26 April 2024

செல்லா பாட்டிக்கு பேயோட்டுவதென எல்லோருமாக சேர்ந்து முடிவெடுத்ததை வசந்தி துளியும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியோடும் கோபத்தோடும் சித்தப்பாக்களிடம் சண்டையிட்டவளை அம்மா சமாதானம் செய்து அழைத்துப் போனாள். வெறுப்போடு கொல்லைபுறத்தில் போய் உட்கார்ந்து கொண்டு மாட்டுக்கொட்டகையில் இருந்த பாட்டியை உற்று நோக்கினாள். அவள் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் கசிந்தது.

‘எப்படியிருந்தவள் என் செல்லா பாட்டி?’

உடலில் வலு இருந்தவரை இடங்கொள்ளாமல் சுற்றிவந்தவள் இப்போது காடும் கட்டுத்தரையுமே கதியாகக் கிடக்கிறாள். படிப்பு ஏறவில்லையென வசந்தியை யாரேனும் கரித்துக் கொட்டினால் ஓடிவந்து அவளை இழுத்து அணைத்துக் கொள்வாள். கோரைப்புல்லின் வாசம் மணக்கும் அவள் சேலையின் தொடுகையோடு அழுதபடியே பல இரவுகள் உறங்கியிருக்கிறாள்.

”படிப்பு வரலேன்னா ஒண்ணும் தப்பில்லடா கண்ணு.. அவங்க கெடந்து போறாங்க.. நீ கூட்டி கழிக்க மட்டும் மெனக்கெட்டு கத்துக்க சாமி போதும்” என தலையை கோதியபடி சொல்வாள்.

ஊரில் யாருக்கேனும் நோய் நொடியென்றால் முதல் ஆளாய் ஆறுதல் சொல்பவள் இப்போது யாரேனுமொருவரின் ஆறுதலுக்கு ஏங்கிக் கொண்டிருப்பதை பார்க்கத் தாங்கவில்லை. வயது எழுபத்தைந்துக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அவள் அனைத்தையும் மறந்து கொண்டிருந்தாள்.

அனைத்தையும் என்றால் அனைத்தையும் தான்.. வைத்த பொருளை திரும்ப வந்து எடுப்பதற்குள் மறந்துவிட்டு யாரையேனும் உதவிக்கு அழைப்பாள். வெள்ளாளகுண்டம் நூல்மில் வேலைக்கு போய்விட்டு திரும்பி வரும்போதெல்லாம் வசந்தி அவளிடம் சென்று  “ஆயா நா யாருனு தெரியுதா?” என்பாள். “ஏன் தெரியாம..நல்லா தெரியுது” என நரைத்த புருவத்தை சுருக்கியபடி சிரித்து மழுப்புவாள். “அப்டீனா யாருனு சொல்லு பார்ப்போம்” இவளும் விடாமல் கேட்பாள். பதில் சொல்லாமல் குனிந்து கொள்பவளின் தலையை பிடித்து நிமிர்த்தினால் கண்ணோரங்களில் நீர் தளும்பியிருக்கும்.

இவள் ஏதும் பேசாமல் போய் படுத்துக்கொள்வாள்.

செல்லா பாட்டி தன் இயலாமையை வெளியே காட்ட விரும்பாமல் அடையாளம் தெரியாத போதும் வீட்டுக்கு வருவோரையெல்லாம் சிரித்தபடியே வரவேற்பாள். “வூட்டுக்கு திருடன் வந்தாக்கூட வாப்பா வந்து உக்காருப்பானு கெழவி சொல்லும் போலருக்கு” என்று பெரிய சித்தி கிண்டலடிப்பாள்.

காதில் மூன்று பவுனுக்கு கொப்பும் தண்டட்டியும் ஆட, கழுத்தை நான்கு பவுன் காரை இறுக்கிக்கிடக்க நிறைந்த முகத்தோடு அக்கம்பக்கம் விசேஷங்களுக்குச் செல்பவள் நினைவு தப்புகிற காலத்தில் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் கிணற்றடியில் குளிக்கும்போதும் காட்டுவேலை செய்கையிலும் தொலைத்துவிட்டு வரத் தொடங்கினாள். ஒவ்வொரு முறையும் நகையைத் தேட அவளை மாடுபோல இழுத்துக்கொண்டு அலைந்தார்கள்.

