24 May 2025
padmakumari may 21

பேருந்தின் ஜன்னல் கம்பியில் தலைசாய்த்திருந்த சுதாவின் கன்னத்தில் மதியம் பெய்திருந்த மழையின் மிச்சம் படர்ந்திருந்தது. நடத்துனரிடம் வாங்கியிருந்த பயணச்சீட்டை  விரலிடுக்கில் அழுந்தப் பிடித்திருந்தாள். அவள் செய்ய துணித்திருக்கும் செயலுக்காக மூளையும் மனமும் எதிரெதிர் திசைகளில் நின்று வாதிட்டுக் கொண்டிருந்தன. நீ செய்வது தவறேயில்லையென்று உரத்து கூறிக்கொண்டிருந்த மூளையின் முகத்தில் உமிழ்ந்து அவமானப்படுத்த முயற்சி செய்துக் கொண்டிருந்தது மனம். 

எதற்காக இந்த பயணம். எதை நிரூபிக்க? நிரூபித்துவிட்டால்? என்ன சரியாகிவிடும்? நான் எடுத்த முடிவு சரிதானே. அதெப்படி ஓரேடியாக எல்லோரும் தவறென்று முத்திரை குத்துவார்கள். அடுத்தென்னவென்று தானே பார்க்கவேண்டும். எதற்கு முடிந்துபோனதை சொல்லி பொழுதன்னைக்கும்  நொகடிக்கணும் ? அதற்கு நம்பவைத்து கழுத்தறுக்கவேண்டுமா? நட்பை இப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா? ஆமா எல்லாரும் என்ன ஏதோ பெருங்குத்தம் பண்ணுணதா சொல்றாங்கல்ல.புரிய வச்சிட்டா விட்டிருவாங்கல்ல.ஓ புரிய வச்சிட்டா விட்டிருவாங்க? அப்பதான் இன்னும் சங்கதி பெருசாகும். அவள மாதிரி பொறுமையா இருக்கதெரில. வளைந்து கொடுத்து வாழ தெரியல எக்ஸட்ரா எக்ஸட்ரா. அது வரப்ப அடுத்து பாத்துக்காலம். முதல்ல இதுக்கு முடிவு கட்டிக்கிறேன்.

முந்தைய நொடி மூளையின் அருகே நின்றுக்கொண்டிருந்தவள் அடுத்தநொடி மனத்தின் சுட்டுவிரல் நுனியை பற்றியிருந்தாள். இரண்டுக்குமிடையே தாவிக்கொண்டிருந்தவளின் முகம் அமைதி குலைந்து  சோர்வுற்றிருந்தது. 

“ கொஞ்சம் நகர்ந்து உட்கார முடியுமா?” 

கனிவான குரல் சுதாவை  இடைமறித்தது. 

 எதிரே  நின்றிருந்த முகத்தை அண்ணாந்து பார்த்தாள். சுதாவின் வயதையொத்திருந்த பெண்.அமைதியான சாயலோடிருந்த முகம் லேசாக புன்னகைத்தது. 

மடிக்குழியில் கிடந்த கைபேசியை இடதுகைக்குள் எடுத்தபடி கால்களை தொங்கவிட்டு உடலை லேசாக சுருக்கி அமர்ந்தாள்.

“தேங்ஸ்”

சுதா கைபேசியை திறந்து முகநூல் பக்கத்தில் உமையாளென்ற பெயரிடப்பட்டிருந்த உள்பெட்டிக்குள் நுழைந்து தங்களுக்குள் நடந்திருந்த உரையாடலின் முதல் வரிக்கு நகர்த்திச் சென்றாள்.

“ ஹாய் … ஐ ம் கிரேட் பேஃன் ஆஃப் யுவர் மூவி ரிவியூஸ்” 

அவர்களுக்கிடையேயான உரையாடல் சுதாவின் தரப்பிலிருந்து இப்படியாக        துவங்கியிருந்தது. 4 பிப்பரவரி 2024 மூன்று முப்பது பி.எம் என்று நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

***

ரன் பார்க்க ஆரம்பித்திருந்த ஒன்றரை வருடத்தில் முதல்முறையாக எல்லா வகையிலேயும் பொருத்தமாக அமைந்திருந்த வரன் முகுந்தன். அதுவரையிலான வரன்கள் ஜாதகம், அந்தஸ்து, அழகு என்று இருதரப்பிலிருந்தும் வெவ்வேறு காரண நிராகரிப்பினால் தள்ளிப் போய்க்கொண்டிருந்தன. முகுந்தன் சுதாவின் அண்ணியினுடைய தோழி லலிதாவின் நெருங்கிய உறவுமுறை. லலிதா சுதாவினுடைய படிப்பு வேலை மட்டும் குடும்ப விவரங்களைப்பற்றி பகிர்ந்தபோது முகுந்தனின் குடும்பத்திற்கு பிடித்துப்போயிருந்தது. பிறகு ஜாதகமும் புகைப்படமும் லலிதாவின் வழியாக இரு தரப்பிற்குமிடையே கைமாற்றப்பட்டது. 

