
முதன் முறையாய் உலகம் காணும் குழந்தையின் மனநிலையில் தான் முதல்நாள் பணிக்கு சென்றுகொண்டிருந்தேன். சாலையெங்கும் மனிதக் கூட்டத்தின் ஆரவாரம். எதை நோக்கி ஓடுகிறோம் என்ற இலக்கற்ற மனிதர்கள் அன்றாடங்களைக் கட்டிக்கொண்டு அற்பர்களாய் திரியும் காட்சிகளைப் பரபரப்பான காலை நேரச்சாலையில் வெகுவாய் காணமுடிகிறது.
தீபா காலையிலேயே வயிறு வலியென்று சுணங்கிப் படுத்திருந்தாள். வயிறு வலிக்கான மாத்திரையை வாங்கி கொடுத்துவிட்டு சோற்றைப் பிழிந்து சாப்பிட்டு முடித்ததும் மாத்திரையைப் போட்டுக்கொள்ளும்படி சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தேன். சாந்தி அக்காள் பார்த்துக் கொள்வாள். ஏதாவது பிரச்சனை என்றாலும் அவளே அழைப்பாள். இருந்தாலும் பிள்ளையை வலியில் தனியே விட்டு வருவது இருக்கும் துன்பங்களில் தாய்க்கு அதிகப்படியானது.
என்ன செய்வது? இதுவரை பார்த்து வந்த வேலையை விட வேண்டிய சூழ்நிலை. உரிமையாளரின் மனைவிக்குத் தன் வாழ்க்கை குறித்த பயம் அதிகம் என்று பேசிக்கொண்டார்கள். அது என்னால் தூண்டப்படுகிறது என்று தெரிந்தபோது நான் அவ்விடத்திலேயே இருந்து அவளை இன்னும் துன்புறுத்த மனம் கேட்கவில்லை. என் வயதிற்கு நான் பொறுப்பல்லவே?
பாபு அண்ணாவின் மூலமாக வந்த வேலைதான் இப்போது போகப்போவது. வயதான பெண்மணி தனியாக இருக்கிறார். வீட்டு வேலை, சமையல், மேற்படி கடைக்குச் செல்வது போன்று அவள் இடும் கட்டளைக்குப் பதில் பேசாமல் பணிந்தால் சம்பளத்தோடு கூடுதல் பணமும் கிடைக்க வாய்ப்புள்ளது என்ற சொல்லில்தான் நம்பிக்கை பிறந்தது எனக்கு.
தீபாவை கோவை தனியார் மருத்துவமனையில் காட்ட வேண்டும். அவளது வயிற்றுக் கட்டியை விரைவில் நீக்கவேண்டும். தேவா அண்ணனிடம் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும். மேற்படி நானும் தீபாவும் வாழும் வீட்டுக்கு வாடகை செலுத்தி நாங்கள் இரண்டு வேளைக்காவது சாப்பிட வேண்டும்.
மணி ஒன்பதுக்கு மேல் ஆகியிருக்கும். மாதா கோயிலின் கடைசி மணி ஒலித்து அடங்கியிருந்தது. சாலையின் பரபரப்பிலிருந்து பிரிந்து அந்த ஊருக்கே சம்பந்தமில்லாதது போன்றிருக்கும் தெருவுக்கு வந்து சேர்ந்தேன். இங்கிருந்து வலப்புறம் இரண்டாவது சந்தில் இருக்கும் மூன்றாவது வீடுதான் என்று பாபு அண்ணன் சொல்லியிருந்தார். காற்று சில்லென்று மௌனமாய் வீசியது. பெரிய மூச்சொன்றை விட்டு முடிக்கும் முன்பாக நான் அந்த இடத்தை அடைந்திருந்தேன்.
வடகிழக்கு திசையில் வீற்றிருந்தது அவ்வீடு. மஞ்சளும் பழுப்பும் கலந்த வர்ணப்பூச்சுகளோடு மேற்புற சுவரில் கண்ணாடிச்சில்லுகள் பதிக்கப்பட்டிருந்தது. கருப்பு நிற இரும்புக்கதவின் தொடக்கத்தில் டாக்டர் முரளிதரன் என்று பொறிக்கப்பட்ட சிறிய கருங்கல் அந்த வீட்டிற்கு திலகம் போலிருந்தது. பெயரைப் போலவே அந்த இடமும் ரம்மியமாய் இருந்தது.
