24 November 2024
sethu ks

பேரன் சர்வதமனன் வைத்தியம் படிக்க சீமைக்குச் செல்கிறான் எனும் செய்தி நாராயணி அம்மாவுக்கு பெரிய அதிசயமாக இருந்தது.

“எதுக்குப்பா நீ கடல் கடந்து படிக்கப் போகணும், இப்பவே உனக்கு நெறைய தெரியுமே. டவுனிலே தான் உனக்கு பெரிய பேர் இருக்கே”

மிகவும் கனிவாகச் சிரித்தான் சர்வதமனன்.

“உண்மையைச் சொன்னா நமக்கெல்லாம் எவ்வளவு தெரியும் பாட்டி? இந்த உடம்புங்கறதே பெரிய சமுத்திரம் தானே? இனி எவ்வளவு ஜென்மங்கள் எவ்வளவு கடல்களைத் தாண்டினா கொஞ்சமாவது பிடி படுமோ என்னமோ?”

அதுவும் சரி தானே என்று பட்டது நாராயணி அம்மாவுக்கு. பெரிய வைத்தியரும் பண்டிதருமாக இருந்தார் மாமா. புகழ்பெற்ற விஷமுறிவு நிபுணரும். அவ்வளவு விஷஜந்துக்களின் பகையும் சாபமும் தான் ஒரு நடுஇரவில் ஏதோ ஒரு பொட்டல் காட்டின் சேறு புரண்ட இருட்டில் யார் கண்ணிலும் படாது நீலம் பாரித்த மரணம். மாமாவின் கால்களை வெகு நேரம் ஆராய்ந்த கீழ்வீட்டில் தாத்தா சொன்னார்

“சர்ப்பம் தீண்டினதாகத் தெரியல.”

“ஏன்?”

“கடிவாய் அடையாளமே இல்லையே,ஊசிப்பொட்டளவு கூட. விஷ லட்சணுமும் இல்லே.”

“அப்புறம்?”

“காரணமற்ற நீலம் பாரித்த மரணம் தான் சில மேதைகளுக்கு விதிக்கப்பட்டதாக இருக்கலாம்.”

“அதெப்படி தாத்தா?”

“நீலத்தை விட ஆழமானது எது இருக்கு ? அப்படி ஆழ்ந்த ஒரு நித்திரைனு நெனச்சுக்க வேண்டியது தான் . எழுப்பிப் பாக்கறுது முட்டாள்தனமா இருக்கும்.”

முன்னால், தொட்டுவிடும் தொலைவில் எங்கோ, நீலம் தோய்ந்த இருளின் மறைவில் படமெடுத்து நிற்கும் கருநாகத்தைக் கண்டு பயந்தது போல பாட்டி சொன்னார்

“கவனமா இரு மகனே.”

“ஏன் பாட்டி?”

“தெரியாத இடத்திலே பத்து கண்ணு இருந்தாலும் போதாது. நாலு பக்கமும். அவ்வளவு காதும்.”

“ஐயோ, இன்னும் ஐம்பது புலன்களின் கூடுதல் பொறுப்பா? இப்போ இருக்கறதே அதிகம். என்னவெல்லாம் பாக்கவும் கேக்கவும் வேண்டியிருக்கு ஒவ்வொரு நாளும்.”

“எனக்கு மொதல்லே இருந்தே பிடிக்காத நிறம் நீலம். போதாததுக்கு தேவையில்லாம அவ்வளவு ஆழமும்.”

“நான் அங்கேயிருந்து ஏதாவது குட்டி தொரைசாணியைக் கூட்டிட்டு வந்துடுவேன் நெனைக்கறீங்களா?” சர்வதமனன் செல்லமாக அவர் தோளைத் தட்டினான்.

“சீ ,அதெல்லாம் கண்டிப்பா நடக்காதுன்னு எனக்குத் தெரியும். தோல் செவப்பா இருந்து என்ன புண்ணியம். சுத்தபத்தம் வேண்டாமா? வெளிக்கு போனா கழுவ மாட்டாங்களாமே.”

அடக்கமாட்டாத சிரிப்பு அவனுக்கு.

“வெள்ளைக்காரங்களை விரட்டி அடிச்சிட்டு நம்ம பையன் எதுக்கு அங்க அடிமை வேலைக்கு போகணும்னு நெனைக்கறீங்க போல.” அவன் சொன்னான்.”வெளிநாட்டுத் துணிகளை எரிக்க எடுத்து வீசினதிலே மொதல்லே விழுந்தது பாட்டியோட சீமைப் பட்டு னு நான் கேள்விப்பட்டிருக்கேன்.”

அன்றிலிருந்து துவங்கியது தான் இந்த முரட்டுக் கதர் ஆடை. கோயிலின் முன் கூடிய சிறு கூட்டத்தினை உணர்ச்சிக்கடலில் தத்தளிக்க வைத்தது மாதவ்ஜி எனும் இளைஞனின் பேச்சு. சுண்டி இழுக்கும் கண்கள். இனிமையான குரல். கையில் அணிந்திருந்த மூன்று வளையல்களையும் உருவிக் கொடுத்தாள். கழுத்திலிருந்த ஏழு சவரன் காசுமாலையினையும். மீண்டும் ஒரு முறை கூட காணக் கிடைக்கவில்லை மாதவ்ஜியை, பார்க்க வேண்டும் எனும் ஆசை நிறைய இருந்தும்.நிறைய திட்டினார் மாமா. நகைகளை கொடுத்ததற்கு அல்ல. ஊர் மத்தியில் கூட்டத்தில் நடந்துக் கொண்டது திமிர் தான். நல்ல குடியில் பிறந்தவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாதது.

பாட்டி நாற்புறமும் சந்தேகத்துடன் பார்த்தார். நடையின் இருட்டின் கருமையில் நீலத்தின் ஈரம் படர்ந்தது போல் இருந்தது.

“உடம்பு முடியாதவர்களுக்கு வைத்தியம் செய்வது பெரிய புண்ணியம் தான் மகனே. சந்தேகமே இல்லை . ஆனால் அதில் அவ்வளவுக்கவ்வளவு தெய்வ குத்தமும் இருக்குங்கறதையும் ஞாபகம் வெச்சுக்கோ .”

சர்வதமனின் விழியோரங்களில் ஒரு குறும் புன்னகை ஒளிர்ந்தது.

“பாட்டி, பாவம் நான், இவ்வளவு பெரிய விஷயங்களெல்லாம் எனக்கு எப்படி புரியும்.”

அது காதில் விழாதது போல நாராயணி அம்மாள் தொடர்ந்தார்.
“வைத்தியனா இருந்தாலும் இல்லை வேறு எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும் ஒருத்தனோட தலைவிதியை மாத்த நினைக்கறது தலைக்கனம் தானே. கூடவே அது தெய்வ குத்தமும் இல்லையா.”

“அப்படி தலைவிதியை மாத்த நினைச்சவுங்களைத் தானே உலகம் ஞாபகம் வெச்சிருக்கு.” தன் லேசான செம்பட்டை தாடியினைத் தடவி சர்வதமனன் தொடர்ந்தான். “நெனச்சுப் பாத்தா இந்த மனுஷ ஜென்மம்னு சொல்றது பல வலிகள் மட்டும் தானே. அங்கங்கே கொஞ்சம் வெளிச்சமும் சுகமும்.”

“ஏன்பா அப்படிச் சொல்லறே?”

“என் க்ளினிக்குக்கு வர்றவுங்க எல்லாருக்கும் ஒரு பெரிய வலி மட்டும் தான். என் கிட்ட ரெண்டு வார்த்தை சிரிச்சுப் பேச யாருக்கும் மனசு வர்றதில்லை. வரும்போதே மூஞ்சியத் தூக்கி வச்சுகிட்டு தான் சில பேர் வருவாங்க.”

