23 November 2024
Kayal Story copy

கால் தடுக்கிவிடாதிருக்க தன் பருத்திப் புடவையைக் கவனமாக இழுத்துப் பிடித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறப் போன குழலியின் காதில் தெருவில்  நின்றிருந்த சிறுவர்கள்  பேசுவது கேட்டது.

” நம்ம எழிலுக்கா… டே என்னடா சொல்ற… ?

காதைக் கூர்மையாக்கிக் கொள்கிறாள்.

“ஆமாம்டா. உடம்பு சரியில்லாம முந்தாநேத்து அவனை ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம் நிலமை மோசமா இருக்காம் ”

திக்கென்றது. நெஞ்சுக்குள் இரைச்சலாக ஒரு பேரலை எழும்பியது.

“போலாங்களா டீச்சர்?” ஆட்டோக்கார சுந்தரம் அண்ணனின் குரல் கேட்டதும் பள்ளிக்கு நேரமானது நினைவுக்கு வர வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

“நடு ரோடுல நிக்குறானுங்க பாருங்க டீச்சர்” என்று சொல்லிக் கொண்டே எஃப். எம் ரேடியோ ஒலியை அதிகப்படுத்தினார் சுந்தரம்.

“தோளில் சாய்ந்து கதைகள் பேச நமது விதியில் இல்லை” ஒலிக்கத் தொடங்கிய அந்தக் கரகரப்பான குரல் உருவாக்கிய துயர வெளியில் மனம் சருகென அலைந்து சுழல தன்னை மறந்தவளாக விழிகளை மூடிக்கொண்டாள். பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக நகராட்சியால் தோண்டப்பட்டு பல மாதங்களாக மூடப்படாத பள்ளங்கள ஒன்றினுள் ஆட்டோவின் சக்கரங்கள் சிக்க தடாலென பூமிக்கு இழுக்கப்பட்டவளாகக் கண்களைத் திறந்தாள். ஒரு உறுமலோடு ஆட்டோ மீண்டும் நகரத் துவங்கியது.

எழில்… ரஞ்சிதத்தினுடைய மகன் அவனுக்கு என்னவாயிருக்கும்? சொல் மனதைத்தானே தீய்க்கும் உடலையும் சுடுமோ? கைகள் நடுங்க ஆட்டோவின் கம்பியை இறுகப் பற்றினாள் குழலி.

ட்ருக்விக்…. ட்ருக்விக்…ட்ருக்விக்…. விடாப்பிடியாக ஒரு பறவை பாடுங் குரல் எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருந்தது.

“கோடாலிக் கொண்டை கூட போடத் தெரியாத என்னா பொம்பளப் புள்ள. என்னிய தான் பேசப் போறாங்க கட்டிக் குடுக்குற ஊட்டுல” எனும் அம்மாவின் குரல் வழக்கப்படி மனசில் கேட்டுக் கொண்டே தான் அவசர அவசரமாக தலையில் ஒரு க்ளிப்பை செருகி புரண்டுகிடக்கும் மொத்த முடியையும் அடக்கித் தெருவில் இறங்கி அரக்க பரக்க நடந்தாள். காந்திநகர் வீட்டுக்கு வந்த இந்தப் பத்து வருடங்களில் எந்த சண்டை சச்சரவுக்கும் போகாதவள். கல்லூரித் தோழி ஒருத்தி “குழலி வீடு எங்க இருக்குங்க?” என்று இவள் பெயரைச் சொல்லிக் கேட்டபோது தெருவில் யாருக்கும் அவளைத் தெரிந்திருக்கவில்லை. “பள்ளிக் கூட டீச்சரா? அப்படிக் கேளுங்க. அதோ அந்த பச்சை கிரில் போட்ட வீடு” என்று காட்டினார்கள். குமாரின் வண்டியிலோ, ஆட்டோவிலோ, கால் டாக்ஸியிலோ அவள் போவதை மட்டுமே பார்த்திருக்கிற தெருப் பெண்கள் விசுக்கு விசுக்கென அவள் நடந்து போவதை விநோதமாக பார்த்தார்கள். நெகு நெகுவென்ற உயரத்திற்கு ஏற்ற நீளமான கை விரல்கள். நடக்கும் போது பக்கத்தில் யாராவது வந்தால் இவள் கையை வீசும் வேகத்தில் அடுத்திருப்பவர் மேல் படுமளவு வேகமாக தான் சிறு வயது முதலே நடக்க முடிந்தது அவளால். காய்கறிகளோடு ஒரு தள்ளுவண்டி அவளைக் கடந்து போனது.

