13 October 2024
mathi

ச.துரையின் “மத்தி” கவிதைத் தொகுப்பு குறித்து..

ஆழ்மனத் தூண்டல்களோடு இசைந்துபோகும் அகத்தின் சொற்கள் கவிதைகளாகின்றன.  பிரத்யேக மொழியைக் கண்டடையும் கவிஞனால் புனையப்படும் கவிமொழியானது புறத்தோடு ஒருங்கிணைந்து செயலாற்றும் அகத்தின் நீட்சியெனப் படர்கிறது. கவிஞன் கண்டவற்றின், உணர்ந்தவற்றின், அனுபவித்தவற்றின் ஆழ்மனத்தில் சேமித்து வைத்திருப்பவைகளின் தாக்கங்களோடு, தான் காணும், உணரும், அனுபவிக்கும் நிதர்சனங்களை ஒப்புமைப்படுத்தி தனதேயான பிரத்யேகப் பார்வையில் தரும் கவிதைகள் அதன் வாசகனின் அனுபவங்களோடும், அறிதல்களோடும் ஊடாடிப் புதிய பரிமாணம் கொள்கிறது. ஒரு கவிஞன் எழுதியவற்றைக் கண்டடைவதாகவன்றி, தனதான புதிய அர்த்தப்பாடுகளை, தர்க்கங்களைக் கண்டுகொள்ள எத்தணிக்கும் வாசகனுக்கு கவிதையானது தன் சாத்தியப்படுகளை புலப்படுத்துவதன் வழியே கவிதைக்கும், வாசகனுக்குமான உரையாடல் நிகழ்கிறது. எனில் ஒரு கவிதையானது அதை எழுதுபவனின் தனித்த அனுபவங்களோடும், அதே சமயத்தில் வாசகனின் பலவித புரிதல்களோடும் ஒரேசமயத்தில் ஒன்றாகியும், மாறாகியும், பலவாகியும் பரிணமிக்கிறது.

கவிஞனுக்கு கவிதைதான் நிலம். தேசம் தொலைத்த கவிஞன் தன் கவிதைக்குள் குடியேறுகிறான். அங்கு கவிஞனாக அல்லாமல் தன்னைக் கவிதையாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறான். இவ்வுறுமாற்றத்தில் கவிதைசொல்லி மறைந்து அவனது சுயம் மறைந்து எஞ்சியிருப்பது கவிதைமட்டுமே அதன்வழியேதான் தனக்கான புதிய தேசத்தைப் பிரஸ்தாபிக்கிறான். அங்கு பயணிகளாய் வருபவர்களுக்கு அத்தேசமும், அதன் நிலமும் புதிதாகவும், புதிரானதாகவும் தோன்றக்கூடும். மெல்ல மெல்ல அதற்குள் சுற்றித்திரிவதன் வழியே அதன் குறுக்கும், நெடுக்குமான பாதைகளையும், அது தனக்குள் ஒளித்துவைக்காப்பட்டிருக்கும் வெவ்வேறு புதிர்வழிகளையும் கண்டடைகின்றனர். இறுதியில் அம்மாயநகரத்தைப் பிரஸ்தாபித்தக் கவிஞனைப்போலவே தாங்கள் கண்டடைந்த வழிகளில் அவர்களும் வெளியேறுகின்றனர்.

ச.துரையின் கவிதைத் தொகுப்பான “மத்தி”யில் உள்ள கவிதைகள் கவிஞனின் அகவெளிப்பாடாக மட்டுமில்லாமல் புறவெளியினைத் தனித்த கண்கொண்டு நோக்கும் கவித்துவச் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. இத்தொகுப்பு இவ்வாறகத் தனது முதல் கவிதையைக் கொண்டிருக்கிறது

எங்களின் உவர் நிலத்தில்
வெட்டுண்ட காய்ந்த மரத்தி ஒருத்தி இருக்கிறாள்
ஏழடி இருப்பாள் எனக்குத் தெரிய முக்கால் ஆண்டுகளாக
ஒரே இடத்திலே அலை பார்க்கிறாள்
காற்று வாங்குகிறாள்
நீராடுகிறாள்
எப்போதாவது புரண்டு படுப்பாள்
அப்போதெல்லாம் கடலும்
எதிர் திசைக்கு மாறிக்கொள்ளும்.