வீட்டைச்சுற்றி புங்கை மரங்களும்,சரக்கொன்றை மரங்களும், வேப்ப மரங்களும் அடர்ந்து வளர்ந்திருந்தன. நிச்சயம் இலையுதிர் காலத்தில் இலைதழைகளைக் கூட்டியே கை ஒடியப்போகிறதென்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு இரும்புக்கேட்டின் கெண்டியைத் திறந்தேன்.
அது ஏற்படுத்திய ஒலியில் உட்கதவு வேகமாய் திறக்கப்பட்டது. கம்பி கதவுகளுக்கு உள்ளேயிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி யார் என்று சைகையில் ஒரு பெண் கேட்டாள்.
“அம்மா பாபு அனுப்பி வச்சாரு. வேலைக்கு கேட்டு இருந்தீங்களே? “
அவள் பதிலேதும் பேசவில்லை. கதவைத் திறந்துவிட்டு உள்ளே வரும்படி மீண்டும் சைகைக் காட்டினாள். மழைமேகம் சூழ்ந்த நிலம் போலிருந்தது அப்பகுதி. தாழ்வாரம் மட்டும் அதிகம் இருண்டிருந்தது. சுவரெங்கும் ஒட்டடைகள் சூழ அழுக்கு படிந்திருந்ததை அவ்விருளிலும் நன்றாகக் காண முடிந்தது. வீட்டைச் சுற்றிலும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த மண் தொட்டிகளில் இருந்த வகைவகையான தாவரங்கள் தலை கவிழ்ந்து சாய்ந்திருந்தன. ஆங்காங்கே எலியின் புழுக்கைகளும், வௌவாலின் வீச்சமும் கலவையாகச் சுவாசத்தில் பட்டு துர்நாற்றம் வீசியது.
காலணிகள் வைக்கும் திறந்து மூடும் வகையில் அமைந்த ஆளுயர மர அலமாரியில் கலைந்து கிடந்த பலவகையான உயர்ரகக் காலணி வகைகளில் சிறு குழந்தைகள் காலணியிலிருந்து, ஆண்கள் அணியும் விலையுயர்ந்த காலணிகள் மற்றும் கற்கள் பதித்த பெண்கள் அணியும் காலணிகள் வரை என்று பலவகையாகக் கலைந்து சிதறி ஆங்காங்கே கிடந்தன.
எனக்குச் சட்டென்று தீபாவின் நினைவு வந்தது. அவள் “அம்மா வரும்போது செருப்பு வாங்கி மா. காட்டுக்கு போனா உன்னி முள்ளு குத்தி ரத்தம் வருது” என்று சொல்லியே இரண்டு மாதங்கள் இருக்கும்.
உள்ளிருந்து அழைக்கும் குரல் கேட்டது. அவள்தான் அழைத்தாளா என்று தெரியவில்லை. இருந்தாலும் சிறிது நேரமாக நான் இங்கேயே நிற்கிறேன் என்று உணர்ந்து கதவைத் திறந்து உள்ளே சென்றேன்.
விசாலமான வீடு. கூடத்தின் நடுவிலிருந்து மாடிக்குச் செல்லும் படிக்கட்டு வளைந்து நெளிந்து சென்றது. அது முடியும் இடத்தில் தொட்டிச்செடிகள். ஆளுயர நீண்டிருந்தன. அவையும் தலை சாய்ந்தே இருந்தன.
கண்ணெட்டும் பகுதியில் எல்லாம் தூசிபடிந்த வண்ணப் புகைப்படங்களும் சுவர் அலங்காரங்களும் தொட்டிச்செடிகளும் கண்ணாடிக்குடுவைகளும் வீட்டை முழுமையாய் காட்டின. விசாலமான சொகுசு சாய்விருக்கைகள் அறையில் நீண்டு வளைந்திருந்தன. வசதியாய் அமர்ந்து பார்க்கும் படியாய் முழுமையாய் கண்ணால் அளந்துவிட முடியாத அளவில் தொலைக்காட்சி சுவரில் மாட்டப்பட்டிருந்தது. கோப்பைகளும் புத்தரின் தியானம் செய்யும் சிலைகள் ஒன்றிரண்டும் கண்ணில் பட்டன. வீட்டின் நடுப்பகுதியின் சுவரொன்றில் சிறிய செயற்கை நீர்வீழ்ச்சி முன்பு நீரோடிய கரை மட்டுமே இருந்தது. நடுக்கூடத்தின் உயரத்தில் தலைகீழாகத் தொங்கும் சரவிளக்கு மிகுதியான அலங்காரத்தோடு அந்த இருளிலும் மின்னியது.