“எல்லாரும் கை விட்ட கேஸ் தானே உன்கிட்ட வருது. அதனாலே இருக்கும் .”

“பொலம்பல் தான் எல்லாருக்கும். சின்ன பிரச்சனைகளைக் கூட தாங்கிக்கற பக்குவம் இல்லே யாருக்கும். அவுங்க சொல்றதை எல்லாம் நான் உக்காந்து கேக்கறதால தான் அப்படின்னு சில சிஸ்டேர்ஸ் கூட சொல்வாங்க.”

“ஒரு விதத்துல அதுவும் புண்ணியம் தான்.”

“அடுத்தவங்க வேதனைகளைக் கேக்கறது தான் என் விதி போல. அவுங்களுக்கு ஆறுதல் சொல்லவும் என் கிட்டே அவ்வளவு வார்த்தைகளும் இல்லையே.”

“ஆறுதல் சொல்ல வார்த்தைகள் எதுக்கு மகனே. ஒரு பார்வை, ஒரு தொடுகை, ஒரு புன்னகை. சில பேர்களின் விரல் நுனியில் இருக்கும் ஆறுதலளிக்கும் ஜாலவித்தை.”

“நம்ம உடம்பு எதுக்காக நம்மளை இப்படி பாடாய் படுத்துதுன்னு தோணும் சில நேரத்தில.”

“முன் ஜென்ம பாவம் தான், வேற என்ன?”

“வசதியாப் போச்சு. எல்லா பாரத்தையும் ஏற்றி வைக்க ஒரு சுமைதாங்கி இருக்கே, முன் ஜென்மம்.” சர்வதமனன் சிரித்தான்.

திண்ணையில் கால் நீட்டி அமர்ந்து இரு கால்களிலும் தைலம் தடவி அழுத்தி நீவிக்கொண்டிருந்தார் நாராயணி அம்மாள். ஒவ்வொரு நாளும் விளக்கு வைத்து ஜெபிக்கையில் ஒரு சடங்கு போன்றது இந்த தைலம் தடவுதல். கால் விரல்களிலிருந்து மேல் நோக்கி பாய்ந்து செல்லும் வலியின் பொருள் பிடிபடவில்லை இது வரையிலும். நாட்கணக்குகள் தவற ஏறிக்கொண்டிருக்கும் வயதின் உபாதை என ஆறுதல் கொண்டாலும் சில நேரங்களில் நினைக்கத் தோன்றும். ‘இருந்தாலும் எதற்கு இதெல்லாம், ஒரு பெருவாழ்வின் முடிவில் இப்படி..’

“ஒவ்வொரு பிறந்தநாளிலும் தான் ஒரு புது வலி தொடங்குகிறது மகனே!” சில நேரங்களில் அவர் புகார் செய்வார்.

“சும்மா ஒரு நினைவூட்டலா இருக்கும் அதெல்லாம். அவ்வளவு பற்று எல்லாம் வேண்டாம் இந்த நம் உடலின் மீது என.”

“வலிகள் மூலமான இந்த நினைவூட்டல்கள் அவ்வளவு சுகமானவை அல்ல. இல்லையென்றாலே தெரியுமே மூப்பெய்துவதின் வேதனை.”

ஒவ்வொரு வலிகளாக விரல் விட்டு எண்ணத் தோன்றும் சில வேளைகளில். ஒவ்வொரு உறுப்பிற்கும் வெவ்வேறு வலிகள். அவைகளின் விசித்திரமான சில தாள லயங்களும் ஏற்ற இறக்கங்களும்.

“ஏன் மகனே இப்படி எல்லாம்?” ஒரு நாள் அவர் வினவினார். எல்லா ஐயங்களையும் தீர்க்க ஒருவன் மட்டும். எல்லாம் தெரிந்த பேரமகன்.

“மனித ஜென்மம்”

“அப்பா, இவ்வளவு வேதாந்தம் எல்லாம் வேண்டாம் ஐயா, ஒரு மருத்துவரின் நாவிலிருந்து.”

சர்வதமனன் வழக்கம்போல ஒளிவீசும் புன்னகை ஒன்றை உதிர்த்தான். அந்தப் பற்களின் ஒளியும் தனக்கு நஷ்டமாகிறதே என வருத்தமுடன் எண்ணினாள் பாட்டி.

“மனிதர்களைப் போன்று தான் பாட்டி. ஊவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொரு விதமாக வலிக்கத் தான் தெரியும் போலிருக்கிறது. அந்த வலிகளின் மொழியும் புரியத் துவங்கும் காலப் போக்கில்.”

“மாமாவைப் போல ஆரோக்கியமும் ஆண்மையும் இருந்தும்..”

“அதெல்லாம் நாம் நினைக்கறது தான். அப்படி ஒரு சமநிலையினை எந்த ஒரு மனித உடலுக்கும் இயற்கை அறிந்து அருள்வதில்லை.”

“அப்போ மாமா?”

“அன்றைய நீல நிறம் விஷயம் தீண்டியதால் தான்னு நம்பறீங்களா பாட்டி?”

“பிறகு?”

“அதுவும் ஒரு சமநிலையின் பிரச்சனையாகத்தான் இருக்கும், மனித உடலின்..”

ஒன்றும் புரியவில்லை என்பது போல் பாட்டி தலையினை உலுக்க சர்வதமனன் எழுந்துக் கொண்டான்.

“நான் மேலே போறேன் பாட்டி. இன்னும் பெட்டி தயார் செய்யல.”

மர ஏணிப்படியின் கிரீச்சிடல் ஒலிக்க பாட்டி பெருமூச்சு விட்டாள். அப்படி அவனும் போகிறான். டவுனில் க்ளினிக் இருந்த வரையிலும் பெரும் ஆறுதலாக இருந்தது. வாரத்தில் ஒரு முறையேனும் வராமல் இருக்க மாட்டான். அவன் அம்மா மறந்தாலும் ஒவ்வொரு வார இறுதியிலும் ஓடி வருவான். இரவு உணவு பாட்டியுடன் தான். கைக்குத்தலரிசி, மொளோஷ்யம், வடுமாங்காய், சுட்ட அப்பளம், முரிங்கை இலை பொரியல்.

அன்றைய பாட்டியின் இரவு கொடுங்கனவுகளால் நிறைந்திருந்தது. மென்நீல வண்ணக் கனவுகளில் சர்வதமனனுக்கு வெண்ணிறச் சிறகுகளும் பின்னணியில் நீலவானமும் இருந்தது. அவன் வலிகளின் ஊற்றினைத் தேடி பறப்பதாகச் சொன்னான். வலிகளெல்லாம் இந்த மண்ணில் தானே எனக் கேட்க எத்தனித்த பொழுதெல்லாம் அவனின் கட்டிப்போடும் புன்னகையின் ஒளி மேகத்திட்டுகளுக்கிடையில் மின்னி மறைந்தது.

அந்த நேரத்தில் பாட்டிக்கு ஒரு வேண்டுதல் மட்டுமே இருந்தது. எண் மகனை பொட்டல்வெளிகளின் நீல நிறங்களிலிருந்து காப்பாற்று.

பின்னால் எங்கோ சருகுகளின் அசாதாரண சலசலப்பு. இலைகளினூடே ஊர்ந்து வரும் புள்ளியிட்ட அடிவயிறு. இரக்கமற்ற படம். சிறிய பற்களுக்கு பின் மறைந்திருக்கும் நஞ்சுப் பைகள். ஒரு சிறு நடுக்கத்துடன் தான் திடுக்கிட்டு விழித்தெழுந்தாள் பாட்டி. மென் நீல நிலவொளி படர்ந்த அரவமற்ற இரவு ஜன்னல் கம்பிகளினூடே அவரை உற்று நோக்கியது. எச்சில் விழுங்குகையில் தொண்டை வலிப்பதை அவர் உணர்ந்தார். அந்த வலியிலும் கொஞ்சம் நீலம் பாரித்திருக்கிறதோ என அவர் அஞ்சினார்.

