15 January 2025
lsks23

ஜென்னில் தன்னுடைய கைப்பேசி அழைப்பை ஏற்காமல் இருந்தது மீனாவுக்குப் பதற்றத்தைக் கொடுத்தது. சாயங்காலம் ஐந்தரை மணி இருக்கும். ஜென்னில் வண்டியோட்டிக் கொண்டிருக்கும் போது எந்த அழைப்பையும் அவர் எடுக்காமல் இருப்பதை மீனா பார்த்திருக்கிறாள். அலுவலகத்தில் நான்கு மணியிலிருந்து ஒவ்வொருவராகக் கிளம்பிச் சென்று தற்போது அந்தப் பெரிய கூடம் முழுக்க யாருமே இல்லாமல் பிரேத அமைதியுடன் இருந்தது. மாலை வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லியிருந்ததால் வேறு ஏற்பாடும் செய்யவில்லை. பிற வாகனச் சேவைகளும் அவர்கள் அலுவலகம் இருக்குமிடம் வருவது அரிது. தன்னுடைய பணி நாற்காலியிலிருந்து நிமிர்ந்து பார்த்தாள் மீனா. தொலைவில் சுஜோய் மட்டும் பணியில் இருப்பது தெரிந்தது. சற்றே நிம்மதியோடு கொஞ்ச நேரம் பணியில் மூழ்கினாள். இன்று கொஞ்சம் வேலையிருக்கிறது ஐந்திலிருந்து ஐந்தரைக்குள் வாங்க என்று காலையில் ஜென்னிலிடம் சொன்னது தவறாகப் போய்விட்டது. இன்று காலையிலும் சரி நேற்று மாலையிலும் சரி சொன்ன நேரத்துக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே வந்து காத்திருந்தார் ஜென்னில். தான் எப்போதும் பயனாளர்களை அழைக்க ஐந்து பத்து நிமிடம் முன்னரே சென்று விடுவேன் என்று அவர் சொல்லியது நினைவுக்கு வந்தது. இப்போது என்ன ஆயிற்றோ தெரியவில்லை. வெயில் முகத்தை வருட நிமிர்ந்து பார்த்தாள் மீனா.

அலுவலகம் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனமென்பதால் ஊருக்கு வெளியே மக்கள் வசிக்குமிடம் தாண்டியிருந்தது. அங்கிருந்து பேருந்தோ பொதுமக்கள் பயணிக்கும் வாகனங்கள் எதுவுமே தென்படவில்லை. ஒரு ஏரியும், பல மரங்கள் அடர்ந்த சோலை மட்டுமே துணைக்கு உண்டு. அந்த ஏரியும் இப்போது உறைந்து எந்தச் சலனமுமின்றிக் கிடந்தது. மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து நிர்வாணமாக நின்றுகொண்டிருந்தன. அவை, பார்ப்பதற்கு வான் நோக்கி வரையப்பட்ட முப்பரிமாணக் கோட்டோவியம் போல இருந்தன. அதில் அவ்வப்போது பொழிந்த பனி அலங்கரித்துக் கொண்டிருந்தது. இலைச் சலனமும் அற்ற யோக தியானத்தில் அவையிருந்தன. பசும்புல் தரைகள் எல்லாமே பனிப் பொழிவை எதிர்த்து தங்கள் பசுமையைத் துறந்திருந்தன. வசந்த காலம் தொடங்கி விட்டாலும் பனிப் பொழிவு இன்னும் தொடர்கிறது. சூழலில் வெப்ப தட்பம் இன்னும் ஏறவில்லை. வெளியில் நடமாடும் மனிதர் எல்லாம் தங்கள் அடையாளத்தை, தடித்த கம்பளி ஆடைகள் கொண்டு மறைத்திருந்தனர். பல வருடங்களாகப் பழகியவர் அருகில் நடந்தால் கூட அன்னியரோ என்ற பயத்தை இவ்விடம் வரவழைக்கும் அளவுக்குத் தடித்த ஆடைகளில் அராஜகம் தொடர்ந்தது.

