23 November 2024
manjunath

ந்திமாலை பாங்கின் ஓசை நீண்ட எண்ணெய் ஒழுக்கைப் போன்று பிசிறில்லாத குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது.

பள்ளிவாசலின் குழல் ஒலிபெருக்கி மீது அமர்ந்திருந்த காகங்கள் சிறகு படபடக்க கலைந்து சென்றன.

சுந்தரமூர்த்தி தலையை துவட்டியபடி வெளியே வந்தார்.காவி நிற வேஷ்டியும் கருப்பு நிற துண்டும் அணிந்திருந்தார்.

திறந்திருந்த ஜன்னலின் வழியாக சிலுசிலுவென மாலை நேரக் குளிர்காற்று அலை அலையாக வந்து கொண்டிருந்தது.

சந்தனக்கட்டையை நீர் விட்டு உரசி மூன்று விரலில் படும்படி வழித்தெடுத்து நெற்றியில் பூசிக் கொண்டார்.

கைகளை மார்பின் குறுக்காக இறுக்கியபடி ஒரு கணம் மௌனம் காத்தார். பின்பு “சாமியே.., சரணம் ஐயப்பா… சாமியே.., சரணம் ஐயப்பா… என படிப்படியாக ஆரம்பித்து பலமாய் சரணகோஷம் சொல்லத் துவங்கினார்.

மாலை போட்ட இந்நாள் வரை இழைப் பிசகாத விரதத்தை அனுஷ்டித்து வருகிறார். அதி காலையும் அந்தி மாலையும் ஓதப்படும் பாங்கு பாடல்தான் அவரது குளியலுக்கான சமிக்ஞ்சை.

சூரியன் என்கிற தூரிகை செவ்வண்ணத்தை குழைத்து  தூக்கி வானத்தை அழகு படுத்திக் கொண்டிருந்தது.

சுந்தரமூர்த்தி தாங்கியை நிறுத்தி அதன்மீது வரை பலகையை வைத்து ஒரு ஹான்ட் மேட் பேப்பரை  அதன்மீது வைத்து கிளிப் செய்தார்.

வகை வகையான குச்சங்கள் பொருந்திய வெவ்வேறு அளவுடைய மெல்லிய தூரிகைகள் தடித்த தூரிகைகள் மற்றும் பட்டை தூரிகைகள் என முதலில் வரிசைப்படுத்தி கொண்டார்.வண்ணங்களை சரியான விகிதத்தில் கலந்து வைத்தார்.

பத்திரிக்கை அலுவலகம் அனுப்பியிருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தார். குஜராத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தின் கவர்ஸ்டோரிக்கு ஏற்ற வகையில் மேல் அட்டைப் படத்தையும் உள்ளடக்க படங்களையும் வரைந்து அனுப்ப வேண்டும்.

எப்படி எந்த முறையில் எந்த பார்வையில் வரையலாம். மெல்லக் கண் மூடினார். விரல்கள் நீண்டு சிகரெட் பெட்டியை தேடியது..,

“அடடா மாலை போட்டு உள்ளதால் சிகரெட் பிடிப்பதை மறந்துபோனமே..,”

“சிகரெட் இல்லாமல் கற்பனையை ஒரளவுக்கு மேல் விரிவாக்க முடியவில்லையே..,  வழக்கம்போல் தண்ணீர் குடித்து எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.”

பெருமூச்சொன்றை விட்டபடி அயர்ச்சியோடு இருக்கையிலிருந்து எழுந்து சமையல் கட்டுக்கு வந்தார்.

சமையல் கட்டு ஜன்னலின் மேற்புறமாய்  தேன் சிட்டு ஒன்று கூடு கட்டி முட்டை வைத்திருந்தது.

தன்னை நோக்கி வரும் நிழலைப் பார்த்து திடுக்கிட்டு தலை தூக்கி சுற்றும் முற்றும் பார்த்தது,பின் கூடு விட்டு விருட்டென்று பறந்து சென்று துணி உலர்த்தும் கம்பியின் மீது அமர்ந்தபடி அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.

சுந்தரமூர்த்தி அதன் செய்கையை பார்த்து மெல்ல ஒருமுறை  சிரித்துக் கொண்டார்.

“இந்த வீட்டில் என்னைத் தவிர யாரும் இல்லை. நீ இருப்பதால் எனக்கு என்ன பிரச்சனை..?”

தாகம் தீர்த்துக் கொண்டு தன் இருக்கைக்கு வந்து மெல்ல தலை சாய்த்தபடி யோசிக்கத் தொடங்கினார்.

மதம் ஏன் ஒரு மனிதனுக்குள்ளும் சமூகத்திலும் மிகுந்த மாறுதல்களை ஏற்படுத்துகிறது. மதத்தை இறுக்கிக்கொண்டு மனிதன் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டத்தை போட வேண்டும்.