மறுநாள், விமானத்திலிருந்து கீழே தெரியும் அலையடிக்கும் நீல நீர்பரப்பினை பார்த்துக் கொண்டிருந்த சர்வதமனனும் அதையே தான் நினைத்தான். இப்பொழுது எவ்வளவோ கீழே, திண்ணையில் தூணில் சாய்ந்து கால்களை நீவியபடி அமர்ந்து இதே வானத்தின் கீழ் எல்லைகளை பார்த்தபடி இருப்பார் பாட்டி.

நாங்கள் இருவரும் காண்பது ஒரே வானத்தின் இரு வேறு நீலம்.

விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வந்திருந்த மார்த்தா வை எளிதில் அடையாளம் கண்டு கொண்டதில் மிகுந்த ஆச்சரியம் அவளுக்கு. மார்த்தா அவனது நாட்டினைப் பற்றி ஓரளவு தெரிந்தவள் என்று பட்டது.

“உங்களுக்கு என் பாட்டியின் அதே சாயல்” சர்வதமனன் சொன்னான். “அதனால் இனி என்னைப் பார்த்துக் கொள்வதும் உங்கள் பொறுப்பு.”

“ஆகட்டும்” மார்த்தா சொன்னாள் “ குழந்தை பராமரிப்பு எனக்கு பிடித்தமான வேலை தான். ஆனால் நான் பார்ப்பதற்கு உன் பாட்டியைப் போல் இருப்பதாக என் தோழன் நிக்கிடம் சொல்லி விடாதே.”

“நிக்கிர்க்கு தெரிய வேண்டாம்.” அவன் குரல் தாழ்த்தி சொன்னான். ”இது நமக்குள் இருக்கும் மாபெரும் இரகசியம்.”

வெளிநாட்டு விருந்தாளியை நன்கு பிடித்துப் போய் விட்டதன் அடையாளமாக மார்த்தா குலுங்கிச் சிரித்தாள்.

வேறொரு நாள் நெடும் தூண்கள் எல்லையிடும், மேலே புறாக்கள் அனத்தும், கல்லூரி நடைவழியில் சேர்ந்து நடக்கையில் மார்த்தா கேட்டாள்

“என்னுடையது போன்ற நீலக் கண்களும் தங்கத் தலைமுடியும் இருக்கிறதா உன் பாட்டிக்கு?”

“இல்லையில்லை, நல்ல தெளிந்த பழுப்பு நிறக் கண்களும் பாதிக்கு மேல் நரைத்த சுருண்ட முடியும், தூய வெண் முரட்டு பருத்தி ஆடைகளும்.”

“பிறகு எப்படி?”

“என்னவோ, ஏதோ, எப்படியோ கொஞ்சம் பாட்டித்தனம் இந்த மார்த்தாவிடம்! அப்புறம் கொஞ்சம் அந்த மேட்டிமையும்.”

திகைத்துப் நின்றாள் மார்த்தா.

“வேண்டாம் தமனா. நிக்கின் முன்கோபம் தெரியாது உனக்கு. இப்பொழுதே என் உடல் குறித்த பல புகார்கள் அவனுக்கு. அதன் மேல் முதுமையின் போதாமைகளையும் நீயாக ஏற்றி வைக்கப் பார்க்காதே.”

திடீரென இப்படிச் சொல்லியிருக்க வேண்டாமோ எனும் தோரணையில் அவள் நகம் கடித்துக் குதறினாள். அவ்வேளையில் அவளின் உடலை முழுமையாக ஒரு நோட்டம் விட வாய்ப்பு கிடைத்தது சர்வதமனனுக்கு.

“ஏன் அப்படி, மார்த்தா!” அவளின் நீலக் கண்களின் ஆழங்களை உற்று நோக்கினான் அவன்.

மார்த்தா அவனிடம் வெளிப்படையாக சொல்லத் தயங்கினாள். கை வீசி புறாக்களை விரட்டுகையில் அவன் மீண்டும் கேட்டான்

“ஏன் மார்த்தா?”

“”நிறையத் தேவைகள் கொண்ட உடல் சிலருக்கு. ஒரு சிறு பொருத்தமின்மை கூட பொறுத்துக் கொள்ள முடியாது அவர்களால்.”

“உடல் மட்டும் தானா காரணம்? அதற்குப் பின் நிறைவற்ற ஒரு மனமும் இருக்கும் தானே, மார்த்தா?”

“சந்தேகம் நண்பனே. அது தான் நிக், அதனால் தானே உடல் என்று குறிப்பிட்டுச் சொன்னேன். சில நேரங்களில் நினைப்பேன் என் உடலை அவன் ஒவ்வொரு நேரமும் பலதாகக் காண்கிறான் என்று.”

“மனதின் பின்புலமற்ற உடலை நான் வெறுக்கிறேன் மார்த்தா.”

“நானும், என் நல்ல நண்பனே.”

உடலை தனித்து காணும் அனைத்து தேடல்களையும் தான் மறுப்பதாக சரவதமனன் சொன்ன பொழுது அதை தானும் ஒத்துக் கொள்வதாக மார்த்தா சொன்னாள்.

“ஆனால் உங்கள் கிழக்கத்திய நம்பிக்கைகளின் தர்க்கமின்மை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.”

ஆழ்ந்த நம்பிக்கைகளுக்கு கொஞ்சம் தர்க்கமின்மையும் வேண்டும் தானே என்றபடி ஒளிரச் சிரித்தான் சர்வதமனன்.

மற்றொரு நாள் முன்னிரவில், நகரத்தின் விளிம்பில், ஒரு சிவப்புக் கட்டிடத்தின் மறைவில், எதிர்பாரா விதமாக அவன் அவளை தன்னுடன் சேர்த்தணைத்து ஆழமாக முத்தமிட்ட பொழுது மார்த்தா அதிர்ச்சியில் உறைந்து போனாள். கொஞ்சம் அவனும் தான்.

“அது தவறு” மார்த்தாவின் உதடுகள் துடித்தன.

“ஆம், மார்த்தா” அவனும் ஒத்துக் கொண்டான்.

“நமக்குள் அப்படி ஒரு நெருக்கம் இல்லை தானே”

“நெருக்கத்தை பெயர்களுக்குள் அடைக்க முயலாதே , மார்த்தா.”

“இருந்தாலும் எல்லா நெருக்கங்களுக்கும் தனியான தன்மைகளும் கண்டிப்பான எல்லைகளும் இல்லையா?”

“அவசியமில்லை, மார்த்தா.”

“அது பேராசை தான்.”

“எல்லைகள் ஏதுமற்ற நெருக்கங்களையே நான் விரும்புகிறேன் மார்த்தா. நெருக்கத்தை அளக்க ஒரு நாளும் அதன் தன்மைகளைத் ஆராயக் கூடாது. இது போன்ற ரகசியங்களின் பின் ஏதாவது விசித்திரமான உள்ளுணர்வின் செயல்பாடு இருக்கும்.”

“இன்னொருவர் என்னைத் தொட அனுமதிக்க மாட்டேன் என நிக்குக்கு வாக்களித்திருந்தேன்.”

“வெள்ளைக்காரிகளை தொடமாட்டேன் என நானும் பாட்டிக்கு வாக்கு கொடுத்துள்ளேன்.”

“பிறகு..?” மார்த்தாவின் குரல் உயர்ந்தது. கண்களில் சந்தேகம் நுரைத்தது.” இதை வெறும் குறும்பு என பார்க்க முடியவில்லையே என்னால். உனக்குள் ஏதேதோ தீய இலக்குகள்.”