இக்கவிதையை ஒரு ஓவியமாக வரைவோமாயின். ஏழடி இருக்கும் அந்தக் காய்ந்த வெடுண்ட மரம்/ மிகச்சமீபமாகதான் வெட்டப்பட்டிருக்கிறது/ எதிரே கடல் இருக்கிறது. இவைகள் ஸ்தூலமாகப் புலப்படும். இதில் கவிஞனின் அகப்பார்வையாக மரத்தைப் பெண்ணாக உருவகித்தல், அலைபார்த்தல், காற்று வாங்குதல், நீராடுதல், ஆகியவைகளைக் கொள்ளலாம். இறுதியாக எப்போதாவது புரண்டு படுப்பாள்/ அபோதெல்லாம் கடலும்/ எதிர் திசைக்கு மாறிக்கொள்ளும். என்னும் மாயாஜாலத்தை உட்புகுத்துவதின் மூலம் ஒரு ஓவியம் கவிதையாக உருமாற்றமடைகிறது.

”இரண்டு ஒன்று மூன்றாக நடனமாடுபவர்கள்” என்கிற தலைபிட்ட கவிதையில் காலம் பின்நகரவும், தலைகீழாகவும் செய்கிறது, அதேசமயம் அதற்குள் இருக்கும் இசை இக்குலைவைச் சமன்செய்கிறது. பின்சுழற்றப்பட்ட இசைக்குள் மீண்டுவரும் தந்தை தலைகீழ் நடனத்தில் யுவனாகிறார். அவர் அப்பாவாக இருக்கும்போது மகளுடன் கொள்ளும் வாஞ்சையான உரையாடல் “வேண்டாம் மகளே! தும்பைப்பூ மாதிரியான உன் கைகளில் தைலவாடை குடிபுகும்”  இளைஞனான பின் அவருக்கிருக்கும் பதட்டத்திற்குமான ”சந்தோஷம் மகளே அந்தக் கயிறை தரையில் முடிச்சிட்டு என்னோடு அமருங்கள்.” வேறுபாட்டிற்குள்தான் காலமும், கவிதையும் ஒன்றுகலக்கின்றன. இக்கவிதைக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் இசைதான் இதனை ஒரு சிறப்பான கவிதையாக ஆக்கியிருக்கிறது என்றுணர்கிறேன். அப்பாக்கள் எப்போதும் சாகமாட்டார்கள்.

”நாடியிலிருந்து கீழ்நோக்கி இடுப்புவரை” என்று தொடங்குகிற கவிதை (பக் 14 & 15) அகச்சிக்கல்களை பேசுகின்றன என்றபோதும் அதற்குள் இருக்கும் மாயாஜால மனிதர்களின் உலகமாக மாறிப்போன உடல் கவிதைக்கான களமாகிறது. அகத்தின் சிக்கல்கள் உடலின் வாதைகளாய் உருமாற்றம் கொள்கின்றன. மேலும் இக்கவிதைக்குள் எழுப்படும் கேள்விகள் யாரிந்த மாலுமி / யாரிந்த கிடார் சிறுவன் / இந்தக் கடல் எங்குள்ளது / இவனுக்கு யார் கிடார் வாசிக்கக் கற்றுத்தந்தது. இவையெல்லாம் மூளைக்கும், உடலுக்குமான  அக உரையாடலாக மட்டுமின்றி, வீட்டுக்காரர் “இனி இம்மாதிரியான கச்சேரிகளைச் செய்வதாய் இருந்தால் நீங்கள் தாராளமாக வேறுவீடு பார்க்கலாம்” என்று சொல்வதின்மூலம் அகத்தால் தொல்லைப்படுபவன் தன் புறக்காரணிகளின் எச்சரிக்கைகளுக்கும் உள்ளாகிறான். இறுதியில் அகத்தைக் கண்டுகொள்ளாமல் குப்புறப்படுக்கிறான் அல்லது கவிதை எழுதுகிறான்.

