27 November 2024
deva ks2

றத்தாழ இயற்கையில் நிகழும் எல்லா வேட்டைகளிலும் வேட்டையாடப்படுபவை வேட்டையின் அபாயத்தை அறிந்தே இருக்கின்றன. மனித மனத்தின் குரூரங்கள் இதற்கு விதிவிலக்கு. அவை அறியாமையையும் அப்பாவித்தனத்தையும் அடிப்படையாய்க் கோருகின்றன.

கடந்த நான்கு நாட்களாக வீடு கைவிடப்பட்ட அரசு கட்டிடத்தை போல எதுவும் மாறாது அப்படியே இருந்தது. கேஸ் அடுப்பின் எண்ணெய்ப் பிசுக்குகளில் தூசி அப்பிக் கிடந்தது. சமையலறை சன்னல் மூடப்படாமல் காற்றில் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு சாம்பல் நிறப் பல்லி மட்டும் அதன்வழியே வருவதும் போவதுமாக இருந்தது. ராஜம் அந்தச் சமையல் அறையின் ஒரு மூலையில் அங்கிருந்த பொருட்களோடு தானும் ஒன்றாய் அசைவேதுமற்று அமர்ந்திருந்தார்.

புயலடித்து ஓய்ந்த வானம் பெரும் அமைதியால் தன்னை நிரப்பிக் கொள்கிறது.

ராஜம் தனியாகத்தான் இருக்கிறார். இன்று நேற்றல்ல, கடந்த 19 வருடங்களாகவே அவர் தனிமையைத் தாங்கிக் கொண்டிருக்கிறார். மகள் யோகிதா பிறந்த பின்னர் அவளே அவரது உலகமானாள். அவர் அவரது உலகை மிகவும் வாஞ்சையுடன் எந்தச் சிறு தீங்கும் அண்டாத வண்ணம் வளர்த்துக் கொண்டார். ஒருவேளை கடவுள் இருப்பது உண்மையென்றால், அவர்தான் இந்த உலகையும் மக்களையும் படைத்தார் என்றால், அவரும் அவற்றை இப்படித்தான் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்க வேண்டும், இங்குள்ள ஒவ்வொரு அம்மாவையும் போல.

ராஜம், வீரச்செல்லையாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர். பன்னிரண்டாம் வகுப்பு வரை யோகிதாவும் அதே பள்ளியில் தான் படித்தாள். இருவரும் ஒன்றாகவே பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருவார்கள். அப்போதெல்லாம் சிற்சில நேரங்களில் பேருந்தில் யாரேனும் ஆண்கள் பெண் பிள்ளைகளிடம் தவறாக நடந்து கொள்வது, சீண்டுவது போன்ற பிரச்சனைகள் நடக்கும். அந்த நேரம் ராஜம் யோகிதாவின் கைகளை அழுந்தப் பிடித்துக் கொள்வார். தன் உலகம் தன் கைக்குள் இருப்பதன் நிம்மதி அதில் இருக்கும். பின்னர் கல்லூரிப் படிப்புக்கென தங்கள் டவுனிலேயே தேடிப் பிடித்துக் கொஞ்சம் பெயர் பெற்ற பொறியியல் கல்லூரியில் அவளைச் சேர்த்து விட்டார். அரசுப் பள்ளிகளை போலல்லாமல் இந்தக் கல்லூரிகள் மாணவர் இருப்பிடத்திற்கே பேருந்தை அனுப்பி ஏற்றிக் கொள்கிறார்கள். இது எவ்வளவு ஆசுவாசமான விசயம்?

ராஜத்தின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர் குடியிருந்த பகுதியிலும் சரி, அவர் வேலை செய்யும் பள்ளியிலும் சரி யாருக்கும் பெரிதாய் எதுவும் தெரியாது. தனிப்பட்ட கேள்விகளை ராஜம் எப்போதும் அனுமதித்ததில்லை. ‘உங்கள் கணவர் இருக்கிறாரா? இறந்து போனாரா? உங்களுக்குச் சொந்தங்கள் இல்லையா?’ போன்ற எந்த ஒரு தனிவாழ்க்கை சம்பந்தப்பட்ட கேள்விகளையும் அவர் விரும்பியதில்லை. அவையெவற்றிற்கும் பதிலளித்ததுமில்லை. சில சமயம் அவை கேலியாகலாம், சில சமயம் அவை பயன்படுத்திக் கொள்ளப்படலாம், இரக்க வார்த்தைகள் தன்னை மேலும் பலவீனப்படுத்தும் எனவும் அவர் நினைத்திருக்கலாம். அவர் யார் முன்னும் பலவீனப்பட்டு எளிய இலக்காக நிற்க விரும்பவில்லை. இதுவே அவரை மூர்க்கமாகவும் நெருங்கமுடியாதவராகவும் காட்டுவதுண்டு. எவருமற்று வாழும் வாழ்வில் தன்னையும் தனக்கேயான தன் உலகத்தையும் பாதுகாத்துக் கொள்ளவேனும் இந்தக் கவசம் அவருக்கு அவசியமாயிருந்தது.

அன்று பள்ளியின் சூழல் காலை முதற்கொண்டே இயல்பாக இல்லை. ராஜமும் அதை உணர்ந்தே இருந்தார். ஆனால், யாரிடமும் கேட்கும் அளவிற்கான நேரமோ வெளியோ அவருக்கு வாய்க்கவில்லை. பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் அவரவர்கள் சிறுசிறு குழுக்களாக ஏதோ முணுமுணுத்துக் கொள்கிறார்கள். சிலர் ஏதோ பேசிக் கொண்டே இருக்கிறார்கள், ராஜம் வருவது தெரிந்ததும் அமைதியாகிறார்கள். ஒட்டு மொத்தச் சூழலும் இயல்புக்கு மாறாக ஏதோ விளங்காத புதிராக இருந்தது. ராஜம் வாட்சப்போ மற்ற சமூக வலைத்தளங்களோ பெரிதாக உபயோகிப்பதில்லை. கொரோனா நேரத்தில் தவிர்க்கவியலாத சூழலால் யோகிதாவின் துணையோடு பாடங்கள் அனுப்பிக் கொண்டிருந்தார். மற்றபடி அவர் இந்த டெக்னாலஜிக்களிடம் இருந்து தூரமாகத்தான் நின்று கொண்டிருக்கிறார். அவர் அவற்றை உபயோகப்படுத்துவதில்லை. அவருக்கு அவை விளங்காதவை; அன்னியமானவை. ஒருவேளை அவர் அவற்றை உபயோகம் செய்பவராக இருந்திருந்தால் அவருக்கு இவ்விசயம் கொஞ்சம் முன்னதாக தெரிந்திருக்கலாம்.

