2 January 2025
Taliban article

  உலக வரைபடத்தில் இருந்து  ஒரு தேசம் அம்மக்களின் கண்ணீரில், கிழிந்து நைந்து போன நிலையில் அறியப்பட்டிருக்கிறது. கைவிடப்பட்ட அந்நாட்டு மக்களின் கதறல்கள்  கேட்காத வண்ணம் அனைவரின் காதுகளையும் ஒரு சொல் இறுக மூடி உள்ளது. அந்த சொல் தலிபான்.

“பெண் அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்துக்கு ஆப்கன் மக்கள் அனுப்புவார்களா?” என்று பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, தலிபான்கள் சிரிக்கின்ற காணொளி, அவர்கள் எந்த அளவுக்கு பெண்ணையும்,அவள் உரிமைகளையும் மதிக்கிறார்கள் என்பதை விடவும்,அந்தப் பெண் பத்திரிக்கையாளரை கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டுவிட்ட  ஒரு விலங்கைப் போலப் பார்ப்பது  அடிமைத் தனத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

வீடியோ பதிவாகி கொண்டிருப்பதை பார்த்ததும் தாலிபன்களில் ஒருவன்,வீடியோ எடுக்காதே நிறுத்து என தனது அதிகாரத்தின் சுயத்தை  கட்டவிழ்க்கிறான், இது அத்தனையும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

பெண்கள் மீதான அடக்குமுறை: 

1990களில் ஆட்சியைக் கைப்பற்றியபோது தலிபான்கள் பெண்கள் மீது கடுமையான அடக்குமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வந்த நிலையில், மறுபடியும் அப்படி ஒரு சூழல் ஏற்படுமோ என்ற கலக்கத்தில்  பெண்கள் உள்ளனர்.”இந்த 24 மணி நேரத்தில் தங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது” என்று  பெண் பத்திரிகையாளர்களும் அச்சம் தெரிவித்திருந்தது, தலிபான்களின்  அதிகாரத்தில் பெண்கள்  அடைந்த வன்மத்தின் உச்சம்.

மக்களைக் காக்க வேண்டிய அரசானது நிலையற்ற தன்மையுடன் நாட்டிலிருந்து  நகர்ந்து சென்று விட, பாம்பின் கையில் அகப்பட்ட எலிகளைப் போல,  சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது பெண்கள் நிலை.

அதுமட்டுமல்ல,இனி ஆப்கனின் பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், கல்விக்கூடங்கள் கதி என்னாகும் என்ற அடுத்த கவலையும் எழுந்துள்ளது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்களின் நிலை என்னவாகப் போகிறது.

பெண்களின் நிலை:

தலிபான்களை பொறுத்தவரை, பெண்கள் வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்க வேண்டியவர்கள் என்கிற முட்டாள்தனமான வறண்ட கொள்கையில்  மூழ்கிக் கிடப்பவர்கள். இதனால் தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் மிக கொடூரமான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டனர். அவ்வாறான சூழ்நிலையில் 2001 -இல் தாலிபான்கள்  எதேச்சாதிகாரத்துக்கு முடிவுரை எழுதப்பட்டது.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பட்டில் வந்த போது அங்குள்ள பெண்களின் உரிமைகள் கேள்விக்குறியானது. எனினும், இஸ்லாமிய சட்டத்தின்படி பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என்ற தலிபான்கள் கூறினர். இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஷேக் அப்துல்பாகி ஹக்கானி காபூலில் இருபாலர் வகுப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் பிற இசை நிகழ்ச்சிகளில் பெண்களின் குரல் ஒலிக்க தடை, ஊடகங்களில் பணிபுரிந்து வந்த பெண்கள் பணிநீக்கம் உள்ளிட்ட  கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இதனிடையே பெண்கள் மீதான தாக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் ஆப்கனில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் என்ற பெருமைக்குரியவர் ஜரீபா. தாலிபான்களின் அடுத்த இலக்கு தாம் எனவும், தானும் தனது குடும்பமும் பிழைப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்று அவர் அளித்திருக்கும் நேர்காணல், ஒட்டுமொத்த ஆப்கன் பெண்களின் நிலையை மிகுந்த அச்சத்துடன் கூறுகிறது.  “தாலிபான்கள் வருவார்கள்.. என்னைப் படுகொலை செய்வார்கள் என்பதற்காக நான் காத்திருக்கிறேன். எங்கள் குடும்பத்துக்கு உதவுவதற்கு இப்போது யாரும் இல்லை. என் கணவர் உட்பட குடும்பத்தினருடன் இங்குதான் இருக்கிறேன். என்னால் என் குடும்பத்தினரை விட்டுச் சென்றுவிட முடியாது. தாலிபான்கள் எங்களைத் தேடி வந்து கொலை செய்வார்கள். அதற்காக நான் இந்த தேசத்தைவிட்டு தப்பி ஓட முடியாது. அப்படி எங்குதான் தப்பி போவது” என்கிறார் ஜரீபா கபாரி.

