24 May 2025
Vaunan May21

த்மாக்காவை ஏறெடுத்துப் பார்க்கவே கூச்சமாக இருந்தது. தலை தாழ்த்தியபடியே அவர்கள் வாசலைக் கடக்க முற்பட்டேன். உள்ளே இன்னும் மகராசியின் கூப்பாடு தெள்ளத் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. “பெத்ததுதா அப்பிடீன்னா கூடப் பிறந்ததும் அப்படியே அதே வார்ப்பா வந்து வாச்சிருக்கு. எல்லா என் தலயெழுத்து…” 

“விடு சீனி வழக்கமா நடக்குறதுதான. என்ன கையில டிபன்பாக்ஸக் காணோம்? மறந்துட்டியா?” பத்மா அக்கா வெகு இயல்பாக அப்படிக் கேட்டதே அந்நேரத்திற்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அவர் சொன்னதும்தான் புத்திக்கு உறைத்தது. வீட்டிற்குள் மீண்டும் செல்ல கால்கள் தயங்கின. குரல் இப்போதுதான் கொஞ்சம் தணிந்திருக்கிறது. அநேகமாக சமையல்பட்டு பக்கமாக நகர்ந்திருக்க வேண்டும். தயக்கத்தை உணர்ந்தவராய் ஒரு சைகையோடு சட்டென நுழைந்து கூடத்து மேசையில் இருந்த இரண்டடுக்கு டிபன் பாக்ஸை எடுத்து வந்து கைகளில் திணித்தார். “கொழம்பு பாக்சு எங்கன்னு தெரியல சீனி. இரு வாரேன்” என்று கிசுகிசுத்துவிட்டு, அரை நிமிடத்தில் ஒரு சிறிய தூக்குடன் வந்தார். “இன்னைக்கு இங்க ரசந்தான் வச்சேன். அட்ஜிஸ் பண்ணிக்கோ. பாத்துப் போ” சொல்லிக் கொண்டே பதிலுக்குக் காத்திராமல் உள்ளே போய்விட்டார். வழக்கம் போல மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன். 

மின்சார ரயிலில் அமர்ந்து வேடிக்கை பார்த்து மனதை திசைமாற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன். நாள்காட்டியில் மூன்று வாரங்களைக் கிழித்திருந்த காலம், சட்டைப் பைக்குள் பிரதானமாக காற்றை நிரம்பி லேசாக்கியிருந்தது. அவளைச் சொல்லியும் குத்தமில்லை. நாற்பதுகளின் பிற்பாதியில் நிற்கும் அவள் தனித்துக் கிடப்பதற்கு எனது கையாலாகத்தனமும் ஒரு காரணம் தான். பிறர் சொல்லுவதைத் தாண்டி இப்போது எனக்குநானே கூட அப்படித்தான் சொல்லிக் கொள்கிறேன். சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த ஒரு சில நேர்மை சிகாமணிகளுள் முதன்மையானவர் அப்பா. சப் ரெஜிஸ்டராரே வாங்க மணி சார் என்றுதான் அழைப்பார். நேர்மையை எல்லாரும் சிலக்கிப்பார்கள். தோள் தட்டுவார்கள். பின்பு மனதுக்குள் எள்ளி நகையாடுவார்கள் அல்லது பரிதாபப்படுவார்கள். 

அவர் போய் இந்த பதினோராவது ஆண்டில் அப்பாவின் இடத்தை நானும், அம்மாவின் இடத்தை, இப்போது கொஞ்ச நேரம் முன்பாக அர்ச்சனை கேட்டீர்களே, அக்கா மகராசியும் கச்சிதமாக நிரப்பியிருக்கிறோம் என்பதைத் தவிர சொல்லிக் கொள்ளும்படி சிறப்பேதுமில்லாத வாழ்க்கை என்னுடையது. நேர்மையாக இருப்பது மட்டுமே தனது இலட்சியம் என்றல்லாமல் அதை ஒரு வாழ்க்கை முறையெனக் கொண்டிருந்தவர் அப்பா. அன்று ஒரு வியாழக்கிழமை, இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் அமரப் போகிற அதே சீட்டில், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்த நொடிவரை அவர் அப்படித்தான் வாழ்ந்தார். பிழைக்கத் தெரியாத இளித்தவாயன் எனும் அம்மாவின் இடைவிடாத திட்டுகளுக்கு நடுவே அவரது தொங்கிய தலை நிமிர்ந்ததேயில்லை. பணியில் இருக்கும்போதே காலமானதால் கருணை அடிப்படையில் அவரது இடத்தில் நான். 

எதையுமே திணிக்கமாட்டார். அட்வைஸ் என எதுவுமே செய்ததில்லை. உண்மை. ஒரு முறைகூட. ஒரு சக தோழனிடம் பகிரும் பாவனையில் என்னோடு அடிக்கடி பேசுவார். சொல்லப்போனால் அவர் அதிகம் பேசிய ஒரே நபர் நான்தான். மற்றபடி அவர் சூழல்களைக் கையாளும் விதங்களை மட்டும் அருகிலிருந்து பார்த்தே வளர்ந்தேன். அப்படித்தான் என்னாலும் இருக்க முடிகிறது என்பதை உணருவதற்கே கொஞ்சம் காலம் பிடித்தது. அவர் போன போது உருவான வெறுமை நிரந்திரமாகத் தங்கி விட்டது. அல்பாயுசில் போன அவரைத் தொடர்ந்து அத்தனை திட்டித் தீர்த்துக் கொண்டேயிருந்த அம்மாவும் ஒரே வருடத்தில் போனது என்னளவில் இன்றும் ஆச்சரியம். நடுத்தர வயதில் நகர்கையில்தான் விளங்குகிறது அவளது புலம்பல்களும் திட்டுகளும் குடும்பத்தின் மீதான, எங்களின் மீதான அக்கறையின் திரிந்த வடிவங்களென. 

