19 September 2024

வளைப்போன்றே இருந்தாள், தங்க கோதுமைமணிச் சங்கிலியில் அன்னமும் தாமரைப்பூவும் கொண்ட பதக்கம் பதவிசாய் வீற்றிருந்த மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள். இப்படிப் பதக்கச்சங்கிலி அணிவது பட்டிக்காட்டுத்தனம் என முத்திரை குத்தப்பட்ட இக்காலத்திலும், இவளுக்கு இது அம்சமாய்தான் இருக்கிறது. ஒருசில பெண்களுக்கே இப்படியொரு நிமிர்வின் தோரணை வாய்த்துவிடுகிறது. இவள் அணிந்திருக்கிற கருப்புப்பட்டை கைக்கடிகாரம், கார்டன் புடவை, முத்துக்கம்மல்… அனைத்துக்கும்மேலாய் இப்போது நான் பயணித்துக்கொண்ருக்கிற பேருந்து இருபது வருடங்களுக்கு முன்பு நாங்கள் படித்த கல்லூரியைக் கடக்கிறபோது, அதே பேருந்து நிறுத்தத்தில் இவள் நிற்கிறது… இவைதான் எனக்கு இவளை பொற்செல்வியைப்போலவே காட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவள் பொற்செல்வி இல்லை, அப்படி இருக்க வாய்ப்பும் இல்லை. இவள் மட்டுமல்ல, இதுபோல் நேற்று ஒரு பொற்செல்வியைப் பார்த்தேன், அதற்கு முந்தினநாள் வேறொரு பொற்செல்வி… இப்படித்தான் என் கண்களுக்கு வேறுவேலையில்லை, தினமும் ஏதாவதொரு பொற்செல்வியைக் காட்டிக்கொண்டே இருக்கும்.

“இந்தாமா… சீட்டு மாறிக்கிடுதியா… புள்ளைக்கு வெயிலடிக்கி…”என்றபடி குழந்தைக்கு முந்தானையால் திரையிட்ட சன்னலோர இருக்கைக்காரி, நான் தலையசைத்து எழுந்து இடம்மாறியபிறகும் புலம்பினாள்…

“கொடுமக்கார வெயிலாவுல்ல இருக்கு…” எரிச்சலாய் இருந்தது எனக்கு… எரிச்சல் வெயில்மீதோ பக்கத்து இருக்கைக்காரிமீதோ அல்ல… இவ்வளவு வெயிலைத்திட்டுகிற ஒரு ஊரில் இருந்துகொண்டு எனக்கு ‘வெயிலு கந்தாள்’ எனப் பெயர்வைத்த அம்மாவின்மீதுதான் அவ்வளவு கோபம் வந்தது.

வெய்யி… வெய்யி… என அழைக்கப்படுவது எனக்குப் பிடிக்காத சமயத்தில் ‘வெயிலா’ என எனக்குப் பிடிக்கும்படி முதலில் அழைத்தது பொற்செல்விதான். கல்லூரியின் விடுதியில் இருந்தாள் அவள். நான் வீட்டிலிருந்து கல்லூரி வந்து போகிற மாணவி. அப்போதெல்லாம் செல்லிடப்பேசி இல்லாத காலகட்டம். அவசரத்திற்கு விடுதியின் தொலைபேசியை பயன்படுத்துவார்கள், மற்றபடி கடிதம்தான். எங்கள் வீட்டுக்கு மிக அருகிலேயே தபால்பெட்டி இருக்கிறதென நான் பெருமை பீற்றி வைத்திருந்ததாலும், விடுதி கண்காணிப்பாளர்கள் கடிதத்தைப் படித்தபிறகே அனுப்புவார்கள் என்பதாலும் ரகசியக்கடிதங்கள் என் வழியாகவே தபால்பெட்டிக்குச் செல்லும். பொற்செல்வியின் கடிதங்களும் அப்படியே. பிறர் கடிதங்களை அவரறியாமல் படிக்கிற சுவாரசியத்துக்காகவே அந்தப் பணியை நான் புன்முறுவலுடன் செய்துவந்தேன். ஓரங்களை ஒட்டாமல் வைத்திருக்கிற இன்லேன்ட் கடிதத்தின் இடைவெளிவழியே பார்வையை அனுப்பினாலே அந்த கடிதத்தை மேற்கொண்டு படிக்கலாமா வேண்டாமா எனத்தெரிந்துவிடும். திறந்துகிடக்கும் அறையில் திருடுவதற்கு சுவாரசியம் இல்லாததுபோல்தான், ஓரம் ஒட்டாத இன்லேன்ட் கடிதங்களை வாசிக்கிறபோதும் அவ்வளவு சுவாரசியம் இருக்காது. பெரும்பாலும் விடுதிக்காப்பாளர்களைப் பற்றியோ அல்லது விடுதிச் சாப்பாட்டைப்பற்றியோ குறைகூறியிருப்பார்கள் அல்லது விரிவுரையாளர்களைப்பற்றியோ கல்லூரியின் கழிவறையின் தண்ணீர் வராத குழாய்களைப் பற்றியோ கண்ணீர் வடித்து எழுதியிருப்பார்கள். அதனால்தான் அது என்வழியாய் தபால்பெட்டியை அடைகிறது.