சொந்தங்கள் ஏமாற்றியது போக பிறந்த ஊரான ஆரணியில் மிஞ்சியிருந்த கொஞ்ச நிலத்தில் இருந்து அப்பா ஒரு செவ்வாழைக் கன்றினைக் கொண்டு வந்திருந்தார். இரண்டு நாட்களாக அலைபேசியில் அழைத்து சொல்லிக்கொண்டே இருந்தார் ” மா மாப்பிள்ளைய வர சொல்லுமா. அடிமண்ணு காயறதுக்குள்ள வெச்சிடணும் மா” இது முதல் நாள். அடுத்த நாள், “நான் வேணா வந்து வச்சிரவா? அந்த டவுன் பஸ்ஸூல நெருக்கியடிச்சி நின்னுக்கிட்டு வாழைப்பந்தல்ல இறங்கி  நடந்து போயி ,  தோட்டத்துல  வளந்துருக்கிற கன்னுகள்ல இருந்து இதுங்களைத் தேடிப்பாத்து எடுத்தாந்தேன்.   கொண்டாந்து ரெண்டு நாளாச்சுமா.  மண்ணுல ஊனலியானு என்னியவே அதுங்க மொறச்சிப் பாக்குறாப்புல இருக்கு”.

நான்கைந்து முறை குமாரிடம் சொன்னபோது தலையை மட்டும் ஆட்டினான். பிறகு கொஞ்சம் அழுத்தம் கொடுத்து சொன்னதும், “நாலு செவ்வாழைப் பழத்த வாங்கினமா, சாப்பிட்டுட்டு  தோலை வீசினமான்னு இல்லாம, இதென்ன தொல்லை? உங்கப்பாவுக்குத் தான் அறிவில்ல. உனக்குமா?. எனக்கு ஆபீசில வேலை தலைகு மேலயிருக்கு” என்று பதில் வந்தது.

“இருமா தாயி. பேப்பரு பேனா புடிக்கிற கையி. மம்பட்டியெல்லாம் புடிச்சா காப்பு காச்சிரும். நீ நகரு”  என்றவர் வீட்டின் பின்புறம் இருந்த தோட்டம் என்று அவள் சொல்லிக் கொள்கிற மிகச் சிறிய காலி இடத்தில் குழியை வெட்டத் தொடங்கினார். வெளியே எட்டிப் பார்த்த சிறு சிறு கற்களைத் தள்ளி, பொசு பொசுவென நல்ல மண் வரும்வரை தோண்டினார். வியர்வை வழிந்து உடலில் சட்டை ஒட்டிக்கொண்டிருந்தது. போதும் என்றாலும் கேட்காமல், “பார்க்க நல்லா இருந்தா போதுமா? கன்னு  மண்ணுல வேர் புடிக்கணும். ” அவருக்கு திருப்தியாகும் அளவு மண்ணைத் தோண்டிவிட்டிருந்தார். பிறந்த குழந்தைய தூக்குவது போல அந்த செவ்வாழைக் கன்றை எடுத்துத் தாயிடம் சேர்க்கும் செவிலி போல மண்ணில் ஊன்றினார். ” பொம்பளப் பிள்ளைய மாமியார் வீட்டுக்கு சீரோட அனுப்புறாப்ல தான் இந்தக் கொஞ்சூண்டு மண்ண அதோட சொந்த நெலத்திலேர்ந்து எடுத்து வந்திருக்கறதும்.  வந்த நிலத்தை நம்பி அது வேருவிட்டு தழைச்சு நிக்கறது இனி உங்கையில தான்” என்றபடி பக்கம் பக்கமாக சீரான இடைவெளிவிட்டு அவர் வெட்டியிருந்த மூன்று குழிகளிலும் ஒவ்வொன்றாக வைத்தார்.

