வெயிலடித்தது. அதன்மேல் மழை பெய்தது. இரண்டு நாட்களாக மூடிக் கிடந்த வானம் இன்றுதான் வெளிச்சம் காட்டியது. சூரியன் மெல்லத் தலை தூக்கிய நிமிடத்தில் மறுபடி மழை கொட்ட ஆரம்பித்தது.
‘ மான்சூன் ஷவர்…’
இந்த வார்த்தை பவித்ராவுக்கு ரொம்பப் பிடிக்கும். இன்னும் சில ஆங்கில வார்த்தைகளும்.
ப்ளஷ்( Blush )…….
சட்டென ஞாபகத்துக்கு வந்தது.
நிறையத் தடவைகள் குளிக்கும்போது அந்த வார்த்தையைத் திரும்ப, திரும்பச் சொல்லிப் பார்த்தபடியே குளித்திருக்கிறாள். கடைசியில் ஷ் நீளும்.
” கொல்லையில துணி காயப் போட்டிருக்கேன். போய் எடுத்துடு பவித்ரா….”
பவித்ரா நுனி விரல்களால் ஓடினாள். ஊசித்தட்டான் உடலளவு தூறல்கள். மல்லிகாவின் புடவையில் இளமஞ்சள் பூக்கள் தூறலுக்குப் பளிச்சிட்டன. எடுத்து வந்து உள்கொடியில் காயவைத்தாள்.
மான்சூன் ஷவர்….மெத்தையில் ஈரம்….
” ஸாரிம்மா…..”
ஸ்ருதி மெதுவாய் சொன்னாள்.
” எட்டு வயசாவுது. பாத்ரூம் வந்தா எழுப்பணும்னு தோணல…ராஸ்கல்…” பவித்ரா சட்டென நாக்கை அடக்கினாள்.
” ஒக்காந்து போறமாதிரியே இருக்கும்மா. நம்ம பாத்ரூம்ல போவோம்ல. அந்த மாதிரி….. நேத்திக்கு ஆனா போவேயில்ல…”
விரலை நீட்டி, கண்கள் உருள, தலையாட்டி, ஆட்டி நியாயம் பேசினாள். பவித்ரா வெறிக்கப் பார்த்தாள்.
” யூரின் வந்தா அம்மாவ எழுப்பணும்னு ஸ்ட்ராங்கா மனசுல நெனச்சிக்கிட்டேப் படுக்கணும். நீ நெனைக்கல. அதான் மூத்தா அடிச்சிவுட்டுட்ட….”
முதுகு தேய்த்துக்கொண்டே சொன்னாள். உடம்பில் மூத்திர வாடை அடித்தது.
” இல்லம்மா. நெனச்சிக்கிட்டேதான் படுத்தேன். காட் பிராமிஸ்…” சொல்லிவிட்டு நீர்க்குமிழிகளை உன்னிக்க தொடங்கினாள்.
” ஸ்ருதியும், நானும் பாயில படுத்துக்கறோம். ” ராகவன், பவித்ராவைப் பாய் போட விடவில்லை.
” கொழந்தைக்குப் பாய் உறுத்தும். மெத்த வீணாப்போனா வேற வாங்கிக்கலாம். ”
அவனுக்கு ஸ்ருதியுடன் விளையாடிக் களைத்து உறங்கவேண்டும். பெரிய ரப்பர்ஷீட் வாங்கி விரித்தும் பலனில்லை. காலையில் பார்த்தால் ஸ்ருதி ஷீட்டை விட்டு நகர்ந்து படுத்துக்கிடப்பாள்.
மழை ஓய்ந்திருந்தது. வானம் அடர்த்தியான இருளைப் பூசிக் கொண்டிருந்தது. மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவித்திருந்தார்கள். ஸ்ருதி டிவியின் முன், பங்கார மாயனே ஸ்ரீவள்ளி …… என்று காலை இழுத்து, இழுத்து ஆடிக் கொண்டிருந்தாள். மெத்தையில் அவள் குட்டி, குட்டி நாடுகளின் வரைபடங்களை வரைந்திருந்ததைப் பார்த்த பவித்ரா திரும்பி நின்று செருமினாள்.
சித்தப்பா வீட்டு விசேஷத்துக்குப் போனபோது இரவு வெகுநேரம் உறக்கம் கொள்ளவேயில்லை. தூக்கத்துக்கிடையிலான விழிப்பு நிலையிலும் கை அனிச்சையாக ஸ்ருதியின் மிடியைத் தடவிற்று. இரண்டுமுறை எழுப்பி விட்டும் பாய் நனைந்திருந்தது.