என்னதான் தான் வேண்டும் இந்த மனிதனுக்கு..? ஏன் இப்படி அலைய வேண்டும் .மனிதனுக்கும் சமூகத்திற்கும் அமைதி என்பது வெறும் கானல் நீர்தானா..,

“சாமி சரணம். சாமி சரணம்..”

முகத்தை துடைத்து கண்ணாடியை கழட்டி கீழே வைக்கும் போது அவர் கண்ணில் பகவத்கீதை என்ற புத்தகம் தட்டுப்பட்டது.

உடனே அந்த வாசகங்கள் தான் நினைவிற்கு வந்தது..,

“போர் தொடுப்பு நெருங்கிக் கொண்டிருந்தது. தன்னை சுற்றியுள்ள உறவினர்களைப் பார்க்கப் பார்க்க அர்ஜுனனுக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது. உடலில் ஒரு இடைவிடாத நடுக்கமும் மயிர் சிலிர்ப்பும் ஏற்பட்டது.மனம் குழம்பி இரண்டாகப் பிளவுபட்டது. கேள்வி கேட்டது.

எதிரணியில் இருக்கும் நெருங்கிய உறவினர்களான தன் சற்குரு, பெரியப்பா, சிற்றப்பா, மகன்கள், பாட்டனார்கள், அம்மான்கள், மாமனார்கள், பேரன்கள் என அனைத்து உறவு கூட்டங்களும் கையில் ஆயுதத்தோடு தாக்குதலுக்கு தயாராக நிற்கிறது.அவர்களை பார்த்தவுடன் தன் கையிலிருக்கும் காண்டீப வில்லை நழுவ விட்ட  அர்ஜுனன் கிருஷ்ண பரமாத்மாவை நோக்கி என்னால் போர் செய்ய முடியாது என்கிறான்.

கிருஷ்ணன் கேள்வியும் எரிச்சலும் கொண்டு அவனை பார்க்கிறான்.

“கிருஷ்ணா நான் வெற்றியை விரும்பவில்லை. ராஜ்யத்தையும் ஏன் சுகத்தை கூட விரும்பவில்லை. நம் உறவினர்களை  நாமே கொன்று குவிப்பதில் எந்தவித மென்மையை அடைந்து விடப் போகிறோம்.உலகில் அன்புள்ள உறவினர்களுக்காக தானே சுகபோக பொருட்களையும் செல்வங்களையும் சேர்க்கிறோம். அவர்களையே கொன்று விட்ட பிறகு என்னவிதமான ராஜ்யத்தை அடைந்து விடப் போகிறோம். இதெல்லாம்  பெரும் இழப்பையும் துக்கத்தையும் நமக்குள் என்றும் தீர்க்க முடியாதவேதனையும் தான் அதிகப்படுத்தும்.

கிருஷ்ணரின் முன் பேசி முடித்து அர்ஜூனன் அவர் காலடியில் மண்டியிட்டு கைக்கூப்பினான்.

அறிவியலும் சரி ஆன்மீகம் சரி மிக விளக்கமாகவும் விரிவாகவும் சொல்கிறது, மனிதர்கள் அனைவரும் தங்களுக்குள் பல விதங்களில் உறவு தொடர்பு உடையவர்கள். எங்கோ எப்போதோ ஏதோ ஒரு வித்தில் இருந்து தோன்றிய நாம் அனைவரும் சகோதரர்கள் தானே பின்பு ஏன் நமக்குள் இத்தனை பிரிவு, எத்தனை வேறுபாடு …?

எல்லை போட்டு நிலத்தை பிரித்ததால் நிலச்சண்டை.நிலத்திற்கு ஒரு மொழி தோன்றியதால் மொழி சண்டை. ஒவ்வொரு மொழியிலும் ஒரு அரசியல். ஒவ்வொரு அரசியலிலும் ஒரு மதம்.

ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் சவுகரியத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக தான். இங்கு சவுகரியத்தின் உச்சம் அமைதி  என்பதை மறந்து விட்டார்கள்.

எல்லா முயற்சியும் திறமையும் சந்தோஷமாக வாழத் தான் அதை விடுத்து கலவரமாய் அமைதியற்று தினம் பயந்து சாவதில் என்ன வாழ்க்கை இருக்கிறது.

மனிதன் பல வசதிகளை பெருக்கிக் கொண்டு நவீன யுகத்திற்கு  முன்னேறிக் கொண்டிருந்தாலும் மதம் ஜாதி எனும் கரும்புள்ளி செம்புள்ளிகள் தொடரத்தான் செய்கின்றன. நீ வேறு நான் வேறு என்று தனது மனதை தானே மொட்டை அடித்துக் கொள்கிறான்.

