ஊரே பரம்பரையார் வீட்டின் முன் மொய்த்துக் கிடந்தது. ஊருக்குள் தண்டோரா போட்டு மிச்சம் மீதி இருந்த சனங்களையும் பரம்பரையார் வீட்டுக்குப் பத்தி விட்டார் தண்டோராக்காரர்…
வைத்தியர் கெடு கொடுத்துவிட்டார் நாளையோ, நாளை மறுநாளோ போவது நிச்சயம் என்று சொல்லிவிட்டார்.
சரி, வா போவோம் போயி ஓரெட்டு மூஞ்சிய பாத்துட்டு வந்துருவோம், என ஊர்க் காரர்கள் பரம்பரையார் ராமையா வீட்டிற்கு படையெடுத்தார்கள்.
வீட்டின் வாசலுக்கு முன்னே கயிற்றுக் கட்டிலில் கிடத்தி இருந்தார்கள். கொச்சைக் கயிறு கட்டில், முதுகெல்லாம் குத்தாத வண்ணம் நான்கைந்து போர்வையை மேலே விரித்து, இரண்டு தலகாணியை வைத்து தலையைச் சிறிது தூக்கி இருக்குமாறு படுக்க வைத்திருந்தார்கள்.
ராமையாவைச் சுற்றி அவரின் ஒன்று விட்ட உறவினர்கள், அம்மா வழிச் சொந்தத்திலும், அப்பா வழிச் சொந்தத்திலும், அவரின் வயதை ஒத்த ஆட்கள் இருந்தனர். சில இளசுகளும் கூடவே…
ராமையாவிற்கு ஒரே மகன் தான். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மேல் படிப்புக்கு வெளிநாட்டுக்குப் போனான். அவரது மனைவி மகன் சின்னவனாக இருக்கும்போதே இறந்து விட்டார். அவர் மகனுக்கும் கல்யாணம் ஆகி அவனுக்கொரு மகன் ஒருவன் இருக்கிறான். அப்பப்போ ஊருக்கு வந்து போவான். கடைசி முறை வந்த போது ஏதோ ஒரு மனஸ்தாபம். கிட்டத்தட்ட அவன் வந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்டது.
ராமையாவின் கால் மாட்டில் பல்லு போன, போகாத கிழவிகள் எல்லாம் ஒருவரது தண்டட்டி இன்னொருவரது தண்டட்டியுடன் முட்டி மோதும் அளவிற்கு கட்டி அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
கூட்டத்தில் ஒருவர், “அவர் மகனுக்குத் தகவல் குடுத்தாச்சாயா ?”
“மாணிக்கத்த டவுனுக்கு அனுப்பி விட்ருக்கோம். போடி பஸ்டாண்டு பக்கத்துல இருக்க ‘ராசியப்பே எஸ் ட டி பூத்’ துலதே மகனுக்கு போன் பண்ணுவாராம். வீட்டையே ராவிட்டோம். அவெம் போன் நம்பரு கெடைக்கல. ராமையா கிட்ட கேட்டு பார்த்தேன் அசையவே இல்ல மனுசே பெக்கே பெக்கேன்னு முழிக்கிறாரு பேச வாய் வல்ல. இது ஆகாதுரா சாமின்னு போடிக்கு மாணிக்கத்தை கிளப்பி விட்டுட்டேன்”
“சரி மகே வருவானா ?”
மூக்கை சிந்திக் கொண்டே ராமையாவின் ஒன்றுவிட்ட தங்கச்சி பேசினாள்…”வருவயா, வராம எங்க போயிரப் போரயான்.? அடிக்கொரு விசை பார்த்துட்டு போனவெந்தான, என்ன ப்ரச்சனையோ?
நாலஞ்சு வருஷமா ஆளையுங் காணோ பேரயுங் காணோ. ஆனா கண்டிப்பா வருவயா.அம்மா இல்லாம அப்பெ ஜீவனத்துலயே வளந்த பயே இல்லையா, தாய்க்கி தாயா, தகப்பனுக்கு தகப்பனா வேற தொண தேடாம ஒத்தையாலா பாத்துக்கிட்ட மனுசன, கடைசி காலத்துல வந்து பாக்காம இருப்பாங்களா?
