26 April 2024

வீட்டுக்கு வெளியே மதில் சுவரில் சாய்ந்துக்கொண்டு, வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள் வனிதா. இடுப்பில் முழங்கால் தெரியத் தூக்கிச் சொருகப்பட்ட பாவாடையும், அப்பாவினுடைய சிறிது சாயம்போன முக்கால் கைக்கு ஏற்றிவிடப்பட்ட சட்டையும், தாவணிப் போடவேண்டிய வயதில் போடாமல் ஆண்பிள்ளை சட்டை அணிந்துக்கொண்டு இருப்பதில் ஒரு திமிரழகுமாய் ஏதோ ஒரு பாடலை வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே சாலையை மோவாயை உயர்த்தி தெனாவெட்டாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் .

இடுப்பில் ஒரு கையை ஊன்றி, மறுகையில் ஊறிப்போன புண்ணாக்கு தீவனத்தை புளிச்சக்கழனித் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலந்து, கறவை மாடுகளுக்கு வைத்த தடமாக அங்காங்கே சாயங்கால நட்சத்திரமாய் ஒட்டிக்கொண்டிருந்தது பழைய சோறு. மாட்டுக்கொட்டகையில், மாட்டுச்சாணத்தை சுத்தப்படுத்திக்கூட்டியவள். சிறிது ஆசுவாசத்திற்காக,மதிலின் மீது சாய்ந்து ரோட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நல்ல பால் நிறமாக, தூக்கி முடியப்பட்ட கொண்டையுடன். சராசரி உயரத்தோடு, நல்ல வளர்ச்சியாய் நின்றவளை, ரோட்டில் சென்று கொண்டிருக்கிற பையன்கள் பார்த்தும் , பார்க்காதது போல் போய்க்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இவளைப் பார்ப்பது போல் வனிதாவிற்கு தெரிந்தால்,அவ்வளவு தான் கீழே கிடக்கும் விளக்குமாற்றின் பின்பக்கத்தை, கைகளில் தட்டிக் காண்பிப்பாள்.சமயத்தில் அடிக்கிறமாதிரியும் விளக்குமாற்றைத் தூக்கிக் காண்பிப்பாள் . எதுக்குடா வம்பென பையன்கள் பயந்து ஒதுங்கிப்போய்விடுவார்கள்.

வனிதா பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அக்கம் பக்கம் பார்த்தபடி , பாலைத்தேடிவரும் பூனையைப்போல் பாதங்களை மென்மையாக எடுத்து வைத்துக்கொண்டே, எதிர்த்த கொல்லையின் வேலிப்படலைத் திறந்துக்கொண்டு தனம் வந்தாள். பின்னாலேயே பக்கத்துத்தெரு செந்திலும் வந்து மறைவாக படலின் மேல் பதவுசாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு இவளை ஒரு பார்வை பார்த்துச் சிரித்துவிட்டு சிட்டாகப் பறந்து விட்டான்.

“அடிப்பாவி தனம் என்னடி பண்ண எதிர்த்த கொல்லையிலே?” எனக்கேட்ட வனிதாவிடம்,

“ஆமாண்டி, பண்றாங்க சட்டியும் ,பானையும் கேட்க வந்துட்டா கேள்வி“ எனச் சலித்துக்கொண்டே பதில் சொன்னாள் தனம்.

“அது சரிடி, எதாவது பண்ணிட்டுப்போங்க, இந்தக் கருமத்தையெல்லாம் யாரு கேட்டா? ஆனால் நான் அங்க தானடி பூவரசம் மரத்தடியில ஒண்ணுக்கு போனேன். அப்பயாவது சத்தம் கொடுத்திருக்கலாம்ல்ல, நான் ஒண்ணுக்கு இருக்கறத இரண்டு பேரும் பார்த்துட்டு இருந்தீங்களா? என பரிதாபமாகக் கேட்டவளின் முகத்தைக் கண்டு , விழுந்து விழுந்து சிரித்தாள் தனம்.