அக்காவை நினைக்கையில் எல்லாம் அத்தையின் (அப்பாவின் அக்கா) நினைவும் கூடவே வந்துவிடும். “எந்த நேரத்துல அந்த நாற முண்ட மவராசின்னு பேர வச்சாளோ, பேருல மட்டும் தான் மங்களம் ஒட்டிக்கிட்டு இருக்கு. வாழ்க்கை பூரா தரித்திரியம் தான் சம்மணம் போட்டு உக்காந்திருக்கு” என அத்தையை வாரமொருமுறையாவது கரித்துக் கொட்டுவாள். ஆனால் எப்போதாவது அத்தை வீட்டுக்கு வருகையில் விழுந்து விழுந்து ஆக்கிக் கொட்டுவாள். கிளம்பும்போதெல்லாம் எப்படியாவது நிர்பந்தித்து மேற்கொண்டு இரண்டு நாட்கள் தங்க வைத்துத்தான் அனுப்புவாள். வாழ்க்கையும், மனிதர்களும் மெல்ல மெல்ல புரியத் துவங்குகையில் பேச்சோ உணர்ச்சிவயப்பட்ட எதிர்வினைகளோ மட்டுப்படத் தொடங்கிவிடுகிறது போல. நான் அந்த கட்டத்தில்தான் இப்போது இருக்கிறேன்.

ரயிலில் அமர்ந்தபடி உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் சிந்தனை ரயிலின் அபாயச் சங்கிலியைப் பிடித்திழுத்து நிறுத்துவது பெரும்பாலும் கூலிங்கிளாஸ் அண்ணாதான். பேனாக்கள், கீ செயின்கள், கர்ச்சீப்புகள் எனக் கிடைத்ததை எல்லாம் ரயிலில் விற்பார்.  ஒரு கண் கிடையாது; விபத்து. விழியிருந்த இடத்தில் இப்போது குழியிருக்கும் முகத்தின் கோரத்தை மூடிக் கொள்ள அவர் கண்ணாடியை கவசம் போல அணிந்திருப்பதால் அப்பெயர். “சீனிச்சாமி! நீ மட்டுந்தாய்யா என்ன வித்தியாசமா கூப்புடுற. பேரும் சோக்காத்தான் ஈக்குது” என்று ரஜினி ஸ்டையில் காட்டுவார். சத்தமின்றி அருகில் அமர்ந்து தொடையைத் தட்டி கூவுவது அவரது பாணி. இன்றும் அப்படியேதான் அந்த உள்ளோடிய ரயிலை நிறுத்தினார். 

“இன்னா தம்பி வழக்கம் போல உடம்பு இங்கீக்குது. ஆளு அப்ஸ்காண்டா?” சிறிது இடைவெளி விட்டு காதருகே வந்து “வழக்கப்போல மகராசி பூஜை பலமோ?” எனச் சிரித்தார். அவரது செண்ட்டு மணத்தையும் தோற்கடித்து வியாபித்தது ஏறும்முன் ஊதியிருந்த சார்மினாரின் வாடை. அதெல்லாம் ஒண்ணுமில்லை என்பதைப் போல தலையை ஆட்ட விரும்பி ஆமாம் என அசைத்தேன். இருவருமே சிரித்தோம்.  “செவ்வாக்கெழம மகிழ்ச்சியா இருக்கணும் தம்பி” என்பார். நாள் எதுவனாலும் அதுபோலவே சொல்லுகிற கூலிங்கிளாஸ் அண்ணாவால் எப்படியோ பலூன்களைப் போல ஊதிப் பெருகும் கழிவிரக்கத்தைக் கூட கொஞ்ச நேரப் பேச்சில் ஊசியெனக் குத்தி உடைத்து ஒன்றுமில்லாமலாக்கிவிட முடியும். 

நேரத்தோடு வருகிற முதல் ஆள்களுள் ஒருவன் என்பதால் அழாமல் உறங்கும் சமத்துக் குழந்தையென சாந்தமான அலுவலக வளாகத்தை தினசரி காண முடியும். மக்கள், ப்ரோக்கர்கள் என எந்த அரவமும் இல்லாமலிருப்பதை இப்போது இப்படி பார்த்துவிட்டால், இன்னும் ஒரு முக்கால் மணி நேரத்தில் இவ்விடம்தானா சந்தைக்கடை போலாகப் போகிறதென்றால் நம்பச் சிரமப்படுவீர்கள். வளாகத்தின் எதிர் டீக்கடை அற்புதம் மாமா உள் நுழைகையிலேயே உற்சாகச் சிரிப்புடன் கையசைத்து அன்றைய நாளின் சுடரைக் கொளுத்துவார். பெரும்பாலும் நாள் முழுவதும், வேலை அழுத்தினாலும், அந்தப் பிரகாசம் நின்று எரியும். எனக்கு மாலை ஆக ஆகத்தான் கொஞ்சம் கிலியடிக்கும். என்னதான் அக்காவைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் அவளது வீசித்தெறிக்கிற அமிலப் பேச்சு எப்பேர்ப்பட்ட உற்சாகத்தையும் கரைத்துவிடும். ஆனால் வேறு வழியில்லை என்பதால் கிளம்பி விடுவேன். ஊர் சுற்றும் பழக்கமே இல்லாதவனுக்கு, அது எப்படியிருந்தாலும், வீடுதானே உலகம்!