நகை கிடைக்காமல் போன ஆத்திரத்தில் சித்தப்பா ஒருமுறை நுகத்தடி கயிற்றால்  முகத்திலேயே அடித்துவிட மூக்கிலும் வாயிலும் இரத்தம் ஒழுக கீழே விழுந்து அழத்தொடங்கினாள். அதன்பிறகு அவளது மதிப்பு பேரப்பிள்ளைகள் மத்தியிலும் கூட குறைந்து போனது. வேண்டுமென்றே அவளது பொருட்களை இடம்மாற்றி வைத்து தேடச் சொல்லி விளையாண்டார்கள். ‘கேணக்கிழவி.. கேணக்கிழவி’ என அழைத்து இரசித்தார்கள். அக்கம்பக்கத்து பெருசுகள் வந்து “அந்த அம்மா இல்லனா இந்த பண்ணையமே இல்லப்பா.. வயசானா எல்லாருக்கும் ஞாபகம் தப்பிப் போறதுதான். இப்படிலாம் பண்ணாதிங்க” என்று போதித்து போனார்கள். நகையை தொலைத்ததிலிருந்து அவளை காட்டுக்குப் போகாமல் பூட்டிவைத்தும் பார்த்து விட்டார்கள். எப்படியேனும் வெளியே வந்து காடு கரைகளில் சுற்றியவாறே இரவுபகல் என்றில்லாமல்  தனிமையின் தீராத பக்கங்களில் எதையோ தேடியலையத் தொடங்கினாள்.

அடுத்தநாள் அதிகாலையிலேயே பாட்டியை குளிக்கவைத்து ஈரச்சேலையோடு முனியப்பன் கோயிலுக்கு கூட்டிப்போனார்கள்.

இந்த முனியப்பனுக்கு மேற்கூரை இடக்கூடாதென பரந்து விரிந்த ஆலமரத்தடியில அமர்த்தியிருந்தார்கள். சிகப்பும் பத்தியும் கலந்த வாசனை மக்கிக்கிடந்த இலைகளின் வாசத்தோடு கோயிலின் பழமையை காற்றுவெளியெங்கும் பரப்பியபடி சுற்றிக் கொண்டிருந்தது.  சுற்றிலும் பந்தலிட்டது போல காட்சியளிக்கும் விருட்சத்தின் அடிமரத்தில் ஏற்கனவே  பேயோட்டிய பலரின் உச்சிமயிரை ஆணியில் சுற்றி அறைந்து வைத்திருந்தார்கள். ஒவ்வொரு வெள்ளியும் பேயோட்டுகையில் வசந்தியும் வந்து வேடிக்கை பார்த்திருக்கிறாள். வயசுப்புள்ள இங்கலாம் வரக்கூடாதென அம்மா திட்டி கூட்டிப் போய்விடுவாள்.

இப்போது பாட்டியை இந்தநிலையில் இழுத்து வந்து அமர்த்தி வைக்கப்பட்டிருப்பதை பார்க்கையில் ஏதோ மாதிரியாக இருந்தது. பாட்டி வெறித்த பார்வையோடு அமர்ந்திருக்க பூசாரி இலைகழித்த எருக்கம்விளாரை கையில் வைத்தபடி பாட்டியிடம் மிரட்டும் தொனியில் பேசிக்கொண்டிருந்தார். அவள் எதற்கும் பதில் சொல்லாமல் வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தாள்.

பேய் என்ற வார்த்தையை வசந்திக்கு அறிமுகப்படுத்தியதே செல்லா பாட்டிதான். அவளுக்கு நிறைய பேய்க்கதைகள் பிடிக்குமென்பதால் சாப்பிட்டு முடித்த இரவுகளிலும், பின்மதியங்களிலும் சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருப்பாள்.