“ஆமாம்ந்த நீ வந்து சட்டுன்னு உட்கார்ந்துட்ட ,என்ன பண்றதுன்னே தெரியல புள்ள ” எனச் சொல்லிக்கொண்டே அந்தக்காட்சி நினைவுக்கு வர திரும்ப திரும்ப சிரித்துக்கொண்டே இருந்தாள்.

“போடி நாயே! இரு இரு உனக்கு இருக்கு, அந்த செந்தில் பய மட்டும் என் கண்ணுல மாட்டுனான் வச்சிக்க செருப்பைக்கழட்டி அடிப்பேன், கம்னாட்டி எவ்வளவு திமிரு. அவனுக்கு சொல்லிடு! அவனப் பார்த்தேன்னா அவ்வளவு தான்” என எச்சரித்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள் வனிதா.

தானாக எந்த சண்டைக்கு போகவில்லையென்றாலும், வந்த சண்டையை ஒரு கை பார்த்துவிடுவாள் வனிதா. அவளது செயல்களில் எப்பொழுதுமே ஒரு நியாயம் இருக்கும். அவளது ஆக்ரோஷங்களுக்கு பின்னாடி ஒரு வலுவான காரணம் இருக்கும். யாரும் அவளது செயல்களில் தப்புச்சொல்லி விட முடியாது.

அன்று அதிகாலை வழக்கம் போல, எழுந்து விளக்கவேண்டிய பாத்திரங்களைக் கொண்டுவந்து கொல்லையில் அடிபம்பு மேடையில் போட்டுவிட்டு, வாசல் கூட்டுவதற்கு விளக்குமாற்றையும் வாளியும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள். இரவுப்பெய்த மழை இன்னும் நீடிக்கும்போல. தவளைகளின் கர்ணக்கொடூர சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. வாசல் தெளிச்சி கோலம் போட கெட்டிச் சாணமாக எடுக்க எதிர்த்த கொல்லைக்கு தான் போகவேண்டும். இவர்கள் வீட்டு பசு இரண்டு நாட்களாக படு நாற்றமாக பச்சையாக கழிந்துக்கொண்டிருந்தது. அம்மா இன்னும் எழுந்திருக்கவில்லை . அவளுக்கு இந்த மழைக்காலத்தில் இழுப்பு வந்துவிடும். மூச்சுவிடச்சிரமப்படுவாள். இவள்தான் எழுந்து வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.

எதிர்த்த கொல்லை வனிதாவின் பங்காளிவீட்டுப் பெரியப்பாவின் கொல்லையாக இருந்தாலும், அங்கு மழைக்காலத்தில் மாடு மட்டும் தான் கட்டிவைத்திருப்பார்கள். ஒரு பம்பு செட் அறையும், அதை ஒட்டி பழையப் புழங்காத பாசியே நிறம் மாறி செவ்வண்ணத்தில் காட்சியளிக்கும் குளக்கரையும் உண்டு. அதன் மரத்தடியில் உள்ள மொத்தியான பூவரசம்பூ மரத்தடியில் பழைய டயரினால் செய்யப்பட்ட ஊஞ்சல், பிரிகயிரினால் இறுக்கமாக கட்டப்பட்டிருக்கும். மிகசோம்பலான மதிய நேரங்களில் தனமும், வனிதாவும் அங்கு வந்து ஊஞ்சல் விளையாடுவார்கள். பாடல்கள் எழுதப்பட்ட பாட்டுப் புக்குகளை வைத்துக்கொண்டு எல்லாப் பாடலின் வரிகளையும் மனப்பாடம் செய்து பாடிப்பார்ப்பார்கள். ஊர்க்கதை முழுவதும் யார் யாரை காதலிக்கிறார்கள். எவ புருஷன் எவளோடு இப்பொழுது இருக்கிறான் என சிரித்துக்கொண்டே பேசிக்கொள்வார்கள்.