நான் வருகின்ற நேரத்துக்கு முன்பே அலுவலகம் வந்து விடுகிற ஒரே ஜீவன் ஆறுமுகம் மாமா தான். அன்றாடத் தரவுகள் அத்தனையையும் மென்பதிப்பாக இணையத்தில் ஏற்றுவது கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரான அவர்தான். அப்பாவின் சிநேகிதர். அவரது இருக்கைக்கு நேர் பின்புறமிருக்கிற சுவரில்தான் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் இருக்கும்.சின்ன வயதில் பள்ளி விடுமுறையில் எப்போதாவது அவரோடு அலுவலகம் வரும்போதெல்லாம் ஆளில்லாத மதியங்களில் அவரது சீட்டில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வது போல நான் விளையாடுவதை ரசித்த மனிதன். இன்று உண்மையிலேயே இங்கு பணி செய்வதையும் அதே வாஞ்சையுடன் ரசிப்பவர். சின்ன வயதில் அவரைத் தொந்தரவு செய்வதாக அப்பா கடிந்து கொள்ளும்போதெல்லாம் “விடு மணி குழந்தையைப் போயி சும்மா நசநசனு திட்டிகிட்டு” என எனக்கு ஏற்றுக் கொண்டு பேசியவர். கணக்காளரான அப்பாவின் டேபிளைக் கடந்தே எதுவாயினும் தன்னிடம் வருமென்பதால், அவர் ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிற இடைப்பட்ட நேரத்தில் எல்லாம் கோடை நாட்களில் அது என்னுடைய இருக்கை தான்.

செல்லமாக அவரை எல்லோரும் ‘ஆப்பரேட்டர் சார்’ என்பார்கள். கை சுத்தம். அதாவது அலுவலகத்தில் புழங்குகிற கிம்பளத்தை பிசகாமல் இருக்கைக்கு ஏற்றார்ப்போல பங்கு பிரிப்பதில். எப்படி இது குறித்த தகவல்களை வருகிற மனிதர்களுக்குச் சொல்கிறார். எந்நேரம் பணம் கைமாறுகிறது. அதை மாலை வரை எங்கேங்கே வைத்துப் பாதுகாக்கிறார் என்பதெல்லாம் எவருமறியாத ரகசியம். எண்ணாமல் கூட அவர் தருகிற நோட்டுகளை மடித்து பைகளுக்குள் திணித்து நகர்ந்து விடுமளவுக்கு சக ஊழியர்களிடையே நம்பிக்கையைச் சம்பாதித்திருக்கும் மனிதர். குறிப்பிட்ட தினத்தில் வாராதவருக்குச் சேர வேண்டிய கட்டிங்கைக் கூட மறு நாள் சேர்த்து விடுகிற அளவுக்கு தொழில் சுத்தக்காரர். இது தான் அந்த அன்பொழுகும் ‘ஆப்பரேட்டர் சார்’ விளிப்பின் பின்புலக்கதை.  

அப்பாவை வற்புறுத்தமாட்டார். ஆனால் ஒரு பழக்கம் இருந்தது. அவரது மேசை இழுப்பறையில் ரசம் போன பழைய காட்பரி மிட்டாய் தகரப் பெட்டி ஒன்றிருக்கும். அப்பா ஒரு போதும் தொட மாட்டார் எனத் தெரிந்தும் அவருக்கான அன்றாட பங்கை அதில் போட்டு வைத்துவிடுவார். வெள்ளி வரை அதைத் தொடவே மாட்டார். இழுப்பறையை பூட்டவும் மாட்டார். வார இறுதியில் கிளம்பும் போது மெலிதாக சைகையில் கேட்பார். எப்போதும் போல அப்பா புன்னகையோடு கைகூப்பி வணக்கம் வைத்து விடைபெற்றபின், அதை சக தோழர் எவருக்கேனும் தேவையிருப்பின் எவரும் அறியாவண்ணம் கைமாற்றி விடுவார். அச்செயலில் வாங்குபவரைத் தவிர அது வேறு எவருக்கும் தெரியாத லாவகம் இருக்கும். அல்லாத பட்சத்தில் அது அவருக்கானது. மாதக் கடைசிகளில் அப்பா ப்ரோக்கர் சின்னைய்யாவிடம் கடன் கேட்டு நிற்பதைப் பார்த்து தலையிலடித்துக் கொள்வார். வட்டியில்லாமல் அப்பாவுக்கு மட்டும் கைமாத்து கொடுப்பார் சின்னைய்யா. அப்பாவின் நேர்மைக்காக கிட்டும் மீச்சிறு வெகுமதிகளில் அதுவும் ஒன்று. சம்பளம் போட்ட அன்று மாலையில் கவரில் வைத்து அப்பா நீட்டுவார் என்பதும் அதற்குக் காரணம். “எல்லா பெயலும் கவரு வாங்குறான். நீங்க குடுக்குறீக. ஆச்சரியமான மனுசேய்யா நீயு” என்பார். அப்பா எப்போதும் போல பதில் போல ஒரு சிரிப்பு சிரித்து வைப்பார்.

நான் வந்த பிறகும் வாடிக்கை மாறாமல் இதுவே தொடர்கிறது.  தொடக்கத்தில் கொஞ்சம் சின்னப் பையன் என்பதால் பேசிப் பார்த்தார். “நானுந்தா தம்பி வந்த புதுசுல வெரப்பா இருந்தேன். அப்புறம் புள்ள குட்டின்னு ஆனப்பொறொ நாணப் புல்லா மடங்கீட்டேன்” பாதி மலையேறிவிட்ட முன் வழுக்கையை கைக்குட்டையால் ஒற்றி உதறி திரும்பவும் காலருக்குள் நுழைத்துக் கொண்டே கனிவாகச் சொல்வார். சக ஊழியர்கள் “சீனி அவெ அப்பாவ மாதிரியே சுத்த சாமி (காசே வாங்காதவன்)” என்று கடக்கச் சீக்கிரமே பழகிவிட்டனர். அம்மா தவறுவது வரை ஆறுமுகம் மாமா கொஞ்சம் முட்டிப் பார்த்தார். அதற்குப் பிறகு, “அது செரி உங்கொப்பனையே என்னால மாத்த முடியல உன்ன மட்டும் எங்கேரிந்து… ஆனா உன்ன நெனச்சா பெருமையா இருக்குடே” என்று பூரிப்பார்.

