ல. என்னைவிட வயதானவர்கள் எல்லாம் என்னிலும் கடுமையாக வேலை செய்து வாழ்ந்துகொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்

ஆனால், நான் எதற்காக அவ்வளவு கஷ்டப்பட்டு வாழ வேண்டும். மீரா ஒருவருடம் கூட கணவனுடன் வாழவில்லை. வீட்டுக்கே திரும்ப வந்துவிட்டாள். இனி என்ன உழைத்தாலும் மீறி மீறிப் போனால் சில லட்சங்களுக்கு மேல் பணம் சேர்த்துவிட முடியப் போவதில்லை. கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைக்கும் பணத்தையும் இப்படி எவனுக்காவது கொடுத்துவிட்டு, வாங்கினேனா இல்லையா என்பதே நினைவில்லாமல் இருக்கப் போகிறேன். பின் எதற்காக நான் அப்படி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்? வாழ வேண்டும்?

இந்தக் கேள்வியின் தீவிரம், என்னை எப்போதும் செயலற்று நிறுத்திவிடும் அந்தக் காட்சியை மீண்டும் என் மனத்திரையில் கொண்டுவந்தது. தொன்னூறுக்கும் அதிகமாகவே வயதிருக்கும் ஒரு முதியவர் தலையில் விறகுச் சுமையோடு சாலையில் நடந்து செல்லும் காட்சி. இவர் ஏன் இப்படி இருக்க வேண்டும். உணவுதான் இவர் பிரச்னையா? இவர் போய் யாரிடம் கை நீட்டினாலும் சாப்பிட ஏதாவது மனமுவந்து கொடுத்துவிடுவார்களே? அது கௌரவமற்ற செயலா? இந்த வயதில் இப்படி விறகுவெட்டி நிலையில் இருப்பது மட்டும் கௌரவமான விஷயமா? கையேந்துவதால் உண்டாகும் பிம்பமும், விறகு சுமந்து கொண்டு போவதின் பிம்பமும் ஒன்றா? அவர் இந்த பிம்பத்தை ருசிக்கிறாரா? இதை எப்படி ருசிக்க முடியும்? அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு  விறகைச் சுமந்து செல்கிறார் என்பதை அந்த முகத்தில் இருந்து எடுத்துவைக்கும் அடியிலிருந்து தெரிகிறதே? ஒவ்வொரு முறையும் அவரை மறித்து நிறுத்தி, நீ ஏன் சாகக் கூடாது? என கேட்க நினைக்கும் நான் வக்கிரம் நிறைந்தவனா? அல்லது நான் நன்றாக வாழ்கிறேன் என்ற அகந்தை நிறைந்தவனா? எது என்னை அவரைப் பார்த்து அப்படிக் கேட்கத் தூண்டுகிறது என்ற அச்சத்தில் நான் அப்படியே நின்றுவிடுவேன்.

சாவைப் பற்றிய அச்சம்தான் மனிதர்களை இப்படியெல்லாம் வாழ வைத்துக் கொண்டிருக்கிறதா? நான் எதற்காக இப்போது இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன்? வேலைக்குப் போவதில் இருந்து தப்பித்துக் கொள்ளவா அல்லது வேலைக்குப் போவதற்கான ஊக்கம் பெறவா? குழப்பமாய் இருந்தது

மீராவிடம் நான் திரும்ப வேலைக்குப் போக நினைப்பதைச் சொன்னேன். அவள் மெளனமாக இருந்தாள். வேலைக்குப் போய் உடம்பை கஷ்டப்படுத்தி திரும்ப சிரமப்பட வேண்டாம் என சொல்ல ஆசைதான் ஆனால் நிலைமை அப்படி இல்லையே என்ற சங்கடத்தில்தான் பேசாமல் இருக்கிறேன் என்பதைப் போல இருந்தது அவள் மௌனம். ஆக, நான் வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டும் என முடிவு செய்து கொண்டேன்

