22 November 2024
lathas

செம்மண் புழுதியேறிய நீர் அகண்டு வாய் திறந்திருந்த காரின் நாற்புறங்களிலும் புகுந்திருந்தது. எத்தனை தாகமிருந்தால் அந்த இயந்திர வாகனம் தன்னை நீருக்குள் மூழ்கடித்திருக்கும் அல்லது தன் வெண்ணிற மேனியை தூய்மைப் படுத்துவதற்காக அத்தண்ணிருக்குள் மூழ்கடித்துக் கொண்டதோ இல்லை.

வழுவழுவென்ற தன் நான்கு கால்களின் தேய்மானத்தின் வலியோ மூச்சு விடமுடியாமல் சற்றுநேரம் துடித்து பருத்த உடலை குலுக்கி நீருக்குள் தன் கற்பை காவு கொடுத்து கதறி அழுததால் அந்நீர் செந்நிறமாய் மாறியிருக்குமோ? காவு வாங்கிய தன் இளமையைக் காக்க இப்படியொரு விபத்தை தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டாயா ? என்று சாலை நாக்குகள் விதவிதமாய் கேள்வியெழுப்பிக் கொண்டு இருக்க,

“ஆறு மாசமாச்சி மேம்பாலத்தைக் கட்டித்தரச் சொல்லி கோரிக்கை விடுத்து கேட்பாரில்லாம இப்படி ஆயிடுச்சே!” என்று ஏகப்பட்ட உச்சுக்கொட்டல்கள்.

எல்லாவற்றையும் கவனித்தபடியே மெளனமாய் காருக்குள் மிதந்து கொண்டிருந்தது சத்யா என்ற அந்த பூதஉடல்.

அவனை விட்டுத் தனித்து சென்றிருந்த ஆன்மா அவ்வுடலை வெறித்துக்கொண்டு இருந்தது.“என்னங்க இப்போ என்ன திடீரென்று புதுக்கோட்டைக்கு? அதான் வெள்ளனூர்ல நம்ம ஆஸ்பத்திரி நல்ல முறையில் கட்டிடம் எழும்பிகிட்டு கிடக்கே இன்னைக்கோ நாளைக்கோன்னு எனக்கு பிரசவம் இருக்கும்போது நீங்க நேரில போயே ஆகணுமா?” வார்த்தை ஒவ்வொன்றுக்கும் மூச்சை இழுத்துவிட்டபடி துளித்திருந்த வியர்வைப்பூக்களோடு, இடுப்பில் கையை முட்டுக்கொடுத்தபடி நின்றிருந்த மனைவியின் முகத்தில் கன்னங்களை செல்லமாய் தட்டினான்.

“நான் பிறந்த ஊர் அங்கே ஒரு மருத்துவமனை கட்டவேண்டும் என்பதுதான் என் ஆசைன்னு உனக்குத் தெரியாதா விஜி. முக்கால்வாசி நிறைவாகிடுச்சி, சில விஷயங்களில் என்னோட கடைசி பங்களிப்பு முக்கியம் இல்லையா அதனால நான் போய்தான் ஆகணும். அதேநேரத்திலே உன்னைப் பற்றிய அக்கறையும் எனக்கு இல்லாமல் இல்லை நான் சீக்கிரம் வந்திடுவேன்.”

“அது சரிங்க அத்தனை தூரம் காரில் போகணுமா? டிரைன்ல போகலாமே நீண்ட நேரப்பயணம் உங்களுக்கு அலுப்பை இருக்கும் இல்லையா? அதனாலதான் கேட்டேன்.” கணவனின் ப்ரீப்கேஸை மூடியபடியே கேட்டாள் விஜி.

“இந்த மாதிரி பேண்டமிக் நேரத்திலே நம்ம வண்டிதான் நமக்கு பாதுகாப்பு இன்னைக்கு நேத்தா வண்டி ஓட்டுறேன், எத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ் சென்னை டிராபிக்லே வண்டி ஓட்டிட்டா எந்த ஊரிலும் சமாளிச்சிடலாம். ஆறேழு மணி நேரம் தானே தனியா போகும் போது நிறைய யோசனைகள் வரும் அதெல்லாம் நமக்கு உபயோகமாக இருக்கும். கவலைப்படாதே நான் நாளைக் காலையில் இங்கே இருப்பேன்.”