அப்பாவை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த  குழலிக்குத் தன் சிறுபிராயம் நினைவுக்கு வந்தது. அவர்கள் வேலப்பாடியில் இருந்தபோது வீட்டின் பின்புறம் இருந்த காலி மனைகளில் ஏராளமான காட்டுச் செடிகள் இருந்தன. ஒவ்வொரு செடியையும் காட்டி அதன் பெயரைச் சொல்லியபடியே தான் அவளைக் காலை நடை அழைத்துச் செல்வார் அப்பா. அடர்த்தியாக வளர்ந்திருந்த கருவேல மரங்களுக்கும் புதர்களுக்கும் இடையே ஊமத்தம் பூக்கள், ஆமணக்குச் செடிகள், சீமை அகத்திச் செடிகளின் நடுவே கொத்தாகப் பூத்திருக்கும் மஞ்சள் நிறப் புதர் மெழுகுவர்த்திப் பூக்கள், அவற்றின் மீது பரவிப் போர்த்தியிருந்த சிறு கிளைகள் என ஒரு மரகதப் பச்சை நிறக் கூடாரமாக இருந்தது அந்த இடம். பட்டாம்பூச்சிகள், தும்பிகள், வயிற்றில் மட்டும் மஞ்சள் பூசிக் காணப்பட்ட உள்ளங்கை அகலத் தேன்சிட்டுகள் என எல்லாமும் தென்பட ,அது ஒரு சிறு வனம் போலிருக்கும். நிறைய  பறவைகள் அந்தப் புதர்களில் கூடு கட்டியிருந்தன. குழலி அந்த இடத்தைக் “பூ வீடு” என்று தான் அழைப்பாள். “பூ வீட்டுக்குள்ள ஒரு தரம் நாம போகலாம்ப்பா …பா பா ப்ளீஸ். அந்தப் பறவைக் குஞ்சுகளை கிட்டக்கப் போய்ப் பார்க்கலாம்” என்று அவருடைய முகவாயைப் பிடித்துக் கெஞ்சுவாள் குழலி.

அப்பா, “உன்னோட அடுத்த பொறந்த நாளுக்குக் கூட்டிப் போறேன்” என்று சொல்லிக் கொண்டே இருந்தாரே தவிர அவளை அதற்குள் போக அவர் ஒரு நாளும்அனுமதிக்கவே இல்லை. ஒரு நாள் சோவென மழை கொட்டிய நள்ளிரவில் திடுக்கிட்டு விழித்தவள் உடனே அப்பாவை எழுப்பினாள். “அப்பா அந்தப் பூ வீட்டுக் குட்டிப் பறவையெல்லாம் இப்ப எங்கே போகும்? நனஞ்சிட்டிருக்குமா?” என்று கவலையோடு கேட்டபோது “இல்ல குழலி. அதோட அம்மா அப்பா அதுகளைப் பத்திரமா கூட்டுக்குள்ள வச்சிருக்கும்”  என்று மகளை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார்.

ஆறடி உயரமான அப்பாவின் கம்பீரம் அவருடைய பேச்சிலும் எப்போதும் இருக்கும். வியர்வை வழிந்து கொண்டிருந்த முன் நெற்றியை வருடியவாறு பெருமிதமாக “இப்ப வாம்மா. உன் கையால கொஞ்சம் தண்ணி விடு” என்று மண் பூசியிருந்த தன் கைகளை வாழைக் கன்றுகளின் அடியிலேயே கழுவிக் கொண்டார். அது கை கழுவுவது போலவே இல்லை. சாப்பாடு ஊட்டிய பிறகு முந்தானையால் அம்மா என் வாயைத் துடைத்து ஈரக் கையை விசுறும்போது முகத்தில் சிறிது நீர் தெறிப்பது போலிருந்தது. ஐந்து நிமிடங்கள் கூட உட்காராமல் கிளம்பிப் போனார். போகும் போது திரும்பிப் பார்த்துக் கொண்டே போவது தெரிந்தது.

மறுநாள் காலையில் எழுந்து சமைத்து, பாத்திரங்களைக் கழுவி, குளித்து, இரவே தேர்ந்தெடுத்து ஹாலில் போட்டிருந்த பருத்திப்  புடவையைக் கட்டியபடியே தண்ணீரும் டிஃபன்பாக்ஸும் எடுத்து வைத்துக் கொண்டு வேகவேகமாகப் படியிறங்கும்போது தான் குழலிக்கு செவ்வாழை நினைவுக்கு வந்தது. அப்படியே எல்லாவற்றையும் கூடத்தில் வைத்துவிட்டு புடவையை முழங்கால் வரை தூக்கிப் பிடித்துக் கொண்டு பின்வாசல் கதவின் பூட்டைத் திறந்தாள். சிறு சிறு தொட்டிகளில் இருந்த புதினா, துளசி, கற்றாழை செம்பருத்திச் செடிகள் ஏக்கத்துடன் பார்ப்பதைப் புறக்கணித்து செவ்வாழைகளுக்கு மட்டும் வேக வேகமாக நாலு சொம்பு நீர் ஊற்றினாள். பேப்பரில் இருந்து தலையை உயர்த்தி அவளைப் பார்த்து விட்டு மறுபடியும் படிக்க ஆரம்பித்தான் குமார். இது அவளை வம்பிழுக்க எனத் தெரிந்து இருவருமே புன்னகைத்துக் கொண்டார்கள். “மிஸ்டர் கொமாரு! எடுத்து வச்சிருக்கறதை மிச்சம் வைக்கமால் சாப்பிடுங்க போதும்” என்றபடி பள்ளிக்குக் கிளம்பிப் போனாள்.