மீராவுக்கு சீக்கிரம் விவாகரத்து கிடைத்துவிடும். பிறகு மீண்டும் மாப்பிள்ளை தேட வேண்டும். ஆனால் இந்தமுறை முதலில் இருந்ததை விடப் பல மடங்கு கடினமாக இருக்கும். அதை எதிர்கொண்டு செய்து முடிக்கும் சக்தி என்னிடம் இல்லை. அவள் வாழ்க்கையை அவளே தேர்ந்தெடுக்கச் சொல்லி விட்டுவிடுவதுதான் நல்லது எனப் பட்டது. யாருக்கு நல்லது உள்ளிருந்து ஒரு குரல் ஒலித்தது. நான் அதை அலட்சியம் செய்தேன்

மீராவின் கணவன் பெயர் என்ன என யோசிக்க முயன்றேன். அதை நான் மறந்துவிட்டதை அறிந்தபோது அச்சமாய் இருந்தது ஒருநாள் நான் மீராவையே மறந்துவிடுவேன். அதற்குப் பிறகு ஒருநாள் என்னையே நான் மறந்துவிடுவேன். காலையில் படுக்கையில் இருந்து எழுவேன். நான் யார் என்பது மறந்திருக்கும். நான் யார் என்பதை யோசித்துக் கொண்டிருப்பேன். ஒருவேளை நான் என்றால் என்ன என்பது கூட மறந்திருக்கும் அதை மறதி நிலையின் உச்சம் எனலாமா? இல்லை பைத்தியத்தின் துவக்க நிலையாய் இருக்குமா? அடுத்து நான் பைத்தியமாக ஊருக்குள் சுற்றிக் கொண்டிருப்பதைப் போன்ற காட்சிகளை என் மனம் தொகுத்து வழங்க ஆரம்பித்தது. நான் அதை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

மீண்டும் பிரபாகரை சந்தித்தபோது, அவன் பணம் கொடுத்திருந்தாலும் கொடுக்காவிட்டாலும் எனக்கு ஒன்றுதான் என்பதைப் போல அவனிடம் சகஜமாக நடந்து கொண்டேன் அது எனக்கு இயல்பாக வந்துவிட்டது. என்னுடைய மாற்றம் அவனுக்கு இனிய அதிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டும். அவனுடைய பேச்சில் இப்போது கொஞ்சம் பாவனை குறைந்திருந்தது. நான்எப்படி இருந்தாலும் சரி என ஏற்றுக் கொண்டேனே தவிர, பணம் கொடுத்திருப்பாய் என நான் இன்னமும் நம்பவில்லைஎன்ற என் நிலைப்பாட்டை அவன் விரைவிலேயே புரிந்து கொண்டான். ஆனாலும், ‘சத்தியமாக உன் பணத்தைக் கொடுத்துவிட்டேன். உன்னைப் போய் நான் அப்படி ஏமாற்றிவிடுவேனா?’ என்கிற தொனியிலேயே என்னிடம் வாஞ்சையோடு பேசினான்

நான் ஏன் இவ்வளவு தூரம் அவனை நம்பாமல் இருக்கிறேன் என்பதைப்பற்றி இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அவன் தொழில்தான் எனக்கு அப்படியான பிம்பத்தைக் கொடுத்திருக்கும். அவன் வட்டிக்குப் பணம் கொடுக்கிறான். வண்டி வாகனங்களின் மீது, நகைகளின் மீது, நிலத்தின் மீது கடன் கொடுக்கிறான். அவற்றில் பாதிக்கு மேல் அவனிடமே மூழ்கிப் போய்விடுகின்றன. குறிப்பிட்ட நாளுக்குள் மீட்கப்படாத நகையை திருப்பித் தர முடியாது என மறுத்துவிடுகிறான். பத்திரங்களில் சூசகமாக எழுதப்பட்டிருக்கும், சில நுட்பமான சரத்துக்களை வைத்து, சற்றே பிசகிவிடும் கடனாளிகளின் நிலங்களை வாகனங்களை எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்கிறான். அப்படிப்பட்டவன் என்னுடைய பணத்தையும் அப்படித்தானே செய்வான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் என்னை இப்படி அலைக்கழிக்கிறது என நினைக்கிறேன்