நல்லவேளையாக, இயற்பியல் ஆசிரியை நர்மதா ராஜத்தை தனியாக அழைத்துப் பேசியபோது அன்றைய பள்ளி நேரம் முடிந்துவிட்டிருந்தது. எந்த அசைவுமற்று பேருந்தில் அமர்ந்து ஒரு சடலத்தைப் போல அவர் வந்துகொண்டிருந்தார். ராஜம் மட்டுமல்ல, எந்த ஒரு தாயாலும் தன் மகளின் நிர்வாணப் புகைப்படம் இணையத்தின் வழி அனைவர் கைகளிலும் புரள்கிறது என்பதைத் தாங்கிக் கொள்ள முடியாது. அது சாவினும் கொடிய வலியைக் கொடுக்கும். ராஜம் மனதிற்குள் துடித்துச் செத்துக் கொண்டிருந்தார். அவரால் யாரையும் முகம் கொடுத்துப் பார்க்க முடியவில்லை. ஊரின் அத்தனை பேரும் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது போல அவருக்குத் தோன்றியது. எல்லா முகங்களும் ஏதோ கூர்மையான கேள்வியைச் சுமந்து கொண்டு அச்சுறுத்தின. எவர் முகத்தையும் பார்க்கச் சக்தியற்று சன்னல் பக்கமாக வெறுமனே திரும்பி உட்கார்ந்திருந்தார். பயணத்தின் சன்னல் வழிக் காற்று அவரை அழுத்தி மூச்சு முட்டச் செய்து கொண்டிருந்தது.

பேருந்து வல்லவராசபுரம் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. வீட்டை நெருங்க நெருங்க ராஜத்தின் அவமான உணர்வு, கோபமாக உருக்கொண்டது. இவை அனைத்திற்கும் அந்த சல்லிப்பயல் மோகன் தான் காரணமாக இருக்க முடியும் என்று ராஜத்தின் மனது உறுதியாக நம்பியது. பேருந்து ஒவ்வொரு பள்ளத்தில் இறங்கி ஏறும் போதும் வருகிற அதிர்வுகள் ராஜத்தின் அழுத்தத்தை மேலும் அழுத்திக் கொண்டிருந்தது.

மோகன் யோகிதாவின் வகுப்பில் உடன்படிக்கும் மாணவன். முன்னர் ஒரு நாள் யோகிதாவை கல்லூரி மாணவர் ஒருவருடன் பார்த்ததாகவும் அவள் பேருந்து நிறுத்தத்தில் அந்தப் பையனோடு நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும் சுலோச்சனாவின் அம்மா சொல்லி இருந்தார். சுலோச்சனாவும் யோகிதாவும் பள்ளிக் காலத் தோழிகள்.

அன்று அப்பேச்சைக் கேட்ட வேகத்தில் வீட்டிற்கு வந்த ராஜத்திடம் யோகிதா தாமாகவே முன்வந்து நடந்தவற்றைக் கூறினாள். மோகன் என்ற பையன் தன்னுடன் கல்லூரியில் படிப்பதாகவும் அவன் தன்னை விரும்புவதாகவும் முன்தினம் அவன் பேருந்து நிறுத்தத்தில் வைத்து இதைக் கூறியதாகவும் தனக்கு அதில் நாட்டமில்லை எனவும் கூறினாள். ராஜத்தின் கோவத்தை இந்த விளக்கம் எந்த அளவிலும் பாதிக்கவில்லை. ‘பளார்’ என்ற அறையோடு கத்தத் துவங்கினார்.

கல்லூரியில் எத்தனையோ பேர் படித்துக் கொண்டிருக்க, அவன் யோகிதாவிடம் மட்டும் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? அவளிடம் மட்டும் அவனுக்கு ஏன் இப்படித் தோன்ற வேண்டும்? எதுவும் செய்யாமல் அவளுக்கு மட்டும் இது எப்படி நடக்கும்? போன்றவை அவரது வாதமாக இருந்தது. தகப்பன் அற்ற வீட்டில் இப்படியான செயல்கள் நடந்தால் ஊர் என்ன பேசும்? என்பதும், யாருமற்ற இந்த வாழ்க்கையில் நாளை ஏதேனும் தவறாக நடந்தால் அதைத் தன்னால் தனியாகச் சமாளிக்க முடியுமா? என்பதும் அவரை இன்னும் கடுமையான வார்த்தைகளால் குத்திக் கிழிக்க வைத்தது. அதற்குப் பின்னர் யோகிதா எந்த ஒரு விஷயத்தையும் வீட்டில் சொல்லியதில்லை. அவர்களுக்குள்ளாகப் பெரிய இடைவெளி தோன்றியிருந்தது.

ந்த ஒரு தாயும் பார்த்திடக் கூடாத வகையில், தன் பெண்ணின் புகைப்படம் ஏதோ ஒரு வலைத்தளத்தின் வழி பகிரப்பட்டிருப்பதை இயற்பியல் ஆசிரியை நர்மதா வழியாகப் பார்த்தது ராஜத்தின் கண்களுக்குள்ளாக மின்னல் போலத் தோன்றி உறுத்திக் கொண்டே இருந்தது.

வீட்டிற்குள் நுழைந்த மாத்திரத்தில் கதவைத் தாழிட்டுத் தன் மகளை அடிக்கத் துவங்கினார். தன் கோபம், அவமானம், இயலாமை என யாவும் தீரும் வண்ணம் மாறி மாறி விடாது அடித்துத் துவைத்தார். நடந்தவை எதுவும் அறிந்திருக்காத நிலையில், தூண்டில் புழு போலத் துடித்துக் கொண்டிருந்தாள் யோகிதா.

“அப்பனில்லாப் பிள்ளண்டு பாத்துப் பாத்து வளத்தேனே இப்படி எழவிழுத்து வந்து நிக்கிறியே….”

“எத்தனை தடவ சொன்னா உனக்குப் புரியும்? என்ன உயிரோட கொன்னு போடறதுக்குன்னே வந்தியா?”

“அந்தச் சல்லிக் கூதியாண்ட்ட பேசாத பேசாத ன்னு தலைல அடிச்சு சொன்னனே சிறுக்கி மவ கேக்கலியே… இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறாளே… நான் என்ன செய்வேன்…..”

