13 October 2024
nizhali story - Copy

ன்னக்குழியில் விழுந்தோடும் வியர்வை சரிந்த அழகை கண்ணாடியில் பார்த்து ” நா மட்டும் பொண்ணா பொறந்திருந்தா இந்த ஊரே என் அழகுல சொக்கி பின்னால சுத்தும் ” என்று கன்னம் கிள்ளி போட்டு கொள்வாள் புவனிகா. கருப்பு பொட்டு வைத்து வெள்ளை சாந்து பொட்டை சிறு புள்ளியாக வைத்துக்கொள்ளும் நெற்றியில் பிறை கொஞ்சம் சந்தன நிறத்தில் மின்னும். இன்னும் வெளிவராத கூந்தலை நெற்றி பரப்பி சுருட்டி விட காற்றில் கலந்து மீண்டும் பழமை அடையும்.

இத்தனையும் ரசிக்கும் ஒரு கண்ணாடியை எப்போதும் கையிலே வைத்திருப்பாள். பெண்ணாக மாறும் கணங்களை மொட்டு மலர்வது போல உணர்ந்தாள். இப்படி தன்னை ரசித்த நாட்கள் நரகமாக இருந்ததை உணர்ந்த போது பெரிதும் செத்து கொண்டிருந்ததை மட்டுமே உணர்ந்தாள்.

கண்ணாடியின் முன் நின்ற தனது பிம்பத்தில் கீறல் விழுந்து இரத்தம் கசியும் வலியினால் உணர்வற்று சிரித்தாள்.

அப்பா அடித்த போதும் , அம்மா அழுது புலம்பிய போதும் தன்னை மாற்றிக் கொள்ள நினைத்தறியாத மனம். உதட்டு சாயம் கன்னத்தில் அப்பி கிறுக்கும் படி ஓங்கி உதைத்த அப்பாவின் கால்கள் மீது வெறுப்பே வந்தது இல்லை. எப்படியானாலும் நான் இப்படி தான் ஆக போகிறேன் என்று தெரிந்த பிறகு தீர்மானமாக எதிர்த்து நின்றாள்..

பல மாதங்கள் பேச்சாமல் இருந்தாள் உயிர் சுமந்தவள் . சமாதானம் செய்தாளே தவிர ஒருமுறை கூட தன் மாற்றத்திற்கு அழவில்லை.

இத நானாவே தேடி போகலைம்மா . என்னுடைய உயிரோட தேடல். என்னோட உணர்வு. நா பொண்ணா மாறி போனது காலத்தோடு மாற்றம். என்னால இதை சரி செய்ய முடியாதும்மா. எனக்கு உன்ன விட்ட யாரும்மா இருக்கா. நீ தானே என்ன பெத்தவ. என்ன புரிஞ்சி எனக்கு துணையா இரும்மா என்று பெத்த மனதின் பித்தை மாற்றி உறவை பிடித்தாள்.

அப்பா மட்டும் இன்னும் ஊரார் பேச்சிக்கு உடைந்து கொண்டிருக்கிறார். இதற்கு மேல் இடம் மாற்றம் வேண்டுமென தான் தன் போன்ற சக உயிர்களோடு கூடினாள்.
அம்மா தினமும் ஒருமுறை அழைப்பு விடுத்து பேசியதின் ஆறுதல் எப்போதும் மகிழ்ந்திருந்தாள். வாரம் ஒருமுறை வரும் அண்ணனை அன்போடு எதிர் கொள்வாள்.
யாருக்கும் தெரியாமல் முதல் முறை அம்மாவின் புடவையை கட்டி பார்த்த போது அண்ணனிடம் மாட்டிக்கொண்டாள். பயந்தவளுக்கு வியப்பு தான்‌ புதிதாக ஒரு புடவை வாங்கி கொடுத்தான் அண்ணன். அந்த சேலையை அவளுக்கு கட்டி விடவும் உதவினான். தன்னை பெண்ணாக ஏற்றுக் கொள்ளும் அண்ணன் மீது தாய்மை பெருக்கெடுத்தது.
அப்பாவும் அம்மாவும் வெறுக்கும் பெண்மையை அண்ணன் ஆதரித்ததில் அண்ணன் உயிரானான்.

பலமுறை தன் உதட்டு சாயத்தை தொட்டு கன்னம் தடவும் அண்ணனின் நடவடிக்கையை பார்த்து பயந்து போனாள். அண்ணனும் தன் போல மாற நேர்ந்திடுமோ என்ற பயத்தில் அம்மாவிடம் சொல்லி அண்ணனின் வருகையை நிறுத்தினாள்.

அம்மா செய்த முறுக்கும் , அதிரசமும் மூக்கை பிளக்க மூன்று மாதங்கள் கழித்து அண்ணன் வந்திருந்தான். நீண்ட நாட்களுக்கு பின்னான வருகையில் அன்பின் பரிதவிப்பை அள்ளி கொடுத்து கவனித்தாள்.

“என்ன நீ மட்டும் தான் இருக்கே…”

“இல்லண்ணா நீ வரேனு நான் இன்னைக்கு வசூலுக்கு போகலை . எல்லாரும் காலைலயே போயிட்டாங்க. சாயங்காலம் வருவாங்க. ராத்திரி வருவாங்க. அவங்க அவங்க விருப்பம் தானே ” என்று தன் கரகரத்த பெண்மையின் குரலில் சொல்லி முடித்தாள்.

