5 December 2024
1purinima - kannammal

ன்று வீட்டின் உட்புறம் புதுப்புது முகங்கள் தென்பட்டன. திடீரென உறவினர்களின் முகமும் சேர்ந்து கொண்டன. யார் இவர்கள்? வீட்டில் இடமே இல்லை. அக்கம் பக்கத்தினரின் முகங்களும் தெரிந்தன. ஒவ்வொரு முகத்தையும் உற்று பார்க்கத் தொடங்கினாள். ஒரு உடலின் முழுமைக்கும் ஒரு முகம் பிரதானம். இன்னார் இவரென்று அடையாளம் படுத்தும் ஒரு தலை. கண், காது, மூக்கு, சேர்க்கப்ட்ட பயிற்சிப் பெற்ற பேசும் உருவச் சித்திரம். சதைக் குழம்புகளின் உணர்ச்சிக் கலவை. அந்த முகங்கள் பேசிக் கொண்டேயிருந்தன. பேசாதீங்க….. எனக் கத்தத் தோன்றியது. சிறு நூலாக மாறி வாயைக் கட்டினால் பரவால்ல. இப்பொழுது முகங்களை அறைந்து பார்க்க நினைத்ததில் கொஞ்சமாய் எச்சில் முழுங்கினேன். அம்மா, யாரைம் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு சொன்னது தலைக்குள் சம்மட்டி அடித்தது. சிறு ஓடையில் கால் பதித்து சட்டென்று தூக்கிக் கொள்ளும் சிறுமியாக மாறி செவிப்பறை சத்தத்தை மீறி முகங்களுக்கு நடுவில் சென்றேன். பெரும் பாறைகள் உடைக்கப்பட்டு சிதறிய சிறு சிறு துணுக்குகளாய் முகங்கள் அமர்ந்திருந்தன. எனக்கு எப்பவுமே சத்தம் பிடிப்பதில்லை. கூட்டத்தில் போனால் எலும்பு உடையும் அளவுக்கு அப்பாவை இறுக்கிக் கட்டிக் கொள்வேன்.

இப்பொழுது அப்பா என்ற முகம் எனக்கு வேண்டும். அப்பாவின் உடம்பு ஒரு ஊஞ்சல் பலகை போல இருக்கும். படுத்திருக்கும் போது ஏறி விளையாடுவதற்கு ஏதுவான உடம்பு அது. அப்பாவின் முகத்தில் எப்போதும் சிரிப்பு இருக்கும். அலாதியான சிரிப்பு. என்ன நடந்தா இப்ப என்ன? என எதிரில் உள்ளவங்களைக் கேட்டு சாந்தமாக்கும் முகம் அப்பாவோடது.

இப்போ இங்கு அப்பா இல்லை. இன்று, அப்பா மறைந்த பதினாறாம் நாள். அதான் இவ்வளவு முகங்கள். ஏதோ முக்கியமான நிகழ்ச்சி போல முகங்கள் தீவிர மனநிலையோடு இருப்பது தெரிந்தது. விட்டு விட்டு அழும் சிறுமகவைப் போல அம்மா அவ்வப்போது குரல் காட்டினாள். அம்மா அருகில் போய் மடியில் சாய்ந்துக் கொள்ள நினைத்து போன போது, முகங்கள், தள்ளிப்போ….. சின்ன புள்ள சடங்குப் பார்க்கக் கூடாதென்றார்கள். அம்மாவைச் சுற்றி நிறைய முகங்கள் பழுத்த வேப்பம்பழம் சிதறிக் கிடப்பது போல சிதறிக்கிடந்தன. அம்மாவின் முகம் எப்போதும் அழகாகவே தோன்றும். அந்த முகம் அழுவது மாதிறி பார்ப்பது கத்தரி கொண்டு அளவு தெரியாமல் வெட்டப்பட்ட துணி போலிருந்தது. சில முகங்களில் அம்மாவின் அழகு ஏக்கமாகத் தெரிந்தது. நிறைய முகங்கள் ஏதேதோ உச்சாடனம் போலத் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். இந்தச் சந்தடிகளை விட்டு நான் நகர வேண்டும் போலத் தோன்றியது. நான், அப்பா, அம்மா இந்த முகங்கள் அடங்கிய அமைதியான வீட்டில் இன்று ஏன் இவ்வளவு சத்தம் போடுகிறார்கள்?