அப்புடியும் எவனாச்சும் இருந்தயான்னா அவென்லா புழுப் புழுத்துத்தேஞ் சாவயாம்”
“என்ன பேச்சு இது .விடு கண்டதையும் நெனைக்காத.” என அவரது புருஷன் சமாதானப்படுத்தினார்.
“மருமகனுக்கு தகவல் போயிருச்சு. அடுத்த வண்டியிலயே கிளம்பி வந்துற்றேன்னு சொல்லிட்டாராம்.இப்பதான் மாணிக்கம் வந்து சொன்னான்…” வாயில் வேப்பங்குச்சியை அதக்கிக் கொண்டு, கைலியை ஏத்திக் கட்டிக்கொண்டே “வனராசா” கூட்டத்தின் அருகே வந்தார்.
“காலையில இருந்து கெழவிக ஒப்பாரி வச்சுக்கிட்டு கெடக்குங்க அஞ்சாறு காபித் தண்ணிய போட்டு வாயில ஊத்தி விடுங்க தெம்ப்பாய்க்கட்டும்.
இல்லேன்னா அதுகளும் கூடவே போயிறப் போதுங்க, சனிக் கெழம வேற. கி கி கி கி கி…….”
“ஏம் மாமா, ஒவாய்ல நல்ல வாத்தயே வராதா? கொஞ்சமாச்சும் கூறு வாட்டோட பேசு.”
“அட போ மய்னி, அவரு சின்னதுலயும் சேத்தியில்ல பெரியதுலயும் சேத்தியில்ல.”
“உங்க ரெண்டு பேரு வாய்க்கும் இப்ப நாஞ் சிக்கிட்டனா, மெண்டு துப்பாம விட மாட்டிங்களே…”
கட்டிலின் அருகில் இருந்த கை ஒன்றை ராமையா கை தட்டியது.
“ஏய்…..ஏய்….. சத்தத்த கொற…..சத்தத்த கொற….. ஐயோ ஏதோ சொல்ல வாராப்..ல தெரியுது…”
சுற்றி இருந்த அத்தனை முகங்களும் கட்டிலைச் சூழ்ந்து விட்டது.”கொஞ்சமாச்சும் காத்து விடுங்கப்பா. மூச்சு கீச்சு முட்டிரப் போகுது”என கட்டிலுக்கு அப்பால் இருந்து ஒரு குரல், சில முகங்கள் பின் வாங்கியது.
ராமையா தன் உடலை மெல்ல மேலே உயர்த்தும்படி சைகை காட்டினார். இரண்டு கைகள் அவரை தூக்கியது, அவர் தலை தலகாணிக்குப் பின்னே போனது முதுகைத் தலகாணியில் அண்டக் கொடுத்து மெல்ல நிமிர்ந்தார்.
பேச முயற்சித்தும் பேச்சு வரவில்லை மாறாக “ஸ்….ஸ்….ஸ்….ஸ்” என்ற சிறு மூச்சுதான்.
இரண்டு கைகளையும் ஒன்றிணைத்துச் சரியாகச் சொன்னால் தண்ணீரை ஏந்தும் கைகள் எப்படி இருக்குமோ அதுபோல கைகளை வைத்தார்…நேரே மூஞ்சியைத் தொட்டுக்காட்டி கைகளை மறுபடியும் அப்படிச் செய்தார்.
“அட, கண்ணாடி கேக்குறாரப்பா…”
அவரின் முகம் தெரியுமாறு கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டது. கண்ணாடியைப் பார்த்ததும் அவரின் கண்கள் விரிந்தன.
சுள்ளென அடித்த சூரிய ஒளி, நேற்றைய மழையில் இன்றைய புல்லாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய், முளைத்திருக்கும் அந்த மயிர்களை ஏந்திய மண்டையில் பட்டுத்தெரித்தது”. சூரியக் கதிர்கள் தன் வழுக்கையில் விழுந்து தன் மண்டை மினுமினுப்பதை பார்த்தார். அதைப் பார்க்கப் பார்க்க அவர் நினைவுகள் பின்னோக்கிப் போனது.