வில்லங்கம் பார்க்க, பட்டா பதிய, திருமணப் பதிவு, திருட்டுக் கல்யாணம், கூட்டுப் பட்டா பார்டிசன் என வேலைகளுக்கு ஏற்றார்போல, முக்கியமாக விலைவாசிக்கு ஏற்றார் போல, அதிகாரப்பூர்வமானது போல ஆனால் வாய்மொழியில் மட்டுமே உலவவிடுகிற விலைப்பட்டியலை தயாரிப்பது அவர்தான் எனினும் ஒருவரும் அது பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்கள். அத்திப்பூத்தார் போல ஏதாவது திருவாளர் பொதுஜனத்திற்கு பொங்க வேண்டுமென யோசனை வந்து கட்டம் கட்ட காய் நகர்த்தினால், ரைடு வரும் முன்பே அங்கிருந்து தகவலைத் தேற்றி விடுவதோடல்லாமல் அன்றைய தினத்தில் இம்மியளவும் பிசிறாதபடிக்கு வேலைகளின் பட்டியலை மாற்றியமைத்து விடுவார். அன்றைய தினத்திற்கென நேர்ந்து வைத்திருக்கும் ஏழைபாளைகளின் வேலை எதையாவது சுத்தமாக முடித்துக் கொடுத்து பாவத் தராசின் சாய்மானத்தை கொஞ்சம் குறைத்தும் கொள்வார். 

சின்னைய்யா பத்து மணிக்கு முன்னதாகவே வந்துவிட்டார். மாநிற முகத்துக்கு எடுப்பாக செந்தூரப் பொட்டு பொருந்தியிருந்தது. மீசையின் ஓரங்களில் மட்டும் கொஞ்சம் நரைத்து இருப்பதும் ஒருவித அழகாய்தானிருந்தது. பளீர் வெள்ளையில் கரம் கூப்பிச் சிரித்தார். 

“என்னண்ணே வணக்கமெல்லாம் பலமா இருக்கே. காரணமில்லாம நீங்க இப்படி சீக்கிரம் வரமாட்டீங்களே?”

“ஒரு பெரிய என்.ஆர்.ஐ பார்ட்டி சீனி. மவுண்டுக்கு தெக்கால இருக்குல்ல அந்த பழைய ஓட்டலு. வாங்கி இடிச்சுபிட்டு ஏதோ மால் மாதிரி கட்டப் போறதா ப்ளான் போல. பேப்பரெல்லாம் பக்கா. இல்லேன்னா நான் உங்கிட்ட மொதல்ல வருவேனா?” சிரிப்பு மாறாமல் சொன்னார். மற்றவர்கள் என்றால் அதற்கும் மினிமம் ரேட் அழ வேண்டியிருக்குமே என்று நேர்வழி பரிவர்த்தனை என்றால் என்னிடம் தான் வருவார். என டேபிள் கணக்கு மட்டுமாவது குறையுமே. மாதக் கடைசியில் சமயங்களில் அப்பாவிற்கு உதவியது போல வட்டியில்லா சிறு கடன்களுக்கான ஆபத்பாந்தவான் எனக்கும் சின்னைய்யாதான். நாங்கள் பேசுவதை ஆறுமுக மாமா தனது சுழல் நாற்காலியில் சுற்றியபடியே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஆட்கள் எவருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, “மிச்சம் பிடிச்சாரு சின்னைய்யா! இன்னைக்கு மிச்சம் பிடிச்சாரு சின்னையா” ராகமாய் இழுத்தபடி அவரைப் பார்த்தார். 

“ஆமாமா அப்படியே நீங்களும் விட்டுட்டாலும்…” அவருக்கொரு வணக்கம் வைத்தபடி நகர்ந்தார் சின்னையா. அங்கு எவரையும் என்றுமே அவர் பகைக்க முடியாது. 

வழக்கமான பரபரப்புடன் அலுவலகம் சுழன்றது. மாறி மாறி கால்களைக் கொடுத்துக் கொண்டு தங்களது பெயர் அழைக்கப்படுவதற்காய் காத்திருக்கிற சோர்வான மனிதர்கள், சரசரவென நேராக ஜவ்வாது வாசனையுடன் உள் நுழைகிற கதர் வேட்டி மனிதர்கள் என தினசரி காட்சிகள் கொஞ்சம் வரிசை தப்பி ஆனால் எதுவும் விடுபடாமல் நடந்தன. பதினொனேகாலுக்கு அற்புதம் மாமா ஒவ்வொரு மேசையாக சிரிப்பையும் டீயையும் சுடச்சுட இறக்கி வைத்தார். சமன் குலையாத அந்த நாளின் முடிவில் சகலத்தையும் ஸ்தம்பிக்கச் செய்கிற அந்த அழைப்பு ஐந்தரை சுமாருக்கு வந்தது. 

சமயங்களில் வீட்டுக்குத் திரும்பும் போது ஏதாவது பொருட்கள் வாங்கிவரச் சொல்வார். “சொல்லுங்க பத்மாக்கா” என்றதுதான் தாமதம். 