சுதாவிடம் முகுந்தனின் புகைப்படம் கொடுக்கப்பட்டது. ஒல்லியான தேகம், அடர்ந்து நின்ற தலைமுடி, லட்சணமான முகம். ஒளிக்கீற்றுடனிருந்த கண்கள் . அவள் டிக் செய்துவிட்டாள்.

“ அவங்களுக்கும் பொண்ண பிடிச்சுபோச்சாம். பையன் தனியா பொண்ண  நேர்ல பார்த்து பேசிட்டு முடிவ சொல்றதா சொல்லியிருக்கான். அதான் நம்ம சைட் ஓகேவான்னு லலிதா கேக்குறா”

அண்ணி சொல்லுவதை  கண்டுக்கொள்ளாதபடி சுதா விரல்களால் கைபேசியை துளாவிக் கொண்டிருந்தாள். அவள் விரலின் அசைவுகளில் இருந்த கள்ளத்தனம் பிடிபட்டபோது அண்ணி லேசாக புன்னகைத்தாள்.

“ ஏதோ எம்பிள்ளைக்கு நல்லகாலம் பொறந்தா சரிதான். ஒன்னரை வருஷமா ஒன்னும் அமையாம இழுத்துகிட்டு இருந்ததுல எங்க இப்டியேபோனா அப்பா இல்லாத பிள்ளைய அண்ணன் கண்டுகிடாம விட்டுட்டான்னு சேகர் மேல பேச்சு வந்திடுமோன்னு பயந்துகிட்டிருந்தேன்”

சுதாவின் அம்மா அண்ணாந்து கூரையை பார்த்தபடி கைகளை வணங்குவதாக குவித்திருந்தாள்.

சுதா அலுவலகத்தில் நெருங்கிய தோழியிடம் முகுந்தனின் புகைப்படத்தை காண்பித்தாள்.

“ ம்ம் ஆளு சூப்பராதான் இருக்காரு “ 

சுதாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. தன்னைமீறி ததும்பிய புன்னகையை உள்ளிழுத்தபடியே தோழியிடமிருந்து கைபேசியை வாங்கிக்கொண்டாள்.

“ டே ஆஃப்டர் டுமாரோ தான? “

“ ஆமா “

“ மீட்டிங் எங்கன்னு சொன்ன? “

“ ஸ்டார்பக்ஸ்”

“ ம்ம்..” 

“ என்னல்லாம் பேசுறதுன்னு மண்டைக்குள்ள ஒத்திகை பார்த்து முடிச்சாச்சா?”

“ அதெல்லாம் பெருசா ஒண்ணுமில்லடி. எனக்கு போட்டோ பார்த்தபவே ஓரளவு பிடிச்சது . அவங்கதான் பேசணும் கேட்டிருக்காங்க. ஸோ ஜஸ்ட் போய் டாக் எப்படி போகுதோ அதுக்கேத்த மாதிரி ஜாயினாகி பேசிட்டு வந்திடவேண்டியதான் “

“  அப்ப நீ மைண்டைல பிக்ஸாகிதான் போற. ரைட்டு.. நடத்து “

“ நம்பர் ஷேர் பண்ணி நீங்கதான டேட் ஆண்ட் டைம் பிக்ஸ் பண்ணியிருக்கீங்க. மேற்கொண்டு சேட் போயிருக்குமே”

தோழி சுதாவையே உற்றுப் பார்த்தாள்.

“ அதெல்லாம் எதுவுமில்லடி. ஜஸ்ட் மீட்டிங் மட்டுந்தான் பிக்ஸ் பண்ணிகிட்டோம்.”

“ இத நான் நம்பணும்..”

“ நம்பாட்டி போ “

சுதா தோழியின் முகத்தை தவிர்த்து சாப்பாட்டு வட்டயை திறந்தாள்.

சுதாவிற்கு முகுந்தனோடு உரையாடும் விருப்பமிருந்தது. அவன் தரப்பிலிருந்து பேச்சு வளரவில்லை என்பதால் தன்னை கட்டுபடுத்திக் கொண்டிருந்தாள்.

முகுந்தனை சந்திக்கிற நாள் வருகிறவரையில் தினமும் கணக்கற்ற முறை உள்பெட்டியை திறந்து அவர்களுக்கிடையே நடந்திருந்த பத்துவரிக்கும் குறைவான உரையாடலை வாசித்துக்கொண்டிருந்தாள். யாருக்கும் தெரியாமல் அவ்வவ்போது புகைப்படத்தை திறந்து பார்த்துக்கொண்டாள். பிடித்த பாடலை மனதில் முணுமுணுத்தபடி பறப்பவளாக நடந்துக்கொண்டிருந்தாள். வீட்டிலிருப்பவர்களோடான பேச்சு குறைந்திருந்தது. 

