ஒரு ஊரில ராகுல்னு ஒரு குட்டிப் பையன் இருக்கான். அவன் ஆறாம் வகுப்பில படிச்சிட்டு இருக்கான். அவனோட அக்கா பேரு நிலா. அவ பத்தாம் வகுப்பில படிக்கிறாள். அவங்களோட அப்பா அம்மா இரண்டு பேருமே அலுவலகத்துல வேலை செய்யறாங்க. ராகுல், நிலா படிக்கிற பள்ளிக்கூடம் அவங்க வீட்டில இருந்து பத்து நிமிட நடை தூரத்துல தான் இருந்துச்சு.
போகிற வழியில மயில் தோப்புன்னு ஒரு அழகான தோப்பு இருந்துச்சு. அந்த தோப்புக்கு சொந்தக்காரர் பேரு கீர்த்தி வாசன். அந்தத் தோப்புல மாமரங்கள், தென்னை மாமரங்கள், பலா மாமரங்கள், கொய்யா மாமரங்கள், சீதாப் பழமரங்கள் மற்றும் வாழை மரங்களும் நிறைய இருந்துச்சு.
அந்தத் தோப்பில் இருந்த மரங்களுக்கு அங்கிருந்த ஒரு பெரிய வட்டவடிவமான கிணற்றுல இருந்து பெரிய பம்ப் செட் மோட்டார் போட்டு, அது மூலமா தான் தண்ணீர் பாய்ச்சுவாங்க.
தினமும் நிலாவும் ராகுலும் பள்ளிக்குப் போகும்போது அந்த ராட்சத மோட்டார் சத்தமா ஓடும். பம்பு செட்டுக்கு முன்னாடி இருந்த சிமென்ட் தொட்டியில் தடிமனான குழாயிலிருந்து தண்ணீர் அருவி மாதிரி வேகமாக கொட்டும்.
அந்தத் தொட்டியில் இருந்த பெரிய துவாரத்தை ஒரு தடிமனான துணியை வைத்து அடைச்சுருப்பாங்க. அந்தத் துணியை எடுத்து விட்ட உடனே தண்ணீர், தொட்டி பக்கத்துல இருந்து தொடங்கும் கால்வாய் வழியா மரங்களுக்கு போகும்.
அப்படித் தொட்டியில் இருந்து தண்ணீர் வேகமாக பாயறதைப் பார்க்க ராகுலுக்கு ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி அவங்க அந்த இடத்தைத் தாண்டும் போது தண்ணீர் வாய்க்காலை நிறைச்சுகிட்டு ஓடுறதைப் பார்த்து ராகுல் சந்தோஷமாக கையைத் தட்டி சிரிப்பான். பள்ளிக்கு நேரமாச்சுன்னு நிலா அவனை இழுத்துகிட்டுப் போகும் வரை அங்கிருந்து நகரவே மாட்டான்.
ஒரு முறை அந்தத் தோப்பின் உரிமையாளர் கீர்த்தி வாசன் வெகு வேகமாக கொட்டும் பம்ப் செட் நீரில் உற்சாகமாக அவரது இரண்டு குழந்தைகளோடு குளித்து கும்மாளம் போடுவதை ராகுல் கவனித்தான். அவனுக்கும் அந்த பம்ப் செட் நீரில் குளிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று மயில் தோப்புக்கு ஒரு துண்டும், மாற்றுத்துணிகளும், சோப்பும் எடுத்துக் கொண்டு போனான். அங்கிருந்த காவலாளியிடம் போய் பம்ப் செட்டில் குளிப்பதற்கு அனுமதி கேட்டான் ராகுல்.
ஆனால், காவலாளி அனுமதி மறுத்து விட்டார். வெளியாட்கள் குளிக்க அவரது முதலாளி யோட அனுமதி வேண்டும் என்றார். ராகுல் முக வாட்டத்தோடு கேட்டுக்கு வெளியே, பம்ப் செட்டில் வேகமாக கொட்டிக் கொண்டிருந்த நீரை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான்.