“சீனி ஒடனே பொறப்பட்டு வா. அக்கா திடீர்னு மயங்கி உழுந்துருச்சு. எனக்கு ஒண்ணும் ஓடல. சுரேசு ஆட்டோவுல தூக்கிப் போட்டுகிட்டு காயத்திரி நர்சிங் ஹோமுக்கு போயிட்டு இருக்கேன். உனக்குத் தெரியுமில்ல… ஜீவன் கார்மெண்ட்சு பின்னாடி சந்து. நீ வந்து சேரு” வாகன இரைச்சல்களுக்கு ஊடாக அறுந்து அறுந்து கேட்டது அக்காவின் குரல். கைகள் வெடவெடவென நடுங்கத் தொடங்கியது. பேச நா எழுவதற்கு முன்னமே வைத்து விட்டார்கள். ஆறுமுகம் மாமா இருந்தா நல்லா இருந்திருக்குமே எனும் நினைப்பு எழுந்து அடங்கியது. அன்றும் நான் தான் வழக்கம் போல கடைசி ஆள். கிளம்ப எழுகையில் சட்டென நினைவிற்கு வந்தவனாய் அயர்ந்து போய் அமர்ந்துவிட்டேன். சட்டைப் பையில் சரியாக நூற்று எழுபத்தியிரண்டு ரூபாய் இருக்கிறது. 

கண்கள் சன்னல் வழியே அனிச்சையாய் சின்னைய்யாவைத் தேடின. மதியமே கிளம்பிவிட்ட ஆள் எப்படி அப்போது அங்கே இருப்பார்! ஆறுமுக மாமாவை கூப்பிடலாமா என்று நினைக்கையில் கணநேரம் மின்னி மறைந்தது காட்பரி மிட்டாய்ப் பெட்டி.

கெச்சலான உடம்போடு அக்கா லேசாக பத்மாக்கா தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். ரொம்ப துவண்டிருந்தாள். வலதுகையில் டெஸ்ட் ஊசி போட்ட தடமாக பேனாவால் வட்டமிட்டிருந்தார்கள்.  மருத்துவமனை வாசனை அறவேயின்றி ஏதோ ஒரு சுகந்த மணம் வீசியது. எனக்கு அதுவே பகட்டு போல நெருடி வயிற்றில் புளியைக் கரைத்தது. பெரிதாகக் கூட்டமில்லை. அவர்கள் அருகே சென்றதும், பத்மாக்கா அமைதியாக இருக்கும்படி சமிக்ஞை செய்தார்கள். அவர்களின் தோளிலேயே அக்கா கண்ணசந்து இருப்பதை பிறகே கவனித்தேன். காசு ஏதும் கட்டினீர்க்ளா என மௌனமாய் வாயசைப்பில் கேட்க இல்லை என்பதாக சைகை செய்தார். அடுத்த பதினைந்தாவது நிமிடம் ஒரு செவிலி வந்து டாக்டர் உங்கள வரச் சொல்றார் என்றார். விளங்காமல் நெற்றியைச் சுருக்கினேன். “இல்ல பேஷண்டையும் சேர்த்துத்தான் உள்ள கூப்புடுறார்” என்றார் விளங்கிக் கொண்டவராய். 

எங்களுக்கு முன்னரே வந்தவர்கள் மூன்று நான்கு பேர் இருக்க முந்திக் கொண்டு எழுந்து செல்ல கொஞ்சம் தயக்கமாக இருந்தது.  “சார், சொன்னது புரியலையா? டாக்டர் தான் வரச் சொல்றாங்க. போங்க சீக்கிரம் என்று பொதுவாக அறிவிக்கும் தொனியில் சொன்னார். எழுகையில் பின் வரிசையில் அமர்ந்திருந்த அம்மா பார்ப்பதே முறைப்பது போலிருந்ததை கவனிக்காதது போல கடந்து சென்றோம். 

கதவைத் திறந்ததும் உள்ளிருந்த குளிர் முகத்தில் அறைந்தது. அழுக்கில்லா உடையும், கசங்காத முகத்தில் பளிச்சென ஒரு சிறு புன்னகையுமாய் எதிரில் இருந்த இருக்கைகளில் அமருமாறு சைகை செய்தார் டாக்டர். என் வயதுதான் இருக்குமெனத் தோன்றியது.

“ஒண்ணும் பெருசா பேனிக் ஆகுற மாதிரி எதுவுமில்ல” நேரடியாகத் துவங்கினார்.  “இது உங்க…”

“அக்கா டாக்டர்”

“ஓ… உங்க அக்கா ரொம்ப வீக்கா இருக்காங்க. வெரி அனீமிக். சாப்பிட்டது ஏதோ அலர்ஜி ஆகியிருக்கு. டெஸ்ட் ஷாட் ஒண்ணும் செய்யாததால ஒரு பிரச்சனையும் இல்ல. போறப்போ ரெண்டு இன்ஜெக்‌ஷன் போடுவாங்க. அவ்வளவுதான். கொஞ்சம் டேப்ளட்ஸ் தர்றேன். சரியாயிடும். ஆக்சுவலி இப்போ இவங்களுக்கு ப்ரி-மேனோபாஸ் சிம்டம்ஸ் மைல்டா தொடங்கி இருக்கு. அதுனால மூட் ஸ்விங்ஸ் இருக்கலாம். கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோங்க.” 

அக்கா எதுவும் புரியாமல் விழியுருட்டி என்னை ஓரப்பார்வை பார்த்தாள். நான் ஒன்றுமில்லை என்பதாக பாவனை செய்து அவளது உள்ளங்கையை அழுத்திப் பிடித்துக் கொண்டேன். 

