27 April 2024

மகாதேவி வா்மா  (1907-1987)  இந்தி மொழிக் கவிஞா், விடுதலைப் போராட்ட வீரா், கல்வியாளா் எனப் பல தளங்களிலும் இறங்கியுள்ளார். “நவீன மீரா” என்று பரவலாக அறியப்பட்ட இவர், 1914 முதல் 1938 வரையான காலகட்டத்தில் இயங்கிய “சாய்யாவாது” என்னும் உணா்ச்சிமயமான இலக்கிய இயக்கத்தின் பெரும்பங்கு வகித்தவா். அலகாபாத்தில் உள்ள ‘பிரியா ஜி மகிளா வித்யா பீடம்’  மகளிா் உண்டு உரைவிட கல்லூரியில் முதல்வராகவும், பின்னா் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளாா். பத்ம பூசண் (1956) ஞானபீட விருது (1982) பத்ம விபூசண் (1988) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ள இவருடைய கவிதையை நேரடியாக இந்தியில் இருந்து தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன்.

  • आना / महादेवी वर्मा
  • நிகழ் சாத்தியங்கள்
கேவலான என் பிரார்த்தனைக்கு எவை குரல் வடிவம் தந்தனவோ,
அந்த பலவீனமான ஆன்மாக்களை
நடுங்கும் என் தாலாட்டுக் குரலால்
நானின்று உறங்கவைக்கிறேன்!
தாளம் தப்பாது அசைகிற என் விழிகள்
கனத்துக் கிடக்கிற என் கண்ணிமைகளுக்குள்  பிணைக்கப்பட்டுள்ளன,
வசீகரமானவளின் கண்ணில்
நிசப்தம் படிந்துகிடக்கிறது!
எவருடைய வாழ்வு வீணே
எரிந்தழிந்து போவதைப் பார்த்தீர்களோ
அவனிப்போது
மீட்சி அடைந்துவிட்டிருப்பதைப் பாருங்கள்
அங்கொரு தீபத்தை ஏற்ற ஆசைப்படுங்கள்!
ஒளிந்துகொண்டிருக்கும்
வேதனை, நிசப்தத் தருணங்களில் விரைவாக  உறங்கிவிடுகிறது,
புயலின் உன்மத்தத்தில்
தன்னிலை இழந்து மயங்கிக் கரைகிறது.
கருணையின் எழுச்சி குன்றி
இருள் ஆட்சி செய்து வருகையில்
வானில் எழும் தீபாவளி ஒளியில்லாப்பொழுதுகளின் பாரத்தை
வெளியேற்றுகிறது.

 


ஃபயஸ் அஹ்மத் ஃபயஸ் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபயஸ் அகமது ஃபயஸ் (1911-1984) மார்க்சிய சிந்தனை கொண்ட கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இவருடைய படைப்புகள் லெனின் அமைதிப் பரிசும்  வேறு பல விருதுகளையும் வென்றது. ராணுவ அதிகாரியாக, கவிஞராக, ஊடகவியலாளராகப் பன்முகத் தன்மை கொண்ட ஃபயஸ் தம் புரட்சிகரமான கருத்துகளால் அரசியல் அடக்குமுறைக்கு ஆளானார்.  இன்றளவும் உருது இலக்கியத்தின் மிகப் புகழ் பெற்ற இடத்தைக் கோருபவையாக அவருடைய  கஜலும் கவிதைகளும் திகழ்கின்றன. இதற்கு முன் ஃபயஸ் எழுதிய அரசியல் கவிதைகள் சிலவற்றை மொழியாக்கம் செய்த நான் அவருடைய காதல் கவிதையொன்றை ஆங்கிலத்தில் வாசித்து மனம் லயித்து அதில் ஈடுபட்டுள்ளேன். 

ன்பே
அதே காதலை என்னிடம் எதிர்பார்க்காதே.
வாழ்க்கை ஒளிவீசக் கூடியது என்று உன்னால் எனக்குத் தோன்றியது.
உன் மீதான காதல் துயரத்தில் நான் ஆழ்ந்துவிட்ட பிறகு
உலகியல் சிக்கல்களை ஏன் குறைகூற வேண்டும்?
உன் முகத்தின் ஒளி இளமையின் வசந்தகாலத்தை நித்தியமாக்குகிறது.
உன் கண்களைத் தவிர எழிலானதென்று சொல்ல இந்த உலகில் வேறென்ன இருக்கிறது?
நீ என்னுடையவளாகிவிட்டால் என் விதி என்னிடம் சரணடையும்.

இது நிஜம் இல்லை,
அவ்வாறு இருக்கவேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமே.
காதலைத் தவிர இவ்வுலகில் வேறு பல துன்பங்களும் இருக்கின்றன.
நாம் ஒன்றுகூடுவதில் ஏற்படும் களிப்பைத் தவிர வேறு பல இன்பங்களும் உள்ளன.

கணக்கிலடங்கா நூற்றாண்டுகளின்
இருண்ட கொடூரமான காலங்கள்.
ஜரிகை வேலைப்பாடுகளுடைய விலை உயர்ந்த பட்டுத் துகிலால் நெய்யப்பட்டு
மூலைக்கு மூலை விற்பனை செய்யப்படும்
புழுதி படிந்த, குருதியில் நனைந்த உடல்கள்.
தகிக்கும் நோய்ச் சூளைக்குள் இருக்கும்,
ஆறாக் காயங்களிலிருந்து
சீழ் கசிந்துகொண்டிருக்கிற உடல்கள்.

என் பார்வை இவற்றின் பக்கமும் திரும்புகிறது,
நான் நிராதரவாக நிற்கிறேன்.
உன்னுடைய அழகு இப்போதும் மனங் கவர்வதாகவே இருக்கிறது,
ஆனாலும்
நான் நிராதரவாக நிற்கிறேன்.

காதலின் வேதனை மட்டுமின்றி வேறு சில துன்பங்களும் உலகில் இருக்கின்றன.


தமிழில் : கயல்

 

Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Brindha Sarathy
Brindha Sarathy
2 years ago

அற்புதமான கவிதைகள். மொழிபெயர்ப்பு செய்த கவிஞர் கயலுக்கு என் அன்பு.

Selvam kumar
Selvam kumar
2 years ago

மிகவும் அற்புதமான கவிதை , மற்றும் மொழி பெயர்ப்பு..,.

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x