படிக்கச் சுவாரசியமானவை அஞ்சல்உறையிலிட்டு ஒட்டிய கடிதங்கள்தான். அதைப்பிரித்ததே கண்டறியமுடியாதபடி, பிரித்து வாசித்துவிட்டு ஒட்டுவது ஒரு தனிக்கலை. வனிதாவின் கடிதங்களின் எழுத்துகளைப் புரிந்துகொள்வதே மிகவும் கடினம். அவள் கடிதம் எழுதுவது அவளது அத்தைப்பையனுக்குதான், ‘நீயே தெய்வம், நீயே தஞ்சம்’ என ஏக்கர் கணக்கில் சலிக்காமல் வாரம் ஒரு கடிதம் எழுதிவிடுவாள், அந்த வரிகளெல்லாம் எனக்கே சலித்துவிட்டதே… அந்த அத்தைப்பையனுக்கு எப்படி இருக்குமோ?

கீர்த்தனா கதை வேறுமாதிரி, அவளது அப்பாவின் ராணுவ ஒதுக்கீட்டை பயன்படுத்தி அவளுக்கு கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது. ஆனால் ஏற்கனவே திருமணமானவள் அவள் என்பதை கல்லூரி நிர்வாகத்திடம் மறைத்திருந்தாள். தாலியை மறைப்பதற்காகவே சைனீஸ் காலர் சுடிதார் அணிந்திருப்பாள், இதுதெரியாமல் பிரவீன் அவளுக்குப் பின்னால் அலைவதுபற்றிய புலம்பல் சுவாரசியமாக இருக்கும் அவளுடைய கடிதங்களில்.

பொற்செல்வியின் கடிதங்கள் மிக நேர்த்தியானவை. பலாச்சுளைகளை வரிசையில்வைத்தாற்போன்ற அவளது நீள்செவ்வகவடிவ எழுத்துகளைப் பார்க்கவே ஓர் அலாதி அழகு. அவளிடமும் எப்போதும் மிதமான பலா மணம் போன்ற ஒரு மணம் இருக்கும். அவளுக்கு அம்மா கிடையாது. அப்பாவுக்கு பொற்செல்வியின் கடிதம், சமையல்குறிப்புகளும், வீட்டில் எது எந்த இடத்தில் இருக்கிறது போன்ற குறிப்புகளும், அப்பாவின் மருத்துவப் பரிசோதனைதேதி நினைவூட்டல்களுமாக இருக்கும்.