ஆப்கனில் உள்ள ஒரு நகரத்தின் முதல் உரிமை பெற்ற பெண் மேயருக்கு இந்த நிலைமை என்றால், பிற  பெண்களின்   நிலை சொல்ல இயலாத துயரத்திற்குள் சிக்கிச் சிதைந்து கொண்டிருக்கும் என்பதைக் கூறவும் வேண்டியதில்லை.தலிபான் ஒரு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. இதில் 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சிறுமிகள் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட அனைத்து விதவை பெண்களின் பட்டியலும் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆப்கன்  பெண்கள், கடந்து வர முடியாத ஒரு நரகத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். 

பெண்கள் சதைப் பிண்டங்கள்:

பத்திரிகையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, தலிபான்கள் தாங்கள் கடத்தும் பெண்களை தங்கள் போராளிகளுக்கு திருமணம் செய்துவைத்து பின்னர் பாகிஸ்தானின் வஜீரிஸ்தானுக்கு இவர்களை அனுப்பப்போவதாக உறுதியளித்துள்ளனர். முஸ்லீம் அல்லாத பெண்கள் மதம் மாற்றப்படுவார்கள். தாலிபான்கள் இந்தப் பெண்களை தங்கள் போராளிகளுக்கு அடிமைகளாக்க விரும்புகிறார்கள். போராளிகள் இந்தப் பெண்களை பாலியல் ரீதியாக  வார்த்தைகளில்  கூற இயலாத வன்மத்துடன் துன்புறுத்துவார்கள் என்பதும் மிகுந்த அதிர்ச்சி அளிக்கக் கூடியது.

உலகெங்கிலும் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் அத்தனை கலவரங்கள், உள்நாட்டுப் பூசல்கள் போன்ற அனைத்திலும் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான் என்பது வரலாற்றின்  பக்கங்களில் பெண்களின் வலியாலும், அவர்களின் உடலின் மீது நிகழ்த்தப்பட்ட வக்கிரத்தின் வெளிப்பாடாகவும், அவர்களின் சதைத் துணுக்குகளால்  பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்களின் கொடுங்கோல் மனப்பான்மையை மதம் மற்றும் ஷரியத் சட்டங்களின்  முகமூடி அணிந்து அதற்குள் தன்  குரூர புத்தியை இன்னும் தீட்டிக் கொண்டிருக்கும் தலிபான்கள் மனித குலத்தின் சாபக்கேடு.

62 வயதான தலைமை ஆசிரியர் ஒருவர் ஆப்கனில் ஏற்பட்ட பல போர்களையும்  நெருக்கடியான சூழலையும்  தன்னுடைய கண்களால் கண்டவர். தலிபான்களின் வருகை அவரை பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவரின் பள்ளியில் பணியாற்றும் 20 ஆசிரியர்களில் 16 நபர்கள் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 30 வயதினர்.

“அவர்களின் வாழ்க்கையை என்னால்  பகடையாக வைக்க இயலாது” என்று  பத்திரிகையாளரிடம் பேசிய  அந்த தலைமையாசிரியரின் துயரமும் வெறுமையும்  கலந்த வார்த்தைகளை நம்மால் கடந்துபோக இயலாது.

தலிபான்கள் வசம் ஆப்கானின் பெரும்பகுதி சென்றுவிட்ட நிலையில், இதில் அதிகம் பாதிப்புக்கு  உள்ளாகி இருப்பது பெண்கள்தான். ஆப்கனின் ஹேரத் நகரைச் சேர்ந்தவர் ஜாஹிரா. தலிபான் ஆதிக்கம் இல்லாத பகுதியில் பிறந்த வளர்ந்தவர் என்பதால் கல்வி கற்பதிலும் சுதந்திரமாக இருப்பதிலும் அவருக்கு எவ்வித பாதிப்பும் வந்ததில்லை. தற்போது உள்ளூர் என்.ஜி.ஓ. ஒன்றில் இணைந்து பாலின சமத்துவத்திற்காக பணியாற்றி வருகிறார்.

