“போலந்தின் எல்லையை அடைந்தவுடன் அங்கே தயராக இருந்த ஜெர்மனியனின் கொடூர உளவுப்பிரிவான எஸ்.எஸ். ஆட்களிடம் எங்களை ஒப்படைத்தனர். அவர்கள் விலங்குகளை ஏற்றி செல்லும் ரயில் பெட்டில் அடைத்து அங்கிருந்து கிளம்பிய ரயில் ஏழு நாட்கள் எந்த உணவும் தராமல் ரயில் அப்படியே போனது, எங்களிடம் இருக்கும் உணவை மட்டும் வைத்துக்கொண்டு சாப்பிட்டு உயிர் பிழைத்தோம். ஆங்காங்கே வண்டி நிற்கும்போது இறந்த உடல்களை வயலில் வீசி மீண்டும் ரயில் புறப்பட்டது. நாங்கள் அங்கே சென்றவுடன் ஆண்களும் பெண்களும் தனியாக பிரிக்கப்பட்டு எங்களை வதை முகாமுக்கு கொண்டு சென்றார்கள். ஜெர்மானிய அரசுக்கு அடிமைகளாக இருந்து கடுமையாக உழைக்க 18 வயதிலிருந்து 50 வரை உள்ள உடற் பலமுள்ள ஆட்களை தவிர்த்து மீத அனைவரையும் உயிரோடு எரித்தார்கள். என் கண் முன்னே ஒரு வண்டி நிறைய கொண்டுவந்த குழந்தைகளை அப்படியே ஒரு குழியில் தள்ளி எரித்துவிட்டார்கள். நாங்கள் அனைவரும் யூதர்கள்” எலீ வீஸல் எழுதிய இரவு நாவலில் வரும் அவரின் சொந்த அனுபவ பதிவு . இந்த பகுதியை படிக்கும்போது உடல் நடுங்கிவிடுகிறது. எலீவிஸலின் தாய் தந்தை அவரின் மூன்று சகோதிரிகள் எல்லோரும் முகாமுக்கு கொண்டு சென்று கொல்லப்பட்டவர்களில் அவர் மட்டுமே மிஞ்சினார். ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதினால் ஹிட்லர் செய்த மனித உரிமை மீறல் கொடூரத்தின் உச்சம்.
இவ்வளவு கொடூரமான துயரங்களை எதிர்கொண்ட யூத சமூகம்தான் பாலஸ்தீன நாட்டில் அத்துமீறி நுழைந்து அதே வல்லாண்மையை பாலஸ்தீன மக்கள் மீது நடத்துகின்றனர். குறைந்தபட்ச மனித தன்மைகூட இல்லாமல் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பாலஸ்தீனின் பூர்வகுடிகள் முஸ்லீம்களை அழித்துவிட்டு தனது வல்லாதிக்கத்தை நிறுவும் நோக்கத்தோடு அனைத்து ஏகாதிபத்திய அமைப்புகளின் ஆதரவோடு நில ஆக்கரமிப்பு செய்கிறது யூதர்களின் தேசம் என்று அறிவித்துக்கொண்ட இஸ்ரேல்.
மக்கள் குவியலாக இருக்கும் இடத்தை தேர்வு செய்து அங்கே சக்திமிக்க ஏவுகணை தாக்குதலை தொடர்ச்சியாக நடத்துகிறது. எப்போதுமே பாலஸ்தீன பகுதிகளில் பிணவாடை காற்றிலிருந்து போகாமல் பார்த்துக்கொள்கிறது இஸ்ரேல். தாங்கள் வாழ்வதற்கு ஒரு தேசம் இல்லை என்று நாடோடியாக திரிந்த ஒரு இனக்குழு பல்வேறு தந்திரங்கள் மூலம் வல்லரசு நாடுகளின் துணை கொண்டு ஆக்கிரமிப்பு செய்து இன்னொரு இனக்குழுவை அழித்துக்கொண்டு இருக்கிறது.
சட்டமுரணான நில ஆக்ரமிப்பு
யூத தேசிய இன குழுவின் தத்துவ தந்தையாக கருதப்படுபவர் வழக்கறிஞர் தியோடர் ஹெர்சல். 1896 ஆம் ஆண்டு யூத அரசு என்ற ஒரு நூலை வெளியிட்டார். யூதர்களுக்கு என்று உலகத்தில் ஒரு தேசம் உருவாகும் என்ற கருத்தை முன்வைத்து அந்த புத்தகத்தை எழுதினார். அந்த தேசம் எப்படியான அமைப்பாக இருக்கும் என்பதை அதில் குறிப்பிட்டுள்ளார். யூத தேசிய உணர்வை அவர் செல்லும் இடமெல்லாம் முன்வைத்து பேசினார். . யூத மக்களுக்கான தேசத்தை உருவாக்க ஜியோனிசம்(Zionist organisation) என்ற ஒரு பொது அமைப்பை உருவாக்கினார்.