காலை நேரத்து சலசலப்பிலும் பவித்ரா எழாமல் படுத்துக் கிடந்தாள். உறவுகள் அங்குமிங்கும் நடமாட மனதின் துரிதத்துக்கு உடல் அசைய வில்லை. பாயைச் சுருட்டி எடுத்துப்போய் கொல்லையில் போட்டு அலச வேண்டும். திட்டித் தொலைக்க வேணும் போலிருந்தது.
” இன்னமுமா போறா…?”
ஒரு கேள்வி வந்து விழும் பட்சத்தில்,
” ஆமா அதுக்கென்ன இப்ப…” என்று உள்ளதிரும் மனசு. விட்டுக்கொடுத்து விட முடியாத தவிப்பு யாருமற்ற தருணத்தில் தொடை பிடித்துத் திருக வைக்கும்.
மான்சூன் ஷவர் என்ற வார்த்தையே ஸ்ருதியால்தான் பவித்ராவுக்குத் தெரியும். தமிழ் வழிக்கல்வி பயின்றவள் அவள். பருவமழை என்று படித்தவளுக்கு ஸ்ருதி மான்சூன் ஷவரை அறிமுகப்படுத்தி வைத்தாள். அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து பவித்ரா நிறையக் கற்றுக்கொண்டாள்.
” வருண் ரெண்டு வயசுவரைக்கும் போனான். அப்புறம் தன்னால நின்னுடுச்சு. இப்பதான் பெரியவனாயிட்டானே. அவனை விடுங்க. சின்னவனே போறதில்ல…”
பவித்ரா கைகளைக் கட்டிக்கொண்டாள். கொஞ்சம் குளிர்வது போலிருந்தது. கால்கள் வலுவிழந்தது போலத் துவண்டிருந்தன. மழை திரும்பவும் வருமோ என்று யோசித்தாள். சிலுசிலுத்த காற்றில் ஈரப்பதம் அதிகமிருந்ததில் துப்பட்டாவை நெஞ்சிலிருந்து வயிற்றுக்குக் கீழே இழுத்து விட்டுக்கொண்டாள். வேகமாக ஒரு சிறுவன் முதுகில் பையுடன் ஓடிவர, அவசரமாக, ” பாத்து போடா…” என்று வழிவிட்டு ஒதுங்கினாள்.
” ஓகேப்பா….டயமாச்சு. ஆபீசுக்குப் போகணும்.”
ஆளாளுக்குப் பிரிந்தனர். பிள்ளைகளைக் கொண்டுவந்து பள்ளியில் விட்டபிறகு பத்து நிமிடங்கள் அம்மாக்களுக்கு ஆசுவாசப்பட தேவைப்பட்டன. பவித்ரா வண்டியினருகில் வந்தாள். புங்க மரத்தின் இலைநீர் சொட்டி சீட் ஈரமாகியிருந்தது. ஈரத்தைக் கண்டாலே அவ்வளவு வெறுப்பாயிருந்தது. உதடு பிதுங்கி அழுகை வந்தது.
டெர்ம் ஒன்றில் ஸ்ருதி முதல் மதிப்பெண் வாங்கியிருந்தாள்.
” ராகவன் எப்பவும் ஃபர்ஸ்ட் மார்க் தான் வாங்குவான். அப்பெல்லாம் ப்ரேயர்ல முன்னாடி நிக்க வச்சு பாட்ஜ் குத்தி விடுவாங்க. இப்ப அந்தமாதிரியெல்லாம் செய்யறதில்லையே…”
மல்லிகா கண்ணாடி போட்டு ரிப்போர்ட் கார்டை ஆராய்ந்தாள்.
பவித்ராவுக்குத் தரிக்கவில்லை. கார்டை ஃபோட்டோ எடுத்து வாட்ஸாப்பில் அம்மாவுக்கு அனுப்பினாள். ஸ்ருதி ஷிம்மியோடு லிட்டில் ஹார்ட்ஸை கொறித்துக் கொண்டிருந்தாள். லிட்டில் ஹார்ட்ஸ் அவளுக்குப் பிடிக்கும். குட்டி, குட்டி ஹார்ட்ஸ் என்று உள்ளங்கைக்குள் வைத்துக் கொஞ்சுவாள்.
