சனிக்கிழமைகளில்
நினைவில் வரும் அப்பாவின்
நினைவு
தவிர்க்க முடியாததாகிவிடும்.
படுக்கையறைலிருந்து
வெளிவரும் என்னிடம்
செய்தித்தாளுடன் கண்
கண்ணாடியின் இடைவெளி பார்த்துப்
பெயர் சொல்லி அழைத்து
நல்லாத் தூங்கினியா என்பார் வரவேற்பறையில் இருந்து.
அம்மா தந்த தேநீர் அருந்தி
வா தலைமுழுகலாமென
கிண்ணம் நிறைய
நல்லெண்ணையுடன் தெருவெங்கும்
குரல் கொடுப்பார்.
உட்கார வைத்து
ஆவி பறக்கத் தேய்க்கும்
அப்பாவின் கைகளில்
அத்தனை மருத்துவம்தான்.
கண்ணில் ஒரு சொட்டு
காதில் சில சொட்டு
தொப்புள் நிறைய நிறைய
கை கால் விரல் நகங்கள்
எனச் சொல்லிச் சொல்லி
ஊத்தித் தேய்த்து
செக்கில் ஆட்டும் குளவி போல
எண்ணெயில் குளித்திருப்பேன்.
வெது வெது நீரில்
நான் குளிக்க
கையில் சீயக்காயுடன் தேய்த்து
முன் தேய்த்த
எண்ணெய் முழுதையும்
போக்கிடுவார்.
வாரக்களைப்பு முழுதும்
ஒற்றை எண்ணெய்க்குளியலில்
ஆவியாய்ப் பறந்து போகும்.
இப்போதும்
எண்ணெய் தேய்த்துக்
குளிக்கிறேன்
என் கைகளை அப்பாவின் கைகளாய்ப் பாவித்துக் கொண்டு.
அம்மாவிற்கும்
அக்காவிற்கும் என் கைகள்
அப்பாவின் கைகளில்லையே.
நிகழ்வுகளைச் பூமி சுழற்றிக் கொண்டிருக்கையில்
எண்ணெய் தேய்த்த
கன்னங்கள் வழியே வழிந்தோடும் கண்ணீரை
அரூபமாயத் துடைக்கிறது அப்பாவின் விரல்கள்.
– ஜெகநாதன் பெருமாள்
எழுதியவர்
இதுவரை.
- கவிதை18 July 2021அப்பாவின் “கை” ராட்டினம்