இலங்கையின் கொழும்பு வீதிகளில் தொடங்கும் கதை, இலண்டன் விமான நிலையத்தில் முடிகிறது. அது முடிவானு கேட்டா? இல்லைனு தான் சொல்லனும்… ஏன்னா முடிவிலும் ஒன்று தொடரலாம்.
காதலுக்கு பொதுவாகச் சாதி, மதம், சமூகம், பெற்றோர், காதலர்களுக்குள் புரிதல் இல்லாமை ஆகிய இந்த காரணங்களால் தான் பிரச்சினை வரும். ஆனால் இது எதுவுமில்லாமல் ஒரு நிலத்தில் பிறந்த ஒரே குற்றத்திற்காகச் சிதைக்கப்பட்ட காதல் கதை இது.
இராவணன், நளாயினி இலங்கையின் கொழும்பில் வாழும் தமிழர்கள். இருவரின் காதலுக்குப் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தாலும்; இலங்கையின் அரசியல் சூழலால் வெளிநாட்டிலிருந்தால் தான் பெண் கொடுப்போம் என்று நளாயினியின் பெற்றோர் கூற,
இலங்கையிலிருந்து ஏஜெண்ட் மூலமாக இலண்டன் செல்ல முயல்கிறார். விமான நிலையத்திற்குச் சென்ற பின் தான் தெரிகிறது. தான் நேரடியாக இலண்டனுக்குச் செல்ல முடியாது, சட்டத்திற்குப் புறம்பாகத்தான் அனுப்புகிறார்கள் என்று.
சிங்கப்பூரிலிருந்து ரஷ்யா வழியாக போலந்து, இத்தாலி, இலண்டன் என்று செல்லும் அந்தப் பயணம் வாசிக்கும் நமக்கும் கிலியை உண்டாக்குது. நாட்கள் மாதங்களாக நீடிக்கும் அந்த பயணத்தில் பசி, பட்டினி, ஒவ்வொரு நாட்டின் எல்லையைத் தாண்டும் போதும் எல்லைக்காவல் வீரர்களால் சுடப்பட்டு விடுவோமோ என்ற உயிர்பயம் என்று புலம் பெயரும் அகதிகளின் நிலையில்லாத வாழ்க்கையையும், வலியையும், பதைப்பையும் அப்படியே நமக்கும் கடத்தி விடுகிறார். அதிலும் அப்படி சட்டவிரோதமாகச் செல்லும் பயணத்தில் பெண்களும் இருப்பது, கேட்பாரில்லையென்று அவர்களுக்கு நேரும் வன்புணர்வுகள் வலி மிகுந்த வாசித்துக் கடக்க முடியாத பக்கங்கள்.
இலண்டன் சென்ற இராவணன் நளாயினியை திரும்ப சந்திக்க முடிந்ததா? இருவரும் சேர்வதற்காக எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கு.
நளாயினியை இராவணன் ஒவ்வொரு முறையும் கண்ணம்மா என்றழைக்கும் போது அந்த வார்த்தையில் அவ்வளவு காதல். ஆனாலும் விதியை என்ன சொல்ல..? அந்தக் கண்ணம்மாவுக்கு மட்டுமில்லை அதுக்கு அப்பறம் வந்த எந்த கண்ணம்மாவுக்கும், எந்த பாரதியும் நிம்மதிய தரல. ஆனாலும், எல்லா கண்ணம்மாக்குள்ளயும் கடமையைத் தாண்டி காதல்னு ஒரு விசயம் இருந்துச்சு. அந்தக் காதல் தான் இங்க எல்லா பாரதியையும் கடைசிவரை பாரதியாகவே இருக்க அனுமதிக்கிறது.
இது ஒரு காதல் கதையாக இருந்தாலும் இந்திய, இலங்கை அரசியல், உலக அரசியலையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசிச் செல்கிறது.
இராவணன்களால் தன் மண்ணில் மட்டுமே இராவணனாக வாழ முடியுது. நிலத்தை விட்டு வெளியேறியதும் இயல்பைத் தொலைத்து விடுகிறார்கள். அவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளால் எத்தனை நளாயினிகள் பாதிக்கப்பட்டனரோ?