“அதற்கு நான் உன் உடலைத் தீண்டவில்லையே, மார்த்தா!”

அவன் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான். அந்தக் கூரிய பார்வை தன்னுள் எங்கேயோ புதைந்து இழுப்பது போல் உணர்ந்ததால் மார்த்தா முகத்தை திருப்பிக் கொண்டாள். தன் உள்ளே எதுவோ வெகுவாக துடிப்பதை அவள் உணர்ந்தாள்.

“வழக்கம் போல உங்களின் கிழக்கத்திய கிறுக்குகள்!”

தன் உதடுகளின் தடிப்புகளின் மீது தடவிப் பார்க்கையில் மார்த்தாவுக்கு எதுவும் புரியவில்லை. திடீரென இது போன்ற ஒரு தாக்குதல் அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லையே. விரைந்து தவிர்க்க முடியவில்லை.

“ஒரு வேளை உன் நிக்கால் ஒரு பொழுதும் சென்றடைய முடியாத ஏதோ ஒரு இடத்தை தொட முயன்றிருக்கலாம் நான், எனை அறியாமலே.”
எங்கோ தொலைவில் பார்வையை நட்டு தான் சர்வதமனன் அப்படிச் சொல்லி வைத்தான்.

அதன் பொருள் கொஞ்சமும் புரியாமல் மார்த்தா விழித்துக் கொண்டிருக்கையில் தன் நீண்ட கால்களை எட்டி வைத்து, புலதரையின் நடுவிலிருந்த நடைபாதையின் ஊடே, சர்வதமனன் நிதானமாக நடந்து சென்றான். அப்பொழுது அவன் தலை கவிழ்ந்து இருந்ததை மார்த்தா கவனித்தாள்.

அன்றிரவு மேஜை விளக்கருகே மாரத்தாவுக்கான ஒரு சிறு குறிப்பு எழுத உட்கார்ந்த பொழுது தன் மனம் பெரும் கொந்தளிப்பில் இருந்ததை சர்வதமனன் உணர்ந்தான்.

‘இப்பொழுது என்னைச் சூழ்ந்து மிக இலேசாக குளிரந்த அமைதியும், முன்னே, மேஜை விளக்கின் மங்கலான ஒளியும் மட்டும் தான்’, அவன் இதமாகத் துவக்கி வைத்தான். பரிச்சயமின்மையும் ஒழுக்கமின்மையும் படைத்த இடுக்குகளில் வார்த்தைகள் சிக்கிக் கிடந்தன. வெகு நேரத்திற்குப் பிறகே மீதி வாக்கியங்கள் கோர்வையாயின.
‘நெருக்கத்தின் எல்லைகள் குறித்து நீ குறிப்பிட்டாயே, மார்த்தா! எல்லைகளற்ற நெருக்கம் ஆண்களின் சுயநலம் என நீ சொல்லக்கூடும். ஆனால் நான் உன்னைத் தொட வேண்டும் என ஒருபோதும் எண்ணவே இல்லை என்பது தான் மிகப் பெரிய உண்மை. மார்த்தா, அப்படி ஒரு கிளர்ச்சியை நீ என்னிடம் தூண்டவில்லை என்பதும் உண்மை தான். ஆனால், அந்தக் கணத்தில் உன்னிடம் ஏதோ ஒரு பழைய நெருக்கத்தின் எல்லையின்மையும் இரகசியத்தன்மையும் நான் உணரந்திருக்க வேண்டும். அப்பொழுது நான் உன்னை மார்த்தா ஆக காணவில்லை என்பது உறுதி. ஒரு வேளை நான் அப்பொழுது தொட்டது மார்த்தாவை இல்லை எனறு நினைக்கிறேன். ஒரு வேளை உன் வழியாக என்னுள் புதைநதிருந்த சில முரண்பாடுகளை, உறுதியற்ற புதிர்களை. வாழ்வில் பலவும் வேறு ஏதோ ஒரு உலகின் புரிதல்கள், விசித்திரமான எழுப்புதல்கள் இல்லையா?
அப்படியெனில் உன் இந்த மலர்ந்த முகத்தின் பின் மறைந்திருப்பது என்ன?
எது சரியான மார்த்தா?’

அந்தக் கடித்தத்தை கையில் வைத்துக் கொண்டு மூன்று நான்கு நாட்கள் அலைந்து திரிந்தான் சர்வதமனன். இது போன்ற கடிதங்களை பரிமாறும் வயதினை தான் என்றோ கடந்து விட்டதை உணர்ந்து தான் இருந்தான் அவன். மார்த்தாவின் பார்வையோ நிக் எனும் விசுவாசமான இணைக்கு அப்பாலுள்ள உலகினை மங்கலாகவே காண முடிகிறது. இறுதியில் ஓர் இரவில் ஒரு திருடனைப் போன்று ஒளிந்து சென்று அவளின் அறைமுன் நனைந்த இரவில் மறைந்திருந்த தபால்பெட்டியில் அந்த நீலவண்ணக் கடித உறையினைத் திணிக்கையில் முதல் வான்வழிப் பார்வையில் போன்று கீழே நீலத் தடாகத்தில் அலைகள் அசைவதைக் கண்டான். கோடைக்காலத்தின் துவக்கம் அது. பெய்து ஓய்ந்த மழையிலும் பனியிலும் நனைந்து ஊறியிருந்தது தெரு. தடித்த கம்பளி ஊடுப்பில் ஒடுங்கி, காற்சட்டைப் பைகளில் கைகள் நுழைத்து விரைந்து நடந்தான். மார்த்தா அந்தக் கடிதத்தை வாசிக்கும் முன், தன் அறையின் பாதுகாப்பிற்கு தப்பிததுச் செல்லும் அவசரத்தில் இருந்தான் அவன்.

பிந்தைய இரண்டு மூன்று நாட்கள் அவனைத் தவிர்த்து விலகி நடந்தாள் மார்த்தா. அவளின் முகத்தில் தெரிந்த ஒரு கிராமத்துப் பெண்ணின் குற்ற உணர்வும் கவலையும் பெரும் வியப்பாக இருந்தது சரவதமனனுக்கு. கடைசியில் ஒரு நாள் எதிர்பாராமல் அவனை எதிர்கொண்ட பொழுது தலை குனிந்து அவள் சொன்னாள்

“:வேண்டாம் தமனா?”

“ஏன்?”

“நிக்கிற்கு ஏதோ பலமான சந்தேகம் போல?”

சிரித்தபடி தலையாட்டினான் சர்வதமனன்.

“எங்கள் கிழக்கத்திய நம்பிக்கைகள் உன்னையும் கீழ்ப்படுத்த துவங்கி விட்டனவா, மார்த்தா! நீயும் பைத்தியம் போல் உளறத் துவங்கி விட்டாயே.”

“நான் இப்பொழுது எல்லா நம்பிக்கைகளையும் நம்பத் துவங்கி விட்டேன், தமனா. எல்லைகளற்றது தானே நம்பிக்கைகள். நம்பிக்கைகளின் முடிவின்மை குறித்து முதலில் சொன்னதும் நீ தானே?” அவள் தொடர்ந்தாள். “இப்போதெல்லாம் உன் வார்த்தைகளின் வழியாக மட்டுமே நிக்கினை புரிந்து கொள்ளத் துவங்குகிறேன் நான். பலசாலியான ஒரு காற்பந்து விளையாட்டு வீரனின் உடலை எப்படி புரிந்துக்கொள்ள முடியும் எனக் கொஞ்சமும் தெரியவில்லை இன்னும் எனக்கு. இல்லையென்றாலும் ஒரு உடலை எதற்கு புரிந்துக் கொள்ள முயல வேண்டும்? சில சமயம் நினைத்துக் கொள்வேன், இன்னும் சரியான கால்பழக்கம் பெறாத மைதானம் போன்று தான் அவனுக்கு நான் என்று.”