மெலிதான மணி அழுத்தலுக்குப் பின் சில நொடிகளில் உள்ளே போகச் சொன்ன அதே செவிலி வந்தார். அக்காவைப் பார்த்து “இவங்க கூட போங்கம்மா. உங்களுக்கு ஊசி போடுவாங்க. ஒண்ணும் பயப்படாதீங்க. பெரிசா எதுவுமில்ல” என்றார். பத்மாக்காவும் கூடவே எழுந்து உள்ளே சென்றார்கள். 

“டாக்டர்…”

“நான் தான் சொன்னேனே. அவ்வளவு தான் விசயம். நத்திங் மோர். டோண்ட் ஒரி” என்றார். 

“இல்ல டாக்டர். எவ்வளவு ஃபீஸ்ன்னு சொன்னீங்கன்னா…”

முடிக்கும் முன்பே அவர் அவருக்கு வலப்புறம் சிசிடிவி காட்சிகள் ஓடுகிற ஒரு திரையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நீங்க மணி சார் பையன் சீனி தானே?” என்றார். உண்மையில் நம்ப முடியவில்லை. 

“அப்…பாவத் தெரியுமா டாக்டர்?” வேறென்ன கேட்பது என்று கூடத் தெரியவில்லை. 

“உங்களை கூடத்தான் தெரியுதே” புன்னகை மாறாமல் சொன்னார். அப்புறம் தான் நானே உணர்ந்தேன். பத்துப் பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு இந்த நர்சிங் ஹோம் இருக்கும் இதே இடத்தை கிரயம் செய்ய வந்ததாகவும், அப்பா ஒரு பைசா வாங்காமல் உதவியதாகவும் சொன்னார். 

“அது ஒரு புதன்கிழமை. யூ நோ. ஒரு சில டெக்னிக்கல் பேப்பர் ஒர்க் ரிலேட்டட் டவுட்ஸ். யாருகிட்ட கேக்குறதுன்னே தெரியல. கூடவந்த புரோக்கர் வேற இதுனால் இன்னும் அதிகமா செலவாகும்னு பயம் காட்டிட்டார். என் கரியரோட பிகினிங். சோ எக்ஸ்ட்ரா கையில எதுவுமில்லை. மிஸ்டர் மணி அவரா வந்து விசாரிச்சு உதவினார். எல்லாம் நல்லபடியா முடிஞ்சு அவருக்கு ஒரு கவரைக் கொடுத்தும். சிரிச்சு கும்பிட்டார். “மனுசங்களக் காப்பாத்துறீங்க. என் வேலைய நான் குறைவில்லாம செஞ்சுட்டேன். நீங்களும் செய்வீங்கன்னு நம்புறேன்”. மிக மெலிதாக உடலைச் சிலிர்த்துக் கொண்டார். எனக்கு ஏற்கனவே புல்லரித்திருந்தது. அவர் சொல்லிய அந்த புதன்கிழமை அப்பா தவறுவதற்கு முந்தின நாள். 

 “யூ நோ ஐ ஹேவ் நெவர் மெட் சச் எ பர்சன் இன் மை லைஃப்!” அவர் முகத்தில் ஏதோவொன்று ஒளிர்ந்தது போல இருந்தது. அவரே தொடர்ந்தார், “போன ஆகஸ்ட்ல என்னோட கசினுக்கு ஒரு பிராபர்டி முடிக்க வேண்டி இருந்தது. பர்ட்டிகுலரா நான் தான் அவன அங்க கூட்டிட்டு வந்தேன். அங்க அவர் சீட்ல நீங்க. அன்னைக்கு அவராவே நீங்களும் இருக்குறத ஒரு ஓரமா நின்னு கொஞ்சம் நேரம் பார்த்தேன். வேலை முடிஞ்சதும் வந்து தேங்க் கூட பண்ணுனேன். உங்களுக்கு நினைவிருக்க வாய்ப்பில்ல. அப்புறம் நானா விசாரிச்சு டீடெயில்ஸ் தெரிஞ்சுக்கிட்டேன்.” என்றார். 

எவ்வளவு சொல்லியும் காசு வாங்க மறுத்துவிட்டார். இவ்வளவு நாள், பிழைக்கத் தெரியாதவன் என்ற பரிதாபத்தையும் திட்டுகளையும் மட்டுமே வாங்கித் தந்த நேர்மை முதன்முறையாக இப்படி ஒரு முனையில் என்னை நிறுத்தி இருக்கிறது. 

கிளம்பும் முன்பு, “யூ நோ உங்க முகத்துல அவரோட சிரிப்பு அப்படியே இருக்கு. டேக் கேர் மிஸ்டர் சீனி.” அணுக்கமான குரலில் சொன்னார். அக்கா எதுவும் புரியாமல் விழித்தாள். 

வீட்டுக்குப் போக ஆட்டோ பிடித்து வந்த என்னை அவளே விநோதமாகப் பார்த்தாள். ஒரு மீச்சிறு புன்னகை இதழோரம் இருந்தது. வீட்டின் முன் இறங்கி அவர்கள் உள்ளே சென்றதும் ஆட்டோவிற்கு பணம் செலுத்த சட்டைப் பைக்குள் கைவிட்டதும் இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களில் ஒன்றை நீட்ட, அவர் மீதம் முன்னூறு ரூபாயை நீட்டினார். “தாங்ஸ்ணா” என்றதை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. 

ஒருகணம் சட்டென மின்னல் தாக்கியது போல இருந்தது. வெடித்துச் சிதறுவது போல நெஞ்சு விம்மியது. கால்கள் தளர்ந்தன. வாயிற்படியிலேயே அமர்ந்து விட்டேன். தாளாத சுமையொன்று சட்டைப்பையினுள் இருந்து கொண்டு கீழே இழுப்பது போலிருந்தது. நிலம் பிளந்து என்னை விழுங்கத் துடிப்பது போல ஒரு கீழ்நோக்கிய இழுவிசை உடல் முழுவதையும் ஆக்கிரமித்து வியாபித்தது. முகம் முழுவதும் பொட்டுப் பொட்டாக வியர்வை அரும்பி காதோரம் வழியத் துவங்கியது. 

