ரேசன் கடை விற்பனையாளர் வேலைக்கு விண்ணப்பிக்க கெசட்டேடு ஆபிசரிடம் அட்டெஸ்டேட் வாங்கவேண்டி இருந்தது. விண்ணப்பிக்க கடைசி நாள் அருகில் வந்துகொண்டே இருந்தது, யாரிடம் சென்று வாங்குவது என்று தெரியவில்லை, நான் படித்த கல்லூரியில் வாங்கினால் அது செல்லாது அது தனியார் பொறியியல் கல்லூரி.
மாமா ஒருவர் அவர் வேலை செய்யும் ஓனருக்கு தெரிந்தவர் என்று ஒரு கண் டாக்டரிடம் போய் வாங்கிக்கொள்ள சொன்னார், அது பழனி நால்ரோடு அருகில் ஒரு கிளினிக். அந்த டாக்டர் வயதானவர் நன்றாகத்தான் பேசினார்.
“என்ன ஜாப்க்கு பண்ணுறீங்க”
“சார் ரேசன் கடைல சேல்ஸ்மேன்க்கு”
அவர் அப்பிளிகேசனை புரட்டி புரட்டிப் பார்த்தார். என்னை பார்த்து பல் தெரியாமல் சிரித்தார், அப்பிளிகேசனை டேபிள் மீது வைத்துவிட்டு
“ஒரு கையெழுத்து என்னப்பா, எவ்ளோ வேணும்னாலும் போட்டுத்தரன், ஆனா நா ரிடையர்டு ஆகிட்டேன், நா போட்டா செல்லுமா, எனக்கு தெரியல எதுக்கும் கேட்டுட்டு வந்து செல்லும்னா வாங்கிகங்க”
செல்லாமல் போய்ட்டா என்ன பண்னுரதுனு நினைப்பு வர அவரிடமிருந்து விடைபெற்று வீட்டுக்கு வந்துவிட்டேன். நானும் தமிழனும் அடுத்த நாள் பழனி ஜி.கெஜ் போனோம் அவன் எப்பவோ ஒருமுறை அங்க வாங்கிருக்கேன் என்று சொல்லிகூட்டிட்டு போனான்.
என்ன எழவுட இது. அதுதா எல்லா சர்ட்டிபிகேட்டும் வெரிபிகேஷன் அப்போ பாப்பாங்கல்ல அப்புறம் எதுக்கு அட்டெஸ்டேடு அது இதுன்னு அழைய விடுறானுங்கன்னு பயங்கர டென்ஷன்.
“ஜீப் டாக்டர் ரூம்க்கு போங்க” என்று ஆம்புலன்ஸ் ட்ரைவர் அண்ணன் ஒருவர் சொன்னார். விபரம் சொல்ல. 108 வண்டி ஒன்று வேகமா உள்ளே நுழைந்தது, அதுக்கு பின்னால நெறைய பேர் அழுத்துகிட்டே ஓடிவர சரியான விபரம் சொல்ல முடியாமல் அவர் அங்கே போய்விட்டார்.
“ஐயா ஜீப் டாக்டர் இருக்காரா? அவரு ரூம் எது” செக்யூரிட்டி ஒருவரிடம் கேட்க “அது எல்லாம் தெரியுற அளவுக்கு இருந்தா நா ஏன்பா கேட் தொறந்துவிட்டுட்டு இருக்க போறேன், வேற யார்ட்டவாது கேளுப்பா, டேய் மணியா நில்லுடா பீடி இருந்தா ஒண்ணு கொடுடா”ன்னு யாரவோ கூப்பிட்டு போனார் லொக்கு லொக்கு என்ற சப்தத்துடன்.