பியானோவை இசைத்தல் அல்லது கவிதை எழுதுதல் என்று தலைப்பிடப்பட்டிருக்க வேண்டிய தலைப்பில்லாத கவிதை இத்தொகுப்பிலுள்ள நல்ல கவிதைகளில் ஒன்றாகச் சொல்லலாம். இவையிரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை என்றபோதும் ஒரு பியானோவை இசைக்கும்போதும், கவிதை எழுதும்போதும் உண்டாகும் சஞ்சலங்களை எதிர்கொள்வதின் மூலமாகவே அவற்றைக் கடக்கவேண்டியுமுள்ளது. அதேசமயத்தில் இவையிரண்டும் நிகழும்போது தேடப்படக்கூடிய தனது மற்றொரு பிரதியை அடையாளம் காணுதலே இசைத்தல் அல்லது எழுதுதலின் பூரணத்துவமாகவும் இருக்கிறது. பியானோவின் மீது துரைக்கிருக்கும் காதலைப் புரிந்துகொள்ள முடிகிறது அவரது “குரைக்கும் பியானோ”வையும் நினைவுகொள்வோம்.

”இவானோவிச்சின் மீன் தொட்டி” உண்மையில் ஒரு நல்ல கவிதை என்றே கூறலாம். உலகின் மிகச்சிறிய மீன் தொட்டியைச் செய்த “அனடோலி இவானோவிச் கொனேகா” என்பவரை அடிப்படையாகக்கொண்டு புனையப்பட்ட கவிதைதான் என்கிறபோதும் ஒரு செய்தியிலிருந்து அது கவிதையாக பரிணாமம் கொள்ளுதலே இதன் வெற்றியாகக் காண்கிறேன். மீச்சிறு கடலானது நெய்தல்வாசிக்குத் தொல்லைதான் / வரிக்குதிரை மீன்களும் மிகப்பெரிய கடலுக்குள் மீப்பெரிய மீன்கள் மட்டுமே நீந்தும் / என்கிற கதைகளை திரும்பத் திரும்ப சொல்லியபடியே நீந்தியிருக்காது போன்ற கவித்துவ சொல்லாடல்கள் சமகால நம்பவைக்கப்படுதலில் அரசியலைப் பேசுகின்றன. கடைசி வரியான “மீச்சிறு வயிறுகளுக்கும் பசியானது மீப்பெரியது இவானோவிச்” இக்கவிதையின் மொத்த சாரத்தையுமே தன்னுள் கொண்டிருக்கிறது. தான் அறிந்த ஒன்றை கவிதை என்கிற பெயரில் வெறும் செய்தியாக மட்டுமல்லாமல் அதனை நேர்த்தியாகக் கவிதையாக்கியிருக்கிறார்.

இத்தொகுப்பிலுள்ள அரசியல் கவிதைகளில் மிக முக்கியமான கவிதைகளாக இரண்டு கவிதைகளைக் குறிப்பிடலாம்.

1)நிமிர்த்தப்பட்ட் பீரங்கிகளாக / மாறிப்போயின/ நகரின் வானுயர்ந்த அடுக்குமாடிகள்/ நிலத்தடி அறைக்குள்/ யுத்தத்தின் இடையே/ பசிக்கிறது என்ற பிஞ்சிடம்/ தாயொருத்தி வெடிக்காத/ அணுகுண்டை விளையாடக் கொடுத்தாள்/ நம்புவோமாக/ அது வெடிக்காது/ விடியும்வரை பிஞ்சுக்கும் பசிக்காது.

2)மொத்தமாக பதுங்கு குழிகளில் வந்து விழுந்தார்கள்/ “அப்பா நாம் ஏன் பாம்பைப்போல/ படுத்தபடியே நகருகிறோம்”/ “இறைவன் வானிலிருந்து/ திராட்சைகளை வீசிக்கொண்டிருக்கிறார் மகளே!/ அவை புளிக்கும் திராட்சைகள்/ உனக்குப் பிடிக்காதல்லவா”.