எப்பொழுது தூங்கினேன் எனத் தெரியாமல் முழித்தேன்.

வீடு திருவிழா களைந்த இடம் போல இருந்தது.

ஒடிப்போய் அம்மாவின் மடியில் விழுந்தேன். இறுக்கி என்னை அணைத்ததில் அம்மாவின் உடல் நடுங்கியது.

இயல்பான வாழ்க்கைக்குள் இருவருமே திரும்பத் தயாரானோம்.

ஆனால், நாளாக நாளாக நான் பசியை உணர ஆரம்பித்தேன். சிறு நிலத்தில் விளைந்த சிறு செடியைப்பிடுங்கித் தூர எறிவது போல நல்ல உணவுக்காக வயிறு தனித்துக் கீழே விழுந்து அழுவது போலத் தோன்றியது. அம்மா அதிகமாக தண்ணியைக் குடிப்பது பார்த்தேன்.

இப்படியான ஒரு நாளில் தான், அப்பா மறைந்ததுக்குத் துக்கம் கேட்பதற்காக உயரமானவன் வீட்டிற்கு வந்தான்.

அந்த இடம் திடீரென நாம இப்படி மக்களால சூழப்படுவோமென்பதை அந்நொடி வரை அறிந்திருக்கவில்லை. நகரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்த இடம் அது. சிறிதான பனிக்கால குளிர் பூஷணியின் தொடைகளில் உட்கார்ந்தது. டவலால் மூடிக் கொண்டாள். அங்கு நிறைய தொடைகள் தெரிந்த பெண்கள் தென்பட்டனர். வெள்ளை, மாநிறம், லேசான மஞ்கள், கொஞ்சம் கறுப்பு என கலர் கலரான தொடைகள் பார்த்துச் சிரித்துக் கொண்டன. கறுப்பு நிற தொடையின் முட்டியில் நிறைய ஏதோ ஒரு லோஷன் போட்டுத் தேய்த்து கலராக காண்பிக்க மேக்கப்மேன் முயற்சித்ததில், அந்தப் பெண் உணர்ச்சியேயில்லாமல் வேடிக்கைப் பார்த்து சலித்துப் போய் முகத்தைத் திருப்பினாள். அவர்களெல்லம் தொழில்முறை நடன க்ரூப்டான்ஸர்கள். தங்களது உடல்களைக் காட்சிக்கேற்ப நாடகத்தன்மையில் மாற்றி உறுப்புகளை அசைத்து விட்டு கட் சொன்னவுடன் நிஜத் தன்மைக்கு மாறிக் கொள்ளும் உழைப்பாளர்கள்.

பூஷணி நிமிர்ந்து பார்த்தாள். கொஞ்சம் பசிப்பது போல தோன்றியது. ஆனால், எதுவும் சாப்பிட முடியாது. முக்கியமாக, தண்ணி குடிக்க முடியாது. இந்த இறுக்கமான உடை போட்டு டாய்லட் போக முடியாது என்கிற எரிச்சல் சேர்ந்தது. கேமராவினால் படம் பிடிக்கப்படும் சினிமாவில் மனித மனங்களை மட்டும் காணாமல் போகச் செய்துவிடுகின்றனர்.

லேசாகத் திரும்பினாள்.

ஹீரோயின் கையில் ஒரு ஆங்கிலப் புத்தகத்தோடு இருப்பது தெரிந்தது. ஃபிரில் வைத்த கவுன் விலகி தொடை மங்கலாகப் பளிச்சிட்டது.

இப்போது, தொடைகளுக்குள் பெரும் போட்டி யார் அழகென?

வாய்ப்பே கொடுக்காமல் பூஷணி தொடை சதம் அடித்தது.

சிரித்துக்கொண்டாள் பூஷணி.