பணி நிமித்தம் வெயிலே பிரதானமான பிரதேசத்திலிருந்து களாமஷு வந்திறங்கிய மீனாவுக்கு முதல்நாள் பனிப் பொழிவு கொண்டாட்டத்தைக் கொடுத்தது. அறையிலிருந்து ஜன்னல் வழியாக அதைக் கண்டு களித்தவள் ஆவல் தாங்காமல் கீழே இறங்கி கண்ணாடிக் கதவுகளைத் திறந்து வெளியே செல்ல முயற்சி செய்தது தான் அந்த நிலத்துக்கு அவ்வளவு கோபத்தைக் கொடுத்திருக்க வேண்டும். ஆவேசமாகக் குளிர் காற்றை அவள் மீது அறைந்தது. முகம் குளிரில் கன்றிக் கருத்தது. தடித்த கம்பளி ஆடைகளை அறையிலேயே விட்டிருந்தவளின் தொடைகள் நடுக்கத் தொடங்கின. ஆனாலும் அந்தப் பனிப்பொழிவின் மீதிருந்த தாகம் அவளைத் தள்ள, வெளியில் சில நொடிகளே சென்றிருப்பாள், குளிர் அவளைத் தொற்றிக் கொண்டது. அந்த நொடியிலிருந்து மூக்கு வழிய ஆரம்பித்து,. கடும்குளிர் ஜுரம் தொற்றிக் கொண்டது. அது வார இறுதி ஆகையால் இரண்டு நாட்கள் இளம் முயலைத் தொடும் போது கிடைக்கும் மெத்தென்ற உணர்வைக் கொடுக்கும் தடித்த மெத்தையுள் புதைந்து தடித்த கம்பளிக்குள் சுருண்டு கிடந்தாள். அறையின் தனிமையும் ஜுரத்தின் சோர்வும் எழவிடவில்லை. நல்லவேளை அதிகம் பசியும் எடுக்கவில்லை. சாப்பிடாமலே இருந்தால் எப்படி என்று வீட்டுக்கு அழைத்த போது, திட்டு விழுந்த போது மயங்கி விழுந்தபடி அரிசிக் கஞ்சி வைத்துக் குடித்தாள். ஜன்னலிலிருந்து பனிப்பொழிவை வெறுப்போடு பார்த்தாள்.

அந்த வார இறுதியை அடுத்து வந்த திங்களன்று சரியாகக் காலை எட்டு மணிக்கு மீனாவின் மேலாளர் ஸ்டேஃபினே வந்து அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றாள். அப்படி அழைத்துச் செல்ல வருவேன் என்பதை மேலாளரே திட்டமிட்டு, பயணம் தொடங்கும் முன்னரே சொல்லி வைத்திருந்தாள். அந்தத் திங்களை மீனா காலை சூரியன் தனது சிவந்த வானத்தின் அடியிலிருந்து மெல்ல எட்டிப் பார்க்கும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தபடி வரவேற்றாள். பெருந்தொற்றுக் காலம் முடிந்தாலும், தனது ஜலதோஷம் பிறரைப் பாதிக்க வேண்டாமென்று முகக் கவசம் அணிந்திருந்தாள். அது அவளது மூச்சுக் காற்றைக் கண் கண்ணாடி மேல் பனிப்புகை போலப் படரச் செய்து அசௌகரியப்படுத்தியது. பெங்களூரில் முகக்கவசம் அணிவதில் இத்தனை சிக்கல் இல்லை. பனிப் பிரதேசம் வந்திறங்கிய இரண்டே நாளில் அவளுக்குப் பிடிக்காமல் போனது. ஊரும் வறண்டு கிடந்தது. இன்னும் இலையுதிர் காலத்திலிருந்து அந்த நிலம் மீளவில்லை.

அலுவலகம் செல்லும் வரை அவள் மேலாளர் பயணம் எப்படியிருந்தது. வார இறுதி எப்படியிருந்தது என்று அன்பான கேள்விகளை அடுக்கியபடி அவளை அந்த அமைதியான நிலத்தில் அலுவலகப் பணிக்குத் தயார் செய்து கொண்டிருந்தாள். இவ்வளவு அதிகாலையிலேயே அலுவலகம் செல்வது மீனாவுக்கு அனேகமாக அதுவே முதல்முறை. இந்தியாவில் சாவகாசமாக பத்து மணிக்கு மேல் அலுவலகம் அடையலாம். அமெரிக்கப் பணியாளர்களுடன் உரையாடல் இரவு பத்துமணி வரை நடக்கச் சாத்தியமானதால் இந்தியாவில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு அந்தச் சலுகையுண்டு. அலுவலகம் சென்று சாவகாசமாக காஃபி குடித்து சிலரோடு அரட்டை அடித்துவிட்டு பணியிடத்தில் அமர்ந்து, முதலில் சில மின்மடல்களைப் பார்க்கவே மதியம் பன்னிரண்டு மணி ஆகிவிடும். அதன்பின் ஆலோசனைக் கூட்டங்கள், அடுத்தவர் சந்தேகம் எதுவுமிருந்தால் தீர்ப்பது இப்படித் தட்டி முட்டி தன் வேலையை தொடங்கவே மதியம் இரண்டு மூன்று மணி ஆகிவிடும்.