ஒரு வழியாக ஜீப் டாக்டர் அறையை கண்டுபுடித்துவிட்டோம், அது பிளட்செக் பண்ணுற ரூம்க்கு பக்கத்துல இருந்தது. அடிக்கடி வந்த ஹாஸ்பிட்டல் தான் என்றாலும் இதுதான் ஜீப் டாக்டர் ரூம் அப்படின்னு தெரியாது, ஒரு போர்டு கூட இல்லை, இப்பொழுதுதான் மாட்டிருப்பாங்க போல. அங்க ஏற்கனவே ரெண்டு பேர் இருந்தார்கள் வெளியே கையில் அதே அப்பிளிகேசனுடன், “டாக்டர் இருக்காரா” அவர்களிடம் கேட்க
“இல்ல நண்பா அவரு எங்கயோ மீட்டிங்க் போயிட்டாரமா, ரெண்டு நாள் ஆகுமாம்”
“அப்புறம் ஏன் நிக்கிறீங்க”
“இன்னொருத்தர் இருக்காராமா, அவரும் போடலாமாம், அதுதா நிக்கிறோம்”
“அவர் எப்போ வருவாரு உள்ளதா இருக்காரு, வெளியே இருக்க சொன்னாங்க”
அங்க உக்கார இடமில்லை, வெளியவே நின்னிருந்தோம்.
“காலைல 8.30 க்கு வந்தோம் மணி 11 ஆகிருச்சு, வேற எங்கயும் வாங்க முடியுமான்னு பாக்குறோம்”னு அவங்க கிளம்பி போயிட்டாங்க.
சிறிது நேரம் கழித்து ஒரு வெள்ளை சட்டையில் ஒருவர் வந்தார் “என்னப்பா வேணும்”
“அண்ணா அட்டஸ்டேட் வாங்கணும்”
“ரேசன் கடை வேலைக்கா”
“ம்…ஆமா” அவர் அப்பிளிகேசனை வாங்கிகொண்டு உள்ளே போனார் , உள்ளே நின்னு வாங்க என்பது போல எங்களை கை காட்டினார்.
அங்கே ஒரு நான்கு ஆண் டாக்டர்கள் உக்காந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அதில் ஒருவர் அந்த வெள்ளைசட்டையில் இருந்தவரையும் எங்களையும் பரர்த்தார், வெள்ளைசட்டையில் இருந்தவரிடம் “என்ன” என்றார்.
“சார் ரேசன்கட வேலைக்கு அட்டெஸ்டேட் வேணுமாம்” அவர் வார்த்தை விட்டு விட்டு வந்தது, அப்பிளிகேசனை என்னிடம் நீட்டி அங்க கொடுக்க சொன்னார்.
அவர் வாங்கி புரட்டி புரட்டி பார்த்தார், கண்டிப்பாக அதை வாசித்துபாத்திருக்க வாய்ப்பில்லை, புரட்டிய வேகம் அப்படி.
அவர் அருகே இருந்த டாக்டர்களிடம் பேசி சிரித்துக்கொண்டிருந்தார்.
“ஏப்பா கனகா நர்ஸ் வந்துடாங்களா” கூட இருந்த டாக்டரை கேட்டு மெல்ல சிரித்தார்,
அவர் கையெழுத்து போட வேண்டிய பக்கத்தை தேடினார்.
“சும்மா சொல்ல கூடாதுப்பா, பயங்கரமா இருக்காங்க”
அருகே இருந்த டாக்டர்கள் எல்லாம் ஒண்ணா சிரிக்க நமக்கு எதுக்கு தேவையில்லாதது என்று கண்டுகொள்ளவில்லை, சீக்கிரம் போட்டுகொடுத்தா இடத்தை காலி செய்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். வெள்ளைசட்டைக்காரர் “தம்பி போகும் போது ஏதும் பாத்துட்டு போங்க”ன்னு எனக்கு பின்னால் நின்னுருந்த தமிழனிடம் மெதுவாக சொல்லிக்கொண்டிருந்தார்.