பெண் பார்ப்பதற்காக கொடுக்கப்பட்டிருந்த புகைப்படத்திலிருந்த அதே புடவையை  உடுத்திக் கொண்டாள் . முதலில் அண்ணன்தான் அவளை கொண்டுவிடுவதாக சொல்லியிருந்தான். கடைசி நேரத்தில் அலுவலகத்திலிருந்து அவனுக்கு அழைப்பு வந்திருந்ததில் அவள் கேப் புக் செய்து போகும்படியானது. அவள் ஸ்டார்பக்ஸிற்குள் நுழையும்போதே முகுந்தன் அவர்களுக்கான இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்திருந்தான்.

“ சாரி வெயிட் பண்ணவச்சிட்டேன் “ 

அவள் அவன் எதிரிருந்த இருக்கையை பின்னிழுத்து அமர்ந்தாள்.

“ ஆமா. மூணு நிமிஷம் லேட். டைம் கீப் அப் பண்ண பழகிக்கோங்க. எனக்கது ரொம்பவும் முக்கியம் ”

அவள் இப்படியானதொரு பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை.  எதிர்பாராத பதிலின் அசெளகரியங்களை முகத்தில் காண்பித்துக் கொள்ளாமல் வழிந்து இயல்பாக்கிக்கொண்ட முகத்தோடு  சரி என்பதாக தலையசைத்தாள்.

“ எப்டி வந்தீங்க?” 

“ கேப் .அண்ணாவோட வரதா இருந்திச்சு. லாஸ்ட் மினிட் ஜெயின்ஜஸ்”

“ ஸ்ட்ரெய்ட் பஸ் இருக்கே . பக்கம்தானே . பஸ்ஸிலேயே வந்திருக்கலாமே. கேப் எவ்வளவு சார்ஜ் பண்ணாங்க?”

“ டூ கண்ட்ரட்”

“ ம்ம் ..”

அவனது முகத்தில் யோசனையோடியது .

“ ஸேரியோட பஸ்ல ஏறி இறங்க கஷ்டமோ”

சுதா கேப் எடுத்து வந்ததற்கான  முக்கியமான காரணமும் அதேதான் என்பதால்  ஆமாமென்று பதிலளித்தாள்.

“ அது சரி … உங்ககிட்ட ஒரு ஸேரிதான் இருக்கா என்ன ? போட்டோலயும் இதையேதான் கட்டியிருந்தீங்க”

அவன் வம்பிழுக்கிறான் என்பதாக அவள் தன்னைதானே சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றாள் . அவனது முகம் தீவிரமாகவேயிருந்தது. 

“ அப்படியில்ல…”

“ சரி அதவிடுவோம். உங்க ஸேலரி வீட்ல சொன்னாங்க. உங்க எக்ஸ்பீரீயன்சுக்கு ரொம்ப கம்மியா இருக்கே. நெக்ஸ்ட் ஜம்ப் எதுவும் ட்ரை பண்ணிட்டு இருக்கீங்களா..ஆர் வெயிட்டிங் ஃபார் எனி அப்கம்மிங் ப்ரமோஷன்ஸ்?”

“ இப்போதைக்கு எதுவுமில்ல”

“ பினாஸ்ஸியலி ஸ்டாராங்கா இருக்கிற பார்ட்னர்தான் நான் எக்ஸ்பெக்ட் பண்றேன். இட் வில் பி குட் இஃப் யூ கேன் ட்ரை பாஃர் யுவர் நெக்ஸ்ட் மூவ்”

 பதிலை தருவதற்கான அவகாசம் அவளுக்கு வழங்கப்படவில்லை. அவனது பேச்சு கட்டளை தொணியிலிருந்தது. 

“ காலேஜ் டேஸ்ல பசங்ககிட்டெல்லாம் பேசுவீங்களா ? டு யூ ஹேவ் மேல் பிரண்ட்ஸ்”

“ ம்ம் இருக்காங்க”

“ கல்யாணத்துக்குப்பறம் பெருசா கான்டேக்ட்ல இருக்கவேணாம்”

இதுவும் கட்டளையாகவே வந்தது.

“ டோண்ட் யூ ஹேவ்..”

“ எனக்கு இருக்காங்க. இருக்காங்க சொல்றதவிட ஒருத்தியிருக்கா. ஸீ இஸ் வெரி க்ளோஸ் டூ மீ. இப்பகூட நம்ம பேசிமுடிச்சிட்டு அவளுக்கு உடனே அப்டேட் தரணும். இல்ல சாகடிச்சிருவா”

சுதா கேள்வியை முடிப்பதற்குள் அவனிடமிருந்து பதில் வந்தது.முகத்தில் பிரகாசம் கூடியிருந்தது.

