எம் ஆர் டி(2) ரயில் வந்தடைய இன்னும் 3 நிமிடங்களே இருப்பதை மின் பலகைக் காட்டியது. ஆனந்திக்கு சட்டென்று முகமெல்லாம் வெளிரிப் போனது. மார்பில் சரிந்திருந்த துப்பட்டாவிற்கு அடியில் கையைவிட்டு கச்சை லேசாக ஆட்டிப் பார்த்தாள். அவளின் சந்தேகம் உறுதியானது. கச்சு, தளர்ந்துதான் போயிருந்தது!. வேலைக்குக் கிளம்பும் அவசரத்தில் கொக்கியைச் சரியாக மாட்டவில்லையோ என்று சந்தேகித்தாள். எங்கே பஞ்சுப்பொதி கீழே விழுந்துவிடுமோ என்று கலவரமாக இருந்தது.
ரயில், ஸ்டேஷனில் வந்து நின்ற சில விணாடிகளிலேயே கதவு திறந்து, மூடும் சமிக்ஞை ஒலி கேட்கத் தொடங்கியது. ஆனந்தி, குழப்பத்தில் தவித்தாள். ‘டாய்லட்டுக்குப் போய் சரி செய்துக்கொள்ளலாமா?’ என்று எண்ணிக்கொண்டே, ஏதோ ஓர் ஊந்துதலில் ரயிலுக்குள் ஏறிக்கொண்டாள்.
அவள் எப்போதும் விரும்பி அமரும் கதவை ஒட்டிய ஒன்றை இருக்கைக் காலியாகவே இருந்தது உடனே, அதில் அமர்ந்துகொண்டு, மீண்டும் கச்சைத் தடவிப் பார்த்துக்கொண்டாள். பஞ்சுப்பொதி, கச்சிற்குள் இருப்பதாகவே தோன்றியது.
ஆனந்தி, வழக்கம்போல் கைப்பேசியில் மூழ்கினாள். அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு நிறுத்தத்தைப் பற்றிய தகவல்களை முதலில் மலாயிலும் பின்னர் ஆங்கிலத்திலும் ஒலிபரப்பிக்கொண்டு ரயில் விரைந்தது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் ரயிலில் ஏறிய பெண்களின்பால் மட்டும், தானாகவே அவளின் பார்வை சென்றது. அவர்களின் முலைகளைப் பார்த்தே முகங்களை ஏறிட்டாள். பருத்த முலைகளைக் கொண்டவர்களை இகழ்ச்சியுடன் பார்த்து ஒதுக்கினாள். சிறிய மற்றும் தட்டையான மார்பகங்களைக் கொண்டவர்களை அனுதாபத்துடன் பார்த்து இணக்கம் காட்டினாள். பார்க்க அழகாகவும் இல்லாவிட்டாலோ ஆண்களின் கவனத்தை ஈர்க்கவே போகாத அபலைகள் அவர்கள்!.
கருப்பு டீஷர்ட் அணிந்து, முலைகள் பெருத்தச் யுவதி ஒருத்தி ரயிலில் ஏறினாள். மார்புப் பகுதியில் வெள்ளை எழுத்தில், ‘SEEING IS BELIVING’ என்று பீற்றிக்கொண்டிருந்தாள். ஆண்களைப்போல் கிராப் வெட்டியிருந்தாள். அவளைப் பார்க்கவே ஆனந்திக்கு வெறுப்பாய் இருந்தது. இரண்டு பக்கமும் ஒரு கோட்டைக் கிழித்து, அதற்குள் சிறிய விழிகளைப் புதைத்ததுப் போன்ற பார்வையும், சப்பையான மூக்கும் அந்தச் சீனத்தியின் பீற்றலுக்குத் தகுந்த தண்டனையாய் இவளுக்குத் தோன்றின. அதை மறைக்கச் செய்திருந்த அலங்காரமோ அவளை மேலும் அவலட்சணமாய்க் காட்டியது.
ஆனந்திக்கும் இப்படி வாசகங்கள் எழுதிய டீ-ஷர்ட் அணிவதென்றால் கொள்ளை ஆசை!. ஆனால், தட்டையான மார்பு, டீ-ஷர்டில் இன்னும் விகாரமாய்த் தெரியும் என்பதால் அந்த ஆசையைச் சங்கடத்துடன் அடக்கிக் கொண்டாள். சீன யுவதியைத் தொடர்ந்து ஓர் இந்தியப் பெண் ஏறினாள். ஆனந்தியை விடவும் மிகவும் இளையவளாகத் தோன்றினாள். சுடிதார் அணிந்திருந்தாள். பல மடிப்புகளைக் கொண்டு துப்பட்டா, மார்பை மறைத்திருந்தது. மிகவும் அழகாக இருந்தாள். இவளைப் போலவே தோல்பட்டைகள் இரண்டையும் உயர்த்தி, முன்னோக்கிக் குவித்து, மார்பை உள்நோக்கி இழுத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவள்பால் மிகுந்த அனுதாபம் கொண்டாள். அவளுடையப் பார்வையில் கண்ட சோகம், இவளுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று!. பிறரைப் பார்க்க விரும்பாதப் போக்கு வெளிப்படையாகவே தெரிந்தது. அவளின் மார்பு, தன்னளவிற்கு மோசமாக இருக்காதென்றே ஆனந்திக்குப் பட்டது.