நேரம் ஆக ஆக ராஜத்தின் அடியும் வார்த்தைகளும் இன்னும் மோசமாகிக் கொண்டே போனது.

ஒரு கட்டத்திற்கு மேல் இவற்றைத் தாங்க முடியாதவளாக யோகிதா ரூமுக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். கொஞ்ச நேரம் அக்கதவை உடைத்திடும் வெறியில் பலமாய்த் தட்டிக் கொண்டிருந்த ராஜம் தன் ஒட்டுமொத்த பலமும் இழந்தவராக அப்படியே அக்கதவில் சாய்ந்த வண்ணம் அமர்ந்தார். அவரது மனதின் அடியாழத்திலிருந்து கத்திக் கதறி ஓ.. வென்று அழத் துவங்கினார். நூற்றாண்டு கால ஓலம் அவரின் குரல்வழி குமுறி வெடித்துக் கிளம்பியது.

தன்னையே எறித்து முடித்த தீக்குச்சியாய்த் தன் சக்தியெல்லாம் வற்றிப் போய்த் தரையில் விழுந்து மயங்கிப் போனார் ராஜம்.

தவை அடைத்துக் கொண்ட யோகிதா எதுவும் புரியாமல் பித்துப் பிடித்தவள் போல ஆனாள். என்ன நடந்தது? எதற்குத் தான் அடிக்கப்பட்டோம்? தனது அம்மா எதற்காகக் கதறி அழுது மயங்கிப் போனாள்? என்பவை குறித்து எந்த விதத் தெளிவும் அற்று குழம்பிப் பேதலித்துக் கிடந்தாள்.

ஒருவேளை அந்த மோகன்தான் எதுவும் செய்திருக்கிறானா? அம்மாவிடமே நேரடியாகச் சென்று தான் காதலிப்பதாகச் சொல்லி இருப்பானோ? அப்படிச் சொல்லி இருந்தால் அதைச் சொல்லி அல்லவா அம்மா அடித்திருப்பார்? முழுவதும் குழம்பிய யோகிதா, தன் செல்போனை எடுத்துத் தோழிகளிடம் விசாரிக்கத் துவங்கினாள்.

நள்ளிரவில் அதே புகைப்படம் அவளையும் வந்தடைந்தது. ‘இது மார்ப்பிங்டி,’ ‘எடிட் பண்ணியிருக்காங்க’ போன்ற சமாதான வார்த்தைகளுடன்.
.
அதிர்ச்சியிலும் அவமானத்திலும் வலியிலும் அப்படியே உறைந்து போன மூளை சிறிது நேரம் கழித்து யோசிக்கத் துவங்கியது.

இப்போது அவளால் தன் அம்மா நடந்து கொண்டதற்கான காரணத்தை உணர முடிந்தது. தோழி சொல்லிய சமாதான வார்த்தைகளையும் புரிய முடிகிறது.. இந்தப் புகைப்படம் ஏதோ filter போடப்பட்டது போலத்தான் தெரிகிறது. இப்போது இருக்கும் தொழில்நுட்பம் கொண்டு எவரது போட்டோவையும் எடிட் செய்ய முடியும் என்பதும் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ள முடிந்தது.

ஆனால், இந்தப் புகைப்படம் அப்படியே தத்ரூபமாக இருக்கிறது. அப்படியே எடிட் செய்யப்பட்டதாக இருந்தாலும் அதற்கான மூலப் புகைப்படம் இத்தனை தெளிவாக எங்கிருந்து கிடைத்திருக்கும்? வாட்ஸப் முகப்பிலும் கூடத் தன்முகம் காட்டாத தனது புகைப்படம் எப்படி அவர்களுக்குக் கிடைத்திருக்கும்? ஏன் தன் புகைப்படம் மட்டும் இப்படி எடிட் செய்யப்பட வேண்டும் ? யார் இதைச் செய்திருப்பார்கள்? என எண்ணற்ற கேள்விகள் ஏன்? ஏன்? ஏன்? ஏன்? என அவள் தலையைச் சுற்றி ஓலமிட்டுக் கொண்டே இருந்தன…

இரவின் ஒரு நொடியும் தூங்கினாள் இல்லை. இப்போது கல்லூரி முழுக்கவும் இது பேசுபொருளாகியிருக்கும். எனில், கல்லூரி மாணவர்கள் முகத்தில் எப்படி முழிக்கப் போகிறோம்? தனக்கே விளங்காத இந்தச் சூழலில் எத்தனை பேருக்கு விளக்கம் சொல்லிப் புரிய வைத்துவிட முடியும் ? இவற்றையெல்லாம் விட மயங்கிக் கிடக்கும் தன் தாயிடம் தான் என்ன சொல்லி விளக்குவது? எனும் கேள்வி யோகிதாவை மிகவும் அச்சுறுத்தியது.

அவளது தலை மிகுந்த பாரத்துடன் .. பிளந்து விடுவது போல வலித்துக் கொண்டிருந்தது. காலையில் ராஜம் எழுந்து ஹாலைக் கடந்து வீட்டிற்குள் செல்வதுபோல சத்தம் கேட்டது. யோகிதாவின் அச்சமும் படபடப்பும் பலமடங்கு அதிகமானது. ஏதோ ஒன்றை யோசித்தவளாய்க் கதவைப் படாரெனத் திறந்தாள். சுவற்றில் முட்டிய கதவின் கதறல் கேட்டுப் பதறியடித்து ஓடி வந்தார் ராஜம். திறந்த கதவினின்று ஓடிச் சென்று பால்கனியின் சுவரேறிக் கீழே குதித்தாள் யோகிதா…

‘பறத்தல்’ பறிக்கப்பட்ட பறவையொன்று அந்த மூன்றாம் மாடியினின்று தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தது.

பத்து நிமிடத்திற்கும் உள்ளாக அலறியபடி ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பானுமதிதான் சத்தம் கேட்டு முதலில் ஓடி வந்தவர். உடன் இருந்து ஆம்புலன்ஸை அழைத்து, அவர்களோடேயே மருத்துவமனையும் சென்றார்.

யோகிதாவை தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருந்தார்கள். சிறிது நேரத்திற்குள்ளாக மருத்துவமனை வளாகம் முழுவதுமே பரபரப்பாக மாறியிருந்தது. வெள்ளைநிற அங்கியுடன் அந்தக் கடவுளர்கள் விரைந்து கொண்டிருந்தார்கள். எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் நின்றார் ராஜம். இரண்டு மணி நேரம் நடந்த தொடர் போராட்டத்தின் முடிவில் ஒருவர் மட்டும் வந்து தகவல் சொல்லிச் சென்றார்.

“பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்லைங்க. நல்லவேளை சரியான நேரத்துல வந்ததால உயிருக்கு ஆபத்து இல்ல. ஆனா, நீங்க இப்ப பாக்க முடியாது. டாக்டர் சொன்னதுக்கு அப்பறம் தான் பாக்க முடியும். formalities எல்லாம் முடிச்சி பீஸ் கட்டிட்டு இந்த மருந்துகளை வாங்கிட்டு வந்துருங்க.”.

ராஜத்தை அங்கேயே உக்கார வைத்துவிட்டு, பானுமதி மருத்துவமனை formalityகளை முடிக்கச் சென்றார். அவர் ஒவ்வொரு கவுண்ட்டர்களாக அலைந்து கட்டணம் செலுத்தியும் விவரங்களை விசாரித்துக் கொண்டும் இருக்கையில், ராஜத்தின் கண்கள் அவரை வெறுமனே பார்த்துக் கொண்டு இருந்தது. இதுவரை யாருடனும் ஒட்டாமல், யாருக்காகவும் நிற்காமல், தனக்காக நிற்கவும் யாருமில்லை என வாழ்ந்து கொண்டிருந்த ராஜத்திற்கு அவர் காணும் காட்சி ஒருவித இனம்புரியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. தான் பெரிதாய் பேசக்கூடச் செய்திடாத ஒருவர் – தன்னால் எந்தப் பலனையும் அனுபவிக்காத, தன்னிடம் எந்தப் பலனையும் எதிர்பார்க்கவும் செய்யாத ஒருவர் – தனக்காக நிற்பது என்பது ராஜத்தின் மனதை உலுக்கியிருந்தது. இன்று பானுமதி மட்டும் சரியான நேரத்திற்கு வராது போயிருந்தால், யோகிதா இப்போது உயிரோடிருந்திருக்க மாட்டாள். கீழே விழுந்த யோகிதாவை முதல் ஆளாய் ஓடி வந்து தூக்கிய பானுமதி, அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். பொங்கி வழிந்த ரத்தத்தைத் தன் துப்பட்டாவால் அழுத்திப் பிடித்துக் கொண்டார். “யாராச்சும் ஆம்புலன்ஸ கூப்பிடுங்களேன்.. யாராச்சும் கூப்பிடுங்க ப்ளீஸ்” எனும் பானுமதியின் குரலும் ராஜத்தின் கதறலும் அடுத்த பத்து நிமிடத்தில் யோகிதாவை மருத்துவமனை வந்து சேர்த்தது. ஒருவழியாகப் பிழைத்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.

“யோகிதா … யோகிதாவோட அட்டெண்டெர் யாருங்க …. ” கேட்ட வண்ணம் வெளியே வந்தார் ஒரு பயிற்சி செவிலியர். யோகிதா … “யோகிதா ன்னா யோகக்காரி னு அர்த்தம். நம்ம பொண்ணுக்கு அந்த பேர் தான் வைக்கணும்.” என யோகிதாவின் அப்பாதான் அந்தப் பெயரை அவளுக்குச் சூட்டியது. என்ன காரணங்கள் இருந்த போதிலும் ஒரு பெண் குழந்தைக்கு இந்தப் பெயரை வைத்திருக்கக் கூடாதுதான்.

சிந்தனையில் இருந்த ராஜத்தை தோளில் தொட்டுக் கூப்பிட்டார் பானுமதி. “அக்கா மருந்து எல்லாம் வாங்கி குடுத்தாச்சு. கொஞ்ச நேரம் அப்பறம் தான் பாக்க முடியும்னு சொல்லி இருக்காங்க. போலீஸ் வந்துருக்காங்க என்ன நடந்ததுன்னு உங்க கிட்ட கேட்கணுமாம். என அவர்கள் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி அழைத்துச் சென்றார்.

சமூக யதார்த்தம் மக்களுக்கு காக்கி நிறத்தின் மீது அச்சத்தையும் நெருங்கமுடியாத உணர்வையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ராஜம் போன்ற நபருக்கு அது இன்னும் அதிகமும் அச்சுறுத்துவதாய் அமைகிறது. ராஜத்தின் குரலில் பயமும் பதட்டமும் மேலோங்கிக் கவலையோடு கலந்து வெளிப்பட்டது. நடந்தவையை சொல்வதற்கு அவமானமும் அச்சமும் தோன்ற, ஏதேனும் மாற்றிக் கூற முடியுமா? எனவும் அந்த மூளை ஒரு கணம் யோசிக்கத்தான் செய்தது. இவர்கள் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் அது பயனளிக்காது என்பதோடு மட்டுமல்லாமல் திரும்பவும் சுற்றி வேறு கோணத்தில் தன்னுடைய குடும்பத்தையே அது தாக்கும் என்பதால் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை.

“யார் மேலயாச்சும் சந்தேகம் இருக்காம்மா .. ?” என்ற கேள்விக்கு மட்டும், “இருக்குங்க சார். எம்புள்ள கூட காலேஜ் படிக்கிற பையன். மோகன்னு பேரு. அவம் தான் கொஞ்ச நாள் முன்ன என் பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்து தொல்லை பண்ணினது. இது அந்தப் பயலாத்தான் இருக்கணும்.” என்றார்.

யோகிதாவை திட்டியதற்கும் அடித்ததற்குமாக ராஜத்தை எச்சரித்த போலீஸ்காரர்கள், அவரிடம் இருந்து அந்தப் புகைப்படத்தையும் அதற்கான linkகையும் வாங்கிக் கொண்டனர்.

காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா அந்த புகைப்படத்தையும் அது பகிரப்பட்ட தளத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர். “இது பாக்க artificial intelligence விசயம் மாதிரி தெரியுது. ஏதோ AI website ல போட்டு எடிட் பண்ணி எடுத்துருக்காங்க. விசாரணை முடிஞ்சா தான் உறுதியா தெரிய வரும்.” எனச் சொல்லிச் சென்றனர்.

“….”

காவலர்கள் சென்ற பின்னர் இருவரும் அங்கிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தனர். மௌனம் மணிக்கணக்காய் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தது.