ஆனால் இங்கே நிலைமையே வேறு; ஸ்டேஃபினே காலையில் இறக்கிவிடும் போதே சாயுங்காலம் நான்கரைக்கெல்லாம் வீடு திரும்பத் தயாராக இருக்கச் சொன்னாள். காலையில் நேரத்தோடு வந்து மாலை சீக்கிரம் வீடு திரும்புவது எவ்வளவு அருமையானது என்று அன்று மீனாவுக்குத் தோன்றியதென்னவோ உண்மை தான். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் காலையில் எட்டு மணிக்குக் கிளம்புவது மிகக் கடினமானது என்று விரைவில் புரிந்தது. அவ்வளவு சீக்கிரம் கிளம்பும் போது ஒன்று அடையாள அட்டையை மறந்து போகிறாள் அல்லது மடிக்கணினி மின்னூட்டியை மறக்கிறாள். ஒருநாள் இந்தக் குளறுபடியால் ஸ்டேஃபினேயின் வாகனத்தில் காப்பியை ஊற்றிவிட்டாள். அமெரிக்கர்கள் தங்கள் வாகனத்தின் தூய்மையைத் தங்கள் தூய்மைக்கு நிகராகக் கருதுவார்கள். மீனாவின் இந்தச் செய்கை ஸ்டேஃபினேவுக்கு மிகுந்த கோபத்தை வரவழைத்திருக்க வேண்டும்; ஆனால் அதை அவள் மீனாவிடம் வெளிக்காட்டவில்லை. இந்த நிகழ்வுக்குப் பிறகு மீனா அலுவலகத்தின் பிற தோழர்களிடம் தன்னை அழைத்துக் கொண்டு போக முடியுமா என்று கேட்டாள். ஓரிரு நாட்கள் அவர்களும் சரி என்று அந்தச் சேவையைச் செய்து வந்தனர். பின்னர் அவள் தங்கள் இருக்கை நோக்கி வரும்போதே தலை தெறிக்க ஓட ஆரம்பித்தனர். வண்டியோட்டத் தெரியாமல் இந்த இடத்துக்கு வந்தது கால் உடைந்தது போலிருந்தது.

அப்படித்தான் ஒரு நாள் சண்முகபிரபாவிடம் மீனா உதவிக்கென நாடினாள். சண்முகபிரபா சென்னையைச் சேர்ந்தவள். அந்த நிறுவனத்தின் களாமஸு அலுவலகத்தில் கடந்த நான்கு வருடங்களாகப் பணிபுரிகிறாள். அவளிடம் அலுவலகத்திலிருந்து விடுதியில் விட முடியுமா என்று கேட்ட போது, ‘நீங்கள் எப்போது கிளம்புவீர்கள்?’ என்று சம்பிரதாயத்துக்குக் கேட்டுவிட்டு, தான் நான்கு மணிக்கே கிளம்பிவிடுவதாகவும் அது மீனாவுக்கு வசதிப்படாது என்றும் நாசூக்காகத் தவிர்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ ‘எனக்குத் தெரிந்த வாகன ஓட்டுநர் ஒருத்தங்க இருக்காங்க அவங்ககிட்ட உங்களைப் பத்தி சொல்லி தினம் அலுவலகம் வந்து விட்டு விட்டு மறுபடி சாயுங்காலம் திரும்ப அழைத்துச் செல்லச் சொல்கிறேன்’ என்றாள். அந்த வாகன ஓட்டி ஒரு பெண் என்றும் அவள் ஆப்பிர்கன் அமெரிக்கன் என்றும் சொன்னாள். ‘அவர் கொஞ்சம் வயதானவர் ஆனால் பார்க்க அப்படி வயதானது போல இருக்காது. மிகவும் பொறுப்பானவர்’ என்றும் சொன்னாள். மீனாவுக்கும் அந்த ஏற்பாடு பிடித்திருந்தது. காரணம், பிறரைச் சார்ந்திருந்து அலுவலகம் வரவும் வேலை முடிந்ததோ இல்லையோ தனது அறைக்குக் கிளம்பிச் செல்லவும் வேண்டும். அலுவலக நண்பர்களோடு கிளம்பிச் செல்லும் போது மாலையடங்கும் முன்னரே அறையை அடைந்த பின்னர், ஒரு அந்நியன் போல அவளை வெறித்துப் பார்க்கும் அறைச் சுவர்களுக்குள் இரவு உறங்கும் வரை நேரத்தைக் கடத்துவது சிரமமாக இருந்தது. அதற்குப் பதில் அலுவலகத்திலிருந்து கொஞ்ச நேரம் கழித்து வரலாம் என்ற சுதந்தர உணர்வே அவளுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது. சண்முகபிரபா ஜென்னிலிடம் பேசிவிட்டு அவருடைய கைப்பேசி எண்ணை மீனாவுக்குக் கொடுத்தாள்.