‘அவளுக்கு அது போதவில்லையோ என்னவோ!.’
பாட்டி, தன்னிடம் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் எதுவுமே கடைசிவரை நடக்காமலேயே போனதை ஆனந்தி இப்போது, வேதனையுடன் நினைத்துப் பார்த்தாள்.
அப்போது, ஆனந்திக்கு வயது பன்னிரண்டு. தமிழ்ப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள்.
விடுமுறைக்கு ஆறாம் வகுப்பு மாணவர்கள் போர்டிக்சன் கடலுக்குக் குளிக்கச் சென்றிருந்தனர்.
பாமாவும், ஆனந்தியும் குளித்துவிட்டு உடைகளை மாற்றிக்கொள்ளும்போது, ஆனந்தியின் நெஞ்சைப் பார்த்தப் பாமா, ஆச்சரியத்துடன், கண்கள் விரியச் சொன்னாள்.
“ஏய்!.. என்னா புள்ள, ஊம் பாச்சி இப்பிடி சப்பட்டையா இருக்கு?. ஏம் பாச்சிய பாரேன்..” என்று இவளுடைய கையைப் பிடித்து, தன்னுடைய மார்பில் தடவிக் காட்டினாள்.
ஆனந்திக்கு ஒரே கூச்சமாகவும் அவமானமாகவும் இருந்தது. மேடு தட்டிக்கொண்டிருந்த மார்பின் ஸ்பரிசம் அப்படியே உள்ளங்கையில் ஒட்டிக்கொண்டு பிசுபிசுப்பதுபோல் உணர்ந்தாள்!. கட்டை விரல், காம்பின் திரட்சி விரல்களில் ஒட்டிக்கொண்டதுபோல் அவற்றைத் தடவிப் பார்த்தது. சுற்றுப் பயண உற்சாகமெல்லாம் உடனே வற்றிப் போனது. யாரிடமாவது அதைப் பற்றிக் கேட்க வேண்டும் போலிருந்தது. அம்மாவிடம் கேட்கவே முடியாது. ‘படிக்கிற புள்ளிக்கி இதெல்லாம் என்ன பேச்சி?.’ என்று அடக்கிவிடுவாள்.
வீட்டிற்கு வந்த பேத்தியின் வாட்டத்தைப் பாட்டிதான் உடனே கண்டுக்கொண்டாள். பேத்தியை வாரி அணைத்துக்கொண்டு, பாசத்தில் கரைத்தாள்.
“அம்மாடீ, நானும் வந்ததுலேர்ந்து பாக்கறன். மொகம் வாட்டமாவே இருக்குதேடி?.. என்னம்மா ஆச்சி?..”
பாட்டியின் அரவணைப்பில் தன்னை நுழைத்துக்கொண்ட பேத்தி, பாட்டியின் குழைந்த முலைகளின் ஸ்பரிசத்தில் தன்னைத் தேற்றிக்கொண்டு, நடந்ததைச் சொன்னாள்.
“அட, இதுக்கா செல்லம் சங்கட படற?. ஒனக்கு இப்ப தானேடி 12 வயசு!. பொட்டப்பிள்ளிங்க 21 வயசு வரிக்கும் வளருவாங்களே!.. ஏம் பயப்படற?.. சில புல்லிங்க 10 வயசுல வயசுக்கு வருவாங்க. சிலதுங்க 12 வயசுல வரூங்க. இன்னும் சிலதுங்க இன்னும் லேட்டா வரூங்க. எங்க காலத்த போலியா?. மொத நீ வயிசுக்கு வா. பெறவு பாரு உன்னோட வளச்சிய..” என்று, பேத்தியின் சிரித்த கன்னத்தை வழித்து, முத்திக்கொண்டாள்.
