9 November 2024
idreez

நெடுநாள் வறண்டு வெடித்திருந்தக் குளமொன்றில் பெய்யெனப் பெய்து நிறைந்த திடீர் புதுமழையால் வெடித்து புத்துயிர்ப் பெறும் மீன்முட்டைகள் போல் உளி ஒன்று தட்டத் தொடங்கிவிட்டால் போதும் கற்கள், கல்வெட்டுகளாக மாறத் துவங்கி கதைகளையும் காரணங்களையும் நம்முன்னே ஏந்தியபடி யுகங்களைக் மீளுருவாக்கம் செய்ய ஆரம்பித்துவிடும். இருப்பினும் அவ்வளவு ஆழ்ந்து யோசிக்க ஒன்றுமில்லை புதுக்கதைகள் தொடங்க அல்லது நடந்தவைகளை நினைவூட்ட தூண்டுகோலென காரணிகளென தன்னியல்பாக நிகழ்ந்து, நம்மை ஆட்கொள்ளும் ஏதோவொன்று போதுமானதாக இருக்கிறது. 

மனிதர்களில் அநேகர் தங்களைத் தவிர்த்து மற்றவர்களிடம் அவ்வளவு வெளிப்படையானவர்களாக இருந்ததில்லை; இருப்பதில்லை. அவர்கள் தன்னகத்தே புதைத்து வைத்திருக்கும் ஆயிரமாயிரம் கதையடுக்குகளில் சரிபாதி இயல்பு வாழ்க்கையில் யாருடனும் பகிர்ந்துக் கொள்ள முடியாதவைகளாகவே இருப்பவைதாம். தன்னை மறந்தோ, பிரஞையோடோ அதை கொட்ட ஒரு போதை, ஒரு வாதைத்  தேவைப்படுகிறது. எப்படியிருப்பினும் எதற்கும், எந்த அனுபவத்திற்கும் ஒரு பாதிப்பு அவசியம். 

அதன் வழியில் நினைவுகள் பிரவாகமெடுத்து தனது மடைகளைத் தகர்த்து கொண்டால் நதிபோல சமன்படுத்தும் சமுத்திரத்தை அடையும் வரை அதன் சலசலப்பு ஓய்வதுமில்லை.. அந்த தருணங்களில் சொல்ல வந்ததைத் தேக்கி வைக்கும் வல்லமை எந்த மனதிடமும் இல்லை. ஏனென்றால் எல்லாமே ஒரு போதை.. வாதை! 

அப்படிதான் ஜெயகாந்தனின் ‘முன் நிலவும் பின் பனியும்’ வாசிக்கத் தொடங்க, அதில் வரும் பெரிய கோனார், சின்னக் கோனார் என்ற பெயர்களைக் கண்டவுடன் எதிர்பாரா ஒரு அலைவெள்ளமெழுந்து, அப்படியே என்னை உயர்த்திப் பிடித்து, சட்டென கரையில் தள்ளிவிட்டது போல் ஒரு அதிர்ச்சி! ஒரு திடுக்கம்! 

பல நாட்கள் மனதின் ஓரத்தில் ஒரு பறவையின் எச்சம் போல துருத்திக் கொண்டிருந்த ஒரு குற்றவுணர்வு, எப்படி படிப்படியாக காய்ந்து, உதிர்ந்து, ஒரு நாள் என் நினைவிலிருந்து முற்றிலும் நீங்கி, காற்றில் அப்படியே கரைந்துப் போனது போல் மறைந்துவிட்டிருக்கிறது என வியக்கலானேன்.

***

அப்போது விடியற்காலையில் எங்கூரிலிருந்து வெளியூர் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் நாலரை மணிக்கு வரும் பஸ்ஸைப் பிடித்தாக வேண்டும். அன்றைய தினம் என் வாழ்வில் அது முக்கியமான பயணமும் கூட! படித்து முடித்த கையோடு முதன் முதலாக வேலைக்கென வீட்டிலிருந்து புறப்படுகிறேன். வீட்டில் அனைவரின் கண்களிலும் பெருமித உணர்ச்சிப்பெருக்கும், நமக்கும் விடிவு காலம் வந்துவிட்டது என்ற நம்பிக்கையும் துளிர்த்துவிட்டிருந்தது. 

சத்திய மங்கலம் பக்கம், வேளாண்மை சார்ந்த நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதிக்கான வேலைக் கிடைத்திருந்தது. இனி என் வருமானத்தில் வாழப்போகிறேன், வீட்டுப் பொறுப்புகளை, ஒரு பொறுப்புள்ள தலைமகனாக ஏற்கப்போகிறேன் என்ற சுதந்திரமும், சுமைகளும் எனது மனதையும், தோள்களையும் வெவ்வேறு மாறுபட்ட உணர்வுகளின் வழியே அழுத்தி சுகம் காட்டிக் கொண்டிருந்தன.  

பஸ்ஸேற வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் வரை நடக்க வேண்டும். வேண்டாம் என்று சொல்லியும் எனது தோள்பையைத் தூக்கிக் கொண்டு, பஸ் ஸ்டாப் வரை வந்து அப்பா வழியனுப்பி வைத்தார். அவர் முகத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் மேலோங்கியிருந்தாலும், எனது மனதில் நவரசங்களில் சிரிப்பு, அழுகை, வியப்பு, அச்சம், பெருமிதம், வெகுளித்தனம், மகிழ்ச்சி, அமைதி என அத்தனையும் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தன. அருவெறுப்பு மட்டும் பிறகே நிகழ்ந்தது. அதுதான் கதை சொல்லும் வாதை. 

ஒரு தவிப்பான மனநிலையோடு பேருந்து வந்ததும் அப்பாவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.                     

வகுப்புத்தோழன் பாலா மூலமே அந்த வேலை கிடைத்திருந்தது. அதாவது எனக்கு ஒரு வாரம் முன்னமே அவன் அங்கு பணியில் சேர்ந்திருந்தான். வீட்டுச் சூழ்நிலைக்கு எப்படியாவது நானும் ஏதோ ஒரு இடத்தில் அவனை போல் சென்று அமர்ந்துவிட வேண்டும் என கணக்குப் போட்டவனாக, நானும் அங்கே வர ஆசைப்படுகிறேன் என்றேன். ‘உண்மையாகத்தான் சொல்கிறாயா?’ என்றான். ஆமாம் என்றேன் திடமான குரலில். அப்படிதான் அந்த பயணமும் ஆரம்பமானது. 

அது ஒரு நெடியப் பயணம்! ஊரிலிருந்து புதுக்கோட்டைக்கு அறுபது கிலோ மீட்டர், அங்கிருந்து ஈரோடு வழியாக சத்திய மங்கலத்திற்கு கிட்டத்தட்ட இருநூற்று அறுபது கிலோமீட்டர். அங்குச் சென்று சேர்ந்தபோது மணி இரவு ஏழெட்டு இருக்கும்! பாலா, மேனேஜர் நம்பர் கொடுத்திருந்தான். அவர் பேச்சிலிருந்து அவர் பெரும்பாலும் சேலத்திலிருந்தபடி இயங்கி வருவது புரிந்தது. நான் இணைந்து கொள்ள வேண்டிய குழுவின் தலைவன் என்று ஒரு தொடர்பு எண்ணைப் பகிர்ந்தார். அவன் பெயர் செந்தில், அவன்தான் அன்றிரவு பஸ் ஸ்டாண்ட் வந்து என்னை அழைத்துக் கொண்டது. 

பார்க்க என்னை ஒத்த வயதுக்காரன் போல தெரிந்தாலும், தன்னை ‘சார்’ என்று அழைக்கும் படி அன்புக்கட்டளை வேறு போட்டான். என்ன படிச்சிருக்கீங்க? என்றதற்கு மட்டும் அவனிடம் பதில் வரவில்லை. மற்றபடி நட்பாகத்தான் நடந்துகொண்டான். மேனேஜருக்கு உறவு முறையாம். சத்தி செல்வம் லாட்ஜ் எங்களை வரவேற்றது.

