(1)
அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறேன். சமீப நாட்களாக அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பி விடுகிறான். வழமையான நேரத்திற்கு திரும்பி வருவதும் கிடையாது. ஏதோ ஒன்று தவறாகப் படுகிறது. இது பற்றி நேரடியாகக் கேட்டுவிட மனம் துடித்தாலும், அத்தனை சுலபமாக வாயைத் திறக்க முடிவதில்லை. சரியான தருணம் வரும் மட்டும் பொறுத்திருக்கும் படி எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எங்களைப் போன்று ஆண்களுக்கு பிறழ் உறவைத் திறம்பட மறைக்கத் தெரிவதில்லை. எதாவது குளறுபடிகள் செய்து மாட்டிக்கொள்கிறார்கள். மனதில் எங்கோ ஒரு மூலையில் அவனைப் பற்றிய விம்பம் இன்னும் குலையாமல் இருக்கிறது. அவனின் நடத்தைக்கு பின்னால் என்னிடம் சொல்ல முடியாத பிறக்காரணங்கள் எதுவுமிருக்க கூடும். நான் சற்றுப் பொறுத்திருக்க வேண்டும். அவனை முழுதாக புரிந்துக்கொண்டவள் நான், மறந்தும் அவன் எனக்குத் துரோகம் இழைக்க மாட்டான். “அவன் நல்லவன் தான், ஆனால் மனிதர்கள் இலகுவாகத் தடம் புரளக் கூடியவர்கள். நாங்கள் அதற்கான நியாத்தை கற்பித்து அவர்களைக் குழப்பி விடுவோம்” என்று மனது என்னை எச்சரித்தது. ஆனால் பொறுத்திரு அவசரப்பட்டு குட்டையைக் குழப்பி விடாதே என்று அதே மனம் என்னைத் தடுக்கவும் செய்தது. இத்தனை விசாரணைகள், புலனாய்வுகள் எல்லாம் அவன் என் கண்களைப் பார்த்து பேசும் பொழுது எங்கோ மயமாகிவிடும். அவன் என்னை ஏமாற்றவில்லை என்று முழுதாக நம்பத் தொடங்கி விடுகிறேன். என் மனதில் உள்ள சலனத்தை அவன் அறியமாட்டான்.
இதைத்தான் மேலே சொன்னேன். எங்களால் எதையும் திறம்பட மறைக்க முடியும். உலக அரசியலையே மாற்றியமைத்த பெண் உளவாளிகள், இன்றும் அவர்களின் கணவர்களுக்குக் கூடத் தெரியாமல் ரகசியமாகவே உள்ளனர்.
அன்று பின்னிரவில் மெதுவாக கதவைத் திறந்துக்கொண்டு அறையினுள் நுழைந்தவன். பூனை போலப் பவ்வியமாக சிறு அதிர்வைக் கூட எழுப்பாமல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து என்னை நெருங்கிக் கொண்டிருந்தான். என் அருகில் வந்தவுடன், தூங்கி விட்டேனா, இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். பின்பு என் நித்திரை கலையாமல் கலைந்து கிடந்த நெற்றி முடியைச் சரி செய்தான். அவன் சூடான மூச்சுக் காற்று என் முகத்தை ஸ்பரிக்கத் துவங்கியது. பிறகு நெற்றியில் உதடுகளைப் பதித்து மென்மையான முத்தம். அந்த நெருக்கம் எனக்கும் தேவையாக இருந்தது. அவனை இழுத்து மார்புடன் சேர்த்து கட்டியணைத்துக் கொள்ளவேண்டும் என்று எழுந்த உந்துதலை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல பசாங்கு செய்து கொண்டிருந்தேன். அன்பின் உச்சத்தில் பூனையின் உடலில் ஒரு மோட்டார் இயந்திரம் இயங்கத் தொடங்கும், அந்த சத்தத்தை நீங்கள் கேட்டதுண்டா?
“ட்ட்ட்ட்ட்ட்ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..….,” என்று இடைவிடாது ஒலிக்குமே, அது போன்ற ஒர் ஓசையைக் கேட்டேன்.