அந்தக் குறிப்பிட்ட நாளன்று சாயுங்காலம் ஜென்னிலை ஐந்து மணிக்கு வரச் சொல்லி சண்முகபிரபாவே பேசினாள். அப்படி அவர் வரவில்லையென்றால் அவளைத் தானே வீட்டில் விடுவதாகச் சொல்லியிருந்தாள். அன்று சாயுங்காலம் நான்கு ஐம்பத்து ஐந்துக்கு சண்முகபிரபா மீனாவின் கைப்பேசியில் அழைத்து ஜென்னில் அலுவலக வாசலில் காத்திருப்பதாகச் சொன்னாள். வேக வேகமாகக் கிளம்பி கீழே போன போது, ஒரு கருப்பு நிற வாகனம் பளபளப்பாய் நின்று கொண்டிருந்தது. அதன் முகப்பில் ஜீப் என்று எழுதப்பட்டிருந்தது. அதன் வாகன ஓட்டுநர் இருக்கையில் பிரம்மாண்டமான மரம் ஒன்றைப் போல இருக்கை முழுவதையும் நிறைத்து அமர்ந்திருந்தார் ஜென்னில். சீட் பெல்ட் அடங்காத தேகம் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது. முன்னிருக்கையில் அமரப் போனவளை அன்போடும் வாஞ்சையோடும் பார்த்துவிட்டு அந்த இருக்கையை சற்றே பின்னகர்த்தி மீனா அமர்வதற்கு வசதியாக இடம் செய்து கொடுத்தார் ஜென்னில். “சண்முவும் முன்னிருக்கையில் தான் அமர்வாள்” என்று சொல்லிக் கொண்டே வாகனத்தை இலகுவாகத் திரும்பி வெண்ணெய்யில் வழுக்கி நகரும் ஐஸ்கட்டி போல எந்த குலுக்கலோ நகலுக்கோ இல்லாமல் தன் வாகனத்தை ஓட்டினார் ஜென்னில். தங்கும் விடுதியடைந்ததும் இறங்கும் போது எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று மீனா கேட்ட போது “உன்னுடைய கைப்பேசியில் லெஃப்ட் செயலி காட்டும் பணம் எவ்வளவோ அதையே கொடு” என்று சொன்னார். அதையே சண்முகபிரபாவும் சொல்லியிருந்தாள். லெஃப்ட் செயலி ஓட்டுனர்களுக்கு காட்டும் தொகை குறைவாக இருக்கும். பயனாளர்கள் செயலியில் காட்டும் அளவு பணம் ஜென்னிலுக்கு ஒரு சில டாலர்கள் அதிகம் ஈட்டிக் கொடுக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. பதிமூன்று டாலர்களை எடுத்து ஜென்னிலிடம் கொடுத்த மீனா “எனக்கு ரசீது வேண்டும்” என்றாள்.

“இருக்கை இப்படியிருந்தால் அமெரிக்கர்கள் கோபிப்பார்கள்” என்று சொல்லியபடி முன்னிருக்கையை முன்னால் நகர்த்திய படியிருந்த ஜென்னில் மீனா சொன்னதைக் காதில் வாங்க வில்லை.

“அலுவலகத்தில் செலவினங்களுக்குக் கணக்குக் காட்ட ரசீது வேண்டும்” என்று மறுபடி மீனா சொன்னாள்.

“ரசீதா? எப்படித் தரவேண்டும்? எனக்குப் பழக்கமில்லை வேறு எவரும் கேட்டதுமில்லையே, யோசிக்கிறேன்”

மறுநாள் காலையிலும் சொன்ன நேரத்துக்கு ஐந்து நிமிடம் முன்னரே வந்துவிட்டார் ஜென்னில். சொந்தமாக வாகனத்தை அமர்த்திச் செல்லும் போது மீனாவுக்கு அந்த அனுபவம் புதிதாக இருந்தது. அடித்துப்பிடித்துக் கொண்டு கிளம்ப வேண்டிய அவசியமும் இல்லாமல் இல்லை. சிலர் வருகிறேன் என்று சொல்லி விட்டு இருபது நிமிடம் கழித்து வரும் போது செய்வதறியாது காத்திருக்க வேண்டியதுமில்லை. வேறு குற்றவுணர்வும் இல்லாமல் இருந்தது. இதற்கு முன்னர் வேறு நாடுகளுக்குப் பயணப்பட்ட போதெல்லாம் அலுவலகத்துக்கு பேருந்து அல்லது மின் தொடர்வண்டி இவற்றில் பயணித்திருக்கிறாள். ஆனால் தனி வாகனத்தில் அதுவும் யாருக்கும் கடமைப்படாமல் பயணித்தது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. வசந்தத்துக்குக் காத்திருந்த மரங்களில் சிலவற்றின் கிளை முகப்புகளில் அரும்பியிருந்த வண்ண வண்ணமான மொக்குகளை முதன்முதலாகப் பார்க்க முடிந்தது. ஜென்னிலோடு அலுவலகம் அடையும் வரை இயற்கையோடு லயித்துப் போயிருந்தாள். வண்டியிலிருந்து இறங்கும் போது பதிமூன்று டாலர்களை கொடுக்கும் போது “சாயுங்காலம் ரசீது புத்தகத்தோடு வருகிறேன்” என்றார் ஜென்னில்.