எட்டுக்கு பத்து போன்றதொரு அறை, என்னையும் சேர்த்து ஆறேழு பேர்! எல்லோருமே பதினெட்டு முதல் இருபத்தைந்து வயது வரை இருந்தார்கள். காலையில் ஆறுமணிக்கே வேலைக்கு தயாராகி விட வேண்டும் என செந்தில் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஐந்து மணிக்கே எழுந்துவிட்டிருந்தேன். விற்பனைப் பிரதிநிதிக் குரிய உடை மற்றும் அங்க லட்சணங்களோடு கண்ணாடியில் பார்த்தபோது பேசாமல் சினிமா, சீரியல் வாய்ப்புகள் தேடிப் போயிருக்கலாமோ என்று சொல்வது சுயதம்பட்டம் போல் தோன்றலாம். ஆனால் வேலை கிடைத்தவுடன் இயல்பாகவே அந்த களை எல்லோருக்கும் வந்துவிடும் போல. 

என்னை நானே ரசித்துக் கொள்ளவெல்லாம் நேரம் அனுமதிக்கவில்லை. போர்வை விரித்திருந்த  அறைத்தரையில் செந்தில் நடுநாயகமாக சம்மணமிட்டு அமர்ந்துகொள்ள, மற்றவர்கள் வட்டம் போல் அவனை இணைத்துக் கொண்டனர். நானும் ஒரு மூலை இடுக்கில் என்னைச் சொருகிக்கொண்டேன். செந்தில்,

கஸ்டமரிடம் என்னென்னப் பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், முதலில் எப்படி நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற செயல்முறைகளை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தான். ஏனென்றால் விற்பனை பிரதிநிதிகளுக்கு முக்கிய அஸ்திரமே வாய்ஜாலம்தானே! 

ஆனால் அவன் உபயோகித்த வார்த்தைகளோ, அவனிலிருந்து வெளிப்பட்ட உடல்மொழியோ அவனை ஒரு பெரிய நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி போல காட்டவில்லை, மாறாக சூரத் புடவைகளை பொதி போல சுமந்து கொண்டு வீடு வீடாக சென்று விரித்துக் காட்டி வியாபாரம் செய்பவன் போலக் காட்சியளித்தான். பாத்திரத்தில் கொஞ்சம் பிதாமகன் சூரியா மாதிரியும்! நமது கல்வித் தகுதிக்கு, மாறி வரக் கூடாத இடத்திற்கு ஏதும் வந்துவிட்டோமோ என்ற எச்சரிகை மணி அப்பவே மண்டையில் அடிக்கத் தொடங்கிற்று. நான்தான் உடனே விழித்துக்கொள்ளவில்லை. 

மகேஸ், எங்கே நான் சொன்னது போல உங்களை இன்ட்ரோடியூஸ் பண்ணிக்கிங்க பாப்போம்?” செந்திலின் கட்டளைக்கு எல்லோரும் என் முகத்தைப் பார்க்க, அவனைப் பிரதியெடுத்தாற் போல பேச ஆரம்பித்தேன்.. தமிழில்தான்

என் பேரு மகேசு சார்.. நான் க்ரீன் குளோபல் பிளான்ட் பயோ டெக் கம்பெனியிலிருந்து வந்திருக்கேன் சார்..! ஹெட் ஆபிஸ் மும்பையில இருக்கு சார்! நாங்க ஃபெர்டிலைசர்ஸ் சப்ளை பண்றோம் சார்..! எல்லாமே ஆர்கானிக் சார்! இதை போட்டீங்கன்னா உங்களுக்கு நல்ல விளைச்சலை கொடுக்கும் சார்! மரக்கன்றுகள் கூட விற்கிறோம் சார்! ஃபார்ம் சூப்பர்வைசிங் சர்வீஸ் எல்லாம் ஃப்ரீ சார்! எதா இருந்தாலும் நீங்க வாங்கப்போற எண்ணிக்கையை பொறுத்து மற்ற சலுகைகளும் உண்டு சார்! ஏதும் ஆர்டர் பண்றிங்களா சார்? நூறு சதவீதம் நம்பி வாங்கலாம் சார்! உர மூட்டை எவ்ளோ சார் போட்டுக்க? கன்னு கூட ட்ரை பண்ணி பாருங்க சார்! மேங்கோ, மாதுளை, சப்போட்டா, லெமன்னு எல்லாம் இருக்கு சார்..! ” 

செந்தில் என்னை உற்சாகப்படுத்துவது போல் “சூப்பர் மகேஸ்! சூப்பர்!” சத்தம் வராத வண்ணம் கைகள் தட்டினான். மற்றவர்களும் என்னை நம்பிக்கையோடுப் பார்த்தார்கள். எனக்குதான் அவையெல்லாம் ஏதோ ஒரு ‘லே மேன்’ பேசுவதுப் போல் தோன்றின. ஒவ்வொரு வாக்கியமும் முடியும்போது அந்த ‘சார்.. சார்..’  என நீட்டி முடிப்பது, பஸ் ஜன்னல்களுக்கு வெளியே நின்று எவனோ வெள்ளரிக்காய் விற்பது போலிருந்தது. வீட்டின் நிலைக்கு அதெல்லாம் ஒன்றுமில்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். 

இன்னொரு புறம்.. படித்த படிப்பிற்கு ஏதாவது ஒரு ஆராய்ச்சிக் கூடத்திலோ, அது சார்ந்த நிறுவங்களிலோ வெள்ளை கோட் அணிந்த விஞ்ஞானி போல இருக்க வேண்டியவன் இங்கே வந்து இப்படி சோப்பு சீப்பு விற்பவன் போல மாட்டிக்கொண்டோமே என்ற தன்னிரக்கமும் அழுத்த துவங்கியது. 

முதல் இரண்டு மூன்று நாட்கள் ட்ரையினிங்காம்! செல்லும் கிராமங்களுக்கு, கூட இன்னொருவன் துணைக்கு வந்தான் அல்லது நான் அவனுக்கு துணையாகச் சென்றேன். குறிப்பேடு போல ஒரு படிவம் தரப்பட்டது. அதில் வரிசை எண், சந்திக்க சென்ற நபரின் பெயர், முகவரி, அவர்களை அணுகிய நேரம், விவரிக்க எடுத்துக் கொண்ட நேரம் என எல்லாவற்றையும் நிரப்ப வேண்டும். அது கிட்டத்தட்ட ஊழியரின் வருகை பதிவேடும் போல. காரணங்களின்றி எங்கும் செல்லாமலிருந்தால் அந்த நாளுக்குரிய சம்பளம் பிடித்துக் கொள்ளப்படும்.

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஊர்களுக்குச் செல்ல வேண்டும், எல்லாமுமே தோப்பும் காடுகளும் வயல்வெளிகளும் நிறைந்த பகுதிகள்தான். அங்கே பண்ணையம் செய்பவர்கள் அதாவது எங்களுடைய கஸ்டமர்களை சந்திக்க வேண்டும். சில சமயம் அவர்கள் தொழிலதிபர்களாகவும் கூட இருப்பார்கள். அனைவரையும் அவர்களது தகுதிக்கேற்ப, தேவைகளுக்கு ஏற்ப, முக்கியமா அவர்களது மனநிலைகளுக்கு ஏற்ப எதிர்கொள்ள வேண்டும். அதை அவர்களது உடல்மொழிகளிலிருந்தேப் பிடித்துவிடலாம்.

எவ்வளவு நுணுக்கமாக நடந்து கொண்டாலும் சில சமயம் கத்தி மேல் நடக்கும் கதைகளாகவும் கூட முடிந்துவிடும்! 

ஒரு நாள் அப்படிதான் சத்தியமங்கலத்திருந்து பவானி பக்கம் போய்க்கொண்டிருந்தேன். பெரும்பாலும் போகும் எல்லா இடங்களும் காடும் மேடுமாகவேச் செல்லும். அவ்வப்போது ஷூவில் படியும் தூசியையும் மணலையும் துடைத்துக் கொண்டு அத்தனை ஊர்களையும் எல்லைகளையும் கால்நடையிலேயே கடக்க வேண்டும்! வயல் வரப்புகளில் சேறு, சகதிகளில் சிக்கிக் கொள்வதெல்லாம் சர்வ சாதாரணம். அந்த நேரங்களில் கட்டியிருக்கும் டை கூட என்னைப் பார்த்து சிரிப்பது போலிருக்கும். 