அவள் கேமராவுக்கென படைக்கப்பட்ட நிஜ அழகி. காலத்தின் அபாயத்தில் சிக்கி இப்பொழுது க்ரூப்டான்ஸர். உண்மையும், பொய்யும் சமமாக அவளுக்குப் பல தயாரிப்பாளர்கள், சினிமா புரோக்கர்கள் பல பிரபலங்களால் உணர்த்தப்பட்டு கண்ணீராகக் குடித்து தன் வயிற்றை இட்டு நிரப்பியவள். அது ஒரு பெரும் நாற்றம். தினமும் முகர்ந்து வாழ்கிறாள். நடுத்தரவயதின் சுமை அழுத்தம் பிம்பக்காட்சிகளாய் ஓடுகிறதை எதுவும் செய்ய இயலாமையில் கூர்மையாகத் தாக்கும்.

தன்னுடைய அதீத அழகு இன்றைக்கு வரை ஹீரோயின்களுக்கு ஒத்துக் கொள்ள முடியாதது. தெரிந்த விஷயம் தான். அதனாலயே, தன் முகம் பிரபலம் ஆவதை யாரும் விரும்புவதில்லை. நேரில், பார்க்கும் அந்த முகத்தில் அன்பு தென்படும். பின்னால், பார்த்தால் மனசுக்குள்ள ஒரு அரக்கத்தனம் கால் போட்ட படி எகத்தாளமாக உட்கார்ந்திருக்கும். மனித மனம் என்பது அவ்வளவு தான்.

கண்கள் லேசாக மூடினாள் பூஷணி.

என்னால் ஸ்கூல் போகாம இருக்க முடியாது. அம்மாவிடம் குரலை உயர்த்தினாள். சிறு கூடம் அது. உட்காருவதற்கு ரெண்டு நாற்காலி இருந்தது. இந்தக் களேபரக் கூத்துக்களைப் பார்த்தவாறு அப்பா கறுப்பு, வெள்ளையாய் மாட்டப்பட்டிருந்தார். பழைய டேப்ரெக்கர்டரில் கேஸட் இழுத்து வெளிவராமல் இருந்ததில் கையை விட்டுத் தன் கோபத்தைக் காட்டினாள் பூர்ணிமா.

“இதில், நிறைய பலனிருக்கு பூர்ணிமா……. “உயரமானவன் வாய் திறந்தான்.

அம்மா, அடுக்களைக்குக் காபி போட போனவள் வெல்லத்தை உடைத்துப் போட்டு கொதிக்க வைத்தாள். மெதுவாக கூடத்தில் வந்து கீழே உட்கார்ந்துக் கொண்டாள். சுவரில் எப்போதோ பெய்த மழையின் ஈரம் படிந்து பார்க்க ஏதோ பல சித்திரங்களைக் காட்டியது பூர்ணிமாவுக்கு.

காபியை எடுத்து சுவைத்தவன் மூச்சை ஆழமாக உள்ளிழுத்தான்.

என்ன பேச வேண்டுமென்பதை மனசுக்குள் கோர்க்கத் தொடங்கினான்.

“நீங்க ரெண்டு பேரும் காமன் பாத்ரூம்தான யூஸ் பண்றீங்க?”

குளிக்கும் போது கீழ ஓட்டைல உன் காலல்லாம் தெரிஞ்சது பூர்ணிமா என்றான்.

விருட்டென வாலில் அடித்தால் தலை உயர்த்தும் ஒரு ஜந்து போல நிமிர்ந்தாள். உடம்பில் ஒரு அலசல் உணர்ந்தாள்.

இவன் பார்த்திருப்பானோ? கண்கள் இடது வலதாக சுழற்றித் திரும்பியது.

“உங்களால பசிபோக சாப்பிட முடியுதா? எவ்வளவு நாளைக்கு இப்படி இருப்பீங்க?”

தரையைத் தொட்டுக் கொண்டிருந்த அவளின் பாத விரல்கள் வேகமாக அழுந்தியதில் உயிருள்ள உணர்ச்சி, பிசைந்ததில் சிவப்பு ஏறியது. அப்பாவின் ஃபோட்டோ மேல் பொருளற்ற பார்வை பதித்தாள்.