யூத மக்களுக்கென்று ஒருதேசம் வேண்டும் என்ற கனவை தியோடர்க்கு முன்பே யூத இனத்தின் சில அறிவு ஜீவிகள் முன்மொழிந்தார்கள். ஆனால் அந்த கோரிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக அமைப்பை உருவாக்கியது தியோடேரே. தனி தேசம் என்ற கோரிக்கையை எங்கெல்லாம் யூத இன மக்கள் வசித்தார்களோ அங்கெல்லாம் அமைப்பை அறிமுகப்படுத்தினார்.
ஐரோப்பாவின் பல நாடுகளில் வசிக்கும் யூத மக்கள் அந்த நிலத்தின் பண்பாட்டு நிகழ்வில் பங்கேற்பதின் மூலம் தங்களது இனத்தின் தனித்துவத்தை இழக்கின்றனர், வருங்கால சந்ததியனருக்கு நமது பண்பாடும் கலாச்சாரமும் உள்ள ஒரு யூத தேசத்தை உருவாக்க அணி திரள்வோம் என்ற கோரிக்கையை முன்வைத்து 1897ம் ஆகஸ்ட் 27 தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் சர்வேதேச யூத மாநாடு நடத்தி யூத விவசாயிகளை பிரிட்டிஷாரின் உதவி கொண்டு பாலஸ்தீனத்தில் குடியேற்றம் செய்வது என்று முடிவு செயப்படுகிறது. மேலும் அங்கே நிலங்கள் வாங்க பொது நிதியம் உருவாக்கவும் அந்த நிதியில் வாங்கும் நிலம் எப்போது யூத மக்களுக்கான பொது நிலம் என்று முடிவு செய்து அமுல்படுத்தப்படுகிறது. இப்படிதான் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நாடு உருவாகிறது.
வல்லாதிக்கத்தின் துணை
உலகம் முழுக்க பிரிட்டிஷ் தனது ஆளுமையை விஸ்தரிப்பு செய்யும் காலமது, ஜியோனிஸ்டுகளிடம் முதலில் ஆப்ரிக்கா நாடான உகண்டாவை தேர்வு செய்யுமாறு பிரிட்டிஷ் கூறியது. ஆனால் அந்த அமைப்பு மறுத்துவிட்டது. பழைய ஏற்பாட்டின் படி சமய ரீதியாகவும், கடவுளால் யூத மக்களுக்கு வழங்கபட்ட தேசம் பாலஸ்தீனம் என்ற நம்பிக்கையின் அடிப்படையை முன்வைத்தும் எங்களுக்குள் பிணைந்துள்ள நிலம் பாலஸ்தீன பகுதிகள்தான் என்றும் அதனையே தங்கள் இனத்துக்கு பிடுங்கி தருமாறு பிரிட்டிஷ்யிடம் ஜியோனிஸ்ட் அமைப்பு கோரியது மட்டும் அல்லாமல் அதற்காக எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தருகிறோம் என்றும் எப்போதும் பிரிட்டிஸ்க்கு சேவகனாக இருப்போம் என்று உறுதி கொடுத்தது.
சவூதி அரேபியா, ஏமன்,பாலஸ்தீனம்,லெபனான்,சிரியா, இராக், ஜோர்டான் போன்ற நாடுகள் உதுமானியப் பேரரசின் கீழ் இருந்தது. எண்ணை வளம் மிகுந்த ஒரு நிலபரப்பில் தங்களது அடிமை அமைப்பு ஒன்று இருக்க வேண்டும் என்று விரும்பிய பிரட்டிஷ் அந்த டீலுக்கு உடன்பட்டு “இந்த வச்சுக்கோ” அந்த நிலபரப்பில் வாழும் மக்களின் எந்த கருத்தையும் கேட்காமல் முதல் உலகப்போரில் வெற்றி பெற்றவுடன் அப்படியே அள்ளி கொடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாலஸ்தீன மக்களை கொன்று குவித்தது. இது முழுக்க முழுக்க பொருளாதார பின்புலத்தில் நடந்த ஏகாதிபத்திய சர்வதிகாரமே. அதற்காக 1917 ல் உருவாக்கப்பட்டதே பால்ஃபர் பிரகடனம். இந்த பிரகடனத்தில் பாலஸ்தீன நாட்டில் யூத தேசம் உருவாக வெளிப்படையான ஆதரவை பிரிட்டன் அறிவித்தது.