அன்றடித்த  ஜூலை மாத வெயிலுக்கு, ஊற்றெடுத்த வேர்வைக்கும் தாகத்திற்கும் பஞ்சமில்லாமலிருந்தது. அப்படியொரு வேளையில்தான் குறிப்பிட்ட ஊரின் பாலமொன்றை கடந்துக் கொண்டிருந்த போது, புல்லட் ஒன்று என்னை ஏற இறங்க பார்த்தபடிச் சென்றது. அந்த மனிதருடைய அடர்த்தியான புருவங்களும் பீச்சுவா கத்தி போல இருந்த மீசையும், என்னை கொஞ்சம் கலவரப்படுத்தி, நிதானிக்கச் செய்து செல்லும் வேகத்தை சற்று குறைத்துக் கொள்ள வைத்தது.

சுற்றி தென்னந்தோப்புகள், மஞ்சள் காடுகள், எங்குப் பார்த்தாலும் பச்சை பசேல்தான்! இப்படியெல்லாம் எங்கள்  ஊர் பக்கம் பார்க்க முடியாது. மழைப் பார்த்த பூமி என்றாலும், மழை வந்தாலும் கூட அந்த செழிப்பு நிறைய நாள் நீடிக்காது. வடக்குப் பக்கம் ஒரே தோட்டம் தொரவாக தென்பட, ரோட்டிலிருந்து இறங்கி அந்த பக்கம் நடக்கலானேன். ஒரு ஐம்படி தூரத்தில் இரண்டு சிறிய வீடுகளை இணைத்த மாதிரி ஒரு நடுத்தரமான ஓட்டு வீடு கண்ணில் பட்டது. 

அங்கு குடிக்க தண்ணீர் ஏதும் கேட்டுப் பார்க்கலாமென விரைந்து, ‘அம்மா..!’ என்று குரல் கொடுத்தேன். அரைப் பவுணர்மியாய் சற்றே பரந்து பிறைக் கண்டிருந்த தனது அகல நெற்றியில் திருநீறு, குங்குமம் இட்டும், கால்முழ மல்லிகையை பருத்திப்பூ போல பளிச்சென கொண்டைக்குள் நட்டும் அழகும் மங்களகரமும் இணைந்து குடிகொண்டிருந்த ஒரு எழிலான அக்கா வந்தார். மேலும் சீனியர் நடிகை சுஜாதாவை நினைவூட்டும் சாந்தமான முகவாட்டம்!

கொஞ்சம் குடிக்க தண்ணீர் வேண்டும் தருகிறீர்களா? என்றேன். 

சத்தம் கேட்டிருக்க வேண்டும், உள்ளிருந்து ஒரு ஆள் வந்தார், முரட்டுகாளைக்கே முட்டுக் கொடுப்பது போல பலமிகுந்த தோற்றம். என்னை எதிர்கொண்டப் பார்வையில் அவரிடமிருந்து பல தீப்பொறிகள் உள்ளிருந்து வீச்சிட காத்திருப்பது போல் உணர்ந்தேன். அவர்தான் வழியில் என்னை கவனித்தவாறு கடந்துச் சென்ற புல்லட் பன்னீர் செல்வமும் கூட! இருப்பது சிறிய வீடாக இருந்தாலும், அவருடைய ஆஜாகுவான உடம்பும் வெண்மை மங்காத உடுப்பும் ஒரு வளமான பண்ணையாருக்குரிய அத்தனை அம்சங்களையும் கடைவிரித்துக் காட்டின. 

நான் சும்மா இருந்திருக்கலாம். 

அந்த அக்கா தண்ணீர் வந்து கொடுத்ததும், சொம்பை வாங்கி மடமடவென்று விழுங்க ஆரம்பித்தேன். முடித்ததும், எனது பவ்யத்தில் வெளிப்பட்ட நன்றியை ஆமோதித்தவராய் அந்த அக்கா உள்ளேச் சென்றுவிட்டார். பின்னர் அந்த முரட்டு அண்ணன் அல்லது அங்கிள் என்னோடு பேசத் தொடங்கினார். 

“எங்கிருந்து வர்றீங்க?”

“க்ரீன் குளோபல் கம்பெனி சார்!” 

“ஓஹ்..! என்ன மாதிரியான வேலை? இங்கே என்ன பண்றீங்க?” 

 “என் பேரு மகேசு சார்..” பெயரிலிருந்து கிளிப்பிள்ளைப்போல்.. சப்ளை செய்யும் எலுமிச்சை, சப்போட்டா, மாங்கன்றுகள் வரை அத்தனையையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்தேன்.

“ஓஹ்.. உரமெல்லாம் விக்குறீங்களா?” 

ஆமா சார் எல்லாம் இயற்கை உரம், வேற எதுவும் போட தேவையில்லை, விளைச்சல் அமோகமா இருக்கும்!” விவசாயத்தைப் பற்றி எனக்கு ஒரு ஏபிசிடியும் தெரியாவிட்டாலும், நம்மாழ்வார் அளவிற்கு இயற்கை கியற்கை என்று வாய்க்கு வந்ததையெல்லாம் அளந்துவிட்டேன். ஆனால் எல்லாமே கழுதை கெட்டா குட்டிச் செவரு அளவிற்கே ஒரே விசயத்தை வேறு வேறு விதமா விவரித்து ஒப்பேத்திக் கொண்டிருந்தேன். இப்படி எத்தனை பரீட்சைகள் எழுதியிருப்போம்! இருந்தாலும் என்னுடைய அமெச்சூர்த்தனமான தகவல்கள், பரம்பரை விவசாயியான அவரை பலமாக சீண்டியிருக்க கூடும்.

அப்ப நாங்கெல்லாம் என்ன மயிருக்கு இருக்கோம்!” என்று ஆவேசமெழுந்தவராக விறுவிறுவென உள்ளே ஓடியவர், முனியாண்டிச் சாமியை போல ஒரு அரிவாளோடு வந்து என் கழுத்தை குறிப்பார்ப்பது போல ஒரு ஓங்கு ஓங்கினார்ஐயோ என்று நான் அலறுமுன்னே, மகராசி.. அந்த அக்கா கத்திக்கொண்டு வந்து தடுத்துவிட்டாள். பயத்தில் நான் வெலவெலத்து வாயடைத்துப்போய், நகரவும் செய்யாமல் அப்படியே திகைத்து நின்றேன்! பேண்ட்டெல்லாம் கசகசக்கும் அளவிற்கு குப்பென எல்லா பாகமும் வியர்த்துவிட்டது

போயிருப்பா தம்பி.. போயிரு! சீக்கிரம் போ! ” என்று கணவனைத் தடுத்தபடி என்னை விரட்டினாள். விட்டால் போதுமென்று மூச்சை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து வேகமும் நடையுமாக, ஏதோ ஒரு திசையில் ஓடத் தொடங்கினேன்

ஒரு வேளை பைத்தியமோ?!’ என நினைத்துக்கொண்டேன். ஆனால் அந்த நடுக்கம் மட்டும் ஒரு அரைகிலோமீட்டர் வரை ஓயவேயில்லை! யாரிடமாவது சொல்லி புலம்ப வேண்டும் போலிருந்தது. வழியில் என்னை விட சற்று மூத்த பெண்ணொருத்தி தென்பட்டாள். விசயத்தைக் கூறி அந்த வீட்டு ஆள் என்னிடம் அப்படி நடந்துகொண்டார், அவருக்கு என்ன பிரச்சினை என்றேன். யார்? எங்கே வீடு என்று விபரம் கேட்டாள். சொன்னேன். அவள் சிரித்துக் கொண்டேபின்னே உள்ளூர் உரக்கடை ஆளுகிட்டேயே போயி உரம் விக்க போனா? அதுவும் அந்தாளு முரடன் வேற! இனிமேல் அவர் கண்ணுல படாம பாத்துக்குங்க! என்று சிரித்துக் கொண்டே என்னை எச்சரித்துவிட்டு போனாள்.

நல்ல தொடக்கம்தான் என்று நிலைமை எண்ணி சலித்து கொண்டு, கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். இடையிடையே இங்கே பெரிய அளவில் பண்ணையம் பண்ணுகிற ஆட்களைப் பற்றி விசாரித்துக் கொண்டுச் சென்றேன். அப்போதுதான் ஒரு பெரியவர் ஒரு பாதையைக் காட்டி, “இந்த காட்டை ஒட்டியே போனா சின்னத்தங்கம், பெரியத் தங்கம் னு ரெண்டு பேரோட காடும் வரும், ரெண்டு பேரும் அண்ணந்தம்பிங்கதான். போயி பாருங்க, உங்களுக்கு ஏதும் ஆர்டர் கிடைக்கலாம்” என்றார். எனக்கு கொஞ்சம் நம்பிக்கை துளிர்த்தது. நடையில் மீண்டும் வேகத்தைக் கூட்டினேன். 