” ரிப்போர்ட் கார்டை சாமிகிட்ட வச்சிட்டு வா ஸ்ருதி.”
மல்லிகா ஞாபகம் வந்தது போல் விரட்ட, ஸ்ருதி கையை ஷிம்மியில் துடைத்துக்கொண்டு சாமியறைக்கு ஓடினாள். பிள்ளையார் படத்தின் முன் கார்டை வைத்துவிட்டுக் கைகூப்பி,
” பாத்ரூம் வந்தா அம்மாவ எழுப்பணும்…ச்ச….”
முகத்தைச் சுளித்துக்கொண்டாள்.பின்,
” ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிக் குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் சாமி…”விழுந்து கும்பிட்டாள்.
ராகவன் பெண்ணைக் கொஞ்சித் தீர்த்தான்.
” அந்த ஃபர்ஸ்ட் ரேங்க் என்னால கெடைச்சதாக்கும். நான் மட்டும் ஒழுங்கா சொல்லிக் குடுக்கலைன்னா அவ எங்கேயிருந்து ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கறது. ” பவித்ரா அலட்டிக்கொண்டாள்.
” சரிதான். இப்ப அவளைக் கொஞ்சிக்கறேன். லைட்ட அணைச்சதுக்கப்புறம் உன்னை….”
அவனை முடிக்கவிடாமல் முறைத்து அடக்கினாள். மறுநாள் தலைக்கு நீர்விட்டுக்கொள்ள நேரமே எழுந்தவள் மெத்தையை தடவி அப்படியே அமர்ந்திருந்தாள்.
அபூர்வமாய் ஸ்ருதி பெட்வெட் பண்ணாத நாட்களில் பவித்ரா சூரியகாந்திப்பூ போல நடமாடிக் கொண்டிருப்பாள்.
” இன்னிக்கு போலேல்ல?”
ஸ்ருதி கேட்டுவிட்டு கண்கள் சிமிட்டும்.
” செல்லக் கண்ணம்மா….” அழுத்தி முத்தம் கொடுப்பாள்.
காம்பவுண்டு சுவரோரம் பூத்திருக்கும் அடுக்கு நந்தியாவட்டைப் பூக்களைப் ப்ளக் சொல்லி பறித்துக் கூடையில் போடுவாள். ஒவ்வொரு பூவுக்கும் ஒரு ஒரு ப்ளக்……..
” ஒசரத்துல இருக்குத்த. இவ்ளோதான் பறிக்க முடிஞ்சுது” என்ற சாக்குபோக்கு அன்று இருக்காது. கூடை நிறையும். நுரைத்துத் ததும்பும் கறந்தபால் போல பூக்கள். மனமும் அப்படியே நுரைத்துத் ததும்பி வழியும். வழிந்து ஹம்மிங்குங்களாக காற்றிலலையும்.
” இன்னிக்கு மனசைக் கொட்டி சமைச்சிட்டியா….?”
மல்லிகாவின் கேள்விக்கு உடல் குலுங்கி சிரிப்புதிரும்.
யாருமற்ற தருணத்தில் அறைக்கு வந்து உடல் இறுக்கி விரல்களை மடக்கி கண்கள் இறுக மூடிக்கொள்வாள்.
” இது இப்படியே நீடிக்கணும்…” அழுத்தமாக சொல்லி மெல்லத் தளர்வாள்.
” இதுக்கெல்லாம் யாராவது வருத்தப்படுவாங்களா….அதுவா தன்னால நின்னுடும் பாரு…”
சின்னமாமியார் சொன்னபோது அவள் சரி என்பதுபோல் தலையாட்டினாள்.
” ஒம்மச்சினன் பத்தாவது படிக்கிறவரைக்கும் போனான். இப்ப என்ன கெட்டாப் போயிட்டான். ரெண்டு புள்ளப் பெத்து நல்லா தெடமாதான் இருக்கான்.
அவள் கையை ஆட்டி சொன்னபோது வாஞ்சையுடன் பற்றிக்கொள்ளத் தோன்றியது. அந்தக் கைவழி கிடைக்கும் ஆறுதல் குளிரின் மீது வழியும் இளவெயில் போல அவ்வளவு இதமாயிருந்தது.
உப்பு அடைத்த ஹேண்ட்ஷவரிலிருந்து விழும் நீர் ஊசிபோல் குத்தும். கால் கழுவ முடியாது. ஸ்ருதி, வலிக்குதும்மா என்று கத்துவாள். ஒருமுறை சுகன்யா வந்தவள் ஷவரைப் பீய்ச்சி அலறிவிட்டாள்.