தற்போது ஜாஹிரா வசித்துவரும் பகுதியைத் தலிபான்களை கைப்பற்றி தங்கள் கொடியையும் ஏற்றியுள்ளனர். இதையடுத்து ஜாஹிரா, அவரது தாயார், தங்கைகள் மட்டுமின்றி அங்குள்ள பெண்கள் அனைவருமே வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

இத்தனை ஆண்டுகள் கடினப்பட்டு கற்று முன்னேறியுள்ள தன்னால் எப்படி வீடுகளுக்குள் மறைந்து வாழ முடியும் என்று பெரும் அதிர்ச்சியுடன் ஜாஹிரா  ஊடகத்தில் தெரிவித்துள்ளது பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் என்ற நிலையிலிருந்து, ஒரு உயிரியாகக் கூட, பெண் நடமாடுவதற்கு இயலாத நிலையினையே காட்டுகிறது. தலிபான்கள் தங்களது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இப்பகுதிகளில் இப்போது புகைபிடிப்பதற்கும், தாடியை வெட்டுவதற்கும் பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1990 கசப்பான காலம்:    

1990 களில் தலிபான் ஆட்சி, பெண்களுக்கு மிகவும் மோசமான, கசப்பான காலங்களை  பெண்களுக்கு வழங்கியிருந்தது. பெண்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மறுக்கும் சட்டங்கள் அமலில் இருந்தன. கல்வி கற்றலில் துவங்கி அவர்களின் நடமாட்டம் மறுக்கப்பட்டு  பறவைகள்  மற்றும் விலங்குகளுக்கு இருந்த சுதந்திரம்,உரிமை  கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை வலியுடன் பதிவு செய்திருக்கிறது வரலாறு. அணியும் ஆடைகள் மீது தீவிரமான கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற பல சட்டங்கள் இதில் அடங்கி உள்ளன.

“அன்றைய இருண்ட காலம் பற்றி நாங்கள் கேட்டது மட்டுமே உண்டு.  அதனை நினைக்கும் போதே பயமாக உள்ளது. வீட்டில் அமர்ந்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் இருந்த அந்த காலத்திற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை” என்று தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கூறியுள்ள கருத்து ஆப்கன் பெண்களின் நெருக்கடியான நிலையினைத்  தெளிவுபடுத்தும்.

பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது என்று எங்களுடைய படைகளுக்கு பயிற்சி அளிக்கும்வரை வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தெரிவித்திருக்கும் கருத்து நாம் எத்தகைய காலத்தில் வாழ்கிறோம் என்பதும் ஆப்கானிஸ்தானின் தலிபான்களின் விதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும். சொல்லப்போனால் தலிபான்கள் முஸ்லிம்கள் என்பதைவிட, மிகுந்த கடுமையான  சட்டங்களை கைக்கொண்ட மத அடிப்படைவாதிகளை விடவும் மோசமானவர்கள், மனிதத்தன்மையற்றவர்கள் என்பது அவர்களது வார்த்தைகளும் செயல்பாடுகளும் நமக்கு விளக்கும்.

நாட்டை விட்டு வெளியேறுதல்:

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் காத்துக் கிடக்கின்றனர், தங்கள் தாய்நாட்டை விட்டு, தங்களது நாட்டின் நிழல்கூட தங்கள் மேல் படர வேண்டாம்  எனக் கருதும் மக்கள் எவ்வகையான காட்டுமிராண்டித்தனமான  வாழ்க்கைக்குள் கடந்து வந்திருப்பார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும். விரக்தியிலும் கைவிடப்பட்ட நிலையிலும் காணப்படும் மக்களுக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லை என்பது இந்த உலகத்தை எதிர்நோக்கியுள்ள அவமானம். ஐநா வின் ஆப்கன் நிலைபற்றிய கூட்டம் நிதானமாகவும், மிகுந்த யோசனை உடனேயே நடந்தேறியுள்ளது. மிகவும் மோசமான சூழலில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்பதற்கான உடனடித்தீர்வைக் காண எந்த நாடும் முழுவீச்சுடன் முன்வரவில்லை என்பது உண்மை.