ஒருமுறை வளர்மதி அவளது தோழிக்கு எழுதியிருந்த கடிதத்தில், கணேசன் சார் குறித்து எழுதியிருந்தாள். அவர் அவளிடம் தொட்டுத்தொட்டுப் பேசுவதாகவும், அது அவளுக்குப் பிடிக்கவில்லையெனவும் எழுதியிருந்தாள். ‘கணேசன் சாரா அப்படி…?’ என எனக்கு விதிர்விதிர்த்துவிட்டது. ஒருநாள்கூட அவர் என்னை அவ்வாறு தவறாகப் பார்த்ததே இல்லையே… அவரென்றில்லை, பெரும்பாலும் யாருமே என்னிடம் அவ்வாறு நடந்துகொண்டதாக நினைவில்லை. ஒருநாள் கல்லூரி முடிந்து திரும்பும்போது பேருந்தில் ஓரளவு கூட்டம். அது நவராத்திரி நேரம். தசரா வேடமிட்டவர்கள் நிறைய ஏறினார்கள். பேருந்து முழுவதும் சலங்கைச்சத்தமும் வண்ணமயமுமாய் இருந்தது. என்னருகில் அமர்ந்திருந்த பெண் அடுத்த நிறுத்தத்தில் இறங்கவும், என்னருகில் இருக்கை காலியானது. ஸ்டீபன் அதில் வந்து அமர்ந்தான், எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. இன்னமும் பேருந்தில் பெண்ணருகில் பிற ஆண்கள் அமர்வதற்கு பழகியிராத ஊர் அது. திரும்பி என்முகத்தைப் பார்த்தவன் திடுக்கிட்டு எழுந்தான். பின்னாலிருந்து அவனது நண்பர்கள் சிரிக்கும் சத்தம் கேட்டது, “பரவால்ல… உட்கார்ந்துக்கடா” என்றேன். “இல்லடி வெய்யி… தெரியாம உட்கார்ந்துட்டேன்…” என எழப்போக “அட பரவால்ல, ஒக்காரு…” என்றேன். சங்கடத்துடன் அமர்ந்த அவனது கையின் உரோமங்கள் என்கையில் உரசியது ஏதோ மயிலிறகால் உரசியதைப்போலிருந்தது. ஆண் பெண் என்று பேதமற்று எல்லா நண்பர்களிடமும் நன்றாய்ப்பேசுகிற எனக்கு அன்று ஸ்டீபனிடம் பேச்சே எழவில்லை. மறுநாளிலிருந்து ஸ்டீபன் நண்பர்கள் அவனது கையில் எதையாவது திணித்து, ‘டேய், இத அங்க வெய்யி, டேய் அத இங்க வெய்யி…’ என கிண்டல் செய்துகொண்டே இருந்தனர். எனக்கு எங்கிருந்தாலும் கவனம் முழுக்க அவன்மீதே இருந்தது. ஸ்டீபன் சிரித்து மழுப்பிக்கொண்டே அவ்வப்போது என்னையும் பார்த்தாற்போல் இருந்தது. என் கைகளில் முந்தையநாள் உரசிய அவனது கைமுடிகளைப் பார்த்தேன், மயிலிறகு முளைத்த பட்டாம்பூச்சியொன்று என் கையை சுற்றிச்சுற்றிப் பறந்த உணர்வு. ஆனால் இரண்டுநாட்கள் கழிந்தபிறகு, நண்பர்களின் கேலியும் கிண்டலும் ஸ்டீபனுக்கு சிறிதுசிறிதாய் கோபம் உண்டாக்குவதை உணர்ந்தேன்.