நான் அவனிடம் கடன் கொடுத்தபோது வேண்டுமானால் அவனுக்குப் பணமுடை இருந்திருக்கலாம். அப்போது அவன் இந்த தொழிலை ஆரம்பித்த புதிது. அதற்கு முன் பேக்கரி கடை நடத்தி வந்தான் நிலத்தை விற்று பல லட்சம் முதலீடு செய்த கடையில் இருந்து போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை. பெரும் நஷ்டம். அந்தக் கடையை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டான். என்றாலும் அதில் இருந்த வசீகரம் அவனைத் துரத்திக் கொண்டே இருந்தது. தனக்கு சொத்தாய் கிடைத்த நிலத்தில் எஞ்சியிருந்த கொஞ்ச நிலத்தையும் விற்றுவிட்டு வேறு ஒரு இடத்தில் இன்னும் பிரம்மாண்டமாக கடை வைத்தான். இப்போது கடையின் அத்தனை நுணுக்கங்களும் தனக்கு தெரிந்துவிட்டதாகவும், இனி தான் அவ்வளவு மோசமாக வீழ்ந்துவிட மாட்டேன் என்பதைப் போலவும் இந்தமுறை நடந்து கொண்டான். ஆனால் ஏதோ ஒன்று கடைக்கும் அவனுக்கும் பொருந்தாத்தாகச் செய்துவிட்டது. இந்தக் கடையும் வீழ்ச்சியை நோக்கி சரிந்தது. பெரிய அடி எழ முடியாத அளவுக்கு அதற்குள் கடந்துபோன பதினைந்து ஆண்டுகள் அவனைப் பார்த்து பரிகாசமாய் சிரித்தன. அப்போதுதான் அவன் தன்னிடம் பணம் கேட்டான். அதுவரை அவனைப் பற்றி இருந்த பிம்பத்தின் மீதான நம்பிக்கையாலும், தன்னுடைய சேமிப்பை இப்போது தருவதால் உண்மையிலேயே தன்னுடைய நண்பனுக்கு உதவ முடியும் என்ற எண்ணத்தாலும் அந்தப் பணத்தை கேள்வி கேட்காமல் எடுத்துக் கொடுத்தேன்.

இப்போது அவனுக்கு அந்தப் பணம் ஒரு விஷயமே இல்லை. அதை அவன் ஏமாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் பணத்தை தந்திரமாக தனதாக்கிக் கொள்ளும் வித்தையில் தேறிவிட்ட அவன் அதை எல்லோரிடமும் பிரயோகிக்கத்தானே பார்ப்பான்? அப்படித்தான் அவன் என் பணத்தையும் ஏப்பம் விட்டுவிட்டானோ?  

மீண்டும் நான் அந்த சுழலுக்குள் விழுந்துவிட்டேன். இப்போது நான் பயப்படவில்லை. சுழலில் நீந்தும் வித்தையை நான் இதற்குள்ளாக கற்றிருந்தேன். மீண்டும் நீந்தி கரையில் நின்று கொண்டு புன்னகைத்தேன்

மீண்டும் நான் வேலைக்குப் போக ஆரம்பித்தேன். கால்நடைகளுக்கு தீவனம் தயாரிக்கும் ஒரு நிறுவனம் எங்கள் பகுதியில் இருக்கிறது. அது நான் கல்லூரி முடித்த சமயத்தில் துவங்கியது. அப்போதிருந்து அதில் நான் வேலைக்குப் போகிறேன். நிறுவனத்தில் பிரம்மாண்ட வளர்ச்சி என்று எதுவும் இல்லை. நஷ்டமடையாமல் நடந்து கொண்டிருக்கிறது அவ்வளவுதான் ஆரம்பத்திலிருந்து அதே தொழிலாளர்கள் அதே வேலை. சம்பளம் மட்டும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகரிக்கும். ஒருவேளை வேறு ஏதாவது நிறுவனத்திற்கு வேலைக்குப் போயிருந்தால், நான் அடுத்தடுத்து உயர்ந்த பதவிகளை அடைந்து இப்போது சொந்தமாக கார் வைத்திருக்கும் ஒரு மேனேஜராக ஆகியிருக்க முடியும். அல்லது எந்த நிறுவனத்திலும் காலூன்ற முடியாமல் வெறும் ஒரு பணியாளாகவே இப்போதும் இருந்திருக்கவும் கூடும். என்னுடைய இயல்புக்கு அநேகமாக இரண்டாவது வாழ்க்கைதான் கிடைக்திருக்கும். சிரிப்புதான் வருகிறது. இப்படிப்பட்ட மனநிலையை வைத்துக் கொண்டு நான் எப்படி ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும்?