“சரி சீனி. அவ தூங்கட்டும். நைட்டுக்கு கூடக் கொஞ்சம் வடிச்சறேன். காலையில வச்ச ரசமே கெடக்கு. அப்பளம் ஏதாச்சும் பொரிச்சுகுறுவோம். ஒரு காமணினேரம் பொறுத்துக்க,” வாசற்படியில் கிடந்த செருப்பிற்குள் கால்களை நுழைத்தவர் அந்த சோகையான வீதி வெளிச்சத்திலும் துல்லியமாக முக மாற்றத்தைக் கண்டுவிட்டார். 

“என்னடா! அதெ டாக்டரு ஒண்ணுமில்லேண்டு சொல்லீட்டாரே. அப்பொற என்ன? நாயா பூனையா அடிச்சுக்குதுக, ஆனா ஒருத்தருக்கு ஒண்ணுன்னா தொவண்டுறுதுக. போடா போயி டிரஸ மாத்தி மூஞ்சி கீஞ்சியக் கழுவு. நான் இதா வாரே.”

எனக்குள் வெடித்துப் பொங்கித் தெறிக்கிற நெருப்பை பத்மாக்காவல்ல எவருமே உணரும் வாய்ப்பில்லை. நடக்கவே திராணியில்லாத அளவுக்கு நொடிகளில் தளர்ந்துவிட்டது உடல். அக்கா கட்டிலில் அயர்ந்திருந்தாள். கால்களைக் குறுக்கிப் படுத்திருந்த நிலையில் அவளது உருவம் ஒரு நாற்பத்தியாறு வயதுக்காரிக்கு உரியதே இல்லை. நல்லதென எதையும் உண்ணாத, காணாத ஒரு வாழ்க்கை. கண நேரச் சலிப்பை ஏற்கனவே பொங்கிச் கொண்டிருந்த பேரலை வாரிச் சுருட்டி விழுங்கியது. கூடத்தில் இருந்த அப்பாவின் புகைப்படம் இருந்த திசைப் பக்கமே ஏறெடுக்கவும் துணிவில்லை. இதுவரையிலும் வாழ்க்கையில் முன்னுணர்ந்திடாத அமைதியின்மை அமிலம் போல மனதை அரித்தது. வயிற்றின் உள்ளே சுருண்டெழுந்த ஒருவித புளிப்பு மேலேறத் தொடங்கியது.  எதோ அசிங்கத்தை வெறுங்காலில் மிதித்துவிட்ட அருவருப்பு. உடல் முழுக்க கனன்று கொண்டிருந்தது. காதுமடல்கள் நாசி கழுத்து என எல்லா இடங்களும் எரிவது போன்ற உணர்வு. 

“என்னடா! பசி பொறுக்கலையா. வாசப்படிலயே உக்காந்துட்ட. அவளுக்கு எதுவும் தர வேணாம். வயித்தக் கொஞ்சம் காயப் போடுவோம். காலையில பாத்துக்கலாம். இப்ப தூங்கட்டும். நீ போயி சாப்புடு. ராவுல எதும் வேணும்னா முழிச்சுகிட்டு கெடக்காத. யோசிக்காம போன் அடி, ஓடி வந்துருவேன்… என்ன?” பாதளத்திற்குள் இழுபட்டுக் கொண்டிருப்பவனை நோக்கி நீண்ட கையாக அவர்களின் குரல் அப்போதிருந்தது. சரியென தலையசைக்க மட்டுமே முடிந்தது. அவர் சமைத்ததை வீணாக்காக் கூடாது என்பதற்காகவே அமர்ந்தேன். 

கல் போல இறங்கியது சோற்றுக் கவளம். தொண்டை அடைத்துக் கொண்டு கண்ணீர் வழிந்தது. பால்யம் தொட்டே எத்தனையோ இரவுகள் அரைவயிறாய், ஏன் காலியான வயிறுடன் கூட சமயங்களில் உறங்கியதுண்டு. ஆனால் இது போன்ற ஒரு பிசைகிற வலியை உடல் உணர்வது இதுதான் முதன்முறை. கூடத்தில் அப்பாவின் படத்திற்கு எதிர்திசையில் பாய் விரித்து படுத்துக் கொண்டேன். தெருவிளக்கின் மெலிதான வெளிச்சம் கூடத்தைக் கழுவிக் கொண்டிருந்தது. மனசு தான் பாழ் இருளுக்குள் சிக்கித் தவித்தது. ஏதோ ஒன்று உள்ளுக்குள் அணைந்து விட்டதைப் போன்ற சூனிய உணர்வு. மூடிய இமைகளுக்குள் கூனிக்குறுகி விழித்துக் கிடந்தது என் இரவு. 

என்றைக்குமில்லாத திருநாளாய் ஆறுமுகம் மாமா தகரப் பெட்டியை புதன்கிழமையேவா திறப்பார்?  கண்ணாலேயே இருந்த நோட்டுகளை எண்ணியவர் இரண்டு குறைவதைப் பார்த்து, “டேய்ய்ய்… சீனி…” அந்த முகத்தில் மகிழ்ச்சியும் அயற்சியும் ஒரு சேரப் படர்ந்தது. பொழைக்க புத்தி வந்ததுக்கு சந்தோசப்படாவா அல்லது யோக்கியன்னு கைநீட்ட நீயும் இனி இல்லேன்னு நெனச்சு கலங்கவா என்பது போல இருந்தது அப்பார்வை. தூக்கி வாரிப் போட்டது. அப்பாவின் இருக்கையில் அமரவே கூசியது. ஆறுமுகம் மாமாவின் இயல்பான பார்வை கூட சலனப்பட்டதாகவே தோன்றிகிறதா? எதுவும் புரியவில்லை. 