இதுவரை என்ன முன்னேற்றம் கண்டு என்ன லாபம் ஒன்றுமே இல்லை. எல்லாமே பூஜ்யம் தான். அன்று மதங்களின் பெயரால் போர்கள். இன்று ஒரு தனி மனிதனாய், குடும்பமாய், சமூகமாய்  ஜாதிப் போர்கள் தொடர்ந்து தினம் தினம் முன்னெடுக்கப்படுகின்றன.

“சரணம் ஐயப்பா. சரணம் ஐயப்பா. ”

சிந்தனையின் தீவிரத்தால் சுந்தரமூர்த்தியின் நெற்றி சிறு சிறு வியர்வைத் துளிகளை கசிய விட்டது. முகத்தை துடைத்துக்கொண்டார்.

மாடிப்படிகள் வழியே மெதுவாக இறங்கி வீட்டை சுற்றியுள்ள மதில் பக்கம் வந்தார். கம்பி கதவைத்திறந்து வெளியே வந்து வெளிச்சுவர் முழுவதையும்  நோட்டமிட்டார்.

சட்டென்று எரிச்சலும் அயர்ச்சியும் அவரை தொற்றிக்கொண்டது. முகம் கோணலாகியது.

மதில் சுவரை சுற்றி அசிங்கம் படிந்திருந்தது. மலநாற்றமும் மூத்திரக் கவிச்சையும்  குடலைப் புரட்டியது.

கொஞ்சம் கூட அறிவே கிடையாது ..,

ச்சே..,என்ன பொழப்பு சந்து ஒட்டி வீட்ட வாங்கி இந்த கூத்தை எல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

என்ன மனிதர்கள்..?

உள்ளே வேகமாய் வெப்பம் ஏறியது.

மறுநாள் காலை புலர்ந்ததும் மதில் ஓரங்களில் உள்ள அசிங்கங்கள் அகற்றப்பட்டன. இரண்டு வண்டி மணல் இறங்கியதும் மதில் ஓரங்களில் போடப்பட்டு சமன் செய்யப்பட்டது.

சுவர் முழுவதிலும் வெள்ளை பூச்சு அடிக்கப்பட்டது .பின்பு அதனை மூன்று பாகமாக பிரித்துக் கொண்டார்.

ஒரே நாளில் அந்த சுவர் தெய்வீகமயமாகியது.

மூன்று மதங்களை முன்னிறுத்தி மூன்று அழகான ஒவியங்களை வரைந்து கீழே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வாசகத்தோடு நிறைவு செய்தார்.

பாங்கு பாடல் கேட்டவுடன் வழக்கம்போல் குளிக்கக் கிளம்பினார். குளித்துவிட்டு திரும்பவும்  கீழே இறங்கி வந்து மதில் சுவர் முழுவதும் பார்வையிட்டார். கலைநயத்தோடு மிகவும் ரம்மியமாகவும் தெய்வீகமாகவும் இருப்பதாக அவருக்குப்பட்டது. மனம் குதூகலித்தது.

சபரிமலைக்குப் போகும் வரையில் காலையும் மாலையும் அந்த ஓவியத்தை பார்த்து ரசிப்பதிலே அவருக்கு பெரும்பாலான நேரங்கள் ஓடின.

வேலைக்கு செல்லும் மக்களும் கூட அந்த ஓவியத்தை ஒரு கணம் நின்று பார்த்து வணங்கி விட்டுச் சென்றனர்.

“கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை.”

” சாமியே ஐயப்போ.., ”

” ஐயப்போ சாமியே.”

என்ற பெரும் சரண கோஷத்தோடு நாற்பத்தெட்டாவது நாள் சுந்தரமூர்த்தி தன்  வீட்டை பூட்டிவிட்டு தன் சகாக்களோடு சபரிமலைக்கு கிளம்பினார்.

அந்தி வானம் மெல்ல மெல்ல சிவக்க ஆரம்பித்தது. மகிழ மரத்திலிருந்து  இலைகளும் பூக்களும் மதிலின்  மேலும் கீழும் விழுந்து கொண்டிருந்தன.

யாரும் இல்லாத  வீட்டைச்சுற்றி ஒரு பெரும் நிழல் ஒன்று படிந்து விடுகிறது.

அந்த நடுநிசியில் தள்ளாடி தள்ளாடி வந்துகொண்டிருந்த ஒரு போதை மனிதன் சுந்தரமூர்த்தி வீட்டு மதில் அருகில் தனது மல ஜலத்தை வெளியேற்றி வயிற்றை இலகுவாக்கிக் கொண்டான்.

கை உயர்த்தி காண்பிக்கும் சிலை தலைவர்களுடையது என்பது  பறவைகளுக்கு தெரியாது.  சுவரில் இருப்பது கடவுள் உருவம் என்று குடிகாரனுக்கு தெரியாது.