“ஓ”

“அப்ப….”

அவளை இடைமறித்து அவனது எதிர்பார்ப்புகளென்ற ஒரு நீண்ட வரிசையை  அடுக்கிக் கொண்டே போனான். போடா டேய் நீயும் உன் லிஸ்டுமென்று சொல்லிவிட்டு எழுந்து நகர்ந்துவிடலாமா என்று தோன்றியது அவளுக்கு. இங்கு நடந்தவற்றை நிரூபிக்க முடியாது. அப்படி செய்துபோவதால் திமிர்பிடித்த பெண்னென்று தன்மீதே குற்றம் திரும்ப வாய்ப்பிருக்கிறதென்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.

இடையில் அவகாசம் சொல்லி எழுந்து போனவன் அவனுக்கான ஒற்றை காபியோடு வந்தமர்ந்தான். 

“ உங்களுக்கு எதாவது வேணும்னா வாங்கிட்டு வாங்க. ஐ வில் வெயிட்“  

“இல்ல இப்போதைக்கு எதுவும் வேணாம் “

அவளது முகம் மொத்தமாக இருண்டுபோயிருந்தது.

கையிலிருந்த காபியை உறிஞ்சியபடியே லிஸ்டை தொடர்ந்தான்.

“ என் வீட்ல எனக்கு கம்பியான ஆப்ஷன்ஸ்தான் கொண்டு வராங்க. ஜாதகம்ன்னு சொல்லியே நிறைய வாஸவுட் பண்ணிடுறாங்க. எனக்கும் முடி நிறைய கொட்டுது  . பால்ட் ஆயிட்டா தென் ஐ வில் ஸ்டார்ட் கெட்டிங் ரிஜக்ஸன்ஸ். நீங்க எனக்கு ஓரளவு ஓகேவா இருக்கிறதா தோணுது. டூ இயர்ஸ் பாக்கலாம். செட் ஆகிடுச்சுனா வெல் ஆண்ட் குட். எனக்கு ஒத்து வரலேனா டிவோர்ஸ் பண்ணிக்கலாம். பிடிக்காத லைஃப் கேரியான் பண்ண என்னால முடியாது.”

“ என் சைட் இவ்வளவுதாங்க. இப்ப உங்க சைட் எதுவும் இருந்தா சொல்லலாம்”

முதல்முறையாக அவளுக்கான இடைவெளியை அனுமதித்தான்.

“ நத்திங் மச். நீங்க பேசணும் கேட்டதால வந்தேன். தேட்ஸால் “

“ எதுவுமேயில்லியா?”

“ இல்ல”

அவள் தீர்க்கமாக சொன்னாள்.

“ ஓகே பைஃன் அப்ப கிளம்பலாம் “

அவன் இருக்கையிலிருந்து எழுந்தான். அவளும் எழுந்துக் கொண்டாள்.

“ ரிட்டனும் கேப்தானா”

“ யெஸ்”

உள்நுழையும்போது இல்லாத இறுக்கத்தை அவளது உடல்மொழி அடைந்திருந்தது. அவன் அதனை கவனித்திருக்கவில்லை. அவனுக்கான பிரத்தியேக யோசனைகள் அவனுக்குள் சுழன்றுக் கொண்டிருந்தன.

அவளுக்கான கேப் வரும்வரையிலும் அவளோடு நின்றிருந்தான். 

“ ஏங்க ஒரு நிமிஷம்”

கேப்பை நோக்கி நகர்ந்திருந்தவள் திரும்பிப் பார்த்தாள். சுருங்கிப்போயிருந்த மனம் லேசாக மலர்ந்தது.

“ ஒரு நிமிஷம்”

அருகில் வருமாறு கேட்டான்.

“ ஹைட் சரியாயிருக்கா பார்க்க மறந்துட்டேன். அவ மறக்காம செக் பண்ணிக்க சொன்னா”

சுதா திருதிருவென முழித்தாள்.

“ அதான் என்னோட க்ளோஸ் ப்ரண்ட் ஒருத்தியிருக்கா சொன்னன்ல”

“ ஓ ஓகே”

“ கிளம்புறேன்”

“ ஓகேங்க பாக்கலாம்”

சமையல் நல்லா பண்ணணும், எனக்கு அவுட்சைட் ஃபுட் ஆகாது. ஆண்ட் டேஸ்ட் ரொம்ப முக்கியம். எங்கையும் வெளிய போகவர என்ன டிப்பண்ட் பண்ண கூடாது. மூவி சேர்ந்து போகலாம். சேர்ந்து அவுட் போகலாம். இப்படியெல்லாம் எக்ஸ்பெக்டஷன் வச்சிருக்க வேணாம். ஐ ம் நாட் தேட் டைப். டூவீலர் வாங்கிக்கோங்க. அடிக்கடி கேப் யூஸ் பண்ணா தேவையில்லாத காசு வேஸ்ட். ஆல்ஸோ.. ஐ ம் நாட்அட் ஆல் ஏன் எமோஷனல் பர்சன். ஸோ என்கிட்டயிருந்து எந்த எமோஷனல் சப்போர்டும் எதிர்பாக்காதீங்க. என்ன பொருத்தவரைக்கும் சாவு ஒண்ணுதான் வருத்தப்படுறதுக்கு தகுதியான விஷயம். மத்தபடி எதையும் நான் பெருசா கண்டுக்கமாட்டேன். 