அப்போது தோப்பின் சொந்தக்காரரான கீர்த்தி வாசன் அவர்களின் கார் வேகமாக கேட்டருகில் வந்து நின்றது. காரின் கதவுகள் கருமை நிறக் கண்ணாடி கொண்டிருந்ததால் உள்ளே இருப்பவர்களை ராகுலால் பார்க்க முடியவில்லை. ஆனால், உள்ளேயிருந்த கீர்த்திவாசன், தோளில் துண்டு மற்றும் கையில் மாற்றுத் துணிகளோடு நின்றிருந்த சிறுவனைப் பார்த்து விட்டார். கேட் திறந்ததும் அவரது வண்டி உள்ளே போய் போர்ட்டிகோவில் நின்றது.
தனது டிரைவரை விட்டுக் காவலாளியை அழைத்து வரச் சொன்னார் கீர்த்திவாசன். காவலாளி உடனே ஓடி வந்தார்.
“வணக்கம் ஐயா” என்றார். “வணக்கம். யார் அந்த சின்னப் பையன்? எதற்காக நம்ம கேட்டுக்கு முன்னால் நிற்கிறான்?” என்று வினவினார். “ஐயா, அந்தப் பையன் பக்கத்துல இருக்கிற காலனியில் வசிக்கிறான். தினமும் இந்த வழியாகத் தான் பள்ளிக்கூடம் போவான்” என்று பதிலளித்தார் காவலாளி.
“அதுசரி. ஆனால், இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, பள்ளிக்கூட விடுமுறை நாள். அந்தப் பையன் எதுக்கு இங்க வந்து நிற்கிறான்?” என்று கேட்டார்.
“அது வந்துங்க ஐயா..” என்று மெல்ல இழுத்து பதிலளிக்கத் தயங்கினார் அவர். “பரவாயில்லை, சொல்லுங்க” என்றார் கீர்த்தி வாசன்.
“ஐயா, வந்து, அந்தப் பையன் போனவாரம் நீங்கள் உங்கள் குழந்தைகளோடு தோட்டத்துப் பம்ப் செட்டில குளிச்சு விளையாடியதைப் பார்த்திருக்கான். அவனுக்கும் பம்ப் செட்டில் குளிக்கணும்னு ஆசையாக இருக்காம். அதான் வந்திருக்கான். ஆனால், நான் அனுமதிக்க முடியாதுன்னு சொல்லிட்டேங்க.. இதோ இப்பவே திருப்பி அனுப்பிச்சு விடறேன்” என்றார்.
காவலாளி சொன்னதைக் கேட்டதும் கீர்த்தி வாசனின் முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது. “திருப்பி அனுப்ப வேண்டாம். அவனை இங்கே கூட்டி வாருங்கள்” என்று சொன்னார்.
அவர் சொன்னது காவலாளிக்கு வெகுவாக ஆச்சர்யத்தை அளித்தது. “சரிங்க. இதோ போய் அழைச்சுகிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக கேட்டுக்கு ஓடினார்.
கேட்டைத் தாழ் போட்டு விட்டுக் காவலாளியும் உள்ளே சென்று விட்டதால், நிராசை அடைந்த ராகுல் மெல்ல வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான். அப்போது, பின்னாலிருந்து காவலாளி “ஏய், தம்பி, போகாதே. நில்லு” என்று சத்தமாக அழைத்தது கேட்டு அவசரமாகத் திரும்பிப் பார்த்தான்.
திரும்பி தோட்டத்து கேட்டுக்கு அருகே ஓடிப்போய் நின்றான். “தம்பி, உன்னை எங்க ஐயா வரச்சொன்னாரு. வா, உள்ளே” என்று சொல்லி கேட்டைத் திறந்து போர்ட்டிகோவிற்கு அழைத்துச் சென்றார் காவலாளி.
போர்ட்டிகோவிலிருந்து ஐந்து படிகள் ஏறினால், பளபளப்பான பளிங்குத் தரையும் அழகான வேலைப்பாடுகள் கொண்ட மரத்தாலான நாற்காலிகள் போடப்பட்டிருந்த வராண்டாவும் இருந்தன.
அந்த மரநாற்காலிகளுக்கு நடுநாயகமாயிருந்த அசையும் நாற்காலியில் நேர்த்தியான பட்டு வேட்டிச் சட்டையில் நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் அதன் நடுவே சிறிய குங்குமப் பொட்டும், கை கழுத்தில் தங்க நகைகளும் அணிந்து கம்பீரமாக அமர்ந்திருந்தார் கீர்த்தி வாசன்.