அந்த பகுதியில் ஒவ்வொரு ஆளுக்கும் அல்லது குடும்பத்திற்கும் ஏக்கரா அளவில் நிலமிருந்தது ஆச்சர்யமூட்டியது. பார்க்கவும் எளிமையானவர்களாக தெரிந்தனர். எங்கள் ஊரில் என்றால் இருபது முப்பது செண்டு அளவில் சொத்து பத்து வைத்திருந்தாலே ஆட்களை கையில் பிடிக்க முடியாது.

முதலில் சின்னத்தங்கத்தின் காடு வந்தாலும், அவர் வீட்டிற்கு சென்றுவிட்டதாக அங்கிருந்த வேலையாட்கள் சொன்னார்கள் அதனால் பெரிய தங்கம் இருக்கும் காட்டு பக்கம் செல்லலானேன். ஆனால் அந்த காடு, மலைகள் போலிருந்த பல மேடுகளைக் கடந்து போக வேண்டியதாகயிருந்தது. மிகவும் சிரமப்பட்டேன். மாதத்திற்கு பதினைந்து உரமூட்டைகள் விற்க வேண்டுமென்பது எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச இலக்கு. 

வந்து ஒரு வாரம் ஆகிவிட்டிருந்தது. இதுவரை ஒரு உரமூட்டைக்கு கூட ஆட்கள் தேறவில்லை. மேற்சொன்னது போல் பதினைந்து மூட்டை எனும் குறைந்த பட்ச டார்கெட்டை முடித்தால்தான் மூவாயிரத்து ஐநூறாவது கையில் கிடைக்கும். அதில்தான் தங்குமிடம் மற்றும் உணவு சார்ந்த செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பது கூடுதல் சவால். வீட்டுப்பொறுப்புகள் கண்முன் தோன்றி, எதிர்ப்பட்ட சிரமங்களை மறக்கடித்தன. வேகமாக மேடுகளில் ஆடுகளை போல் உந்தி ஏறி, இறங்கி ஒருவழியாக பெரிய தங்கம் இருக்கும் இடத்தை அடைந்தேன்.

சிறிய குடிசை போன்று அமைக்கபட்டிருந்த ஒரு பந்தலில், வெள்ளை வேஷ்டி சட்டையில், கிராமத்து மைனர் போல கருப்பு கண்ணாடியும் அணிந்துக்கொண்டு, பெரிய தங்கம் முகச்சாயலில் மூன்று முகம் படத்தில் வரும் அலெக்ஸ் பாண்டியன் ரஜினியை நினைவூட்டினார். 

என்னைப் பார்த்ததும், வாங்க வாங்க என்று புன்னகையோடு வரவேற்று, அவருக்கு அருகிலிருந்த ஒரு நாற்காலியைக் காட்டி அமரச் சொன்னார். குரலிலும் அதே கம்பீரம்! 

“சொல்லுங்க என்ன விஷயமா வந்துருக்கீங்க?” அவரது சிரித்த முகம் என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. ஆனால் அவரிடமும் அதே பல்லவியை ஆரம்பிக்க விரும்பவில்லை. வந்த விசயத்தை ஒரு தேர்ந்த எக்சிக்யூட்டிவ் போல, இடையிடையே ஆங்கில சொற்களையும் சேர்த்து, முடிந்தவரை சுருக்கமாகச் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு என்னப் படிச்சிருக்கீங்க? என்றார்.

எம் எஸ் சி பயோ டெக்னாலஜி சார்!” என்றதும், சற்று சுவாரஸ்யமாகி, “அட என்னோட பொண்ணும் அதான் படிச்சா!” அவருடைய குரலில் முன்பிருந்ததை விட கொஞ்சம் மரியாதையும் மகிழ்ச்சியும் கூடியிருந்தது. அருகில் நின்ற பண்ணையாளிடம், “சேகரு, தம்பிக்கு மோர் கொடு!” என்றார். கட்டளையில் நாகரீகமும் கரிசனமும் மோரும் உப்புமாய் கலந்திருந்தது

பரவால்ல சார்..” என்று வறண்ட தொண்டையிலும் வம்படியாய் இழுத்தேன்

இருக்கட்டும் தம்பி, சும்மா சாப்பிடுங்க! நம்ம பண்ண பால்ல செஞ்சதுதான், நல்லாருக்கும்!” 

நான் கூச்சத்தோடு வாங்கிக் குடித்து முடித்தேன். ‘ஆவ்என்ற சுபத்தோடு நடந்து வந்த சோர்வெல்லாம் நீங்கி, முகம் மறுபடியும் புத்துணர்வை அணிந்து கொண்டது.  

உங்க படிப்புக்கு வேற வேலை செய்யலாமே.. இதுல எப்படி நுழைஞ்சீங்க?” 

என்னிடம் பதில் இல்லை. அவரிடம் என்னுடைய கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும் விரும்பவில்லை

பிடிச்சுதான் சார் பண்றேன்என்றேன் வலிந்து வரவழைத்துக் கொண்ட ஒரு சம்பந்தமில்லாத புன்னகையோடு

அவருக்கு அதில் உடன்பாடில்லாமல் தெரிந்தது

எம் பொண்ணு இப்ப சென்னையில வேலைப் பாக்குறா.. நாப்பதாயிரம் சம்பாரிக்கிறா! நமக்கு தோட்டம் தொரவு இருந்தாலும், அவ ஆசைய தடுக்க விரும்பல, கண்ணாலம் வர இஷ்டம் போல இருந்துட்டு போவட்டுமேன்னு நானும் உட்டுட்டேன்! ஒரே பொண்ணு வேற!” அவருடைய பேச்சில் பாசமும், பெருமிதமும், பெருமையும் வழிந்தது.

பெரிய மனித தோரணைகள் இருந்தாலும், எனக்கும் மதிப்பளித்து குடும்ப விபரங்களைப் பகிர்ந்து கொண்டார். பெரும்பாலும் அவரே எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தார். அந்த உரையாடல் ஒரு மணி நேரத்தை கடந்துச் சென்றது. மணியைப் பார்த்தேன் பன்னிரெண்டை தாண்டிவிட்டிருந்தது. அவர் பேசிக்கொண்டே சென்றாரேத் தவிர, நான் அணுகிய வேலையைப் பற்றி ஒரு பேச்சும் எடுக்கவில்லை

எனக்கும் கூட அவ்வளவு நேரம், வந்த வேலையை மறந்துவிட்டு பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்ததால்  ஆர்ட்ரைப் பற்றி பேச்செடுக்க கூச்சமாக இருந்தது. ஆனால் கூச்சப்பட்டால் வேலைக்கு ஆகாது அல்லவா? கிட்டத்தட்ட கிளம்பும் மனநிலையில் இருந்தபோது, “சார்.. ஆர்டர் ஏதும் தர்றீங்களா சார்?” என்று தயக்கத்தோடு ஆரம்பித்தேன். அது அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். 

“ஒரு உர மூட்டை எவ்வளவு தம்பி?” எனக்காக கேட்டது போல் இருந்தது 

“ஐநூறுபா சார்” 

உங்களுக்காக ஒரு மூட்டை வாங்கிக்கிறேன், உங்களுக்காகத்தான்!” என்று அழுத்தி சொன்னார்

ஒரே ஒரு மூட்டை என்றாலும், எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது

ரொம்ப நன்றி சார்!” என்று பணத்திற்கான ரசீதைக் கொடுத்தேன்

நல்ல படிப்பு படிச்சிட்டு இப்படி கஷ்டப்படறது, எனக்கு பிடிக்கல! வேற ஏதாவது முயற்சி பண்ணலாமே தம்பி..!” 

பாக்கணும் சார்என்றேன்

நீங்க சொல்ற மாதிரி இந்த உரம் வேலை செய்யுமல்ல?” யாருக்கு தெரியும் என்றுதான் பதிலளித்திருக்க வேண்டும்.