”இம்… ஆளு பேச்சி எல்லாமே மாறிபோச்சே. அசல் பொண்ணு மாதிரியே இருக்கியே” என்றவனின் பார்வை பல அர்த்தங்களில் பிளவுபட்டு இருந்ததை அவள் கவனிக்கவில்லை.

“அட.. போண்ணே போயி கை கழுவிட்ட வா. உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.”

“என்னது நீ சமையலா. பயங்கர மாற்றம் தான். உடனே சாப்டு பாக்கனுமே . நான் சாப்பிடாம யாரு சாப்பிட எடுத்து வை.”

அண்ணனின் அத்தனை பிரியங்களையும் மேசையில் வைத்து பரிமாறினாள்.
“ஏய்.. பின்றப்பா எனக்கு பிடிச்சது எல்லாமே செஞ்சிருக்கா. என்ன அவ்ளோ பிடிக்குமா. ?”

“ஆமா நீ மட்டும் தான் என்னய‌ பாக்க வர ஒரே சொந்தம். அப்பறம் உனக்கு செய்யாம யாருக்கு அண்ணே செய்ய போறேன். ”

அவ்வபோது கையை பிடிப்பதும் உரசுவதும் தொடுவதும் அவனின் செயலில் ஏதோ ஒன்றை உணர்ந்தவளாக தடுமாறினாள்.

”பேருந்தில் பணம் கேட்கும் போது உடலை உரசி போதை கொள்ளும் மிருகங்களின் உரசல் போல இருந்தது அந்த உணர்வு. அண்ணன் ச்சே.. நம்ம அண்ணன்ணே. நம்ம கூட பொறந்து வளர்ந்தவன் அவனோட தொடுதலிலே தப்பிருக்காது என்று ஒரு மனம் நீதி சொன்னாலும் அத்தனையும் நடக்கும் உலகமிது என்று மறுநொடி நிதானித்தாள். உறவுகளின் புனிதம் என்பது எங்கே செத்தே கிடக்கிறதோ. உணர்வுகளை பகிர அவனுக்கென காதலி கூட இருக்கிறாள் தானே. இந்த உடம்பு தான் தேவையென்றால் விலங்குகள் போல வாழ்ந்திருக்கலாமே மனிதன் எதுக்கு தான் ஒழுக்கமுனு பேர சொல்லி பொய்யா வாழனும். ” என்று தன்னை தானே பொருமிக்கொண்டிருந்தாள் ..

சாப்பிட்டு எழுந்தவன் புவனிகாவை அழைத்தான்.

“உங்கிட்ட ஒன்னு கேட்டகனுமே ?”

“சொல்லுண்ணே…”

”நீ அந்த மாதிரி ராத்திரில போவியா?”

“ஏண்ணே இப்படி கேட்குற?” திடுக்கிட்டவளாய் கேட்டாள் புவனிகா..

“இல்ல உன்ன மாதிரி இருக்குறவங்க பணத்துக்கு அதானே பண்றாங்க. அதான் கேட்டேன்.”

“அம்மா சத்தியமா நான் அப்படி இல்லண்ணா. இருக்கவும் மாட்டேன். வசூலுக்கு போறதே வேற வழி இல்லாம தான் எனக்கு நல்லா வேலை கிடைச்சதும் வசூலுக்கு கூட போக மாட்டேன் அண்ணா. ”

“சரி சரி ஏன் பதற்றமாகுற. அப்போ உனக்கு அந்த மாதிரி உணர்வுலாம் வராதா.?”

“அண்ணா எங்கிட்ட இப்படிலாம் பேசாத . எனக்கு அருவெறுப்பா இருக்கு.”

”ஏய். சும்மா பேசாத. இங்க எல்லாருக்கும் இது இயற்கை தான் . இதான் படைப்பு. இங்க பாரேன் இங்க என் பக்கத்துல வா” என்றவாறே அவன் அவளது கையை அவனது உறுப்பில் அழுத்தினான்.

“ச்சீ அண்ணே என்ன நீ இப்படி கேவலமா நடந்துக்குற. நான் ஒன் கூட பொறந்த பொறப்பு.”

“அட கூட பொறந்த பொறப்பு தம்பி தங்கச்சியா இருந்தா பரவால. நீ ரெண்டுங்கட்டான் தானே. அப்பறம் என்ன உனக்கு.?”

“ரெண்டுங்கட்டானா இருந்தாலும் மனசுனு ஒன்னு இருக்கு . நீ இப்ப இங்க இருந்து போகலை எல்லாத்தையும் அப்பா அம்மா கிட்ட சொல்லிடுவேன். போயிடு இனிமே உன்ன அண்ணானே சொல்ல மாட்டேன். போ வெளிய.”

அடுத்த கணம் பதில் சொல்லாமல் வெளியேறினான்.

சற்று முன் நடந்தேறிய இவை அனைத்தையும் அவள் முன்னிருந்த கண்ணாடி மீண்டும் மீண்டும் திரையோட்டியது.

மீண்டும் மீண்டும் அழுவதை தவிர அவள் மனம் எதையுமே விரும்பவில்லை.

எழுதியவர்

நிழலி
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
D.Dhavachselvan
D.Dhavachselvan
2 years ago

Super madam

கவி.மு.கதிர்மதி
கவி.மு.கதிர்மதி
2 years ago

தேகம் சிலிர்கிறது. இன்று நிகழும் அவலத்தின் அழுகை குரல் உணர்வை சற்று உரசிய வண்ணம் கண்ணீருக்கு கதை சொல்லியாக மாறி இந்த தருணத்தின் வலியை உணர்த்துகிறது.

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x