எல்லாம் சுமூகமாகப் போய்விட்டது. பிரபாகரன் பழையபடியே வீட்டுக்கு வருகிறான். முதலில் நான் நடிப்பாக இயல்பாகப் பேசிப்பேசி பின் அதுவே பழகிவிட்டது. எங்களால் இப்போது பழையபடி இயல்பாகவும் ஆர்வமாகவும் பேசிக் கொள்ள முடிகிறது. நான் அந்தப் பண விஷயம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன்

மூன்று மாதம் கழித்து ஒருநாள் நான் தொழிற்சாலையில் மயங்கி விழுந்தேன். சில நிமிடங்களில் கண் விழித்துவிட்டேன். அதை நான் அப்படியே விட்டுவிடலாம் என்றே இருந்தேன். ஆனால் மீரா விஷயத்தைக் கேள்விப்பட்டு என்னை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்

டாக்டர் என் ரத்தத்தைப் பரிசோதித்துவிட்டு, சக்கரையின் அளவு கூடியிருப்பதாக சொன்னார். பின், உப்பின் அளவு கூடியிருப்பதாக சொன்னார். பின் கொழுப்பின் அளவு கூடியிருப்பதாக சொன்னார். தின்னக் கூடாதவைகள் என ஒரு பெரிய பட்டியல் தயாரித்து தந்தார். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளும் இருந்தன. பித்தப்பையில் கல் இருக்கக் கூடும் வயிற்றில் புண் இருப்பதாக தெரிகிறது என்றார். பொறுமையாக ஒவ்வொன்றுக்கும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதற்கெல்லாம் ஆகக் கூடிய செலவைக் கணக்கிட்டால் எங்கேயோ போனது

எனக்கு மீண்டும் பிரபாகரனின் நினைவுதான் வந்தது. இப்போது அவன் பணம் கொடுத்தால் கூட எவ்வளவு உதவியாய் இருக்கும். ஆனால் நான் அவனிடம் திரும்ப இதைப்பற்றிப் பேசப்போவதில்லை. பணத்தைக் கொடுத்துவிட்டேன் என்று சொல்லிவிட்ட நண்பனிடம் போய், இல்லை நீ கொடுக்கவில்லை என வாதிட்டு, பணம் கேட்பதில் இருக்கும் நாகரிகமற்ற தன்மையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆமாம் நான் அவனிடம் அப்படி ஒருநாளும் பணம் கேட்கமாட்டேன்

ஐஸ்கிரீம் மாதிரி என் உடல் வேகமாக உருகிக் கொண்டு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய சக்தியெல்லாம் காணாமல் போய்க் கொண்டிருந்தது

பிரபாகர் என்னைப் பார்க்க வரும்போது, நான் அவனைப் பரிதாபமாகப் பார்த்தேன். அதை வெறுமனே பரிதாபம் என்று சொல்லிவிட முடியாது. உன்னால் தான் நான் இப்படி ஆகிவிட்டேன் பார் என்ற செய்தி அதில் இருந்திருக்கலாம் அல்லது அப்படி ஒரு குறிப்பு அதில் தெரியவேண்டும் என நான் விரும்பினேன். அதுவே எனக்கு கஷ்டமாய் இருந்தது. இனி அப்படி அவனைப் பார்ப்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்துவிட வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

மீரா அவனிடம் ஏதாவது சொல்லியிருப்பாளோ என்னவோ ஒருநாள் அவன் வந்து என்னையும் மீராவையும் ஆஸ்பத்திரிக்கு கிளம்பும்படி சொன்னான்

நான்என்னிடம் வைத்தியம் செய்து கொள்ளும் அளவுக்குப் பணம் இல்லை என்றேன் செத்தால் செத்துவிட்டுப் போகிறேன்என்றேன் விரக்தியாக.