ஒரு சமயம் என் பக்கத்திலும், சில வினாடிகளில் அறையின் எதிர்எதிர் மூலைகளில் இருந்துமென மாறிமாறி என் செவியை வந்தடைந்து இம்சித்தபடி இருந்தது. கண்களைத் திறந்து பார்க்க வேண்டும் என்று எனக்குள் எழுந்த பேராவலைக் கட்டுப்படுத்திக் கொண்டேனா, இல்லை என்னால் விழிகளை திறக்க முடியவில்லையா? என்று சரியாக சொல்லத் தெரியவில்லை. குழப்பமாக இருக்கிறது.
(2)
எப்பொழுது உறங்கினேன் என்று நினைவில்லை. காற்றில் கலந்து முழு இடத்தையும் நிரப்பியிருந்த சூடான கிரீன் டீயின் மணம் நாசித் துவாரங்களின் ஊடாக உள் நுழைந்து என்னைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது. வசந்த காலத்தின் ஆரம்ப நாட்கள். கண்களைத் திறக்க முடியாத அளவுக்கு சூரியன் என் அறையை ஆக்கிரமித்திருந்தான். இன்று வழமைக்கு மாறாக அதிக நேரம் உறங்கிவிட்டேன்.நேற்று இரவில் உணர்ந்த பூனையின் அருகாமை கனவா, இல்லை நிஜமா? என்ற குழப்பத்துடன் அன்றைய பொழுது விடிந்தது. படுக்கையில் புரண்டபடி உடல் கிடக்க…, மனம் எல்லாக் கோணங்களிலும் எண்ணங்களை சிதறடித்துக் கொண்டிருந்து.மெதுவாக எழுந்து கொஞ்சம் கிரீன் டீயை, சீனத்து மார்பில் கப்பில் ஊற்றி, அதன் மோசமான சுவையை சுவைத்துக் குடித்துக் கொண்டே யன்னல் அருகில் சென்றேன். அன்று ஞாயிறு விடுமுறை நாள், அவன் காலை நேர ஒட்டத்திற்கு தயாரான நிலையில் தெருவை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். நான் அறையில் இருந்தபடி “ஐ லவ் யூ ஹனி….! சுவையான தேநீருக்கு நன்றி” என்று ஒரு பொய்யைச் சொல்லி அந்த நாளை ஆரம்பித்தேன். என் குரலைக் கேட்டுத் திருப்பிப் பார்த்தவன், என்னை நோக்கி ஒரு பறக்கும் முத்தத்தை பறக்கவிட்டு, வீட்டு வளவைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தான். சன் கிளாஸ்,
இறுக்கமான கீழ் உடையில் குறியும், புட்டமும் எதிர்எதிர் பக்கங்களில் புடைத்து தள்ளிக் கொண்டிந்தது. இடுப்புக்கு மேல், தோலுடன் ஒட்டியது போன்று இறுக்கமான மேலாடை. பாதத்தில் விலை உயர்ந்த ஜோடி சப்பாத்து.
நாங்கள் மார்பையும், தொ(இ)டையையும் தனித்து காட்டுவது போல, ஆண்கள் இப்படித்தான் கவர்ச்சி காட்டுகிறார்கள் என்பது என் அனுமானம். இதில் மூக்கை நுழைக்க முடியாது, ஜனநாயக தேசத்தில் சம உரிமை முக்கியம். பாதையில் எத்தனை பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறானோ என்று நினைத்துக் கொண்டேன். என்னதான் சம உரிமை, தாராளவாதம் எல்லாம் பேசினாலும் கொஞ்சம் பெண் மனம் புகையச் செய்தது என்பதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். மெதுவாக என் பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருந்தான்.
(3)
கட்டில் பக்கம் சென்று படுக்கையை ஒழுங்குப்படுத்த முனைந்தேன். அவன் படுத்திருந்த பக்கம் உரோமம் போன்று ஏதோ மெல்லிய நீண்ட பல நிறத்திலான வஸ்து உதிர்ந்து கிடப்பதைக் கண்டேன்.