“பத்திரம்.” என்று பதைபதைப்போடு அனுப்பிய விஜிக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் அவளின் கண்கள் என்னை எதிர்பார்ப்போடு தேடிக்கொண்டு இருக்குமோ? அல்லது சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை என்று குற்றம் கண்டுபிடிக்குமோ ஆன்மா அதற்குள்ளேயே உரையாடலைத் தொடங்கியது.

“நாலுநாளா மழை வெளுத்து வாங்குது எனக்கு அப்பவே தெரியும் இந்த மாதிரி ஏதாவது அசம்பாவிதம் நடக்கப் போகுதுன்னு ஆனா இவனுக்கு எருமை மாட்டு மேல மழை பெய்ஞ்சமாதிரி நின்னுடானுங்களே ?!”

“ஆமாமா ஆறு மாசா நடையா நடக்கோம் அந்த மேம்பாலத்துக்கு அடியிலே சுரங்கப்பாதை ஒன்று கட்டிக்கொடுங்கடான்னு எவன் காதுலே விழுந்தது. ஒட்டுக்கு மட்டும் வாய்கிழிய பேசி வந்திடறாங்க ஆனா…” எழுத முடியாத வசவு வார்த்தை ஒன்று அங்கே இன்ஸ்டெண்ட்டாய் பிறந்தது.

“அவனவன் உசுரு போனா வலிக்கும் அடுத்தவன் உசுருதானே அதான் மெத்தனமா இருக்காங்க. போங்கடா போய் ஜோலியப் பாருங்க செத்தவனா வந்து நாளைக்கு கஞ்சி ஊத்தப்போறான் அவனுக்கு விதி முடிஞ்சிப்போச்சு போய் சேர்ந்திட்டான்.” தலைநரைத்த பெரியவர் ஒருவர் விபத்து நடந்த இடத்தை எட்டிப்பார்த்தபடியே பேசி நகர்ந்தார்.

கூட்டம் அந்த வெய்யிலைத் தாங்கியபடியே தன் வேடிக்கையைத் தொடர்ந்தது. பேரிடர் மீட்புக் குழுவினர்கள் சீருடைகளோடு தத்தம் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். நான்கு நாட்களின் மழை நீர் அடைக்கலம் தேடியிருந்த பள்ளத்தின் ஆழம் விரிவாக அலசப்பட்டது. கிரேனின் கூர்முனைகள் சட்டென்று பெரும் சப்தத்துடன் ஆக்டோபஸைப் போல தன்னை எண்ணிக்கொண்டு காரின் மேல்பாகத்தை தூக்கப் போராடிக் கொண்டு இருந்தது. அதன் அழுத்தத்திற்கு ஏற்றபடி ஒரு தீயணைப்பு படைவீரர் அந்த கிரேனை இயக்கக் கொண்டு இருந்தார். பாதிவரை மேலெழுந்த கார் மீண்டும் சற்றே வழுக்கி தண்ணீருக்குள் அமிழ்ந்தது. கூடவே சத்யாவின் உடலும்.

சட்டென்று கண்ணீர் அரும்பியது. இவையனைத்தும் மேல நின்று பார்த்துக் கொண்டு இருந்தது சத்யாவிற்கு அவன் உடைகள் நனையவில்லை, தண்ணீருக்குள் அமுங்கியிருந்த சத்யாவைப் போல முகம் வீங்கியிருக்கவில்லை, எத்தனை முயன்றும் தன் உடலை வெளியே எடுக்கமுடியாத சோகம் அந்த ஆன்மாவிற்குள் குடிகொண்டு இருந்தது. தன்னைச் சுற்றிய மனிதர்களின் கண்களுக்கு காட்சிப்பொருளாய் மாறிய வேதனை அவனைப் பிழிந்தது.

கண்கள் நாலாபுறமும் சுழன்றது “ஓ….இவனுக்கு சாகிறதுக்கு வேற இடமே கிடைக்கலையா?” கிரேனின் கூர்முனைகளில் கார்,  கொக்கின் அலகில் சிக்கிய மீனைப் போல ஆட்டம் கண்டது. இன்னொரு தீயணைப்பு வீரரால் சத்யனின் உடல் வெளியே நிலத்தில் இழுத்துப் போடப்பட்டது. அரூப சத்யன் வேகமாய் அவன் உடலருகே வந்து உடையைப் போலவே தன்னோடு ஒட்டிக்கொண்டு இருந்த லேட்டஸ்ட் “5ஜி”-யைத் தேடினான். அந்த வாட்டர்புரூப் செல்போன் வாங்கும் போது கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. நீருக்கடியில் சத்யனின் உடலைப் போலவே அதுவும் உப்பிய நிலையில் அநேக முறை விஜியின் பதட்டக் குரலை உள்வாங்கிய போதும் கர்மசிரத்தையாய் சத்யனின் காதுகளில் அது கேட்காதவாறு பார்த்துக் கொண்டது..