ஆனந்தி, அடுத்த வருடமே பெரியவளானாள்!. சற்று வளர்ந்தாள். எடை அதிகரித்தது. மறைவிடங்களில் ரோமங்கள் துளிர்த்தன!. அக்குள் நாற்றமடிக்கத் தொடங்கின. பாட்டியும் மார்பு வளர்ச்சிக்கு நல்லதென்று சொல்லி, பாலில் ஊற வைத்த பூண்டு; சுறா மீன் புட்டு; வெந்தயம் என்று ஏதேதோ நாட்டு மருத்துவத்தையெல்லாம் செய்து கொடுத்தாள். ஆனால், மார்பில் எந்த மாற்றமும் ஏற்படவேயில்லை!. சம வயது பிள்ளைகள் வேறு, ‘வசுக்கு வந்துட்டா குப்புறல்லாம் படுக்கக்கூடாது தெரியுமா?. மாரு வளராம போயிருமாம்..’ என்று சொல்லித் திகிலூட்டினர். ஆனந்தியும், நித்திரையில் தன்னையறியாமல் குப்புறப் படுத்திருப்பதை உணர்ந்து பதறியெழுந்து, எத்தனை நாட்கள் மார்பைத் தடவிக்கொண்டு அழுதிருக்கிறாள்!.
வருடங்கள் கடந்தன. பாட்டியும் ஒரு நாள் இறந்தும் போனாள். இவளின் வளர்ச்சிக்குப் பாட்டி கொடுத்தக் கெடு முடிந்ததுதான் மிச்சம்!. இனி, ஆண்டவனைத் தவிர வேறு ஆதரவு இல்லையென்று வெள்ளிதோரும் ஆனந்தி, கோவில் சிலைகளில் பார்த்த மார்பகங்களைக் கேட்டு, அம்மனிடம் வேண்டுதல் வைக்கத் தொடங்கினாள். குளிக்கும்போது, தினமும் விரல்களை மார்பில் குவித்து வைத்து, ‘இப்படி இருந்தானாச்சும்கூட பரவால்லியே!..’ என்று மருகினாள்.
ஆனந்தி, வேலக்குப் போக ஆரம்பித்தாள். பாட்டியிடமிருந்த அன்னியோன்னியம் அவ்வளவும் அம்மாவிடம் போய்ச் சேர்ந்தது. அப்படியான ஒரு தருணத்தில்தான் அம்மாவிடம் கேட்டாள்.
“அம்மா, ஏம்மா என் நெஞ்சி மத்த புள்ளிங்க மாரி இல்லாம இப்படி சப்பட்டையாவே இருக்குது?. நா வயசுக்கு வந்துட்டா எல்லாமே மாறீருன்னு பாட்டி சொன்னாங்களே!..”
மகளின் துக்கத்திற்கு அம்மாவிடம் பதிலில்லை. மகளைப் பாசத்தோடு அணைத்துக்கொண்டாள். கூச்சத்தையும் மீறி ஆனந்தி, தைரியமாக அதைத் தன்னிடம் கேட்டதில் அவள் தனக்குள் அனுபவித்துக்கொண்டிருக்கும் வேதனைப் புரிந்தது. ஒரு தாயாக தன் மனதிற்குள்ளிருந்த அதே வருத்தத்தை மகளிடம் சொல்லத் தைரியம் இல்லாமல் தாய் துவண்டுப் போனாள். ஆயினும், அந்தக் குறைக்குக் காரணமாக தான் கருதும் காரணத்தை மகளுடன் பகிர்ந்துகொண்டாள்.
“ஆனந்தி, இதுனாலத்தானான்னு என்னால நிச்சயமா சொல்ல முடியில. ஆனா, இது ஒரு காரணமா இருக்குமோன்னு நீ வயசுக்கு வந்த காலத்துலேர்ந்தே எனக்கு ஒரு சந்தேகம் இருக்குது அம்மாடி.” என்று அம்மா தயங்கினாள்.
ஆனந்தி, பீதியுடன் அம்மாவைப் பார்த்தாள்..
“நீ பொறந்தப்ப உன்ன குளுப்பாட்ட வந்த ஆயா உன்னோட மாரு காம்ப அழுத்தி புடிச்சி நசுக்கி, அதுலேர்ந்து வர்ற எண்ணைய வெளியாக்கி சுத்தம் பன்னுவாங்க. நீ பாவம் அப்பிடிதான் துடிதுடிச்சி போயிருவ. அப்பிடியெல்லாம் செஞ்சாதான் நாளிக்கி நீ பெரிய மனுசி ஆவறப்ப மாரு அநியாயத்துக்கு பெருத்துப்போய் அசிங்கமா தொங்காதுன்னு ஆயா சொல்லுவாங்க..”
இவ்வளவு நாட்களாக இதை ஒரு ஹார்மோன் குறைப்பாடாகப் படித்தறிந்திருந்தவளுக்கு அம்மா சொன்ன தகவல் அதிர்ச்சியாய் இருந்தது. ‘அப்படித்தான் இருக்குமோ..’ என்று சந்தேகமும் எழுந்தது. ஆனந்திக்கு உடனே ஆயா மேல் ஆத்திரம் பீறிட்டது. பின்னர் அக்கோபம், தாய் மற்றும் பாட்டியின்பால் திரும்பியது.
“நீங்களும் பாட்டியும் அதெல்லாம் ஒன்னுமே வேணான்னு சொல்லவே இல்லியாம்மா?.” என்று ஆனந்தி கேட்டபோது, மகளின் கண்ணீர் தாயின் கண்களில் சுரந்தது.