இரண்டு கைகளையும் காற்றில் அலைத்தபடி மதிலை தொட்டுப் பிடித்து எழுந்து தனது உடல் பாரம் குறைந்த நிலையில் அந்த போதை மனிதன்  தள்ளாடி தள்ளாடி  வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

றுநாள்

எப்பொழுதும் போல் எந்த பிரச்சினையும் இல்லாமல் தான் பொழுது புலர்ந்தது.

அந்த சந்து வழியே சென்று கொண்டிருந்தவன் தான் வணங்கும் கடவுள் படத்திற்கு எதிரே மலம் கழித்து அசிங்கப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

வாழ்வின் வளர்ச்சிக்காக  நிறைய வேலைகள் காத்திருந்தாலும் உள்ளே அடக்கி வைத்திருந்த ஆதிமனித ரெளத்தரம் பொங்கிப் பிரவாகம் எடுத்தது. அந்த பிரவாகத்தின் போக்கில் நிறைய பேர் இணைந்து கொண்டனர்.

 

அன்றைய இரவு தனக்கு பிடிக்காதவன் கடவுள் மீது கருப்பு வண்ணத்தை பூசினார்கள்.

மனிதர்களுக்கு கடவுள் மீது வெறுப்பு கிடையாது. பிடித்தவனுக்கும் பிடிக்காதவனுக்குமான பிரச்சினை.

மூன்று சித்திரங்களில் ஒரு கடவுள் சித்திரம் மட்டும் எந்த சேதாரமுமின்றி புன்னகை சிந்திக் கொண்டிருந்தது.கடப்பாறையோடு வந்த நான்கு மனிதர்கள்  அந்த மதில் சுவரை இடித்து கடவுள் புன்னகைக்கு விடை கொடுத்தனர்.

எப்பொழுதும் கடவுள் புன்னகையை திரும்ப வரவழைப்பதற்கு சில மனித பலிகள் தேவைப்படுகின்றன. அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் மிக ரகசியமாக நடைபெற்றன.

தீப்பந்தங்களின் பெரு வெளிச்சத்தில் சூரியன் மறைந்தது கூட தெரியவில்லை.

கூரை வீடுகள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தன. கூரை வீடுகளில் இருந்து புறப்பட்ட இரும்பு ஆயுதங்களால் கல் வீடுகள் தகர்க்கப்பட்டன.

முதுகில் வெட்டுப்பட்டவன் கீழே குனிந்து ஒருவனின் காலை வெட்டினான்.  நெஞ்சில் குத்துப்பட்டவன்  தலைகளை குறி வைத்து அறுவாள் வீசினான்.

செந்நிறக் குருதியின் தத்துவம்  தத்துவமாகவே உறைந்து விடுகிறது.

அன்று அந்திமாலை பறவைகளின் கான ஒலி அரங்கேறவில்லை. மனிதர்களின் முடிவற்ற ஓலங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன.இரவு பதுங்கிப் பதுங்கி ஒரு பயத்துடன் தான் நெருங்கிக்கொண்டு இருந்தது.

சுந்தரமூர்த்தி ஊரின் எல்லையில் இறங்கிக் கொண்டார் ஒரு கரும்புகை அவரை வரவேற்றது.

இழப்பின் மவுன அலறல்கள் அவரது செவியை  மூடிக்கொண்பிருப்பதையும் மீறி  இதயத்தின் பேரோசை அவரை வெகுவாய் அதிரச் செய்தது.

உடலில் உள்ள ரத்தங்கள் முழுவதும் அவரது இதயத்தை நோக்கி பாய்ந்து அதை தட்டி திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தன. தீயிலிட்ட நெகிழிப் போல்  கால்கள் தளர்ந்தன.

அவரது அழகான வீடு தீயில் முழுமையாக கருகிப் போயிருந்தது.

மிச்சமிருந்த குலம் என்ற வார்த்தை மட்டும் சிதையாமல் சிரித்தது.


மஞ்சுநாத்

 

எழுதியவர்

மஞ்சுநாத்
புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையின் இயக்குனகரத்தில் சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரியும் மஞ்சுநாத், பன்முகத்தன்மைக் கொண்ட தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் விமர்சனத் திறனும் கொண்டவர். 2013 முதலே இவரது சிறுகதைகளும் கட்டுரைகளும் , புத்தகத் திறானாய்வுகள் மற்றும் விமர்சனங்களும் பல்வேறு அச்சு இதழ்களிலும் மின்னிதழ்களிலும் வெளியாகி வாசகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. க்ரியா யோக சாதகரான இவரது தற்சோதனை வடிவில் அமைந்த நலவாழ்வு , உணவு முறை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் குறித்த கட்டுரைகள் பெருமளவு கவனத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x