மிக அருகில் சென்று உன்னிப்பாக ஆராய்ந்தேன். அவை பூனை மயிர்கள். எங்கள் வீட்டில் பூனைகள் கிடையாது. நானும் அவனும் மட்டும் தூங்கும் கட்டிலில் இவை எப்படி வந்தது. ஒரு கணம் இரவு நடந்தவை எல்லாம் காட்சிக்கோர்வையாக நினைவில் விரிந்தது. என் சந்தேகம் மேலும் வலுப்பட்டது. என்னை குழப்பி என் கவனத்தை சிதறடிக்கப் பார்க்கிறான். இந்த பூனை மயிர்களை அவன் தான் இங்கு கொண்டு வந்து பரப்பியிருக்க வேண்டும். இதைப் பற்றிய பேச்சை நான் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறான். அவன் நோக்கம் என்னைக் குழப்புகிறது. இன்றே இந்த கேள்விக்கு விடையை கண்டுபிடித்து ஆகவேண்டும், என்று நினைத்துக் கொண்டேன்.
பொருத்தமான உடையை மாற்றிக் கொண்டிருக்க எல்லாம் அவகாசமில்லை. கிடைத்ததை மாட்டிக்கொண்டு, வீட்டின் பின் புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை எடுத்து மிதித்து அவனை விரட்டிச் சென்றேன்.
அதிகத் தூரம் சென்றிருக்க மாட்டான். ஒரு சில நிமிடங்களில் தொலைவில் ஓடிக் கொண்டிருந்தவனைக் கண்டு வேகத்தைக் குறைத்தேன்.
அவன் என்னைக் கண்டு சுதாகரித்து விடக்கூடாது. மிக கவனமாக இடைவெளி விட்டு பின் தொடர்ந்தேன். அவன் ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து, பிரதான பாதையிலிருந்து வலது பக்கம் பிரிந்த கிளை பாதையினுள் நுழைந்தான். நானும் வேகமாகச் சென்று சைக்கிளை வளைவில் உள்ள கட்டிடத்தில் மறைவாகச் சாய்த்து விட்டு, மெதுவாகப் பின் தொடர்ந்தேன். எதிரே சற்றுத் தூரத்தில் ஒரு முட்டுச் சந்து, தொடராகச் சில வீடுகள்.
அவன் சுற்றும், முற்றும் நோட்டம் விட்டப்படியே எச்சரிக்கையாக ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தான். தன்னை யாரும் கவனித்து விடக்கூடாது என்பதில் மிகவும் அவதானமாக இருந்தான்.
பாதை முடிவில் சில ஆளுயர பிளாஷ்டிக் குப்பைத் தொட்டிகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்து வலது பக்கமாகச் சிறு பாதை பிரிந்து சென்றது. இடது பக்கம் கைவிடப்பட்ட பாழடைந்த குடியிருப்பு. இவன் குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் சென்றதும், திடீர் என்று மறைவிலிருந்து வெளிப்பட்ட ஒரு வெள்ளை நிறப் பெண் பூனை “மியாவ்”, “மியாவ்” என்றுக் கத்திக்கொண்டு அவன் கால்களை உரசியபடி சுற்றி வந்தது. வாஞ்சையுடன் அதனைப் பார்த்தான். குனிந்து தடவிக் கொடுத்தான். பூனை இப்பொழுது சற்று சத்தமாக அவன் முகத்தை பார்த்து, கத்தியபடி முன்னால் செல்ல, இவன் ஏதோ மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல அதன் பின்னால் சென்றான்.