தன் தோள்த் துண்டால் உருமா கட்டி தன் சொட்டையை மறைக்க ராமையா என்றும் விரும்பியதில்லை. மண்டையில் மயிர் நன்றாய் செழித்தோங்கிய காலந்தொட்டே ; அவர் காதுகளில் ஒரு ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும். ராமையா சிறுபிள்ளையாக இருக்கும்போதே அவரது பாட்டி அவருக்கு ஒரு விஷயத்தை நன்றாக மூளையில் பதிய வைத்து விட்டார்.
ஊர்ச் சிறுசுகள், பெருசுகள், நடுவட்டம் என அனைவருமே முடியை ஒட்ட வெட்டிக் கொண்டு வருவார்கள். அடுத்து மூனு மாசத்துக்கு அப்பறந்தே வெட்டப் போகணும் என்ற கணக்கில். ஆனால், ராமையா வீட்டில் அந்தப் பழக்கமே கிடையாது. ஊரே அப்படி இருக்க உனக்கு புடிச்ச மாரி வெட்டிக்க என்று சுதந்திரம் அளித்திருந்தார்கள். அவனும் படங்களில் வரும் கதாநாயகனைப் போல வெட்டி விடுங்கள் என்பான். கடைசியில் அது ஏதோ வாக்கில் தான் இருக்கும்.
“என்னண்ணே இப்படி வெட்டிருக்கீங்க?”
“இதுதாண்டா ஒம் மண்டைக்கி சரிய்யா இருக்கும். இந்தப் பக்கம் இன்னிங் கொஞ்சோ எடுத்துட்டோம்னா மொழுக்குன்னு இருக்கும் பாக்குறதுக்கு, அதேங் கொஞ்சூண்டு வச்சிருக்கே… ”
முனகிக் கொண்டே நடப்பான். ஆனால், சிறுசுகள் எல்லாம் அவனை உத்து உத்துப் பார்க்கும். ‘நாமெல்லாம் மொட்ட அடிச்சு, பத்து நாள் கழிச்சு மொளச்ச மயிர் கணக்கா வெட்டிட்டு வாரோம், ராமையா மட்டும் இந்தமானிக்க வெட்டிட்டு வாரானே. அவங்க அப்பே அவன ஒன்னுஞ் சொல்றது இல்ல .ஆனா நம்ம அப்புடி வெட்டிட்டு வீடு வந்தோம்னா பொடனில நாலு போடு போட்டு ரெண்டாவது விசையும் கூட்டிட்டு போய் இருக்க கொஞ்சத்தையும் வெட்ட சொல்லி வெட்டுனவனுக்கும் நாலு ஏறு குடுக்குறாங்களே’ என்று புலம்புவார்கள். பெருசுகளோ ‘அவங்களுக்கென்னப்பா அவங்க வச்சுருக்க சொத்துக்கு தெனைக்கிங் கூட வெட்டுவாங்க. பரம்பரையார் குடும்பம்னா சும்மாவா’
ராமையா கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் அவன் அப்பத்தா சொல்வார். “மண்டையில இருக்கும் போதே அதத் தொட்டுத் தடவி அலங்கரிசிக்க, போன பிற்பாடு பொங்கி அழுதாக் கூட ப்ரோசனமில்ல” என்று சிறு வயதில் வாய்ப்பாடாச் சொல்லுவார்.
தவழும் பருவத்திலும், நடைபழகிய பருவத்திலும், அது புரிந்திருக்கவில்லை. அப்பத்தா வாய் அசைகிறதே என்று பார்ப்பார். ராமையாவின் கால்கள் ஓட ஆரம்பித்த பிறகும், ஊரே தனது முடிவெட்டை உற்றுப் பார்க்கும் போதும் அப்பத்தாவிடம் கேட்டார்.
“ஏன் அப்புடிச் சொல்ற ?”
“எப்புடி ?”
“எப்போ பாரு, நாங் கண்ணாடி பாக்கும் போதெல்லா; எம் முடிய பத்தியே பேசுறியே அதத்தாங் கேக்குறே ?”