அருகிலிருந்த சீனியர் காக்கி கண்ணசைக்க ஒரு ஜீனியர் காக்கி சட்டைப்பையைத் துழாவி பர்ஸை எடுத்து பிரித்தான் அதில் சில ஐநூறு நூறுகளை லாவியபடியே அருகில் இருந்த விஜியை ஒரு அசிங்கப்பார்வை பார்த்துவிட்டு,

“சார் இவரு டாக்டராம் பேரு சத்யனாம்.”

மாலைநேரத்தில் ஒரு நோயாளிக்கு ஐநூறு என்று பார்க்கும் ஏதோவொரு மருத்துவமனையின் டெம்பவரி ஐ.டிகார்ட் சத்யனை அடையாளம் காட்டியது.

“போன்நம்பர் ஏதாவது இருக்கா ?”

“ஆஸ்பத்திரி நம்பர் இருக்கு ஸார் போன் போடவா?”

“தெருமுக்குல பிள்ளையார் கோவில்ல ஐயர் இருப்பாரு தட்சணை வைச்சு கேட்டுட்டு வந்து பேசு ஆளைப்பாரு ஏன்யா எத்தனை வருஷ சர்வீஸ் உனக்கு இன்னேரம் பேசி வீட்டு நம்பரை வாங்கியிருக்க வேண்டாம். எனக்குன்னே எங்கிருந்தான் வந்து சேருவீங்களோ தாலியறுக்க….” பெரிய காக்கி தொப்பையில் இருந்து வழுக்கிய பேண்டை மேலிழுத்தபடியே உச்சஸ்தாதியில் கத்த, பர்ஸை அருகிலிருந்த அழுக்கு கேரிபேக்கிற்குள் திணித்தபடியே மேற்படி ஆராய்ந்தான். ஒரு பிளாட்டினம் செயின், கையில் மோதிரம், தண்ணீரில் மூழ்கியும் இயக்கத்தை நிறுத்தாத ரேடோ வாட்ச், ‘ஆளு பெரிய இடம்தான் போல….?!’

“ம்…இவனுங்களுக்கு என்ன? படிச்சப் படிப்பை வைச்சிகிட்டு சொந்தமாய் ஒரு தீப்பெட்டி சைசிஸ் தெருவுக்கு நாலு ஆஸ்பத்திரி போற இடத்திலேயெல்லாம் ஆயிரம் ஐநூறு பீஸூ எந்த நோயாளி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டானோ இப்படி அல்பாயிசுலே போயிட்டான்.”

அந்த சின்னக்காக்கியின் குரல் அருகில் கவலையோடு அமர்ந்திருந்த ஆன்மாவின் காதில் விழுந்தது.

‘அதுதான் காரணமா? நான் அநியாயமாக காசு சம்பாரித்ததுதான் என் இறப்பிற்கு சூத்திரதாரியா? சாதாரண புட்பாயிஸனால் ஏற்பட்ட வயிற்றுவலிக்கு கொலானாஸ்கோபி, எண்டாஸ்கோபி என்று எடுத்து கடுமையான புண் இருக்கிறது என்று பயமுறுத்தி ஆயிரமாயிரமாய் பிடுங்க அந்த பாண்டுரங்கனின் சாபமா ?’

“இல்லை டாக்டர் என் பிள்ளையை எப்படியாவது காப்பாத்திடுங்க என்று கதறிய தாயிடம் பசையில்லை என்று தெரிந்ததும் முதலுதவி கூட செய்யாமல் அவன் செய்து பத்து நிமிஷமாச்சி போவியா என்று விரட்டி பெயர் தெரியாத அம்மாவின் பெற்ற வயிற்றின் எரிச்சலா ?”

‘இல்லை இல்லை அவளா ? இருக்காது.’ ஆன்மா பாரமில்லாத தன் தலையை சிலுப்பிக் கொண்டு இருக்கும் போதே சின்னக்காக்கி தன் நோக்கியா 1100வை எடுத்து,

“நான் கான்ஸ்டபிள் பேசறேன். டாக்டர் சத்யன் உங்க மருத்துமனையிலேதான் வேலை பார்க்கிறாரா?” என்று கேள்வி கேட்டு, “அவரோட வீட்டு நம்பர் கொடுங்க ஒரு துஷ்டி நடந்து போச்சு சொல்லணும்.” என்றதும் சுருக்கென்றது.