எனக்கு அங்கு நிகழ்வதை பார்க்கும் போது விசித்திரமாக இருந்தது!. இருவரும் குப்பை தொட்டியை ஒட்டி நெருங்கியிருந்த சுவற்றுக்கு பின்னால் சென்று என் பார்வையில் இருந்து முழுதாக மறைத்தனர். அப்படியே செல்ல வேறு வழிகள் எதுவும் கிடையாது. திரும்பிச் செல்ல வேண்டும் என்றால் என்னைக் கடந்து தான் போக வேண்டும். அந்த நம்பிக்கையில் அவன் வரும் மட்டும் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் மறைவில் இருந்து வெள்ளை நிறப் பூனையுடன், கருமையான கொழுத்த ஆண் பூனை ஒன்றும் வெளிப்பட்டது. வெருண்டு ஸ்தம்பித்து போனேன்!. இரண்டும் வாலை உயர்த்திக் கொண்டு ஒய்யாரமாக நடந்து வந்தன…! கருத்த பூனையின் கழுத்தில் மற்றையது தன் தலையை மென்மையா உரசிக் கொண்டப்படியே ஸ்பரித்துக் கொண்டது. சில நிமிடங்கள் கடந்தும் அவனைக் காணவில்லை. குழப்பிப் போனேன். இரு பூனைகளும் எகிறிப் பாய்ந்து குப்பை தொட்டிக்குள் இறங்கி காலை உணவைத் தேடத் துவங்கின. ஓசை எழுப்பாமல் மெதுவாகப் பதுங்கிச் சென்று மறைவில் பார்த்தேன், அங்கும் அவனைக் காணவில்லை. எனக்கு பயமும், குழப்பமும் ஒருங்கே அதிகரித்தது. மேலும் அருகில் சென்று சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தும் என்னால் அவனைக் எங்கும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆறடி உயரம் எப்படி மாயமானது, ஒரு வேளை நான் பின் தொடர்வதைக் கண்டுகொண்டு என்னைக் குழப்பி அடிக்க வேண்டும் என்றே இப்படி செய்கிறானா? என்ற ஐயமும் தோன்றிற்று. நீண்ட தேடுதலுக்கு பிறகு அவனின் உடைகள் மட்டும் சுவர் ஓரத்தை அண்டிய புற்களுக்குள் குவியலாகக் கிடந்ததைக் கண்டேன். நான் அங்கு தடுமாறிக் கொண்டிருப்பதை பார்த்தும் அந்த ஜோடி பூனைகள் கண்டு கொள்ளாமல் யாரோ ஒரு முதலாளித்துவ ஏழை முகர்ந்து விட்டு வீசியிருந்த கேப்சி சிக்கனை நிதானமாக சுவைத்து தின்றுக் கொண்டிருந்தன. நான் சந்தேகித்தது சரி என்பதை உறுதிப்படுத்தும் விதமாக எல்லாம் நிகழ்ந்து விட்டிருந்தது. ‘உங்களைப் போலவே என்னாலும் இதை நம்ப முடியவில்லை’, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் வேறு. அவனிடம் இதை என்னால் கேட்கவும் முடியாது. இந்த கேள்விக்கு அவன் எப்படி பதில் சொன்னாலும் அது என்னை மேலும் குழப்பமடையச் செய்து இன்னும் சில கேள்விகளை உற்பத்தி செய்யும். இப்பொழுது என்ன செய்வது. என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
யாரோ ஒருவர் குப்பை தொட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அனாவசிய கேள்விகளைத் தவிர்க்க விரும்பி, அவரின் பார்வையில் படாமல் மறைந்து கொண்டேன். கறுப்பு பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட கழிவுகளை சில அடிகள் தூரத்தில் இருந்து கூடை பந்து விளையாடும் பாவனையில் பூனைகள் இருந்த குப்பை தொட்டியை நோக்கி வீசி எறிந்தார். மிரண்டுப் போன பூனைகள், உள்ளிருந்து அடித்து பிய்த்துக் கொண்டு எதிர் எதிர் திசையில் வெளியில் பாய்ந்து “யாருடா… அது! என்று ” f ” வார்த்தையில் திட்டுவது போல அவரை பார்த்து ஒருமித்து மியாயாயாயாவ்….! என்றன, அவர் “ஐ எம் ஸாரி காம்ரேட்ஸ் !!” என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டு நகர்ந்து சென்றார். யாரோ இடது சாரி பைத்தியம் போல.