அவன் சிரித்தான். ‘பணம் விஷயம் பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம்என்றான். நான்எனக்காக பணம் செலவு செய்ய வேண்டாம் என்னால் அதை திருப்தித் தர முடியாது”. என்றேன் பிடிவாதமாக.

அவன்நான் சொன்னா கேப்பியா மாட்டியா?” என்றான். என் யோசனைக்குத் தெரிந்த வரையில் அதற்குமேல் வேறு எதுவும் வழி இருப்பதாகத் தெரியவில்லை.  

ஐந்து நட்சத்திர ஓட்டலைப் போல இருந்த பெரிய மருத்துவமனைக்கு கூட்டிப் போனான். அங்கே உலவிக் கொண்டிருந்த, சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த எல்லோரும் பணக்காரர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்களைப் போல இருந்தனர். அவர்களுக்கும் இந்த உலகத்துக்கும் சம்பந்தம் இல்லாது போலத் தோன்றியது. அந்த இடத்துக்கு நான் கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லாதது போல கூச்சமாய் இருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை, ஒரு மருத்துவமனையின் அறை போலவே இல்லை. பெரிதாய் டிவி. ஏசி எல்லாம் இருந்தது.

மருத்துவர் அக்கு வேறு ஆணி வேறாய் என் உடலை அலசி ஆராய்ந்தார். தினம் ஒரு ஸ்கேன் என என் உடலில் சல்லடைபோட்டு, நோய்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்தார். மருத்துவமனையில் கொடுக்கப்படும் எதையும் சாப்பிட முடியவில்லை. சாப்பாடு ஏற்காவிட்டால் எப்படி உயிரோடு இருக்க முடியும்? மரணத்தை நோக்கி நான் நகர்ந்து கொண்டிருப்பதைப் போன்ற உள்ளுணர்வு என்னை ஆக்கிரமித்துக் கொண்டது

மீரா பேச்சு வாக்கில் பத்து நாளிலேயே இரண்டு லட்சத்திற்கு மேல் செலவாகியிருப்பதாகச் சொன்னாள்

உனக்கு எப்படித் தெரியும்?” என்றேன்.

ரூம் வாடகை மருந்துவிலை, டாக்டர் பீஸ் எல்லாத்தையும் விசாரிச்சு கூட்டிப் பார்த்து நானா ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தேன்என்றாள்.

:இவ்வளவு செலவு அவன் எதுக்காக பண்றான் என்னோட பணத்தை திருப்பிக் கொடுக்காத்துக்கு பிராயச்சித்தமாதானே பண்றான்?” என்றேன்

ஏப்பா உங்களுக்காக இவ்வளவு பண்றவர் வாங்கின பணத்தை கொடுத்திருக்க மாட்டார்னு எப்படி நம்பறீங்க. அது உங்களுக்கு ரெண்டு பேருக்குமான உறவையே கொச்சைப் படுத்தற மாதிரி இல்லையா?” என கடிந்து கொண்டாள்.

நீ நம்பறையா? அவன் பணம் கொடுத்திருப்பான்னு?” என்றேன்.

எனக்கென்னவோ அவர் பணம் கொடுத்திருப்பார்னுதான் தோணுதுஎன்றாள்

என்னால் எதுவும் பேச முடியவில்லை

அவன் அப்படி வடிவமைக்கப்பட்டுவிட்டான். ஏமாற்ற வேண்டும் அதற்கான வழி கிடைத்தால் அதை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் நண்பர்களாய் உறவினர்களாய் இருக்கும்போது இன்னும் கிளர்ச்சி உண்டாகிறது. இப்படியெல்ல்லாம் நான் அவளிடம் சொல்ல நினைத்தேன். ஆனால் நான் இதை இப்படி சொன்னால் அவள் புரிந்து கொள்ள மாட்டாள் என்ற நினைவு என்னை அமைதியாய் இருக்கச் செய்தது.