அந்த டாக்டர் சீல் வைக்கும் இடத்தில் கையெழுத்து போடப்போனார்,
“சார் அங்க சீல் வச்சு கீழ கையெழுத்து போடணும்” என்று சொல்லியதும் தான் தாமதம் அவர் முகம் சிவந்துவிட்டது பேன் காற்றிலும்.
“இங்க என்ன சும்மா உக்காந்துருக்கோம்னு நெனச்சிட்டையா, இந்தா தூக்கிட்டு போ”ன்னு அப்பிளிகேசனை கிழே தூக்கின்போடபோனவர் நான் முறைக்க கையில் கொடுத்தார், அது கொஞ்சம் கசங்கிவிட்டது.
“பத்தாப்பு படுச்சுட்டு வந்துரது அதுக்கு சைன் போடு இதுக்கு சைன் போடுன்னு” அவர் பேசிக்கிட்டே எழுந்து உள்ளே போய்விட்டார். திரும்பி பார்த்தேன் தமிழன் பைக்கை எடுத்துகொண்டிருந்தான் வெளியே.
“வேற எங்க போலாம் நீ படுச்ச காலேஜ்ல போய் பாக்கலாமா, நா படுச்சது அங்க இருக்கு” தமிழனிடம் சொல்ல
“ஐயோ அங்க எல்லாம் வேணாம், என்ன பண்ணுற எங்க இருக்கன்னு ஓவர் கொஸ்டின் கேப்பாங்க”
வேற எங்க வாங்குறதுன்னு முழித்துகொண்டிருக்கும் பொழுதுதான் தெரிந்த ஒருவருக்கு போன் செய்து கேட்க அவர் சொன்ன இடத்துக்கு போனேன்.
அது சனி கிழமை.,யூனியன் ஆபீஸ்.
நான் மட்டும் யூனியன் ஆபீஸ் உள்ளே சென்று பார்த்தேன் இன்னும் யாரும் வரவில்லை, வெளியே வந்து நின்னுருந்தேன்.
“யாருப்பா நீ, ஏ இங்க நிக்கிற” அயன் பண்ணிய சட்டையில் சற்று ஏரிய நெற்றியில் என்னுடைய கையில் இருந்த அப்பிளிகேசனை அவராவே எடுத்து பார்த்தார்.
“ஒஹ் ரேசன்கடைக்கா, அட்டெஸ்டேடு வேணுமா”
எனக்கு கொஞ்சம் சந்தோசமாகப்பட்டது,
“ஆமாம் சார்”
“நானே போடலாம்பா நானும் கெசடேட் ஆபீசர் தா, ஆனா நா ரிடயர்டு ஆகி ஒரு மாசம் தா ஆச்சு,
“ப்ச்” என்றாகிவிட்டது எனக்கு.
ஸ்கூட்டியில் ஒருவர் வந்து இறங்கிவந்தார் அவர் படிக்கட்டில் ஏறிகொண்டிருக்கும் பொழுது ரிடயர்டு ஆனதாக சொன்னாவரே ஓடி சென்று “தம்பிக்கு ஒரு அட்டஸ்டேட் வேணுமாம் போட்டுகொடுத்துரு” என்று அவர் கையில் கொடுத்தார். அவர் வாங்கிக்கொண்டு உள்ளே போனார் அவர் கால் கொன்ஜம் இழுத்து இழுத்து நடந்தார்.
“அவரு போட்டு கொடுப்பாரு வாங்கிகங்க, அவரு டெபுட்டி பிடிஓ தான், ரேசன் கார்டுல இருக்காரல்ல அவரு யாரு”
“எங்கப்பா”
“அப்படியா” அவர் என் தோலைதட்டினார் “அவ என் நண்பன்தான்யா அவனும் நானும் ஒண்ணா படுச்சோம் ஆறாவது வரைக்கும், அவ மகனா நீ”
அதற்குள் அவரை யாரோ கூப்பிட “சரிப்பா அப்பாவ கேட்டதா சொல்லு அவர் கூட போ அட்டெஸ்டேடு போட்டு தருவாரு”ன்னு அவரின் பெயரை கூட சொல்லாமல் போய்விட்டார்.
