இதுவரை கண்டிராத வகையில்…
மனித குலம் இதுவரை கண்டிராத வகையில்
அவரவர் மலக்கோப்பையை அவரவரே கழுவிக்கொண்டிருக்கின்றனர்.
அங்கிருந்து விடுதலை அடைந்த கைகளை இன்று கண்டேன்.
அலுவலகத்தின்
ஒவ்வொரு குண்டிக்கும்
சுத்தமான கழிவறை இருக்கையை
தயார் செய்த அந்த கைகள்
ஒரு தேநீருக்கு யாசித்து கொண்டிருந்தன..
மனிதகுலம் இதுவரை கண்டிராத வகையில்
சவக்கிடங்கில் இருந்து தானே வெளியேறிய சடலம்
குழிக்குள் இறங்கி மண்தள்ளி மூடிக்கொள்கிறது
கடைசியாய் பார்ப்பதற்கு
அருகில் யாரும் இல்லாததை அறிந்து
கண்கள் திறந்து கிடக்கிறது..
மனிதகுலம் இதுவரை கண்டிராத வகையில்
பாலியல் சிப்பந்திகளின் இரவு கவிழ்ந்து கொண்டிருக்கிறது
நடைபாதை சுமை தூக்கி
சுருண்டு கிடக்கிறான்
யாரோ மரணிப்பதாக நாய்களின் ஓலம்
பெருகிக்கொண்டிருக்கிறது.
மனிதகுலம் இதுவரை கண்டிராத வகையில்,
ஆதூரமான தழுவல் கைவிட்டுப்போகிறது
ஒரு பிள்ளையிடமிருந்து..
ஒரு தந்தையிடமிருந்து..
ஒரு வயசாளி தன் நாட்களை
நாற்காலிக்கு ஒப்புக்கொடுக்கிறான்…
மனித குலம் இதுவரை கண்டிராத வகையில்
எலிகள்
தானியக் கிடங்குகளை தின்று கொழுக்கின்றன
வெட்டுக்கிளிகள் படையெடுக்கின்றன
எண்ணிக்கை அதிகரிக்கிறது.
ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு அச்சம் பரவுகிறது.
மனித குலம் இதுவரை கண்டிராத வகையில்,
ஒரு மதுக்கோப்பையை
சுதந்திரமாக வாய்க்கு கவிழ்க்கும் முன்னரே
மனம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.
ரயிலில் வந்த ஊர்மணம்.
எங்க போயிருந்த ரெண்டு நாளா?
மியாவ்
எங்க இருந்த?
மியாவ்
என்ன சாப்பிட்ட ?
மியாவ்
பால் வைக்கட்டுமா?
மியாவ்
அம்மாவுக்கும் பூனைக்குமான உரையாடலில்
இருந்த ஒரு இழையை
இந்த குறிப்பில் எப்படி சேர்ப்பது?
*
வண்ணத்தில் வாங்கினாலும்
அடைகாத்து எடுத்தாலும்
குஞ்சுதான்.
அத்தனை பாராமரிப்பு
ஒரு குச்சியை வைத்துக் கொண்டு
கோழிக்கு நிகராக காவந்து செய்வாள்.
அன்புதான்
கம்பு சிமிட்டி வீசி
தானியம் திண்ண ரசித்தது.
அன்பே
அத்தனை ருசி
அத்தனை மிருது.
*
அநாதை விடுதிகாரன் வலம் வந்த தெருவில்
அம்மாவுக்கு வேலை இருந்தது
அவள் வீடு அங்குதான்.
வட்டிலில் சோறு வைக்கும் நேரம் காத்திருப்பான்
அதே வட்டிலை கழுவி அப்பனுக்கும் வைப்பாள்.
ஏதோ ஒரு நாளில்
ஏதோ ஒரு பெயரிட்டு அழைக்கும்
அவனுக்கு
திண்ணையில் இடம் கொடுத்து
சட்டைதுணி தந்தது சாதாரணமில்லை
எங்கோ செத்து மடிந்தவனுக்கு
அந்த நன்றியிருக்கும்.