தினம் காலை கண் விழித்ததும் உள்ளங்கைகளை விரித்துப் பார்த்து பிறகு நேராக பின்புறக் கதவின் கிராதி வழியாக செவ்வாழையை எட்டிப் பார்ப்பதற்கு ஏழு மாதமாகப் பழகியிருந்தாள். சில நாட்கள் இதைக் கவனித்த குமார் “ஒவ்வொரு இலையா எண்ணுறியாமா?” என்று கிண்டலடித்தானே தவிர அவள் உண்மையிலேயே அதைத் தான் செய்கிறாள் என்று அவனுக்குத் தெரியாது. பொறுத்துப் பொறுத்து பார்த்தவள் ஒரு நாள் அப்பாவை அலைபேசியில் அழைத்தாள். ” அட இதென்ன வேடிக்கையாயிருக்கிறதே! காசிப்பட்டு கடுக விலை போகும் காஞ்சிப்பட்டு இருந்து விலைபோகும்னு தெரியாதா உனக்கு? அதென்ன மஞ்சள்வாழையா இல்ல ரஸ்தாலியா? செவ்வாழம்மா. செவ்வாழை. பொறுமையாதான் வளரும். குலைதள்ள இப்ப என்ன அவசரம்?” என்றபோது அடிவயிற்றைத் தடவியபடி சமாதானமடைந்து அலைபேசியை வைத்தாள். ஓரங்களில் மட்டுமே ஒரு மெல்லிய செவ்வண்ணத் தீற்றலுடன் இருந்த பசும்பச்சை இலைகள் அவளைப் பார்த்துத் தலையசைத்தன.

“கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற மரமே இல்லை. சலிக்காமலே கண்டம் தாண்டுமே” மெல்லிய குரலில் பாடியபடி செவ்வாழை மரங்கள் ஒவ்வொன்றுக்கும் நீர் ஊற்றினாள். பக்கத்து வீட்டில் மேல் தளம் கட்டுவதால் இலைகளில் படிந்திருந்த தூசுகளை குண்டானை வாகாகப் பிடித்து மேலிருந்து நீர் ஊற்றிக் கழுவினாள். இலைகள் பளிச்சென்று சிரித்தன. அணைத்து முத்தமிட வேண்டும் போல அத்தனை அழகாக இருந்தது.

பக்கத்து வீட்டு ரஞ்சிதம் வந்து “சாமிக்கு படைக்கணும். ஒரு ரெண்டு எல எடுத்துக்கவா?” என்றபோது  வெறுமனே தலையாட்டினாள். “டே எழிலு, இந்தா வா” என்று ஐந்தாம் வகுப்பு படிக்கிற தன் மகனுடன் உள்ளே வந்தாள். இது வாடிக்கையாக ஆனபோது ஒரு முறை குமாரிடம், “அடுத்த தடவை கேட்க்கட்டும். ‘யம்மா இலை வாங்க பத்து ரூவா பணம் வேணா தந்துடுறேன்’ னு சொல்லப் போறேன்” என்று பொருமினாள். ஆனாலும் பத்து நாட்கள் கழித்து மறுபடி ரஞ்சிதம் வந்தபோது “சரி. எடுத்துக்குங்க” என்றாள் தீனமான குரலில்.

புயல் அறிவிப்பால் பள்ளிக் கூடம் மூன்று நாட்கள் விடுமுறை என சர்க்குலர் வந்தபோது நாளை தாமதமாக எழுந்து கொள்ளலாம் என மனசு துள்ளாட்டம் போட்டது. வீட்டுக்கு வந்து முகம் கழுவித் தலையைப் பின்னலிட்டு தொலைக்காட்சியை வைத்தாள். “நேற்றிரவு முதல் வீசும் கடும் சூறைக் காற்றால் நகரின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. தென்னை மரங்கள் வாழை மரங்கள்….” செய்தியில் தெரிந்த காட்சியைப் பார்த்தாள். குழலிக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது.  கொள்ளை நோயால் மொத்தமாக செத்துப்போன சடலங்களை இடமில்லாமல்  வரிசையாக படுக்க வைத்திருந்தது போல வயல், வரப்பு என்று பேதமில்லாமல் எங்கும் சாய்ந்து கிடந்தன வாழைமரங்கள். பின்பக்கம் ஒடிப்போய் தனது வாழைகள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள்.

