
முன்னிரவு பேச்சு …..
அது ஒரு வயோதிக விடுதி.
சுவர்களைக் காலம் அரித்திருந்தது.
அதனின் வெடிப்புகள் பழங்காட்சிகளை அசை போட்டபடி தடுமாறிக் கொண்டிருந்தன.
ஒரு பெருங்கட்டிடம் தீப்பற்றி எரிதல் போல
கூட்டவும், குறைக்கவுமற்ற பல உடல்கள்
ராணுவச் சிறைச்சாலையின் கைதிகள் போல
நெடு நெடு வென நின்றுக் கொண்டிருந்தன
நான் அந்த உடல்களை உற்றுப் பார்த்தேன்
எந்தவிதமான மாற்றமும், ஈர்ப்பும் என்னிலில்லை.
அந்த உடல்கள்
“நாங்களெல்லாம் வரலாற்றுப் புகழ் மிக்கவர்கள்”
எனத் தூக்கிப் பிடித்துக் கொண்டதில்
அந்தரத்தில் தொங்கும் மனநிலையாகி
என் பித்து மொழியைத் துணைக்கழைத்தேன்.
அ) உடல் என்பது ஒரு கவனக்குவிப்பு
எந்நேரமும் கனிவும், இடித்தலுமான ஊறல்கிடங்கு.
மூழ்குவதும், விளிம்பைப் பற்றுவதும்
என் முடிவு.
ஆ) உடல் என்பது ஒரு குறிப்பறிதல்
பார்வை தான் அதன் முதல் பிரத்தியட்சம்.
சட்டென பார்வை இழத்தலும், கண்ணகலப் பாத்தலும்
என் தேர்வு.
இ) உடல் என்பது ஒரு கண்காணிப்பு.
தலைமை விசாரணையில் குறுங்கண் சமிக்கை
அதன் சாரப்பொருள்.
ஆயின் என்ன?
வார்த்தை சுத்திகரிப்பு நான் நிர்ணயிப்பது தான்.
ஈ) உடல் என்பது ஒரு பலிபீடம்
எந்த மந்திரத்துக்கு
நான் சமாதானமாவேனென்பது
என்னிலானது.
உ) உடல் என்பது ஒரு அழுக்கு
என் அம்மையே!
இந்தத் தோல்களின் பளபளப்பினை
எதைக் கொண்டு புறந்தள்ளினாய்
பார் அம்மையே!
இச்சதைகளைக் கட்டுவதும், தளர்த்துவதும் என் விருப்பு.
ஊ) உடல் என்பது குருதிப் பெருகும் ஒரு துளை
அது தன்னைச் சந்ததியின் தோற்றுவாய் என
என் கழுத்தைப் பிடிக்கின்றது.
அதற்கு நான் பதிலிட்டேன்
கழனியில் கனிந்த விளைச்சலாவதும்
களையாவதும்
எம்மைச் சார்ந்தது.
எ) உடல் என்பது ஒரு உக்கிரங்கொள்ளல்.
பெருந்தீயில் இடறி நிற்கும் போது
குளிர்வதும், தழலாவதும் என் மனத்தோன்றல்.
ஏ) உடல் என்பது ஒரு படையல்.
பரிசுத்தமான புசித்தலை உட்கொள்ள
நல் வயிறுகள் முண்டிக் கொள்கின்றன
இருதயமுள்ள வயிற்றினை
நான் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஐ) உடல் என்பது ஒரு உடன்படிக்கை.
அது ஆண்டாண்டுக் கால வாய்மொழி சாசுவதங்களில்
தலைச் சுற்றிக் கிடக்கின்றது
அதனிடம் சொன்னேன்
இப்பொழுது தாளில் கையெழுத்திட்டுக் கொள்ளலாம்
அதற்கு என்னுள்ளிருந்து வரும் சிறு புன்னகை என்னுள்ளானது.
ஒ) உடல் என்பது ஒரு பதட்டம்.
எப்பொழுதும் பரவி ஊடுருவும் அதனில்
சட்டென்று அமைதியாவதும், பிரார்த்தித்துக் கொள்வதும்
என் அன்பிற்கானது.
இங்கு பார் உடலே!
“உடல்கள் என்பது பெரும் வரலாறாக இருக்கலாம். அதற்கு வழிக்காட்டி கால்கள்” தானென்றேன்.
இப்பொழுது,
உடல்களைக் காணவில்லை.
தேடிப்பார்த்தேன்.
வரலாற்றுப் புகழ் தடைசெய்யப்பட்டிருப்பதாகத் தமக்கு தாமே
அறிவித்துக்கொண்டு
நகரத் தொடங்கியிருந்தன.
ஆசிரியர்
- மருத நிலம் தஞ்சையை சொந்தமாகக் கொண்டவர். பொதுவெளியில் கவிதை,சிறுகதை என இயங்கி வருகிறார். சன்னத்தூறல் இவரின் முதல் கவிதைத்தொகுப்பு.
இதுவரை.
கவிதை2023.04.24முன்னிரவு பேச்சு …..
கவிதை2022.11.26ஒரு முன்னிரவு பேச்சு
கதைகள் சிறப்பிதழ்2022.08.01பூர்ணிமா என்கிற பூஷணி
கவிதை2021.10.18அதகளத்தி
மிகவும் அருமையான பிரமிக்கவைக்கும் கவிதை, அழகே தனி,,,,
எலும்பையும் சதையையும் தோலால் மூடிய ஒரு உடம்பிற்குள் இத்தனை பரிமாற்றங்களை காண எங்கள் கண்ணம்மாவினால் மட்டுமே முடியும்.வாழ்த்துகள்.
மிகச்சிறப்பு.👌👌💐