முதல் உலகப்போர் நடந்து முடிவதற்கு முன்பே சுமார் 40000 யூதர்களை குடியமர்த்தப்பட்டனர். அவர்களை கொண்டு கூட்டுப் பண்ணை அமைக்கப்பட்டு விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது. 6% மாக இருந்த யூத மக்கள் தொகை 1919 -1923 நான்கு ஆண்டுகளில் சுமார் 33000பேர் குடியமர்த்தப்பட்டு மக்கள் தொகை 12% உயர்ந்தது. ஒவ்வொரு கால இடைவெளிகளிலும் ஐரோப்பா நாடு முழுக்க சிதறி கிடந்த யூதர்களை குடியேற்றம் செய்து 1945 ல் பாலஸ்தீனத்தில் யூதர்களின் மக்கள் தொகை 31% உயர்ந்து தாங்கள் அசைக்க முடியாத சக்திகளாக அந்த மண்ணில் நிலை கொண்டனர்.ஐநா சபையில் பிரிட்டன் ஆதரவோடு தங்களுக்கான தனி நாடு கோரி யூதர்கள் கொண்டுவந்த தீர்மானம் 1947 நவம்பர் 29ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 33 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தது 13 நாடுகள் எதிர்த்தது, 10 நாடுகள் நடுநிலை வகித்தது. எதிர்த்த நாடுகளில் இந்தியா, கியூபா, போன்ற நாடுகள் இடம்பெற்றது. இந்தியா அப்போது இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்கவில்லை என்றாலும் 1950 ல் நேரு அங்கீகரித்தார். ஆனபோது ராஜிய ரீதியான உறவு 1992ல் தான் துவங்கியது. ஐநா சபையில் இந்தியா இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்த போது ஐன்ஸ்டின் நேருவுக்கு ஆதரிக்க சொல்லி கடிதம் எழுதிய வரலாறும் உண்டு. இஸ்ரேலை அங்கிகாரித்தாளும் இஸ்ரேலின் ரவுடித்தனத்தை எப்போதும் இந்திய கண்டித்து வந்துள்ளது. தற்போது இந்தியாவின் நடவடிக்கையில் சிறு தடுமாற்றம் தெரிகிறது, பல சம்பவங்களில் மௌனம் காப்பதும் பல தரப்பிலிருந்து கடும் கண்டனம் வருவதற்கு பின்னால் தனது நிலைபாட்டை அறிவிக்கும் போக்கும் இருக்கிறது.
ஆபிரகாம் வம்சாவளியை சேர்ந்த ஜேக்கப் இஸ்ரேல் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார், யூத இனத்தின் தலைவராக செயல்பட்டார் அவரின் நினைவாகவே 1948 நவம்பர் 14ம் தேதி “இஸ்ரேல்” என்ற பெயரில் யூத நாடு உருவானது. இஸ்ரேல் பகுதியில் தொடர்ந்து பிரிட்டன் ராணுவம் தொடர்ந்து அந்த பகுதியில் இருப்பதை விரும்பாத ரஷ்யா யூத தேசம் உருவானால் அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என்று கணக்கு செய்து யூத நாடு உருவாக ஆதரவு தெரிவித்தது. ஐநாவில் தீர்மானம் நிறைவேற முக்கிய காரணம்.
வல்லரசு நாடுகள் அனைத்தும் இந்த ஆக்ரமிப்பை மெளனமாக கடந்து சென்றார்கள். இஸ்ரேல் தனது இராணுவ பலத்தையும் உலக அமைதியையும் தனக்கு சாதகமான சூழலை கைகொண்டு யூத குடியேற்றத்துக்கு பெரிதும் துணை செய்யும் ஹகான மற்றும் இர்குன் என்ற இரு வன்முறை கும்பலை ராணுவமாக அங்கீகரித்து மேலும் நில ஆக்ராமிப்பு செய்தும் அந்த நிலத்தில் வாழ்ந்த பூர்வீக பாலஸ்தீனர்களை கொன்று குவித்தும் தங்களது இருப்பை பகாசுர வலிமையோடு நிறுவிக்கொண்டது.
அகதிகளாக சிதறி கிடந்த ஒரு இனக்குழு தங்களது இருப்புக்காக நியாமற்ற முறையில் இன்றுவரை ஒரு தேசத்தையே நிர்மூளமாக்கி வருகிறது. இந்த தொடர் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன விடுதலை இயக்கம் துவங்கப்பட்டது. யாசர் அரபாத் அந்த அமைப்பின் தலைவர் ஆனபின்பு தங்களது நியமான போராட்டத்தை உலக நாடுகள் முழுக்க எடுத்து சென்றார். அவரின் தொடர் போராட்டம் இஸ்ரேலுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒரு பயங்கிரவாத இயக்கம் அதை அழித்தே ஆகா வேண்டுமென்று தொடர்ச்சியாக பாலஸ்தீனம் நிலப்பரப்பில் இஸ்ரேல் வன்முறை தாக்குதல் நடத்திக்கொண்டே இருந்தது.