மருத்துவரின் பரிசோதனைக்குப் பின்னர் யோகிதாவை பார்க்க அனுமதி கிடைத்தது. ராஜமும் பானுமதியும் உள்ளே சென்றார்கள். அழுதுவிடக் கூடாது என நெஞ்சை அழுத்திக் கொண்டு முகத்தை இறுக்கிய வண்ணம் உதடுகளைக் கவனமாக மூடியபடியே உள்ளே வந்தார் ராஜம். மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின்னர் மிகவும் சோர்ந்து காணப்பட்டாள் யோகிதா. அவளால் இப்போதும் கூட ராஜத்தின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. ‘தான் இறந்திருக்க வேண்டும்’ என எண்ணினாள். இந்தச் சந்திப்புக்குப் பயந்தும் அவமானப்பட்டும் குற்றவுணர்வு கொண்டும்தான் மாடியிலிருந்து குதித்திருந்தாள். அவள் சந்திக்கப் பயந்து கடந்த தருணத்தைக் காலம் இழுத்துப் பிடித்து அவள் முன் நிறுத்தியிருக்கிறது. அவர்கள் என்ன சொல்வதென்றும் என்ன கேட்பதென்றும் தெரியாமல் விழித்தனர். ராஜம் தன் கைகளால் யோகிதாவின் தலையை வருடினார். யோகிதா அழத் துவங்கிவிட்டாள். தன் சக்தி மொத்தமும் திரட்டி அழுகலானாள். இதற்கு மேலும் இறுக்கத்தைத் தாங்கும் திறனற்றவராய் ராஜமும் அழுதார்.

வாழ்வில் உணர்ச்சி மேலோங்கி நிற்கும் தருணம், வார்த்தைகள் பயனற்றுப் போகிறது. அமைதியும் அழுகையும் அன்பின் மொழியாகிறது.

சிறிது நேர அழுகை/அமைதி. பின்னர் சம்பிரதாயமான நல விசாரிப்புகள். அடுத்து அவர்கள் பேசத் துவங்கும் நேரம் செவிலியர் வந்தார். “அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்ங்க.. நான் ஊசி போடுறேன். நீங்க வெளிய இருங்க.” எனக் கூறிப் பின் யோகிதாவின் பக்கம் திரும்பி, “எதையும் யோசிக்காம கொஞ்சம் தூங்குமா அப்போ சீக்கிரம் சரியாகிடும்.” எனச் சொல்லிவிட்டு மருந்து எடுத்துவரச் சென்றார். அந்த நேரம், வெளியே செல்ல இருந்த ராஜத்தின் கையை இழுத்துப் பிடித்தாள் யோகிதா.

“மா.. சத்தியமா நான் எதுவும் பண்ணலமா. என்ன நம்புமா ப்ளீஸ்…” என மனம் உடைந்து கூறினாள். அது உயிர்நீரெல்லாம் வற்றிப் போன பூமி வானத்திடம் இறைஞ்சுவதாய் இருந்தது. மிகுந்த கண்ணீருடன் யோகிதாவின் தலையை வருடிவிட்டு வெளியேறினார் ராஜம். அவரால் இதற்கும் மேல் யோகிதாவை சந்தேகிக்க முடியாது.

வெளியே வந்த ராஜம் அங்கிருந்த மரத்தாலான பெஞ்சில் அமர்ந்து தனது சேலைத் தலைப்பால் வாயைப் பொத்தி அழத் துவங்கினார். இது கோவத்திலோ அவமானத்திலோ வரும் அழுகை அல்ல மாறாக, யோகிதாவின் அப்பட்டமான தூய மனதின் உண்மை வார்த்தைகள் ராஜத்தின் முன்கோபம், ஆங்காரம், அதன் வழி அவர் பேசியது, அடித்தது என அனைத்து குரூரங்கள் மீதும் வெளிச்சம் பாய்ச்சியதின் விளைவாய் வருவது. இக்கண்ணீர்த் துளிகள் அவற்றை இரட்சிக்கட்டும்.

இயந்திரகதியாய் அன்றைய தினம் கழிந்தது. இருவரின் நிலையையும் உணர்ந்த பானுமதி அன்று இரவு அவர்களோடு மருத்துவமனையிலேயே தங்கினார். அவர் இருந்தது யோகிதாவிற்கும் ராஜத்திற்கும் எந்த அளவிற்குத் துணையாகவும் ஆறுதலாகவும் இருக்கும் என அவர் நினைத்தாரோ அதையும் விட அது அதிகமும் இருந்தது. மறுநாள் காலை உணவிற்குப் பின்னர் மருத்துவப் பரிசோதனையின் போது பானுமதியும் ராஜமும் வெளியே வந்து அமர்ந்திருந்தனர். யோகிதாவின் உடல்நிலையும் மனநிலையும் கணக்கில் கொண்டு, உள்ளே இருக்கும் நேரம் இருவரும் நடந்தவை குறித்து எதுவும் பேசவில்லை. தற்போது ராஜத்திற்கு பேச வேண்டும் போலிருந்தது.

ராஜம் பேச்சைத் துவங்கினார்.

“சாரிமா. உனக்குத்தான் தேவை இல்லாத சிரமம்.”

“இருக்கட்டும்க்கா. இதுல என்ன இருக்கு. அதை எல்லாம் யோசிக்காதீங்க.”

“இல்லம்மா. நீ மட்டும் இல்லாம போயிருந்தா…. நினைச்சே பாக்க முடியல”

ராஜத்தின் கையைத் தொட்டுக் கொண்டு, “ஒண்ணும் இல்லக்கா சரியா போயிடும்.” என்றார் பானுமதி.

“கடவுள் மாதிரி வந்து காப்பாத்தினமா. இல்லன்னா சொந்தம் நட்புனு உதவ யாரும் இல்லாத நெலமையில நானும் அவளுமே தனியா இருந்து அவதிப்பட்டிருப்போம்”

“ஒண்ணு சொல்லவாக்கா..? என்ன பொறுத்தவரைக்கும் இங்க யாருமே தனியா இல்ல. அப்படி யாரும் தனியா இருந்துடவும் முடியாது. அப்படி நினைச்சுக்குறது எல்லாம் வெறும் கற்பனை மட்டும் தான். ஏதோ ஒரு வகையில இங்க ஒருத்தருக்கு ஒருத்தர் தேவையா இருக்கிறோம். ஒருத்தரோட ஒருத்தர் இணைஞ்சு தான் நாம ஒரு கூட்டா – சமூகமா வாழ்ந்துட்டு இருக்கிறோம். இதுவும் குடும்பம் தான். கொஞ்சம் பெரிய குடும்பம்.”

ராஜம் புதிராகப் பார்த்தார். அவரது பார்வை அதனை அப்படியே கடத்தியது.