அவன் திரும்பத்திரும்ப சுற்றி அடிக்கும் காற்றாக அம்மாவை நெருக்கினான். தப்பித்துச் செல்லும் மனநிலையில் அடிகளை அம்மா வைக்கும் போதெல்லாம் ஆளைத்தூக்கி வீசும் காற்றாக மேலெழும்பினான். அவனின் மையம் சரியாகயிருந்தது. பூர்ணிமாவின் மஞ்சள் நிறம், ஜீவனுள்ள கண்கள், பாந்தமான உடல் அமைப்பு அவனின் கையிடுக்கில் மடக்கி வைத்துக்கொள்ளும் டிக்கெட்டாக இருந்து அட்டைப்படக்காட்சியாக சிறிது சிறிதாகப் பிய்த்துப் போடப்பட்டதில் அம்மாவுக்கு ஒரு பெரிய கலர் ஃபோட்டோ ஆல்பமாக பூர்ணிமா தெரிந்தாள். அந்த வீட்டிலிருந்த பூர்ணிமாவின் பழுப்பு ஃபோட்டோ, வெளிறிப்போன ஆடைகள், பத்தாத செருப்பு எல்லாம் கனவில் தீயில் போட்டாள்.

இறுதியாக, ஒரு நாளில் உயரமான அந்த டான்ஸரிடம் பூர்ணிமா ஒப்படைக்கப்பட்டாள்.

ஒரு வளரிளம் சிறுமியின் இயல்பான ஏகாந்தமான ஆசைகள், விருப்பங்கள் அந்தக் கூடத்தில் ஒரு மூலையில் சார்த்தி வைக்கப்பட்ட புத்தகப் பையைப் போல ஒடுங்கிக்கொண்டது.

அட்டைப்படத்தை அலங்கரிப்பாள் என்ற வார்த்தை மிகச் சீக்கிரம் பொய்யாகிப் போனதை உணர்ந்த அம்மா நிறைய நாள் வாழவில்லை.

தப்பான உறுதிமொழி தந்து தன் பெண்ணைக் கெடுத்த பரிதவிப்பு இறக்கும் போது அந்தக் கண்களில் தெரிந்ததை நான்கு உதடுகள் மௌனமாகப் பேசியதை தாயும், மகளும் உணர்ந்தனர்.

அம்மாவின் கையைச் சன்னமாகத் தடவினாள் பூர்ணிமா.

மூடிய கண்கள் மூடப்பட்டதேயாகின.

உயரமானவனின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் காலம் பூர்ணிமாவைத் தள்ளியது.

தன்னைப் போல் எத்தனை பேர்?

மெழுகுவர்த்தி உருவங்கள் எனப் பல நேரங்களில் தம்மொத்தவரைப் பற்றி நினைத்துக் கொள்வாள்.

கோபம் வந்து தொடையின் மேல் போர்த்தியிருந்த டவலைக் கீழே எடுத்துப்போட்டாள்.

எல்லோரும் பார்க்கட்டும் என்ற அலட்சியம் வந்தது. காலின் வழுவழுப்பைத் தொட்டுப் பார்த்தாள். தன் கண்களால் முழுவதும் தன் உடலை ஆக்கிரமித்து பார்த்த போது இசைக் கோர்வைக் கலக்காத ஒரு தனிக்கருவியின் தனித்த ஒலி மட்டும் கேட்டது. எவ்வளவு சின்ன உடை தந்தாலும், அணியத் தயங்கமாட்டாள். அவளைப் பொருத்தமட்டில் உடை என்பது விஷயமே இல்லை. ஹீரோயினாக நினைத்தவளுக்கு க்ரூப்டான்ஸ்ர் ஆகிவிட்டோம் என்பது மட்டும் தான். உடைக்கும், உடலுக்கும் சம்பந்தமில்லை என அடிக்கடி நினைப்பாள்.

அட்டைப்படத்தை அலங்கரிப்பாள் என்ற வார்ததை எவ்வளவு துரோகமானது என்பது பின்னொரு நாளில் தெரிஞ்சபோது யாதொன்றும் செய்ய இயலாத நிலை. பசி நேரத்து உணவுக்கான வாழ்க்கைத்தேடல் தன்னை ரொம்ப அலைக்கழித்துவிட்டதில் சினிமா தியேட்டரின் இருள் கவ்வியது போல தோன்றும். அறிமுகமில்லாத புதுப்புது மனிதர்களின் வாய்ப்பேச்சு முழுவதும் தன் உடலைப் பற்றியென புரிந்துக் கொள்ள நாளாயிற்று.