அப்பெண் ஏதோ ஓர் அறையில் இருந்தாள். அவளை இப்போது வரை முழுமையாய் காணவில்லை என்பதும் அவள் குரலைக் கேட்கவில்லை என்பதும் என்னுள் மீண்டும் மீண்டும் எண்ணங்களாகத் தோன்றி மறைந்தன.
வீட்டிலிருந்து மரண நெடி வீசியது. மரணத்திற்கு என்று நெடியிருப்பதை நான் ஏற்கனவே அறிந்திருந்ததால் அது பழகிய வாசனையாகத் தோன்றியது. வீடு நான் இதுவரை பழகியிராத அமைதியில் இருந்தது. இந்த அமைதி என்னை ஏதோ பயமுறுத்துவதைப் போல உணர்ந்தேன்.
நானாக “அம்மா என்ன வேலைனு சொன்னீங்கனா..” எனப் பேசத்தொடங்கும்போது அவள் ஓர் அறையின் உள்ளேயிருந்து ஒட்டடைக் குச்சியோடு வந்தாள். அதை என் கையில் கொடுத்துவிட்டு மீண்டும் அதே அறைக்குள் சென்றுவிட்டாள்.
எண்ணியதில் மொத்தமாக பதின்மூன்று அறைகள் இருந்தன. கழிவறைகள் மட்டுமே நான்கு. வீட்டை மொத்தமாய் கழுவி கவிழ்த்தும் வரை அவள் என்னிடம் எது குறித்தும் பேசிக்கொள்ளவில்லை.
அவள் இன்ன வேலையென்று குறிப்பிட்டு எதுவுமே என்னிடம் கட்டளையிடவில்லை. அவள் நீட்டும் உபகரணங்களின் பயன்பாடுகளைத் தெரிந்து நானாகவே இழுத்துப்போட்டுக் கொண்டு சுத்தம் செய்தேன்.
சமையலறை புழங்கிப் பல காலமாக இருக்கலாம் என்று தோன்றியது. என்றோ சமைத்து பாத்திரத்தில் வைத்திருந்த பதார்த்தத்தில் புழுக்கள் நெண்டிக்கொண்டிருந்தன. என்னால் நாற்றத்தைச் சகித்துக்கொள்ள முடியும் என்றாலும் என் எல்லையையும் கடந்த துர்நாற்றம் பொறுத்துக்கொள்ள முடியாமல் குமட்டியது. முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு சுத்தம் செய்து முடித்தேன்.
இவள் எப்படி இவ்விடத்தில் சமைத்திருப்பாள் என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் எழுந்தது. மனிதர்கள் வாழ்ந்திடாத கைவிடப்பட்ட பங்களா ஒன்றில் இருப்பதைப் போன்ற உணர்வுகள் கற்பனையில் எண்ணங்களாக மிதந்து வந்தன. எனக்கு ஏதேதோ எண்ணங்கள் பணிகளுக்கிடையிலும் தோன்றி மறைந்தன. ஒருவேளை அவள் வாய் பேச இயலாதவளாகக்கூட இருக்கும் என்று நானே முடிவு செய்துகொண்டேன். அப்போதிலிருந்து அவளிடம் சாடையில் பேசத்தொடங்கினேன். அதையும் அவள் பொருட்படுத்தவேயில்லை. அவள் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பெரும்பாலும் அவள் அறைக்குள்ளேயே இருந்தாள்.