இவையிரண்டும் போரின் வலியை காத்திரமாகச் சொல்லும் கவிதைகள். குறிப்பாக இவையிரண்டிலும் மையப்பாத்திரங்களாக குழந்தைகள் இருப்பதால் அதன் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கின்றன. போர்நிலத்திற்கு மிக அருகாமையில் (இராமேஸ்வரம்) இருப்பவரென்பதால் போரின் கொடூரத்தை அதனால் பாதிக்கப்பட்டவர்களின் மூலம் அறிந்து அதேசமயத்தில் அவற்றை வெறும் பிரச்சாரங்களாக இல்லாமல் சிறப்பான கவிமொழியோடு நல்ல கவிதைகளாக்குவதில் வெற்றிகண்டிருக்கிறார்.

இத்தொகுப்பில் அதிகமாக உபயோகிக்கப்பட்டிருக்கும் படிமம் எதுவெனில் “ஆப்பிள்” எனச் சற்றும் தயங்காமல் கூறலாம். மூளையாக, வெடிகுண்டாக, குழந்தையாக, காதலியின் கன்னமாக, எலிகுதறிய, சர்க்கரை நோயினால் அழுகிய உடலாக ஆப்பிள் உருத்தோற்றம் கொள்கிறது. ஐந்து பத்திகள் கொண்ட “ஒரு ஆப்பிளின் டைரியிலிருந்து” கவிதையிலிருந்து மூன்றாம் பத்தியினை மட்டும் இங்கு தருகிறேன். “எனக்காக இரண்டு ஆப்பிள்களை/ விட்டு வைத்திருக்கிறார்கள்/ அதிலொன்று எலிகளால் பாதி நொய்யப்பட்டது/ மற்றொன்று சர்க்கரை நோயினால்/ உடல் அழுகியது/ ஒருவனுக்கு இரண்டு ஆப்பிள்களென்பது/ அதிகம்தான்.

பல நல்ல கவிதைகள் தொகுப்பின் முதல் நாற்பது பக்கங்களுக்குள்ளேயே கடந்துவிடுகின்றன. மீதுமுள்ள பக்கங்களைக் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் கடக்கவேண்டியுள்ளது. கவிதைகளை அடுக்குவதில் இன்னும் கொஞ்சம் கவனமாயிருந்திருக்கலாம். பல கவிதைகளில் தேவைக்கதிகமான அல்லது தேவையற்ற வாக்கியங்கள் இருப்பதாகப் படுகிறது. “நள்ளிரவில் எல்லோரும் தனித்துப்போனதும் (பக் 29) கவிதையில் கடைசிவரி :இப்போது என்ன செய்வாள்?” ”வாழ்வின் விஷத்தன்மை” கவிதையில் “அரளிகளுக்கு யார் அரளி என்று பெயர் வைத்தது”. ”கூடாரமொன்றினுள் அடுக்கிய” (பக் 18) கவிதையில் வரும் ”பழஞ்சேர்த்தி, நியாபக அழுர்த்தி, நினைவடர்த்தி, மீள்மனதி” இவ்வாக்கியங்கள் வலிந்து திணிக்கப்பட்டவையாக, அயர்சியைத் தருபவையாக இருக்கின்றன.