முதல் நாள் காலையில் கண்டுபிடித்துக் குதூகலத்துடன், அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பிக் கூட்டிப் போய்க் காண்பித்த போது இருந்தது போலவே மூன்று நான்கு இலைகளுக்குக் கீழே தன்னை மறைத்துக் கொண்டு இருந்தது செவ்வாழைக் குலை. இப்போது நிறைய காய்களுடன் வனப்பாக இருந்தது. “இலயையெல்லாம் எண்ணுனியாமே! அது மாதிரி காயை எண்ணினா வளராது பாத்துக்க” என்ற அம்மாவின் எச்சரிக்கையால் அதைச் செய்வதில்லை அவள். புயல் செய்திகளைப் பார்த்ததில் இருந்து அரை மணிக்கொரு முறை கொல்லைப்புறக் கதவைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள். இரவெல்லாம் தூங்காமல் புரண்டு கொண்டிருந்தாள். நள்ளிரவில் ஒரு முறை லைட் போட்டபோது, குமார், “ஒன்னும் ஆகாது. காலையில் பார்த்துக்கலாம் தூங்கு” என்றான்.

காலையில் முதல் குருவியின் சத்தத்திற்கே எழுந்துபோய்ப் பார்த்தாள். பள்ளிக் கூடம் விட்டதும் அம்மாவிடம் ஓடிவரும் குழந்தையின் முகமலர்ச்சியோடு இருந்தன புதுமழையில் நனைந்த வாழைமரங்கள். மூன்றையும் ஒன்றாகவே நட்டாலும் ஒன்று மட்டுமே குலைவிட்டிருந்தது. “செல்லக்குட்டி! பத்திரமா இருப்பியாம்!” என்று தொடங்கி அவள் ஏதேதோ பேசியதை மற்ற வாழை மரங்கள் தமக்கும் சொன்னது போலத் தலையாட்டின.

பயிற்சி வகுப்புக்காக குழலி ஐந்து நாட்கள் சென்னையில் தங்க வேண்டியிருந்தது. அன்று மதியம் அவள் அழைத்தபோது, “நான் சாப்ட்டேன்மா. அதெல்லாம் கவலைப்படாத. நீ சாப்ட்டியா?” எனப் பேசத் தொடங்கியவன் “ஏங்க, மறக்காம வாழை மரத்துக்கு தினம் கொஞ்சம் தண்ணி விடுங்க!” என்றதும் “வேணா கான்ஃபரண்ஸ் கால் போடட்டுமா மா” என்று சிரித்தான். அதற்குப் பிறகு தினம் அவளை அழைத்துப் பேசும்போது அவனே, “தண்ணி ஊத்திட்டேன். ஆனா, முணு முணுன்னு எதோ பேசுவியே அதெல்லாம் செய்யல” என்ற போது சிரித்தாள். சந்தோஷமாக இருந்தது.

வியாழக்கிழமை இரவு வீடு வந்து சேர்ந்தவள் கைகாலைக் கழுவிக் கொண்டு உடனே மரங்களிடம் போனாள். தளர்வும் செழிப்புமாக ஒன்பதாம் மாசத்துப் பிள்ளைத் தாய்ச்சி போல இருந்தது. இலைகளை, தண்டுகளை, மேலிருந்து ஒவ்வொன்றாக தடவினாள். அடிமரம் வரை தொட்டுப் பார்த்தாள். கண்களில் நீர் கட்டிக் கொண்டது. காற்றிலாடிய ஒரு இலை கண்ணருகே விசிறித் துடைத்தது.

பயிற்சியில் என்னென்ன நடந்தன என்பதை எல்லாம் குமாரிடம் பேசிச் சிரித்து நிம்மதியாக உறங்கிப் போனாள். அப்பாவை வரச் சொல்லி அடுத்த நாள் மதியம் போல குலையை வெட்டிருவோம் என்று தூக்கத்தின் இடையே நினைத்துக் கொண்டாள்.

அன்று வழக்கத்தை விடவும் தாமதமாகத்தான் எழுந்தாள். கொல்லைப் புறக் கதவு திறந்திருப்பதைப் பார்த்தவள் ஆச்சரியத்துடன்  தோட்டத்துக்குள் நுழைந்தபோது குமார் நின்றிருப்பது தெரிந்தது. தோள் மீது கை வைக்க, திரும்பிய முகத்தில் பதற்றம் நிறைந்திருந்தது. “வாழைக் குலைய காணோம்” என்றான். அவனுடைய கிண்டல் புரிந்தவளாகச் சிரித்து ” பரவால்லியே. அப்பாவைக் கூப்பிடலாம் னு இருந்தேன். நீங்களே அறுத்திட்டீங்களா? கொஞ்சம் நேரம் இருந்திருந்தா நா கூடமாட ஒத்தாச செஞ்சிருப்பேனே” என்றபடி கோணியைப் பரத்தி வைத்து குலையைத் தரையில் சாய்த்து வைத்திருக்கிறானா, டைல்ஸ் கறையாகிவிடப் போகிறது என ஒவ்வொரு அறையாகப் பார்த்துவிட்டு வருகிறாள்.