“சஞ்சாலி தாத்தா பாக்கவே நல்லா துடியா இருப்பாரு.. செவ்வா சந்தைக்கு சைக்கிள்ல போய்ட்டு வர நடுராத்திரி ஆயிடும்.. சாமான்லாம் நெறைய இருக்கும். கேரியர்ல வச்சி இறுக்கி கட்டிக்கிட்டு மிதியா மிதிப்பாரு. ஏரிக்கரையத் தாண்டி அஞ்சு பனமரம் வர்ற வரைக்கும் எந்த பயமுமில்ல. அங்க வந்துட்டா போதும்.. எங்கருந்துதான் அப்படி ஒரு காத்து அடிக்குமோ தெரியாது. சைக்கிள மல்லுகட்டி மிதிச்சாலும் ரெண்டாளு பாரம் உக்காந்த மாதிரி நவரவே நவறாது. அந்த நிலா வெளிச்சத்துல அஞ்சு பனமரத்தையும் பாக்கணுமே..ஒவ்வொண்ணும் ஒவ்வொரு முனி மாதிரி அவ்வளவு பயங்கரமா இருக்கும். செல்லியாயி, பச்சாயினு வேண்டாத சாமிலாம் வேண்டிக்கிட்டு வீடு வந்து சேருவாரு மனுசன். வந்து தூங்குற உங்கப்பன் சித்தப்பனுங்கள எழுப்பிவுட்டு வாங்கிட்டு வந்த அதிரசம், காராபூந்திலாம் பைல இருந்து எடுத்தா.. பொட்டலம் கட்டுனது கட்டுன மாதிரியே இருக்கும் உள்ள ஒரு பலகாரம் கூட இருக்காது.”

இவள் பயத்தோடும் ஆச்சரியத்தோடும் கேட்டுக் கொண்டிருப்பாள்.

“அது ஏன்யா பேய்க்குலாம் எண்ணெய் பலகாரம் தான் புடிக்குது?”

“ஏன்னா அதுகளுக்கு உப்பு வொரப்பு இல்லாம தான நாம படைக்கிறோம்.. அதான் நல்லது பொல்லது திங்க முடியாம இப்படி அலையதுக..”

“அப்டினா நம்ம தாத்தாவும் பேயா வருவாரா?”

“ம்..வருவாரு..”

“அப்பா?”

“ம்.. வருவான்..வந்து கூப்டாலும் அப்பன்தான்னு போய்டகூடாதுடா.. பேய்களுக்குலாம் சொந்த பந்தம் தெரியாது.அடிச்சி போட்டுடும்.”

“நீ பாத்துருக்கியா?”

“நான் கண்டதில்ல கண்ணு.. எல்லோரும் சொல்லி கேள்விபட்டுருக்கேன். யமனுக்கு கீழ பிசாது இருக்கும். அதுக்கு கீழதான் பேய்லாம்..அந்த பிசாதுங்க தான் ஆயுசு முடிஞ்சவங்கள பாத்துட்டு வான்னு பேய்ங்கள அனுப்புதுங்க.. ஆயுசு முடிஞ்சவங்க கண்ணுக்குத்தான் அதெல்லாம் நல்லா தெரியும்.”

கேட்க கேட்கவே இவளுக்கு பயம் தொற்றிக் கொள்ளும். போர்வையை இறுக்க மூடிக் கொண்டு நடுங்கியபடி கொட்ட கொட்ட விழித்திருப்பாள். ஆனாலும் அடுத்தநாள் போய் மீண்டும் கதைகேட்டு நிற்பாள்.

பூசாரி கையிலிருந்த எருக்கம்குச்சி காற்றில் சுழன்று சொடீர் சொடீரென பாட்டியின் முதுகில் இறங்கியது.

“யார்னு சொல்றியா இல்ல  இன்னும் ரெண்டு வீறு வீறட்டுமா?”

அதற்கும் மௌனம்.

முடியைத் பிடித்து ஆட்டி சடாமுனியின் கையில் சிறைப்படுத்திவிடுவதாக மிரட்டினார்.

ம்ஹூம்.. எதற்கும் அசையவில்லை.வசந்திதான் ஓரமாக நின்று பதறி துடித்துக் கொண்டிருந்தாள்.

“எந்த கேள்விக்கும் பதில் வர்ல. என்னாதான் பிரச்சினை?” மீசையை நீவியபடி கேட்டார் பூசாரி.

“கெழவி ராவானா ஒழுங்கா தூங்க மாட்டேங்குது சாமி. அதுக்குனு தனியா ஒரு ரூமு ஒதுக்கி கொடுத்தாச்சு. அங்க படுக்காம தினமும்  விடிஞ்சா ஒவ்வொரு அறைலருந்து எந்திரிச்சி வருது.அன்னிக்கு அப்படித்தான் அரிசி ரூம்ல போய் படுத்துருச்சு. விடிஞ்சு போய் பாத்தா ஒரே மூத்தர நாத்தம்.. அடிச்சுபுட்டேன் சாமி.. அப்பயும் வாயே தொறக்கல” என்றார் சித்தப்பா.

