1
உருகிக்கொண்டிருக்கும் என்பு மஜ்ஜைகளில் ஒரு பெருவனத்தின்
ரகசியங்கள் பூத்து வெடிப்பதுபோல
யுக யுகங்கள் தோறும் சூரியன் எரிக்க காத்திருக்கும் பனித்துளி
வானிடை தவறி வீழும் எரிநட்சத்திரம்
எந்த நேரமும் அலையை வாரியபடி
இருக்கும் கடல்.
நிரப்ப நிரப்ப அன்பின் கனங்கள்
நிரவுவதில்லை என்ன.
சரளைக்கற்கள் உருண்டு
ஒரு இருள் நதியாகும் அபூர்வம் உன்னால் உணரமுடியாதது தேவா!
2
மூடிக்கிடக்கும்கால ரகசியங்களை மொத்தமாக
உள்ளீர்த்துக்கொண்டதாக ஒரு
கடலின் தோற்றம்.
உதிரும் இறகுச் சங்கீதங்களில்
பறவையொன்றின் குரல் தெளிப்பு.
அது உறங்கும் குழந்தையின்
ஒதுங்கிய கன்னச்சிரிப்பின் சூட்சுமம்
உருகும் பனித்துருவல்களில் வழியும்
முத்தங்களின் ஆன்மம்.
நடுங்கும் இந்த பிறவியின் சாரம்
தாழ்ந்தெழும் இமைகளின் விதிமீறல்கள்
திரளும் இருளில் ஒரு கண்ணாமூச்சி
ஆட்டத்தில் ஒளிந்து கொள்கிறது.
முத்தத்தில் உன்மத்தங்கள்
மெல்ல மூங்கிலென வெடிக்க
முகையவிழும் சங்குப்பூவில்
நீலமாகிறது வண்ணத்துப்பூச்சி.
3
வற்றாத சுனையை கமண்டலத்தில் அடைக்கப் பிரயத்தனப்படுவது போல
அதிரும் அணுக்களின் சந்தித்தலில்
ஒரு பறவையின் இறகு வெற்றிடம்
நிலத்தில் நிழலாகிறது
மீன்பூக்களின் சுவாசிப்பில் படிந்த
மணற்துகளென உதிர எத்தனிக்கையில்
மேலெழுந்து வாரிச் சுருட்டும் கரைத் தழுவல்கள்
துகளாக பரவும் முருக்கம்பூக் காடுகளின்
ஒட்டும் பார்வைகளைத் தவிர்த்து
இன்னதென்று அறியமுன்னதாக
ஊரி அழுத்தும் பாதப்படிவுகள்
நினைவுகள் பிசுபிசுக்க
குளிர்வித்தல் பொருட்டு ஒரு மழைப் பொழிவில்
படகு நகர்த்தும் இந்த விரல்கள்.
சர்ப்பத்தின் நெளிவை கண்டு
அசராமல் தவளை நெருங்க அனுமதிக்கையில்
கனவுகளை கடன் கேட்கிறது மஞ்சள் வெயில்.
அந்த கண்களின் சிவப்பு ஒளிக்கு
ஒரு மலைப்பருந்தின்
கூடிழந்த வன்மச்சாயல்.
எழுதியவர்
இதுவரை.
- கவிதை18 October 2021கயூரி புவிராசா கவிதைகள்