“அந்த ஆயாவோட வேலையே வீடு வீடா போயி கொழந்தைகள குளுப்பாட்டறதுதான். அவுங்களுக்கு தெரியாததான்னு நாங்களும் சும்மா இருந்துட்டம் அம்மாடி…”
ஆனந்தி, தினமும் தனது மார்பைப் பார்த்து அழுதே அந்த வலியைக் கரைத்துக்கொள்ளப் பார்த்தாள். நாளடைவில் அந்த நிதர்சனம் பழகிப்போன போது, தனக்குள் ஒளிந்துகொள்ளத் தொடங்கினாள்!. வேலை, வீடு, கைப்பேசி, டெலிவிஷன் என்பதே அவளின் வாழ்க்கையாகிப் போனது. பார்த்தச் சினிமாக்களில் கொஞ்ச நேரத்திற்கு தனக்கு வாய்க்காத வாழ்க்கை வாழ்ந்து திருப்திபட்டுக் கொண்டாள்.
ஒரு சமயத்தில், அறுவை சிகிச்சைச் செய்து மார்பகங்களைப் பெரியதாக்கிக்கொள்வதைப் பற்றியும் யோசிக்கலானாள்!. ஆனால், பின்னாளில் மார்பை மீண்டும் மறுசீரமைப்பு செய்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படலாம் என்பதையும்; தனது நோய் எதிர்ப்பு ஆற்றலில் ஏதோ ஓர் அரிய வகைப் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதையும் படித்தபோது, அந்தச் சிகிச்சையெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
ரயில், சுங்கை பீசி நிலையத்தை அடைந்துவிட்டதைத் தொடர்ந்து, இடது பக்கக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. தானியங்கிக் கதவுடன் இணைக்கப்பட்டிருப்பது போல் ஆனந்தியின் பார்வையும், தானாகவே கதவை நோக்கிச் சென்றது. எல்லோரும் ஆண்களாகவே ஏற, தன் பார்வையை மீண்டும் கைப்பேசியின் பக்கம் திருப்ப எத்தனித்தத் தருணம், யாருடைய பார்வையின் அழைப்பையோ கேட்டதுபோல் அவளின் பார்வை தானாகவே வலதுபுறம் திரும்பியது. மேலே தொங்கிய ரப்பர் வார்ப்பட்டையைப் பிடித்தபடி நின்ற ஓர் இந்திய இளைஞனின் பார்வையை அவள் எதிர்க்கொண்டாள். இயல்பாகவே இத்தகையச் சந்திப்பையெல்லாம் அவள் சட்டைச் செய்வதேயில்லை. அடுத்த விநாடியே வேறெங்கோ பார்த்து, பார்வையை மீட்டுக்கொள்வாள். ஆனால், இன்று அது சாத்தியப்படவில்லை!. இதயம், ‘ஐயோ, செத்தன்..’ என்று அடித்துக்கொண்டது. ‘யார் இவன்?!.’ மீண்டும் ஒரு முறை அவனைப் பார்க்கத் துடித்த ஆசையை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
‘அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்குமோ!..’
ஒருவரை மற்றொருவர் கள்ளத்தனமாய்ப் பார்த்துக்கொள்ளும் கண்ணாமூச்சி விளையாட்டு கைக்கூடாததில் அவர்களின் அனுபவமின்மைத் தெரிந்தது. தன்னையும் மீறி, வாயில் மலர்ந்த புன்னகையை உதட்டைக் கடித்து மறைக்கப் பார்த்தாள். உள்ளமெல்லாம் பிரவாகித்து வழிந்த சந்தோஷம், ஒரு புது அனுபவம்
தனது தாழ்வுமனப்பான்மையால் ஆண்களைப் பார்க்க விரும்பாமல் கைப்பேசியிலேயே மூழ்கிக் கிடப்பவளுக்கு, ‘இந்த ஈர்ப்பு எப்படித்தான் நேர்ந்ததோ..’ என்று அனுமானிக்கவே முடியவில்லை!.
‘எனக்குப் பிடித்த ஆண் எப்படியிருக்க வேண்டுமென்று நான் மானசீகமாய் உருவகித்து வைத்திருக்கும் அச்சில் அவன் பொருந்தி போனானோ!.’
ஆனந்திக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆனாலும், அந்த அனுபவம் ஆனந்தமாய் இருந்தது.
TRX SAMSUNG நிலையத்தில் இறங்கும்போது, விடைபெற்றுக்கொள்வதுபோல் அவன் அவளைப் பார்த்தான்? அதே விநாடி அவளுக்கும்கூட அவனைப் பார்க்கத் தோன்றியது!. அவளுக்கு இந்த நடப்பு புரியவில்லை!. அந்தப் பார்வையில் அவள் போதைக்குள்ளாகித் தவித்தாள்.