அவர்கள் கொடுத்த எண்ணை தன் காதில் சொருகி வைத்திருந்த பென்சிலால் ஒரு நோட்டில் குறித்துக் கொண்டு அடுத்த முனை எடுப்பதற்காய் காத்திருந்தான் மெல்ல எட்டிப்பார்த்தேன் நான் அது விஜியின் கைபேசி எண்.

‘அய்யய்யோ நிறைமாத கர்ப்பமாய் இருப்பவளிடம் இவன் சட்டென்று விஷயத்தை சொல்லித் தொலைத்தாள் அங்கே அவள் நிலைமை அக்கம்பக்கம் கூட யாருமில்லையே என் கைகளைத் துழாவி நான் வேண்டாம் இந்த எண்ணிற்கு போன் செய்யாதே.’ என்று அந்த காக்கியின் கதறினேன். ஆனால் அவன் என்னை கண்டு கொள்ளவே இல்லை காற்றைப் போல என்னைத் தாண்டிக்கொண்டு போனான்.

அவன் என்ன செய்வான் அவனுக்கு மட்டுமில்லை யாருக்குமே நான் இருப்பது தெரியாதே ? மேம்பாலத்தின் அந்தப்பக்கம் வெள்ளையுடையில் அவள் என்னைப் பார்த்து சிரித்தாள் அது.. அவள் தானே… கடைசியில் இவளின் பாவம் தான் என்னை பலிவாங்கி விட்டதா ?

ஷீலா வெளிய முகத்தில் அத்தனை அழகு. ஐந்து மாத கர்ப்பத்துடன் நான் கன்ஸ்சல்ட்டிங் போகும் அந்த மகப்பேரு மருத்துவமனையின் ஒரு பாலிமர் இருக்கையில்! அவளை விட்டுப் பிரிக்க முடியாத பார்வையை பதிக்க வைத்து இம்சித்தாள். அருகில் யாரும் காணோம் முகத்தில் ஒரு வித அவஸ்தை.

நான் நிதானமாய் “என்னாச்சு சிஸ்டர் அவங்களுக்கு?” என்று ரிஷப்ஷனில் உள்ள பெண்ணிடம் கேட்டேன்.

“லேடி கைனோகாலஜிஸ்ட் சவிதா மேடம்கிட்டே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்தாங்க சார் பட் அவங்களால சடனா வர முடியலை இப்போ அப்பாயிண்ட்மெண்ட் கேன்சல் பண்ணி தந்து இருக்கேன் பட் அவங்களுக்கு பெயின் அதிகமாயிருக்காம் பிளீட் வேற ஆகுதாம்.”

“ஓஹோ.. கூட யாரும் வரலையா?”

“அவங்க ஹஸ்பெண்ட் பாரின்ல இருக்கார்ன்னு சொன்னாங்க. ஹவுஸ்மெயிட் வந்து இருக்காங்க. மேபி குடிக்க ஏதாவது வாங்கப் போயிருக்கலாம். ஸார் நீங்க ஒருமுறை பார்க்கிறீங்களா?” அந்த ரிஷப்ஷன் பெண் மேல் எனக்கு அபரிதமான அன்பு துய்த்தது.

“கட்டாயம். எனது கேபினுக்கு அனுப்பி வையுங்கள்.” என்று சொல்லிவிட்டு அவளுக்காய் காத்திருந்தேன். ஷீலா மெல்லமாய் எட்டு வைத்து நடந்து வந்தாள் எனக்கு நான் பார்த்த சில படங்கள் முதலிரவு காட்சிகள் நினைவுக்கு வந்தது. வலியில் அவள் துடித்தது எனக்கு ஏனோ இனிப்பாய்,

“சொல்லுங்க என்ன பிரச்சனை?”

அவள் ஐந்து முழு நிமிடங்கள் செலவு செய்து எதை எதையோ சொன்னாள் ஏதும் என் காதில் ஏறவில்லை. சட்டென்று வலி குறைக்கும் ரத்தப்போக்கு நிற்கும் மருந்தை எடுத்து அவளின் வெண்ணிற புஜத்தை வேண்டுமென்றே தடவி போட்டேன். இதனால் வயிற்றில் இருக்கும் ஐந்து மாத சிசுவிற்கு ஏதும் ஆபத்து நேருமோ என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை.

“கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அரைமணிநேரம் மயக்கமாக இருக்கும்.” என்று நான் படுக்கையைக் காட்டினேன். அவளும் அலுப்பு காரணமாக சரிந்தாள்.