“ லொகேஷன் வந்திருச்சும்மா”

அவன் பேசியிருந்ததை மூளைக்குள் ஓடவிட்டபடடி தன்னிலை மறந்திருந்தவளை கேப் ட்ரைவர் சேருமிடம் வந்திருந்ததை சுட்டிக்காட்டி இறக்கிவிட்டு போயிருந்தார். 

சுதா வீடு வந்துசேரும் முன்பாகவே முகுந்தன் வீட்டு தரப்பிலிருந்து சம்மதம் தெரிவித்திருந்தார்கள்.அவள் தனது மறுப்பை சொன்னபோது அண்ணி அவளை சம்மதிக்க வைக்க முயன்றாள்.

“ இதெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள்தான். கல்யாணமான தன்னால சரியாகிடும். நானும் உன் அண்ணனும் கல்யாணத்துக்குமுன்ன பேசிக்ககூடயில்ல. இப்ப நல்லாதான இருக்கோம். ஆறு வருஷமா கொழந்த இல்லங்கிறதுகூட எங்களுக்குள்ள எந்த விரிசலயும் உண்டுபண்ணிடலியே ”

முகுந்தன் பேசியவற்றை சுதா வரி பிசகாமல் சொன்னபோதும் அண்ணி சுதாவை சமாதானம் செய்வதை கைவிடவில்லை.

அண்ணியின் சமாதானங்களில் ஒட்டிக்கொள்ளாமல் சுதா அம்மாவை பார்த்தபோது அம்மா  குனிந்துக் கொண்டாள். அண்ணியின் வருகைக்குப்பிறகு அம்மாவின் குரல் குறைந்துக்கொண்டே வந்து  மொத்தமும் நின்றிருந்தது.

“ சரியண்ணி. நீங்க சொல்றதுக்காக நான் சம்மதிக்கிறேன். ஒருவேளை ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் நீங்க எனக்கு இன்னொரு வரன் பார்க்கிற ஸிட்டுவேஷன் வரலாம். அதுக்கும் சேர்த்து நீங்க ரெடியாகிக்கங்க. மத்தபடி எனக்கு ஓகேதான்”

அண்ணி அமைதியானள். முகம் கடுகடுத்துபோனது.

அண்ணன் வேலையிலிருந்து திரும்பியபோதே முகம் கனத்திருந்தது. அண்ணி தொலைபேசியிலேயே தகவல் தெரிவித்திருக்க வேண்டுமென்பதை சுதா யூகித்துக் கொண்டாள்.

வீடு சகஜ நிலைக்குத்திரும்ப சில வாரங்களானது.ஆறு மாதங்கள் சென்றபோது லலிதாவின் வழியாக முகுந்தனின் திருமண செய்தி சுதாவின் வீட்டை வந்தடைந்தது . 

“ அந்த பொண்ணயும் உன்ன பார்த்தமாதிரி நேர்ல பார்த்து பேசிதான் ஓகே பண்ணியிருக்காங்க. நம்ம விஷயத்தினால தனியா பாக்குறது வேண்டாம்ன்னு முடிவுபண்ணி  பேமலியா கோயில்ல பார்த்து பேசி ஓகேயாகியிருக்கு. பொண்ணும் மாப்பிளையும்கூட பேமலிகிட்டயிருந்து விலகி  ஃபைவ் மினிட்ஸ் தனியா பேசிருக்காங்க. நம்மளவிட மூணு மடங்கு வசதியான இடமாம்..நீ அவன வேண்டாம்ன்னு வந்து நின்ன. இப்ப அவனுக்கு அமஞ்சிருச்சு. நமக்குத்தான் அதுக்கப்புறம் அதுமாதிரி எதுவும் சரியா கூடிவந்து அடுத்த கட்டத்துக்கு நகர மாட்டேங்குது”

அண்ணி  சுதாவை முறைத்தபடி சொன்னாள்.

சுதா பதில் பேசவில்லை.

அதன்பிறகான நாட்களில் எந்த வரன் சரியாக வரவில்லையென்றாலும் சுதாவின் அண்ணி முகந்தனிடம் வந்து நின்றுக்கொண்டாள். 