காலையில் அப்படிச் சொல்லும் போது சாயுங்காலமும் ரசீதோடு வரவில்லை என்றால் என்று யோசித்தபடியே ஆகிவிட்டதே, இருபத்து ஆறு டாலர்களுக்கு எப்படிக் கணக்கு காட்டுவது என்ற கவலையும் சேர்ந்து கொண்டது. ரசீது கூட எப்படியாவது ஏற்பாடு செய்யலாம். யாரையாவது கையொப்பம் இடச் சொல்லி அலுவலகத்துக்குக் கொடுத்து விடலாம் என்று நினைத்தாள். அப்படிச் செய்வது ஏமாற்று வேலையல்லவா என்றும் தோன்றியது. ‘செலவு செய்த காசுக்குத் தானே ரசீது ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் அது ஏமாற்றுக் கணக்கில் வராது’ என்றும் நினைத்தாள். மறுபடி ஜென்னில் கைப்பேசியை அழைத்தாள் அவள் எடுக்கவில்லை. ஐந்தே முக்கால் ஆகிவிட்டது எப்படி விடுதிக்குப் போவது என்ற பயம் மெல்லத் தொடங்கியது. வயதானவள் அதுவும் ஆப்பிரிக்கன் அமெரிக்கன் அவளை நம்பி இதுவரை காத்திருந்தது எவ்வளவு முட்டாள்தனம் என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். சுஜோய் இருக்கும் அலுவல் மேசையருகே சென்றாள்.

“சுஜோய் நீங்க எப்ப கிளம்புவீங்க?”

“நான் எப்பவும் ஏழு மணிக்குத் தான் கிளம்புவேன். இன்னிக்கி எனக்கு கொஞ்சம் சொந்த வேல இருக்கு. அதான் சீக்கிரம் ஆறு அல்லது ஆறேகாலுக்கு கிளம்பலாம்ன்னு இருக்கேன்”

“நல்லதாப் போயிடுச்சி. என்னை விடுதியில் விடும் வாகன ஓட்டி ஏதோ காரணத்தால் இன்னிக்கி இன்னும் வரல. சண்முகபிரபா தான் அவங்கள அறிமுகம் செய்தாங்க. நீங்க போகும் போது என்னை விடுதியில் விட்டுவிட முடியுமா?”

“என் வீடு எதிர்திசையில இருக்கு. இருந்தாலும் பராவல்ல நான் விட்டுட்டு போறேன். சரி இன்னும் பத்து பதினைஞ்சி நிமிசத்துல கிளம்பலாம் அப்ப தான் எனக்குச் சரியான நேரத்துக்கு வீட்டுக்குப் போக முடியும். நீங்க கிளம்பியிருங்க வரேன்”

வேகமாக மீனா தன் பணியிடத்தை அடைந்தாள். ஸ்வட்டரை அணிந்து அதன் மேல் கம்பளி மேலாடையை அணிந்தாள். பின்னர் தலையையும் காதையும் இறுக ஒரு கைக்குட்டை போன்ற காஷ்மீரி துணியால் கட்டிக் கொண்டாள். பின்னர் கையுறையும் அணிந்து கொண்டதுமே மெதுவாக வியர்க்கத் தொடங்கியது. கம்பளியாடையை பூட்டி இறக்கிக் கொள்ளாமல் தளர்வாக விட்டபடி தனது இருக்கையில் அமர முடியாமல் அமர்ந்தாள். அந்த கம்பளியாடைகள் அலுவலகத்துக்கு வெளியே தான் சரிப்படும். அங்கே திறந்தவெளியில் வேட்கையோடு திரியும் மிருகம் போன்ற பனிக்கு அவை உகந்தவை. ஆனால் அலுவலகத்துக்குள்ளே கட்டுப்படுத்தப்பட்டத் தட்பவெப்பத்தில் சில நொடிகள் கூட அந்த ஆடைகளோடு இருக்க முடியாது. மேலும் அந்த கனமான ஆடைகளோடு இருக்கையில் சரிவர அமரவும் முடியாது. சுஜோய் வரும்வரை என்ன செய்வது என்று அறியாமல் மடிக்கணினியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனா.