“நடுராத்திரில கொல்லைபக்கம் சத்தம் கேட்குதுனு எழுந்து பாத்தா கொய்யா மரத்து உச்சியவே வெறிச்சி பாத்துட்டு நிக்குது. கெழவிக்கு ஆளதான் அடையாளம் தெரியறது இல்ல. காத்து கருப்புலாம் நல்லா தெரியுமாட்டங்குது சாமி”

“மவளும் மருமவனும் போன வாரம் வந்துருந்தாங்க சாமி. பாதி ராத்திரில குறட்டை சத்தம் கேட்டு எழுந்து பாத்துருக்காங்க. அவங்க கட்டிலுக்கு அடியில இது படுத்துருந்து இருக்கு.. சின்ன புள்ளைங்களுக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க”

ஆளாளுக்கு புகார் சொல்ல ஆரம்பிக்க பூசாரி கொஞ்ச நேரம் யோசித்தார்.

“இது லேசுல  கட்டுப்படற மாதிரி தெர்ல. இது வேற ஏதோ துடியான சீவன் போலருக்கு.நான் எழுதித்தர்ற பொருள்லாம் வாங்கிட்டு வாங்க பாக்கலாம்”

“எப்படியாவது சரி பண்ணிவுடுங்க சாமி.வசந்திக்கு வேற மாப்ள பாத்துட்டு இருக்கு. இந்த நேரத்துல போய் எதுனாச்சும் பிரச்சின பெருசானா என்ன பண்றது?” என்றார் சின்ன சித்தப்பா.

‘ரொம்ப தான் அக்கறை போல ‘ வாய்க்குள் முனகினாள் வசந்தியின் அம்மா.

இந்த பிரச்சினை இவர்கள் குடும்பத்தில் காலம்காலமாக இருந்து வருவதுதான்.வசந்தியின் தாத்தாவைத் தொடர்ந்து அவள் அப்பாவும் கிழங்கு விற்கப் போனவர் தென்னம்பிள்ளையூர் ஏரிக்கரையோரம் விழுந்து கிடந்தார். முனி அடித்துவிட்டதாகச் சொல்லி வெற்றுடம்பாக கொண்டு வந்து போட்டார்கள்.பரம்பரைக்கே ஏதோ சாபம் இருப்பதாக ஊரில் பேசிக்கொண்டார்கள். காரியம் முடிந்த இரண்டாம் நாளே சித்தப்பாக்கள் சொத்தை இரண்டாகப் பிரிக்கவும், இவர்களை விரட்டி விடவும் பஞ்சாயத்து கூட்டினார்கள்.

அப்போதும் பாட்டிதான் அவர்களோடு மல்லுக்கு நின்றாள்.

“ஏன்டா பொட்டபுள்ளனா அதுக்கு மட்டும் பங்கு இல்லையா? சின்னவயசுலயே தாலி அறுத்துட்டு உங்க மூணு பேரையும் இந்த சொத்தையும்  நாந்தான காப்பாத்தி வச்சேன். பெரியவனுக்கு சேர வேண்டியது எம்பேத்திக்கு தந்தே ஆகணும்” எனக் குதித்தாள்.

பேசி வைத்த பஞ்சாயத்தில் அவள் குரல் எடுபடவே இல்லை.

மச்சு வீட்டுக்கு அருகிலேயே வசந்தியின் அம்மாவுக்கு சின்னதாக ஒரு வில்லைவீடு கட்டித்தரவேண்டியது என்றும், வசந்திக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் நடத்திவைத்து கல்யாணத்தின் போது இரண்டு சித்தப்பாக்களும் சேர்ந்து பத்து பவுன் நகை போட்டுவிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.அன்றிரவு முழுக்க மூன்று பெண்களுமே அழுதபடியே அமர்ந்திருந்தனர்.

வசந்திக்கு இருந்த ஒரே ஆறுதலும் இப்படி ஞாபகம் இழந்து திரிவதையும் பேய் பூதமென எல்லோரும் சொல்வதையும் பார்த்து நொறுங்கிதான் போனாள்.