” அடிப்பாவி….சுரீர்ன்னு வலிக்குதுடி. இதுல நாலுதடவை கால் கழுவினா தெர தன்னால கிழிஞ்சிடும். மொதல்ல சரி பண்ணித்தொலைடி. ”
திருமணப்பத்திரிகை கொடுக்க வந்தவள் சொல்லிவிட்டுப் போனது ஞாபகத்துக்கு வந்தது. அதன்பிறகு பல தடவை ஷவரை சுத்தம் செய்தாயிற்று. ஷவர் பனித்துருவல்களாய் நீரை உதிர்த்தது. உதிர்ந்த நீர் ஸ்ருதியின் உள்ளாடையை நனைத்து மூத்திரவாடையுடன் ஓடியது. பவித்ரா ஒருநொடி கண்களை மூடிக்கொண்டாள்.
” நல்லதே நடக்கும், நல்லதே நடக்கும், நல்லதே நடக்கும் ” மூன்று முறை முணுமுணுத்தாள்.
” சீக்கிரமே சரியாயிடும்…….” சற்று உரக்க சொன்னபோது அலைபேசி ஒலித்தது. சட்டென உள்ளே ஒரு துளிர் முளைவிட்டது. மனம் உப்பு நீக்கிய ஷவர் போல இலகுவாகிப்போனது.
ஒருநொடி ஏறும், ஒருநொடி சடக்கென்று சரிந்துவிடும். அதை ஒரே தன்மையில் இருத்தி வைத்துக்கொள்ள எவ்வளவு பாடு.
ஸ்ருதியின் இரட்டை ஜடையில் மல்லிகைச்சரம் பாலம் அமைத்திருந்தது. வாசல் கதவையொட்டிய பந்தலில் இருபது குண்டு மல்லிகைகள் பூத்திருந்தன. ஸ்ருதியின் இத்துனூண்டு தலைக்கு அது போதுமானதாயிருந்தது. நெருக்கத் தொடுக்காமல் மல்லிகா சற்று தள்ளி, தள்ளித் தொடுத்திருந்தாள்.
” பச்சநூல் தெரியுது பாட்டி…”
” அதனாலென்ன…..பச்ச, வெள்ள காம்பினேஷன் ஜோராயிருக்குடி குட்டி…” பூ நழுவிவிடாமல் கவனமாக வைத்துவிட்டாள்.
” தலகாணி பூரா பூ வாசம்டா…” அவளை கிச்சு, கிச்சு மூட்டி விளையாடிய ராகவன் மூச்சை உள்ளிழுத்தபடியே சொன்னான்.
” ஆமா பெருமதான்.” பவித்ரா கோபத்தோடு நகர்ந்து படுத்துக்கொண்டாள்.
” இப்ப ஒனக்கு என்னதான் பிரச்சனை…அவ யூரின் போறதா, மெத்த வீணாப்போறதா…..? ”
பவித்ராவுக்கு அழுகை வந்தது. கையை நெற்றிமேல் வைத்து கண்களை இறுக மூடிக்கொண்டாள். கண்ணோரத்திலிருந்து காதுவரை கோடு வழிந்தது. அப்பாவும், மகளும் கதை பேச ஆரம்பித்தனர்.
” லைட்ட அணைங்க. எனக்குத் தூக்கம் வருது.” சிறிதுநேரம் பொறுத்துப் பார்த்தவள் கரகரத்தாள்.
” அம்மாவுக்குத் தூங்கணுமாம். மீதியை நாளைக்கு சொல்றேன்.”
” சாமி கும்பிட்டியா..?” ஸ்ருதி வெடுக்கென எழுந்தாள்.
” ஐயோ…மறந்துட்டேன், இல்ல மறக்கல. கத கேட்டுட்டு கும்பிடலாம்னு நெனச்சேன். ”
அவசரமாய் கட்டிலை விட்டிறங்கியவள் நின்று சொல்லிவிட்டுப் போனாள்.
” வேற மெத்த வாங்கிடலாமா…?”
” எதுக்கு….அதையும் பாழாக்கவா….” கடின வார்த்தைகள். குரல் மெலிந்து வந்தது.