சுதாவின் அவசரப் புத்தியினால் நல்லதொரு வாழ்க்கையை இழந்ததாக, சம்பாதிக்கும் திமிரில் தவறான முடிவெடுத்துவிட்டதாக, தனக்காக அமையவிருந்த சரியான வாழ்க்கையை சுதா தானே தவறவிட்டுவிட்டதாக இப்படி ஒரே புகாரை வெவ்வேறு வார்த்தை கோர்வைகளில் அவள் முன் வைத்தாள்.

“ எதோ ஒருவகையில அவனுக்கும் அந்த பொண்ணுக்கும் ஒத்து வந்திருக்குமா இருக்கும்”

“ சரி நான்தான் தப்பான முடிவெடுத்ததா இருக்கட்டுமே.  இனி மாத்தவா முடியும். விடுங்களேன்”

“ இரண்டு வருஷமாச்சு டிவோர்ஸா ஆயிடுச்சின்னு  என்கிட்ட கேக்குறீங்க . அவங்களுக்குள்ள என்ன நடக்குதுண்ணு யாருக்கு தெரியும். டிவோர்ஸ் வாங்காத எல்லாருமே எதோ ஆதர்ஷ தம்பதிகளா வாழுற மாதிரில பேசுறீங்க”

     அண்ணி பழி சொல்லி பேசும்போதெல்லாம் சலிக்காமல் வாதாடிக்கொண்டிருந்த சுதா ஒருக்கட்டத்தில் அமைதியை கையில் எடுக்கத் தொடங்கியிருந்தாள்.

இதோ வந்துவிட்டது அதோ வந்துவிட்டது. இது கட்டாயம் முடிஞ்சிரும். அதான் குடும்பமா வந்து பாத்திட்டு போயிருக்காங்கல்ல. நல்ல பதிலாதான் சொல்லுவாங்க. பையனோட அம்மாவுக்கு சுதாவ பார்த்ததுமே முகமெல்லாம் பூரிச்சு போச்சு. கட்டாயம் புடிச்சிருக்கதாதான் தகவல் சொல்லி அனுப்புவாங்க.ஒவ்வொரு முறையும் சுதாவை மணமேடையில் ஏற்றியிறக்கிய பேச்சுகள் அவளுக்கு சலித்துப்போயிருந்தது. 

அந்தமுறைக்கான வசவு அண்ணியால் இப்படி துவக்கி வைக்கப்பட்டது.

 “முகுந்தன் பையனுக்கு இன்னிக்கு ஒரு வயசு பொறந்தநாளாம். கல்யாணமாகி இரண்டரை வருஷமாச்சு. நல்லாதான வாழ்றாங்க. பெங்களூர்ல சொந்த வீடும் வாங்கி செட்டிலாய்டாங்க. சுதாதான் தேவையில்லாதுலாம் சொல்லி நல்ல பையன விட்டுட்டான்னு லலிதா சொல்றா. அவ சொல்றதுக்கு பதில் இல்லாம அமைதியா கேட்டுட்டு வந்தேன். கேட்டுக்குற இடத்தில வச்சிட்டால்ல

 சுதா பதில் பேசாமல் தட்டில் இடப்பட்டிருந்த சோற்று பருக்கைகளை விரல்களால் அங்குமிங்கும் இடம்மாற்றி விட்டுக்கொண்டிருந்தாள். 

ஏன் மூஞ்சி தொங்குது. அவ சொல்றதுல என்ன தப்பிருக்கு. நீ அந்த பையன் எந்த பொண்ணுக்குமே செட்டாக மாட்டான்னு பேசுன. அப்படியொண்ணும் ஆகலியே.நீதான் எடுத்தோம் கவுத்தோம்ன்னு முடிவு பண்ணிட்டியோன்னு தோணுது”

சுதாவின் அம்மாவுடைய பேச்சில் நிதானமான கோபமிருந்தது.

அம்மா பேசிய வார்த்தைகள் சுதாவின் புத்தியை சீண்டியது. முகுந்தன் மனைவியோடு அத்தனை சரியான வாழ்க்கையை வாழ்ந்துவிட வாய்ப்பேயில்லையென்று சுதா தீர்க்கமாக நம்பினாள். அம்மாவே தன்மீது குற்றம் சொல்லுமிடத்திற்கு வந்துவிட்டதை அனுமதிக்கமுடியாதென்று நினைத்தாள்.அம்மாவிற்கு தான் சரியென்று நிரூபித்துவிடவேண்டுமென்கிற முனைப்பு அவளுக்குள் எழுந்திருந்தது.

முகுந்தனின் முகநூல் பக்கத்திலிருந்து நூல்பிடித்து அவனது மனைவியின் முகநூல் பக்கத்தை அடைந்திருந்தாள். உமையாளின் முகப்பக்கத்தில் திரைப்படங்கள் பற்றிய கருத்துகள் நிறையவே பதிவிடப்பட்டிருந்தது .அதுவும் வார இறுதி நாட்களென்றால் இரண்டு மூன்று பதிவுகள் இடப்பட்டிருந்தது. அவற்றில் சிலவற்றை படித்துவிட்டு அதன் அடிப்படையில் உமையாளுடனான உரையாடலை சுதா துவங்கினாள் . சுதாவும் அடிப்படையில் திரைப்பட விரும்பியாக இருந்தது உரையாடலை வளர்த்துக்கொள்ள அவளுக்கு உதவியது. 