தலைவிரிக்கோலமாய் அமர்ந்திருந்த பாட்டியின் முன்னால் சுருட்டுக்கட்டு, பிராந்தி, புகையிலை, எலுமிச்சை, தேங்காய்,பூ,பழமெல்லாம் வைக்கப்பட்டது.

சிலம்பெடுத்து ஆட்டியபடி பூசாரி பாடத்தொடங்கினார்.

“சண்டிமுனி சகடையேறி வாரையில

அண்டையில ஆரிவனோ பலிவேண்டி நிக்கையில

ஒச்சமென ஒம்பொழப்ப நீக்கியாம்

போறதிக்கு மாறவிட்டு போக்கியொரு பொறப்பெடுத்து…”

குரலில் உக்கிரமேறி பாடப்பாட பாட்டியின் தலை மெல்ல ஆடத்தொடங்கியது கண்டு வசந்தி அதிர்ந்தாள்.

“ம்ம்.. ம்ம்…” என தொண்டைக்குள்ளிருந்து மெதுவாக கிளம்பிய குரல் பூசாரி விசாரிக்க விசாரிக்க ஓஓவென அலறிப் பெருகியது. விகாரமான குரல் மெல்ல தெளியத் தொடங்கியது.

“நான்தான் சஞ்சாலி வந்துருக்கேன்”

“இத்தன வருசம் கழிச்சி ஆவுற காரியம் என்னா இருக்குதுன்னு நீ இங்க வந்துருக்க..என்னா ஏது?”

“எம்பொண்டாட்டி இங்க வம்மூளியா சின்னபடும்போது எப்படிரா வராம இருக்க முடியும்?” என்றபடியே சுருட்டை நோக்கி கை நீட்டினாள்.உடனே ஒரு சுருட்டு பற்றவைக்கப்பட்டு அவளிடம் தரப்பட்டது. சுருட்டை வாயில் வைத்து உறிஞ்சி நிதானமாக புகை விட்டபடியே பூசாரியின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தொடங்கினாள். சுற்றியிருந்த கூட்டம் பிரமிப்போடு அவளைப் பார்த்து அசையாமல் நின்றிருந்தது.

“பாத்தியா கெழவிக்கு வெத்தல பாக்கு பழக்கம் கூட இல்ல.. எவ்ளோ தெடமா பொக வுடுது பாரு.”

“ஏ.. குரலு கூட சஞ்சாலி மாதிரியே இருக்கப்போவ்..” கூட்டம் பேச பேச பாட்டியின் குடும்பத்தாருக்கு உதறல் அதிகரிக்கத் தொடங்கியது.

“எம் பொண்டாட்டி கழுத்துல காதுல கெடந்ததுலாம் இப்ப இங்க வந்தாவனும்.இல்லாட்டி குலநாசம் நடக்குமடா”

சித்தப்பாக்கள் நெடுஞ்சாண்கிடையாக கிழவி இருந்த திசையில் விழ சித்திக்கள் நகையை எடுக்க வீட்டுக்கு ஓடினார்கள்.

‘கெழவி தொலைச்சுபுட்டதா சொன்ன நகைலாம் மருமவளுவ பீரோவுல இருந்து வருது பாரேன்’ கூட்டம் பரபரப்பாக பேசிக்கொண்டது.

“ம்..ம்.. எடுத்து கெழவி கழுத்துல மாட்டி விடுங்கப்பா” பூசாரி அதட்ட காரை தண்டட்டியெல்லாம் பாட்டியின் மீது பூட்டப்பட்டது.

“ஆங்.. அல்லாம் ஆச்சு.. நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு கெளம்ப வேண்டியது தான. திரும்ப எட்டிப்பாக்கவே கூடாது” என்றபடி பூசாரி உச்சிமயிரை இழுத்துப் பிடித்தார்.

அதே ஆக்ரோஷமான குரலில் ஏதோவொரு மங்கலப்பாடலை காடதிரப் பாடிய பாட்டி மயங்கிச் சரிய காத்திருந்தது போல பூசாரி உச்சிமயிரை அறுத்து ஆணியில் சுற்றியபடியே “கூட்டிட்டு போய் குளிக்க வைச்சு தாயத்த கட்டிவுடுங்கப்பா.” என்றார்.