“எனி ஹெல்ப் சார்.” என்று பின்னால் வந்த நர்ஸை,

“நோ பிராப்ளம் இன்ஜெக்ஷன் கொடுத்திருக்கேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் இன்னைக்கு ஈவ்னிங் அந்த பாரின் பேஷண்டுக்கு சர்ஜரி இருக்கு நீங்க அது தொடர்பான வேலைகளை கவனிங்க நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன் அப்பறம் இவங்களோட அட்டெண்ட்டர் வெளியே இருப்பாங்க விவரம் சொல்லி காத்திருக்க சொல்லுங்க.” என்று அனுப்பி கதவின் குமிழைத் திருகினேன்.

“ஸார் அந்தப் பக்கம் ஒரு பொண்ணு எடுத்துது ஸார் விபரத்தை சொன்னேன் பேச்சு மூச்சே காணோம் பட்டுன்னு ஒரு சவுண்டு.” சின்னக்காக்கி விவரத்தை சொல்ல, ‘அடப்பாவி அவ நிறைமாச கர்ப்பிணிடா அவகிட்டே கொஞ்சம் பக்குவமா ? சொல்லுங்கடா….’ என்று கதறினேன் எதிர்முனையில்

எதிர்முனையில் ஷீலா தன் வயிற்றைத் தடவியபடியே சிரித்தாள்.

“ஸார்…” ரிஷப்ஷன் பெண் ஓடிவந்தாள்.

“என்னம்மா…”

“லாஸ்ட் வீக் நீங்க டீரிட் பண்ணீங்களே, அந்த பொண்ணுக்கு அபார்ஷன் ஆகிடுச்சு நேத்து நைட் அட்மிட் ஆனாங்க பாவம் ரத்தப்போக்கு ரொம்ப அதிகமாயிடுச்சு பாவம் அவங்களும்….?!” அவள் சொல்ல

ஈரமில்லா என் மனதில் சிறு சுருக்கல் ஈரம் படிந்த என் உதடுகள் அவளுக்காய் ஓ… என்று உதிர்த்தது.

“பாவம் அன்னைக்கே அவங்க ரொம்ப அனீமிக்காதான் இருந்தாங்க.” ஒற்றை வரியோடு அவளை மறந்தே போனேன். அதுதான் அந்தப் பாவம் தான் என்னை இப்படி நீருக்குள் அமிலச் செய்ததோ? இப்போது அந்த மேம்பாலத்தின் மேல் அவளைக் காணவில்லை.

தண்ணீரில் இருந்து இழுத்து வரப்பட்ட சத்யா கருப்பு வேனில் கிடத்தப்பட்டான். யாருக்காக அழுவது இறந்து போன தந்தையின் ஆசைக்காக கட்டப்பட்டு பாதியிலேயே நிற்கப்போகும் மருத்துவமனைக்காகவா, ஆயிரம் கனவுகளோடு டீன் என்னும் பெயர்பலகை சுமக்க காத்திருந்த என் கழுத்தில் பிணம் என்னும் பதக்கத்தை சுமந்ததற்காகவா அல்லது மார்பிள்ஸ் தரையில் தன்னிலை மறந்து தலைசரித்து கிடக்கும் என் மனைவிக்காகவா ? யாருக்காக அழப்போகிறேன்?

“என்ன பாவஞ்செஞ்சானோ அநாதைப் பிணமா போறான்.” என்று யாரோ பேசுவது கேட்டது காற்றாய் பாய்ந்து நான் அந்த வாகனத்தில் அமர்ந்து கொண்டேன். இன்னும் சற்று நேரத்தில் என் விஜியையும் இதே போல ஒரு கோணத்தில் காண பாரமில்லாத பாரமுள்ள எண்ணங்களை சுமந்தபடியே பயணிக்கிறேன்.

இப்போதும் என் கண்களில் ஷீலா தெரிகிறாள். “வலிக்குது டாக்டர்” என்ற அவளின் முனகல் ஒலி தெளிவாய் கேட்கிறது உங்களுக்கு கேட்கிறதா? என் மன்னிப்பின் ஒலி.


 

எழுதியவர்

லதா சரவணன்
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
எஸ். சுரேஷ்பாபு
எஸ். சுரேஷ்பாபு
2 years ago

சிறப்பானதொரு கதை. மனசாட்சி இல்லாத மருத்துவர்களுக்கு சவுக்கடி. வாழ்த்துகள்

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x