வேலை நேரமெல்லாம் இந்தச் சம்பவமே நினைவில் வந்து வாட்டியது.
‘எட்டு மணி வேலை நேரத்தை பாதியாக குறைத்துவிட்டனரா என்ன?’
வீட்டிற்கு போகும்போது மீண்டும் அவனைப் பார்க்க வாய்க்குமா என்ற எண்ணம் எழுந்தது. சாத்தியமே இல்லையென்றே நினைத்துக்கொண்டாள். ஆனால், அதிசயமாய் அவனை மீண்டும் பார்த்தாள்!.
‘அவன் என்னையே பார்க்கிறானா?..’
தெரிந்துகொள்ள இதயம் துடித்தது. வலுக்கட்டாயமாக தன்னை அடக்கிக்கொண்டாள். ஆயினும், ஒவ்வொரு ஸ்டேஷன் வந்த போதும், பார்வை தானாகவே கதவு பக்கம் போய், அவன் இறங்கும் ஸ்டேஷனை உறுதி செய்துக்கொள்ள விரும்பியது.
வீட்டை அடைந்ததும் முதல் வேலையாக கண்ணாடி முன் நின்று சுடிதாரைக் கலைந்தாள். கச்சின் கொக்கியை விடுவித்தப்போதே இல்லாத முலையை நினைவூட்டி, பஞ்சுப்பொதி கீழே விழுந்தது. கூடவே நெஞ்சமெல்லாம் நிறைந்து கிடந்த ஈர்ப்பும் சிதறிப் போனது. குனிந்து மார்பைப் பார்த்தாள். முலைகளாக தடவிப் பார்த்தால் மட்டுமே தட்டுப்படும் இரண்டு காம்புகள் மட்டுமே இருந்தன!. சுற்றியிருந்த தோலைக் காம்போடு முன்னோக்கி அழுத்திப் பிடித்து, கண்ணாடியில் பார்த்தாள். பார்க்கப் பரிதாபமாக இருந்தது!.
‘அட் லீஸ்ட், இப்படி இருந்தானாச்சும்கூட பரவால்லியே..’ என்று முணுமுணுத்துக்கொண்டாள்.
‘ஆனா, அதுகூட இல்லியே..’ என்பதுபோல் கீழுதடு, தானாகவே பிதுங்கி, நிஜத்தை நினைவூட்டியது.
அன்றைய இரவு, தூக்கத்திற்கானது அல்ல என்றானது. காலையில் நடந்த சம்பவத்தை நினைத்து மனம் குளிர்ந்து போனாள். இதுவரை இப்படிப்பட்ட ஈர்ப்பிற்கெல்லாம் அவள் ஆளானதேயில்லை!. இதுவும்கூட தன்னையும் மீறி நடந்ததாகவே அவளுக்குப் பட்டது. இடையிடையே மார்பின் நிதர்சனம் ‘பகீர்’ என்று அவளைக் கலவரப்படுத்தினாலும், அவனை நினைத்தபோது கிளர்ந்த சந்தோஷம், அதை மறக்கடித்து, அவளை மயக்கிப் போட்டது.
காலையில் எழுந்ததும் எப்போதும் இல்லாத பதற்றமாக நேற்று ஏறிய அதே 7.45 ரயிலைப் பிடிக்க பரபரத்தாள். நேற்றுவரை, காலை 8.00 மணிக்குள் ரயில் ஏறிவிட்டால் போதும் என்ற கட்டாயம் மட்டுமே இருந்தது!. சரியாக 7.45 ரயிலிலேயே இன்றும் ஏறினாள். 5 நிமிடங்களுக்கு ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ரயில் சேவையில் அவனும் சரியாக இந்த ரயிலில் ஏறுவது சாத்தியமில்லையென்றே அவளுக்குப் பட்டது. அதனால், மனது சோர்ந்தும் போனது. அது ஒரு ரயில் சந்திப்பு, அவ்வளவுதான் என்று தேற்றிக்கொண்டாள்!. ஆனால், அந்தக் கால அட்டவணையைத் துல்லியமாகவே கணித்து வைத்திருந்ததுபோல் அவனும், அதே ரயிலில் ஏறியது அவளை வியப்பில் ஆழ்த்தியது. இந்தச் சந்திப்பு, ஒரு தெய்வ சங்கல்பமோ என்று நம்பத் தொடங்கினாள்.
நேற்றையப் பதற்றமும் பரவசமும் இன்றும் தொடர்ந்தன. எதிர்ப்பாராமல் பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொள்ளும் பாசாங்கைத் தாண்டி, அவர்களால் வெளியே வரவே முடியவில்லை!.