தனம் எதையுமே வனிதாவிடம் மறைக்கமாட்டாள். வனிதாவிற்கு இந்த காதல் சமச்சாரங்களில் ஈடுபாடு இல்லையென்றாலும், அந்த வயதுக்கே உரிய குறும்புகளோடு தனம் சொல்வதைக்கேட்டுக்கொண்டிருப்பாள். அது அவளுக்கு கிளர்ச்சியாக இருந்தது. அவர்கள் இருவரும் பங்காளி வீட்டு சகோதரி போலவே நடந்துக்கொண்டதில்லை. ரொம்ப நெருங்கிய தோழிகள் போல இருந்தனர்.

மழை ஈரத்தில் நனைந்து மூங்கில் வாசனையடிக்கும் வேலிப்படலைத் திறந்துக்கொண்டு சாணி எடுப்பதற்காக எதிர்த்த கொல்லையின் உள்ளே சென்றாள் வனிதா, புல்லில் ஒட்டியிருந்த மழைத்துளிகள் சூடான கால்களில் பட்டது , ஒரு மாதிரி கசகசவென்றது. அசூயையோடு சாணத்தை எடுத்துக்கொண்டு திரும்பியவள் கண்களில் சிறிது திறந்திருந்த மோட்டார் அறையின் கதவுத்தென்படவே, ‘சனியனுங்களுக்கு இதே வேலை, கதவு தொறந்துப்போட்டுற வேண்டியது . அப்பறம் பாம்பு பூந்துட்டு, தேளு பூந்துட்டுன்னு நீதாண்டி திறந்து வச்சேன்னு என் மேல பழிய போட வேண்டியது. அதுவும் இந்த குண்டு பெரியம்மா இருக்கே,அதுக்கு என்னால கண்டால பிடிக்கறதில்லை.பெரியப்பாட்ட எதாவது சொல்லி, திட்டுவாங்கி வைக்க வேண்டியது குண்டம்மா.’என மனசிற்குள் திட்டியப்படி கதவின் கொண்டியை இழுத்து மாட்டப்போனாள்.

அங்கே தனமும், செந்திலும் அரை குறையாக உடுத்திக்கொண்டு, விடிந்ததுக்கூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு பாதுகாப்பு மீறி தனம் எப்படி இங்கு வந்தாள் என்பதே வனிதாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

கதவின் நாதாங்கியை பலமாக நாலைந்து முறை வேகமாக கதவில் தட்டினாள் வனிதா, சத்தம் கேட்டு எழுந்த செந்தில் இவளைப்பார்த்து விட்டு, வெகு வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தான். தனம் மெதுவாக எழுந்து ஆடைகளை சரி பண்ணிக்கொண்டிருந்தாள்.

“என்ன கருமம் தனம் இது? இதெல்லாம் நம்ம வீட்டுக்கு சரியா வருமா ? இது உனக்கே நியாயமா இருக்கா? எதோ பேசிட்டு இருந்தீங்கன்னு விட்டா, என்ன இந்த அளவு மீறிப்போறீங்க. இதல்லாம் சரியில்ல புள்ள! நீ இப்படீயே பண்ணிட்டு இருந்தா, நான் அம்மாட்ட சொல்லிடுவேன்” என்று வனிதா, தனத்தைக் கண்டித்துக்கொண்டிருக்கும் போதே, அங்கு தனத்தை தேடிக்கொண்டு பெரியம்மா வந்து சேர்ந்தாள்.