*
வேலைபார்த்த வீட்டு சப்பாத்தி
வயலில் கொடுத்த பட்சணம்
வழியில் வாங்கிய மீன் பன்
எல்லாம் அந்த
புடவை மடிப்புக்குள் இருக்கும்
தாய்மடி.
*
முதலில்
ரயிலில் அப்பா வந்தார்
அடுத்த ரயிலில்
அம்மாவை அழைத்து வந்தார்
அடுத்தடுத்த ரயில்களில்
காய் வந்தது
கருவாடு வந்தது
ஊர்மணம் வந்தது.
*
கிளியம்மாவும்
அம்மாவும் ஒரு ஜோடி
நடவு வயல்களில்
சிரிப்பொலி
கிளியம்மா மகனும், நானும்
மாநகரத்தில் சந்தித்தோம்
புன்னகையில்லை.
*
‘விடு போவட்டும்
ஒன்னுஞ் செய்யாது’
நல்லபாம்புக்கு நியாயம் பேசியவளின்
நாக்கை நீங்கள் பார்த்ததில்லையே..
ஊரையே மெல்லும்.
ஓய்ந்துவிட்ட அவளிடம்
இப்போது கேளுங்கள்.
அது ஒரு காலமாம்..
*
வெற்றிலைக்கு
சுண்ணாம்பு தராத
இந்த மாநகரம் மீது
அம்மாவுக்கு எந்த குறையுமில்லை
காலாற நடக்க
ரெண்டு வய வரப்புகளில்லை
என்பதுதவிர.
நீரை மகேந்திரன்
எழுதியவர்
-
நீரை மகேந்திரன்: பத்திரிகையாளர், ஆனந்த விகடன், 'தி இந்து தமிழ்' , தந்தி தொலைக்காட்சி என முன்னணி ஊடகங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது மின்னணு ஊடக நிறுவனம் ஒன்றில் ஆசிரியராக பொறுப்பு வகிக்கிறார். இதற்கு முன் அகநாழிகை வெளியீடாக 'அக்காவின் தோழிகள்' கவிதை தொகுப்பும், ஆனந்த விகடன், 'தி இந்து தமிழ்' வெளியீடாக துறை
சார்ந்த மூன்று நூல்களும் வெளியாகியுள்ளன .(சொந்த வீடு, நிறுவனங்கள் வெற்றிபெற்ற கதை, தனித்து ஜெயித்த சாதனையாளர்கள்) கவிதை, சிறுகதைப் படைப்புகள் எழுதுவது என தொடர்ச்சியாக தமிழிலக்கியத்தில் இயங்கி வருகிறார்.
இதுவரை.
- கவிதை18 July 2021நீரை மகேந்திரன் கவிதைகள்
2 நிமிடம் 52 நொடிகள்
மிகவும் சிறப்பு💖💖
வாழ்த்துகள்
ஆக்கங்கள் அருமை. புதிய படைப்பாளிகளுக்கு ஊக்கம் தரும், அது திண்ணம். தங்களின் 2நிமிட பேனா முனைக் கீரல்கள் படிப்போரின் பழைய நிமிடங்களை அசைபோட வைத்துள்ளது. புரட்சியின் புறப்பாடு பணிக்கட்டும்…….வாழ்த்துகள்!!
*ஆக்கம்…., படிப்போர்க்கும் படைப்போர்க்கும் ஊக்கமளிக்கும் திண்ணம். தங்களின் 2நிமிட பேனா முனைக் கீரல்கள் கடந்துபோனா நிமிடங்களை அசைப்போட்டு வினா எழுப்பியுள்ளது. புரட்சிகர புறப்பாடு ஓளிவாளாய் மிளிரட்டும்…..!!* உணர்வுக்கும் உறவுக்கும் வாழ்த்துகள்!!