அப்படியே மேலும் சில நாட்கள் கழிந்தன. ஒவ்வொரு நாளும் அந்தப் பார்வைப் பரவசத்துடனேயே வீடு வருபவள், தனது அம்மணத்தில் அம்பலமாகிப்போகும் மார்பைப் பார்த்ததும் துவண்டுத்தான் போகிறாள். ஆயினும், தினமும் அவனைப் பார்க்க ஏங்கித் தவிக்கவே செய்தாள்!.
மறுநாள், அவன் எப்போதும் இறங்கும் TRX SAMSUNG நிலையத்தில் இறங்கவில்லை!. ஆனந்தி பதற்றத்திற்குள்ளானாள். அவன், தன்னைப் பின் தொடரப் போவதாக அவளுக்குத் தோன்றியபோது உடல் நடுங்கத் தொடங்கியது.
அவள் நினைத்ததே நடந்தது. அவள் இறங்கிய KLCC நிலையத்திலேயே அவனும் இறங்கி, பின்தொடர்ந்தான். ஆனந்தி, படபடப்பிற்குள்ளாகி நடைத் தடுமாறினாள். பின்னாலிருந்து அவனுடைய குரல், அவளை அடுத்த அடி வைக்கவிடாமல் தடுத்தது.
“எங்க வேல செய்றீங்க?..”
அவள், அவனைப் பார்த்தாள். உடல் சில்லிட்டுக் கொண்டிருந்தது. வாய் உலர்ந்து போனது. பதில் சொல்லத் தேவைப்பட்ட ஈரம் இல்லாமல் அவளுக்கு வார்த்தைகள் வாயிற்குள்ளேயே உலர்ந்து போயின.
அவ்வளவு அருகில் அவனைப் பார்க்க, மேலும் பிரியத்திற்குரியவனாகவே தோன்றினான். அவர்கள் கேட்டுக்கொண்ட கேள்விகளில் தம்மை அறிமுகம் செய்துக்கொண்டனர்.
“ஆனந்தி..”
“முரளி..”
மடிக்கப்பட்ட காகிதமொன்றை அவளிடம் நீட்டி அவன் சொன்னான்.
“இஃப் யூ டோண்ட் மைண்ட். இந்த நம்பருக்கு போன் பண்ணுங்களேன், பிளீஸ்!.”
காகிதத்தைப் பெற்றுக்கொள்ள சந்தோஷமாகவும் பதற்றமாகவும் இருந்தது. அவன், தன் முகத்தைத் தவிர வேறெங்கும் பார்க்காமல் பேசியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. கொஞ்ச நேரம் அந்தக் காகிதம் தந்த மயக்கத்திலிருந்து விடுபட விரும்பாமல் அருகிலிருந்த பெஞ்சில் உட்கார்ந்துகொண்டாள். காகிதத்தில் கண்டது, அவளின் காதலுக்கானக் கடவு எண்ணாகத் தோன்றிப் பாதுகாப்புக் கோர, பர்சில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
அன்று, வேலையினூடே அந்த எண்ணை அவள் அடிக்கடி பார்த்துக்கொண்டாள். ‘போன் பண்ணுங்களேன் பிளீஸ்..’என்ற வேண்டுதலில் மனம் உருகிப் போனாள். தான் சிக்கியிருக்கும் அவஸ்தையிலேயே அவனும் சிக்கித் தவிப்பதாக நம்பினாள். ‘இவனும் இதற்கு முன் யாரையும் விரும்பியதில்லை போலும்..’ என்று நினைத்துக்கொண்டாள். பெருமையாக இருந்தது!. உடனே தொடர்பு கொள்ளத் துடித்த ஆசை, அவளைப் பலவாராக அலைக்கழித்தது. தன்னுடைய கைப்பேசி எண்ணைக் கேட்காமல் அவனுடைய எண்ணைத் தந்தது அவளுக்குத் தர்மசங்கடமாய் இருந்தது. அழைப்பதா? வேண்டாமா?. எப்போது அழைப்பது? என்ற சஞ்சலத்தில் உழன்றுத் தவித்தாள்.
அன்று மாலை, வீட்டிற்குப் போகும்போது ரயிலில் அவனைக் காணாதது பெரும் சுமையாய் அவளை வாட்டியது. ஒவ்வொரு நிலையத்திலும் அவன் ஏறுவான் என்று எதிர்ப்பார்த்தது ஏமாற்றத்திலேயே முடிந்தது. சில நாட்களாகவே எண்ணிய போதெல்லாம் பரவசத்தைத் தந்த அவன் நினைவுகள், அந்த ஒரு நாளிலேயே பெரும் பாரமாய் நெஞ்சை அழுத்திப் வருத்தின. அதையே காரணமாக வைத்து, அவனைத் தொடர்புகொள்ள ஆசை பிறந்தாலும், முதல் நாளே தொடர்பு கொள்ள அவளுக்குக் கூச்சமாகவும் இருந்தது.