” ஒண்ணும் இல்லக்கா.. இந்த சமூகத்துல சாதாரணமா வாழவே நமக்கு சக மனுசங்க தேவைப்படுறாங்க. இங்க நாம யாரும் நம்மளோட எல்லா தேவைகளையும் நாம மட்டுமே நிறைவேத்திக்கிட்டு வாழ்ந்திடலையே…

உடம்புல இருக்குற உறுப்புகள் மாதிரி நாம எல்லாம் ஒண்ணா ஒரு சமூகமா வாழுறோம். மொத்தமா நமக்கான தேவைகளை நாம எல்லாருமா சேர்ந்து செஞ்சுக்குறோம். நீங்க உங்களால முடிஞ்ச அளவு இந்த சமூகத்தோட சில குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தர்றீங்க. யாரோ ஒருத்தர் அதுக்கு பதிலா உங்களுக்கான சேலையை செஞ்சிட்டு இருக்கார். இன்னொருத்தர் உங்களுக்கான செருப்பை செய்றார். அது மாதிரி நாம எல்லாம் சேர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் பிரிக்க முடியாத வகையில ஒண்ணா தான் இருக்கோம். இந்த இடத்துல இருந்து பாத்தா சக மனுசன்றது வெறும் வார்த்தையாவும் ஆதரவா இருக்குறதுன்றது பெரிய அதிசயமாவும் தெரியாதுக்கா..”

ராஜம் இப்படியான ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை. தன்னோடு வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவராக இருந்தாலும் பானுமதியின் வார்த்தைகள் அவருக்கு ஆச்சரியமான புதிய பரிணாமத்தை அறிமுகம் செய்தன.

“சாரிக்கா.. ஏதோ உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு. சொல்லிட்டேன். தப்பா சொல்லி இருந்தா… ” எனச் சொன்ன பானுமதியிடம் “இல்லமா. அப்படியெல்லாம் இல்ல. சரி தான்.” எனக் கூறி மீண்டும் கொஞ்சம் அமைதியானார் ராஜம்.

பின்னர் சிறிது நேரம் கழித்து, “இந்த எடிட், AI ன்னு ஏதோ சொன்னாங்களே என்னதுமா அது?” என்றார் ராஜம்.

” இல்லக்கா அவங்க அந்த போட்டோ ஒரிஜினலா இருக்க வாய்ப்பு கம்மி. ஒருத்தரோட உடம்புல இன்னொருத்தர் தலை வைக்கிற மாதிரிலாம் பண்ணுவாங்கல்ல… அது மாதிரி யாரோ சாதாரண ஒரு போட்டோவ இப்படி எடிட் பண்ணியிருக்கலாம் னு சொல்றாங்க.”

” என்னமா சொல்ற? அப்படியெல்லாமா பண்ணுவாங்க? ”

“ஆமாக்கா.. அதுலயே ரொம்ப தத்ரூபமா பண்ண முடியுற அளவுக்கு டெக்னாலஜி லாம் வந்துருக்கு இப்ப. அதை AI ன்னு சொல்வாங்க. அதுமாதிரி ஏதாவது AI வச்சு தான் எடிட் பண்ணியிருப்பாங்கன்னு சொன்னார்.”

“எனக்கு விளங்கவே இல்ல மா. இப்படியெல்லாமா பண்ணுவாங்க? இவ்வளவு வக்கிரம் இந்தப் புள்ள மேல எதுக்குமா? எம்புள்ளன்னு சொல்லலை ஆனா நிஜமாவே ரொம்ப நல்ல பொண்ணுமா… இது நாள் வரை எந்த ஒரு பிரச்சனையும் வந்ததில்லை. எப்படி தான் இவனுங்களுக்கு மனசு வந்துச்சோ.”

பானுமதியிடம் அதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை. சொல்லப்போனால் அது அவருக்கும் புரியாத புதிராகத்தான் இருந்தது.. அவரும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருந்தார். அது அப்படித் தத்ரூபமாக இருந்தது. இந்த AI தான் எந்த அளவுக்கு வளர்ந்து விட்டது ? ஆனால் யோகிதாவின் புகைப்படம் எங்கும் இல்லாதபட்சம் எப்படி இந்த எடிட் செய்யப்பட்டிருக்கும்? எனுமிடத்தில் அவருக்கும் குழப்பமே மிஞ்சியது.

யோகிதா, பானுமதி, காவல்துறையினர் ஆகியோரின் பேச்சுகள் ராஜத்தின் மனநிலையிலும் நடவடிக்கைகளிலும் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. அவர் இன்னும் அத்தனை இறுக்கமாய் இல்லை. ஆனால் அவர் அத்தனை இயல்பாயும் இல்லை தான். இந்தச் சம்பவங்கள் உருவாக்கியிருந்த வடுவும் குழப்பமும் இன்னமும் அவர் தலையில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

அடுத்த மூன்று நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியது வந்தது. நிலைமையின் தன்மை உணர்ந்த மருத்துவர், ஓரளவுக்கேனும் அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் சரியாகாமல் அவர்களை அனுப்ப வேண்டாம் எனக் கூறியிருந்தார். முதல்நாள் அவர்களோடே தங்கிய பானுமதி அடுத்தடுத்த நாட்கள் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு உணவும் துணிகளும் எடுத்து வந்து கொண்டிருந்தார். ராஜமோ, யோகிதாவோ நடந்தவை குறித்து எதுவும் பேசவில்லை. முடிந்தவரை, தான் யோகிதாவின் அருகிலேயே இருப்பதை ராஜம் உறுதி செய்து கொண்டார். கோவமோ அவமான உணர்ச்சியோ இப்போது அவரிடம் இல்லை. மாறாகக் குழம்பியும் பயந்தும் போயிருந்தார். இந்த AI போன்ற தொழில்நுட்பம் அவர் முன்னர் பெரியதோர் பூதமாக நின்று அச்சுறுத்துவதாய் உணர்ந்தார்.

எப்படி ஒரு படத்தை இப்படி உருவாக்க முடியும்? அப்படியே இருந்தாலும் எங்கிருந்து இவர்களுக்கு புகைப்படம் கிடைத்தது? அப்போ யார் வேண்டுமானாலும் யாரையும் எப்படியும் மாற்றிவிட முடியுமா? அப்படியே இருந்தாலும் … அப்படியே இருந்தாலும்.. என கேள்விகள் மட்டும் வளர்ந்து கொண்டே போனது. சில நேரம் தனியே அமர்ந்து யோசித்துக் கொண்டே இருக்கிறார். யாரேனும் தட்டியோ, கத்தியோ கூப்பிட்டால் மீள்கிறார். யோகிதாவிற்கு ராஜத்தின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஏனெனில் அதே குழப்பங்கள் அவளுக்கும் இருந்தது.