அவரை சில நாட்களுக்கு முன் அரை நிஜாரும் முண்டா பனியனுமாக தன் பிள்ளைகளோடு குளித்த போது பார்த்திருந்த ராகுலுக்கு அவரது இன்றைய தோற்றம் பிரமிப்பைத் தந்தது.
அவருக்கு அருகில் போய் தன் கரங்களைக் குவித்து “வணக்கம் சார்” என்று சொன்னான் ராகுல்.
“வணக்கம் தம்பி. உங்க பேரென்ன? எந்த வகுப்பு படிக்கிறீங்க?” என்று கேட்டார் அவர்.
“என் பெயர் ராகுல். நான் பக்கத்தில இருக்கிற அரசு உயர்நிலைப் பள்ளியில ஆறாம் வகுப்பு படிக்கிறேன்” என்று பதிலளித்தான்.
“நல்லது. உங்களுக்கு இந்த தோட்டத்து பம்ப் செட்டில் குளிக்க ஆசை என்று காவலாளி சொன்னார். அப்படியா?” என்று கேட்டார் கீர்த்தி வாசன்.
“ஆமாம் சார். உண்மைதான். அதனால் தான் துணி, துண்டு, சோப்பு எல்லாம் எடுத்துக் கிட்டு வந்தேன். ஆனால், காவலாளி அனுமதி இல்லைன்னு சொல்லி விட்டார்” என்று சற்று சோகமான குரலில் சொன்னான் ராகுல்.
“தம்பி ராகுல், இந்த பம்ப் செட்டில் குளிக்க வேண்டுமானால் நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு சரியான விடைகளை சொல்ல வேண்டும். என் பிள்ளைகளுக்கும் அப்படி ஒரு சட்டம் இருக்கிறது. எப்போதெல்லாம் அவர்கள் சரியான விடைகளைத் தருகிறார்களோ அப்போதெல்லாம் இங்கு அழைத்து வந்து பம்ப் செட்டில் குளிக்க அனுமதி அளிப்பேன். உனக்கு இந்த விதிமுறையில் உடன்பாடிருந்தால், என் மூன்று கேள்விகளுக்குச் சரியான விடைகளைத் தந்து விட்டு நீயும் குளிக்கலாம். நீ மட்டும் இல்லாமல் உன் குடும்ப உறுப்பினர் இருவரையும் சேர்த்துக் கொள்ளலாம். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.
ராகுல் உடனே சந்தோஷத்துடன் “நிச்சயம் முயற்சிக்கிறேன் சார். எங்கள் பள்ளியில் பொது அறிவு, நல்லொழுக்க கல்வி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று எல்லா வகை பாடங்களும் நடத்தப் படுகின்றன. அதனால், உங்கள் கேள்விகளுக்கு என்னால் சரியான விடையைத் தர முடியும் என்று நினக்கிறேன். தயவு செய்து கேளுங்கள்” என்று தன்னம்பிக்கையோடு கேட்டான் ராகுல்.
“சரி, உலகிலேயே மிக அழகான ஆடை எது? ” என்று கேட்டார் கீர்த்தி வாசன். சிறிதும் தயங்காமல் “ஐயா, உலகிலேயே மிக அழகான ஆடை – ஏழையிடம் இருக்கும் ஒரே ஒரு சட்டைதான். ஏனென்றால் அது குளிர்காலத்திற்கும் கோடைகாலத்திற்கும் ஒருசேர பயன்படக்கூடியது” என்று பதிலளித்தான் ராகுல்.
கீர்த்தி வாசன் “சரி. என் இரண்டாவது கேள்வி – உலகிலேயே மிகவும் சுவையான உணவு எது? என்று கேட்டார்.
“ஒருவர் பசியாக இருக்கும்போது சாப்பிடுவதுதான் உலகிலேயே மிகவும் சுவையான உணவு, ஏனென்றால் மிகுந்த பசியுள்ளவர்கள் பழைய சோற்றைக் கூட சுவையாக உணர்வார்கள்” என்று சட்டென பதில் தந்தான் ராகுல்.