அன்றிரவு, காலையில் நடந்த சம்பவமே நினைவெல்லாம் நிறைந்து இனித்தது. எண், மனப்பாடமே ஆகியிருந்தாலும், அந்தக் காகிதத்தை அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கிறங்கிப் போனாள். அந்தக் கிறக்கத்துடனேயே உறங்கியும் போனாள்.
‘எங்கே என்றே தெரியாத ஒரு பூந்தோட்டம். ஆங்காங்கே பச்சை நிற சிமெண்ட் இருக்கைகள்!. அந்த இருக்கைகளின்மேல் வேயப்பட்ட கம்பிக்கூரைகளில் மல்லிகைச் செடி, கொடியாய்ப் படர்ந்து தொங்குகிறது. எங்கும் இளம் ஜோடிகள் மட்டுமே காணப்படுகின்றனர்.
அவர்களில் ஆனந்தியும் முரளியும்கூட ஒரு ஜோடியாய் இருக்கின்றனர். முதல் சந்திப்பால் காலத்தின் கணக்கீடெல்லாம் அவசியமே இல்லையென்பதுபோல் அவர்கள் பேசிக்கிடக்கின்றனர். கட்டுண்டுக்கிடந்த கரங்களில் காதல் பிசுபிசுக்கிறது. கரங்களைப் பற்றிக்கொள்வதில் இவ்வளவு ஆனந்தம் இருக்குமா என்ன?.. அவர்கள் மயங்கிக் கிடக்கின்றனர்!.
ஆனந்திக்கு இப்போது, கோவிலில் கண்ட சிலைகளின் அளவில் தனது முலைகள் இருப்பதைக் காண பெருமைத் தாங்கவில்லை!. அம்மனின் ஆசீர்வாதம் என்று எண்ணி பூரித்துப்போகிறாள்!. இறுக்கமான டீ-ஷர்ட்டில் முலைகள் மதர்த்துக்கொண்டு நிற்கின்றன. அவற்றின் மேல் ‘TOUCH ME NOT..’ என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. முரளி, தன் முலைகளை ரகசியமாய்ப் பார்த்து ரசிக்க வேண்டுமென்று அவள் ஏங்கித் தவிக்கிறாள்.. அவனோ, அதை ஒழுக்கக்கேடாய் கருதியவன்போல் ஒழுக்கம் காத்து நிற்கிறான். அவளால் பொறுக்கமுடியவில்லை. முரளியின் கையை தன் கையோடு அணைத்துப் பற்றிக்கொள்கிறாள். அவனது முழங்கை, அவளின் இடது பக்க முலையை உரசிக்கொண்டிருக்கிறது. அந்த ஸ்பரிசத்தில் அவள் மயங்கிக் கிடக்கிறாள். அப்போது, முரளி கேட்கிறான்.
“டியர், தோ தூரத்தில தெரியிற அந்த மலைங்கள பாக்க எவ்ளோ அழகா இருக்கு பாரேன்!. அத பாக்கறப்ப ஒனக்கு என்ன தோனுது?.. “
“ம்ம்ம்.. எனக்கென்னமோ அத பாக்க இரண்டு யானைங்க படுத்திருக்குற மாரி தெரியுது டார்லிங். ஏங் கேக்குறீங்க?” என்று கேட்டு, அவனுடைய கரத்தை இன்னும் அதிகமாக அணைத்துப் பற்றிக்கொள்கிறாள்.
“எனக்கு எப்படி தோனுதுன்னு சொல்லட்டா?.. சொல்லீர்வேன்… அப்பறம் என்ன ஏசக்கூடாது..” என்று பிகு பண்ணுகிறான்.
ஆனந்தி, அந்தப் பிகுவில் சொக்கிப் போனாள்!. முரளியின் உள்ளங்கையைக் கிள்ளி, புருவங்களை உயர்த்தி, ‘என்ன..’ வென்கிறாள்
“ம்ம்ம்.. எனக்கென்னமோ அந்த மலைங்க ரெண்டும் உன்னொட முலைய போல தெரியுது டியர்.”