“ஏண்டி என்னடி இரண்டு பேரும் காலையிலையே கதாகாலட்சேமத்தை ஆரம்பிச்சிட்டீங்க, நேரம் காலம் இல்லையா உங்களுக்கு,என்னடா கொல்லைக்கதவு திறந்துருக்கு, பக்கத்துலப் படுத்திருந்தவளை ஆளக்காணோமேன்னுப் பார்த்தா காலம்பரவே கதை வேண்டிக்கிடக்கு கதை, கழுதைங்களா வேலையப்பாருடிங்கடி! இந்த பாழாப்போன குளக்கரைக்கு பெரியவங்க நாங்களே வரப்பயப்படுவோம்.. இந்த குளத்துல தான் அஞ்சுகம் அக்கா, புருஷன் கொடுமைத்தாங்காம செத்துப்போனதா சொல்லுவாங்க, வயசுப் பொண்ணுங்கமேல பூ வாசனை வீசுமாம், காத்துக்கருப்பு அண்டிடப்போகுதுடி பொழுதானைக்கும் இங்க என்னங்கடி பண்றீங்க?”

“ஏ!தனம் எருமை உங்கப்பா பஞ்சாயத்துக்கு போகணும் நேத்து ராவோட சொன்னாருல்ல, அவரு கோபம் பத்தி உனக்கு தெரியாதா?பெல்ட் எடுத்து உறிச்சிருவாரு.வா! சீக்கிரம் இட்டிலி ஊத்து” என்றபடி கொஞ்சமா கீழேக்கிடந்த சாணியை பக்கத்திலிருந்த வைக்கோல் போரிலிருந்து, சிறிது வைக்கோலை பிடுங்கி, உருட்டி எடுத்துக்கொண்டு நகர்ந்தாள்.

கண், கைகள் அசைவுகளால் வனிதாவும், தனமும் பேசிக்கொண்டே அவ்விடத்தை விட்டு அவசர அவசரமாக வேலையைப்பார்க்க நகர்ந்தனர். ஏற்கனவே இருவருக்கும் இடையே செந்தில் வந்ததிலிருந்து தனம் சரியாக வனிதாவிடம் பேசாதது பெரும் குறையாக இருந்தது வனிதாவிற்கு, அதோடு இப்படி அசிங்கமாக தனம் நடந்துக்கொள்கிறாளே என தனத்தின் மேல் கோபமாக, அவளை சந்திப்பதையே தவிர்த்திருந்தாள் வனிதா.

ஒருவாரம் சென்றிருக்கும், “ஏய் வனிதா நாளன்னைக்கு உன்னைப்பொண்ணு பார்க்க வரப்போறாங்க, இந்த ஆம்பளை சட்டையெல்லாம் தூக்கித்தூரமா போட்டுட்டு, போய் மேஜை மேல சிவப்புக்கலர் ஜாக்கெட் துணியும், சிவப்பு கலர் புடவையும் இருக்கு,எ டுத்துட்டுப்போய் சுப்பையா கடையில அளவுக்கொடுத்துட்டு வா! இன்னைக்கு சாயங்காலம் ஜாக்கெட் வேணுமுனு சொல்லு . உங்கப்பாவ பத்தி அவனுக்கு நல்லாத் தெரியும். அவன் நேரத்துக்கு ஜாக்கெட் கொடுக்கலேன்னா, தைக்க வச்சிருக்க துணியெல்லாம் ரோட்டுக்கு வந்துரும்னு”, என்று சொல்லி விட்டு உள்ளே போனவளை,

“அம்மா எனக்கென்னமா இப்ப கல்யாணத்துக்கு அவசரம் , நான் கொஞ்ச நாளு கழிச்சி பண்ணிக்கறேன்மா. தனம் எனக்கு அக்கா தான, அவளுக்கு ஆகட்டும்மா”,என்ற வனிதா வைப்பார்த்து,