முன்னர் ஒருமுறை ஒரு கல்லூரி விழாவின் போது மோகன் உருவாக்கியிருந்த அனிமேஷன் வீடியோ அத்தனை பேரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இன்றுவரை கல்லூரியின் கணினித் துறையில் நடைபெறும் அத்தனை நிகழ்வுகளுக்குமான போஸ்டர்களை அவன் தான் எடிட் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறான். அவன் அடிப்படையாகவே எடிட் செய்வதில் ஆர்வமும் திறமையும் கொண்டிருக்கிறான். அன்று பேருந்து நிறுத்தத்தில் பேசும் போதும் கூட மிகவும் கண்ணியமாகத் தான் நடந்து கொண்டான். அப்படியிருக்க, அவன் இத்தனை தரம் தாழ்ந்து போவான் என்று யோகிதா எதிர்பார்க்கவில்லை. நினைத்துப் பார்க்கவே அவளுக்கு அருவருப்பும் கோபமும் குழப்பமுமாக இருந்தது. அவள் அவன் முகத்தில் கூட முழிக்க விரும்பவில்லை.

ஒரு வழியாக நான்கு நாட்கள் கழித்து ஐந்தாம் நாள் வீட்டிற்கு வந்தனர். வெளியே செல்வதாக இருந்தால் சிலநாட்களுக்குக் கூட்டமான போக்குவரத்தைத் தவிர்க்கும்படியும் முடிந்தால் சில நாட்கள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளும்படியும் மருத்துவர் அறிவுறுத்தினார். ஆனால், மீண்டும் யோகிதாவை அதே கல்லூரிக்கு அனுப்புவதா என்று ராஜத்திற்கு தயக்கம் இருந்தது. கொஞ்ச நாட்கள் வீட்டில் இருக்கச் செய்து பின்னர் அடுத்த வருடம் வேறு ஒரு கல்லூரியில் சேர்த்துவிடலாமா என யோசித்துக் கொண்டே யோகிதாவுடன் வீடு வந்து சேர்ந்தார்.

அவர்கள் வீடு வந்து சேரும் நேரம் சரியாக அந்த காவல்துறை வாகனமும் வந்து சேர்ந்தது. அவர்களது வருகை ராஜத்தை அச்சுறுத்தியது. இதுவரை பட்ட கஷ்டமும் வலியும் குழப்பங்களுமே போதும் எனக் கருதினார். தானே அவர்களிடம் இவற்றை முடித்துக் கொள்ளச் சொல்லிவிடலாம் என யோசித்தார்.

உள்ளே வந்து அமர்ந்த காவல்துறையினர் அவர்களிடம் பேசத்துவங்கினர்.

இந்தக் ‘காலம்’ ஈவு இரக்கமற்றது. நாம் எத்தனை தூரம் சந்திக்க மறுத்தாலும் அது யதார்த்தத்தை நம்முன் நிறுத்திக் காட்டாமல் விடுவதில்லை.

“நாங்க உங்க கேஸ் விசயமா நேர்லயும் cycber crime மூலமாவும் விசாரிச்சோம். அதான் என்னனு உங்க கிட்ட சொல்லி கையெழுத்து வாங்கிட்டு போகலாம்னு வந்தோம்”

“அந்தப் பையன் பேர் ஏதோ சொன்னீங்களே.. என்னது?”

“மோகன் சார்”

“ஹ்ம்ம் மோகன்… அந்தப் பையனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குற மாதிரி தெரியலைங்க.”

“சொல்லப் போனா வேற யாருக்குமே கூட சம்பந்தம் இல்லன்னு தான் சொல்லணும்.’

தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த ராஜம் “இல்ல சார். புரியல” என்றார்.”

“ஆமாங்க. யாருக்கும் சம்பந்தம் இல்ல தான்.”

“இந்த AI டெக்னாலஜி ஒரு புகைப்படத்தை அதுவா வரைஞ்சு இருக்கு. அது பார்க்க உங்க பொண்ணு மாதிரி இருந்திருக்கு. அது தான் விசயம்.”

“அதுவா வா .. ? ”

“ஆமா மா.. சில AI தளங்கள் இருக்கு அது கிட்ட நீங்க என்ன type பண்ணி கேக்குறீங்களா அது அதுக்கான போட்டோவை குடுக்கும். dog picture ன்னா நாய் படம் குடுக்கும், அதுவே dog sat on a wall ன்னா நாய் சுவத்துமேல உக்காந்து இருக்குற மாதிரி போட்டோவை வரைஞ்சு குடுக்கும்.”

“அதெப்டி சார்….? அதுவும் அப்படியே அச்சு அசலா என் பொண்ணு மாதிரியே.. ?”

“உங்களுக்கு புரியுற மாதிரியே சொல்றேங்க. நீங்க குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தர்றீங்கல்ல? அந்தக் குழந்தைகள் தினமும் நிறைய மனுசங்களை பாக்குறாங்கல்ல.. அவங்க கிட்ட நீங்க ஒரு மனுசனை வரைய சொன்னா, அவங்க இதுநாள் வரைக்கும் பார்த்த மனுச உருவங்கள் எல்லாம் வச்சு அவங்களா ஒரு உருவத்தை வரைவாங்க. அதே போலத் தான் இப்ப நிறைய car-ர அவங்க கிட்ட காட்டிட்டு ஒரு கார் வரைய சொன்னா அவங்க பாத்ததுல எல்லாம் இருந்து அவங்களுக்கு என்ன கற்பனை தோணுதோ அதை வரைவாங்க இல்லியா? அதே போல தான் அந்த software க்கு இவங்க நிறைய sample போட்டோ காமிச்சு இது தான் ஒரு பொண்ணு, இது ஒரு பையன், இது கார், இது train ன்னு சொல்லி இருப்பாங்க.. அப்பறமா அதுகிட்ட train with a boy standing on it ன்னு கேட்டா அது பாத்த train களை எல்லாம் வச்சு கற்பனையா ஒரு train ம் அதுக்குமேல கற்பனையா ஒரு பையனையும் வரையும்.”

நிறுத்தி இருவரையும் பார்த்து பின்னர் தொடர்ந்தார்.