நிச்சயமா சார்!” கூடவே கொண்டுச் சென்றிருந்த கையேட்டில் இணைக்கப்பட்டிருந்த தொழில் முறை விபரங்களையும் குறிப்புப் படங்களையும் காட்டினேன். நிறைய பேர் பயன் பெற்றுள்ளனர். எடுத்தது ஒரு மூட்டைக்கான ஆர்டர் என்றாலும், ஒவ்வொரு மாதமும் எங்கள் குழு வந்து உங்கள் தோட்டத்தை வந்துப் பார்வையிடும், தேவையான ஆலோசனைகளையும் வழங்கும் என இஷ்டத்திற்கு வாய்க்கு வந்ததையெல்லாம் அள்ளிவிட்டு அவருக்கு நம்பிக்கையூட்டினேன்

அந்த ஒரு வாரமாக இந்த மாதிரி பொய்களை எல்லாம் நான் யாரிடமும் கூறவேயில்லை, அதற்கு என் மனமும் அனுமதிக்கவில்லை. அதுவரை ஒவ்வொரு மாலையும் ஒரு ஆர்டரும் பிடிக்க முடியாமல், முயலாமல் வெறும் கையோடுதான் அறைக்குச் சென்றுக் கொண்டிருந்தேன். செந்தில் அமைதியாக இருந்தாலும் மற்றவர்கள் என்னை ‘கஸ்டமர்களை கரெக்ட் பண்ண தெரியாதவன்’ என கிண்டல் செய்து கொண்டிருந்தனர். 

கூடவே பேசிய  சம்பளத்தைப் பெற குறைந்த பட்ச இலக்கான பதினைந்து உர மூட்டைகளையாவது விற்க வேண்டிய அவதியும் ஒரு பக்கம் என்னை உள்ளூர அலைக்கழித்துக் கொண்டிருந்தது. இனி மெல்ல மெல்ல நாமும் பொய் வாக்குறுதிகளை கையில் எடுத்தால்தான் பிழைப்பை ஓட்ட முடியுமென்ற என்ற கட்டாயத்திற்கும் ஆளாகியிருந்தேன். 

முதல் ஆர்டர் கிடைத்தது எல்லாவற்றிற்கும் வழிகாட்டல் போல ஆயிற்று! வரும் மாதம் தங்களுடைய உரம் டெலிவரி செய்யப்படும் என்று பாதித் தொகையைப் பெற்றுக்கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் அங்கிருந்துப் புறப்பட்டேன். அத்தனை விபரமுள்ள பெரிய தங்கத்தையே சாய்த்துவிட்டோம், இனி இந்த தொழில் நமக்கும் கை வந்துவிடுமென்ற நம்பிக்கை, புது தெம்பைக் கொடுத்திருந்ததில் நடையில் பீடு அதிகமானது. என்னை மறந்து பாதை நெடுக மரங்களின், செடிகளின், கொடிகளின், பூக்களின் பேரழகுகளை துதிப்பாடிக் கொண்டிருந்தேன். புவியீர்ப்பு விசை குறைந்து மேகத்தில் தலை முட்டுவது போலிருந்தது. ‘மனசுக்குள்ளே தாகம் வந்திச்சா.. வந்திச்சா..’ என்று அப்போதைய ஹிட் பாடலை முணுமுணுக்க தொடங்கினேன். அதே கொஞ்சம் சோர்வடையும் நேரமென்றால் ‘வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..’ வந்துவிடும். 

அடுத்து சின்னத் தங்கம் வீட்டை விசாரித்துக்கொண்டுச் சென்றேன். அவர்கள் வீடு, ஒரு பெரிய ஓட்டு வீடு. பார்க்க பரந்து விரிந்த தென்னந்தோப்பிற்கு இடையே குட்டி அரண்மனை போல் காட்சியளித்தது. தென்னமரங்களில் பாதி காய்ந்ததும் பட்டதுமாய் சாம்பல் நிற சருகு கீற்றுகள் துடைப்பம் போல் அதன் உச்சியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன. அந்த இடம் ஒரு அசாதாரண அமைதியை உடுத்திக் கொண்டிருந்தது போல் உணர்ந்தேன். 

அந்த ஊரில் அண்ணன் தம்பி இருவருமே நிறைய செல்வாக்குப் பெற்றிருந்தார்கள். வழியில் காணும் யாவருமே அவர்களின் புகழ் பாடுபவர்களாக இருந்தார்கள். அனைவரது பேச்சுகளிலும் தங்கம் சகோதர்களின் பால் அளவிற்கு அதிகமான மரியாதை குடிக் கொண்டிருந்தது. ‘அவர்களை போய் பாருங்கள், அவர்கள்தான் இங்கே அதிகம் பண்ணையம் செய்பவர்கள்’ என்று எனக்கு நம்பிக்கையூட்டினர்.  

என்னைப் பார்த்ததும் எங்கோக் கட்டியிருந்த நாய் குரைக்க ஆரம்பித்தது. எனக்கு நாயென்றால் பயம். இருந்தாலும் தயங்கி தயங்கி முன் சென்றேன். நாயின் சத்தத்தைக் கேட்டுவிட்டு, வெளியே வந்த ஒரு பெரியவர் சுற்றும் முற்றும் பார்த்தார். என்னைக் கண்டுவிட்டதும், கையசைத்து வாவென்று அழைத்ததுப் போன்றிருந்தது. சின்னத்தங்கம்தான் அது. ஆனால் பார்க்க அவர் பெரிய தங்கத்திற்கு அண்ணன் போலத் தெரிந்தார். மேல்ச்சட்டை போடாத உடையிலும் அவ்வளவு எளிமை!

கனிவான முகம், மழிக்கப்படாத ஒரு வாரத்திற்கு மேற்பட்ட தாடி. தாடி, மீசை இரண்டுமே நரைத்திருந்தது. பேச்சு கூட மிகவும் பணிவாக இருந்தது. காணும் யாருக்கும் சட்டென நெருக்கத்தை ஏற்படுத்திவிடும் அளவிற்கு மிகவும் எளிமையானவராக காணப்பட்டார். அதில் சொல்ல முடியாத சோகமும் எதுவோ தோய்ந்துமிருந்தது. 

நீங்கள் அவருக்கு தம்பியா என ஆச்சர்யப்பட்டுக் கேட்டேன். சிரித்துக்கொண்டே “ஆமாம், அண்ணன் ‘டை’ அடிப்பார், அதனால் வயது தெரியாது!” என்றார். வீட்டின் உள் முகப்பில் இடப்பட்டிருந்த இருக்கைகளொன்றில் அமரச் சொன்னார். 

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனாக வந்த வேலையைச் சொன்னேன். நான் வரும்போது சொல்லிக்கொண்டு வந்த அந்த காய்ந்த தென்னைகளைக் காட்டி, இதற்கு உரம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? என விசாரித்தார். இருப்பது ஒரே ஒரு உரம் என்பதால், ஆமாம் என்று எல்லா வியாதிக்கும் ஒரே மாத்திரை போல, அந்த உரம் எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என நம்ப வைத்தேன். அவரை நம்ப வைப்பதும் பெரிய காரியமும் இல்லை.

யாரையும் எளிதில் நம்பி விடும் மனிதராகவே என்னளவில் அவரைப் புரிந்துகொள்ள முடிந்தது. 

இந்த காலத்தில் ஏமாளிகளைத்தானே நல்லவர்கள் என்கிறோம். அந்த வகையில் சின்னத் தங்கம் மிகவும் நல்லவர். எங்களது உரையாடல்கள் காதில் விழுந்திருக்க வேண்டும். உள்ளிலிருந்து அவரது மனைவியும் புன்னகை மாறாத இன்முகத்துடன் எங்கள் முன் வந்து நின்றார். கையெடுத்து கும்பிட வைக்கும் தீட்சண்யமான முகம்! ஜாடிக்கேற்ற மூடி போல பார்க்க இருவரும் ஒருவருக்கொருவர் அளவெடுத்து செய்தது போயிருந்தனர். 

அந்த ஆச்சர்யம் சற்று நேரம் நீளவில்லை.. திடீரென ஒரு பன்னிரண்டு, பதினான்கு வயதிருக்கும் சிறுவனொருவன் கால்கள் நன்றாக இருந்தும், ஒரு மாதிரி இழுத்து இழுத்து நடந்தபடி, முகவாயை இரு புறங்களிலும் திருப்பிக் கொண்டு, சரியாகப் பேச்சு வராமல், தனது அம்மாவை பின்னால் வந்து கட்டிக்கொண்டான். சிரித்துக்கொண்டே என்னையும் பார்த்தான். பால் முகம் மாறாத வளர்ந்த குழந்தையவன். அவனைக் கண்டதும் தொற்றிக் கொண்ட நொடி மௌனம், அந்த சூழலை சற்று இறுக்கமாக்கியது போல் உணர்ந்தேன். 