திடீரென, “ இந்த உடலில் ஒண்ணுமில்லை…………” எனக் கத்த நினைத்தாள்.

வாழ்க்கையே எதுவுமில்லை. எதுவும் யாருக்காகவும் இல்லை. யாரும் யாருக்காகவும் இல்லை. மூச்சிரைக்கத் தன்னை நம்பவைத்தவர்களிடம் சொல்ல மனசு தவித்தது. ஆனால், யாரையும் இப்ப தேடமுடியாது. எல்லாம் ரூட் மாறி மாறி பாதை பார்ப்பவர்கள்.

சோர்ந்து போய் கழுத்தைப் பின்னுக்குத் தள்ளினாள் இன்னைக்குப் போனோன்ன காலில் கொலுசு போடணும். மெலிதான கொலுசு சத்தத்தில் பூர்ணிமா தெரிவாள். பூஷணி மறைந்து போவாள்.

ஆசுவாசமாய் கண்ணை கொஞ்சம் மூடினாள்.

தோளில் கைபட்டது தெரிந்து மெல்ல விழித்த போது உயரமான டான்ஸ் மாஸ்டர் தெரிந்தான்.

அது ஒரு காதல் பாடல்.

காதல் வயப்பட்ட நிலையில் ஹீரோவும், ஹீரோயினும் ரசிகர்களை மயக்க வேண்டும்.

பொருத்தமேயில்லாம ஹீரோவுக்கு கோட் உடை. வழக்கம் போல ஹீரோயினுக்கு முழங்காலும், மார்பின் விளிம்பும் தெரிந்த உடை. மிகைப்படுத்தப்பட்ட உள்ளாடையில் மார்புகள் தன்னைக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தன.

மூணாவது ஷாட்டில் ஹீரோ ஒரு போர்வை போர்த்தியபடி மரத்திலிருந்து பின்னால் வருவது போலவும், பின்னாடி டான்ஸர்கள் மெதுவாக ஒடி வர்றது போலவும் காட்சியென சொல்லிட்டிருந்தது கேட்டு பூஷணிக்கு வாடகை உணர்ச்சித் துளிர்த்தது.

டான்ஸ் மாஸ்டர் பக்கத்தில் வந்து  “நீ ஹீரோயினை விட அழகு” என்றான்.

“ஹீரோயின் கிட்ட அதைச் சொல்ல தைரியமிருக்காடா? “என மனசு கேட்டது.

அவன் கேமராவின் நுணுக்கங்கள் மிக நுட்பமாகக் கற்றவன். சொல்வானா அவன்?

அடுத்தக் காட்சி எடுப்பதற்குள் கொஞ்சம் உட்கார அவகாசம் கிடைத்தது.

எதிரில், க்ரூப்பில் ஒரு பெண் கையைக் கட்டிக் கொண்டு மாஸ்டரிடம் பேசுவது தெரிந்தது.

சைகை காட்டினாள்.

யாருட்டயும் கை காட்டாத, பின்னாடி கட்டிப்பேசு அவன் முகத்தைப் பார்த்து பேசு…. கண்ணைப் பார்த்து பேசு…

சரிக்கா….. என்றது அந்தப் பெண்.

இங்கு எத்தனை விதமான கலர் கலரான கனவுகள். ஒவ்வொரு கலரும் அழகு. அது நம்மைப் போல எல்லா மனிதர்களுக்கும் அடைக்கலம் தரும் சொல். வாழ்நாட்களை வண்ணமாக பார்ப்பதில் எவ்வளவு ரசனையிருக்கு? ஏரியின் கொள்ளளவை மீறி தளும்பி நிற்கும் நீர் போல இந்த வண்ணங்கள் தளும்புகின்றன. மனிதர்களிடம் கோடுகளாக்குவதும், சித்திரமாக்குவதும், வெறுமையாக்குவதும், பார்வையிலிருந்தே மறைந்து போவதும் வண்ணக்கலவை தான்.