நட்பு அழைப்பு தராமலேயே சுதா உரையாடலை வளர்த்தெடுக்க , சுதாவின் பேச்சில் ஈர்க்கப்பட்ட உமையாள் தானாகவே முன்வந்து நட்பு அழைப்பு கொடுத்தாள்.தினமும் தொடர்ந்த அவர்களின் உரையாடல் குறைந்த நாட்களிலேயே திரைப்படத்தை தாண்டிய சில பேச்சுகளுக்கும் முன்னேறியிருந்தது. உமையாளின் உரையாடல்கள் இயல்பாக  போய்க்கொண்டிருக்க சுதா இயல்பாக தெரிவதான திட்டமிட்ட உரையாடல்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.

தனக்கு வரன் பார்க்கும் விஷயம் வருடக்கணக்கில் இழுத்தடிப்பதாக சுதா சோகமான முறையில் பகிர்ந்துக் கொண்டாள் . திருமணபந்தத்தின் மீதான உமையாளின் கருத்துகளை இதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாமென்பதாகவும் அப்படியே அவள் சொந்த வாழ்க்கையை குறித்தும்கூட ஏதேனும்  தகவல் கிடைக்கலாமென்பதாகவும் சுதா நம்பினாள்.

“ மேரேஜ் ஹேஸ் நத்திங் டூ ஹிவ் கேரண்டி டூ யுவர் ஹேப்பினஸ். லவ் யுவர் வோன்ஷெல்ஃப்  . நோ ஒன் கோயிங் டூ லவ் யூ மோர்தென் யூ. எவரி ரிலேஷன்ஷிப் அரவுண்ட் யூ ஹாவ் இட்ஸ் வோன் ஷெல்பிஸ்னஸ்”

உமையாள் அனுப்பியிருந்த வரிகளை சுதா நிதானமாக  வாசித்தாள். தான் நினைத்ததுபோலவே முகுந்தனுடனான உமையாளின் உறவில் நிச்சயம் சிக்கலிருக்கிறதென்பதை கூடுதல் தீர்க்கத்தோடு நம்பினாள்.உமையாளின் வரிகளை மெஸஞ்சரின் மெஸேஜ்பின்னிங் வசதியை  பயன்படுத்தி பத்திரப்படுத்திக்கொண்டாள்.

“ ஹக்ஸ் டியர் . ஐ ம் தெயர்  ஃபார் யூ “

சுதா பதில் அனுப்பி வைத்தாள் .

உமையாள் ஒற்றை ஸ்மைலியை பதிலாக அனுப்பினாள்.

அவர்களின் அதன்பிறகான உரையாடல்களில் இதன் தொடர்ச்சியான எதையும் உமையாள் பகிர்ந்துக் கொள்ளவில்லை. சினிமாவை தவிர்த்து பேச ஆரம்பித்தால் அவளது பேச்சு பெரும்பாலும் தனது குழந்தையை பற்றியதாகவேயிருந்தது.தன்னுடைய  காய் நகர்த்தல்கள் வெளிப்பட்டு விடக்கூடாதென்கிற கவனமிருந்ததால் சுதாவாலும் ஒரு எல்லையைத் தாண்டி விசயங்களை நகர்த்த முடியவில்லை.

நேரில் உமையாளை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால் முகுந்தனுடனான அவளது உறவுச்சிக்கல்களை பற்றிய கூடுதல் விவரங்களை சேகரித்துக் கொள்ளமுடியுமென்று சுதா நம்பினாள். அதற்கான சரியான காரணங்களை உருவாக்க அவளது மூளை அலைந்துக் கொண்டிருந்தபோது பெங்களூரில் நெருங்கிய தோழியின் திருமணம் என்பதாகவும் அதே நாளில் தனது அக்காவின் திருமணமும்  என்பதால் போகமுடியாமல் இருப்பதை வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தாள் சுதாவுடன் வேலைப் பார்த்தூக்கொண்டிருந்த தேவி. சுதா அப்படியே பேச்சை நீட்டித்து அந்த திருமணத்தைப்பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்துக் கொண்டாள்.  அதனையே தனது கல்லூரி தோழியின் திருமணமாக திரித்துக்கூறி பெங்களூர் போகவிருப்பதாக வீட்டில் தெரிவித்தாள். உமையாளிற்கும் தகவல் தெரிவித்து அவளை அருகிலிருந்த ரெஸ்டாரண்டில் சந்திப்பதாக உறுதி செய்துக் கொண்டாள். உமையாள் சுதாவை வீட்டிற்கு வரும்படி வற்புறுத்தினாள். விடுமுறை குறைவாக இருப்பதால் திருமணம் முடிந்த கையோடு கிளம்பவேண்டிருப்பதாகவும் நேர பற்றாக்குறையால் வீட்டிற்கு வருவது சிரமமென்றும் காரணம் சொல்லி நழுவிக் கொண்டாள். 