என்னைப் போன்று ஆயிரம் பேர்களை அந்த பெற்றோர்கள் கடந்து வந்திருக்க கூடும். அவஸ்தையை விழுங்கும் மென் சிரிப்பொன்றை படரவிட்டுக் கொண்டனர். ஆனால் நான் இயல்பாக இருப்பது போன்று என்னை காட்டிக்கொள்ள முயற்சி செய்தேன். என்னவாயிற்று என்று விசாரித்தேன். இப்போது ஆட்டிசம் என்று சொல் வழக்கத்தில் இருந்தாலும், அன்றைய காலக்கட்டத்தில் விவரமில்லாதப் பிள்ளை என்றுதானே கேட்பவருக்கு அறுமுகப்படுத்துவோம். அப்படிதான் அவர்களும் தலைப்பிட்டு குறிப்பிட்டனர். 

மனதை என்னவோ செய்தது. 

தண்ணீர் கொண்டு வந்துக் கொடுத்தார்கள். தனிப்பட்ட முறையில், ஒரு உறவினர் வீட்டு பிள்ளை வழியில் எனக்கும் கொஞ்சம் ஆட்டிசம் பற்றிய புரிதல்கள் இருந்தமையால் அதை வைத்து சிறிது நேரம் உரையாடினோம். அது எங்களின் பரஸ்பரத்தை மேலும் வலுவாக்கியது. மற்றும் சில பல சோகக்கதைகளோடு நேரம் கடந்து கொண்டிருந்தது. 

தம்பி சாப்பிடுங்க!” சின்னத்தங்கம் அப்படி சொன்னதும், அந்த தருணத்தில் என்ன எதிர்வினையாற்றுவது என்பதே தெரியவில்லை. இருப்பினும் அகோர பசியிலிருந்தும் கூச்சத்தோடு அல்லது நாகரீகம் கருதி வேண்டாம் என்றேன்

இல்லை நீங்க சாப்பிட்டுத்தான் போக வேண்டும்!” என்று வற்புறுத்தவே, அவரது மனைவிகூச்சப்பட வேண்டாம் தம்பி!’ என்றவாறு ஓரத்திலிருந்து டீபாவை இழுத்துப் போட்டார். அகலமான தட்டில் வெள்ளைப்பூஞ்சோறும், கீரை சாம்பார், உருளைக்கிழங்கு பொரியல் சகிதம் கொண்டு வந்து, சாப்பிடும்படி தாய்மைக்குரிய புன்னகையைத் தவழவிட்டார். இவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்களே என்று வியந்து குறுகினேன். அவ்வப்போது அந்த சிறுவனை பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தேன். அவனும் சிரித்து சிரித்து பதிலுக்கு சிநேகிதம் பாராட்டினான்

அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளாம். சின்னத்தங்கம் தனது மகள் கல்லூரிக்கு சென்றுகொண்டிருப்பதாக சொல்லி சந்தோசப்பட்டார். அவரும் அவருடைய மனைவியும் மகனை நினைத்துதான் அதிகம் கவலை கொண்டனர். அதில்  நானும் ஊன்றிப் போய் உணர்ச்சிவசப்பட்டவனாய் எனது மற்ற மற்ற கதைகளையும் கொஞ்சம் தணிக்கை செய்து கூறலாயினேன். 

எல்லாம் சரியாகிவிடும் என நாங்களே எங்களுக்குள் ஆறுதல்களை மடைமாற்றிக் கொண்டோம். அப்படியொரு அன்யோன்யம் எங்களிடையே குடிக்கொண்டுவிட்ட பின்னரும் அவர்களிடம் வந்த வேலையைப் பற்றி பேச்செடுக்க மனமில்லை என்றாலும், அந்த நிலையிலும் கேட்டால் அவர்கள் நிச்சயம் எனக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றே தோன்றியது. 

வேண்டாம் என்று அறிவுறுத்திய மனசாட்சியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு எங்கள் நிறுவனத்தை பற்றிய பேச்சைத் துவங்கினேன். மனதிலிருந்து எழுந்து வந்த அத்தனை கெஞ்சல் குரல்களையும் மீறி பொய்யான, கவர்ச்சியான  வாக்குறுதிகளையும் பட்டியலிட்டேன். அப்படியா அப்படியா என்று கண்களை விரித்தவர் மூன்று மூட்டைகளுக்கு ஆர்டர் கொடுத்தார்! எனக்கு கைகால் ஓடவில்லை! என்னடா ஒரே நாளில் பல மாயங்கள் நிகழ்கின்றவே என என்னுடைய சாதுரியத்தை நானே பாராட்டிக் கொண்டேன். ஆனாலும் சில நொடிகளிலேயே நான் சொன்ன பொய்களும் வெற்று வாக்குறுதிகளும் நினைவிலிருந்து அகலாமல் என்னை வருத்த தொடங்கின. 

அன்றைக்கு அறையில் உறங்கும் வரை என் பேச்சுதான் ஓடிக் கொண்டிருந்தது. அதுவரை சும்மா இருந்தவன் ஒரே நாளில் நான்கு மூட்டைகளுக்கான ஆர்டரை பிடித்தது செந்திலுக்கு கூட ஆச்சர்யம்தான். இதை விட இரண்டு மூன்று மடங்கு வரை அகப்பட்டவரின் மண்டையைக் கழுவி தள்ளிவிடும் திறமைசாலிகள் (?) அங்கே இருந்தார்கள் என்றாலும் எனது தரப்பிலிருந்து இந்த சடுதி முன்னேற்றத்தை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதற்கு பிறகு தனிப்பட்ட பிரியத்தின் பேரில் ஓரிரு முறை தங்கங்களின் இடங்களுக்குச் சென்றேன். ஒவ்வொரு முறையும் அதே அன்பும் ஆதரவும் துளியும் குறையாமல் கிடைத்தது எனது குற்றவுணர்வை அதிகப்படுத்திக் கொண்டேச் சென்றது. 

சில நாட்களில் பொள்ளாச்சிக்கு இடம் பெயர்ந்துவிட்டோம். எங்கள் குழுவிலிருந்த ஒருவன், குறிப்பிட்ட நபரின் பெயரையும் இடத்தையும் சொல்லி ‘இவரைப் போய் பார் பல்க் ஆர்டர் கிடைக்கும்’ என்றான். சரி என்று கிளம்பினேன். அவரது தோட்டம் நிச்சயம் ஒரு பதினைந்து இருபது  ஏக்கர் இருக்கும்! எல்லா வகை மரங்களும் நின்றன. பார்ட்டி மிகவும் கனமானவர்தான் என்று நினைத்துக் கொண்டேன். என்னைக் கண்டதும் கொங்கு பகுதிக்கே உரிய மரியாதையோடு வரவேற்றார். 

நிறுவனத்தின் பெயரைச் சொன்னதும் அவரது முகத்தில் அதீத மலர்ச்சி. ‘உங்க கம்பெனி ஆளுங்க இந்த பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு, இப்ப யாரு உங்க மேனேஜரு?’ என்று நீண்ட நாள் பரிச்சயப்பட்டவர் போல ஒவ்வொன்றையும் விசாரித்தார். ‘உங்க ஆளுங்ககிட்ட இருந்துதான் சப்போட்டா மற்றும் எலுமிச்சை கன்னு வாங்கினேன். மொத்தமா ஒரு ரெண்டாயிரம் கன்னு வாங்கியிருப்பேன்!’ என்று அவர் மலர்ச்சி மாறாமல் சொன்னது எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவரே எட்டு மூட்டை உரம் வேண்டும், எப்போது கிடைக்கும் என சோதிக்க. திரும்பவும் எகிறி குதித்தேன்.. வானம் இடித்தது! 

பாதித்தொகை வாங்கிக்கொண்டுதான் ஆர்டர் எடுக்க வேண்டும், ஆனால் அவர் முழுத்தொகையும் டெலிவரி செய்யும்போது தருகிறேன் வாக்குறுதி கொடுத்தார். மேனேஜரிடம் ஆலோசனைக் கேட்டபோது, இப்போது பொள்ளாச்சி பக்கம்தான் டெலிவரி போய்க்கொண்டு இருக்கிறது அதனால் பிரச்சினையில்லை என்றார். 