பள்ளிக்குழந்தைகளுக்கு மத்தியில் ஸ்ருதியைப் பார்க்கும்போது ஏனோ ஆதரவற்ற குழந்தையைக் காண்பதையொத்த உணர்வு உண்டாகி தொண்டை அடைத்தது. ஒன்றைப் பிரதானப்படுத்தி மற்றதை மங்கலாக்கும் புகைப்படம் போல துல்லியமானதொரு கவலையை மனம் ஆழப்பதிந்து வைத்துக்கொண்டு உழன்றது.
” எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் இருக்காரு. அவர்கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தர்றேன். போய் காட்டறீங்களா….?”
தருண் அம்மாவுக்கு எப்படித்தான் தெரியுமோ….
” இல்ல…அவ்ளோ சீரியஸ் இல்லப்பா. இது அந்தளவு பெரிய ப்ராபளமா என்ன. என் மச்சினர் அப்படித்தான் போவாராம். தன்னால நின்னுடுச்சாம். நோ வொரி…”
அகல சிரித்தாள். உடனே ஹெல்மெட்டை மாட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. சாலையில் வண்டியைச் சீராக செலுத்தினாள். பக்கவாட்டில் கடந்த ஆட்டோவில் ஒரு பெண் மடியில் குழந்தையை அமர்த்தியிருந்தாள். மூன்று வயதிருக்கும். அவன் நிச்சயம் படுக்கையில் சிறுநீர் கழிக்கமாட்டான் என்று நினைத்துக்கொண்டாள். நினைத்தமாத்திரத்தில் கண்களைச் சிமிட்டிக்கொண்டாள்.
ஸ்ருதி பாட்டுப்பாடியபடியே வந்தது.
” ஹலமித்தி ஹப்பி போ…ஹலமித்தி வந்தாளே….”
தடித்த வெயிலாயில்லை. மெல்லிய சரிகையையொத்த வெயில். செம்மஞ்சள் நிறத்தில் விரிந்து கிடந்த வெயிலைப் பார்த்த மாத்திரத்தில் வைப்ரன்ட் ( vibrant) கலர்ஸ் என்று ஸ்ருதி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
” வைப்ரன்ட்….”
பவித்ரா வாய்க்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டாள். அந்த வார்த்தை புத்துணர்ச்சி தருவதுபோல உணர்வு உண்டாயிற்று. வண்டியில் எங்காவது செல்லும்போது சுவரொட்டிகளிலோ, ஆடைகளிலோ பளிச்சிடும் நிறங்களைக் கண்டால் வைப்ரன்ட் என்று ஹெல்மெட்டுக்குள் உரக்க சொல்லிப் பார்த்து சந்தோஷப்பட்டாள்.
ராகவன் வெளியூர் சென்றிருந்தபோது மெத்தைக்கு அழகான கலம்காரி விரிப்பு வாங்கி வந்திருந்தான். அதை விரிக்க பவித்ராவுக்கு மனமில்லை.
” உள்ள வச்சு பூஜைப் போடப்போறியா…..?”
ராகவன் புருவங்கள் நெரியக் கேட்டபிறகே வேறு வழியில்லாமல் அரைமனதோடு எடுத்து விரித்துவிட்டாள். ஆரஞ்சு நிற விரிப்பில் விதவிதமான பூக்கள் கொடியில் மலர்ந்திருந்தன. நடுநடுவே உள்ளங்கையளவு பச்சைநிற மாங்காய்கள். உள்ளே சிறுசிறு நுணுக்கமான வளைவுகளும், புள்ளிகளும். நிறங்களைச் சிதறவிட்டது போல விரிப்பு மனதை மயக்கிற்று.
பவித்ரா விரிப்பைத் தடவிப் பார்த்தாள். அப்போதுதான் போயிருப்பாள் போலும். ஜன்னல் வெளிச்சத்தில் ஆரஞ்சு நிறம் மினுங்கிற்று.
” வைப்ரன்ட்…”
பவித்ரா கண்களை சிமிட்டிக்கொண்டாள்.
எழுதியவர்
- திருவாரூர் சொந்த ஊர். தற்போது திருச்சியில் வசிக்கிறார். பல்வேறு இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும், வணிக இதழ்களிலும் கிருத்திகாவின் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன.
இதுவரை.
- கதைகள் சிறப்பிதழ் - 20221 August 2022ஈரம்
- சிறுகதை17 July 2021கூடடைதல்
தாய்மையின் தவிப்புகளையும், மனப் போராட்டங்களையும் நுணுக்கமான வார்த்தைச் செறிவின் மூலம் வெளிப்படுத்தியது. ஆசிரியரின் சிறப்பு