சட்டென ஒரு செங்காந்தள் நிறம் அவள் உடலைப் போர்த்தியது. அவளின் மஞ்சள் நிறம் மறைந்து எரிசுடர் நிறத்தில் பளீரிட்டாள். நின்று எரியும் பெரிய அடுப்புத்தணல் ஜூவாலை பூர்ணிமாவுக்குள் ஓடத்தொடங்கியது. காலடியில் கிடந்த நிறத்தை, செந்தீயை உடலில் எடுத்துத்தடவினாள். கொஞ்ச, கொஞ்சமாக நான் உன்னிடம் வந்துவிட்டேன் எனத் தகித்துச் சொன்னாள். உடல் கத கதப்பாகியது. செந்நிறத்துக்குள் அமிழ்ந்தது. மூழ்கி மூழ்கி உள்ளே போனாள். அவள் பல உருக்களாய் மாறினாள். ஒவ்வொரு உருவும் அசைந்து அசைந்து அவள் மனதின் விருப்பமில்லாத எண்ணங்களை அடித்துத் தள்ளியது. இந்தச் செந்தீயை மற்றப் பெண்களுக்கும் தர வேண்டும். இனி பயப்படும் சம்பவங்களைச் செந்தீ சுட்டெரிக்கும். வா…. என்னுள் வந்து கரைந்துப் போ….. நீயாக என்னை மாற்று…..

நான் பூர்ணிமா ஆயிட்டேன் எனக் கத்திப் பார்த்தாள். அம்மாவோடு சிறு கூடத்தில் பேசிய சிறுமியாக மாறி புத்தகப்பையைத் தூக்கக் கையை நீட்டினாள்.

கையை யாரோ பிடிப்பது தெரிந்தது. உயரமானவன் அழுத்திப் பிடித்தான்.

இப்பொழுதெல்லாம் பூஷணிக்கு உடம்பில் வலி அதிகமாகிறது. சிறு நெருப்பு பற்றியெரியும் பெரும் வனாந்திர தீ போல திகு திகு வென பரவும் வலி.

இதை யார் அணைக்க முடியும் ?

உண்மையில் இந்த வலிங்கறது ரெண்டே எழுத்துதான். அதுக்குள்ள பெரிய பெரிய நிஜத்தின் வேடிக்கைகள் இருக்கின்றன. அதை நேருக்கு நேர் சந்திக்கத்தான் வேண்டும். சந்திப்பவர்கள் மனசும், வலியுமான இரு காரணிகள். எவ்வித உடன் படிக்கையில்லாத வெறும் கையெழுத்து சாட்சிகள் மட்டுமே அதில் பிரதானம்.

என்னென்னமோ தோன்றியது பூஷணிக்கு.

கொஞ்சம் சோர்ந்து போனாள்.

மனசு மௌனப்படமாகச் சுருள் விட்டு விட்டு நீண்டக் காட்சிகளை விரிக்க ஆரம்பித்தது.

உண்மையில, இந்த க்ரூப் டான்ஸர்கள் எதுக்கு?

அவர்களை சினிமா தியேட்டர்ல, பாடல்ல வரும் போது யாரு பார்க்கிறாங்க?

அபத்தமான ஹீரோ, ஹீரோயின் காதலுக்கு நாம ஏன் பின்னால நிக்கணும்?

இங்கு ஏன் அந்தரங்கம் காட்சிப் பொருளாக்கப்பட்டு ரசிக்கப்படுகிறது?

காதல்ன்னால பாட்டு இருக்கணுமா?         நிஜத்தை நிஜமாகவே ஏன் காட்ட மறுக்கிறார்கள்? மாயையை நோக்கியே ஏன் நகர்கிறார்கள் ?

எத்தன படத்துக்குக் க்ரூப்ல ஆடியாச்சு. கணக்கே இல்லை. ஒரு சீனில் கூட க்ளோசப் முகம் வராது. அட்டைப்படமா அலங்கரிக்கும் என என்ட்ட சொன்னது போல யார் யார்கிட்டயோ சொல்லிருப்பான்ல? ஆனா, அப்பல்லாம் சின்ன வயசு. வலி தெரியல. ஸ்டெப் போடும் போது.