“ம்ம்.. தெரியும்.. தெரியும்..” என்று அவனுடையத் தொடையைச் செல்லமாய்க் கிள்ளுகிறாள். அந்த ஒப்பீட்டில் அவள் கிறங்கிப் போகிறாள்.. அந்தக் குறும்பு அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஆனந்தி, முரளியின் தோளில் பாந்தமாய்ச் சாய்ந்தபடி ஏறிட்டுப் பார்க்கிறாள். இனி, பேசிக்கொள்ள வார்த்தைகள் இல்லாததுபோல் கண்கள் பார்த்துக்கொள்கின்றன. ‘ஐ லவ் யு சோ மாச்..’ என்று சொல்லி, அவனுடைய முகம் அவளை நோக்கிக் குனிகிறது. மீதியைப் பார்க்கச் சக்தியில்லாதவளாய் ஆனந்தி கண்களை மூடிக்கொள்கிறாள். தனது கீழுதட்டை முரளியின் உதடுகளுக்கிடையே கொடுத்து, தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்கிறாள். அது அவளுக்குப் போதவில்லை போலும்!. அவனுடையக் கழுத்தை கரங்களால் கோர்த்துக்கொள்கிறாள். அங்கே, பால் பேதம் ஏதும் இல்லாமல் கொடுப்பவனே எடுத்துக்கொள்கிறான், எடுத்தவளே கொடுத்தும் கொள்கிறாள். முரளிக்கு அது போதவில்லை!. அவனுடைய வலது கை, ஆனந்தியின் டீ-ஷர்ட்டைத் தூக்கித் துளாவி, நுழைகிறது.. வயிற்றைத் தீண்டிய ஸ்பரிசம் போதாமல் விரல்கள், அவசரமாய் மார்பை நோக்கி ஊறுகின்றன. ஆனால் வெறும் கம்புகளாக மட்டுமே தட்டுப்பட்ட மார்பில் பாவம், முலைகளைத் தேடி அலைந்த விரல்கள், அவற்றைக் காணாமல் சோர்ந்து தளர்கின்றன!.’
திடீரென்று ஆனந்தி, பதறியடித்துக்கொண்டு எழுந்தாள். கைகள், போர்வையை இறுகப்பற்றி, மார்போடு அணைத்துக் கொண்டன. யாரோ, பலவந்தமாக ஆடைகளை உருவி, தன்னை அம்மணமாக்கப் பார்த்ததுபோல் பதறிப் போனாள்!. அப்படியொரு படபடப்பை அவள் இதுவரை உணர்ந்ததேயில்லை!. உடல் சிலிர்த்து உதறிக்கொண்டது. ‘ஓ கனவா!.’ என்று அவளால் ஆறுதல் அடையக்கூட முடியவில்லை!. நிஜத்தைப்போல் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.
‘என் கரங்கள் என் அம்மணத்தை மறைத்துக்கொள்ளாமல் என் மார்பை ஏன் மறைத்துக்கொள்கின்றன?. இனிமேல், என் அடையாளமாக அவன் நினைவில் நிற்கப்போவது எனது முகமா?. எனது மார்பா?. தொடர்ந்து 7.45 ரயிலில்தான் அவனுடைய பிரயாணம் இருக்குமா இல்லை, வேறு அட்டவணையில் தொலைந்து போவானா?..’
ஆனந்தி, ஏதேதோ எண்ணி குழம்பித் தவித்தாள். உடல், பிசுபிசுத்து தொந்தரவு செய்தது. நள்ளிரவு என்றும் பாராமல் குளித்துவிட்டு வந்தாள்.
முரளி, நினைவிலேயே இருந்தான். ஆனால், ஓர் ஆணாக அச்சுறுத்தத் தொடங்கியிருந்தான்.
ஆனந்தி, இப்போதெல்லாம் ‘மகளிர் மட்டும்’ பெட்டியிலேயே பிரயாணம் செய்துக் கொண்டிருக்கிறாள். அன்றொரு நாள் பார்த்த ‘SEEING IS BELEVING’ டீ-ஷர்ட் அணிந்திருந்த சீனப் பெண், இவளுக்குத் தோழியாகி இருக்கிறாள். இவள், தனக்குப் பிடித்தாமான டீ-ஷர்ட்கள் அணிந்தே தினமும் ஆபீசிற்கு போவது வழக்கமாகியிருக்கிறது..
அவள் இன்று, ‘NO BORDERS’ என்ற வாசகம் கொண்ட டீ-ஷர்ட்டை அணிந்து, உடன் அமர்ந்திருந்த சீனப் பெண்ணின் தொடையைத் தட்டிப் பேசியபடி, பயணித்துக்கொண்டிருந்தாள்.
- 28AA – The Smallest bra size
- எம் ஆர் டி – Mass Rapid Transit
எழுதியவர்
-
மலேசியா நாட்டை சார்ந்த இவர் எழுத்தாளர் ஜெயகாந்தனின் பாதிப்பால் 'மலேசியா ஸ்ரீகாந்தன்' என்ற புனைப் பெயரில் அயல் நாடுகளுக்கும் 'ஸ்ரீகாந்தன்' என்ற பெயரில் உள் நாட்டிலும் படைப்பாக்கங்கள் எழுதுகிறார். இவரின் இயற்பெயர் ஸ்ரீராமுலு.
காலச்சுவடு, சொல்வனம், வனம், கனலி, வல்லினம், மலேசிய நாளிதழ்கள் தமிழ் நேசன், தமிழ் மலர், மலேசிய நண்பன் மற்றும் வானம்பாடி ஆகியவற்றில் இவரது சிறுகதைகள் பிரசுரம் ஆகியுள்ளன.