“ஏன் அப்படி?”

“அதிகப்படியான தனிமை அவனிடம். மட்டுமல்ல, கூட்டத்தில் சேர ஒரு தயக்கமும்.”

“கூட்டமாய்ச் சேர்ந்து விளையாடுபவர்களுக்கானது தானே காற்பந்து, மார்த்தா? ஒத்திசைவுடன் கூட்டாளிகளுக்கு சாமர்த்தியமாக பந்தினை கடத்தும் திறம் படைத்தவர்கள் தான் மைதானங்களை உயிர்ப்பிக்கிறார்கள்.”

“அந்தக் கும்பலிலும் ஒரு தனியன் என் நிக். எப்பொழுதும் மனதில் எதை எதையோ பூட்டி வைப்பவன்.”

“பிறகு எப்படி உன்னால் அவனுடன் நட்பாக இருக்க முடிகிறது?”

“முதல் பார்வையிலேயே என் நெஞ்சம் நிறைந்தவன் நிக்.”

“முதல் பார்வையை அவ்வளவு நம்பாதே. பிற்கால பார்வைகளில் தான் உறுதியும் தெளிவும் கூடுதலாக இருக்கும்.”

“இனி இப்பொழுது அதை மாற்ற முடியாதே. இந்த தமனனும் சேர்ந்து முயன்றாலும்.” அவள் கண்களில் குறும்பு மின்னியது.

சிறிது நேரத்திற்கு பிறகு ஏதோ நினைவு வந்தது போல் அவள் தொடர்ந்தாள்,
“ஒவ்வொரு மைதானத்திற்கும் அதற்கேயான ரகசியங்கள் இருப்பதாக சொல்வான் நிக். பல நூறு சந்தேகங்களுடன் தான் ஒவ்வொரு வீரனும் களமிறங்குவான். எதிர் அணியினரை விட அவன் அஞ்சுவது இந்த மைதானங்களை. ஏதோ ஒரு அடர்ந்த காடு போன்ற மர்மம். கொஞ்சமும் எதிர்பாராத வேளைகளில் சருகுகள் மேலெழும்பி அவன் கண்களை மறைக்கின்றன. காட்டு கொடிகள் அவன் கால்களில் சுருக்கு வைக்கின்றன. முடைந்து கிடக்கும் அடர்ந்த புற்களுக்கு அடியில் மறைந்திருக்கும் படுகுழிகள் புலப்படுகின்றன.”

“உண்மையைச் சொல் மார்த்தா. அவனுடன் எந்த முரண்பாடும் கூற முடியாதா உனக்கு? அவன் உன்னை என்றுமே சலிப்புறச் செய்யவில்லையா?”

அவள் கொஞ்சம் தடுமாறுவது தெரிந்தது.
“சில நேரங்களில்.. சில நேரங்களில்..” அவள் சிறிது நிறுத்தினாள். “அவன் தரும் சலிப்பில் கூட நான் எதையோ காண முயல்கிறேன் போலும்.”

“அத்துடன் நிக் முடிவுறுகிறான் தானே?”

“இல்லை தமனா, இப்பொழுது நிக் எனக்கு பெரும் சாத்தியங்களாகத் வளர்ந்து நிற்கிறான்.” மார்த்தா குரல் கம்ம சொன்னாள். “ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்துக் கொண்டால் அந்த உறவு அத்தோடு முடிந்து விடுகிறது. ஏதாவது விடுபட்டிருக்க வேண்டும், அனுமானிக்கவும் கனவு காணவும், அதன் வழியாக நாமாக நிரப்பிக் கொள்ள.”

“அறியாமையின் நிரப்பல்கள். அப்படித் தானே ?”

“என்னவோ..” மார்த்தா தோள்களை உலுக்கினாள்.

“என் விஷயம் எப்படி?”

“கொஞ்சமும் புரியவில்லை எனக்கு உன்னை. அதனாலேயே உன்னைப் பற்றி நிறைய யோசிக்கிறேன் நான். ஆனால் எவ்வளவு முயன்றாலும் பிடிபடாதவை நிறைய மீதம் இருக்கின்றன. ஒரு வேளை இது கிழக்கின் விளங்கமுடியாத மர்மமாக இருக்கலாம்.”

‘ஒருக்கால் வாய்ப்புகளும்..’ சர்வதமனன் எண்ணிக் கொண்டான்.

மறுநாள் பல நாட்களுக்குப் பின் பாட்டியிடமிருந்து கடிதம் வந்தது.
முடியவில்லை மகனே, நடுங்கும் எழுத்துக்களில் அவர் சொல்லியிருந்தார். இடது காலின் மரமரப்பு தற்பொழுது இரட்டித்து விட்டது. எதிர்பாராத நேரங்களில் தான் அவன் அப்படி சிரமப்படுத்துவான். அந்தி நேரங்களில் நான் திண்ணையில் சாய்ந்தபடி நீ பறந்து போன வானத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பேன். அந்நேரம் நமது தோட்டத்தில் வானம் நிறைய பறவைகள் இருக்கும். தைலம் தேய்த்து கால்கள் நீவிக்கொண்டிருக்கும் பொழுது ஏதாவது நினைத்து தேற்றிக் கொள்வேன். இந்த வானத்தில் இப்பொழுது எவ்வளவு பேருடைய மகன்கள் பறந்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் பறக்க தூய வெண் சிறகுகள்.
என்ன இருந்தாலும் நீ கவனமாக இரு மகனே. எனக்கு நீலம் என்றால் பயமென்று உனக்கு நன்றாகத் தெரியும். அதன் ஆழங்களில் எவ்வளவோ இரகசியங்கள் மறைந்திருப்பது போல. அதனால் இந்த வானமும் எனக்கு அச்சம் தருகிறது.
எதற்கு நான் இதையெல்லாம் சொல்லி அவ்வளவு தொலைவில் இருக்கும் உன்னை மனம் வெதும்பச் செய்ய வேண்டும். ஊர்க் கதைகள் பேச பெரிதாக ஒன்றும் இல்லை எனக்கு. இருந்தாலும் இந்தக் கோடை மிகவும் கொடியது தான் மகனே. முதல் முறையாக நம் தெற்கு குளம் ஏறக்குறைய வற்றி விட்டது. கணுக்கால் அளவுக்குத் தான் நீர் இருக்கும். அதுவும் முழுக்க சேறு தான். மாமரங்கள் மட்டும் ஏனோ இம்முறை வெகு அதிகமாக காய் பிடித்திருக்கின்றன. மாம்பழங்கள் வெடித்துச் சூழும் நாற்றம் எனக்கு சுத்தமாக பிடிக்காது என்று உனக்கு தெரியுமே.

பாட்டிக்கு என்ன பதில் எழுதுவதென அவனுக்கு தெரியவில்லை. பாட்டி நீங்கள் கவலையே பட வேண்டாம், இங்கு என்னை நன்றாகப் பார்த்துக் கொள்ள இன்னொரு பாட்டி தான் இருக்கிறாளே, என்று தான் முதலில் ஆரம்பித்தான். உடன் அடித்து விட்டான். மார்த்தா எனும் பெயர் பாட்டியின் காதுகளுக்கு எட்டாமல் இருப்பது தான் நல்லது.

பாட்டியின் கடிதத்தினை மாரத்தாவிற்கு காட்டினதும் அந்த விசித்திரமான கிராமத்துக் கையெழுத்தை அவள் சற்று நேரம் ஆர்வமுடன் பார்த்தபடி இருந்தாள்.

“எங்கள் நாராயணி அம்மாவின் மேட்டிமை இந்த எழுத்துக்களின் நேர்த்தியிலும்”, அவன் சொன்னான்.