“எங்க வச்சிருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே திரும்ப வந்தபோது தான் அவன் முகத்தின் கலவரத்தை முழுதாக உணர்ந்தாள். “காணோம் னா?” என்று கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் குலை வெட்டப்பட்டுக் கிடந்த மரத்தைப் பார்த்தபடி நின்றான். அவள் அனிச்சையாக மற்ற இரு மரங்களைப் பார்த்துக் கையை விரித்தாள். அவை அசையாது இருந்தன. தள்ளாடி குமாரின் கைகளைப் பிடிக்க முயற்சி செய்து முடியாமல் தரையில் விழப் போய் சமாளித்து தொப்பென்று அங்கேயே உட்கார்ந்தாள்.

கண்களில் நீர் மினுங்கியது. புத்தியில் இது யாரா இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. தெரியாதவர்கள் செய்ய வாய்ப்பேயில்லை. அப்ப யாரோ பார்த்துக்கிட்டே இருந்தவங்க தான் இது செஞ்சிருக்கணும். ஒரு ஆள் கால் வைத்து எகிறிக் குதிக்குமளவு தாழ்வான காம்பவுண்ட் சுவர் தான். ஆனால் இதுவரை எதுவும் இப்படி நடந்தது இல்லை. திருடப்பட்டுக் கிடந்த வாழைமரக் குலை வழியே தெரிந்த வெளிச்சத்தில் பக்கத்து வீட்டு ஜன்னல் திறப்பதும் இவளைப் பார்த்ததும் ஒரே நொடியில் ரஞ்சிதம் தன் முகத்தை உள்ளுக்கு இழுத்துக் கொள்வதும் தெரிந்தது.

ஆங்காரத்துடன் வேகவேகமாக தக்கு தக்கென்று நடந்து கூடத்தைக் கடந்து வாசலுக்கு வந்து தெருவில் இறங்கினாள். இதுவரையில் அவளுக்கே தெரியாத ஒரு குரல் அடிவயிற்றில் இருந்து கிளம்பியது.

“யாரு எடுத்தீங்களோ அவங்க நல்லா இருக்கமாட்டீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க. படிச்சவுங்க அமைதியா போறாங்கன்னா ஏமாளினு நெனச்சீட்டீங்களா? ராத்திரி பகலா பொத்திப் பொத்தி புள்ளயாட்டம் பாத்து வளத்தேனே! இப்புடி களவாணித்தனம் செஞ்சிட்டீங்களே! என் வயிறெரிஞ்சி சொல்றேன் உங்க வம்சம்…..உங்க வம்சம்….” என்றவள் என்ன சொல்வது எனத் தெரியாதவள் போல மீண்டும், “நல்லாவே இருக்க மாட்டீங்க. எடுத்த கை வெளங்காது. ஆம்மா” என்று சாமியாடியின் மலையேறும் குரலில் சன்னதம் வந்தவள் போல் உச்சஸ்தாயியில் கத்தினாள். இதைக் கொஞ்சமும் எதிர்பாராத குமார், “ச்சீ! என்ன இது! ஒரு வாழைக் குலைக்காகப் போய்….. சரி. சரி. அழாதே. வா. முதல்ல உள்ள வா” என்று சமாதானப்படுத்தி உள்ளே கூட்டிப் போனான்.

ஆசிரியர்கள் அமரும் அறைக்கு எதிரே இருந்த சிறுநெல்லி மரத்தின் மீது சொல்லி வைத்தாற்போல் பத்து மணி வாக்கில் கூட்டமாக வந்து உட்கார்ந்து கொண்டு எதையாவது நசநசவென்று பேசும் ஆறேழு தவிட்டுக் குருவிகள் இன்றும் வந்தமர்ந்து கொண்டிருப்பது ஜன்னலின் வழியே தெரிந்தது. “நான் ஏன் அன்னிக்கு அப்படி பிசாசு மாதிரி நடந்துகிட்டேன்?”  நிழலுக்கு யாரோ நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தின் முன் பக்கக் கண்ணாடி மீது அமர்வதும் பறப்பதுமாக இருந்தது ஒரு தவிட்டுக் குருவி. “இவ்வளவு வன்மமா என் மனசுல…நானா அது?  பசங்களுக்கு நல்லது சொல்லிக் கொடுக்கிற இந்த நான் நிஜமா? இல்ல, ஒரு வாழைத் தாருக்கு வம்சத்துக்கே சாபமிட்ட அந்த நான் நிஜமா?” கண்ணாடியில் தெரிகிற தன் உருவத்தைப் பார்த்து திடுக்கிட்டது போல சில நொடிகள் அந்தக் குருவி ஆழ்ந்து கண்ணாடியையே பார்ப்பது தெரிந்தது. பிறகு கண்ணாடியில் தெரிந்த பிரதிபலிப்பைக் குருவி கொத்தத் துவங்கியது. “குழலி மிஸ் இங்க வாங்களேன்” சக ஆசிரியையின் குரல் நிகழ் உலகிற்கு அவளை மீட்டுக் கொண்டு வந்தது.