மாலையில் கிளம்பும் முன்பு வரவழைத்துக் கொண்ட ஒரு சிரிப்புடன், “தம்பி காசு கீசு வேணும்னா மாமாகிட்ட கேளுடா. நா இருக்கேன் உனக்கு” தோள் தட்டி நகர்ந்தவரின் கரங்களை “மாமா…” எனப் பதறி பற்றினேன். 

“ஏய்! எரும ஏண்டா கையப் புடுச்சி இந்த நசுக்கு நசுக்குற… யப்பா… நேரமாச்சேன்னு எழுப்பி விட வந்தது ஒரு குத்தமா?” கைகளுக்குள் மகராசியின் கைகள். “பாரு கண்ணுல தண்ணி வழியுது. உடம்பு சூடு அதிகமாகிருக்கு. ஒழுங்கா தின்னு தொலன்னு அந்த டாக்டரு உன்னையும் சேத்துத்தான் சொல்லிருக்கணும் நேத்து.” ஒரு அறுபட்ட கனவு இத்தனை ஆசுவாசமளிக்கும் என்று நினைத்ததே இல்லை. 

“அக்கா. இன்னைக்கு கொஞ்சம் முன்னமே போகணும். வேல கெடக்கு.” 

“பாயவிட்டே இன்னும் எந்திரிக்கல. அதுக்குள்ள ஏண்டா பறக்குற. நா மெதுவா தான் சமப்பேன்.”

“இல்லக்கா. அவசரமில்ல. நான் பாத்துக்குறேன். நீ ரெஸ்ட் எடுத்து மெதுவா உனக்கு மட்டும் பாத்துக்கோ”

குளியலறைக் கதவை மூடும் முன்பாக தடுத்து, “பக்கத்துல எதாச்சும் வாங்கிச் சாப்டுக்கோ. வயித்தக் காயப் போடாத” கண்டிப்பு தடவிய குரல். தலையாட்டினேன். 

மின்சார ரயிலுக்கு காத்திருக்க பொறுக்காமல், பேருந்தைப் பிடித்தேன். இத்தனை அவசரமாக நான் இதுநாள் வரை வேலைக்குப் போனதேயில்லை. வழியில் காண்பவரெல்லாம் ஒரு ஏளனப் பார்வையோடு நோட்டம் விடுவதைப் போன்ற உணர்வு. தலையே நிமிராமல் சாலையின் மையக் கோடுகள் விரைந்து பின்னோடுவதை வெறித்தபடியே வந்தேன். எட்டரைக்கு முன்பாக அது வேலை நாள் தானா எனும் சந்தேகத்தைக் கிளர்த்தும் அளவுக்கு காலியாகக் கிடந்தது வளாகம். நல்லவேளை அற்புதம் மாமாவின் பாய்லருக்கு எதிரே ஒரு ஆவி பறக்கும் கோப்பையுடன் சின்னைய்யா. நேரே அங்கெ சென்றதும், ஒரு சேர இருவருமே பார்த்தார்கள். “என்ன சீனி இவ்வளவு சீக்கிரமா?” ஒரு சேரக் கேட்டார்கள். பொதுவாகச் சிரித்தபடி சின்னைய்யாவை கொஞ்சம் ஓரமாய் ஒதுக்க அவர் புரிந்து கொண்டவராய், “இத வரேன் மாமா” என்றார். அற்புதம் மாமாவும் புரிந்து கொண்டார். 

“அண்ணே இந்த முந்நூறு ரூவாய வச்சிக்கிட்டு ஒரு ஐநூறு தர முடியுமா?” சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்திற்கு வந்துவிட்டேன். ஆச்சரியமாகப் பார்த்தார். 

“எதுக்கு சீனி. சில்றையா எங்கிட்டையே இருக்குப்பா. இருநூறாவே தர்றேன்” சட்டைப் பைக்குள் விரலை நுழைத்துவிட்டார். ஆனால் நான் அசையாமல் நின்றேன். இறக்காத கரத்தில் அந்த மூன்று தாள்கள் அப்படியே நின்றன. மேற்கொண்டு துருவ விரும்பாதவராய் வாங்கிக் கொண்டு கேட்டதைக் கொடுத்தார். 

“வர்றேண்ணே… வாரேன் மாமா” நான் போவதை அவர் நிச்சயம் வெறித்துப் பார்க்கிறார் என்பது திரும்பிப் பார்க்காமலே தெரிந்தது. உள்ளே நுழைந்ததும் நான் மட்டும் இருப்பதை ஒரு கணம் நிதானித்து உறுதி செய்து கொண்டேன்.  ஆறுமுகம் மாமாவின் டேபிள் மேலிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து பருகுவதாய் நின்றேன். 

இரும்புக் கவசத்தை கழற்றிப் போட்ட போர் வீரனின் விடுதலையுணர்வு தொற்றிக் கொண்டது. கட்டிடத்துக்குப் பின்பக்கம் இருந்த கழிவறைக்குச் சென்றேன். நீர்த்துளிகள் தெறித்துக் காய்ந்து கறை போல வெளுத்திருந்த அந்தப் பழைய கண்ணாடியின் முன் நின்று பார்த்தேன். நேற்று அந்த டாக்டர் சொன்னது நினைவில் வந்து போனது. அப்பா தெளிந்த சிரிப்போடு அங்கு நின்றார். 


 

எழுதியவர்

வருணன்
இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.

இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x