பசி வயிற்றைக் கிள்ளியது. அவள் இருந்த அறைக்குள் விளக்க மாற்றோடு சென்று கதவைத் தட்டினேன். அவள் உள்ளே வர வேண்டாமென்று சைகை செய்தாள். அந்த அறையைத் தவிர மொத்த வீட்டையும் சுத்தம் செய்துவிட்டு வெளியேறும்போது மாலை ஆறு என்று சுவர் கடிகாரம் காட்டியது. அவ்வப்போது அவள் வெளியே வந்து என்னைப் பார்த்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவாள். அந்த வீட்டில் அவளைத்தவிர வேறு யாருமே இல்லை என்பதை நான் சிறிது நேரத்திலேயே உணர்ந்திருந்தேன்.
கடிகாரத்தின் அருகில் மாட்டப்பட்டிருந்த பெரிய சட்டகத்தினுள் யார் யாரினுடைய புகைப்படமோ தனித்தனியாக இணைக்கப்பட்டு இருந்தது. அதில் சிரிக்கும் முகங்களில் எல்லாம் இப்பெண்ணின் சாயல் தெரிந்தது.
” நான் போய்ட்டு வரேன் அம்மா”.
கிளம்பும்போது கிட்டத்தட்ட அந்த நாளிற்கான மொத்தச் சோர்வும் என்னை ஆட்கொண்டிருந்தது. பசியில் கண்கள் மொய்த்தன. ஒரு தேநீருக்குக் கூட வழியில்லாத இந்த வீட்டில் எப்படித் தொடர்ந்து வேலை செய்யப்போகிறேன் என்ற சிந்தனை என்னை அதிகமாகவே ஆட்கொண்டது.
பாபு அண்ணனிடம் சொல்லி வேறு வீட்டைத்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது அந்தப் பெண்மணி வாசலுக்கு வந்தாள். முழுமையாய் சதை படிந்திராத மெல்லிய தேகம் அவளுக்கு. அவள் அசைந்து நடந்து வந்தாள். இவள் எதை உண்டு வாழ்கிறாள் என்று தெரியவில்லை. முகத்தில் சிறிதும் மனிதச் சாயலில்லை. குழிகள் விழுந்து ஒடுக்கோடு அவள் என்றோ இறந்துவிட்ட பிணத்தைப் போலிருந்தாள். மேலிருந்து கீழ் வரை அவளுக்கு எங்குமே சதையென்று ஒன்று சுத்தமாய் இல்லை. மருத்துவரின் மனைவி என்று சொன்னாள் குழந்தைக்கூட நம்பாது. தீபாவின் நோய் குறித்து இவர்களிடம் பேசிப்பார்க்கலாம் என்ற என் எண்ணம் எப்போதோ தவிடு பொடியாயிருந்தது.
அவள் அருகில் வரும்போது கெட்ட நாற்றம் வீசியது. அவள் குளித்தே பல நாட்கள் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். கையில் பணத்தை நீட்டினாள். இரண்டு மூன்று தாள்கள் துருத்திக்கொண்டிருந்தன. இருந்த பசிக்கு அந்தப் பணத்தை தின்றுவிடலாம் போலத்தோன்றியது.
அவள் கண்கள் அங்கிருந்த நீர்வீழ்ச்சியை ஒத்திருந்தன. அழுக்கு வண்ணச் சேலையில் அலங்கோலமாக இருந்தாள். அவள் கையை தொடாமல் அவள் நீட்டிய பணத்தைப் பெற்றுக்கொண்டு நன்றி சொல்லிவிட்டு வெளியேறினேன். ஆயிரத்து இருநூற்றுச் சொச்சம் இருந்தது. அக்கணமே என் பசி எங்கோ பறந்துவிட்டதைப் போல உணர்ந்தேன். என் வியப்பிற்குப் பதில் சொல்ல அங்கு யாரும் இல்லை. அவள் எப்போதோ அங்கிருந்த மறைந்திருந்தாள். வீடு மீண்டும் இருளுள் மீண்டது.
கையில் மொத்தமாய் இவ்வளவு பணம் அதுவும் ஒரே நாள் வேலை செய்ததற்கு. அவள் மேலிருந்த அத்தனை எண்ணங்களும் கலைந்து அவள் ஒரு தேவதையைப் போல என் கண்முன் வந்துபோனாள். முதலில் ஒரு தேநீர்க் கடைக்கு வந்து சேர்ந்தேன். இரண்டு மூன்று ரொட்டியை தேநீரில் நனைத்து விழுங்கி அதையும் குடித்து முடித்த பிறகுதான் உடல் கட்டுக்குள் வந்தது.