நளாயினியின் தந்தை தமிழகத்திலிருந்து வியாபாரத்திற்காகவும், பிழைப்பிற்காகவும் கொழும்பு சென்றவர். குடும்பத்துடன் பல வருடங்கள் அவர்கள் கொழும்பில் வசித்தாலும், அங்கு உள்ள தமிழர்கள் அவர்களைக் கள்ளத்தோணி என்றே அழைப்பது… தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் பிழைக்கச் செல்லும் தமிழர்களை அங்குள்ள தமிழர்கள் கள்ளத்தோணி என்றழைப்பது தான் வழக்கம் என்பதை வாசிக்கும் போது,உண்மையில் தமிழனுக்கு முதல் எதிரி தமிழன் மட்டுமே, சிங்களனோ பிற இனமோ இல்லை எனும் நிதர்சனம் முகத்தில் அறைகிறது. நேர்மையாக இதைப் பதிவு செய்திருக்கும் நூலாசிரியரைப் பாராட்டலாம்.
புத்தகத்திலிருந்து சில வரிகள்…
“அரக்கன்னா? என்ன அர்த்தம்?
அரக்கன் என்றால் ஆளுமைத்திறன் கொண்டவன். இராவணன் இந்த மண்ணை ஆண்ட அரசன். இராமனை நல்லவனா காட்டனும்னா என் அரசனை அரக்கனா தானே காட்ட முடியும்.இப்படி நிறைய டகால்டி வேலைகள் நடந்திருக்கு உங்க இதிகாசங்கள்ல.”
“உங்க எல்லோருக்கும் தமிழன் மேல ஏன் இவ்ளோ வன்மம்?
தமிழன் அறிவாளின்னு பொறாமையா? நீங்க கண்டுபிடிச்சதா சொல்ற எல்லாத்துக்கும் முன்னோடி. உண்மையான சொந்தக்காரன் அவன் தான்னு வெளிய தெரிஞ்சிரும்கிற பயமா?
தங்க விமானம் வச்சிருந்த இலங்கை வேந்தன் இராவணன், உங்களுக்கு எல்லாம் எழுத்து வடிவமே இல்லாத கால கட்டத்துல மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் சான்றோர், எல்லாத்துக்கும் ஒன்றரை வரியில் விளக்கம் கொடுத்துட்டு போன வள்ளுவன், இந்த உலகத்தின் முதல் அணையான திருச்சி கல்லணையை கட்டின கரிகாலன், 400 வருசம் அசைக்கவே முடியாத சாம்ராஜ்ஜியத்தை நிறுவுன இராஜராஜன், தமிழன் தன்னோட உரிமைக்காக யார்கிட்டயும் கையேந்தி நிற்க கூடாதுனு கையில துப்பாக்கி ஏந்தின எங்கள் தமிழினத் தலைவன் பிரபாகரன், இப்படி இந்த உலகமே வியந்து பார்க்குற பெருமக்கள் எல்லாருமே எப்படி தமிழ் வித்துல இருந்து வந்தாங்கனு ஆச்சரியமா? மொத்தமா சொல்லப் போனா உங்க எல்லாருக்கும் எங்கள கண்டு பயம். அந்த பயம் நல்லது எப்பவும் இருக்கட்டும்.”
“இங்க எல்லா காதலும் தோல்வியில முடியறது இல்ல. சில காதல் துரோகத்துல முடியிது… சூழ்நிலைங்கிற பேர்ல”
எந்த நாட்டில் அரசியலில் அமைதி இல்லையோ, அங்கு வாழும் மக்களிடமும் அமைதி இருக்காது என்பது இயற்கையின் இறையாண்மை. ஈழத்தில் நடந்த இனப்பிரச்சினையாலும், போரினாலும் இழந்தது உயிர், கை, கால், கற்பு மட்டுமில்லை.., எத்தனையோ பேர்களின் காதலும் திசை தெரியாமல் போயிருக்கு. காதலெனும் உயிரை இழந்து விட்டு நடைப்பிணமாக உலகின் ஏதோ ஒரு மூலையில் இராவணுக்காக நளாயினிகளும், நளாயினிக்காக இராவணன்களும் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
– அம்மு ராகவ்
Mr. Raavanan: had a love story
வகை : நாவல்
ஆசிரியர் : கார்த்திக் தம்பையா
பதிப்பகம் : Dot3 Publication
பக்கங்கள்: 184
விலை : ₹150
அமேசான் கிண்டில் பதிப்பு :
எழுதியவர்
இதுவரை.