சான்ஸ் இல்லாத நாள்களில் வயிற்றுப் பசியினால தவிச்சது தன் நிஜத்தை உடைத்துவிட்டது.

இந்த சினிமா மொழியை புரிஞ்சுக்கவே இவ்வளவு வயசாயிடுச்சி. பலப்பல அளவுகளின் மனித உருவங்களின் பிம்பங்களின் விளையாட்டுக்குள் காலம் தன்னை அமிழ்த்திவிட்டது. துண்டு துண்டான ஷாட்டுகள் எடுக்கப்பட்டு சேர்க்கப்படுவது போல தன் வாழ்நாள் நிகழ்ச்சிகளின் அட்டவணைத் தொங்கிக் கொண்டுள்ளது, சேர்க்க முடியாமல்….

எத்தனை தோற்றங்களில், உடைகளில் கதாபாத்திர மாற்றம் தனக்குக் கிடைச்சிருக்கு. ஒன்றில் கூட உண்மை இல்லை. குழப்படியான மனநிலையில் டான்ஸ் மூவ்மெண்ட்க்கு, குனிந்து, வளைந்து, நிமிர்ந்து, ஓடி, நடந்து இரவு பகலாக ஆடித் தீர்த்தாயிற்று. ஒவ்வொருத்தரும் சொன்னாங்க. ஹீரோயின்க்கு ப்ரண்ட், அழுத்தமான கேரக்டர், ஹீரோவுக்குத் தங்கச்சி, நீ தான்மா செகண்ட் ஹீரோயின் இன்னும்……. இன்னும்………

ஆனால், எதுவுமே நடக்கல…

இனி, லேண்ட்லைன்ல எவன் கூப்பிட்டாலும் பேசக் கூடாது.

காலண்டரில தேதி குறிக்கக்கூடாது. வண்டி வந்திடும்னு பதை பதைச்சு தெரு முனையில வந்து நிற்கக் கூடாது.

எவ்வளவு முகங்களைப் பார்த்தேன். எந்த முகமாவது என்னை பற்றி பேசியதா? என் கண்களைப் பார்த்து பேசியதா? என் வலியைக் கேட்டதா?

மறுபடியும், கண்ணை மூடினாள்.

கால ஓட்டம் பொதுவானது. மனங்களைப் பார்த்தவர்கள் மனிதர்களாகத் தெரிவார்கள்.

நான் ஏன் ஒரு முகத்தைக் கூட பார்க்கல? எல்லாமே மைப்பூச்சுகள் கலர் கலராகப் பூசிய ஒப்பனை முகங்கள்.

கலர்கலராகக் கொள்ளைப் போனது தம் வாழ்நாட்கள். அதுக்கு பசி எனும் ஒரு பெயரைச் சூட்டிப்பார்ப்பது என்ன நியாயம்?

நான் ஏன் இதற்குள் தொலைந்து போனேன்? பெருமூச்சு எழுந்தது. அடுத்த ஷாட்டை நினைவுப்படுத்திப்பார்த்தாள். ஃபிரில் வைத்த கவுனில் சுற்றி ஆடிய ஹீரோயின் காட்சி, தெரிந்தது. அதைச் சுற்றி க்ரூப்ஸ் ஆடணும். அதான் அடுத்த ஷாட்.

தான் க்ரூப்டான்ஸராகதான் இந்த பீல்டுக்கு அழைத்து வரப்படுகிறோமென உயரமானவன் ஆரம்பத்திலேயே சொல்லிருந்தால் இவ்வளவு ஏமாற்றம் இருந்திருக்காதோ என மனது பல எண்ணமாகக் குழம்பியது.

கண்ணை மூடினாள்.

வலி….

இது எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது? யாரையும் விட்டு வைத்ததிலேயே?

சட்டென்று எழுந்து அறையை இருட்டாக்கிக் கொண்டாள். அது அவளுக்கு வசதியாக  இருந்தது. யாரையும் பார்க்க வேண்டாம். வெற்றுத்தரையில் உடலைக் கிடத்தினாள். அந்தக் குளிர் அவளுக்குத் தேவையாகயிருந்தது. ஒரு வகையில் இந்த வெப்பமும், வலியும் தொடர்புடையது போலத் தோன்றியது. உடல் அப்படியே செந்தீக்குள் மூழ்குவது போலிருந்தது. வெப்பமும், குளிரும் சமநிலையாவதில் பிரச்சினை வந்தது.