அன்று கடைசி பாடவேளை கணேசன் சார் வகுப்பு. சார் வருவதற்கு சற்று தாமதமாகிக்கொண்டிருந்தபோது, ஸ்டீபனின் நண்பர்கள் அவனை ஏதோ கேலி செய்திருப்பார்கள் போலிருக்கிறது, வகுப்பறைக்குள்ளேயே ஸ்டீபன் சிதம்பரத்தை ஓங்கித் தாக்கினான். பதிலுக்கு சிதம்பரம் தாக்க, இருவரும் கட்டிப்புரண்டு அடித்துக்கொண்டனர். எங்கிருந்தோ ஓடிவந்த கணேசன் சார் இருவரையும் மிகவும் கஷ்டப்பட்டுப் பிரித்தார்
“என்னடே இப்டி பண்ணுதிய? இப்ப எதுக்கு அடிச்சுக்கிடுதீய?” என்ற கணேசன் சாரிடம் ஸ்டீபன், “இவனாலதான் சார் இப்ப எல்லாவனும் என்னிய கிண்டல் பண்ணுதான், அன்னிக்கு பஸ்ஸுல உட்கார்ந்துட்டுருந்த வெயிலுகந்தா பக்கத்துல சீட்டு இருந்துச்சு, பின்னாடிருந்து எனக்கு அது அவள்னு அடையாளம் தெரியல, இந்த நாயிதான் ‘அது தசரா வேசம்போட்ட ஆம்பளதான், போய் பக்கத்துல உட்காரு’ன்னு அனுப்பிவச்சான் சார்… எல்லாவனும் கிண்டல் பண்றான்னு நானே கடுப்புல இருக்கேன், அப்றம் இவனே கிண்டல் பண்ணுனா மூஞ்சிமோரையெல்லாம் பேத்துறமாட்டேனா?” என்றபடி முஷ்டியை ஓங்கிக்கொண்டு போனான். அதே சுருள்ரோமம் அடர்ந்த கைகள், என் மயிலிறகுப் பட்டாம்பூச்சி இப்போது கம்பளிப்பூச்சி ஆகியிருந்தது. எல்லார்பார்வையும் என்மீது திரும்பியது, மிகக்கேவலமான பார்வைகள். தோழிகள் அவர்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டார்கள். நானும் மிகப் பிரயத்தனப்பட்டு ஒரு சிரிப்பை முகத்தில் ஒட்டவைத்துக்கொண்டேன். வீட்டிற்கு எப்போது செல்வோம் என்பதுபோல் ஆகிவிட்டது எனக்கு. மணியடித்ததும் அவசர அவசரமாய்ப் புறப்பட்ட என்னிடம் ஓடிவந்த பொற்செல்வி “இத போஸ்ட் பண்ணிரு வெயிலா… ” என்றபடி கையில் திணித்த கடிதத்தை நான் பையில் திணித்துக்கொண்டேன்.

வீட்டிற்கு வந்ததும் அறைக்கதவை சாத்திக்கொண்டு கட்டிலில் விழுந்தேன். அதுவரை அடக்கியிருந்த மொத்த அழுகையும் என் விழிவழியே புறப்பட ஆயத்தமானது. சுதந்திரமாய் சத்தமாய் அழுவதற்கும்கூட எல்லா காரணங்களுக்கும் உரிமைகிடையாது இந்த உலகத்தில். சில காரணங்கள், அழுகையின் குரல்வளையை நெறித்து அடக்கிவிட்டுத்தான் அழப் பணிக்கின்றன. எழுந்து, என்னை கண்ணாடியில் கவனித்தேன்… ‘அவ்வாறா இருக்கிறேன்? பெண்வேடமிட்ட ஆண் போன்றா…?’ எனது செழிக்காத சிறுமார்பகங்களையும், சட்டமாய் சதைப்பற்றற்றிருந்த தோள்களையும் குச்சுமனித ஓவியம் போல வளைவற்று நேராயிருந்த இடுப்பையும் தொட்டுத்தொட்டுப் பார்த்துக்கொண்டேன். அழகானவர்களுக்கான உலகமா இது? அழகின் பின் ஓடுகிற முக்கால்பங்கு வாழ்வும் முடிந்தபிறகுதானே அதன் போலித்தன்மை புலப்பட்டு நிற்கிறார்கள் மனிதர்கள்?