“நான் வந்து விட்டேன்” என்று ஜென்னிலிடமிருந்து ஒரு குறுந்தகவல் அவளது கைப்பேசிக்கு வந்தது. அப்படா என்று நிம்மதியடைந்தவள், கம்பளியாடையைக் கழற்றி வைத்து விட்டு சுஜோய் இருக்கையை நோக்கி ஓடினாள். தன் வாகனம் வந்துவிட்டதாகத் தெரிவித்து விட்டு வேகமாக இருக்கைக்குத் திரும்பினாள். கடைசியாக முடிக்க வேண்டிய சில பணிகளை முடித்து மடிக்கணினியை மூடிப் பைக்குள் வைத்தாள். பிறகு கம்பளியாடையை மறுபடி மாட்டிக் கொண்டு கிளம்பி அலுவலக முகப்புக்கு வந்தாள். வெளியே குளிரைத் தவிர வேறு யாருமில்லை. ஜென்னிலை அழைத்துப் பார்த்தாள் இப்போதும் பதிலில்லை. மறுபடி திரும்பத் தன் இருக்கைக்கே வந்தாள் மீனா. இப்போது சுஜோய் கிளம்பிச் சென்றிருந்தான். மொத்த அலுவலகத்தின் யாருமற்ற தனிமை சூனியமாய் அவளைப் பயம் கொள்ளச் செய்தது. பெங்களூர் அலுவலகத்திலும் இப்படி யாருமே இல்லாமல் தனியாக வேலை செய்திருக்கிறாள். அப்போது அங்கே நிலவும் பெரும் அமைதி அவளை ஒரு யோக நிலைக்கு இட்டுச் சென்று பணிகளை மிக நிம்மதியாக எந்த இடையூறுமின்றி முடிக்க வசதியாக இருக்கும். ஆனால் இங்கே அவளுக்குப் பயத்தில் ஜுர உதறல் எடுக்க ஆரம்பித்தது. ‘இப்படி வந்து இங்கே திண்டாட வேண்டுமென்று யார் அழுதார்கள்? இந்த வேலையும் அது தரும் எல்லாச் சௌகரியங்களும் நாசமாய்ப் போக’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

மணி ஆறைத் தாண்டியிருந்ததால் வெளிச்சம் சற்றே மங்கத்தொடங்கியிருந்தது. அவள் நடக்கும் பாதையில் தானாக எரியும் விளக்குகள் கூட அவளுக்குத் திகிலூட்டின. என்ன செய்வதென்று சில நிமிடங்கள் புரியவில்லை. பின்னர் சண்முகபிரபாவுக்கு ‘என்னவென்று தெரியவில்லை, ஜென்னில் என்னுடைய அழைப்பு எதற்கும் பதிலளிக்கவில்லை. வெகு நேரமாகிவிட்டது. வாடகை வண்டிகளும் கிடைக்கவில்லை. நீங்கள் ஜென்னிலுக்கு ஒருமுறை கூப்பிட்டு இங்கே வந்து என்னை அழைத்துச் செல்லுமாறு சொல்ல முடியுமா?’ என்று தகவல் அனுப்பினாள். அந்தத் தகவல் அவளுக்குச் சென்று சேரவில்லை. அமெரிக்காவில் இப்படித் தான் அலுவலக நேரம் முடிந்ததுமே தங்களது தொலைப்பேசிகளைத் தேவையில்லாத அழைப்புகளை ஏற்ற வேண்டாம் என்ற செயல்பாட்டுக்குள் வைத்துவிடுவார்கள். சுஜோய் எண்ணிலிருந்தாலாவது அழைக்கலாம் அதுவும் இல்லை. பதற்றம் அதிகரித்தது ஒரு காப்பி குடித்தால் தேவலாம் என்றிருந்தது.

இருக்கையருகே சென்று மடிக்கணினியை வைத்துவிட்டு கம்பளி ஆடைகளைக் களைந்து விட்டு, காப்பி இயந்திரம் இருக்கும் இடம் சென்று காப்பி எடுத்துக் கொண்டு வந்து பார்த்த போது ஏதோ இந்திய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. அது ஜென்னிலுடையதாக இருக்க வாய்ப்புகள் அதிகம். காலையில் விடுதிக்கு அவளை அழைத்துச் செல்ல வந்த போதும் இப்படி ஓர் இந்திய எண்ணிலிருந்தே அழைப்பு வந்திருந்தது. உடனடியாக ஜென்னிலை அழைத்த போதும் அது எடுக்கப்படவில்லை. என்ன செய்வதன்று திகைத்த போது வாட்ஸ் ஆப்பில் சண்முகபிரபா ஜென்னில் வெளியே காத்திருப்பதாகத் தகவல் அனுப்பியிருந்தாள். அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி காப்பியை கொஞ்சம் குடித்துவிட்டு மீதியைக் கொட்டிவிட்டு, பனிக் கவச ஆடைகளை அணிந்து கொண்டு கீழே ஓடினாள் மீனா. ஜென்னில் சிரித்தபடி “தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும் நான் கடைசியாக எனது பயனாளரை விட்டு விட்டு வர 5.45 ஆகுமென்று நினைத்தேன். ஆனால் வழியில் கொஞ்சம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன்” என்றாள்.