கைகளைத் தரையில் குத்தினாள். ஒ….. இந்த உடல் தான் எல்லாம் காரணம். சின்ன உடலாக இருந்தப்போ அப்பா என்னோட இருந்தார். அப்பா நீ எங்கே போனாய்? நாளுக்கு நாள் வளர்ச்சிக் காட்டும் உடல் வேணாம்பா எனக் கத்த தோணியது. டவலைக் கழுத்து வரை இழுத்து மூடினாள். மூச்சடைப்பது போலிருந்தது. அந்த அறையின் வெப்பமும், தனிமையும் சேர்ந்து வியர்த்தொழுகியது. வெப்பம் அதிகமாகி அழுத்தத் தொடங்கியதில் தண்ணிக்குள்ள எங்காவது நின்றால் தேவலாம் என்று  தோன்றியது. தண்ணிங்கற பெரும் சுழல் தன்னை இழுத்துட்டுப் போனால் நல்லாருக்கும்னு நினைத்த மனசை என்ன சொல்வது? இந்த உடலுக்கு அந்த வேகம் இப்ப வேணும் போல இருந்தது. யாரையும் பார்க்க முடியாத ஒரு இடம். முக்கியமா இந்த உடல் அப்ப என்ன செய்யும்?

இந்த வலி, இந்த வயித்துப் பசியெல்லாம் என்ன செய்யும்?

பணப்பசிக்காக தான என்னைச் சுத்தி இதெல்லாம் நடக்குது. கிழிஞ்சு போன ட்ரெஸ்க்குப் பதிலா வேறு வாங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் பெரிய துணிக்கடையில் தானும், அம்மாவும் பணம் தர முடியாம ஏக்கமா பார்த்துட்டு வந்த வலி ரொம்ப நாள் போகாம இருந்தது. அப்பாவை எரிச்ச அன்னைக்கு சொந்தக்காரங்க ஒரு பிடி சாம்பலாயிட்டான்னு சொல்லிக் கட்டிப் பிடித்து அழுதது ஞாபகம் வந்தது. அந்த உடலுக்கா இதெல்லாம் தேவையாயிருக்கு?

பூர்ணிமா இருளுக்குள் இன்னும் அதிகமாக காணாமல் போனாள்.

பகல் மறைந்த இருள் பொழுதான அந்த இடத்தை வெளிச்சமாக்க ஷெட் அமைக்கிறதை பூஷணி கண் திறந்து பார்த்தாள்.

பதினைஞ்சு க்ரூப் டான்ஸர்ஸ் இறுக்கிப்பிடித்த உடையில் நிற்பதில் எந்த உணர்வுமில்லை அங்கிருந்த யாரிடமும். இது அவர்கள் தொழில். அவ்வளவு தான்.

பூஷணி…………….

குரல் கேட்டுத் திரும்பினாள்.

ஷாட் தொடங்கப் போகுது…….

வெளியில் தனக்காக ப்ரட்யூசர் தம்பி காத்திருப்பதாக யாரோ சொன்னார்கள். சில நாட்களாக தன்னை அவர் அதிகம் கண்ணைப் பார்த்து பேசியது நினைவில் தோன்றியது.

பூஷணி சத்தமில்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வெளியே வந்தாள்….

உயரமான டான்ஸ் மாஸ்டரின் கண்களுக்கு மட்டும் அவளின் மாற்றப்பட்ட பழைய உடை தெரிந்தது.


 

எழுதியவர்

ம.கண்ணம்மாள்
மருத நிலம் தஞ்சையை சொந்தமாகக் கொண்டவர். பொதுவெளியில் கவிதை,சிறுகதை என இயங்கி வருகிறார். சன்னத்தூறல் இவரின் முதல் கவிதைத்தொகுப்பு.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sumathy Baskar
Sumathy Baskar
2 years ago

நானும் பூஷனி என்கிற பூரணியுடன் தஹிக்கிறேன். மனம் மிக கணக்கிறது. வலிக்கிறது.

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x