மிகவும் சோர்வாய் உணர்ந்தேன். கட்டிலில் எடுத்தெறிந்திருந்த புத்தகப்பையிலிருந்து பொற்செல்வி அஞ்சல் செய்வதற்காக தந்திருந்த கடிதவுறை தரையில் விழுந்திருந்தது. குனிந்து எடுத்துக்கொண்டேன். ‘எப்போதும் இன்லேண்ட் உறையில் எழுதுபவள் இன்று என்ன புதிதாய் அஞ்சல் உறையிலிட்டு ஒட்டியிருக்கிறாள்?’ அவளின் பிரத்யேக மணம், அந்த சந்தனப்பலா நிறத்து அஞ்சலுறைக்கு மிகப்பொருந்திப்போய் இருந்தது. உறையை கனத்த ஏடாக பசையிட்டு கவனமுடன் ஒட்டியிருந்த தன்மையே ‘அந்த உறையைப் பிரி… பிரி…’ என என்னைத் தூண்டுவதுபோல் இருந்தது. உறைமேல் முகவரியில் பொற்செல்வியின் அப்பா பெயர் இல்லை, சதிஸ்குமார் என்று யாருக்கோ எழுதியிருந்தாள், முகவரி அவளது தெருவேதான், அனுப்புநர் முகவரியைத் தவிர்த்திருந்தாள். லேசாய் நகத்தால் உறைமடிப்பை நீவிப்பார்த்தேன், உறை தன் ரகசியத்தை இறுக மூடிக்கொண்டிருந்தது. தெர்மாக்கோல் வெட்டுகிற கத்தியை வைத்து, ஒட்டிய பகுதியை மெல்லியதாக எழுப்பப்பார்த்தேன். லேசாய் சேதமானதே தவிர காகிதம் பிரியவில்லை. ‘அப்படியென்ன பிடிவாதம் வேண்டியிருக்கிறது காகிதமே உனக்கு என்னிடம்…? இன்று உன் ரகசியத்தை நீ எவ்வளவு மறைத்தாலும் நான் விடுவதாய் இல்லை’. அப்பாவின் அறைக்குச்சென்று முகச்சவர பிளேடு எடுத்துவந்தேன்… மெல்லிசாய் உறைமூடிக்காகிதத்தைப் பிரித்தேன்… லேசாய் பிரிந்ததுபோல் தெரிந்தது, தொடர்ந்து முயற்சித்தேன், உறையே கிழிந்துவிட்டது. போனால்போகிறது, நன்றாய் கிழித்தே பார்த்துவிடலாம் என முடிவே செய்துவிட்டேன்… காகிதத்தில் எழுத்து அழகாய்த்தெரிவதற்காக கருப்புஜெல் பேனாவால் எழுதியிருந்தாள் பொற்செல்வி. கவனமாய் செதுக்கிய சிலைகள் மாதிரி இருந்தன எழுத்துகள்…

‘அன்புள்ள சதிஸ், நான் சொல்லவந்ததைச் சரியாக சொல்லிவிடுவேனா எனத்தெரியவில்லை, என் விடுதி மாத இறுதி விடுமுறைநாட்கள் ஒவ்வொன்றையும் நோக்கியே என் மொத்தநாட்களும் நகர்கின்றன இப்போதெல்லாம். ஒரு பேரூற்றாக எனக்குள் எழுகிற உன்னைக் காண்கிற என்ற ஆவல் மெதுமெதுவாய் காட்டாறாக ஓடி, எனக்குள்ளேயே அருவியாய் மடங்கிக்கொள்கிறது. அந்த அருவியின் பேரிரைச்சலை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அந்த அருவிச் சத்தத்தை நான் முதன்முதலாகக் கேட்டநொடி இன்னும் நினைவிருக்கிறது. உன் வீட்டிற்கு நான் உன்னிடம் பாடத்தில் சந்தேகம் கேட்பதற்காக கடைசியாக வந்தேனே அன்று… தொலைபேசி அழைப்பு வருகிறதாய் அறைவிட்டு நீ வெளிச்சென்ற சமயத்தில் உன் மேஜையின் புத்தகத்தை உன் இருக்கையில் அமர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன். எப்போது என் பின்வந்து நீ நின்றாய் என சத்தியமாய் எனக்குத் தெரியவில்லை… திடீரென என் இருக்கையின் பின்பகுதியை அழுத்தி முன்பகுதியை உயர்த்தினாய்… அமர்ந்த நிலையிலேயே என் கால்கள் நிலத்திலிருந்து உயரம்போனது… பின்னால் நின்ற உனது மார்பின்மீது என் பின்னந்தலை அழுந்திக்கொண்டது. நான் இருக்கையின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டே பதறினேன். நீயோ பின்னிருந்து வளைந்து என் இடதுகழுத்தில் முதல் முத்தமும், ஜிமிக்கி தொடுமிடத்தில் இடது காதுமடலின் கீழ்ப்புறத்தில் அடுத்த முத்தமும் இட்டாய். அப்போது கேட்க ஆரம்பித்தது அந்த அருவியின் பேரிரைச்சல். நாற்காலியை நீ விடுவித்ததும் எழுந்து உன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தேன், எனக்கு இந்த விஷயத்தில் எதிர்ப்பிருப்பதை நம்பாத முகத்துடன் நீ திகைத்துப் பார்த்தாய்.