நான் ஆபீஸ் உள்ளே சென்று பார்த்தேன் அவர் படியில் மெதுவாக ஏறிகொண்டியருந்தார் அவர் கையில் என்னுடைய அப்பிளிகேசன் இருந்தது.
அவர் அருகில் சென்றேன், அவர் அவரின் டேபிளில் சென்று அமர்ந்தார், படித்துப்பார்த்தார் “ஒஹ் வெரிஃபிகேசனுக்கா” என்றார்.
“ஆமாம் சார்”
“நா போட்டா செல்லும்கலா, நா டெபுட்டி பிடிஓ” செல்லும் சார் என்று நான் சொல்வதற்க்குள் அவர் கையெழுத்து போட்டு என் முன்னே நீட்டி “ஆல் தி பெஸ்ட்” என்றார்.
“ரொம்ப தேங்ஸ் சார்” என்று வாங்கிக்கொண்டு போனேன்.
நேர்காணல் திண்டுக்கல் தலைமை கூட்டுறவு அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கே நிறைய பேர் வந்திருந்தனர், அவர்களை எண்ணினால் சரியாக சொல்லிவிடலாம் எவ்வளவு பேர் வேலை இல்லாமல் கஷ்டபடுகிறார்கள் என்று.
கேட்டிற்க்குள் இருபது இருபது பேராக உள்ளே விட்டனர். முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு, அது முடிந்ததும் ஒரு அறையில் சிறிது நேரம் ஒருவர் பின்னால் ஒருவராக நீண்ட வரிசையில் கிழே உக்காரவைத்தனர் அந்த வரிசை போலிஸ் தேர்வுக்கு உடல் தகுதி தேர்வின் பொழுது அமர்ந்திருந்தத்தை ஞாபகம் செய்தது.
ஒரு பெண் வந்தது இருபத்தி இரண்டு முதல் இருபத்தி ஐந்துக்குள் இருக்கும் வயது, அழுக்கு சுரிதார், தலையை கூட சரியாக வாரவில்லை, அழுக்கு கலரில் ஒரு பேக் தோழில் தொங்கியது, அந்த பெண் என் பின்னால் அமர எனக்கு அருகில் இருந்த ஒரு பெண் எழுந்து வேறு பக்கம் சென்று அமர்ந்து கொண்டது. அந்த பெண்ணின் முகம் சுண்ணாம்பு சுவர் போல இருந்தது அவளின் முகத்தில் ரோஸ் பவுடர் அதிகமாகவே ஒட்டி இருந்தது.
என் பின்னால் உக்காந்திருந்த அழுக்கு சுரி தார் பெண் ஒரு புத்தகத்தை மிக ஆழமாக படித்துக்கொண்டிருந்தது. நான் கூட்டுறவு பற்றி சில தகவல்கலை என் மொபைல் போனில் இன்டெர்நெட்டில் பார்த்துகொண்டிருந்தேன்.
“இதெல்லாம் கேப்பாங்களா” என் பின்னால் இருந்த அழுக்கு பெண் கேட்டாள்.
“ஆமாம்” என்பது போல தலையை மட்டும் ஆட்டினேன்.
“அண்ணா நீங்க படுச்சுட்டு எனக்கு கொன்ஜ நேரம் தர்ரீங்களா, நானும் பாத்துக்குற” அவள் கேட்டதும் என் மொபைலை கொடுக்க சிறிய சிரிப்புடன் வாங்கி படித்தாள்.
பைனல் பேஸ் டு பேஸ் இன்டெர்வியூ, அவர்கள் அழைக்க “ரொம்ப தேங்ஸ்னா”என்று என் மொபைலை கொடுத்துவிட்டு எனக்கு முன்னால் போனால் வேக வேகமாக.