பள்ளி முடிந்து வீடு வந்ததுமே கைப்பை சாப்பாட்டு பைகளை வைத்துவிட்டு வேகவேகமாகக் கிளம்பினாள்.  வாழைக் குலை திருடு போன  அன்று அம்மா ஃபோனில் பேசியது வாழைமட்டையால்  அடித்தாற் போல இப்போதும் வலியுடன் நினைவுக்கு வந்தது. “அதென்ன அப்படி ஒரு வார்த்தை! எப்படி வந்துச்சு அந்த சொல்லு! ஆத்திரத்தில் வந்துடுச்சு னு சொல்லிட முடியுமா? நெஞ்சுல இருந்த விஷம்தான் வாய் வழியா தெறிச்சு வந்துருச்சு! நாலு புள்ளைங்களுக்கு பாடம் சொல்ற நாக்காச்சே! அது இப்படி பேசலாமா? அட! அவ திருடித் தான் இருக்கட்டுமே. என்னா போயிடுச்சு இப்ப? அவ எடுக்கலனா ஒரு சீப்பு வாழப்பழத்த அவளுக்குத் தராம விட்ருப்பியா? எங்கூட்டு செவ்வாழை எம் மரத்துச் செவ்வாழை னு உன் பவிசக் காட்டிக்கிட்டு எதிர்வீடு, அந்தப் பக்க வீடு, பள்ளிக்கூடம், மாப்புள்ள ஃபிரெண்டுங்க னு பங்கு போட்டுத் தந்துட்டு, என்னா ஒரு சீப்பு நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிருப்பீங்க. அதானே!” மூச்சிறைக்க தொடர்ந்து பேச முடியாது இருமிய அம்மாவின் குரல் வேதனையில் துவள்வது தெரிந்தது.

” ஒரு பத்து ரூபா பொறாத விசயத்துக்கா நீ ஒரு குடும்பத்தத் சபிச்ச? நா வளர்த்த பொண்ணா நீ? ஒரு காம்பவுண்ட் தாண்டினா அது அவ மரம். இதிலென்ன எனது உனதுன்னு?” என்று கோபமாகப் பேசிக்கொண்டே வந்தவள் பிறகு குரல் தழைந்து, “வாணாம்மா. மகாபாவம் இது. உன் புத்தியில் இருக்க வெறுப்பை வெளியே பிடுங்கி வீசு. மரஞ்செடி கொடி எல்லாத்தைவிடவும் உசத்தி உசுருதான். கவனத்துல வச்சுக்க” என்று வைத்துவிட்டாள்.

இந்தத் தெருவிற்குதானே ரஞ்சிதம் குடிமாறி வந்திருப்பதாகச்  சொன்னார்கள். சரியாக கேட்காமல் கிளம்பி வந்து விட்டோமோ என்று யோசித்தபடி நடந்தாள்.

‘வணக்கம் மிஸ்” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவளிடம் இரண்டு வருடங்களுக்கு முன் படித்த மாணவி நின்று கொண்டிருந்தாள். “நல்லா இருக்கீங்களா? மிஸ். இதான் எங்க வீடு. இருங்க இருங்க. ஒரே நிமிசம்” என்று துள்ளி எதிரே இருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்து   ஒரு நடுத்தர வயதுபெண்ணுடன் வெளியே வந்தாள். “மா நாஞ்சொல்லுவனே எங்க குழலி மிஸ்” என்று தன் அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.