என்ன ஆச்சர்யம் அன்றைக்கே டெலிவரியும் செய்துவிட்டிருந்தார்கள். ஆனால் அவர் சொன்னபடி பணம்தான்  கொடுக்கவில்லை. நான் திகைத்து நின்றபோது, திருப்பூர் வந்து தனது ஆபிசில் வாங்கிக்கொள்ளுமாறு கொஞ்சம் கடின வார்த்தைகளையும் சேர்த்து உபயோகிக்க தொடங்கினார். இப்போது ‘வாழ்வென்றால் போராடும் போர்க்களமே’ ஒலித்தது. 

சம்பவத்தை மேனேஜரிடம் தெரிவித்தேன். டெலிவரி செய்தாகிவிட்டது, இனி வசூலிக்க வேண்டியது உன் பொறுப்பு என்று போனை பட்டென வைத்துவிட்டார். என் காசைப் போட்டு அவர் கொடுத்த முகவரிக்கு திருப்பூர் சென்றேன். பனியன் கம்பெனியின் உரிமையாளர். காலை ஒன்பது மணியிலிருந்து ஒரு மணி வரை பார்க்க பல்லில் பச்சை தண்ணீர் கூட படாமல் வரவேற்பறையிலேயே காத்துக் கடந்தேன். அனுமதிக்கவே இல்லை! 

என்ன செய்வதென்றே தெரியாமல் கவலைகளில் விழி பிதுங்கிக் கொண்டிருந்தேன். ஏற்கனவே அந்த நிறுவனத்தில் சேர்ந்த பின்னர் பல அதிருப்திகளிலும் குற்றவுணர்களிலும் மனதளவில் உழன்றுக் கொண்டிருவன், திருப்பூரில் ஏற்பட்ட விரக்தியில் இனி அந்த வேலையை தொடர்வதில்லை என்ற முடிவையும் எடுத்தேன். ஆனால் கடைசி வரை அந்த பனியன் கம்பெனி முதலாளி வாங்கிய எட்டு மூட்டைகளுக்கான நாலாயிரத்தை கொடுக்க மறுத்துவிட்டால் எங்கிருந்து, யாரிடமிருந்து புரட்டி கணக்கை தீர்ப்பேன்? கிட்டத்தட்ட அழும் நிலைக்கு ஆளாகிவிட்டிருந்தேன். 

எல்லோரும் மதிய உணவிற்குச் சென்றுவிடவே, அதுவரை அமர்ந்திருந்தவன் எழுந்து நின்றேன். வரும்போதும் போகும்போதும் என்னை கோபமாகப் பார்த்துச் சென்றாரேத் தவிர, என்னிடம் ஒரு வார்த்தை கூட பேச வரவில்லை. நானாக கேட்டு, எதுவும் தப்பாகி விடுமோ என்று பொறுமையை நீட்டித்துக் கொண்டு முடிந்தவரை அமைதி காத்தேன். 

இரண்டு மணியளவில் என் முன் ஒரு டீ வைக்கப்பட்டது. ரிஷப்ஷனிஸ்ட் ‘குடிங்க’ என்றாள். குடித்தேன். 

ஒரு பத்து பதினைந்து நிமிடங்களில், “சாரைப் போய் பாருங்க!” என்று அவளே குரல் கொடுத்தாள். 

எந்தவித உணர்ச்சியும் காட்டாது, உட்காருங்க என்று கையால் சைகை காட்டினார். 

“உங்க கம்பெனியால் நான் ரொம்ப நட்டப்பட்டுட்டேன், ஏதேதோ பொய் சொல்லி அவ்வளவு கன்னையும் என் தலையில கட்டுனாங்க, வந்து டெலிவரி செஞ்சதோட சரி, அப்புறம் யாரும் எட்டிப் பாக்கல! உங்க மேனேஜரும் போனை எடுக்கல, நட்ட செடிங்க எல்லாம் பட்டுப்போச்சி!”

என்னடா புது சோதனை என்று நான் திகைத்துப் போய் பார்த்தேன்.

“ஸோ, நான் இதுக்கு நான் காசு தர முடியாது, காசு வேணும்னா உங்க கம்பெனி ஆளுங்கள வந்து பேச சொல்லுங்க! எனக்கு அந்த செடிங்களுக்காக செஞ்ச அத்தனை செலவுக்கும் நஷ்ட ஈடு வேணும்!” 

 “சார்..!” வாய் குழறி கெஞ்சினேன்.

“நீங்க போகலாம்!” உறுதியாக சொன்னார். 

என் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டன. டீயெல்லாம் கொடுத்து உபசரித்தார்கள். கூப்பிட்டதும் எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளே நுழைந்திருந்தேன். மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. வெளியில் வந்து மேனேஜரை தொடர்பு கொண்டபோது, ‘அதெல்லாம் முடியாது. அந்தாளு ஏதோ இஷ்டத்துக்கு கதை சொல்றான். ஒழுங்கா போன காரியத்தை முடிச்சிட்டு வர்ற வழிய பாரு இல்லேன்னா இன்னைக்கு உனக்கு ஆப்செண்ட்டுதான்!’ என என்மேல் காட்டத்தைக் காட்டினார். 

வேறு போக்கில்லாமல் தயங்கி தயங்கி மீண்டும் அவரிடம் சென்றேன். “சார் இது என்னோட கணக்கு சார், நீங்க கொடுக்காட்டி நான்தான் செட்டில் பண்ணனும்! என்னோட சம்பளமே மூவாயிரத்தி ஐநூறுதான் சார்! அதுவும் மினிமம் டார்கெட்டை முடித்தால்தான் கிடைக்கும்! இதுவரை அது கூட என்னால செய்ய முடியல! நீங்க நம்பி கொடுங்க சார்! ப்ளீஸ் சார்..! என்னோட மேனேஜர் உங்கள வந்து மீட் பண்றேனு சொல்லியிருக்கார்!” என்று வேறு வழியில்லாமல் பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சி செய்தேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. சொன்னதை நம்பியும் நம்பாமலும் காசை எடுத்துக் கொடுத்தார். 

“தம்பி.. உங்க மேனேஜர் வந்து பாக்கல, அப்புறம் உங்க ஆளுங்க இந்த ஏரியா பக்கமே வர முடியாது! இதெல்லாம் என்ன பொழப்பு? உண்மையா உழைச்சு சாப்பிட பாருங்க!” என்று எச்சரித்து அனுப்பினார். அவரது கடைசி வார்த்தைகள் என்னை வருத்தினாலும் அந்த நிமிடம் ‘அப்பாடா!’ என்றிருந்தது!

அடுத்து தாராபுரத்தில் முகாமிட்டோம். மற்ற லாட்ஜ்களை போலில்லாமல் நல்ல பிரம்மாண்டமாக இருந்தது, எங்கள் தங்குமிடம். கொஞ்ச தூரத்திலேயே ஒரு ஹோட்டல், அங்கே அக்கவுண்ட் வைத்து இஷ்டம் போல சாப்பிட்டோம். அப்போது மாதம் முடிய இன்னும் ஒரு வாரமே மிச்சமிருந்தது, ஆனால் அதுவரை பன்னிரெண்டு ஆர்டரே பிடித்திருக்கிறேன். இன்னும் மூன்று இருக்கிறதே என்ற போராட்டம் மனதை அழுத்திக் கொண்டிருந்தாலும், திரும்ப திரும்ப பொய்கள் சொல்வது பிடிக்காமல்.. ஒரு குறிக்கோளும் இல்லாமல்  வெறுமினே காடு காடாக திரிந்தலைந்துக் கொண்டிருந்தேன். 

அப்படியே நான்கு நாட்கள் சென்றுவிட்டிருந்தன. மனசு மிகவும் பாரமாக இருந்தது, சின்னத்தங்கத்திடம் பேச வேண்டும் போலிருந்தது. பூத்திலிருந்து போன் செய்து பேசினேன். என் குரல் கேட்டு, இன்ப அதிர்ச்சி கொண்டவராக வழக்கமான பரிவுடன் பேசலானார், தன்னுடைய மனைவியையும் பேச வைத்தார். மீண்டும் அவர்கள் காட்டிய அன்பில், ஒரு புறம் அளவில்லா ஆனந்தமும் மறுபுறம் குற்றவுணர்வும் எழுந்து அடங்கியது.