“அப்படி எவனோ naked tamil college girl மாதிரி ஏதோ போட்டிருக்கான்.. அது ஒரு படத்தை வரைஞ்சு குடுத்து இருக்கு. அந்தப்படம் உங்க பொண்ணு மாதிரி இருந்திருக்கு. நிறையப் படங்களை பார்த்து அது கற்பனையா ஒரு படத்தை வரையுது. ஆனா, அது அப்படி கற்பனையா வரையுற ஒரு படம் நேரில் இங்கிருக்கும் பலகோடிக் கணக்கான மக்கள்ல எவரோ ஒருவர் மாதிரி இருக்க வாய்ப்பு இருக்குல்ல. அது ரொம்ப ரொம்ப ரொம்ப rare ஆனது தான். ஆனா, யோகிதா விசயத்துல இதான் பிரச்சனை. இதுல மத்தபடி நேரடியா யாருக்கும் தொடர்பு இல்ல.”

“சார் எப்படி சார் ? எப்படி இது நடக்கலாம்? எம்பொண்ணுன்னு இல்ல சார் இங்க எத்தனை பேர் இருக்காங்க யாரோட பொண்ணுக்கோ இது திரும்பவும் நடக்காதுன்னு என்ன சார் உத்திரவாதம்? அந்த கம்பெனிக்காரனை எப்படி சார் விடுறது? இது எல்லாத்தையும் நிறுத்தணும் சார்..”

தனக்கு என போராடிய இதுநாள்வரையிலும் அதிகாரம் உள்ளவர்கள் மத்தியில் ராஜம் இப்படி அழுத்தமாய் உறுதியாய் பேசியதில்லை. முதல் முறை ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் எனப் பேசும் இடம், அவரது வார்த்தைகள் அத்தனை அழுத்தமாய் வந்து விழுகிறது. ஆனால், ராஜம் அதை எல்லாம் கவனித்துப் பேசவில்லை.

“உங்க ஆதங்கம் புரியுதுமா ஆனா, இதான் இங்க யதார்த்தம். இது கம்பெனி இல்ல, தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துற கம்பெனிகள் நிறைய இருக்கும். நம்ம அரசாங்கம் நினைச்சா இந்த ஒரு வெப்சைட்ட ban பண்ண முடியும். ஆனா எத்தனை நாளைக்கி? உலகமே இப்ப internet ல அடங்கிருச்சு. ஒருத்தனை ban பண்ணினா இன்னொருத்தன் இதே மாதிரி இன்னொண்ணோட வருவான். இல்ல இவனே வேற வேற பேர்லயும் வருவான். வாழப் பழகுறது தவிர வேற வழி இல்லமா. ” என சொல்லித் தேவையான இடங்களில் கையொப்பம் வாங்கிச் சென்றார்.

அவர்கள் வீட்டை விட்டு சென்றதும் யோகிதாவும் ராஜமும் பழையபடி யோசனைக்குள் ஆழ்ந்தனர். அம்மா தன்னை எப்படியும் கல்லூரிக்கு அனுப்பப்போவதில்லை என சோகமாய் ரூமுக்குள் சென்றாள் யோகிதா. ராஜம் எதையோ யோசித்த வண்ணம் சமையலறை சென்றவர் அங்கிருக்கும் பொருட்களோடு தானும் ஒன்றாய் அசைவற்று அமர்ந்திருந்தார். யோகிதா விஷயத்தில் முதலில் இருந்து இப்போது வரை வந்த அத்தனை பேச்சுகளையும் அசைபோட்டுக் கொண்டிருந்தார். அன்று இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

இரவு முழுதும் யோசனையில் ஆழ்ந்திருந்த ராஜம், காலையில் சீக்கிரம் எழுந்து கொண்டார். சன்னல் வழி அவர் பார்த்தபோது சிவந்திருந்த வானத்தின் நிறம் அவர் முகத்தில் பட்டுப் பிரகாசித்தது. சமையல் வேலைகள் அனைத்தும் முடித்து யோகிதாவை எழுப்பி கல்லூரிக்குக் கிளம்பச் சொன்னார். அவசரம் அவசரமாகச் சாப்பிட்டு ஆட்டோ பிடித்து ஓடிவந்தார். யோகிதாவை ஏறச்செய்து தானும் ஏறினார். யோகிதாவிற்கு என்ன நடக்கிறது என்பதை உள்வாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

கல்லூரி வந்தது. ஆட்டோவில் இருந்து இறங்கிய ராஜம். யோகிதாவின் கரங்களை இறுகப் பற்றி கொண்டார். அந்தப் பற்றுதல் ஓராயிரம் கதைகளைச் சொன்னது. அவளது முகத்தை நேரே பார்த்துப் பேசிச் சென்றார். தற்போது அதே ஒளி அவளது முகத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

“இந்த உலகத்துல கஷ்டநஷ்டங்கள் இருக்கத்தான் செய்யுது. ஆனா, அதையும் தாங்கி தான் நாம வாழ்ந்து ஆகணும். இந்த உலகத்தின் ஆபத்துகளை ஓடி ஒளிஞ்சு கடந்துடலாம்ன்னு பாத்தேன். இல்ல முடியாதுன்னு இந்தக் காலம் அழுத்தமா உணர்த்திடுச்சு. அதுக்கு குடுத்த விலை தான் அதிகம். இருக்கட்டும். இனியும் ஒளிஞ்சு ப்ரயோஜனம் இல்ல. ஆபத்துக்கு பயந்து பயந்து ஓடுறத விட அத சந்திக்கிறது மேல். உன்மேல எந்தத் தப்பும் இல்ல. உன் மேல எந்தத் தப்பும் இல்லாத இடத்தில நீ எதுக்கும் பயப்படாத. எதுக்கும்… ஹ்ம்ம்..?

அப்பறம் .. அந்த மோகன்னு இல்ல. எந்த பையனா இருந்தாலும் பேசினா, உனக்கு பிடிச்சிருந்தா பேசு. இல்லன்னா பேசாத. உன் இடம் என்னன்னு நீ தெரிஞ்சுக்கோ. யாராச்சும் உன்ன தொல்லை பண்ணினா எந்த யோசனையும் வேண்டாம். நேரா அம்மாகிட்ட வா. நான் இருக்கேன்.

நான் தனியா இல்ல. நீயும்.”


Only artificial illustration art is used in this post.

எழுதியவர்

தேவா
தமிழகத்திலுள்ள செங்கல்பட்டு நகரத்தில் வசிக்கும் தேவா ஒரு இடதுசாரி சிந்தனையாளர். தழல் அமைப்பைச் சேர்நதவர். மக்கள் நலன், அதற்கான வழி எனுமிடத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வியலை மார்க்சியத்தின் வழி நின்று பேசுபவராக திகழ்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x