கிழவிக்குச் சிரிப்பு கொப்பளித்துக் கொண்டு வந்தது…
“சொல்லு அப்பத்தா எதுக்கு அப்படிங்கிற ?”
“ங்கொப்பே மண்டய பாத்துருக்கியா ?”
“பாத்துருக்கே…”
“உந் தாத்தே மண்டய?”
“பாத்துருக்கே…”
“இன்னுமா அப்பத்தா சொல்றது ஒனக்கு புரியல ?”
தலையை சொரிந்தான்…
“அழுத்தி சொரியாதடா தானா போகப்போறத அழுத்தி சொரிஞ்சு நீயே வெரசா போக வெக்காத…”
மழங்க முழித்தான்…
“சொட்ட விழுந்துரும்டா அதுக்குத்தே அப்பத்தா சொல்றே இருக்கும்போதே தொட்டுத் தடவி அலங்கரிச்சுக்கன்னு”.
“எனக்குலா விழுகாதுப்பா. எனக்கு நல்லா கொத்து கொத்தா முடி இருக்கு எனக்கெல்லாஞ் சொட்ட விழுகாது அப்புடி விழுந்தாலும் நான் கெழவனானதுக்கு அப்பறந்தான விழுகும் பரவால்ல… ”
“அட கேனப் பய மகனே… நம்ம வீட்ட ஊருல எல்லாரும் எப்புட்றா கூப்புடுறாங்க ?”
“பரம்பரையார் வீடுன்னு…”
“ஏங் கூப்புட்றாங்கன்னு தெரியுமா ?”
வலது கை அனிச்சையாய் மண்டையைச் சொறிந்தது. அவன் கையை தட்டி விட்டு “சொரியாதடாங்கிறே மறுபடியும் கைய அங்கனயே கொண்டு போற…”
“சரி சொல்லு. எதுக்கு அப்டி சொல்றாங்க எல்லாரும்?”
சைகையிலேயே இரு இரு என்று விட்டு, வாயில் இவ்வளவு நேரம் மென்று கொண்டிருந்த வெற்றிலையை புளிச்சென வெளியில் துப்பி விட்டு… “நம்ம குடும்பத்துக்கு பரம்பர சொட்ட டா”
“பரம்பரச் சொட்டையா ?”
“ஒங்க அப்பே, அவங்க அப்பே, உங்க தாத்தனோட அப்பே, இப்டி வழி வழியா எல்லாருக்கும் சொட்ட இருந்துச்சு. ங்கொப்பன பாரு இப்பயே மண்ட ஏற ஆரமபிச்சுருச்சு இன்னிங் கொஞ்ச வருசோ அதுவுங் காணாம போய்ரும்.
அதுக்குத்தே பரம்பரையார் குடும்பம்னு நம்மள சொல்ல ஆரம்பிச்சது. பல தல மொறையா இப்புடியே சொல்லிட்டு வாரனுங்க… அப்பறம் காலப் போக்குல பேரு வந்த கதையெல்லாம் ஊரு மறந்து போச்சு. அதயே பெரும மயிரா நம்ம குடும்பமும் நெனச்சுக்கிச்சு. ஆனா இந்தப் பேரோட உண்மக் கத நமக்கு மட்டுந்தே தெரியும். அதுக்குத்தே அப்பத்தா சொல்றே இருக்கும் போதே..”
“தொட்டுத் தடவி அலங்கரிச்சுக்கணும்” அதானே…
“அதே தான்டா ராசா… என அவனை தன் பக்கமாக இழுத்து தலைக்கு “கரப்பயாந்தலை” போட்டு காய்ச்சிய எண்ணெயை தடவி விட்டார் அப்பத்தா.”
தன் அப்பத்தா தனக்கு சொன்னதை ராமையா தன் மகனுக்கும் மனப்பாடமாய் பதியும்படி சொல்லி இருந்தார். எனக்கு எப்புடியும் போயிட்டுப் போது, எம் மகே மண்டைல இந்த முடி நெலச்சு நிக்கணும்டா ஆண்டவான்னு அவர் பண்ணாததே இல்லை…எதுவெல்லாம் தலை முடியை வலுப்படுத்தும் என அறிந்தாரோ அதனைத்தையும் தேடி கொம்பு தூக்கி, குரங்கனி, மரக்காமலை, பக்கம் இருக்கும் காடுகளுக்குள் இறங்கி விடுவார்.