மூன்று மாதங்களாக தொடர்ந்திருந்த உரையாடலை வாசித்து முடித்திருந்தவள் கைபேசியிலிருந்து மீண்டாள். இருக்கையில் தலைசாய்த்து கண்களை இறுகமூடிக்கொண்டாள்.

***

யண இடைவெளிக்காக பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது.எதையோ யோசித்தவளாக தோள்பையை மாட்டிக்கொண்டு சுதா பேருந்திலிருந்து  இறங்கினாள். பேருந்தின் பின் பக்கவாட்டு ஓரமாக ஒதுங்கிக் கொண்டவள் தண்ணீர் பாட்டிலை திறந்து கணிசமான நீரை வலது உள்ளங்கை குழியில் தேக்கிவைத்து முகத்தில் அறைந்தாள்..

அவள் வந்திருந்த பேருந்தின் நடத்துனர் எங்காவது தென்படுகிறாராவென்று சுற்றிலும் துளவினாள். அவர் சற்று தொலைவிலிருந்த உணவு விடுதியிலிருந்து பேருந்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். நின்றுக் கொண்டிருந்த மற்ற பேருந்துகளின் பெயர் பலகையை பார்த்தாள். முகத்தில் அறையப்பட்டிருந்த நீர் நாடியிலிருந்து மார்பில் சொட்டிக் கொண்டிருந்தது.

“ அண்ணா”

ஓட்டுநர் திரும்பி பார்த்தார்.

“ பெங்களூருக்கு டிக்கெட் எடுத்திருந்தேன். இப்ப வரமுடியல. செக் பண்ணறப்ப ரைட் சைட் நாலாவது ஜன்னல் பக்க சீட்ட கணக்குல எடுத்துக்க வேணாம்”

“ சரிம்மா”

“ தேங்ஸ்ண்ணா”

அவள் நகர்ந்துக்கொண்டாள்.

சென்னையென்று பெயர் பலகையிட்டிருந்த ஆம்னி பேருந்தை நோக்கி நடந்துக்கொண்டிருந்த சுதாவின் கைபேசி மின்னியது.கூடவே மெஸஞ்சரின் மணிச்சத்தமும் .கிளம்பும்போதிருந்த மனக்குழப்பத்தில் உமையாளுக்கு தகவல் தெரிவிக்காமல் விட்டிருந்ததை  அப்போது தான் உணர்ந்தாள்.

“ சீட் இருக்கா?”

பேருந்தருகே நின்றபடி புகையிலையின் கடைசி கங்குகளை உள்ளிழுத்துக் கொண்டிருந்த ஓட்டுநரிடம் விசாரித்தாள்.

“ லெஃப்ட் சைட் லாஸ்ட் சிங்கிள் அப்பர்தான் இருக்கு.”

ஓகே

சுதா சம்மதம் சொல்வதாக தலையசைத்தாள்.

“ஏறிக்கோங்க”

இருக்கையில் கால்நீட்டி அமர்ந்துக்கொண்டவள் உமையாளிடமிருந்து வந்திருந்த மெஸஞ்சர் செய்தியைத் திறந்தாள்.

“ஹாய் டியர் வெயிட்டிங் ஃபார் அவர் மீட் . ஹோப் யூ ஆர் ஆன் தி வே”

உமையாள் அனுப்பியிருந்த குறுஞ்செய்தி இப்படியாக

“ ஸாரி டியர் .ஆபிஸ்ல ஒரு அன்எக்ஸ்பெக்டட் கமிட்மெண்ட் . அதனால வரமுடியல. வீ வில் மீட் ஆன் அனதர் டே ஃபார் சுயர்”

தட்டச்சு செய்தவற்றை அழித்துவிட்டு மீண்டும் தட்டச்சு செய்தாள்.

“ ஸாரி டியர்”

மறுயோசனையின்றி அனுப்பி வைத்தவள் பின்ட் மெஸேஜஸை சொடுக்கி அதன் வரிகளை மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருந்தாள்.


 

எழுதியவர்

பத்மகுமாரி
பத்மகுமாரி
நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது சென்னையிலுள்ள ஐ. டி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக இவர் எழுதும் சிறுகதைகள் பல்வேறு இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன. இவரின் சிறுகதைகள் ”நட்சத்திரம்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலாக வாசகசாலை பதிப்பகம் மூலம் வெளியாகி இருக்கிறது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x