“நீங்கள் சொல்லியிருக்கலாமே. 6 மணி போல இங்கே வந்துவிட்டேன் என்ற தகவல் வந்தது. கீழே வந்து பார்த்தேன். நீங்கள் வரவில்லை.”

“அது காலையில் உங்களை அழைக்க விடுதிக்கு வந்த போது அனுப்பியதாக இருக்கும். மாலை ஆறு மணிக்கு நான் தகவல் அனுப்பவில்லையே”

“ஓ சரி. ஆனால் இவ்வளவு தாமதமாகுமென்றால் தகவல் அனுப்பியிருக்கலாமே நான் பயந்து போனேன்”

“தகவல் அனுப்பினேனே. ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. ஆனால் இவ்வளவு நேரமாகிவிடும் என்று தெரியாது. தெரிந்தால் தாமஸை வரச் சொல்லியிருப்பேன். பதினைந்து நிமிடத் தாமதம் தானே என்று நினைத்திருந்தேன். சாரி.” என்றவள் சிறு இடைவெளி விட்டு “சண்மு என்னை வாட்ஸ் ஆப் பழகிக் கொள்ளச் சொல்லி இன்று உறுதியாகச் சொன்னாள். லெஃப்ட் செயலியில் நான் வேலையில் இருக்கிறேன் என்று செயல் நிலையில் இருந்தால், அது எந்தத் தொலைப்பேசி அழைப்பையும் எனக்கு இணைப்பதில்லை. என்னுடைய இன்னொரு எண் இருக்கிறது அதை எடுத்துக் கொள் மகளே”

அந்த எண்ணை வாங்கிக் கொண்டதும் வாகனத்தின் உள்ளே இருந்த வெப்பம் உறைக்கத் தொடங்கியது. மேலும் முன்னிருக்கை மிகவும் நெருக்கடியாகவும் இருந்தது. கம்பளி ஆடைகளைக் கழற்றத் தொடங்கினாள் மீனா. ஜென்னில் வாகனத்தின் வெப்பத்தைக் குறைத்தார். மேலும் வண்டியை ஓரம் கட்டி இருக்கையைப் பின்னுக்கு நகர்த்தி அவளை வசதியாக அமரச் செய்தார்.

“மிகவும் பயந்து போய்விட்டாய் போலிருக்கிறது. மிகவும் வருந்துகிறேன்”

“அப்படியில்லை, ஆனால் இங்கெல்லாம் ஐந்து மணிக்குள் கிளம்பி விடுகிறார்கள். மொத்த அலுவலகமும் வெறுமையாகி மேலும் பயம் கொள்ளச் செய்து விட்டது”

“தாமதமாக வருவேன் என்று நான் அனுப்பிய தகவல் ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை”

“சண்முகபிரபா சொன்னது போல நீங்கள் வாட்ஸ் ஆப் பழகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்”

“ஆம் பழக வேண்டும். இந்தச் செயலிகளை எல்லாம் பழகிக் கொள்ளக் கொஞ்சம் பழக்கம் தேவைப்படுகிறது. நேரமெடுத்து கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக் கொள்கிறேன்”

“…”

“ஆனால் என்னால் முடியும். நான் எனது ஐம்பத்து ஐந்தாம் வயதில் தான் பட்டப்படிப்பு படிக்கத் தொடங்கினேன். அதனால் தான் இப்போது நல்ல வேலையில் இருக்கிறேன்”

“ஆகா அற்புதம். சண்முகபிரபா உங்களுக்கு எப்படிப் பழக்கமானார்? அவரிடம் சொந்தமாக வண்டியிருக்கிறதே”

“ஆம் அந்தப் பெண் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தாள். வழக்கமாய் கல்லூரிக்குப் போகும் நாட்களில் என் வண்டியில் ரயில் நிலையம் வரை செல்வாள். மறுபடி வரும் போது சொல்லி வைப்பாள் நான் போய் அழைத்து வருவேன்”

“ஓ நல்ல விஷயம்”

“சண்மு மட்டுமல்ல எனக்குப் பல வாடிக்கை சவாரிகளும் உண்டு.”

“அப்படியானால் நீங்கள் தொழில் தொடங்கியிருக்கலாமே.”