மறுபுறம் ஹமாஸ் இயக்கத்தின் தாய் அமைப்பான பாலஸ்தீன இஸ்லாமிய மையம் உருவாகுவதற்கு முதலில் இஸ்ரேல் அங்கீகரித்து துவக்கத்தில் இஸ்லாமிய மையம் கலாச்சார பணிகள், இஸ்லாமிய கல்வி, மருத்துவ செயல்பாடு போன்ற தொண்டு நிறுவன செயல்பாட்டில் இருந்தது. பின்னால் இஸ்ரேலின் அடவடித்தனதையும் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பையும் எதிர்க்கொள்ளும் மனநிலையில் ஹமாஸ் என்ற எதிர் தாக்குதல் அமைப்பு உருவானது. துவக்கத்தில் ஹமாஸை பாலஸ்தீன மக்கள் ஏற்கவில்லை காரணம் இஸ்ரேலின் ஆதரவு பெற்ற அமைப்பு என்ற நிலையில் பின்னால் அரசியல் செயல்பாட்டில் தீவிரமாக இயங்கியதும், அமைப்பின் ஸ்தபகர் ஷேக் அகமது யாஸின் இஸ்ரேலிய இராணுவ படையால் 2004ல் கொலை செய்யப்பட்டவுடன் ஹமாஸின் மக்கள் ஆதரவு பெருகியது.
சமரச உடன்படிக்கை
முன்னதாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் பாலஸ்தீனத்தின் தடுப்பும் தொடர்ச்சியாக அந்த பகுதி முழுக்க நிலவும் பதட்டத்தை தீர்க்கும்பொருட்டு நார்வே நாட்டின் முயற்சியால் சமரச நடவடிக்கை எடுக்கப்பட்டு 1993ல் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் வைத்து அரபாத்துக்கும் இஸ்ரேலிய பிரதமர் இட்செக் ராபினுடன் அமைதி ஒப்பதந்தம் செய்யப்பட்டது. அதன்படி இஸ்ரேலிய அரசை பாலஸ்தீன விடுதலை அமைப்பை அங்கீகரித்தது, பாலஸ்தீனர்களின் சுயாட்சி நிர்வாகமுறையை இஸ்ரேல் அங்கீகரித்தது. ஆனால் ஆக்கிரமிப்பு இடங்கள் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆனாலும் அரபாத் பயங்கிரவாத நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்று அவ்வப்போது இஸ்ரேல் குற்றம் சாட்டுவதும் அதை தொடர்ந்து தாக்குதல் நடப்பதும் தொடர்ந்தது. தாக்குதலையொட்டி இன்னும் சில நிலங்களை கையகப்ப்டுதுவதும் தொடர்கிறது.
யாசர் அரபாத்தின் சமரச உடன்படிக்கையை ஹாமஸ் இயக்கம் ஏற்கவில்லை. காசாவை தலைமையிடமாக கொண்டு ஹாமஸ் இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக மக்களை திரட்டியது. இந்நிலையில் யாசர் அரபாத் 2004 மரணம் அடைந்தார்.
கடந்த நூறு ஆண்டுகளில் பாலஸ்தீனம் பல நூறு தாக்குதல்களை சந்தித்துவிட்டது. இன்னும் அந்த மக்கள் தங்கள் நிலத்தை பாதுகாக்க போராடி வருகின்றனர். பாலஸ்தீன மக்கள் குண்டுகள் சத்தம் கேட்காத, கருகும் உடல்களின் பிண வாசனை இல்லாத நிம்மதியான நாளுக்காக ஒவ்வொரு நாளும் கண் விழிக்கின்றனர்.
அ.கரீம்
இரவு- நாவல் -எலீ விஸல்
ரத்த சரிதம் – அபூ ஷேக் முஹம்மது
இரத்தம் வழியும் யுத்த பூமி – கட்டுரையாளர் இரா.ஜவஹர்
அமெரிக்க+இஸ்ரேல்=உலக பயங்கரவாதம் – எஸ்.வீ.ராஜதுரை
இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஒட்டமான் பேரரசு – பிபிசி தமிழ் கட்டுரை
எழுதியவர்
இதுவரை.
- அரசியல்20 July 2021பற்றி எரியும் பாலஸ்தீனம்