சிறிய சிறிய அறையாக இருந்தது அதில் ஒவ்வொருவராக இன்டெர்வியூ செய்தனர். என்னை இன்டெர்வியூ செய்தது மொத்தம் மூன்று பேர் , இரண்டு பெண்,ஒரு ஆண்.
“உங்க நேம்”
“சென்றாயகுமார்”
“எங்க இருந்து வரீங்க”
“பழனி”
இரண்டு பெண்களும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டார்கள்.
“என்ன படுச்சுருகீங்க”
“எம்.சி.எ”
“மேடம் எம்.சி.எ படுச்சுருக்கேனு சொல்லுறாரு நீங்களே கேள்வி கேளுங்க” ஒவ்வொருவராக பேசிகொண்டனர் நீங்களே கேளுங்க நீங்களே கேளுங்க என்று ஒரு வழியாக என்னிடமே வந்தனர், அந்த ஆண் தான் பேசினார்.
“எம்.சி.எ படுச்சுருக்கீங்க உங்ககிட்ட நா என்ன கேட்கட்டும்”
“எது வேணும்னாலும் கேளுங்க”
நான் சொல்லி முடிப்பதற்குள் அவ்ளோ படுச்சுட்டு ஏன் இந்த இன்டெர்வியூ வந்துருக்கீங்க” ஒரு பெண் பேசியது.
“ச்சுவேசன் மேக்கிங் மேம்”
“நம்ம பிரதமர் யார், குடியரசு தலைவர் யார், கலெக்டர் யார், பழனி எத்தனையாவது படை வீடு”
என்ற கேள்விகள் அனைத்துக்கும் சரியான பதில் தான் சொன்னேன்.
அதில் ஒரு பெண் “மொத்தமா நமக்கு எத்தனை எம்.எல்.எ”
“235”
“சாரி மொத்தம் 234” அவர் சொன்னார். அந்த பெண்கள் இருவரும் என்னை கூர்ந்து கவனித்தனர்.
“234 பேர் தேர்தல்ல நின்னு ஜெயுச்சவங்க மீதி ஒண்ணு நியமன எம்.எல்.எ அதுதா மொத்தம் 235 னு சொன்னேன்” நா சொன்னேன்.
“அய்யோ போதும் சாமி கம்பியூட்டர் படுச்சவங்க வித்தியாசமாத்தான் யோசிப்பாங்கனு கேள்விபட்டுருக்கேன், நீங்க இப்போ அந்த மோடுக்கு வந்துடீங்க இதுக்கு மேல நா கேள்வி கேட்கல. மேடம் நீங்க ஏதும் கேட்குறீங்களா” என்று அவர் மற்ற இருவரையும் கேட்க, வேணாம் வேணாம் என்பது போல தலையை ஆட்டினார்கள்.
“அவ்ளோதா சார் முடுஞ்சது நீங்க கிளம்பலாம்”
நான் வீட்டிற்கு கிளம்ப வெளியே வர
“வேல போட்டதும் அதுல உம்புள்ள பேரு இருக்கும் சரியா”ன்னு ஒரு வெள்ளை காருக்குள் இருந்து ஒருவர் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார் அவர் வெள்ளை சட்டை அணிந்திருந்தார், அவர் வெள்ளை வேட்டியில் கரை(றை) இருந்தது.
-சென்றாயகுமார்
எழுதியவர்
-
1995ம் ஆண்டில் பிறந்த இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சார்ந்தவர். முதுகலை கணிப்பொறி பயன்பட்டியல் படித்துள்ளார், கால்தடம், மகிழம் பூ மனசுக்காரி ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளியாகியுள்ளது.
ஓய்வு நேரங்களில் சிறுகதை, கவிதை எழுதுவதுடன் புத்தக அட்டைப்படம் மற்றும் நூல் வடிவமைப்பும் செய்துவருகிறார்.
அருமை