“என்னடி நொக்கா ? ஆறுமாசம் அவ மூத்தவ அவ்வளவு தான் கேக்கறப்ப பொண்ணை கொடுத்திரணும் இல்லேன்னா கழனிப்பானையில கைவிட்ட மாதிரி ஏதாவது உருப்படாத சம்பந்தம் தான் அமையும் புரிஞ்சிதா? எல்லாம் எங்களுக்கு தெரியும் வாய மூடிட்டு சொல்றத செய் என்ன? ஏண்டி ! எருமை! மனசில யாரையாவது நினைச்சிட்டு இருக்கீயா ?அப்படி எதாவது நினைப்பு இருந்தா அப்படியே தொடச்சி தூக்கி எறிஞ்சிரு. உங்க அப்பா, பெரியப்பா, சித்தப்பா பத்தி உனக்கு நல்லாத்தெரியும். ஊருல எதாவது இது மாதிரி காதல் பிரச்சனை வந்தாலே விசத்தைக்கொடுத்து கொல்ல சொல்றவனுங்க, வேணாம்டி அதெல்லாம் நமக்கு. உன்னை மாப்பிள்ளை வீட்ல விருப்பப்பட்டு கேக்கறாங்கம்மா, நமக்கு சொந்தம் தான். தங்கமான குடும்பம். அப்பா சொல்றதுக்கு எதுத்து எதுவும் பேசிடாத தாயி, எதா இருந்தாலும் நாம பொம்பளைங்க, பணிஞ்சிதான் போகணும்டா தங்கம். சரியா ?” என்றபடி தலையை தடவிக்கொடுத்த அம்மாவின் வார்த்தையில் எதுவுமே பொய்யில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தாள் வனிதா.

ஜாக்கெட் துணியை எடுத்துக்கொண்டு, சுப்பையாவிடம் கொடுத்துவிட்டு திரும்பியவளை கையப்பிடித்து அவசர அவசரமாக எதுத்தக்கொல்லைக்கு இழுத்துக்கொண்டு போன தனம். வனிதாவைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

“எனக்கொரு சத்தியம் பண்ணுடி , நான் செந்தில விரும்புனது எங்களோட பழக்கம் வழக்கம் யாருக்கும் தெரியக்கூடாது”, என சொன்ன தனத்தைப் பார்த்து “ஏன் தனம் வீட்டுக்கு ஏதாவது சந்தேகம் வந்துட்டா? மாட்டிக்கிட்டியா என்ன?” என்றவளிடம் தலையில் ஓங்கி அடித்துக்கொண்டு அழுதுக்கொண்டே, “அதெல்லாம் அடுத்த பிரச்சனை புள்ள , நான் நம்புனவனே என்னை மோசம் பண்ணிட்டான். அவன அவ்வளவு நேசிச்சேன். அவனுக்காக ஊர் உறவு எல்லாத்தையும் விட்டுட்டு அவனோட ஓடிப்போகக்கூட தயாரா இருந்தேன். எல்லாம் வீண். அந்த நாய் சொல்றான் . நான் நாடுமாறியாம். தேவடியாவாம், நான் கூப்புட்டோன்ன என்ட படுத்தீயே! எவன் கூப்பிட்டாலும் அப்படி தானே போவேன்றான். இன்னைக்கு என் முன்னாடி அவுத்துப்போட்டுட்டு அம்மணமா நின்னவ , நாளைக்கு கல்யாணத்துக்கு அப்பறமும் எவன் சொன்னாலும் இப்படி நிக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்ன்னு கேக்கறான் புள்ள. நான் ஏமாந்துட்டேன். இவனை காதலிச்சேன்னு சொல்லிக்கறதே எனக்கு அவமானம். இது உனக்கு மட்டும் தான் தெரியும். உன் கால்ல வேணாலும் விழுறேன். யாருட்டையும் சொல்லிடாத”, என சொல்லிக்கொண்டிருக்கும் போதே , ஆள் வரும் அரவம் கேட்க

“சரி எதுவும் அவசரப்படாத மதியம் சாப்பிட்டுட்டு இங்க வந்துப் பேசிக்கலாம். எதாவது வீட்டுக்கு தெரிஞ்சிது நாம அவ்வளவுதான்” எனக் கூறிக்கொண்டே அவ்விடத்தை விட்டு அதிர்ச்சியாகப்பிரிந்தாள் வனிதா.