பெண் பூனை இப்பொழுது மறைவிலிருந்த என் பக்கம் தலையை திரும்பி “உனக்கு என்னடீ வேணும்?” என்பது போல “மியாயாவ்….!” என்றது. நான் “சக்களத்தி” என்று திட்டியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டது. அந்தக் கொழுத்த ஆண் பூனையின் திருட்டு முழியை எங்கோ நன்கு பார்த்துப் பழகிய நினைவு. “ஹனி உங்களுக்கு இங்கு என்ன வேலை! ” என்று கேட்கத் தோன்றியது.
ஆனால் இன்னும் என் மனம் நம்ப மறுத்து வாயை மூடச் செய்தது. கொழுத்தப் பூனை என்னை பார்த்தப்படியே நாவினால் தன் வாயையும் முன்னங் கால்களையும் சுத்தம் செய்து கொண்டது. நான் அசையாமல் அப்படியே வேறு எங்கோ பார்ப்பது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தேன். என்னை நோக்கி சில “மியாவ்” வசவுகளை எறிந்து விட்டு அந்த பெண் பூனை, தன் துணையுடன் மீண்டும் தொட்டிக்குள் இறங்கி புதிதாக விழுந்த கழிவுப் பொதியை மும்முரமாக ஆராயத் துவங்கியது. அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. இன்றைய நாள் இன்னும் எத்தனை விசித்திரங்களை காட்டப் போகிறதோ என்று எண்ணியபடி குப்பைத் தொட்டியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தினமும் காலை ஓட்டத்திற்குப் பிறகும் ஏதோ மண்ணில் புரண்டு எழுந்து வருவது போல உடையை அசுத்தப்படுத்திக் கொண்டு அவன் வருவதன் காரணம் இன்று எனக்குப் புரிந்தது. சற்று நேரத்தில் நிறைந்த வயிறுடன் இரு பூனைகளும் வெளியில் வந்தன. இம்முறை என்னை கண்டு கொள்ளவில்லை. மெதுவாக ஒன்றரை ஒன்று உரசியபடியே கடந்து சென்றன.
எனக்குப் பொறாமையாக இருந்தது. முடிந்தால் நானும் பூனையாக மாறி இருவரையும் பிராண்டி வைத்திருப்பேன். சற்று முன்னால் செல்ல விட்டு பின் தொடர்ந்தேன். இரண்டும் ஒரு பாழடைந்த வீட்டின் பின்புறமாகச் சென்று மறைந்தன. மறைந்த புள்ளியில் நானும் நுழைந்தேன். அங்கு அவை இரண்டும் தங்கள் இரு குட்டிகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தன. நான் அவற்றைப் பின் தொடர்ந்து வந்தது, இப்பொழுது மறைவில் நின்று கவனிப்பது, எல்லாம் அவற்றுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் பதறவில்லை. அந்த கருத்த பூனை என்னை பார்த்து “அருகில் வா” என்பது போல சாந்தமான ஓசையில் “மியாவ்” என்றது. வெள்ளை பூனை நிலத்தில் முழு உடலையும் கிடத்தி சாவகாசமாக இளைப்பாறியப்படியே குட்டிகளுக்கு பால் ஊட்டிக் கொண்டு, கண்களை பாதிமூடியவண்ணம் என்னையும், அதன் துணையையும் பரிவாகப் பார்த்தது. இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை. நான் Stoic மனநிலையில் திணறிக் கொண்டிருந்தேன். நான் அவர்களின் அந்தரங்கத்தில் நுழைந்திருக்க கூடாது. என் கையிலிருந்த அவன் உடைகளை அங்கேயே வைத்து விட்டுத் திரும்பி வந்து விட்டேன்.
(4)
பணி நிமித்தமாக வெளிநாடு சென்றிருந்தவன். ஒரு வாரம் கழித்து இன்று தான் திரும்பி வருகிறான். விமான நிலையத்தில் இருந்து வீட்டை நோக்கி வரும் போதே என்னை தொலைபேசியில் அழைத்து “ஹனி, நான் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேன். இன்றிரவு டின்னெருக்கு வெளியில் போகலாம், தயாராக இரு” என்றான். அவன் இவ்வாறு வேலை விஷயமாக வெளிநாடு சென்று வருவது வாடிக்கையான நிகழ்வு என்றாலும் இன்று அவன் வருகையை வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘அதற்கு காரணம் உண்டு, பொறுத்திருங்கள்’
வீட்டை வந்தடைந்ததும், என்னை ஆதூரமாக மார்புடன் நெருக்கி இழுத்தனைத்து உதட்டில் நீண்ட முத்தமிட்டான். நானும் முத்தத்தில் சளைத்தவள் கிடையாது என்பதை அவனுக்கு நினைவூட்டினேன்.