எதோ நினைத்துக் கொண்டவளாக அந்தப் பெண்மணி “டீச்சர் இருங்க. இதோ வரேன்” என்றபடி ஓட்டமாய் வீட்டுக்குள் மறுபடி போனாள். “என்ன கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்க. நான் இன்னொரு நாள் வரேன். இப்ப அவசரமா ஒரு வேலையா போறேன்” என்றபோது அந்த மாணவி குறும்பாக சிரித்து “மா சீக்கிரம் வாம்மா” என்று கூவினாள். அவள்  பிடிக் கட்டை கொஞ்சம் ஆடிக் கொண்டிருந்த ஒரு பெரிய ஷாப்பிங் பையைக் கொண்டு வந்து குழலியிடம் நீட்டினாள். “டீச்சர், இது இன்னிக்கு மதியம்  பறிச்ச பச்சைக் கடலைக்கா. என்னா வாசன பாருங்க.  என் புள்ள நெறயா சொல்லுவா உங்களப் பத்தி. நல்லாருக்கணும் நீங்க. என்னடா இதப் போய்த் தராளேனு நீங்க நினைக்க மாட்டீங்க னு எனக்கு நல்லாத் தெரியும்”  என்று அவள் அதைத் தந்தபோது, அறுப்பு அறுத்து காய்த்துப் போய் சொர சொரப்பான அவளுடைய உள்ளங்கைகள் இவள் மீது பட்டன. குழலிக்கு உள்ளுக்குள் நெகிழ்ந்து போயிற்று .  அதை மறைத்துப் புன்னகைத்தபடி, “நன்றிங்கம்மா! இங்க ரஞ்சிதம் வீடு எங்கிருக்கு தெரியுமா? இரண்டு மாசத்துக்கு முன்ன தான் வீடு மாறி இங்க வந்தாங்க” என்று தயங்கிக் கேட்டதும், “பக்கத்து தெரு தான். நான்காம் கிராஸ்ல தான் இருக்காங்க” என்றாள் அந்த மாணவியின் அம்மா. குழலி மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

ரஞ்சிதத்தின் வீட்டருகே சிலர் கூடி நிற்பது தெருவில் நுழையும்போதே கண்களில் பட்டது. கால்களின் வேகம் சற்று குறைந்து ஒன்றோடொன்று பின்னிக்கொண்டன. மேற்கொண்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது போலத் தெரிந்தது.

ரஞ்சிதத்தின் வீட்டு வாசலை அடைந்து செருப்பைக் கழற்றினாள். உள்ளே நுழையத் தயங்கியபடி அங்கிருந்து எட்டிப் பார்த்தபோது அந்தச் சிறிய வாடகை வீட்டின் கூடத்தில் ரஞ்சிதத்தின் மகன் ஒரு பாயில் படுக்க வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. துக்கம் பொங்கியது. எதற்காக வந்தோம் என்ன செய்வது என்று புரியாமல் விரல்களை ஷாப்பருடன் அழுத்திப் பிடித்ததில் கை வலித்தது.  எதோ எடுக்க கூடத்திற்கு வந்த ரஞ்சிதம் தற்செயலாக வெளியே பார்த்ததும் ஒரு நொடி மலைத்துப் போனவளாக அப்படியே நின்றாள்.

நான்கு அடி இடைவெளியில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி துணிக் கொடியில் கிடக்கும்  பாம்பைப் பார்த்தது போல் பதறிப் போனவர்களாக அப்படியே அசையாது  நின்றனர். ஒரு நிமிஷம்தான் சுதாரித்துக் கொண்ட ரஞ்சிதம் வெளியே வந்தாள். “வாங்க. வாங்க” என்று சன்னமான ஒரு குரலில் கூப்பிட்டாள்.  குழலி தயக்கத்துடன் அடி வைத்து உள்ளே நுழைந்தாள்.

எட்டி ரஞ்சிதத்தின் கையைப் பிடித்து, உதடுகள் கோண கண்களில் நீர் திரண்டு நிற்க “ரஞ்சிதம்! நான்……என்ன பேசுறேனு தெரியாம…அன்னிக்கு” என்று பேச ஆரம்பித்தபோது, ரஞ்சிதம் குழலியை மெதுவாக அணைத்துக் கொண்டாள். “விடுங்கக்கா. இரண்டு மூணு நாள் எங்க எல்லாரையும் அப்படி பயப்படுத்திட்டான். இப்ப எல்லாம் சரியாடுச்சு. உக்காருங்க. என்ன பச்சை கடலையா? எம் புள்ளைக்கு ரொம்ப புடிக்கும். டேய் பாருடா. டீச்சர் வந்துருக்காங்க” என்று அவனைப் பார்த்துப் பேசியபடியே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டாள். புன்னகையோடு சமையலறைக்கு அந்த ஷாப்பரை எடுத்துப் போய் கடலக்காயைக் கழுவுவதற்கு ஒரு பாத்திரத்தில் இட்டாள். அடுப்பைப் பற்றவைத்து இவளுக்குக் குடிக்க தேநீர் வைக்க ஆரம்பித்தாள்.

 

எழுதியவர்

கயல்
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x