திடீரென எனக்கு சிரிப்பு வந்தது. என்னவோ உளவியல் நிபுணன் மாதிரி இப்படி ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன். என்னையே நான் வியப்புடன் பார்த்தேன்

மருத்துவமனையில் பழைய நினைவுகளை நினைத்துப் பார்ப்பதைத் தவிர எனக்கு வேறு எந்த வேலையும் இல்லாமல் இருந்த்து. ஆனால் என் மூளையின் நினைவு அடுக்குகளை நான் கிளறும்போது பெரும்பாலும் அவை காலியாக இருந்தன, ஏகப்பட்ட விஷயங்களை நான் மறந்துவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன். பள்ளி நாட்களைப் போல என் கல்லூரி நாட்கள் நினைவில் இல்லை. ஒன்றிரண்டு சம்பவங்களைத் தவிர கிட்டத்தட்ட அவை காலியாகிக் கிடந்தன. கல்யாணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் லட்சுமியை நினைவில் இருக்கிறது. அவள் இறந்துபோய்விட்டது நினைவில் இருக்கிறது. இந்த சில நினைவுகளுக்கு மேல் ஒன்றும் இல்லை. என் நினைவுப்பெட்டகம் காலியாக எடையில்லாமல் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. 

பிரபாகர் என்னைப் பார்க்க வந்தபோது, எப்போதும் இல்லாத வாஞ்சையோடு அவனைப் பார்த்தேன். என் கைகளைப் பற்றிக் கொள் என்பதைப் போல வலது கையை நீட்டினேன். உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் என்பதைப் போல கையை இறுகப் பற்றினான். பின் தொய்வடையவிட்டு மீண்டும் இறுகப் பிடித்தான். இப்படியே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தான். நான் அவனுக்குள் சராணகதி அடைந்துவிட்டவனைப் போல புன்னகைத்தேன்

நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போனான். அவன் போன பின்னால் இவன் என்னை ஏமாற்றியிருக்க மாட்டான் என்று ஒரு குரல் உள்ளே ஒலித்தது. அந்த நிமிடத்தில் எனக்கு எப்போதும் இல்லாத ஒரு நிம்மதியும் அமைதியும் உண்டானது. அதில் நான் விச்ராந்தியாய் ஆழ்ந்திருந்தேன்.

அவன் பணம் கொடுத்திருக்க மாட்டான் அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து மீண்டுவர அதைவிட அதிகமாக செலவு செய்யத் துணிந்திருக்கிறான் அதே உள்குரல் இப்போது இப்படி ஒலித்தது.


 

எழுதியவர்

குமாரநந்தன்
குமாரநந்தன்
நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த குமாரநந்தன் சிறுகதைகள், கவிதைகள் என படைப்புகள் எழுதி தமிழிலக்கியத்தில் இயங்கி வருகிறார். சிறுவர்களுக்கான கதைகளையும் எழுதி வருகிறார். இவரின் படைப்புகள் பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இதுவரை ;
பதிமூன்று மீன்கள்,
பூமியெங்கும் பூரணியின் நிழல்,
நகரப் பாடகன்,
மகா மாயா ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும்
’பகற் கனவுகளின் நடனம்’ எனும் கவிதைத் தொகுப்பு மற்றும்
‘மேகலாவின் அற்புதத் தோட்டம்’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பு நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
மஞ்சுளா
மஞ்சுளா
1 year ago

மிக அருமையான கதை குமாராநந்தா

சந்திராமனோகரன்
சந்திராமனோகரன்
1 year ago

நண்பனை சந்தேகித்தே தன் வாழ்நாளை பறிகொடுத்துவிட்டார். நல்ல கதை. உணர்வலை

Manikandan V
Manikandan V
1 year ago

/ நினைவு பெட்டகம் எடையில்லாமல் காற்றில் மிதந்து கொண்டிருந்தது / ☺️ எதற்கு யோசிக்கிறோம், தப்பிக்கவா ?மீண்டும் முயலவா ? அயற்சியான ஒரு அல்லாட்டம் இந்தக்கதையில் பதிவாகி இருக்கிறது

You cannot copy content of this page
3
0
Would love your thoughts, please comment.x
()
x