கட்டாந்தரையிலாடும் ஆடு புலி ஆட்டம்
ஆளுக்கு ஒரு கை போட்டு
தாயம் சேர்த்து நாலு ஆறு சுண்ட
என்றும் கட்டங்களுக்குத் தெரிவதில்லை
பக்கத்து புஞ்சையில் இரை தின்ன குட்டியை
ஊர் பஞ்சாயத்து பங்கு வைத்த கதையை.
ஆலமரத்தின் பொந்துகளில் கால் வைத்து
உச்சியடையும் வெயிலும்
இரை தின்னச் செல்லும் மறியும்
பறவைகளின் கூடுகளைப் பறிப்பதில்லை.
பத்து மணிக்கும்
இரண்டு மணிக்கும்
எப்போதோ வரும் டவுண் பஸ்சுக்கும்
காத்திருக்கும் செல்லாயி
ஆட்டோ பிடித்து டவுணில்
வியாழன் சந்தையில் ஆட்டிற்கு
விலை பேசி வருகிறாள்.
தூரத்தில் வரும் ஆட்டோவை வெயில் பூ
வரவேற்கவே செய்கிறது.
கால் மணி அரைமணி
நேரத்தைக் கரைக்கும் கருப்பசாமி
ஆலமரப் பொந்தில் குடும்பம் நடத்தும்
கிளியை வீட்டிற்கு முகவரி மாற்றியிருந்தான்.
ஆடு புலி ஆட்டத்தின்
கடைசி தாயத்துக்காக
காத்திருக்கையில்
ஒரு மழை எல்லாவற்றையும்
நனைத்திருந்தது.
வீரசோழன் க.சோ.திருமாவளவன்
எழுதியவர்
-
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், அருகன்குளம் எனும் கிராமத்தைச் சார்ந்தவர். மதுரை அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டமும் பயின்றவர்.
"தமிழா தமிழா" எனும் கவிதைப் போட்டியில் மொரீசியஸ் நாட்டு துணைக் குடியரசுத் தலைவர் தமிழ்த்திரு வையாபுரி பரமசிவம்பிள்ளையிடம் முதல் பரிசைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
"பேச்சியம்மாளின் சோளக்காட்டுப்பொம்மை" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகி உள்ளது.
இதுவரை.
- கவிதை18 July 2021காத்திருக்கும் கடைசித் தாயம்