ஜூன் மாதத்திற்கு முன்பாகவே அமெரிக்கப் படைகள் ஆப்கனில் இருந்து தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக் கொண்டே இருந்தன. 90 சதவீத அமெரிக்க படைகள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறிய காலத்தில், ஏறக்குறைய 20 ஆண்டு காலமாக தாங்கள் உணர்ந்தும், இயங்கியும் சுவாசித்தும் வந்த சுதந்திரத்தை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மிகுந்த அதிர்ச்சியுடன் இழந்து கொண்டே இருக்கின்றனர்.

 

வெறுமையாய் விமானப்பயணம்:

ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி (Ashraf Ghani) நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கக்கூடிய நிலையில், காபூல் நகரம் தலிபான்களின் கைக்கு சென்ற பத்து நாட்களில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் விமானம் வழியாக வெளியேறி இருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்   ஆப்கானிஸ்தானின் கொடூரத்தையும், அங்கிருந்து வெளியேற மக்கள் காட்டும் அவசரத்தையும் எளிதில் யூகிக்க முடிகிறது. காபூலைத் தலிபான்கள் கைப்பற்றியதால் பீதியடைந்த உள்ளூர் அரசு அதிகாரிகள், பெண்கள் குழந்தைகள் அனைவரும் வெளிநாட்டுக்குத் தப்பி செல்வதற்காக விமான நிலையங்களில் குவிந்துள்ளனர். அதேபோல் காபூல் நகரைச் சேர்ந்த பொதுமக்களும் உயிருக்கு பயந்து அண்டை நாடான பாகிஸ்தானை நோக்கிச் செல்கின்றனர்.

விமானத்தில் முண்டியடித்து ஏற முயன்ற, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்பற்ற பயணங்களை குழந்தைகளும் பெண்களும் மேற்கொள்கின்றனர். விமானத்தின் இறக்கைகளில் அமர்ந்தபடி பயணித்த 3 பேர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். ஆப்கனின் அனைத்து நகரங்களும் சொல்லவொண்ணாத துன்பத்தை தனக்குள் சுமந்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது. குருதியினால் உறைந்த நகரங்களை காலம் தனக்குள் மௌனமாக அனுமதித்தபடி கடந்து கொண்டே இருக்கிறது.

 

குண்டுவெடிப்பில் அமிழ்ந்த அன்றாட வாழ்க்கை:

குண்டு வெடிப்புகளாலும், துப்பாக்கிச்சூடு களாலும் தினந்தோறும் மக்கள் தங்களை இழந்து கொண்டிருக்கக்கூடிய இத்தகைய கொடுங்கோன்மை காலங்களின் முடிவு எதை நோக்கியது என்பதும் ,தலிபான்களின் கட்டுப்படுத்த முடியாத இவ்வகையான காட்டுமிராண்டித்தனம் உலகெங்கும் பரவுவதற்கான சூழ்நிலையை நாம் அனுமதித்து அமைதியாக கடந்து கொண்டிருக்கிறோம் என்பதும் உலக நாடுகளுக்கு ஆப்கானிஸ்தானின் இக்கடுமையான காலங்கள் புலப்படுத்தும் உண்மை.

என்ன செய்வது என்று அறியாத மக்கள் தங்கள் சொந்த மண்ணைவிட்டு வெளியேறுவதற்கு விரும்புகிறார்கள் என்றால் தங்கள் தாய்நாட்டைப் பற்றிய கரிய பிம்பத்தையும், ரத்தத்தின் பிசுபிசுப்பு  படிந்த தங்கள் வாழ்க்கையை உதறிவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்பதான நிலையினை அச்சத்துடன் இந்த உலகத்திற்கு முன்வைக்கின்றனர் ஆப்கன் மக்கள்.

உலகெங்கிலும் வாழும் மக்கள் மீது, தங்களது குரோதத்தையும், கசப்பினையும் இன அழிப்பையும் மற்றொரு சமூகத்தினர் செலுத்தி வருவதை வரலாற்றின் இருண்ட பிரதி பதிவு செய்தே வருகிறது. சக மனிதர்களிடம் இருந்து தலிபான்களுக்கு எதிரான, எந்த எதிர்ப்பும் இல்லாத நிலை இருப்பினும், இயற்கை தனது எதிர்ப்பை கூடிய விரைவில் காட்டும் என்ற அனைவருக்குமான நமது பொதுப்புத்தியில் படிந்த உண்மை சிறிது ஆசுவாசத்தை இந்நேரத்தில் நமக்கு வழங்கக் கூடும்.

 

எழுதியவர்

அ.ரோஸ்லின்
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x