அடுத்த விடுமுறைக்கு வரும்போது நாம் பார்க்க எத்தனையோ சந்தர்ப்பம் கிடைத்தும் நீ என்னை நிமிர்ந்து பார்க்காமலே சென்றுவிட்டாய்… ஆனால், எனக்குள்ளோ நீ வளர்த்த அருவி இப்போது உயரம் கூடிக்கொண்டே செல்கிறது. இதை உன்னிடம் நேரில் சொல்லவேண்டும் நான், ‘நான் உன்னை விரும்புகிறேன் சதிஸ். என் இடதுகன்னம், இனிப்புமிட்டாய் ஒருதட்டில் மட்டும் ஏற்றப்பட்ட துலாபாரத்தட்டுபோல் நியாயமற்று நிறைந்திருக்கிறது, வலக்கன்னத்திலும் உன் முத்தத்தை இட்டு அதை சமநிலைப்படுத்த வா!’ என உன் கண்பார்த்துச் சொல்லவேண்டும். நான் இந்த விஜயதசமி விடுமுறையை அப்பாவிடம் தெரிவிக்காமல் வருகிறேன், ரயில்நிலையம் வந்து அழைத்துச்செல், எவ்வளவு நேரமானாலும் காத்திருப்பேன் -பிரியமுடன் பொற்செல்வி’

பொற்செல்வியின் கடிதத்தை வாசித்துமுடிந்ததும் எனக்கு கைகள் நடுங்கியது. எனக்குமட்டும் ஏன்… இப்படி முத்தமிடவும், இப்படி நேசிக்கவும் யாரும் இல்லை? காதலிப்பதற்கான முதல் தகுதி அழகா? இந்தக்காதல் எல்லாம் போலி… காட்சிப்பிழை… அழகின்பின் ஓடுகிற கூட்டம். இதைப் பொசுக்கவேண்டும்… இந்தக்கூட்டத்தைப் பொசுக்கவேண்டும்… தெருவில் தசரா வேடமிட்ட யாரோ நடந்துசெல்லும் சலங்கையோசை கேட்டது, மூளை மொத்தமும் ஜல்… ஜல்… என உலோக ஓசையுடன் குதித்தது… கையில் இருந்த காகிதத்தை எவ்வளவு பொடிப்பொடியாய் கிழிக்கமுடியுமோ அவ்வளவு பொடிப்பொடியாய் கிழித்தேன். இன்னும் போதாமல் அறையின் மூலையில் அதை நெருப்பிட்டுக் கொளுத்தினேன். கம்பளிப்பூச்சி கருகுகிற மணம் வீசியது காகிதத்திலிருந்தா அல்லது எனக்குள்ளிருந்தா எனத்தெரியவில்லை. என் கண்ணீருக்குக் குளிர்காய அப்போது அந்த நெருப்பு தேவையாய் இருந்தது.

