01
உழுது தவாளிப்புற்ற நிலத்தின் வரிக்கோடுகளை விரலால் கலைத்துவிடுகின்றேன்.
முளைதகவுறும் வித்தின் கண்கள் புலர்கின்றன
அள்ளிவீசிப்பரப்பில்
கிளைக்கின்றது தளிர்வேர்.
தாகம் மேலிட்ட கொக்கின் ஒற்றைக்காலில் தகிக்கிறது வெய்யில் முறிந்து
கசிந்த நீர்த்தடாகம்
காற்றில் தலைவருடுகிறது நுண்அலை
புதுப்பிக்கப்பட்ட நீற்றுமணலில் பொங்கும் நீர்க்கொப்புளங்கள்
நண்டின் விரல் பற்றும் எண்புள்ளிகளில் தோய்கிறது ஈரம்.
02
நதிப்படுகையில் வானம்
நீளும் பெருநீலப்புகை
ஆதூரமாய் கண்களுக்கு அப்பால்
வீழ்ந்து நிழல் தேடும் கருமேகம்
நனைந்த வழுவடர்ந்த பாசித் தரையாகும் குறுநிலம்
மெத்தக்கனிந்த கனி
கோதுடைத்துக் கிளைக்கும் பெருவிருட்சம்
முழுவதும் பறவை அலகில் சரியும் சிறுதுண்டம்
கிறங்கிக்கொள்ளும் மதுசாரம் பசைஅப்பிய சாமரங்கள் கண்கள்
தோற்றுக்கொண்டே சரியும் தவறல்
ஒத்திசைக்கும் நடனக்காலில்
மேலேறிக்கொள்ளும் பாத இலட்சணை
விரலசைவில் முத்திரை மறக்கும் பேய்மை
சுழலும் நனியொளி
சூட்சுமமாய் முளைக்கும் சிறகுகள்
அதில் பசையேற்றும் காந்த முனை
வானரத்தின் தாவலில் அதிரும்
வனாந்தச் சருகுநிலம்
அரவங்களை வளர்க்கும் பச்சிலைப்பூச்சி
தீண்ட மறுக்கும் விஷமம்.
03
திரைவிலகும் இருகடல்கள்
கோதுடையும் வால்நட் மலை
புற்றரை செதுக்கும்
எந்திரப்பொறியின் தவாளிப்பில் குவியும் மையத்தில்
அச்சுப்பதிக்கும் இதயவடிவ நிறமி
பச்சையம் துறக்கும் அடவித்தருக்கள்
புயற்காற்றைப் பிசையும் மரக்கிளை,
மயிலிறகில் தலைசீவும் காகிதப்பக்கங்கள்
துருத்தும் ஒளிச்சிமிழ்
தூரமாய் தள்ளி விசிறும் பூச்சிநாசினி
அவிழும் மேகத்திரள்
அகழும் ஆழ்துளைக்கிணறு
அதில் தலைகீழாய் திணறும் மழை.
– மின்ஹா
எழுதியவர்
இதுவரை.
- கவிதை18 July 2021மின்ஹா கவிதைகள்