வழியில் கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கினேன். தீபாவுக்கு முந்நூறு ரூபாய் கொடுத்து காலணிகள் வாங்கினேன். அதில் சில கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. அவளுக்குப் பிடித்த உணவுகளையும், நீண்ட நாட்களாய் விடுபட்ட சில மருந்துகளையும் வாங்கிக்கொண்டேன். தெருவோர பிள்ளையாருக்கு கும்பிடு போட்டு வீடு போய்ச் சேர்ந்தபோது இரவாகியிருந்தது.
சாந்தி அக்கா வீட்டுத் திண்ணையில் பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்தாள் தீபா. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டாள். கையிலிருந்த பைகளைப் பார்த்தும் அவள் வியப்பில் கத்தினாள்.
“ஐ.. என்னம்மா இவ்ளோ தூக்கியாந்திருக்க? “
யாரும் பார்க்கும் முன்பாக நான் வீட்டிற்குள் அவளை இழுத்துக்கொண்டு வந்து கதவை அடைத்தேன். வாங்கி வந்ததையெல்லாம் அவளிடம் காட்ட காட்ட அவள் குரலும் பெருகிக்கொண்டே சென்றது. தீபா உற்சாகத்தில் கத்தினாள். நாங்கள் அன்று பல மாதங்களுக்குப் பிறகு நிறைவாய் இருந்தோம். மானசீகமாக அந்த அழுக்கு பெண்ணிற்கு நன்றி சொன்னேன்.
மறுநாள் விடியலில் அன்றைய பணிக்கான திட்டமிடல்களோடு வீட்டு வேலையை முடித்துவிட்டு தீபாவிற்கு புதுச் சோற்றையும் பொங்கி, வாங்கி வைத்திருந்த மீனையும் குழம்பு வைத்து சட்டியில் போட்டு எனக்கும் எடுத்துக்கொண்டேன். சாந்தி அக்காவிற்குக் கொடுத்தபின்பு சிறிது குழம்பு மிச்சமிருந்தது. எனக்கு அந்தப் பெண்ணின் நினைவு வந்தது. பொதுவாக நாங்கள் கொடுத்துச் சாப்பிடும் பணக்கார வீடுகளை நான் கண்டதில்லை என்றாலும் என் மனம் ஏனோ அவளுக்காய் கொஞ்சம் குழம்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியது. நிச்சயம் அவள் மறுப்பாள் அல்லது திட்டுவாள் என்று நினைக்கும்போதுதான் அவள் குரலற்றவள் என்று நினைவு வந்தது.
அதே பரபரப்பு அதே அவசரம். சாலையைக் கடந்து மனிதர்களைக் கடந்து அந்த மயான வீதியில் நுழைந்து வீட்டை அடைந்தேன். இரும்புக்கதவை திறந்துகொண்டு உரிமையாய் வீட்டினுள் நுழைந்தேன். வீட்டிற்குள் பேச்சு குரல் கேட்டது. முதிர்ந்த பெண்ணின் குரல். யாரிடமோ உரக்க பேசிக்கொண்டிருந்தாள்.
“உங்களுக்கு வேற வேலையே இல்லையா? பொழுதனைக்கும் காபி டீ கேட்டுகிட்டு. ரோகித்த எழுப்பி விடுங்க ஸ்கூலுக்கு டைம் ஆச்சுல்ல?”
சிறிய இடைவெளிக்கு பின்பு அவளே கத்தினாள் “ரோகித்… லலிதா.. எந்திரி மா. டேய் வசந்த் ஆபிஸ் போகனும்ல? “
நான் இலேசாகத் திறந்திருந்த கதவை விலக்கி உள்ளேச் சென்றேன். சமையலறையிலிருந்து அவள் உற்சாகமாய் வெளியே வந்தாள்.
” வாம்மா என்று புன்னகைத்தாள். ஆமா உன் பேரு என்னம்மா? நேத்து இந்த பசங்களோட விளையாடிட்டே சரியா போச்சு. உன்கூட பேசக்கூட நேரமில்லை” என்றாள். அவள் குரல் கூடமெங்கும் எதிரொலித்துத் தெறித்தது.