மதியம் அம்மா வைத்துக்கொண்டிருக்கும் கறிக்குழம்பு வாசனை மூக்கைத் துளைக்க, “அம்மா !அம்மா எனக்கு குழம்புல உள்ள ஈரலும், சுவரொட்டியையும் கொடு” என்று தட்டைத் தூக்கிக்கொண்டு நிற்பவளைப் பார்த்ததும், இவளையா கல்யாணம் செய்துக் கொடுக்கப்போகிறோம் என சிரிப்பாகவும், மலைப்பாகவும் வந்தது வனிதாவின் அம்மா செண்பகத்துக்கு, குழம்பில் கரண்டியை விட்டு அரைவேக்காடாக வெந்துப்போயிந்த சுவரொட்டியை எடுத்துத் தட்டில் வைக்கும் போது,

“அய்யய்யோ மோசம் போயிட்டனே ! யாராவது ஓடியாங்களேன்” என பெரியம்மாவின் குரல் கேட்டு எல்லாரும் எதிர்த்த கொல்லைக்கு ஓடினர்.

அங்கே பூவரசம் மரத்தடியில், டயரின் மேலே ஏறி தூக்கு மாட்டி செத்துத் தொங்கிக் கொண்டிருந்தாள் தனம். எதுவுமே பேசாமல், உறைந்து போய் அதிர்ச்சியில் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்தாள் வனிதா.

யாருக்கும் எந்தக்காரணமும் தெரியாமல், எதற்கு இறந்தாள்? என எந்தத்தடயமும் இல்லாமல், இறந்துப்போனாள் தனம். அவள் ஏன் தற்கொலை செய்துக்கொண்டாள் என்பது அனைவருக்கும் குழப்பமாகவே இருந்தது. ஊரில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் சொல்லிக்கொண்டார்கள். மதியநேரத்தில் உபயோகமில்லாதக் குளக்கரையில் அமரக்கூடாது எனவும், குளத்துப்பேய் அடிச்சிக்கலாம் எனவும் பேசிக்கொண்டார்கள்.

று மாசம் போயிருக்கும் “இறந்த வீட்ல விசேஷம் ஒண்ணு செய்யணும்பா, இந்த முறை , கிறையெல்லாம் வேணாம். நாங்க தான் பொண்ண பார்த்துருக்கோம்.பையனுக்கு உங்கப்பொண்ணக் கட்டிக்க ரொம்ப பிரியம். அவன் சொல்லித்தான் நாங்க பொண்ணே கேட்டோம். இல்லேன்னா எங்க வசதிக்கு சிங்கப்பூரார் வீட்டுப்பொண்ண தான் கட்டிருப்போம். கட்டினா உங்கப் பொண்ணதான் கட்டுவேன்னு பிடிவாதமா இருக்கான் . கல்யாண மண்டபம் நம்மது இருக்கு. அடுத்த வாரமே கல்யாணத்த முடிச்சிரலாம், வேணுமுன்னா உங்க பொண்ணுக்கிட்ட சம்மதம் கேட்டுச்சொல்லுங்கன்னு,” மாப்பிள்ளை அப்பா சொந்தக்காரர்களிடம் சொல்லி அனுப்ப,

“நான் சொன்னா என் பொண்ணு கிழிச்சக்கோட்டைத்தாண்ட மாட்டா ஏற்பாடு பண்ணுங்க ,அவளும் அவ அக்கா இறந்ததுலேர்ந்து , ரொம்ப உடைஞ்சிப்போயிட்டா , இந்த கல்யாணமாவது அவளைக்கொஞ்சம் மாத்தட்டும்”, என்று திருமண ஏற்பாடுகளை விரைவாக செய்ய ஆரம்பித்தார் வனிதாவின் அப்பா அய்யாதுரை.