“இதை என்னாலும் வாசிக்க முடியுமே, தமனா “ அவள் வெடித்துச் சிரித்தாள்.

அதிர்ந்து போனான் சர்வதமனன். மார்த்தாவிற்கு சிரிப்பு தாளவில்லை.

“வேண்டுமானால் நீ ஒரு கேலி செய்யலாம். இரண்டு பாட்டிகளுக்கு நடுவே மொழியின் குறுக்கீடு எதற்கு?.”

மார்த்தா ஒரு நொடி கண் மூடி நின்றாள். அப்பொழுது நூற்றாண்டுகளின் பழமை வாய்ந்த செங்கற்களால் ஆன கட்டிடங்களுக்கு இடையே தெரிந்த சிறிதளவு வானத்தில் சிவப்பு சூரியன் சாய்ந்து இறங்கிக்கொண்டிருந்தது. அவளின் நெற்றியில் வியர்வை அரும்பியது. ஆகாயத்தின் செம்மை அவள் முகத்தில் படர்ந்து பரவிக் கொண்டிருந்தது.
மிகவும் தாழ்ந்த குரலில் பாட்டியின் வரிகளை உச்சரிக்கத் துவங்கினாள் மார்த்தா.

“ஊர்க் கதைகள் பேச பெரிதாக ஒன்றும் இல்லை எனக்கு. இருந்தாலும் இந்தக் கோடை மிகவும் கொடியது தான் மகனே. முதல் முறையாக நம் தெற்கு குளம் ஏறக்குறைய வற்றி விட்டது. கணுக்கால் அளவுக்குத் தான் நீர் இருக்கும். அதுவும் முழுக்க சேறு தான்.மாமரங்கள் மட்டும் ஏனோ இம்முறை வெகு அதிகமாக காய் பிடித்திருக்கிறது. மாம்பழங்கள் வெடித்துச் சூழும் நாற்றம் எனக்கு சுத்தமாக பிடிக்காது என்று உனக்கு தெரியுமே.”

சிலிர்த்துப் போய் நின்றான் சர்வதமனன். மார்த்தாவின் முகத்தின் செம்மையும் கண்களின் மினுப்பும் சற்றும் விளங்கவில்லை அவனுக்கு.

“மார்த்தா வேண்டாம்” அவன் குரல் தழுதழுத்தது.

“ஏன் தமனா?”

“என்னவோ, நீ இப்பொழுது எனக்கு மிகவும் அச்சமூட்டுபவளாக இருக்கிறாய்.”

அப்பொழுதும் குலுங்கிச் சிரித்தபடி இருந்தாள் மார்த்தா. சற்று நேரத்தில் மூச்சிரைப்பு அடங்கிய பின் சொன்னாள்
“மாம்பழங்கள் வெடித்துச் சூழும் மணம் எப்படி இருக்கும் தமனா? எனக்கு சொல்லித்தருவாயா?”

அவன் வாயடைத்து நின்றான். மார்த்தாவை புதிதாகப் பார்ப்பது போல் மேலும் கீழும் பார்த்தான். முதன் முதலாக தங்களுக்கு இடையில் ஒரு சிறு பரிச்சயமின்மை உயிர்த்து வருவது போல் இருந்தது.

“என் உதடுகளில் படிந்த நீலம் இன்னும் முற்றிலும் மறையவில்லை என நிக் நேற்று இரவும் புகார் சொன்னான். முத்தமிடும்பொழுது அவனுக்கு ஏதோ நெருடுகிறது போலும். நிறைய ஈரமற்ற சந்தேகங்களுடன் என்னென்னவோ கேட்டுக் கொண்டிருந்தான்.”

“உனது அந்த பழைய பொய்களின் மூட்டைகள் காலியாகி விட்டனவா, மார்த்தா?”

“நீ தான் என்னை மீண்டும் மீண்டும் பொய் சொல்ல வைக்கிறாய் தமனா? கடைசியில் அவன் அதை கண்டுபிடிக்கும்பொழுது..?”

“அப்பொழுது நீ என்ன செய்யப் போகிறாய்?” சர்வதமனன் ஆர்வமுடன் அவள் முகம் உற்றுப் பார்த்து கேட்டான்.

“உண்மையைத் தான் சொல்ல வேண்டியிருக்கும் நிக்கிடம். ஆனால் வெளியே தெரியும் நீலத் தீற்றல்கள் இல்லை பிரச்சனை. என் உள்ளே ஒரு நீலச் சாயை என படரும் உன் இருப்பு தான் எனக்கு அச்சம் தருகிறது.”

ஒன்றும் சொல்லாமல் செங்கல் கட்டிடங்களுக்கு நடுவில் அடர்த்தி ஏறிக்கொண்டிருக்கும் இருட்டினை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சர்வதமனன்.
“என் பாட்டி என்னை மிகவும் எச்சரித்திருந்தார்.” அவன் சொன்னான்.

“என்னை நிக்கும் தான்.”

“அது போன்று இங்கு என்ன தான் நடந்து விட்டது இப்பொழுது? வெறுமனே நடக்காத தவறுகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.” அவன் சொன்னான்.

“ஆம், இல்லாத குற்றங்களை கண்டு பிடிக்கிறோம் நாம்.” அவளும் சொன்னாள்.

இருவரும் சத்தமின்றி சிரித்தனர்.

கொஞ்சம் ஆறுதலடைந்தது போன்று அவள் இருட்டில் புல்வெளியை நோக்கி நடந்தாள், சர்வதமனன் எதிர் திசையில் விளக்குக் கம்பத்தினடியில் வெளிச்சத்தின்பாலும்..

அன்றிரவு சர்வதமனன் தாத்தாவை கனவில் கண்டான். ஏதோ ஒரு உள் அறையின் சுவற்றில் தனிமையில் சாயத்தில் குளித்து படமாக தொங்கி கொண்டிருக்கும் தாத்தா. நீலம் படர்ந்து களை இழந்த தாத்தா ஏதோ ஒரு பொட்டல் வெளியிலிருந்து நடந்து வந்துக் கொண்டிருந்தார். தொலைவிலிருந்தே கையைத் தூக்கி ஏதோ சத்தமாக சொல்லிக்கொண்டிருந்தார். விசிறியடிக்கும் காற்றின் பாளங்களாக சில சொற்கள். காதைத் தீட்டி சிரமப்பட்டு கொஞ்சம் புரிய முடிந்தபோது அது கரிசனத்தில் தோய்ந்திருந்தது.
தாத்தா நெருங்கி வந்திருந்தார்.

“கவனமாக இரு மகனே. மனித உடலை அறிந்துகொள்ளத் தானே கடல் கடந்து இவ்வளவு தொலைவு வந்திருக்கிறாய். கடல் தாண்டாமலே அதை முயற்சித்த எனக்கு கிடைத்தது தான் இந்த பாழாய்ப் போன நீல நிறம்.”

நஞ்சு கலந்த உதிரம் அந்த உடல் முழுதும் கெட்டித்துக் கிடப்பதாகத் தோன்றியது சர்வதமனனுக்கு. உருண்டு திரண்ட விரல் நுனிகளில் உறைந்து நிற்கும் நீலத் துளிகள்.

“மற்றவர்களின் உடல்களிலிருந்து வெளியேற்றின நஞ்செல்லாம் ஒரு சாபம் போன்று கடைசியில் என்னையே வந்தடைந்தது மகனே.” தாத்தா உடைந்த குரலில் சொன்னார். “எனக்கு உன்னை ஆசீர்வதிக்க ஆசை. ஆனால் இந்தக் கை ..”

அவன் தலையில் வைக்க நீண்ட கை தானாக பின்னடைந்தது. தாத்தா தன் அருவருப்பான விரல்களை வெறுப்புடன் பார்த்தார்.

“ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள் மகனே. அடுத்தவர்களுக்கு ஆறுதலளிக்கும்பொழுது அவர்களின் வேதனைகளை நம் மனதில் ஏற்றிக்கொள்ளக் கூடாது. விலகி நிற்க பழகிக் கொள்ள வேண்டும்.”

இந்தக் கனவினை மார்த்தாவுடன் பகிர்ந்துக் கொண்டபோது விழிகள் விரிய முழுவதையும் அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“நேற்று நிக்கும் சொன்னான், நிறைய என்னவெல்லாமோ” தலை குனிந்து மிகவும் தணிந்த குரலில் சொன்னாள். ”ஏதோ ஒரு அவசரத்துடன் அவன் என் உடல் முழுவதையும் காண முயன்று கொண்டிருந்தான். ஒரு அங்குலம் விடாமல். எவ்வளவு முறை பார்த்தாலும் முதல் பார்வையின் வியப்பும் அதிர்ச்சியும் அவன் கண்களில். நான் தலையினை கையில் தாங்கி ஒருக்களித்து கிடந்தேன். வேண்டுமட்டும் பார்த்துக்கொள்ளட்டும் என்று.”

தன் நெஞ்சில் ஏதோ காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது சர்வதமனனுக்கு.

“பிறகு, எல்லாமும் தெரிந்ததா?”

“சந்தேகம், தமனா” அவள் குரலில் ஈரம் முற்றியது. “அவன் கண்கள் பல முறை விரிவதும் இடுங்குவதும் தான் நான் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தேனே. அப்படி இருந்தும் கடைசியில் காணக் கிடைத்தது அதே பழைய திருப்தியின்மை. தன் கண்களின் எல்லைகளை அறியும்பொழுது எழும் கவலை. ஒரு சராசரி காதலனின் பிணக்கும் கொஞ்சம் பொறாமையும்.”

ஆனால், எனக்கு உன்னை பார்க்க முடிகிறதே மார்த்தா, முற்றிலுமாக! என சத்தமிட்டு கூவ முனைந்ததை அவன் உடன் கைவிட்டான்.
மார்த்தா தொடர்ந்தாள்.

“ஏதோ அறிந்துக்கொண்ட தோற்றம் அவன் முகத்தில் முதலில் தெரிந்தாலும் பிறகு என்னவோ ஒரு இரகசியத்தன்மை அவனது சிறிய கண்களில் ஊற்றெடுப்பதை நான் கண்டேன். அப்படியும் அவனுக்கு நான் ஒரு புது காட்சியாக மாறுவதை நான் உணரவில்லை. அவன் அவ்வப்பொழுது தலையினை உலுக்கியபடி இருந்தான். என்னவோ மார்த்தா இப்பொழுதெல்லாம் எனக்கு உன்னை சுத்தமாக புரிய முடிவதில்லை. அவன் மந்திரம் போன்று உச்சரித்துக் கொண்டிருந்தான். ஏன் அப்படி என பல முறை கேட்டும் அவன் ஒன்றும் தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் அவனின் சிறிய கண்களில் சந்தேகத்தையும் மீறி ஒரு சோகமும் திருப்தியின்மயும் தான் ஓங்கி நிற்பதாக நான் நினைத்தேன். அதன் காரணத்தினை அவன் பிறகு தான் சொன்னான். அதுவும் தொலைபேசிக் கம்பிகளின் ஆதரவில்.”

மார்த்தா ஒரு பெருமூச்செடுத்து வாய் நிறைய குளிர்ந்த காற்றினை உள் நிரப்பிக் கொண்டாள்.

“என்னவாம் மார்த்தா?”

“என் அடிவயிற்றிலும் சில அடையாளங்கள் அவன் கண்களுக்கு தெரிகிறதாம். விரல்கள் தீண்டின நீல அடையாளங்கள்.”

“என்ன” அவன் உடல் நடுங்கியது.

“யாருடையது என அவன் விசாரிக்கவில்லை. கேட்டிருந்தால் உன்னுடையது என்று தான் சொல்லியிருப்பேன். நிக்கிடம் பொய் சொல்ல முடியாது என்னால்.”

“அதற்கு நான் உன்னை அங்கு தொடவில்லையே, மார்த்தா?”

“தொடாமலேயே நீ என்னை எங்கெல்லாமோ தொடுகிறாய் தமனா. அங்கெல்லாம் உன் அந்த அருவருப்பான நீல அடையாளங்கள்.”

“நான் பார்க்கட்டுமா, மார்த்தா?”

“உன் கண்களுக்கு அது தெரியாது தமனா.”

“நீயாவது அதனைக் கண்டாயா, மார்த்தா?”

“இல்லை, தமனா ! ஆனால், அனைத்தையும் பார்ப்பவன் நிக். அவனுக்கு இது ஒரு கனமான சுமையாக இருக்கிறது.”

விரல் தடங்கள் பதியாத மனித உடல்களைப் பற்றித்தான் அன்று இரவு முழுவதும் எண்ணிக் கொண்டிருந்தான் அவன். மற்றவர்களின் மேல் அடையாளங்களை பதிக்காத ஆசைகள் குறித்தும். பிரம்மாண்ட நூலகத்தின் தடித்த புத்தகங்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் சொலலித் தர முடியவில்லை. ஆகாயத்திலிருந்து பொழியும் அறிவின் துணுக்குகளும் தலைக்கு மேல் வழுக்கிச் சென்றன. அதன் பிறகு, மார்த்தா தன்னிடமிருந்து மிகவும் விலகி இருக்க முயல்வதாக அவன் உணர்ந்தான். வகுப்பறைகள், பரிசோதனைக் கூடங்கள், நூலகத்தின் நடைவழிகள் என சந்திக்க வாய்ப்பிருக்கும் இடங்களில் இருந்தெல்லாம் அவள் சாமர்த்தியாமக தவிர்த்துச் சென்றாள். தொலைபேசி வழியாக கையெட்டித் தொடும் வேளைகளில் மௌனத்தின் நெடிய இடைவெளிகள்.

பல நாட்களுக்குப் பிறகு, பூங்காவின் ஒரு மூலையில், வெட்டி சீர்படுத்தப்பட்ட கொடிகளின் நடுவே அவனை சந்திக்க நேர்ந்த பொழுது அவளால் தவிர்க்க முடியவில்லை.

“என்ன இதெல்லாம் மார்த்தா” அவன் குரல் கம்மியது.

“வேண்டாம் தமனா,” அவள் தடுத்தாள், “இது சரியாகாது.”

“எது என்று சொல், மார்த்தா.”

சிறிது நேரம் அவள் ஒன்றும் சொல்லாமல் தலை கவிழ்ந்து நின்றாள்.அவள் எதை நினைத்தோ மிகவும் பயப்படுவது போல் இருந்தாள். அது தான் அவனுக்கு தெரிய வேண்டியிருந்ததும்.

“என்னிடம் சொல்ல மாட்டாயா, மார்த்தா?”

அவனின் அப்பொழுதின் துயரம் அவளை உலுக்கியிருக்க வேண்டும். அவள் மெதுவாக உதடு அசைத்தாள்.

“ என் உடல் முழுதும் உன் விரல்களின் அச்சு. நீல அடையாளங்கள்” அவளால் தொடர்ந்து பேச முடியவில்லை.

அவன் திடுக்கிட்டான்.

“நீ பார்த்தாயா?” அவன் கேட்டான்.

“இல்லை, ஆனால் நிக் அனைத்தையும் காண்கிறான்.!”

“எல்லாம் அவன் சந்தேகம் தான்.”

“அவன் மைதானங்களின் இரகசியங்களைக் காண்பவன். புல் தரைகளின் மர்மங்களைத் தொட முடிந்தவன்.”

“இது விளையாட்டு மைதானம் அல்ல மார்த்தா. நாமெல்லாம் ஆட்டக்காரர்களும் அல்ல.”