அடுத்தநாள் கல்லூரிக்குச் சென்றதும் பொற்செல்வி ஓடிவந்து என்னிடம், “போஸ்ட் பண்ணிட்டியா வெயிலா?” என்றாள். எனில், முந்தையநாள் எனக்கு நேர்ந்த அவமானமெல்லாம் இவளுக்கு ஒரு பொருட்டே இல்லையா? அதைப்பற்றியோ அதற்கு நான் வீட்டில்போய் அழுதிருப்பேன் என்பதைப்பற்றியோ இவளுக்கெல்லாம் கேட்கத் தோன்றவே தோன்றாதா? என்னை ஆறுதற்படுத்துவதற்கு ஒருவார்த்தைகூடவா இல்லை இவளிடம்? உண்மையைச் சொல்லிவிடவேண்டும் என எண்ணியபடியே வந்த எனது மனது இறுமார்ந்தது, “ஆமாடி பண்ணிட்டேன்” என்றுவிட்டு நகர்ந்துவிட்டேன். அன்று மட்டுமல்ல… அதிலிருந்து அடுத்த நான்குநாட்கள், அதையேதான் கேட்டுக்கொண்டிருந்தாள். என் வெறுப்பு திரண்டுகொண்டே வந்தது. அந்தவாரம் ஆயுதபூஜை சரஸ்வதிபூஜை விடுப்பு. விடுதி மாணவமாணவிகளும் சேர்ந்து ரயில்நிலையத்திற்குச் செல்கிற பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடைசியாய் கையை ஆட்டி என்னிடம் விடைபெற்ற பொற்செல்வியைப் பார்த்தேன்.

அடுத்தநாள் வகுப்புத்தோழிகள் தொலைபேசி வழியாகச் சொல்லித்தான் தெரிந்தது, பொற்செல்வி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள் என்பது. என்னால் ஒருத்தி இறந்திருக்கிறாள் என்பதை என்னால் நம்ப இயலவில்லை. நான் அவ்வளவு கொடியவளா? நல்லவளாக உலகிற்கு தோற்றமளிக்கிற கெட்டவளா இனி நான்? ‘பொற்செல்வி இறந்ததை மறந்துவிடு மனமே…! நீ பைத்தியமாகாமல் இருக்க அதுவே வழி!’ என எனக்கு நானே சொல்லிக்கொண்ட தினத்திலிருந்துதான் எனக்கு இப்படி தினமும் ஏதோ ஒரு பெண் பொற்செல்வியைப்போலவே கண்ணுக்குத் தெரிகிறாள்.

பேருந்து நடத்துனர் “யாராச்சும் டிக்கெட் எடுக்காம இருக்கீங்களா… ஒரு டிக்கெட் கணக்கு குறையுது” என கத்தியபடியே வந்த குரலில் என் நிகழுலகிற்கு வந்தேன். நான் கடைசி இருக்கையைத் திரும்பிப் பார்த்தேன், அதே நேரத்தில் அங்கிருந்து என் கணவன் ஸ்டீபனும் என்னைப் பார்த்து உரோமங்கள் அடர்ந்த தன் கையை உயர்த்தி எனக்கும் சேர்த்து வாங்கிய இரண்டு பயணச்சீட்டுகளையும் காண்பித்தான்.


 

எழுதியவர்

ரம்யா அருண் ராயன்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரம்யா அருண் ராயன் இயற்பியல் முதுகலை பட்டதாரி. ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பான ”செருந்தி”- ஐ வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Subscribe
Notify of
guest

4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
வெள்ளூர் ராஜா
வெள்ளூர் ராஜா
9 days ago

அருமை

Sangeetha Enian
Sangeetha Enian
8 days ago

அந்தக் கடைசி திருப்பம் அழகு.
என் கல்லூரிக் காலங்களில் conical flask அளவுகளில் சொல்லி மாணவர்கள் பேருந்தில் நம்முடையதை மலிவு விலையில் கூறு கட்டிய காய் போல அனுமானிக்க அதற்கெனவே தாவணி தலைப்பை இழுத்து போர்த்தி , பெரும்பாலும் ரெகார்ட் நோட் வைத்து மறைத்து பழக்கம்.
பருத்த மார்பகங்கள் முதுகு வலி, தோல்எரிச்சல் ,பெரும்பாலும் பாலூட்டும் சிரமமும் கொடுக்கும் என என்று ஆண் சமூகம் அறியும் என ஆதங்கமாக உள்ளது.
பெண்கள் எந்த அளவீடுகள் வைத்துள்ளோம் அவை குணநலனைச் சார்ந்தே என்பதே உண்மை.

You cannot copy content of this page
4
0
Would love your thoughts, please comment.x
()
x