முத்தச்சண்டை நீண்டு வளர்ந்து கடைசியில் புணர்ச்சியில் உச்சங்கண்டு நிறைவாக முடிவுற்றது. பின்பு உடைகளை மாற்றிக்கொண்டு அரை மணிநேரத்தில் தயாராகி விடுவதாக கூறியபடி , குளியல் அறையை நோக்கிச் சென்றான். நான் “அதற்கு முன்பு வா, உனக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்” என்று சொல்லி, அவன் கண்களை மறைத்து ஓர் அறைக்கு கூட்டிச் சென்றேன். சில நொடிகள் ஆச்சரியமும், எதிர்பார்ப்பும் ஒருங்கே அவன் முகத்தில் வந்து போனது. எதிர் கேள்வி கேட்காமல் உத்தரவுக்கு அடிப்பணிந்து முன் நகர்ந்து கொண்டிருந்தான். பின்பு இப்பொழுது பார் என்று கைகளை கண்களில் இருந்து மெதுவாக விலக்கினேன்.
விலை உயர்ந்த துருக்கிப் பட்டு கம்பளத்தில் கருப்பும், வெண்மையும் கலந்த இரு பூனைக் குட்டிகள் ஒன்றின் வாலை மற்றையது பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. அவன் கண்கள் நிறைந்து வழிந்தது. என் நெற்றியிலும், உதட்டிலும் முத்தமழை பொழிந்தான்.அதை நன்றி என்று மொழி பெயர்த்துக் கொண்டேன்.
நிலத்தில் குனிந்து கைகளை கால்கள் போல உருவகித்துக் கொண்டு அவற்றை நோக்கி மெதுவாக நகர்ந்து சென்றான். ஏதோவொரு பெரிய உருவம் தங்களை நோக்கி அசைந்து வருவதன் நிழலைக்கண்டு, விளையாட்டை அப்படியே நிறுத்திவிட்டு எச்சரிக்கையுடன், நிமிர்ந்து குட்டி முழிகளை எங்களில் பதியவிட்ட பூனைக் குட்டிகள், யாரோ நன்கு பரீட்சியமான ஒருவரை வரவேற்பது போல கண்களை உருட்டியப்படி கீச்சுக் குரலில் “மியாவ்…, மியாயாவ்” என்றன.
தன் கைகளை அவற்றை நோக்கி வாஞ்சையுடன் நீட்டினான்.
மெதுவாக அவனை நோக்கி முன்நகர்ந்து வந்த வெண்ணிறப் பூனைக் குட்டி, அவன் கை சுட்டு விரலை தன் சிறு கால்களால் பற்றி வளைத்துப் பிடித்து, தன் வாயில் வைத்து கடித்து விளையாடத் துவங்கியது. மற்றையது என் அருகில் வந்து கால்களைப் பின்னிக் கொண்டது. அங்கு நான் ஒருத்தி இருப்பதை மறந்து ஒருவன் பூனையாக மாறிக் கொண்டிருந்தான்.
நரேஷ்
எழுதியவர்
-
ம.நரேஷ், இளம் எழுத்தாளர். பூர்வீகம் இலங்கை. மலையகத்தில் கண்டியை வசிப்பிடமாகக் கொண்டவர். இதுவரை "மஜ்னூன்" என்னும் குறுங்கதைகள் நூலும், "கனவு திரை" என்னும் உலக சினிமாக் கட்டுரைத் தொகுப்பும், "சிறு சிறு தருணம்" என்னும் கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.
"கனலி" இலக்கிய மின்னிதழில் இவரின் குறுங்கதைகள் வெளியாகியுள்ளது.