கிடைத்ததை எல்லாம் வைத்து அவரே எண்ணெய் காச்சுவார். அதைத் தன் மகன் தலையில் தொட்டுத் தடவி அலங்கரிப்பார். எனக்கு இருந்த அந்தப் பரம்பர சொட்ட அது என்னோட போகட்டும்.அவனுக்கு வந்துரக் குடாது என்று தீர்க்கமாக அனைத்தையும் செய்தார்.
அவனைப் பார்த்து வருடங்கள் சில ஆகிவிட்டது. கடைசியாக அவன் வந்தபோது அவனுக்குச் சரியாக முப்பத்து ஐந்து இருக்கும். அப்போது தலையில் முடி கொச்சை கயித்தை போல பின்னிப் பிணைந்து இறுகிக் கிடந்தது. ராமையாவிற்கோ அதைப் பார்ப்பதற்குக் கொள்ளப் பிரியம்… தனக்கு முப்பத்தி ரெண்டில் விழ ஆரம்பித்தது, மகனுக்கு முப்பத்தி ஐந்து ஆகியும் வாளிப்பு குறையவில்லை.
அவனுக்கு முடி நன்றாக இருக்க வேண்டும் என்று மலைக் கோயில் பரமசிவனை வேண்டாத நாளில்லை, நினைக்காத நொடியில்லை…எம்பெருமானே ஈஸ்வரா, கை கால் சொகத்தோட அவெ முடியையும் சேத்து காப்பாத்துரா என் அப்பனே என வேண்டிக் கொள்வார்.
மலை என்னும் பெருந்திரையை விலக்கி விட்டு கதிரவன் தன் கதிர்களை மறுபடி ராமையா தலையில் வீசினான்.அவரின் பின்னோக்கிய எண்ண அலைகளில் ஒரு நாளே மறைந்து போனது.
ப்ளசர் காரின் சத்தம் முட்டி மோதும் தண்டட்டிகளுக்குச் சிறிது இடைவேளை விட்டது.
காரில் இருந்து ராமையாவின் மகன், மருமகள், பேரன் மூவரும் இறங்கினர். ராமையா இருந்த கட்டிலை நோக்கி அவர்களது கால்கள் நகர்ந்தது.
தலகாணியை விட்டு இன்னும் சற்று நிமிர்ந்து உட்கார்ந்த ராமையாவின் கண்கள் நிலை கொள்ளவில்லை. போகிற காலம் வந்துருச்சு மகன கண் குளுற அந்தக் கொத்து முடியோட பாத்திட்டு போயிரனும் என்கிற பிரயாசை.
மழைக்காலத்தின் விடா மழையில் தரை எங்கும் மண் தெரியாத அளவில் முளைத்திருக்கும் புற்களைப் போலத் தலையில் தோல் தெரியாத அளவிற்கு மயிர் செழித்தோங்கி இருந்தது மகனுக்கு.
ராமையாவின் கண்கள் சிரித்தது, ஆனந்தப்பட்டது!
மூவருமே அருகில் சென்று அமர்ந்தார்கள். மகனை கண் நிறையப் பார்த்தார், அவன் கண்களும் கலங்கிவிட்டது. இன்னும் கொஞ்சம் நிமிர்ந்தார். அவன் முகங்களைத் தொட்டுத் தடவினார். தலை முடியைத் தடவிக் கொண்டே அவன் காதுகளில் இருக்கும் போதே “தொட்டுத் தடவி அலங்கரிசிக்க” என்று முடிக்க..
அவன் தலையில் இருந்த விக் கையோடு வந்தது… அவர் மூச்சு காற்றோடு போனது.
தண்டட்டிகள் மறுபடி முட்டி மோதிக்கொண்டன.
எழுதியவர்
இதுவரை.