“சண்முவும் இதே சொன்னாள். நான் அந்த ஆயத்தத்தில் தான் இருக்கிறேன். என்னுடைய வழக்கறிஞர் மூலம் தேவைப்படும் எல்லா எழுத்து வேலையையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

“ஓ நல்லது. மிகவும் அருமையான விஷயம்”

அதற்குள் விடுதி வந்துவிட நான் பதிமூன்று டாலர்களைக் கொடுக்க வேண்டி இருபது டாலர் நோட்டு ஒன்றை ஜென்னிலிடம் கொடுத்தேன். அவர் மீதி ஏழு டாலரை கொடுத்து விட்டு “நீ கேட்ட ரசீதுக்காக நான்கு டாலர் கொடுத்து ரசீது புத்தகத்தை வாங்கினேன்” என்று ரசீது புத்தகத்தைக் காட்டிச் சிரித்தார்.

“சரி நல்லது. அதைக் கையெழுத்திட்டுத் தாருங்கள் மூன்று ரசீது வேண்டும். இதுவரை மூன்று முறை உங்களுடன் பயணித்திருக்கிறேன்.”

“இப்படி வண்டியிலமர்ந்து கையெழுத்துப் போட முடியாதே பெண்ணே. மேலும் வாகனத்தை இப்படி விடுதியின் வரவேற்பு பகுதியில் அதிக நேரம் நிறுத்த முடியாது”

“சரி என்னுடைய அறைக்கு வாருங்கள்”

உடனடியாக வண்டியை விடுதியைச் சுற்றியுள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தினார் ஜென்னில். பின்னர் மீனாவோடு அவர் அறைக்கு மெல்ல நடக்கத் தொடங்கினார். அதைப் பார்க்க டால்பின் ஒன்று தரை ஏறி ஒரு பென்குயின் நடந்து செல்வது போலிருந்தது. அறையை அடைந்ததும் அவர் ரசீதை எடுத்துக் கையெழுத்துப் போட ஆயத்தம் ஆனார். அவரிடம் பேனா இல்லை. மீனா தன் கைப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்தாள். இனி என்னுடைய கைப்பையில் இந்த ரசீதும் ஒரு பேனாவும் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும், மீனா கொடுத்த கருப்பு பேனா மிக நன்றாக எழுதுகிறது இதை நானே வைத்துக் கொள்ளவா என்றும் கேட்டார். மீனா சரி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதும் மூன்று ரசீதிலும் பதிமூன்று டாலர்கள் என்று குறிப்பிட்டுக் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

“நான் இரவு உணவு செய்யப் போகிறேன். சாப்பிட்டுப் போகின்றீர்களா?”

“இல்லை வேண்டாம் நான் போய் என் மகன் தாமஸுக்கு சமைக்க வேண்டும்”

“ஓ அப்படியா?”

“அவனுக்கு ஐம்பது வயதாகிறது இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் நான் தான் அவனுக்கு இரவு உணவைச் சமைக்க வேண்டும். பிற பொழுதுகளில் அவனே சமாளித்துக் கொள்வான்”

“தாமஸின் அப்பா?”

“கிரேஸுடன் எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. நாற்பத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன”

“நீங்க வேறு திருமணம் செய்து கொள்ளவில்லையா?”

“Why not? ஒரு அமெரிக்கன் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன்.” ஜென்னில் முகத்தில் வெட்கச் சிரிப்பொன்று பூத்தது.

ஜென்னில் அப்படிச் சொன்ன அதே நேரம் மீனாவின் கைப்பேசியில் ‘நான் எனது இன்றைக்கான கடைசிச் சவாரியில் இருக்கிறேன். அவரை விட்டு விட்டு உங்கள் அலுவலகம் வர ஐந்து நாற்பதைந்து ஆகிவிடும்.’ என்ற குறுந்தகவல் பளிச்சிட்டது.

“நீங்கள் அனுப்பிய தகவல் தாமதமாக வந்திருக்கிறது”

“இந்தத் தகவலும் என் திருமண ஆசை போலத் தாமதமாக வந்திருக்கிறது” என்று மீனா கொடுத்த தேநீரைச் சுவைத்தபடி சொல்லிச் சத்தமாகச் சிரித்தார்.


 

எழுதியவர்

லாவண்யா சுந்தரராஜன்
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதிதொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் இயங்கி வரும் லாவண்யா சுந்தரராஜன் ‘சிற்றில்’ என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார்.


நீர்கோல வாழ்வை நச்சி,
இரவைப் பருகும் பறவை,
அறிதலின் தீ,
மண்டோவின் காதலி ஆகிய கவிதைத் தொகுப்புகளையும்

“புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை” எனும் சிறுகதைத் தொகுப்பு மற்றும் “காயாம்பூ” நாவலையும் இதுவரை எழுதியுள்ளார்.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rajarajacholan
Rajarajacholan
1 year ago

சிறுகதை அருமை
வாழ்த்துக்கள்

கலியபெருமாள்
கலியபெருமாள்
1 year ago

ஒரு சொல்லின் விரிவாக்கம் சிறு கதையாவதை இப்போது நம்பமுடிகிறது சிறப்பு வாழ்த்துக்கள்

எளிய நடை

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x