கோபத்தில் அவன் குரல் உயர்ந்ததை அவன் அறிந்தான். ஆனால் மார்த்தா அதை உணரவில்லை.

“எனக்குள்ளேயும் இருக்கும் அது போன்ற அடையாளங்கள் என ஜாடையாகச் சொல்கிறான் அவன். ஒவ்வொரு விரல் தடங்களிலும் ஓராயிரம் உண்மைகள் தேடுகிறான் அவன். அவனின் பார்வையில் மிகப் பெரும் கூர்மை. அவன் குரலிலோ முன் எப்பொழுதும் கண்டிராத கள்ளமும் கபடமும்.”

“ஒரு காரணமும் இன்றி சந்தேகிக்கிறான் நிக். நீ நம்புகிறாயா அதை எல்லாம்?”

“இப்பொழுது எனக்கு என் மீதே நம்பிக்கை இல்லை, தமனா.” அவள் கலவரத்துடன் கைகளை பிசைந்துக் கொண்டாள். “நானே அறியாமல் கூட உன் அடையாளங்கள் என்னுள் வீழ்ந்து விட்டனவா என நானும் ஐயமுறுகிறேன்.”

“நாமெல்லாம் மனித உடல்களையும் மனங்களையும் ஆழ்ந்து படிப்பவர்கள் தானே?”

“ஆனால் எதையும் படிக்க முற்படாத காற்பந்தாட்டக்காரனின் பார்வையின் சக்தியினை என்னால் மறுக்க முடியவில்லையே. அவனாகட்டும் என் விஷயத்தில் நிறைய போட்டியும் பொறாமையும் கொண்டவன்.”

“அப்படி இதுவும் ஒரு கிழக்கத்திய விடுகதையாக மாறுகிறது, அப்படித் தானே?”

“விடுகதையாக விட்டு வைக்க மாட்டான் நிக். நிதர்சனமான உண்மைகளில் மட்டுமே நம்பிக்கை கொண்டவன் அவன். எதிர்பாராமல் கோல் முனைகளை நோக்கி பாய்ந்து வரும் எந்த ஒரு பந்தும் அவனுக்கு மிகப் பெரிய உண்மை. அதன்பால் அவன் காலும் தலையும் யதேச்சையாக நீள்கிறது. அது போன்ற ஒரு உண்மை தான் இந்த அடையாளங்களும்.”

ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற பின் அவளை நெருங்கி கண்களை உற்று நோக்கி அவன் கேட்டான்.

“யார் அவன் என நிக் இன்னமுமா கேட்கவில்லை?”

“இல்லை. அது அவன் இங்கிதம். ஆனால் என்றாவது ஒரு நாள் அந்தக் கேள்வி அவனை தொல்லைபடுததாமல் இருக்காது.”

“எதனால்?”

“அது அவன் பார்வையின் அபாரத் திறன்.” மார்த்தா முணுமுணுத்தாள். “அது தான் புற்கள் மூடிய படுகுழிகளிலிருந்து காப்பாற்றுகிறது.”

அது தான் அவன் தோல்வி என சர்வதமனன் உணர்ந்தான். ஓரளவு வரை மார்த்தாவும்.

“என்ன இருந்தாலும் என்னைப் பார்த்துக் கொள்வதாக நீ வாக்களித்திருக்கிறாய்.”

“ஆனால் அது உன் அம்மாவைப் போன்று மட்டும் தான்.”

“உனக்கு ஒரு போதும் என் அம்மாவாக முடியாதே.”

மௌனமான அவள் பார்வை புல்வெளியின் எல்லையினை விரைந்து தொட்டு மீண்டது. அவள் பழுதற்ற ஒரு பதிலுக்காக துழாவிக் கொண்டிருப்பதாக தெரிந்தது.

அன்றிரவு படுக்கையில் விழுந்த பொழுது பாட்டிக்கு கடிதம் எழுதுவது குறித்த நினைப்பே அவனுள் எழவில்லை. தாத்தாவை கனவில் காண்பது பற்றியும். ஏதோ பழைய நினைவுகளின் குளிரில் அவன் அப்படியே சுருண்டு கிடந்தான்.

வெகு நேரத்திற்கு பிறகு ஜன்னலுக்கு வெளியே ஒரு மென் நீல இரவு பூத்துக் குலுங்குவதை அவன் கண்டான். அவன் மெதுவாக எழுந்து சென்று ஜன்னலை ஒட்டி நின்றான். தோட்டத்தின் கிழக்குப் பகுதி முழுக்க ஒரு வகை நீலவண்ண மலர்கள் குலைகளாக பூத்து மலர்ந்தது போல் இருந்தது. நிலவொளியில் ஈரம் படிந்த செடிக்கொடிகளுக்கும் நீல நிறம் தான். அவன் நெடு நேரம் அவற்றைப் பார்த்தபடி நின்றிருந்தான். எவ்வளவு முயன்றும் அவைகளின் ஊடே இரகசியம் மிகுந்த அடையாளங்கள் எதுவும் அவனுக்கு புலப்படவில்லை. எவ்வளவு தெளிந்த இரவு. அந்நேரம் பாட்டியிடம் கூவிச் சொல்ல நினைத்தான், இது, நான் இதுவரைக் கண்டிராத ஓர் இரவு. இந்த குளிர்ந்த நிலவின் நீலம் நீங்களும் பார்த்திருக்க முடியாது. ஒரு வேளை நான் கடல் தாண்டி வந்தது மனித உடலை படிப்பதற்காக இருக்காது. இந்த இரவை காணவும் அறிந்து கொள்ளவும் மட்டும் தான் இருக்கும்.

அவன் விரைந்து சென்று அந்த அறையின் அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்தான். கொத்தாக மலர்ந்திருந்த நீல மலர்களின் வாசம் நிறைந்த குளிர்ந்த காற்று அறையினுள் மோதி நுழைந்தது, அதனுடன் முன்னெப்பொழுதும் கண்டிராத நீல இரவும்.


மலையாள மூலம் : சேது

தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி

மூல ஆசிரியர் குறிப்பு :

சேது, மலையாள நவீன இலக்கியத்தின் தொடக்க எழுதாளர்களில் ஒருவர். 1942 இல் எர்ணாகுளம் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் பிறந்த இவர் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கிராமத்தை விட்டுச் சென்று வட இந்திய மாநிலங்கள் மற்றும் தில்லி,மும்பாய் போன்ற பெருநகரங்களிலும் பணி செய்ய நேர்ந்ததுதான் விசாலமான பார்வை பெற காரணம் என்கிறார். 21 மலையாள நாவல்கள், 1 ஆங்கில நாவல், 2 குழந்தை இலக்கியங்கள், குறு நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார். மத்திய மற்றும் கேரள சாகித்ய அகாதமி விருதுகள் உட்பட மலயாளத்தின் சிறந்த விருதுகள் பல வென்றுள்ள இவர் நேஷனல் புக் டிரஸ்ட் சேர்மன், சாகித்ய அகாதமி பொதுக்குழு மற்றும் கேரள சாகித்ய அகாதமி நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தும்பா ஏவுகணைத்தளம், ரயில்வே போர்ட் என பல மத்திய அரசுத்துறைகளில் பணியாற்றிய இவர் வங்கித்துறைக்கு மாறி பல்வேறு பதவிகளை வகித்து வங்கித் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்றார்.

எழுதியவர்

அரவிந்த் வடசேரி
கோவையைச் சார்ந்தவர் அரவிந்த் வடசேரி , இவர் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து அளிக்கும் மலையாளம் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் ஆவநாழி இதழில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இருவாட்சி இலக்கிய மலர், கலகம் மற்றும் தாய்வீடு இதழ்களிலும் இவரது கதைகள் வெளியாகி உள்ளன.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x