கீர்த்தி வாசனின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது. பின்னர் அவர் தனது மூன்றாவது மற்றும் கடைசி கேள்வியைக் கேட்டார் – “உலகின் மிக மென்மையான படுக்கை எது?”
“ஐயா, இந்தக் கேள்விக்கான பதில் என் தந்தையார் எனக்கு அடிக்கடி கூறும் அறிவுரையில் இருக்கிறது. நாம் மன அமைதியுடன் தூங்குவதுதான் நமக்கு இருப்பதிலேயே பெரிய செல்வம். நாம் நேர்மையாக இருந்தால்தான் நிம்மதியான உறக்கம் வரும் என்று அவர் அடிக்கடி சொல்வார். நேர்மையாக இல்லாமல், தங்கப் படுக்கையில் படுத்தாலும் கூட முட்கள் நிறைதிருப்பதாகத் தானே தோன்றும். நேர்மையானவர்கள் வெறும் தரையில் படுத்து உறங்கினாலும் அதுவே உலகின் மென்மையான படுக்கையாக மாறிவிடும் என்று நினைக்கிறேன்” என்று தைரியமாகச் சொன்னான் ராகுல்.
ராகுலின் அறிவுத் திறனாலும், அவனிடமிருந்த நல்ல பண்புகளாலும் பெரிதும் கவரப்பட்டார் கீர்த்திவாசன். அவர் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே நல்ல பழக்க வழங்கங்கள் மற்றும் பொது அறிவு ஆகியவற்றை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டுமென்று விரும்புபவர். ராகுலிடம் அவை சிறந்து விளங்குவது கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார். அவனைப் பாராட்டி தனது விலையுயர்ந்த பேனாவை அவனுக்குப் பரிசளித்து வாழ்த்தினார்.
அப்புறமென்ன? ராகுலும், அவன் அப்பாவும், அக்கா நிலாவும் அன்றே பம்ப் செட்டில் ஆனந்தமாக குளித்துக் கும்மாளம் அடித்தார்கள் என்பதைச் சொல்லணுமா என்ன?
எழுதியவர்
-
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் பிறந்தவர். பெற்றோர் இராம கிருஷ்ணன் - பத்மாவதி. சென்னை கிறித்துவ கல்லூரியில் பொருளாதார பட்டம் பெற்றவர்.
நாவலாசிரியர், எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், மொழி பெயர்ப்பாளர். இவ்வாண்டு (2024) சிறந்த இலக்கியப் பணிக்கான திருப்பூர் சக்தி விருது, மலர்வனம் மின்னிதழ் சிறந்த எழுத்தாளர் விருது, ‘ஃபெம்ஹானர்’ (FEM HONOUR) பெண்கள் பத்திரிக்கையின் சிறந்த சாதனையாளர் விருது, வானதி பதிப்பகத்தின் வரலாற்று நாவலாசிரியை நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப் பட்டுள்ளன.
குவிகம் குறுநாவல் போட்டி 2024-ல் இவரது குறுநாவல் “பூமரப்பாவை” மற்றும் உதிரிகள் இலக்கிய இதழ் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டி 2023-ல் இவரது "பேய்க்கொம்பன்" சிறுகதை ஆகியவை பரிசு வென்றுள்ளன.
பிரித்தனிலிருந்து வெளியாகும் இந்தியத் தமிழ் வானொலி வழங்கும் தமிழிதழ் (சித்திரை & தீபாவளி சிறப்பிதழ்கள் 2024) மற்றும் வடஅமெரிக்கத் தமிழ் மாத இதழான ‘தென்றல்’ (ஜூன் 2024) ஆகியவற்றில் இவரது படைப்பு மற்றும் நேர்க்காணல் இடம் பெற்றுள்ளன. எழுத்தத் தொடங்கிய முதலாண்டிலேயே, பதினொறு சிறுகதைகள், ஏழு குறுநாவல்கள், நான்கு முழுநீள நாவல்கள் மற்றும் ஒரு மேடை நாடகத்தையும் எழுதியுள்ளார்.
தற்போது, 'நடுகல்' இலக்கிய இதழில் சிறார் தொடர்கதை எழுதி வருகிறார்.
இதுவரை.
- சிறார் கதைகள் சிறப்பிதழ் 202519 January 2025ராகுல்