அதன்பிறகு பாட்டி எந்த அறைக்குள்ளும் நுழைவதில்லை. ஆனால் காடு மேடுகளில் ஆடுகளோடு சேர்ந்து சுற்றத் தொடங்கினாள். அந்த சம்பவத்துக்குப் பிறகு யாரும் அவளருகே போகவே பயந்தார்கள்.பாட்டியின் பேச்சு முற்றிலுமாக நின்றுபோனது. வசந்தி போட்டு வைக்கும் சாப்பாட்டை எப்போது உண்கிறாள் என்று கூடத் தெரியாது. அவள் உறங்கிய பிறகு வசந்தி அருகில் அமர்ந்து சற்று நேரம் பார்த்திருந்து விட்டு வருவாள்.

இரண்டு மாதங்களில் வசந்தியின் திருமணம் எளிமையாக நடந்தது. பஞ்சாயத்தில் சொன்னதில் பாதிதான் சித்தப்பாக்கள் செய்தார்கள். மாப்பிள்ளை பால் டெய்ரியில் வேலைக்குப் போவதாகவும் சுமாரான குடும்பம் என்றும் சொன்னார்கள். மறுவீடு சென்றுவிட்டு கிளம்பும்போது அம்மா தான் அதிகம் அழுதாள். சொல்லிவிட்டுப் போகலாமென பாட்டியைத் தேடினாள். கல்யாண வேலையில் எல்லோரும் பரபரப்பாக இருந்ததால் அவளை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றார்கள்.

இருட்டிவிட்டதால் எல்லோரும் கிளம்பத் தொடங்கினார்கள். பீரோ கட்டிலெல்லாம் வண்டியில் போக பைக்கில் மாப்பிள்ளையோடு வசந்தியை வரச் சொன்னார்கள். ஊர் எல்லையைத் தாண்டி முனியப்பன் கோயிலை கடக்கையில் இவளுக்கு மறுபடியும் பாட்டி ஞாபகம் வந்தது. ஏரிக்கரையைத் தாண்டி விரையத் தொடங்கியதும் சாலையின் குறுக்கே யாரோ நின்றிருந்தார்கள்.

பைக்கை நிறுத்தியதும் விளக்கொளியில் அது செல்லா பாட்டியெனத் தெரிந்தது. வசந்தி இறங்கி அருகில் ஓடினாள். பாட்டி கையில் முடிந்து வைத்திருந்த பொட்டலத்தைப் பிரித்து  வசந்தியிடம் கொடுத்தாள். அதில் கொப்போடு தண்டட்டியும் காரையும் இருந்தது.

“என்னால முடிஞ்சது தாயி.. யாருக்கும் தெரிய வேணாம்” என்றாள்.வசந்தி பாட்டியை கட்டிக்கொண்டு பெருங்குரலெடுத்து அழுதாள்.

“போ சாமி.. போ.. நல்லபடியா பொழச்சிக்க. நான் இப்படி ஓடை மேட்ட தாண்டி காட்டுல இறங்கி போய்க்கிறேன். நீ போ” என்று கண்களைத் துடைத்துவிட்டு மெல்ல நடக்கத் தொடங்கினாள். பாட்டி முனியப்பன் கோயில் தாண்டி ஓடைக்கரையில் ஏறி இருளில் மறையும் வரை வசந்தி அவளையே பார்த்தபடி நின்றிருந்தாள்.


 

எழுதியவர்

ந.சிவநேசன்
ந.சிவநேசன்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையம் சிற்றூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர். இவரின் கவிதைகள் காலச்சுவடு, புரவி, வாசகசாலை, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து நாளிதழ், படைப்பு கல்வெட்டு, தகவு, காணிநிலம், கீற்று, நுட்பம் போன்ற பல்வேறு இதழ்களில் வெளியாகி வருகின்றன.
கவிதை, சிறுகதை போட்டிகளில் கலந்து பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

இவரின் கவிதைத் தொகுப்புகள் :
'கானங்களின் மென்சிறை' (படைப்பு பதிப்பகம் வெளியீடு),
‘ஃ வரைகிறது தேனீ’ (கடல் பதிப்பகம்),
‘ இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை’ ( வாசகசாலை பதிப்பகம்)
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x