“வாங்க மாப்பிள்ளை! வாங்க உள்ள வாங்க ! சும்மா வெட்கப்படாம உள்ளவாங்க மாப்பிள்ளை ! இனிமே இது உங்க வீடு. என்ன இப்படி தயங்கி தயங்கி நிக்கிறீக? சும்மா சகஜமா இருங்க ,” என்ற அய்யாத்துரையின் குரல் கேட்க, அதற்கு பதிலாக

“இல்லை மாமா பத்திரிக்கை அடிச்சிவந்துட்டு அப்பா உங்கள்ட்ட கொடுத்துட்டு வரச்சொன்னாங்க” என்று பதில் சொன்னக்குரல் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்க, அவசர அவசரமாக கூடத்திற்கு வந்தாள் வனிதா.

அங்கே பத்திரிக்கையோடு நின்றுக்கொண்டிருந்தவனை ப்பார்த்ததும், ஆங்காரமாக வந்தது வனிதாவிற்கு , அப்படியே அவன் தலைமுடியை கொத்தாக பிய்த்து எறியும் அளவிற்கு கோபம் வந்தது.

“என்னம்மா பார்த்துட்டு இருக்க ,இவர்தான் மாப்பிள்ளை , ஒருவாய் காப்பித் தண்ணிப்போட்டுட்டு வாம்மா” என்றஅய்யாத்துரையின் குரல் காதில் விழாததுப்போல பதில் பேசாமல் செந்திலை முறைத்துக்கொண்டே உள்ளேப் போனாள் வனிதா.

அவளால் செந்திலை மன்னிக்கவே முடியவில்லை. ஆரம்பத்தில் தனம் விலகிப்போகும் பொழுதெல்லாம். அவன்தான் கொஞ்சம் கொஞ்சமாக அவளை தன்பக்கம் ஈர்க்க முயற்சி செய்தான். நிறைய கடிதங்கள் எழுதிக்கொண்டே இருப்பான். அதெல்லாம் தனம், வனிதாவிடம் காட்டியிருக்கிறாள். ஒரு தடவை தனம் அவனை அறைந்து கூட இருக்கிறாள்.. எங்குப் போனாலும் பின்னாலயே சுற்றி சுற்றி வந்து காதலித்தவன் இப்படி செய்தது மிக அதிர்ச்சியாக இருந்தது வனிதாவிற்கு.

தனமாவது இரகசியத்தோடு, இரகசியமாக இறந்துவிட்டாள். அதற்கே ஊர் முழுவதும் அவள் காதலித்தாள் எனவும் , கர்ப்பமாக இருந்ததால் தான் இறந்துவிட்டால் எனவும் பேசிக்கொண்டார்கள். இவளிடம் யாரிடம் சொல்லக்கூடாது என தனம் சத்தியம் வாங்கியிருந்ததால், வனிதாவிற்கு இதைப்பற்றி யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. அதைப்பற்றி யோசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிவிட்டாள்.

சரியாக சாப்பிடாமல், அழுதுக்கொண்டே, அவளுக்கு பிடித்த டிவிப்பார்பதோ, சினிமாப்பாடல்களைக்கூடக் கேட்காமல் ,தனிமையிலேயே நிறைய நேரங்கள் செலவிட ஆரம்பித்தாள். யாருக்கும் தெரியாமல் தனியாக பேச ஆரம்பித்தாள். சரியாக குளிப்பதில்லை, தலை சீவுவதில்லை. நல்ல வளர்ந்த மூங்கில் குச்சியை வைத்துக்கொண்டு எதையாவது ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய இயல்பு மாறியிருந்தது. செந்திலை பழிவாங்கவேண்டுமென நினைத்தாள்.