அவள் குளித்து சேலை மாற்றியிருக்கிறாள். அவள் மேலிருந்து நல்ல மணம் அடித்தது. தலையில் துண்டு கட்டியிருந்தாள். தலையிலிருந்து ஈரம் சொட்டி அவளது பிங்க் நிற ரவிக்கை நனைந்து கருப்பு கச்சை தெளிவாகத் தெரிந்தது. செயற்கை நீர்வீழ்ச்சியிலிருந்து அலையலையாய் நீர் சுழலும் சலசலப்பு சற்று திகிலூட்டியது.
நான் உள்ளுக்குள் நடுங்குவது எனக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் என் பதிலுக்கு “காத்திராமல் சீக்கிரம் வாம்மா. வந்து இந்த பாத்திரங்கள கழுவு. பசங்க ஸ்கூல் போகணும். டைம் ஆகுது. இன்னும் சமையல் வேற ஆகல”. என்றாள்.
மெல்ல நகர்ந்து சமையலறைச் சென்றேன். நான் நேற்று கழுவி அடுக்கி வைத்திருந்த பாத்திர பண்டங்கள் எல்லாம் கலைக்கப்பட்டிருந்தன. ஆனால், அங்குச் சமையல் நடந்ததற்கான அல்லது நடப்பதற்கான அறிகுறி எதுவுமே தென்படவில்லை. அடுப்பு எரிந்ததாகத் தெரியவில்லை. அவள் மட்டும் இங்குமங்கும் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தாள். இடையிடையே ஏதேதோ பேர் சொல்லிக் கத்தினாள். மாடியிலிருந்தோ அல்லது கீழ்தள அறைகளிலிருந்தோ எந்தக் குரலும் எனக்கு கேட்கவில்லை.
அவள் மட்டுமே யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். இடையிடையே எனக்குக் கட்டளைகள் இட்டாள். அவள் சொன்னது எதையுமே நான் செய்யவில்லை. எனக்குக் கைகால்கள் விறைத்து விட்டதைப் போல உணர்ந்தேன். என் உடல் அசைய மறுத்தது. அவள் எதையுமே கவனித்தாற் போலில்லை.
வாசலுக்கும் அறைக்குமாய் நடந்துகொண்டேயிருந்தாள். எனக்கு அதற்கு மேலும் அங்கு நின்றிருப்பது சரியாய் தோன்றவில்லை. உயிர் பயம் மூளை ஊசலாடியது. சிறிய அடிகளாகப் பின்னோக்கி வைத்து மெல்ல வாசல் வந்து சேர்ந்தேன். கதவைத் திறந்து வெளியேறும் முன்பாக அந்தப் பெண் வேகமாக என்னருகில் வந்தாள்.
“இந்தாம்மா எங்க போற? ஒரு வா டீ க்கூட குடிக்காம. வவுத்து புள்ளதாச்சி இந்தா இத குடி” என்று கண்ணாடி கோப்பையை நீட்டினாள்.
அதனுள் பொங்கி வழிந்தது இல்லாதத் தேநீர். ஈக்கள் மொய்ப்பதாகக் கூறிக்கொண்டு கையை முன்னும் பின்னும் வேகமாக ஆட்டி ஈக்களை விரட்டுவதைப் போலப் பாவனைச் செய்தாள். நான் இல்லாத கர்ப்பத்தைத் தடவிக்கொண்டே தேநீரை அருந்தினேன். தேநீரில் சர்க்கரை அதிகமாயிருந்தது.
எழுதியவர்
பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “ (கடல் பதிப்பகம் வெளியீடு)
தமிழ்நாடு கலை இலக்கிய முற்போக்கு மேடை விருது மற்றும் புன்னகை இலக்கிய அமைப்பின் “புன்னகை விருது” உள்ளிட்ட விருதுகளை “வலசை போகும் விமானங்கள்” கவிதைத் தொகுப்பிற்காக பெற்றுள்ளார்.
இதுவரை.
கதைகள் சிறப்பிதழ் 202523 January 2025அவளுக்கு மூன்று கண்கள்
கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023அருஞ்சுரத்தி
கவிதை26 November 2022சாய்வைஷ்ணவி கவிதைகள்
கவிதை18 October 2021சாய் வைஷ்ணவி கவிதைகள்