நெய்தல் நிலக்காரரான ச.துரையின் கவிதைகளில் சில வரிகள் “எங்கள் உவர் நிலத்தில்” (பக் 7), ”அவளுக்கு எதிரே கடல் அமர்ந்திருந்தது” (பக் 21),ல் “அந்தப் பெண் தலைக்கு கரையோர உவர் நிலமே உடலாய் பரவி விரிந்திருந்தது”. “அதுவொரு பிரிதலின் சாட்சியமான” (பக் 44)ல் எனக்கு இந்த ஆட்டைக் கீறுவது, உவர் நிலத்தைக் கீறுவது போலிருக்கிறது/ வாழ்வாதாரத்திற்குப் பயனற்ற நிலமென்று அவிழ்த்து வீசப்பட்ட நெய்தலின் குடிகளை நினைவுபடுத்துகிறது. “டைலர் வில்பர்ட்” (பக் 64) “உவுச்சிக்காடு நன்னீர் வரலாறு சுமக்கட்டும்”. “மத்திகள்” என்ற தலைப்புள்ள கவிதையில் “என்ன நண்பா கனக்கிறதா? இல்லை தோழா கடல் இலகுவாயிருக்கிறது”. போன்ற சில வரிகள் ஆங்காங்கே அவர் சார்ந்த நிலத்தைப் பேசுகின்றபோதிலும், நெய்தல் நிலம் குறித்த வாழ்வியலும், அரசியலும் கொஞ்சம் போதாமையாக உள்ளன. எனினும் ஆறுமணி நேரத்தில் நான்கு வாலைமீன்களைப் பிடிக்கும் சர்லஸ் கர்த்தரை இருபத்தியாறு முறை கடலுக்குள் தூக்கிப் போடுவதென்பது ஒரு தீர்க்கமான பார்வையாகவே கொள்ளவேண்டியிருக்கிறது.

கவிதைகளுக்குத் தலைப்பிடுவதென்பது அவ்வளவு முக்கியமானதில்லைதான். ஆனால் ஒரு கட்டுரையாளானுக்குக் கவிதைகளைக் குறிப்பிடுவதில் கொஞ்சம் சிரமத்தைத் தருகிற விஷயம்தானே நண்பா.

துரையின் கவிதைகளில் உள்ள மிகமுக்கியக் குறைபாடாக எனக்குப் படுவது கவிதைகளின் சொல்லல் முறைதான் ஒரு கவிதை எங்கு முடியவேண்டுமோ அங்கு கச்சிதமாக முடிய வேண்டும். கவிதைக்கு எது தேவையோ, கவிதைக்குள் எது இருக்கவேண்டுமோ அவைமட்டுமே கவிதைக்குள் இடம்பெறவேண்டும். மாறாக துரை தான் சொல்ல எத்தணித்ததெல்லாம், தான் சொல்லவேண்டியதை கூர்மைப்படுத்துதல் குறித்த பிரக்ஞையின்றியோ அல்லது அதனைத் தனது தனித்துவ சொல்லல்முறையாக வரிந்துகொண்டோ சொல்ல விழைகிறார். கவிதைக்கும், கதைக்குமான இடைவெளிதான் அவற்றிற்கான வாசகர்களைத் தீர்மானிக்கிறன. ஆனால் ஒரு கவிதையை கதைபோல் நீட்டி முழக்கிச் சொல்லிச் செல்லுதலென்பது (கதைப் பானியிலமைந்த கவிதைகளல்ல) படிப்பவருக்கு அயர்ச்சியையும், தொய்வையுமே தரக்கூடியவை. என்றபோதும் மாயாஜாலத்தன்மை (magic) இழையோடும் அவரது பல கவிதைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவே உள்ளன. தற்காலக் கவிதைப்போக்குகளில் ச.துரை தனது கவிதைகளிலுள்ள சிற்சில குறைகளைக் களைவதன் மூலம் பல காத்திரமான கவிதைதைகளைத் தரக்கூடும்.


நூல் விபரம்

மத்தி

வகை : கவிதைகள்

ஆசிரியர் : ச.துரை

பதிப்பகம் :  சால்ட்

பதிப்பு ஆண்டு : 2019

விலை : ₹120


 

எழுதியவர்

அதீதன்
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
பூவிதழ் உமேஷ்
பூவிதழ் உமேஷ்
2 years ago

//துரை தான் சொல்ல எத்தணித்ததெல்லாம், தான் சொல்லவேண்டியதை கூர்மைப்படுத்துதல் குறித்த பிரக்ஞையின்றியோ அல்லது அதனைத் தனது தனித்துவ சொல்லல்முறையாக வரிந்துகொண்டோ சொல்ல விழைகிறார்// என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வது ஒட்டுத்த கவிதைக்குமான நிறுவல் ஆகவே தோன்றுகிறது அப்படி இல்லையெனில் சில இடங்களையாவது சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x