என்ன தப்பு செய்தாள் தனம்? செந்திலோடு வாழ எத்தனை கனவுகளை வைத்திருந்தாள். தான் வாழப்போகிறவனோடு அவன் விருப்பத்துக்கு இசைந்தாள் என்னத்தவறு என்று தானே நினைத்தாள். செந்திலுக்கு ஆரம்பத்திலேயே தன்னை பிடிந்திருந்தால் அப்பொழுதே பெண் கேட்டுத் திருமணம் செய்திருக்கலாமே? தனத்தை ஏன் காதல் என்ற பெயரில் ஏமாற்றி உபயோகப்படுத்தி தூக்கி எறிந்து, அவளை தற்கொலையும் செய்யத்தூண்டி, செந்தில் செய்தது முழுதும் பச்சை துரோகம்.. இவனை காலமெல்லாம் அழவைக்க வேண்டும் என எண்ணி எண்ணியே வனிதாவிற்கு மனஅழுத்தம் கூடியது.

கல்யாண வேலைகள் ஆரம்பித்ததும்,விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். வாரக்கணக்கில் விருந்துகள் நடந்ததால் வனிதாவின் மாற்றங்களை யாரும் சரிவர கவனிக்கவில்லை. அவளது விருப்பத்தைப்பற்றி யாருக்கும் கவலையே இல்லை..

திருமண நாளன்று ஏற்பாடுகள் சிறப்பாக நடந்துக்கொண்டிருந்தது. சாப்பாடு அந்த வட்டாரத்திலேயே புகழ் பெற்ற ஆலயமணி சமையல். நாதஸ்வரம் அசோகன் குழுவினர் என ஒரே தடபுடல் தான். மாப்பிள்ளை வீட்டிற்கும் ஒரேப் பையன். பெண் வீட்டிற்கும் ஒரே பெண் என்பதால் காசை வாரி இறைத்திருந்தார்கள். சுற்று வட்டாரம் முழுக்க பத்திரிக்கை கொடுத்திரிக்கை கொடுத்திருந்ததால் ஊரே கூட்டத்தினால் அல்லோலப்பட்டது. வனிதா சிவப்பு நிறப்பட்டுப்புடவையில் அத்தனை அழகாக இருந்தாள். நிறைய நகைகளும் அவளுடைய நிறத்திற்கு அத்தனைப் பொருத்தமாக இருந்தது.

அவளை வைத்தக்கண் எடுக்காமல் அப்படியே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் செந்தில். எத்தனை அழகாக ,அடக்கமாக இருக்கிறாள். ஆண்பிள்ளைகள் இவளைப்பார்த்தால் நெருங்கவேப் பயப்படுவார்கள். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று எண்ணிக்கொண்டே, சம்பிரதாயங்கள் முடிந்து வனிதாவின் கழுத்தில் தாலியைக்கட்டினான் செந்தில்.

திடீரென அமர்ந்திருந்த மனையிலிருந்து எழுந்தவள். தலைக்கு மேலே போட்ருந்த மூங்கில் பந்தலிலிருந்து, குச்சி ஒன்றை உருவினாள்.. “டேய் பொறம்போக்கு” என அலறிக்கொண்டே , செந்திலின் தலைமுடியை பற்றி இழுத்து, அவனது பட்டுச்சட்டையை பிய்ந்து எறிந்தாள். என்ன செய்கிறாள் வனிதா என அனைவரும் யூகிக்கும் முன் ,செந்திலின் உடைகள் முழுவதையும் பிய்த்து எறிந்து அவனை ஊரின் முன்பு முழு நிர்வாணமாக்கி மூங்கில் குச்சியால் விளாச ஆரம்பித்தாள்.

குளத்துக்கரை பேய் வனிதாவையும் பிடித்து விட்டதாக ஊரே பேசத்தொடங்கியது.


 

எழுதியவர்

தேவிலிங்கம்
தேவிலிங்கம்
வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.

பல்வேறு அச்சு / இணைய இதழ்களிலும் கவிதைகளை எழுதி வருபவர். ‘நெய்தல்நறுவீ’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x