வேலையெல்லாம் எப்படி போகிறது, எங்களுக்கு எப்போது டெலிவரி வரும் தம்பி?” என்றார். பேச்சினூடாக டார்கெட்டை முடிக்க முடியாத எனது நிலைமையையும் சேர்த்துச் சொன்னேன். ஒரு கணம் யோசித்தவர்

நீங்க கடைசியா பேசிட்டு போனப்புறம் அண்ணன் கூட உங்க மேல ரொம்ப அக்கறை எடுத்து பேசினார், பாவம் அந்த பையன்கிட்ட ஒரே ஒரு மூட்டைதான் வாங்கினேன், உன்னை போல இன்னும் ரெண்டு வாங்கியிருக்கலாம் என்றார்!” என்றார்.

நீங்க ஒண்ணு பண்ணுங்களேன்.. இன்னும் ரெண்டு மூட்டை அண்ணனுக்கும், ஒரு மூட்டை எனக்கும் சேர்த்து கொடுத்துடுங்களேன்!” 

இப்படியும் கூட மனிதர்கள் இருப்பார்களா என அவர்களது பரந்த அக்கறையின் முன் நான் வாயடைத்து நின்றேன்!

நீங்க சொன்னபடி தென்னைமரமெல்லாம் சரியாயி வந்திரும்ல! உங்க மேல நம்பிக்கை வச்சுதான் திரும்ப திரும்ப வாங்குறேன் தம்பி! வரலேன்னா கூட பரவால்ல தம்பி! எத்தனையோ போட்டு பாத்துட்டேன் அதுல இது ஒண்ணுனு நெனச்சிக்கிறேன்!” 

எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை! தேள் கொட்டாமலே அவஸ்தைக்குள்ளான திருடனைப் போல மருகினேன். 

ஆனாலும் மீண்டும் பொய் சொன்னேன், “கண்டிப்பா சரியாயிடும் சார்! நம்ம கம்பெனி ஆளுங்க மாசத்துக்கு ஒரு முறை வந்து செக் பண்ணுவாங்க! கவலைப்படாதீங்க!” அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் நடக்க போவதில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால் விளம்பரத்திற்காக கையேட்டில் குறிப்பிட்டிருந்தார்கள். அதெல்லாம் பெரிய பெரிய ஆர்டருக்குத்தான் என்று முதல் நாளே என்னிடம் விளக்கியிருந்தாலும் ஆர்டரைப் பிடிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. மேலும் அந்த பனியன் கம்பெனிக்காரர் கூட பெரிய அளவில்தான் கன்றுகளை வாங்கி குவித்திருக்கிறார். அவரையும் அப்படியே விட்டுவிட்டது வியப்பாகவே இருந்தது. 

“நீங்க சொன்னா சரி! நம்புறேன்!” என்று சின்னத்தங்கம் போனை வைத்துவிட்டார். 

ஆர்டர் எல்லாம் கவராகி விட்டதையடுத்து, சேலம் ஆபிஸிற்கு புறப்பட்டோம். மாதத்திற்கு ஒரு முறை மீட்டிங் நடக்கும். அங்கேதான் சம்பளமும் தருவார்கள்! அங்கேதான் பாலாவையும் பார்க்க முடியும், பார்த்தால் ‘த்தூ..!’வென காறி துப்ப தோன்றியது. 

கடைசியில் மற்றுமொரு கூத்தும் கூட நடந்தது. தங்கியிருந்த லாட்ஜிக்கும், சாப்பிட்ட ஓட்டலுக்கு கூட செட்டில் செய்யாது, தப்பித்து ஓடிவிட நம்ம தலைவன் செந்தில் பக்காவாக வியூகம் செய்து அதில் வெற்றியும் கண்டான். விடிந்தும் விடியாததொரு காலையில் திருடர்களைப் போல அங்கிருந்து பதுங்கி வெளியேறினோம்! அந்த ஒரு மாதத்தில்தான் எத்தனை எத்தனை குற்றங்கள், தர்ம சங்கடங்கள், சோதனைகள், நாடகங்கள் என சலித்து கொண்டேன். 

சேலத்திற்கு வந்தவுடன் வேலையை ராஜினாமா செய்தேன். என் செலவுகள் பிடித்தம் போக ஒரு ஆயிரம் ருபாய் மிஞ்சியது. ஆமாம் இடையில் நிறைய விரயங்கள்..! செந்திலோடு சேர்ந்து கொண்டு சாப்பாடு, சினிமா என இஷ்டம் போல செய்தாகிவிட்டது! பாலாவைத் தேடினேன். நிலைமையை புரிந்து கொண்டவனாய் ‘ஸாரி’ சொன்னான். அவனும் விலகவிருப்பதாக கூறினான். ஆனால் நான் ‘த்தூ’ என்று துப்பவில்லை. 

ஊருக்குச் செல்லப் பிடிக்காமல், அங்கிருந்தே சென்னைக்கு புறப்பட்டேன். சொன்னபடி உர மூட்டைகள் ‘தங்கங்களின்’ தோட்டங்களுக்கு சென்றதா இல்லையா என எதுவும் தெரியவில்லை, அறிந்து கொள்ளும் முயற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை. வகுப்பு நண்பர்களை கண்ட மகிழ்ச்சியிலும் ஊர்ச்சுற்றலிலும் எந்த கவலைகளும் என்னை அதிகம் யோசிக்க வைக்கவில்லை. நன்றி மறந்துவிடும் இந்த மனம்தான் எவ்வளவு அற்பமானது! 

கொஞ்ச நாளில் நண்பர்களின் உதவியோடு குஜராத்திலிருக்கும் ஒரு ஃபார்மா கம்பெனி ஒன்றில் வேலைக் கிடைத்தது. அடுத்த வேலை, அடுத்த வேலை என்று அப்படியேக் கழிந்துவிட்டன கிட்டத்தட்ட இருபது வருடங்கள்! 

இடைப்பட்ட காலத்தில் மற்றவர்களால் கிடைத்த அனுபவங்களை விட தங்கம் சகோதர்கள் மூலம் ஏற்பட்ட பிணைப்பு தனித்துவம் வாய்ந்தவை. நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் இதயத்தை வதைப்பவை. என் முகத்திற்காக அவர்கள் செலவு செய்தது சொற்பமோ கூடுதலோ ஆனால் அந்த நேரத்தில் என் மீது வைத்திருந்த அபிமானம், காட்டிய அக்கறை என்றைக்குமே விலைமதிப்பற்றவை!

குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து விலகி வந்த ஆரம்ப நாட்களில், அவர்களை ஏமாற்றிவிட்டதை போன்றதொரு குற்றவுணர்வு என்னைத் தொடர்ந்து பீடித்துக் கொண்டேயிருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த நினைவுகள் ஓய்ந்து.. தேய்ந்து.. மறைந்து.. எப்பவாது.. ஒரு மின்னல் கீற்று போல தோன்றி நெஞ்சைப் பிளப்பதுண்டு. இன்று நிகழ்ந்தது போல. அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை விட அதிகம் என் குற்றத்தை நினைத்து வருந்திவிட்டேனோ என தெரியவில்லை. குற்றத்தின் தீவிரத்தையும் முழுமையாக நான் அறியேன். எப்படியிருப்பினும் மன்னிப்புக் கோர வேண்டும். அது எனது நெடுநாள் தவிப்பு. இப்போதும் விருப்பப்படுகிறேன். தேடிச் செல்ல வேண்டும். அவர்களை சந்திக்க வேண்டும். எப்போது என்றுதான் தெரியவில்லை! 

 

***


 

எழுதியவர்

இத்ரீஸ் யாக்கூப்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப்.. நுண்ணுயிரியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்று; தற்சமயம் ஐக்கிய அரபு நாடுகள் என அழைக்கப்பெறும் அமீரகத்தில் பணி நிமித்தமாக வசித்து வருகிறார். ஓவியங்கள் வரைவதில் ஆர்வமுள்ள இவர் கவிதைகள், கதைகளும் எழுதி வருகிறார். இவரின் முதல் நாவலான 'ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்' கோதை பதிப்பகம் மூலம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் கீற்று, சொல்வனம் மற்றும் வாசகசாலை போன்ற இணைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x